கொரொனா வைரஸ் பரவலைத் தடுப்பதன் பேரில், பொது மக்களை ஒழுக்கப்படுத்துவதற்காக பொலிசுக்கும் இராணுவத்துக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வடக்கில் வறிய தமிழ் மக்கள் மீது பொலிசாரும் இராணுவத்தினரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தும் தொடர்ச்சியான சம்பவங்கள் நடந்து வருகின்றன.
வடக்கில் வாழும் தமிழ் மக்கள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பு ஆட்சியாளர்கள் முன்னெடுத்த இனவாத யுத்தத்தினால் குடும்ப உறுப்பினர்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து, மீண்டும் பொருளாதார ரீதியில் தலை தூக்குவதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். கொரோனா பூட்டுதலினால் கிடைத்த வருமானத்தையும் இழந்து உணவுக்கே திண்டாடிக்கொண்டிருக்கின்ற இந்த மக்கள் மீதே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
கொரோனா பரவலினால் உக்கிரமாக்கப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வெகுஜனப் போராட்டங்களுக்கு வழிவகுப்பதையிட்டு விழிப்படைந்துள்ள ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ, தன்னுடைய நிர்வாகத்தை இராணுவமயப்படுத்தி வருகின்ற சூழ்நிலையிலேயே பொது மக்கள் மீதான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக இவ்வாறான ஒரு தொகை சம்பவங்கள் நடந்துள்ளன. (பார்க்க: இலங்கையின் வடக்கில் பொலிசும் இராணுவமும் ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி மக்களை தாக்குகின்றன)
இந்த தாக்குதல்களில், மே 1 அன்று பருத்தித்துறை பிரதேசத்தின் குடத்தனையில், மாளிகைத்திடல் கிராமத்தில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிசும் அதிரடிப்படையும் நடத்திய தாக்குதல் மிகவும் மிலேச்சத்தனமானதாகும். இந்த சம்பவத்துக்குப் பின்னர் மேலும் மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளன.
சனிக்கிழமை பகல் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் வீடொன்றுக்குள் சிவில் உடையுடன் நுழைந்த மானிப்பாய் பொலிசார் வீட்டில் இருந்த இளைஞரை தாக்கியுள்ளனர், உள்ளூர் இளைஞர்கள் திருப்பி தாக்கிய பின்னர், மேலதிக பொலிசாரை வரவழைத்து அந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல்காரர்கள் வேலி மற்றும் மதில்களையும் உடைத்துள்ளனர். காயமடைந்தவர்களை கொண்டு செல்ல வந்த நோயாளர் ஊர்தியையும் திருப்பி அனுப்பிய பொலிசார் 5 இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். காதல் விவகாரம் ஒன்றை தடுப்பதற்கே பொலிசார் இவ்வாறு தலையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமை வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில் கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த இராணுவத்தினர், முன்னாள் விடுதலைப் புலி போராளி ஒருவரின் பெயரைக் கேட்டுக்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அவ்வாறான பெயரில் ஒருவர் இல்லையென பொலிசாரே கூறுகின்றனர். தாக்குதலில் காயமடைந்த ஒரு வயோதிப பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படையினர் கிராமத்தில் இளைஞர்களை தாக்கிய போது கிராமத்தவர்கள் ஒன்றிணைந்து விரட்டியுள்ளனர். ஜனவரி மாதம் தைப்பொங்கல் தினத்தன்று முரண்பாடு ஒன்று ஏற்பட்டதில் இருந்தே இராணுவத்தினர் நாகர் கோவில் கிராத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த புதன் கிழமை, முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மூன்று வீடுகளுக்குள் குடிபோதையில் நுழைந்த பொலிசார், ஒரு நபரை கொண்டுவந்து பொலிசில் ஒப்படைக்குமாறு கோரி மூன்று பேரை அடித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களது முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த பொலிசார், குணமடைவதற்கு முன்னரே பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்ப ஆஸ்பத்திரி நிர்வாகத்தை நெருக்கியுள்ளனர்.
