இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இராணுவமும் பொலிசும் வடக்கில் ஏழை மக்களை தாக்கி வருவது சம்பந்தமான செய்திகள் கடந்த மாதம் முழுதும் வெளியாகி உள்ளன.
உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் உட்பட எந்தவொரு அடிப்படை வசதியும் வழங்கப்படாத நிலையில், தங்களது தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியில் வந்த பொது மக்களே இவ்வாறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு ஒன்பது புகார்கள் வந்துள்ளன. அவற்றில் ஏழு சாவகாச்சேரி, வட்டுக்கோட்டை, கோபாய் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையங்களுக்கு எதிராகவும், இரண்டு ஆணையிறவு இராணுவ முகாமுக்கு எதிராகவும் பதிவாகியுள்ளன.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் ஏப்பிரல் 25 அன்று தண்ணீர் எடுப்பதற்காக சித்தன்கேணிப் பிள்ளையார் கோயில் கிணற்றுக்கு சென்ற ஒரு முதியவர் பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டமை அண்மைய சம்பவமாகும். பொலிசார் முதியவரை தூசண வார்த்தைகளால் திட்டியுள்ளனர். தான் ஒரு முன்னாள் அரசாங்க உத்தியோகத்தன் என கூறிய அவர் அசிங்கமான வார்த்தைகளில் திட்டுவதை எதிர்த்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த பொலிசார், அவரது தண்ணீர் கானை பறித்து வீதியில் அடித்து உடைத்ததுடன், “நாங்கள் தண்ணீர் இல்லாமல் மூன்று மாதமாக கடமை செய்கிறோம், உனக்கு ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா” எனக் கேட்டு அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். நிலைகுழைந்து கீழே விழுந்த அவர் தண்ணீர் இல்லாமேலேய வீட்டுக்கு விரட்டப்பட்டுள்ளார்.
அதேநாள் காலை, மூன்று கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும் முருகமூர்த்தி கோயில் தண்ணீர் தாங்கிக்கு நீர் நிரப்புவதற்காக மோட்டரை இக்குவதற்கு சென்ற வயதான கோயில் நிர்வாகியை வழிமறித்த வட்டுக்கோட்டைப் பொலிசார், அதே கேள்வியை கேட்டு தாக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணாமாக அநேக குடும்பங்கள் தண்ணீருக்கு திண்டாடுகின்றன. மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு கிடைத்துள்ள புகார்களில் ஒன்று, இவ்வாறு தண்ணீர் எடுக்கப் போனவர்கள் மீதான தாக்குதல் பற்றியதாகும்.
இதே வட்டுக்கோட்டை பொலிசார், இதற்கு முதல் வாரம் அயல் வீட்டாருடன் பேசிக்கொண்டிருந்த ஒருவர் மீது மது போதையில் வந்து கொடூரமாகத் தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட தூரம் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்த போதும், மீன் பிடிக்க கடலுக்குச் சென்றவர்கள் அல்லது கடல் உணவு விற்பனைக்கு சென்றவர்கள் கடற்படையினரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேசத்தின் இலவன்குடா கடற்கரைப் பகுதியில், ஏப்பிரல் 2 அன்று நள்ளிரவு பாஸ் அனுமதிகளைப் பெற்றுக்கொண்ட பின் கடல் அட்டை பிடிக்கச் சென்ற நான்கு பேர் மீது கடற்படை நடத்திய தாக்குதலில், செல்வகுமார், 32, என்ற இளைஞரின் கை முறிக்கப்பட்டுள்ளது. கடல்
கடற்படையினர் அவர்களை தடிகளால் அடித்தும் சப்பாத்துக் கால்களால் உதைத்தும் உள்ளனர். உலகசோசலிசவலைத்தளநிருபர்களுடன் பேசிய செல்வகுமார், “நான் நாளாந்தம் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்து வருபவன். குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையால் நாளாந்தம் தொழிலுக்கு போயே ஆக வேண்டும்,” எனக் கூறினார்.
“ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அரசாங்கமோ அல்லது வேறு எவரிடமிருந்தோ எந்தவித உதவியும் எமக்கு வழங்கப்படாத சூழ்நிலையில் உணவுக்கு திண்டாடினோம். அந்த வேளையில் அரசாங்கமும் கடற்படையினரும் கடற்றொழில் செய்ய அனுமதித்ததன் பின்னரே கடலுக்கு சென்றோம்,” என அவர் மேலும் கூறினார்.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் கடைசி கட்டத்தில் துப்பாக்கி குண்டு தாக்கியதால் செல்வகுமாரின் காலில் ஏற்கனவே எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. “போசாக்கான உணவு கிடைக்காத சூழ்நிலையில், உணவுப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுகளுக்கு மத்தியில், எனது குடும்பத்தின் அரைகுறை உணவுத் தேவைகளுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாயாவது வேண்டும். கடனும் வாங்கமுடியாது. இந்த சூழ்நிலையில் எனது கையையும் கடற்படை அடித்து முறித்துள்ளதால் நீண்ட காலத்திற்கு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் நாங்கள் பட்டினி கிடக்கும் நிலைதான் ஏற்படும்” என அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்பிரல் 7 அன்று இரவு இதே பிரேதசத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இன்பராஜ் மற்றும் அவரது சகோதரனும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவனுமாகிய யூலியன், ஆகிய இருவரையும் சூழ்ந்த பத்துப்பேர் அடங்கிய கடற்படைக் குழு, தடிகள் மற்றும் டோச் லைட்களாலும் தலையில் தாக்கி மண்டையை உடைத்துள்ளது. தாக்கியவர்கள் ஒருவரின் முதுகில் கடித்தும் உள்ளனர். தன்னை நீண்ட நேரம் நீருக்குள் அமுக்கி சித்திரவதை செய்து, அதன் பின்னர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று முழங்கால்களில் நீண்ட நேரம் நிற்கவைத்த கடற்படையினர், தாம் பிடித்த கடலட்டைகள் மற்றும் உபகரணங்களையும் அபகரித்துக்கொண்டு விடுவித்ததாக யூலியன் உலகசோசலிசவலைத்தளத்திற்கு கூறினார்.
யாழ்ப்பாணத்தில் காரைநகரின் தோப்புக்காடு கிராமத்தில், ஏப்பிரல் 5 அன்று மூன்று இளைஞர்கள் மீது காரைநகர் கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இறந்த மாடு ஒன்றைப் புதைக்கச் சென்ற போதே 7 பேர் கொண்ட கடற்படைக் குழுவினர் அவர்களை சுற்றிவளைத்து மின்சார வயர்கள் மற்றும் மண்வெட்டி பிடி போன்றவற்றால் சுமார் 5 மணி நேரமாக தொடர்ச்சியாக அடித்தும் உதைத்தும் தாக்கி கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உறவினர்களும் கிராமவாசிகளும் மன்றாடிய போது, படையினர் அவர்களை அச்சுறுத்தி விடுவித்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதலால் ஏற்பட்ட கண்டல் காயங்கள் மற்றும் வீக்கங்களால் நடக்கக் கூட முடியாமல் இருந்த போதும், சிகிச்சை பெறுவதற்கு வைத்தியசாலைக்கு சென்றால் பொலிசில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் என்ற அச்சத்தில், குறித்த இளைஞர்கள் சிகிச்சை பெறாமலேயே இருக்கின்றனர்.
கடந்த மார்ச் 30 அன்று, கிளிநொச்சி உதயநகர் பகுதியில் முதல்வன் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் நடராசலிங்கம் துஷாந்த், தனது அலுவலகத்துக்குள் மாலை 5.45 மணியளவில் நுழைந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். தாக்குதல் சம்பவம் சம்பந்தமாக உலக சோசலிச வலைத்தளத்திற்கு விளக்கிய துஷாந்த், 4 பேர் கொண்ட குழு, தன் மீதும் நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மீதும் தடிகள் மற்றும் போத்தல்களால் சரமாரியாக தாக்கியதுடன், தன்னை போத்தலால் குத்திய தாக்குதல்தாரிகள், கணனிகள் மற்றும் அலுவலகப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் அடித்து நொருக்கிவிட்டுச் சென்றதாக கூறினார்.
