முன்னோக்கு

தொழிலாள வர்க்கம் ஜூலியன் அசான்ஜ் மீதான கண்துடைப்பு விசாரணையை நிறுத்த கோர வேண்டும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலண்டனின் பழைய பெய்லியில் நடத்தப்பட்ட ஜூலியன் அசான்ஜை நாடு கடத்துவதன் மீது மீண்டும் தொடங்கப்பட்ட விசாரணையின் முதல் நாள், உலகின் மிகப்பழைய ஜனநாயகங்களில் ஒன்றாக இருந்து வருவதாக பெருமைப்பீற்றி வரும் ஒரு நாடு ஒரு மதிப்பற்ற சர்வாதிகார மட்டத்திற்குச் சுருங்குவதைக் கண்டது.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரான அசான்ஜ், அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளின் போர் குற்றங்கள், சித்திரவதை, அரசு உளவுபார்ப்பு மற்றும் இராஜாங்க சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உள்ளார். ஆனால் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடைக்கப்படும் நிலைமைகளை விட படுமோசமான நிலைமைகளில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர், அடையாளம் குறிக்கப்படாத வேனில் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட அந்த சிறைச்சாலையின் அவர் அறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பழைய பெய்லியில் உள்ள சிறையறைகளில், அவர் ஆறு மாதங்களில் ஒரேயொரு முறை தான் அவரின் வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து, அவரின் சொந்த வழக்கில் இறுதி எழுப்பூர்வ மனுக்களை முதல் முறையாக பார்க்க முடிந்திருந்தது.

சிறைச்சாலைக்கு வெளியே, அவரின் சக தோழரும் விக்கிலீக்ஸின் தலைமை பதிப்பாசிரியருமான Kristinn Hrafnsson, மூத்த புலனாய்வு பத்திரிகையாளர் ஜோன் பில்ஜெர் உட்பட, நீதிமன்றத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர். அன்று காலை, சர்வதேச பொதுமன்னிப்பு சபை மற்றும் எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றவாதிகள் உட்பட வழக்கைக் கண்காணிக்கும் 40 பேருக்கு இணையவழியில் விசாரணையைப் பார்வையிடுவதற்கான அனுமதியை மாவட்ட நீதிபதி Vanessa Baraitser திரும்ப பெற்றுக் கொண்டார். இதற்கு நியாயப்பாடாக, அப்பெண்மணி ஓர்வெல்லியன் வார்த்தைகளில் “நீதிமன்றத்தின் ஒருமைப்பாட்டை" பாதுகாக்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “நாங்கள் வாரந்தோறும் உலகெங்கிலும் வழக்கு விசாரணையைக் கண்காணித்து வருகிறோம். உண்மையில் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட நியாயமான வழக்கு கண்காணிப்பாளர்களாக உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறோம். முதலில் ஆகஸ்டில் நாங்கள் விண்ணப்பித்தே போதே நேரடியாக நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவதிலிருந்து தடுக்கப்பட்டோம். பின்னர் இணைய வழியில் ஆறு இடங்களில் இருந்து கண்காணிக்க அனுமதிக்கப்பட்டோம், இது இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஒரிடமாக குறைக்கப்பட்டது. இப்போது அந்த ஒரிடத்திலிருந்து கண்காணிப்பதற்கும் மறுக்கப்பட்டோம் என்பது இன்று காலை எங்களுக்குத் தெரிய வந்துள்ளது,” என்றார்.

கணிசமான மக்களின் அழுத்தத்திற்கு பின்னர் தான், இந்தாண்டு பெப்ரவரியில் அசான்ஜ் கையாளப்படுவதை எதிர்த்து சர்வதேச பொதுமன்னிப்பு சபை ஓர் அறிக்கை வெளியிட்டது. ஆனால் பழைய பெய்லியில் நடந்து வரும் விசாரணையை அது இணைய வழியில் அணுகுவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாது என்றளவுக்கு ஓர் அப்பட்டமான கண்துடைப்பு விசாரணையை பிரிட்டன் இப்போது நடத்தி வருகிறது.

திங்கட்கிழமை செப்டம்பர் 7, 2020 அன்று இலண்டனின் பழைய பெய்லி நகரின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் பாதைகளை ஏந்தியிருந்தனர். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ பிராங்க் அகஸ்டீன்)

அசான்ஜ் வழக்கு நெடுகிலும், பிரிட்டனின் நீதித்துறை இரண்டு செயல்பாடுகளைச் செய்துள்ளது. அசான்ஜின் சட்டபூர்வ மற்றும் ஜனநாய உரிமைகள் மீதான அமெரிக்க அரசின் ஒவ்வொரு துஷ்பிரயோகத்திற்கும் அது ஒப்புதல் முத்திரை குத்தியுள்ளதுடன், அந்த துஷ்பிரயோகம் பொதுமக்கள் பார்வைக்கு எட்டுவதில் இருந்து சாத்தியமானளவுக்கு பெரும்பாலான ஆதாரங்களைத் தடுத்துள்ளது.

மாவட்ட நீதிபதி Baraitser நேற்றைய நடைமுறைகளின் போது அவ்விரு பணிகளையும் கடமையுணர்வுடன் மேற்கொண்டார். பிரதிவாதி அவரின் சொந்த சாட்சியங்களைக் கேள்வி கேட்பதற்காக அவர் கேட்ட கேள்வி நேரத்தைக் குறைத்தமை அவரின் முதல் தீர்ப்பாக இருந்தது, பிரதிவாதியின் வழக்குரைஞர் Edward Fitzgerald QC இன் வார்த்தைகளில், —“நாடுகடத்துவதற்கான விசாரணைகளில் வழங்கப்படும் நேரத்தில் மதிப்புடைய அணுகுமுறை”— ஒவ்வொரு சாட்சிக்கும் வெறும் அரைமணி நேரம் என்பது அவர்கள் சமர்பித்த எழுத்துபூர்வ அறிக்கையின் பெரும்பான்மை உள்ளடக்கங்களைக் குறிப்பிட முடியாமலேயே போகும் என்பதே இதன் அர்த்தமாகும்.

ஒரு "மாற்று" நாடுகடத்தும் கோரிக்கையில் அமெரிக்க அரசாங்கத்தால் பதினோராவது மணி நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அசான்ஜிற்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகள் விசாரணைகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற பிரதிவாதியின் விண்ணப்பம் Baraitser இன் இரண்டாவது தீர்ப்பில் மறுக்கப்பட்டது.

தற்போதைய விசாரணைக்கு வெறும் ஒருசில வாரங்களுக்கு முன்னர் தான் ஆகஸ்ட் 12 இல் சேர்க்கப்பட்ட இந்த புதிய மனு விசாரணைக்கு வரவிருந்தது. அது, பெரிதும் சமரசப்படுத்தப்பட்ட ஆதாரநபர்களின் அடிப்படையில், இரகசிய ஆவணங்களை வெளியிட்ட தைரியமான செல்சியா மானிங்குடன் சேர்ந்து அசான்ஜின் பத்திரிகை மற்றும் பிரசுரிப்பு பணியை ஓர் இணைய ஊடுருவல்காரர் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பை ஆபத்திற்குட்படுத்தினார் என்றும் முத்திரை குத்துவதை நோக்கி வழக்கின் அச்சை திசைமாற்றி குற்றகரமாக்க முயன்றுவரும் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளது அளவைக் கணிசமானளவுக்கு விரிவாக்கியது.

மேலதிக குற்றச்சாட்டுகள் "அவர் குற்றம் சாட்டப்பட்ட நடத்தை" அல்ல, மாறாக "பின்னணி விவரிப்புகள்" என்று அமெரிக்க அரசாங்கத்தின் வார்த்தையை அசாஞ்சின் சட்டக் குழு ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டது. தங்கள் கட்சிக்காரரின் கடுமையான சிறைதண்டனையை சாத்தியமானளவுக்கு விரைவாக முடிவுக்குக் கொண்டு வர விரும்பி, அவர்கள் விசாரணையைச் செப்டம்பருக்குத் தள்ளி வைக்கும் புதிய கோரிக்கைக்கு பின்தொடர உடன்பட்டனர்.

அவர்கள் இந்த முடிவை நீதிமன்றத்திற்கு தெரிவித்தவுடன், அமெரிக்க அரசு நாடுகடத்துவதற்கான புதிய கோரிக்கைக்காக பின்வரும் திருத்தப்பட்ட ஆரம்ப விவாத குறிப்பை வெளியிட்டது: “பிரதிவாதியின் மனுவுக்கு முரணாக … அகற்றப்படும் இரண்டாவது குற்றச்சாட்டில் உள்ள இணைப்பு குறிப்புகள் வெறுமனே சொல்லாடல் கிடையாது … இந்த குறிப்புகள் நடவடிக்கைகளை உள்ளடக்கி உள்ளதுடன் அதன் அடிப்படையில் தான் இந்த நீதிமன்றம் முன்நகர்கிறது, சொல்லப்போனால் இப்போது நாடுகடத்துவதற்கான அத்துமீறல் என்று எதுவும் இல்லை என்பதை தீர்மானித்தாக வேண்டும்…"

Fitzgerald குறிப்பிட்டார், “அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இந்த நீதிமன்றம் நிராகரித்தாலும் கூட, இந்த புதிய ஆவணத்தின் அடிப்படையில் மட்டுமே கூட [அசான்ஜை வேறு நாட்டிடம் ஒப்படைக்கலாம்] என்று இப்போது கூறப்படுகிறது” என்றார். அசான்ஜிற்காக பேசிய Mark Summers QC உம் "பிரதிவாதியின் வாதங்களின் அடிப்படையில் பார்த்தால் … அடிப்படை நேர்மையின்மை" இது என்றார். குற்றஞ்சாட்டப்பட்ட புதிய நடவடிக்கைக்கு விடையிறுப்பை நெறிமுறைப்படுத்த பிரதிவாதிக்கு நேரமில்லை என்பதுடன் சாட்சிகளைச் சமர்பிக்க ஏற்கனவே நீண்ட காலத்திற்கு முன்னரே அவர்களின் கால அவகாசத்தைக் கடந்துவிட்டனர்.

திருத்தப்பட்ட ஆரம்ப விவாதக் குறிப்பை மீளாய்வு செய்து புதிய வாதங்களைச் சமர்பிக்க அசான்ஜிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்ற உண்மையைப் புறக்கணித்து, பிரதிவாதி ஒத்திவைப்பைக் கோருவதன் மூலமாக எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி, Baraitser ஒரு கண நேர தயக்கமும் இல்லாமல் இந்த கடுமையான சட்ட வழிமுறை ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

கடந்தாண்டு ஏப்ரலில் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து அசான்ஜ் வெளியில் இழுத்து வரப்பட்டதற்குப் பின்னர் இருந்து, அவருக்கு எதிரான அந்த வழக்கு கணினி ஊடுருவலுக்கான அதிகபட்ச ஐந்தாண்டு கால தண்டனையுடன் தொடங்கி, (பிரதானமாக மானிங்கிடமிருந்து பெற்ற ஆவணங்களைப் பிரசுரித்தது சம்பந்தப்பட்ட தண்டனையான) தேசதுரோக சட்டத்தின் கீழ் மற்றும் இப்போதும் அதே தேசதுரோக குற்றச்சாட்டுக்களுடன் ஆனால் பல்வேறு இணைய ஊடுருவல் குழுக்களுடன் சம்பந்தப்பட்டிருந்தமை, இரகசிய ஆவணங்கள் வெளியீட்டாளர் எட்வார்ட் ஸ்னோவ்டனுக்கு உதவியமை மற்றும் தகவல் வெளிப்படைத்தன்மைக்கு அவரின் அழைப்பு ஆகியவை உள்ளடங்கலாக இன்னும் பரந்த பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், மத்திய அரசின் சிறைச்சாலையில் சாத்தியமானளவுக்கு 175 ஆண்டுகால தண்டனையுடன் 18 மடங்கு அதிகரித்துள்ளது.

அதற்கடுத்து, அசான்ஜூடன் சற்று நேரம் கலந்தாலோசித்த பின்னர், ஜனவரி வரையில் விசாரணையை ஒத்தி வைக்குமாறு சம்மர்ஸ் கோரிய மனுவை Baraitser நிராகரித்தார்.

சட்டரீதியில் துஷ்பிரயோகமாகவும் எதேச்சதிகாரமாகவும் அசான்ஜைத் துன்புறுத்துவது உலகெங்கிலுமான அரசாங்கங்கள் ஆழமாக எதேச்சதிகார மற்றும் பாசிவாத ஆட்சி முறைகளுக்கு திரும்புவதை எடுத்துக்காட்டுகிறது. அசான்ஜ் விசாரணைக்கு முந்தைய வாரங்களில், அமெரிக்கா எங்கிலுமான நகரங்களில் பொலிஸ் வன்முறை மற்றும் படுகொலையை எதிர்த்து நின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் இரப்பர் தோட்டாக்களையும், கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தடியடி பிரயோகங்களையும் சந்தித்துள்ள நிலையில், அமெரிக்க அரசியலமைப்பில் பொதியப்பட்டுள்ள உரிமைகள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க சர்வாதிகாரங்களுக்கு நிகரான காட்சிகளாக, மத்திய அரசு முகவர்கள் விசாரணைக்காக அமெரிக்க பிரஜைகளை அடையாளம் குறிக்கப்படாத கார்களில் ஏற்றி சென்றுள்ளனர், அமெரிக்க பொலிஸ் மற்றும் சட்டத்தை தன் கையிலெடுக்கும் பாசிசவாத குழுவினரால் போராட்டக்காரர்கள் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

அசான்ஜின் வழக்கு இந்த அத்துமீறலுக்கு தாக்குமுகப்பாக விளங்குகிறது. அதைக் கொண்டு, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் ஜனநாயக உரிமைகள் அல்லது சட்ட முன்மாதிரி குறித்து இம்மியளவுக்கும் அவர்கள் கவலைப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி வருகின்றனர். முதலாளித்துவ அரசு நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருபவர்கள் மூர்க்கமான ஒடுக்குமுறையை எதிர்பார்க்க வேண்டும் என்ற அப்பட்டமான வர்க்க கோட்பாட்டின் மீது புதிய முன்மாதிரிகளை ஸ்தாபிக்க அவர்கள் முயன்று வருகிறார்கள்.

இந்த போலி-சட்ட கேலிக்கூத்திற்கு, தாராளவாத ஊடகங்கள் என்று கூறிக்கொள்பவையும், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினரும், பிரிட்டனில் தொழிற் கட்சியும் மற்றும் அவர்களின் போலி-இடது பக்கவாத்தியங்களுமே அரசியல் பொறுப்பாகின்றனர். தொழிலாள வர்க்கத்தில் அசான்ஜிற்கு இருக்கும் பாரியளவிலான மக்கள் அனுதாபத்தை சிதைத்து ஒடுக்குவதற்கும், ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் ஜோன்சன் அரசாங்கத்திற்குச் சுதந்திரமான ஆட்சிப்பிடியை வழங்குவதற்கும் இவர்கள் தான் பொறுப்பாவார்கள்.

அரசு-ஜோடித்த பாலியல் தாக்குதல் அவதூறின் அடிப்படையில் அசான்ஜை "பாலியல் பலாத்காரம் புரிந்தவராக" ஈவிரக்கமின்றி அவமதிப்பதை ஆதரித்துள்ள நியூ யோர்க் டைம்ஸ், கார்டியன், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள், பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சி, சோசலிஸ்ட் கட்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள இதுபோன்ற அமைப்புகள், அசான்ஜை சுவீடனிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரின—இது அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை நோக்கிய ஒரு ஆரம்ப படியாக மட்டுமே இருக்கும்.

பராக் ஒபாமாவின் கீழ் அசான்ஜிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட இரகசிய பெரு நடுவர் மன்றம் அம்பலமான பின்னர், ட்ரம்ப் நிர்வாகம் அசான்ஜை ஒப்படைக்குமாறு கோரியது, தாராளவாத பத்திரிகைகள் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து அவர் பிடித்து வரப்பட்டதை உற்சாகமாக வரவேற்றன, பின்னர் ஊடுருவல் குற்றச்சாட்டின் பேரில் வெறும் ஐந்தாண்டு கால தண்டனைக்காக மட்டுமே அவரின் கைதைக் கோருவதற்காக ட்ரம்பின் "கனிவான போக்கை" குறித்து அவை எழுதின.

தேசத்துரோக சட்டத்தின் கீழ் அந்த குற்றச்சாட்டுக்கள் விரிவாக்கப்பட்ட போது, அவர்களும் அசான்ஜை ஒப்படைக்காதே இயக்கத்தின் ஒரு சில போலி-இடது ஆதாரவாளர்களும் பிரிட்டிஷ் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்கவும், ஜெர்மி கோர்பின் மற்றும் பேர்ணி சாண்டர்ஸ் போன்ற "இடது அரசியல்வாதிகளுக்கு" முறையீடு செய்யவும் அழைப்பு விடுத்தனர். நேற்றைய நீதிமன்ற விசாரணையின் ஜனநாயக விரோத துர்நாற்றம் இந்த பிரச்சாரத்தின் அழுகலாக இருந்தது.

பழைய பெய்லியில் நிலவும் தீர்க்கமான அரசியல் பிரச்சினைகள் மீது போராடியாக வேண்டும். இந்த போராட்டத்தின் போர்க்கோடுகள் நீதிமன்ற அறைகளின் வழியாக அல்ல, மாறாக சமூகத்தின் வழியாக வரையப்பட்டுள்ளன என்பதை தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் எச்சரித்தாக வேண்டும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஏகாதிபத்திய குற்றங்களை அசான்ஜ் வெளியிட்டார் என்பதால் அவர் மாட்டிக் கொண்டுள்ளார் என்ற உண்மையை இந்த சட்டக் கேலிக்கூத்தில் எந்த திருப்பமும் மாற்றப் போவதில்லை. அவரைத் தொல்லைப்படுத்துவதன் மூலம், ஆளும் வர்க்கம் எதிர்காலத்தில் இன்னும் அதிக கொடூர அட்டூழியங்களை நடத்துவதற்கான அவர்களின் உரிமையை உறுதிப்படுத்தி வருகிறார்கள். இது எதிர்க்கப்பட வேண்டும். உலகெங்கிலும் ஓர் ஒருங்கிணைந்து தொழிலாளர்கள் இயக்கமே இதைச் செய்ய தகைமை கொண்ட ஒரே சக்தியாகும்.

Loading