மே 1 அன்று, குடத்தனை கிராமத்தின் மீது பருத்தித்துறை பொலிசார் நடத்திய கொடூரம் பற்றிய வீடியோ காட்சிகள் பல ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் வந்த பொலிசார் குறிப்பாக பெண்களை தூசண வார்த்தைகளால் திட்டியபடி கொட்டான் பொல்லுகளாலும், துப்பாக்கிப் பிடிகள் மற்றும் கிரிக்கட் விக்கட் தடிகளாலும் சப்பாத்துக் கால்களாலும் மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.
மயங்கிய தன் அம்மாவை மடியில் கிடத்திக்கொண்டு அழுதுகொண்டிருந்த ஒரு சிறுமி, பொலிசார் தன் தாயின் வயிற்றில் சப்பாத்துக் கால்களால் மிதித்ததாகவும், தன் சகோதரியையும் பொல்லுகளாலும் துப்பாக்கியாலும் தாக்கியதாகவும் கூறினார். என்னை “கொட்டான் தடியால் முதுகுப்புறத்தில் அடித்தார்கள், தலமையிரை பிடித்து இழுத்துச் சென்றார்கள்,” என இன்னொரு பெண் கூறினார்.
காயமடைந்தவர்களை முச்சக்கரவண்டிகளில் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக பொலிசார் அனுமதிக்கவில்லை. பொலிசார் போன பின்னர் நோயாளர் ஊர்தி வரும் வரை அவர்கள் மயங்கி கிடந்தனர். காயப்பட்ட இன்னும் பல பொதுமக்கள், பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கிக்கொண்டனர்.
ஏப்பிரல் 30 அன்று மாளிகைத்திடல் கிராமத்துக்கு வந்த ஒரு பொலிஸ் குழுவினர், அங்கிருந்த ஒரு வாகனம் மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாக கூறி அதை கொண்டு செல்ல முயன்றுள்ளனர். பொலிசாரின் குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை என மறுத்த கிராமத்தவர்கள், வாகனத்தை கொண்டு செல்ல அனுமதிக்காமல் வாதிட்டுள்ளனர். பொலிசாரின் அத்துமீறல்களை சிலர் கைத் தொலைபேசிகளில் வீடியோ ஆதாரமாக பதிவு செய்துள்ளனர். மறுநாள் அந்த வீடியோக்களை கேட்டே பொலிசார் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல், பொலிசாரின் அடாவடித்தனங்களை சவால் செய்கின்ற அல்லது அவர்களுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டுகின்ற பொது மக்களை அச்சுறுத்துவதாகும். தாக்குதலின் பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அனுமதி அட்டையுடன் உணவு கொண்டு சென்ற நான்கு பெண்களை பருத்தித்துறை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்தனர். அராசாங்க உத்தியோகத்தர்களை கடமையைச் செய்யவிடாது தடுத்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த இந்த பெண்களை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது.
பருத்தித்துறை நகரத்தில் இருந்து 11 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள சுமார் 90 குடும்பங்கள் வாழ்கின்ற மாளிகைத்திடல் கிராமத்தில் 95 வீதமான குடும்பங்கள் கூலித் தொழிலையே நம்பி வாழ்கின்றன. அநேகமானோர் அன்றாட உணவுத் தேவைக்கு கூட போதாத தினக் கூலிக்கு, விவசாய நிலங்களிலும் மணல் ஏற்றும் லொறிகளிலும் வேலை செய்கின்றார்கள். அந்த வேலையும் தினமும் கிடைப்பதில்லை. பெரும்பாலான மாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக, முடியாமல் க.பொ.த. சாதாரண தரத்துடன் பாடசாலையில் இருந்து இடைவிலகுகின்றனர்.
இங்கு நடக்கின்ற குற்றச் செயல்களின் பேரில் அடிக்கடி பொலிஸ் பாய்ச்சல்களும் கைதுகளும் நடந்து வருவதுடன் பலரின் வாழ்க்கை நீதிமன்றங்களுக்கு அலைவதுடனேயே கழிகின்றன. இது போன்ற பல கிராமங்கள் அந்தப் பகுதியில் உள்ளன.