தாக்குதல்தாரிகள் மது போதையில் இருந்ததாக கூறி அவர்கள் பொலிசாரால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தம்மை தாக்க வந்தவர்கள் மது போதையில் இருக்கவில்லை என்றும் தன்னையே இலக்கு வைத்து தாக்கினர் என்றும் துஷாந்த் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, வீடுகளுக்கு தண்ணீர் விநியோகிக்க வெளியில் வருவோர் கூட மோசமாக தாக்கப்படுவதோடு சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டு வரும் ஒரு நிலைமையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதேசத்தில், இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு கடமையில் இருக்கும் போதே நடந்துள்ளது. தாக்குதல்காரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இவை அனைத்தும் பாதுகாப்பு படைகளின் ஆதரவுடனேயே தாக்குதல் நடந்துள்ளதற்கான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தனது சகோதரர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது நடந்த படுகொலைகள், கடத்தல், காணாமல் ஆக்குதல் உட்பட போர் குற்றங்களுக்காக குற்றம்சாட்டப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த நவம்பர் தேர்தலில் ஜனாதிபதி ஆனது முதலே ஊடகவியாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது முதல் தன்னுடைய நிர்வாகத்தை மேலும் மேலும் இராணுவமயப்படுத்தி வருவதன் பாகமாக கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ள சூழ்நிலையில், பாதுகாப்பு படைகளின் கை ஓங்கியுள்ளதன் விளைவே இந்த தாக்குதல்களாகும். இது போன்ற இன்னும் பல தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தள்ள போதும் இன்னமும் வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பாதுகாப்பு படையினர், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் நடமாடத் தொடங்கியுள்ள நிலையில், யாப்பாணம் நகரத்தில் யுத்த காலத்தில் போன்று அதிகளவலான படையினர் துப்பாக்கிகள் சகிதம் விதிகளில் நிலைகொண்டுள்ளனர்.
கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் வழங்கல் உட்பட பல சிவில் நடவடிக்கைகளிலும் இராணுவம் தலையீடு செய்ய முயற்சிக்கின்றமை வடக்கில் சிவில் அதிகாரிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னரே இலங்கை பொருளாதாரம் நெருக்கடியில் மூழ்கிப் போயிருந்தது. தொற்று நோயினால் அது மேலும் மோசமடைந்துள்ள நிலைமையில், கூடுமான விரைவில் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
இந்த நெருக்கடியினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில் வெட்டுக்கள், வேலை நிலமை வெட்டுக்களுக்கும் எதிராகவும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வெடிக்கவுள்ள தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு தயார் செய்ய ராஜபக்ஷ இராணுவத்தை அணிதிரட்டிக்கொண்டுள்ளார். பொருளாதாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்தும் சாக்குப் போக்கின் கீழ் கொழும்பு உட்பட பல முதலீட்டு வலயங்களில் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியுள்ளன.
ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டின் கீழ், தெற்கில் உள்ள மக்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 40,000 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு பத்தாயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இவர்களில் அநேகமானவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வந்தவர்களாவர்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய முன்னணி உட்பட தமிழ் கட்சிகளும் எல்லா எதிர்க் கட்சிகளும் ராஜபக்ஷவின் இந்த இராணுவ-பொலிஸ் அரசுக்கான தயாரிப்புகளை முழுமையாக ஆதரிக்கின்றன.
தமிழ் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வீரகேசரி பத்திரிகைக்கு ஏப்பிரல் 8 அன்று கொடுத்த பேட்டியில், இராணுவத்தால் நிலைமைகள் கட்டுப்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என கூறி, போலியாக எதிர்ப்பு காட்டிய போதிலும், தற்போதைய நிலைமையின் கீழ் அதாவது தொற்று நோய் நிலைமையின் கீழ், இதை தவிர்க்கவும் கூடாது என்று அதே மூச்சில் கூறினார். இது தொற்று நோயை சுரண்டிக்கொண்டு ராஜபக்ஷவினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் ராணுவமயப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகும்.
கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத குண்டுத் தாக்குதலை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவுக்கு கடுமையான அவசரகால சட்டங்களை திணிக்கவும் "பயங்கரவாதத்தை அடக்குதல்" என்ற பெயரில் நாடு முழுவதும் இராணுவத்தை கட்டவிழ்த்து விடுவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு கொடுத்தது.
தமிழ் கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் இத்தகைய பிற்போக்கு நடவடிக்கைகளினாலேயே, வடக்கில் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான துன்புறுத்தலையும் மிரட்டல்களையும் தீவிரப்படுத்துவதற்கு இராணுவமும் பொலிசும் பலம் பெற்றுள்ளன.