முஸ்லீம் விரோத ஒடுக்குமுறை தொடர்ந்து வரும் நிலையில், பெருமளவில் மசூதிகளை மூடுவதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரான்சில் மக்ரோன் அரசாங்கம் அதி-வலது முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தின் சமீபத்திய நடவடிக்கையாக, உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் புதனன்று டஜன் கணக்கான மசூதிகள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் அல்லது விசாரிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார்.

"எனது அறிவுறுத்தல்களின்படி, அரசு சேவைகளானது பிரிவினைவாதத்திற்கு எதிராக பாரிய மற்றும் முன்னோடியில்லாத நடவடிக்கையை மேற்கொள்ளும்" என்று டார்மனன் ட்டுவீட் செய்துள்ளார். "பிரிவினைவாதம் என்று சந்தேகிக்கப்படும் 76 மசூதிகள் எதிர்வரும் நாட்களில் விசாரிக்கப்படும், அவைகள் மூடப்பட வேண்டும், மூடப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

The Grande Mosquée de Paris (Wikimedia Commons)

இந்த நடவடிக்கை ஏற்கனவே நவம்பர் 27 திகதியிட்ட உள்துறை அமைச்சக ஆவணத்தில் விவரிக்கப்பட்டு, வலதுசாரி நாளேடான Le Figaroக்கு கசியவிடப்பட்டுள்ளது. 76 மசூதிகளில் 18 "உடனடி நடவடிக்கைக்கு" உட்படுத்தப்படும், அதாவது மூடப்படும், மேலும் 58 மசூதிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் விசாரிக்கப்படும் என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தேசிய புலனாய்வு சேவைகள் நாடு முழுவதும் 2,623 மசூதிகளை விசாரித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Le Figaroஉடன் பேசிய டார்மனன், “[உள்துறை அமைச்சகத்தில்] எனது பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து, குடியரசின் மீது போரை அறிவித்த பிரிவினைவாத மையங்களை அடையாளம் காணும் வகையில் வகைப்படுத்தல்களை மாற்றுமாறு கேட்டுக் கொண்டேன்” என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், “இப்போது வரை, தீவிரமயமாக்கல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. இப்போது, பயங்கரவாதத்தின் தளத்தையும் நாங்கள் தாக்குவோம், அங்கு தான் அறிவுசார் மற்றும் கலாச்சார இடைவெளிகளை உருவாக்கும் நபர்களை அவர்களின் மதிப்புகளை பிரித்து திணிக்க முடியும்."

டார்மனனின் அறிக்கையானது அரசாங்கத்தின் இலக்கு பயங்கரவாதம் அல்ல, ஆனால் அது முஸ்லீம் மக்களுக்கு எதிரானது என்ற அப்பட்டமான அறிவிப்புக்குச் சமமாகும். "பிரிந்து செல்ல அறிவுசார் மற்றும் கலாச்சார இடைவெளியை உருவாக்கும் மக்கள்" பற்றிய அவரது குறிப்பு நாட்டின் ஒவ்வொரு முஸ்லீம் மசூதிகளையும் கலாச்சார சங்கங்களையும் சூழ்ந்து கொள்ளும் அளவிற்கு உள்ளடக்கியதாக மிகவும் தெளிவற்றதாகவும், விதிவிலக்கின்றியும் வரையறுக்கப்பட்டுள்ளது.

