பிரெஞ்சு ஆசிரியர் சாமுவேல் பட்டியின் பயங்கரவாதக் கொலைக்குப் பின்னர் பொலிஸ்-அரசு ஆட்சி வேண்டாம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாரிசின் வடமேற்கிலுள்ள Conflans-Sainte-Honorine பகுதியில் ஒரு இளம் செச்செனிய இஸ்லாமியரால் நடுநிலைப்பள்ளி புவியியல் ஆசிரியர் சாமுவேல் பட்டியின் தலை துண்டிக்கப்பட்டது சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதத்தைத் தூண்டுவதற்காக முகமது நபி பற்றிய ஆபாசமான கேலிச்சித்திரங்களைக் தனது வகுப்பில் காட்ட பட்டி எடுத்த முடிவு குறித்த அவர்களின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், தனது மாணவர்களுடன் ஜனநாயக உரிமைகளைப் பற்றி விவாதிக்க முயன்ற ஒரு ஆசிரியரின் கொடூரமான கொலையால் பரந்துபட்ட மக்கள் வருத்தமும் வெறுப்பும் அடைகிறார்கள்.

வகுப்புவாத பயங்கரவாதத்தின் திவால்நிலை மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வாதிகாரத்திற்கும் போருக்கும் ஆதரவைத் தூண்டுவதற்கு அரசு இத்தகைய கொடுமையான செயல்களைப் பயன்படுத்துகிறது. அல்கொய்தாவின் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புகளுக்கு ஒரு சாக்குப்போக்காக செயல்பட்டன. சிரியாவில் நேட்டோ பினாமி போரிலிருந்து உருவாகிய இஸ்லாமிக் அரசு (IS) ஆயுதக்குழுக்களின் 2015 பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், பிரெஞ்சு அரசு இரண்டு ஆண்டு அவசரகால நிலைமையை விதித்து, ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்த்துடன் மற்றும் பிரெஞ்சு மண்ணில் இராணுவத்தை உள்ளிறக்கியது.

நவ-பாசிச அரசியல்வாதி மரின் லு பென்னின் கொள்கைகளிலிருந்து பிரித்தறிய முடியாத முஸ்லீம்-விரோத கொள்கைகளை பின்பற்றுவதற்கான சமீபத்திய தாக்குதலை ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் அரசியல் ஸ்தாபகமும் பயன்படுத்திக் கொள்கின்றன. பொலிஸ் சோதனைகள் மற்றும் முஸ்லிம்களின் கூட்டு வெளியேற்றங்கள், பாரிய இணைய தணிக்கைக்கான அழைப்புகள் மற்றும் "குடியரசின் எதிரிகள்" என்று முத்திரை குத்தப்பட்ட சமூக மற்றும் அரசியல் குழுக்கள் மீதான தடைகள் அனைத்தும் பெருமளவில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி பாரிஸில் ஒரு போலீஸ் அதிகாரி ஒரு முக்காடு அணிந்த பெண்ணை கண்காணிக்கிறார். (AP Photo/Francois Mori)

லு பென்னைப் பாராட்டிய பின்னர், உள்துறை மந்திரி ஜெரால்ட் டர்மனன் செவ்வாயன்று பாரிஸுக்கு அருகில் பந்தன் (Pantin) இல் உள்ள ஒரு பெரிய மசூதியை மூடினார். அங்கு 1,500-2,000 மக்கள் வழமையாக வழிபடுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை, பிரான்சின் தேசிய பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில், பிரான்சில் பெரும்பாலான முஸ்லிம்கள் வசிக்கும் தொழிலாள வர்க்கப் பகுதிகளை அச்சுறுத்துவதற்கு பொலிஸாரை மக்ரோன் அழைத்தார். "பயம் இப்போது பக்கம் மாறிவிடும்," என்று அவர் கூறினார், "இஸ்லாமியவாதிகள் நம் நாட்டில் நிம்மதியாக தூங்க அனுமதிக்க முடியாது." பிரெஞ்சு உளவுத்துறையின் படி 231 நபர்களை வெளியேற்றவும் மற்றும் 51 அமைப்புகளை கலைக்கவும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இணையத்தில் பட்டி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அழைப்புவிடுத்த மத தலைவர் அப்துல்ஹாக்கிம் செஃப்ரிவீ (Abdelhakim Sefrioui) தலைமையிலான Cheikh-Yassine சங்கம் கலைக்கப்படுவதாக மக்ரோன் செவ்வாயன்று அறிவித்தார். யூத-விரோத பிரெஞ்சு-கேமரூனிய நகைச்சுவை நடிகரும், நவ பாசிசவாதியுமான Dieudonné M’Bala M’Bala வின் முன்னாள் பிரச்சார ஊழியரான செஃப்ரிவீ, பட்டியைக் கொலை செய்த இளைஞர்களிடம் பேசினாரா என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. தனது சங்கத்தை சட்டபூர்வமாக பாதுகாக்க உரிமை பெற்ற செஃப்ரிவீ இன் விஷயத்தில் என்ன நடந்தாலும், காவல்துறையினருக்கு எதிராக வரும் எந்தவொரு முஸ்லீம் சங்கத்தையும் தடை செய்வதே அரசு தெளிவாக நோக்கமாக உள்ளது.

முஸ்லீம்-விரோத பாகுபாட்டை எதிர்க்கும் சட்ட வக்கீல் குழுவான, பிரான்சில் இஸ்லாமிய எதிர்ப்புவாதத்திற்கு எதிரான கூட்டு (Collectif contre l’islamophobie en France - CCIF) கலைக்கப்பட வேண்டும் என்றும் டார்மனன் கூறியுள்ளார். திங்களன்று, அதன் வழக்கறிஞர் "இந்த சங்கத்தின் நடவடிக்கைகளில் எதுவும், பயங்கரவாதத்துடன் எந்தவொரு தொடர்பையும் கொண்டிருப்பதாக சந்தேகிக்க அனுமதிக்காது" என வலியுறுத்தினார்.

இணையத்தில் வெறுக்கத்தக்க பேச்சு என்று அரச அதிகாரிகள் கண்டனம் செய்வதை இணைய சேவை வழங்குநர்கள் 24 மணி நேரத்திற்குள் அகற்றவேண்டும் என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. மே மாதத்தில் மக்ரோனின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Laetitia Avia ஆல் முன்வைக்கப்பட்ட இந்த சட்டம், அரசியலமைப்பிற்கு முரணானது என்று ஜூன் மாதம் அரசியலமைப்பு குழு அறிவித்தது. ஆயினும்கூட, பட்டியின் கொலைக்குப் பின்னர் பேச்சு சுதந்திரம் மீதான இந்த அப்பட்டமான தாக்குதலை, மீண்டும் உயிர்ப்பிக்க அழைப்புக்கள் அதிகரித்து வருகின்றன.

பிரான்சின் நாடாளுமன்றக் கட்சிகள் அனைத்தும் தேசியவாத வெறுப்புகளுக்கு அப்பட்டமாக அழைப்புவிடுகின்றன. குட்டி முதலாளித்துவ அடிபணியா பிரான்ஸ் கட்சியைச் சேர்ந்த ஜோன்-லூக் மெலோன்சோன், "செச்செனிய சமூகத்துடன்" நாட்டிற்கு ஒரு "பிரச்சினை" இருப்பதாகக் கூறிய பின்னர், அவர் அதனை ஒரு "பிழை" என்று நிராகரித்தார். பல்பொருள் அங்காடிகளில் தட்டுக்களில் கோஷர் மற்றும் ஹலால் உணவுகள் இருப்பதையிட்டு "அதிர்ச்சியடைந்தேன்" என்று டார்மனன் கூறினார். அதனைப் பற்றி கேட்டபோது, யூத-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத உணர்விற்கான இந்த அப்பட்டமான அழைப்பை திரும்பப் பெற டார்மனன் மறுத்துவிட்டார்.

அப்பட்டமாகச் சொல்வதானால், பட்டியின் கொலை மக்ரோனுக்கு ஒரு அரசியல் வரமாகும். சமூக சமத்துவமின்மைக்கு எதிரான "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்கள் மீதான மிருகத்தனமான பொலிஸ் ஒடுக்குமுறையால் "செல்வந்தர்களின் ஜனாதிபதி" என வெறுக்கப்பட்ட அவர், குளிர்காலத்தில் போக்குவரத்து மற்றும் கல்வித் தொழிலாளர்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பல மாத கால வேலைநிறுத்தங்களால் அதிர்ந்தார். இப்போது அவர் கோவிட்-19 மீது அதிகரித்து வரும் கோபத்தை எதிர்கொள்கிறார். “வைரஸுடன் வாழவேண்டும்” என்ற அவரது அழைப்பு ஐரோப்பாவில் வைரஸ் மீண்டும் எழுந்ததற்கு மத்தியில் ஆளும் உயரடுக்கின் கடுமையான “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கையை எடுத்துக்காட்டுகிறது. அரசியலை வலதிற்கு மாற்றுவதற்காக, பட்டியின் கொலையை பற்றிக்கொள்வதன் மூலம் அவரது அரசாங்கம் பதிலளிக்கிறது.

இந்த பிரச்சாரத்தின் இலக்கு, முழு தொழிலாள வர்க்கமாகும். மேலும், பிரான்சின் எல்லைகளுக்குள் என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மட்டும் இந்த நிகழ்வுகளின் அரசியல் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்ய முடியாது.

நீண்டகால ஜனநாயக மரபுகளைக் கொண்ட நாடுகளில் கூட, ஜனநாயக ஆட்சி முறைகளின் உலகளாவிய முறிவுக்கு மத்தியில் தேசியவாதம் மற்றும் சர்வாதிகாரத்தின் இந்த களியாட்டம் வெளிப்படுகிறது. அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை மதிக்க மாட்டேன், ஆனால் நவம்பர் 3 வாக்கெடுப்புக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் இருப்பேன் என்று கூறியுள்ளார். ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்புடைய பாசிச ஆயுதக்குழுக்கள், மிச்சிகனைப் போல் முக்கிய மாநிலங்களில் ஆளுநர்களை தூக்கிலிட சதி செய்தார்கள் அல்லது அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்ற அம்பலப்படுத்தல்களை ஜனநாயகக் கட்சி குறைத்து மதிப்பிடுகிறது.

ஜேர்மனியில், ஜேர்மனிக்கான நவ-பாசிச மாற்று (AfD) கட்சி,நாஜிக்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறது. தீவிர வலதுசாரி வலைப்பின்னல்கள் அரசியல்வாதிகளை படுகொலை செய்வதற்கான பட்டியலை உருவாக்குகின்றன. அவர்களுக்கு அரசு ந்திரம் மற்றும் உள்நாட்டு உளவு அமைப்புகளால் அரசியல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பதற்காக அறிக்கைகளை வெளியிட்ட கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி வால்டர் லுப்கவின் கொலையில் சம்பந்தப்பட்ட நவபாசிஸ்டுகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சில், ஆளும் உயரடுக்கு அக்டோபர் 3 ம் தேதி, மக்ரோனால் முன்மொழியப்பட்ட பிரிவினைவாத எதிர்ப்பு சட்டம் என்று அழைக்கப்படுவது குறித்து ஒரு மாதம் கவனம் செலுத்தியுள்ளது. “தீவிரவாத இஸ்லாம்” பிரெஞ்சு குடியரசுடன் போரில் ஈடுபட்டுள்ளது என்ற ஒரு கண்ணோட்டத்தில் “பிரிவினைவாத” நோக்கமுள்ளது. ஆனால் "அதன் இறுதி நோக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்துவதாகும்" என மக்ரோன் தெரிவித்தார். "ஒவ்வொரு மாடிக்குடியிருப்புத் தொகுதியின் அடிவாரத்திலும், ஒவ்வொரு அடுக்குமாடிக் கட்டடத்திலும்" காவல்துறையை நிறுத்த அவர் அழைப்பு விடுத்தார். மேலும் உள்நாட்டு அமைச்சினால் வரையறுக்கப்பட்டுள்ளபடி "குடியரசின் மதிப்புகளை மதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட" அனைத்து சங்கங்களுக்கும் ஒரு சட்டம் தேவைப்படுகின்றது என்றும் கூறினார்.

மக்கள்தொகையில் 10 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களாகவும், ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் பிரிவாகவும் உள்ள பிரான்சின் முஸ்லீம் சிறுபான்மையினர், ஒரு பாசிச பிரச்சாரத்தின் இலக்காக்கப்படுகிறார்கள். பள்ளிகளில் தலை மறைப்பு அங்கிகள் மீதான பிற்போக்குத் தடைகளுக்கு எதிரான அமைதியான எதிர்ப்புக் கூட, "தீவிர இஸ்லாம்" என்றும் வன்முறை நோக்கங்களின் அடையாளம் என்றும் அரசின் எதிரி என்றும் முத்திரை குத்தப்படுகின்றன. மேலும், பட்டியின் கொலைக்குப் பின்னர், மக்ரோன் இஸ்லாமியவாதத்தை "குடியரசை அழிக்கும் சித்தாந்தம்" என்று அறிவித்தார்.

2017 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste - PES), மக்ரோனுக்கும் மரின் லு பென்னுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று வாக்களிப்பை தீவிரமாக புறக்கணிக்க அழைப்பு விடுத்தது. ஜனாதிபதி லு பென் செயல்படுத்தும் தீவிர வலதுசாரி, தொழிலாள வர்க்க எதிர்ப்பு கொள்கைகளுக்கு மக்ரோன் ஒரு மாற்று அல்ல என PES எச்சரித்தது.

இந்த எச்சரிக்கை மக்ரோனின் பாரிய கைதுகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக ஆர்ப்பாட்டங்களை இலக்காகக் கொண்ட இரத்தக்களரி பொலிஸ் அடக்குமுறை மற்றும் இப்போது அவர் ஒரு பாசிசக் கொள்கையை நோக்கி திரும்பியுள்ளதன் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், நாஜி-ஒத்துழைப்பு சர்வாதிகாரி மற்றும் துரோகி பிலிப் பெத்தானை ஒரு "சிறந்த சிப்பாய்" என்று பாராட்டி, "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க கலவர தடுப்பு போலீசாருக்கு உத்தரவிட்டார். உலகெங்கிலும், முதலாளித்துவத்தின் சிக்கன வெட்டுக்களால் உருவாக்கப்பட்டதும் மற்றும் கோவிட்-19 மீதான கொலைகார “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கையில் வெளிப்படுத்தப்பட்ட தொழிலாளர்களையும், ஏழைகளையும் கடுமையாக பாதிக்கும் சமூக சமத்துவமின்மையின் அளவுகள் ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் பொருந்தாதுள்ளது.

பொலிஸ்-அரசு அமைப்புமுறைக்கு அல்லாது, 1789 பிரெஞ்சு புரட்சியில் பிரகடனப்படுத்தப்பட்ட “சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்” என்ற ஜனநாயக உரிமைகளுக்கு உரித்தான குடியரசுக்கான அச்சுறுத்தல் நாட்டின் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் சிறுபான்மையினரிடமிருந்து வரவில்லை. இது முதலாளித்துவ மற்றும் அதன் அரசியல் சேவகர்களிடமிருந்து வருகிறது. இஸ்லாமியத்திற்கு எதிரான மக்ரோனின் "பிரிவினைவாத எதிர்ப்பு" கொள்கை 1789 புரட்சியில் வலியுறுத்தப்பட்ட மனிதகுலத்தின் உலகளாவிய சகோதரத்துவத்துடன் பொருந்தாது. ஏனெனில் பணக்காரர்களுக்கான வரி விலக்குகளும், தொழிலாளர்களுக்கான ஊதிய மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களும் சமத்துவத்துடன் இணக்கமுடையதல்ல.

ஜனநாயக உரிமைகளுக்கான அவசரமான மற்றும் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்னோக்கி செல்லும் ஒரே வழி சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அரசியல்ரீதியாக ஒருங்கிணைப்பதாகும். அத்தகைய போராட்டத்தின் அடித்தளம் முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் சர்வாதிகார ஆட்சிக்கு அடிபணிய வைப்பதற்கும் பயன்படுத்தும் தேசியவாதத்தை நிராகரிப்பதாகும். இது மேலும் பொலிஸ் அரசு ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து பின்னணியுமுள்ள தொழிலாளர்களை தங்கள் முஸ்லீம் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்தும் போராட்டமுமாகும்.

Loading