2017 இல் குடத்தனைக்கு அருகில் உள்ள துன்னாலை கிராமத்தில், மண் லொறியில் பிரயாணம் செய்த ஒரு இளைஞர் நெல்லியடிப் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்தக் கிராமத்தின் நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு, பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு எதிரான வழக்குகள் இழுபட்டுச் சென்றன. (பார்க்க: இலங்கை: யாழ்ப்பாணத்தில் துன்னாலை மற்றும் குடவத்தை கிராமத்தவர்களுக்கு எதிரான பொலிஸ் ஒடுக்குமுறையை நிறுத்து!)
யாழ்ப்பாணத்தில் சமூக விரோதச் செயல்கள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வுகளில் ஈடுபடுபவர்கள் பொலிசாரினதும் மற்றும் அரசியல் உயர்மட்டத்தினரதும் அனுசரணை உடையவர்கள் என்பது பகிரங்க இரகசியமாகும். அண்மைக்காலங்களில், பிரமாண்டமான மண் அகழ்வுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தார்கள். ஆனாலும், பொலிசோ அல்லது அரசாங்கமோ அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக சிறு வியாபாரிகள் அல்லது கூலி வேலை செய்பவர்களே வேட்டையாடப்படுகின்றனர்.
யுத்த காலம் முழுதும் தமிழ் மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ், யாழ்ப்பாணத்தில் அதை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை கடந்த வாரம் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த செய்தியில் ஊர்ஜிதமாகியுள்ளது. வடமராட்சியின் நெல்லியடி பொலிஸ் நிலைய அதிகாரிகள், “மின்னல்” என்ற வாள்வெட்டுக் குழுவை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அந்தப் பகுதி வர்த்தகர்களையும் செல்வந்தர்களையும் கஞ்சா போன்ற போதை பொருள் நடவடிக்கைகளுடன் திட்டமிட்டு சிக்க வைப்பதன் மூலம், அவர்களிடம் இருந்து லட்சக் கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றுள்ளனர்.
பல தசாப்த கால போரினால் ஜீவனோபாயத்தை இழந்து, ஏதாவதொரு வழியில் வருமானம் தேடத் தள்ளப்பட்டுள்ள இந்தப் பிரதேச கிராமத்தவர்களை இழிவானவர்களாக அல்லது குற்றச் செயல்களில் பேர் போனவர்களாக கருதுகின்ற தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகள், அந்த மக்கள் மீது அரச ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதை நியாயப்படுத்துகின்றன.
குடத்தனையில் கைது செய்யப்பட்ட பெண்களின் சார்பில் நீதிமன்றத்தில் முன்நிலையாகிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரான சட்டத்தரணி கே. சுகாஸ், “நாங்கள் பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்காக வழக்கில் ஆஜராகியிருந்தோம். அதற்காக நாங்கள் மண் மாபியாக்களுக்கும், சமூக விரோத செயல்களுக்கும், இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டோம். மண் மாபியாக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம்,” எனத் தெரிவித்தார்.
இதே போல் துன்னாலையில் நடந்த பொலிஸ் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த, தமிழ் கூட்டமைப்பின் ஒரு தலைவரான எம்.ஏ. சுமந்திரன், பொலிசாருக்கு சட்டத்தை மீறுவதற்கு உரிமை இல்லை என்று கூறிய அதே மூச்சில், “யாழ்ப்பாணத்தில் மண் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்த பொலிசாருக்கு முடியும்” எனக் கூறினார்.
கடந்த வாரம் அரசாங்கத்துக்கு ஆதரவு பெறுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைத்த கூட்டத்திற்குள் நுழைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், பிரதமரின் வீட்டில் மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தை நடத்திய போது, வடக்கில் ஏ9 பாதையில் சோதனை கெடுபிடிகளைப் பற்றி முனு முனுப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டனர்.
கொரோனாவைப் பயன்படுத்தி இராஜபக்ஷ முன்னெடுக்கும் இராணுவமயப்படுத்தலை தவிர்க்க கூடாத ஒன்றாக கருதி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்து வருகின்ற அதே வேளை, ஏனைய தமிழ் தேசியவாத கட்சிகள் மௌனமாக ஆதரவளித்து வருகின்ற சூழ்நிலையில், இராணுவமும் பொலிசும் மேலும் மேலும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்கின்றன.
ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரை: