பிரதான முஸ்லிம் உரிமைகளுக்கான குழுவை கலைப்பதற்கு பிரெஞ்சு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 27ம் திகதியன்று, பிரான்சில் இஸ்லாமிய வெறுப்பிற்கு எதிரான கூட்டு (Collectif Contre Islamaophobie en France - CCIF) என்ற அமைப்பானது அரசாங்கம் நவம்பர் 19ந் திகதி கலைக்கும் ஆணைக்கு விடையிறுக்கும் வகையில் ஒரு "இறுதி அறிக்கையை" வெளியிட்டது. அதனுடைய இயக்குனர்கள் குழுவானது மூடிய கதவுகளுக்குப் பின்னால் கலந்துரையாடியபின், அக்டோபர் 29ம் திகதியன்று, அதன் சொந்த தன்னார்வ சுய-கலைப்பு என்று அறிவித்தது என்று அது அறிவித்தது. நவம்பர் 28ம் திகதியன்று, CCIF அமைப்பின் வலைத் தளமும் சமூக ஊடக கணக்குகளும் அகற்றப்பட்டன.

கடந்த வாரம், CCIF அமைப்பானது டுவிட்டரில், "எங்கள் சட்டபூர்வ வேலைகளுக்காகவும், சட்டத்தைப் பயன்படுத்துவதற்கும், அதன் பயன்பாட்டைக் கோருவதற்கும்" அவர்கள் மீது நிந்திக்கப்பட்டதாக தெரிவித்தது. அது கலைப்பு உத்தரவை "முஸ்லீம் நம்பிக்கையின் குடிமக்களுக்கு ஒரு பயங்கரமான செய்தி" அதாவது "உங்கள் உரிமைகளை பாதுகாக்க உங்களுக்கு உரிமை இல்லை" என விவரித்தது.

CCIF அமைப்பானது பிரான்சில் மிகப் பெரிய தொண்டு அமைப்புகளில் ஒன்றாகும், இது பிரதானமாக நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கு பாகுபாடு வழக்குகளில் சட்டபூர்வ ஆதரவை வழங்குகிறது. இது 2003 ஆம் ஆண்டில் சமி தேபா (Samy Debah) ஆல் நிறுவப்பட்டது மற்றும் பள்ளிகளில் மத சின்னங்களைத் தடை செய்யும் 2004 ஆண்டு சட்டம், புர்கா போன்ற முழு முக மறைப்புகளை தடை செய்யும் 2010 சட்டம் மற்றும் தொழிலாளர்கள் மீது "சித்தாந்த மற்றும் மத நடுநிலையை" முதலாளிகள் திணிக்க அனுமதிக்கும் 2016 ஆண்டு எல் கொம்ரி சட்டம் ஆகியவைகளுக்கு எதிரான சட்ட பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்கியது.

இந்த தொண்டு அமைப்பு பிரெஞ்சு சட்டத்தை நன்கு பதிவு செய்து பாதுகாத்திருந்த போதிலும், உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் CCIF அமைப்பை "குடியரசுக்கு எதிரான இஸ்லாமியவாத அலுவலகம்" என்று விவரித்தார்.

பாரகாசிட்டி என்பது பிரான்ஸிலுள்ள மற்றொரு தொண்டு அமைப்பு ஆகும், இது டார்மனன் அலுவலகத்திலிருந்து ஒரு கலைப்பு உத்தரவைப் பெற்றது. கடந்த பத்து ஆண்டுகளில், அது 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. தொண்டு அமைப்பின் நிறுவனர் இத்ரிஸ் சிஹாமேதி, "வெறுக்கத்தக்க, பாரபட்சமான மற்றும் வன்முறையான கருத்துக்களை" பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டார். அக்டோபரில், சிஹாமேதியும் அவரது குடும்பத்தினரும் ஒரு வன்முறையான முன்னறிவித்தல் இல்லாமல் திடீர் சோதனைக்கு உட்பட்டிருந்தனர், அதில் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் முன் தாக்கப்பட்டார், அவர் உடையணியக் கூட நேரம் கொடுக்கப்படவில்லை. Barakacity ஆனது இந்த உத்தரவை எதிர்த்து போராட உறுதியளித்துள்ள போதிலும், சிஹாமேதி தற்போது துருக்கியில் தஞ்சம் கோரியுள்ளார்.

BarakaCity பணியாளர்கள் (பேஸ்புக் புகைப்படம்)

இந்த உத்தரவை வெளியிடுவதற்கு முன்பு, டார்மனன் CCIF மற்றும் பாரகாசிட்டி இரண்டையும் "குடியரசின் எதிரிகள்" என்று விவரித்தார். இது laïcité என்ற மதசார்பின்மை கொள்கையை அப்பட்டமாக மீறுவதாகவும், அரசாங்கம் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 71 முஸ்லீம் பள்ளிகளையும் நிறுவனங்களையும் மூடியுள்ளது. செச்சென்ய வம்சாவளியை சேர்ந்த ஒரு இஸ்லாமியவாதியால் சாமுவல் பட்டி என்ற பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டதிலிருந்து 231 முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதாக மக்ரோனின் அரசாங்கம் கூறுவது பாசாங்குத்தனத்தால் சிக்குண்டு போயுள்ளது. பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசானது சவூதி அரேபியாவின் அதி-பழமைவாத மத-முடியாட்சியுடன் ஒரு கூட்டணியை பராமரித்து வருகிறது, மேலும் லிபியா முதல் சிரியா மற்றும் அதற்கு அப்பாலும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதிலும் அதனுடைய ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் அதி வலது இஸ்லாமியவாத குடிப்படையைப் பயன்படுத்துகிறது.

CCIF அமைப்பானது பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு இலக்காக நீண்டகாலமாக இருந்து வருகிறது. 2017 ஆண்டில், அது முன்னாள் பிரதமர் மானுவல் வால்ஸை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியிட்டது, அவர் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட குடியரசுக்கான அணிவகுப்பு கட்சி (La Republique En Marche – LREM) வரை மக்ரோனை அவர் பின்தொடர்ந்தார். முஸ்லிம்கள் மற்றும் ரோமாக்களை தாக்க "குடியரசு" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற கருத்தை திரித்துக் கூறியதற்காகவும் மற்றும் தீவிர வலதுசாரி கருத்துக்களை சட்டபூர்வமாக்குவதாகவும் வால்ஸை CCIF அமைப்பானது குற்றஞ்சாட்டியது. நவம்பர் 2015ம் ஆண்டு தாக்குதல்களுக்குப் பின்னர், CCIF அமைப்பானது அவசரகால நிலை பிரகடனத்திற்குப் பின்னர் ஜனநாயக உரிமைகள் மீதான அரசின் தாக்குதல்களுக்கும் எதிராக பிரச்சாரம் செய்தது.

இந்த தொண்டு அமைப்பை உத்தியோகபூர்வமாக தடை செய்யும் வகையில், நவ-பாசிச தேசிய பேரணி (RN) கட்சியின் விருப்பங்களை மக்ரோன் உணர்ந்துள்ளார். 2016 இல், தேசிய பேரணி கட்சியின் செனட்டர் டேவிட் ராச்லைன் CCIF அமைப்பைக் கலைக்க வேண்டும் என்று குறிப்பாக ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டார். "பள்ளிகளில் தலைமறைப்புக்கள் மற்றும் பொது இடங்களில் முழு முக மறைப்பையும் தடை செய்யும் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும்" என்று CCIF அமைப்பின் பிரச்சாரத்தால் தான் சீற்றமுற்றதாக ராச்லைன் கூறினார்.

CCIF அமைப்பின் டுவிட்களுக்கு விடையிறுப்பாக, மற்றொரு அரசு முகமையான, நெறிபிறழ்வுக் குற்றத்தடுப்பு மற்றும் தீவிரமயமாக்கலுக்கான அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவானது (Interministerial Committee for the Prevention of Delinquency and Radicalization - CIPDR) CCIF அமைப்பின் "வஞ்சகம்" என்றும் "பிரான்ஸ் ஒரு இனவாத முஸ்லீம்-விரோத நாடு என்ற தவறான கருத்தை பரப்புவதாகவும்" குற்றம் சாட்டியது. வால்ஸின் நெருங்கிய கூட்டாளியான கிறிஸ்டியான் கிராவல், அக்டோபர் மாதம் CIPDR இன் பாதுகாப்பு ஜெனரலாக நியமிக்கப்பட்டார். முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரம் இருப்பதை மறுப்பதற்கும், குடியரசின் மதிப்புகளின் பாதுகாப்பிற்காக முஸ்லிம்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களைத் திருப்புவதற்கும் வேலை செய்யும் ஒரு "குடியரசு" எதிர்-பிரச்சாரம் செய்வதற்கான அலகு ஒன்றை நிறுவுமாறு அந்த முகமைக்கு அரசு அறிவுறுத்தியது.

CCIF அமைப்பு கலைக்கப்படுவது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலாகும், பிரெஞ்சு அரசாங்கம் ஒரு "பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்தை தயாரிக்கிறது, அது "தீவிர" இஸ்லாம் என்று அழைப்பதை சட்டவிரோதமாக்கி, சட்டரீதியான சங்கங்களை கலைக்க அரசுக்கு மகத்தான அதிகாரங்களை வழங்கும். இந்த சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆறு மில்லியன் மக்களைக் கொண்டிருக்கும் பிரெஞ்சு முஸ்லீம் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை நிரந்தரமாக குறைமதிப்பிற்கு உட்படுத்த மக்ரோன் அரசாங்கம் விரும்புகிறது என்பதை CCIF கலைப்பு உத்தரவு தெளிவுபடுத்துகிறது. இந்தக் கொள்கை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளையும் அச்சுறுத்துகிறது.

சட்டவிரோத நடத்தைக்கான எந்த ஆதாரமும் இல்லாமல், CCIF அமைப்பு அரசின் எதிரி என்ற டார்மனனின் தன்னிச்சையான கூற்று, முஸ்லிம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது மட்டுமல்ல, மேலும் அமைப்புகளின் சுதந்திரத்தின் மீதும் கடுமையான தாக்குதலாகும். இத்தகைய கடுமையான கலைப்பு உத்தரவுகள் விரைவில் மற்றய சங்கங்கள், அமைப்புகள் அல்லது கட்சிகளுக்கு எதிராக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பானது கலைப்பு உத்தரவுக்கான சட்டபூர்வமான காரணங்களை "புதிர் கொண்டது" மற்றும் "தெளிவற்றது" என்று விவரித்துள்ளது.

ஆரம்பத்தில், பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் "தீவிர இஸ்லாமியவாதத்துடன் உடந்தையாக இருக்கும் அனைத்து சங்கங்களையும் கலைக்கத் திட்டமிட்டிருப்பதாக" கூறியிருந்தார். இது சங்கங்களைக் கலைக்கும் அசாதாரண நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு அரசு சில ஆதாரங்களை பகிரங்கமாக வழங்கும் என்று கூறியது.

ஆனால் இறுதியில், CCIF அமைப்பைக் கலைக்க ஒரு சாக்குப்போக்காக "தீவிர இஸ்லாமியவாத" குழுக்களை அது கொண்டிருக்கிறது என்று அது குற்றம் சாட்டிய தொடர்புகளுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்க அரசாங்கம் கவலைப்படவில்லை. இது, சட்டத்தையும் ஜனநாயக உரிமைகளையும் அவமதிப்பதை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

"CCIF அமைப்பு சில சமயங்களில் ஒரு இஸ்லாத்தின் கடுமையான போக்கை பாதுகாக்கிறதென்றால், அது விவேகமானதாக இருந்து ஒரு சட்டபூர்வமான முறையில் செயல்படுகிறது" என்று Sciences-Po-Aix இன் பேராசிரியர் ஃபிராங்க் ஃப்ரெகோசி LCI தொலைக்காட்சிக்கு கூறினார். "என் அறிவைப் பொறுத்தவரை, அது ஒருபோதும் கொலை, பழிவாங்கல் அல்லது குடியரசை அகற்றுவதற்கு அது அழைப்பு விடுத்ததில்லை" என்றார் அவர்.

20ம் நூற்றாண்டின் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் வரலாறானது மத அல்லது தேசிய சிறுபான்மையினருக்கு எதிரான இடைவிடாத உத்தியோகபூர்வ துன்புறுத்தலால் ஏற்படும் தீவிர ஆபத்துக்களுக்கு சாட்சியம் அளிக்கிறது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சின் ஆளும் வர்க்கம் சோசலிச இயக்கத்திற்கான ஒரு வலதுசாரி எதிர்பலமாக, ஐரோப்பிய பாசிசத்தின் அபிவிருத்தியிலும், உலகப் போர் மற்றும் யூதப் படுகொலை தயாரிப்புகளிலும் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகித்துள்ளது.

இன்று, மக்ரோனின் சிக்கன நடவடிக்கை கொள்கைகள் மற்றும் பெருந்தொற்று நோயின் மீதான “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை ஆகியவைகளின் மீதான தொழிலாள வர்க்கத்தின் கோபத்தின் மத்தியில், முஸ்லீம் மக்களின் அடுக்குகளை பலிக்கடாக்களாகப் பயன்படுத்தி, ஒரு பாசிச சூழ்நிலையை தூண்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: இன்று பிரெஞ்சு முஸ்லிம்கள் தாக்கப்படுகையில், இந்த நடவடிக்கைகள் நாளை முழு மக்கள் மீதும் தாக்குதல்களை நியாயப்படுத்த ஒரு முன்னுதாரணமாக பயன்படுத்தப்படும். போருக்கு எதிராகவும், முஸ்லீம் விரோத வெறுப்புகளைத் தூண்டுவதற்கும் எதிராகவும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்திற்காக போராடுவதும் கட்டமைப்பதும் மிக முக்கியமானதாக இருக்கிறது.

Loading