மக்ரோன் அரசாங்கமானது முஸ்லிம்கள் மீதான தாக்குதலை ஒரு பாசிச பொலிஸ் அரசை கட்டமைக்க பயன்படுத்துகிறது. அதன் கொள்கைகள், தீவிர வலதுசாரிகளை வலுப்படுத்தவும், ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தொலைநோக்கு தாக்குதல்களை நியாயப்படுத்தவும் ஒரு படுகொலை சூழ்நிலையை தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொலிஸ் வன்முறையை எதிர்த்து கடந்த சனிக்கிழமையன்று நூறாயிரக்கணக்கான வெகுஜனங்களின் இடதுசாரி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொலிஸ் வன்முறைகளை படமாக்குவதை குற்றவாளியாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சி ஆகியவைகள் இந்த நிலைமைகளின் கீழ் தான் இது நடைபெறுகிறது.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 70 க்கும் மேற்பட்ட மசூதிகள் மூடப்பட்டுள்ளன. அக்டோபர் 15 ம் திகதி சாமுவேல் பட்டி பயங்கரவாதியினால் கொல்லப்பட்டதை அடுத்து இந்தப் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து, டார்மனன் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார், சர்வதேச உணவை -அதாவது கோஷர் மற்றும் ஹலால்- சூப்பர் மார்க்கெட் தட்டு அடுக்குகளில் பார்த்தபோது அவர் தனிப்பட்ட முறையில் "அதிர்ச்சியடைந்தார்" என்று அறிவித்தார். மேலும் இது போன்ற உணவு அடுக்குகள் இருப்பது "பிரிவினைவாதம்" மற்றும் பயங்கரவாதத்திற்கு வழிவகுத்தது என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், வடக்கு பாரிஸிலுள்ள பந்தன் மசூதியை (Pantin mosque) மூடுவதாக டார்மனன் அறிவித்திருந்தார், இது வழக்கமாக சுமார் 2,000 முஸ்லிம்களுக்கு சேவை செய்கிறது, சார்லி ஹெப்டோ வெளியிட்ட முஸ்லீம் எதிர்ப்பு கேலிச்சித்திரத்தை பட்டி தனது வகுப்பில் மாணவர்களுக்குக் காட்டியதற்காக விமர்சித்து அதனுடைய பேஸ்புக் பக்கத்தில் தாக்குதலுக்கு முன்னர் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டது என்ற ஒரே காரணத்தினால் ஆகும். தாக்குதலைத் தொடர்ந்து, மசூதி உடனடியாக வீடியோவை அகற்றி, பட்டியின் கொலையை கண்டித்தது.

சட்ட உரிமைகளுக்காக வாதிடும் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற கலாச்சார அமைப்புகள் உட்பட 52 முஸ்லிம் அமைப்புகளை கலைக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய முஸ்லீம் தொண்டு அமைப்புகளில் ஒன்றான பிரான்சில் இஸ்லாமிய பாகுபாட்டிற்கு எதிரான கூட்டு (CCIF) அமைப்பும் இதில் அடங்கும், இது முதன்மையாக பாகுபாடு வழக்குகளில் முஸ்லிம்களுக்கு சட்ட உதவி வழங்கி வந்தது. நவம்பர் 27 அன்று, அரசாங்க உத்தரவுகளின்படி அதன் சுய கலைப்பை அறிவிக்கும் அதனுடைய "இறுதி அறிக்கையை" வெளியிட்டது, அதன் பின்னர் அதனுடைய வலைத் தளம் மற்றும் சமூக ஊடக கணக்குகளை நீக்கியது.

மற்றொரு தொண்டு நிறுவனமான பராகசிட்டியும் (Barakacity) கலைக்கப்பட்டது, அதன் தலைவர் இட்ரிஸ் சிஹமடிக்கு எதிராக பொலிசார் இரவு நேரத்தில் வன்முறையில் சோதனை நடத்தினர்.

சமீபத்திய அறிவிப்பின்படி, இலக்கு வைக்கப்பட்ட 76 மசூதிகள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு இமாமை உபசரித்திருந்தால், பொது நிதியைப் பெறுவதற்கான விதிகளை மீறியிருந்தால், அரசில் பதிவு செய்யப்படாத வசதியளிப்பு இடங்கள் அல்லது அறைகள் பெற்றிருந்தால், அல்லது இடங்கள் இருந்தால் அல்லது அவர்கள் ஏற்கனவே ஒரு அமைப்பை கலைப்பதற்கான கோரிக்கைக்கு உட்பட்டிருந்தால் இதன் காரணமாக மூடப்படும். வெகுஜன மூடுதல்களை நியாயப்படுத்த பரந்த நோக்கம் கொண்ட பல குற்றச்சாட்டுகளை வழங்குகிறது.

டிசம்பர் 9 ஆம் திகதி தேசிய சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அதனுடைய "பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டத்தை" நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இது ஒத்துப்போகிறது. சட்டத்தை "குடியரசுக் கொள்கைகளை உறுதிப்படுத்தும்" என்று இழிந்த முறையில் மறுபெயரிடப்பட்டது, 1905 ஆண்டு மதச்சார்பின்மை சட்டத்தின் 115 வது ஆண்டு நினைவு நாளில் இது ஒரு மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உண்மையில், மக்ரோனின் சட்டமானது 1905 சட்டத்தை நிராகரிப்பதாகும், மேலும் பிரெஞ்சு புரட்சியில் பாதுகாக்கப்பட்ட மற்றும் முன்னேறிய மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகள், இதில் கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைப்பு சுதந்திரம், அத்துடன் தேவாலயத்தையும் அரசையும் பிரித்தல் ஆகியவைகளும் அடங்குகின்றன.

இது ஒரு அவமானகரமான "மதச்சார்பின்மை சாசனத்தில்" கையெழுத்திட முஸ்லீம் நிறுவனங்களையும் இமாம்களையும் கட்டாயப்படுத்தும், மேலும் எதிர்கால இமாம்கள் அனைவருக்கும் பிரெஞ்சு அரசின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி அளிக்கப்படும்; எதிர் பாலின மருத்துவரால் பரிசோதிக்க மறுக்கும் நோயாளிகளுக்கு 75,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்; மற்றும் பள்ளி வயதுடைய பிரெஞ்சு குழந்தைகள் பள்ளியில் வருகையை உறுதிப்படுத்த அடையாள எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். இந்த சமீபத்திய நடவடிக்கை வீட்டு பள்ளிப்படிப்பை சட்டவிரோதமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரச சபை (Le Conseil d'État) டிசம்பர் 3 அன்று அதை அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளித்தது.

சமீபத்திய முஸ்லீம்-விரோத நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மையான பிரெஞ்சு மற்றும் சர்வதேச ஊடகங்களின் பதில்மெளனம் அல்லது ஆதரவு என்பதாக இருக்கிறது. ரஷ்யா அல்லது சீனாவில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக பாரிய மசூதி மூடல்கள் மற்றும் முஸ்லீம்-விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் Le Monde மற்றும் பிற வெளியீடுகளின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும்.

குடியரசுக்கு எதிராக ஒரு "போர்" நடத்தப்படுவதாக மக்ரோனும் டார்மனனும் பலமுறை அறிவித்துள்ளனர். "இஸ்லாம் என்பது இன்று உலகம் முழுவதும் நெருக்கடியில் இருக்கும் ஒரு மதம்" என்று மக்ரோன் கூறினார், "நாங்கள் எங்கள் குழந்தைகளை இஸ்லாமியர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்." பிரான்சில் முஸ்லிம் மத ஆட்சியை உடைப்பதற்கு நாடு தழுவிய இஸ்லாமிய சதி இருப்பதை உட்குறிப்பாகக் கொண்ட அரசாங்கத்தின் பிரகடனங்கள், ஒரு காலத்தில் தீவிர வலதுசாரிகளின் வெறியாட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இவை பிரெஞ்சு அரசால் மொத்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தீவிர வலதுசாரி மற்றும் முஸ்லீம்-விரோத வெறியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், CCIF அமைப்பானது 2019 இல் 789 இஸ்லாமிய பாகுபாடு சம்பவங்கள் நடந்துள்ளன என்று கண்டுபிடித்தது, இது 2017 ஆண்டில் 446 ஆக இருந்தது.

மரின் லு பென்னின் நவ-பாசிசக் கொள்கைகளை எதிர்ப்பதற்கு மக்ரோன் ஒரு மாற்று இல்லை என்ற, 2017 தேர்தலுக்கு முன்னர் சோசலிச சமத்துவக் கட்சி (பிரான்ஸ்) அறிவுறுத்திய எச்சரிக்கைகளை இந்த அபிவிருத்திகள் உறுதிப்படுத்துகின்றன.

அரசாங்கத்தின் நடைமுறை சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை மற்றும் முன்னோடியில்லாத அளவிலான சமூக சமத்துவமின்மை ஆகியவைகளின் விளைவாக ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான இறப்புகளுடன், பிரெஞ்சு ஆளும் வர்க்கமானது சமூக எதிர்ப்பு வெடிப்பை எதிர்கொள்ள தயாரிப்பு செய்து வருகிறது. பாசிச சக்திகளை ஊக்குவிப்பதும், பொலிஸ் அதிகாரங்களை கட்டியெழுப்புவதும் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராகவே இயக்கப்படும்.

Loading