Print Version|Feedback
යාපනයේ තුන්නලායි හා කුඩවත්තෙයි නිවැසියන්ට එරෙහිි පොලිස් මර්දනය නතර කරනු!
இலங்கை: யாழ்ப்பாணத்தில் துன்னாலை மற்றும் குடவத்தை கிராமத்தவர்களுக்கு எதிரான பொலிஸ் ஒடுக்குமுறையை நிறுத்து!
By Socialist Equality Party
20 October 2017
வட இலங்கையில் யாழ்ப்பாண குடாநாட்டில் துன்னாலை மற்றும் குடவத்தை கிராமங்களில் உள்ள மக்களை கைது செய்து சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொலிஸ் ஒடுக்குமுறையை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் கடுமையாக கண்டனம் செய்கின்றன.
கடந்த ஜூலை 9 அன்று பொலிசாரால் தினேஷ் யோகராஜா என்ற 24 வயதான இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிராக கிராமத்தவர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பின் பின்னரே இந்த பொலிஸ் மற்றும் இராணுவ ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்று, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய், போரின் போது இராணுவத்தால் பலாத்காரமாக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை அதன் சட்டபூர்வமான உரிமையாளர்களுக்கு திருப்பிக்கொடு போன்ற தமிழ் மக்களின் எரியும் கோரிக்கைகளை முழுமையாக நசுக்கும் அரசாங்கத்தின் தயார் நிலையே இந்த ஒடுக்குமுறையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலட்சத்துக்கும் அதிகமான இராணுவ சிப்பாய்கள் தங்கியிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு உண்மையிலேயே இராணுவ ஆட்சியின் கீழ் உள்ளது. யாழ்ப்பாணத்தில் தளம் கொண்டுள்ள இரு மனித உரிமை அமைப்புகளின் படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் இரு தனிமனிதர்களுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற விகிதத்தில் 60,000 இராணுவ சிப்பாய்கள் தங்கியிருக்கின்றனர்.
இளைஞரின் படுகொலைக்கு விரோதமான எதிர்ப்பை படம் பிடித்து வைத்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளும் சுற்றி வளைப்புகள் மூலம் தொடர்ந்தும் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. கிராமங்களைச் சுற்றிவளைப்பதிலும், திடீர் சோதனை நடவடிக்கைகளிலும் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். புதிய வீதித் தடைகள் போடப்பட்டன. கைது செய்யப்படுவோம் என்ற பீதியில் இந்த கிராமத்தில் வாழும் இளைஞர்களில் சுமார் 500 பேர் அளவில் தலைமறைவாக உள்ளனர். வீடுகளில் உள்ளவர்கள் போதைப் பொருட்களை வைத்திருந்தார்கள் என்ற போலி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுவதாக பிரதேசவாசிகள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறினர்.
கைது செய்யப்பட்டுள்ள 70 இளைஞர்களில் 35 பேர், பொலிசாரின் கோரிக்கையின் பேரில் நீதிமன்றத்தினால் திணிக்கப்பட்டுள்ள கொடூரமான பிணை நிபந்தனைகளின் காரணமாகவே இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் காவல் அரணைத் தாக்கியமை, வீதியில் டயர் கொழுத்தியமை, பொலிஸ் பரிசோதகரின் வீட்டுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் கடற்படையினரைத் தாக்கியமை போன்ற நான்கு குற்றச்சாட்டுக்கள் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா மூன்றுபேரை பிணையாளர்களாக முன்வைக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படுவதன் மூலம் பிணை பெறுவது தடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30 அன்று, வாள் மற்றும் பொல்லுகள் சகிதம் வந்த கும்பலால் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலை வேட்டையாலுக்கான காரணமாகக் கொண்டு பொலிஸ் இன்னொரு சுற்று கைது மற்றும் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டது. பொலிஸ் கடந்த நான்கு மாத காலத்துக்குள், யாழ்ப்பாண பிரதேசத்தில் நூற்றுக்கும் அதிகமான தமிழ் மக்களை கைது செய்துள்ளது. கடுமையான இராணுவ மற்றும் பொலிஸ் ஆக்கிரமிப்பில் உள்ள யாழ்ப்பாண குடாநாட்டில் பொலிசார் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் மற்றும் ஜூலை 22 அன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மானிக்கவாசகர் இளஞ்செழியனைக் கொல்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை செய்தவர்கள் யார் என்பது நிச்சயமாக எழும்பும் கேள்விகளாகும்.
ஜூலை 30 அன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இரு பொலிசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் முன்னாள் விடுதலைப் புலி போராளிகளும் ஆவா கும்பலைச் சேர்ந்தவர்களுமே என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். ஆவா கும்பலானது போரின் பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷவின் அனுமதியுடன் இராணுவ புலனாய்வுத் துறையினரால் உருவாக்கப்பட்டது என்பதை சுகாதார அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான இராஜித சேனாரட்ன கடந்த நவம்பர் 2 அன்று நடத்திய நிருபர்கள் மாநாட்டில் தெரிவித்தார். சேனாரத்ன, இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழும் அமைச்சராக இருந்து போரை முன்னெடுத்து செல்வதற்கு தோள் கொடுத்த நபராவார்.
இராணுவ பொலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராக வடக்கில் வளர்ச்சியடைந்து வரும் வெகுஜன எதிர்ப்புகளை விடுதலை புலிகள் மீண்டும் தலை தூக்குவதாக சித்தரித்து அந்தப் பிரதேசங்களில் இராணுவ ஆட்சியை மேலும் பலப்படுத்துவதே அரசாங்கத்தின் ஒரு குறிக்கோளாகும். புலிகள் மீண்டும் தலை தூக்குகின்றனர் என்ற சாக்குப் போக்கின் கீழ், இராணுவ மற்றும் சிங்கள பேரினவாத கும்பல்களை தூண்டிவிட்டு, தமிழர்-விரோத இனவாதத்தை மீண்டும் கிளறிவிட்டு, போராட்டங்களுக்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவது அரசாங்கத்தின் இன்னொரு குறிக்கோளாகும்.
ஜனாதிபதி சிறிசேன, அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்குவதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக நியாயம் வழங்குவதாகவும் வாக்குறுதி கொடுத்தே வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளை சுரண்டிக்கொண்டார். உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின் படி, அரசியல் கைதிகள் 132 பேர் இது வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தமிழ் மக்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்குப் பேர் போன இந்த சிறைச் சாலைகளிலேயே தமது இளமைக் காலத்தை முழுமையாக கழித்துள்ளனர். யுத்தம் முடிவடைந்து தசாப்தம் நெருங்கியுள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமை மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய அரசாங்கத்தின் முழு அலட்சியம் சம்பந்தமாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சீற்றம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த வெள்ளியன்று யாழ்ப்பாணம் சென்ற போது ஜனாதிபதி சிறிசேன இந்த வெகுஜன எதிர்ப்பிற்கு முகம் கொடுத்தார்.
வெகுஜன எதிர்ப்பை சந்தித்து கபடத்தனமாக நழுவிக்கொண்ட சிறிசேன, அதன் பின்னர் நடந்த கூட்டத்தில், எனக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் அதில் இருந்து பிசாசுகள் நன்மை பெறும் என தெரிவித்தார். பிசாசு என அவர் சமிக்ஞை செய்தது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியைப் பற்றியே ஆகும். மறு நாள், புலி சந்தேக நபர்களைத் தவிர விடுதலை செய்யப்படுவதற்கு எந்த அரசியல் கைதிகளும் கிடையாது என பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜே வர்தன தெரிவித்தார்.
“நல்லாட்சி மற்றும் ஜனநாயக” போர்வையைப் போர்த்துக்கொண்டு ஆட்சிக்கு வந்த சிறிசேன, இராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பதவியில் இருந்தவர். இராஜபக்ஷ நிர்வாகமானது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட போர் குற்றங்கள் சம்பந்தமாக சிறிசேனவும் பொறுப்பாளியாவார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களுக்கு எதிரான போர் அட்டூழியங்களை தொடக்கி வைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்.
யுத்தத்தை முன்னெடுப்பதற்கும் போரின் பின்னர் தமிழ் மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைப்பதற்கும் ஒத்துழைப்பு கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), விடுதலைப் புலி அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இப்போது கூச்சலிடுவதானது திட்டமிட்ட மோசடியும் கபடத்தனமும் ஆகும்.
தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வதாக கூறிக்கொண்டு, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகள் பூராவும், தமிழ் பொலிஸ் மற்றும் நேர்மையான செயலூக்கமான பொலிசை ஸ்தாபித்துக்கொள்வதற்கான ஒரு மோசடியான பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் கூட்டமைப்பு, கொழும்பு அரசாங்கத்துக்கும் அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட முதலாளித்துவ கட்சிகளுக்கும் எதிராக தமிழ் மக்களின் அதிருப்தி வளர்ச்சியடைந்து வருகின்ற சூழ்நிலையிலேயே இப்போது அரசாங்கத்தின் பொலிஸ் இராணுவ ஒடுக்குமுறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றது.
26 ஆண்டுகால இனவாத போரில் நாசமாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக தீவிரமாக்கப்பட்டுள்ள இந்த ஒடுக்குமுறை, ஒட்டு மொத்த சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக விடுக்கப்படும் எச்சரிக்கை ஆகும்.
2008ல் இருந்து ஆழைமடைந்து வரும் உலக முதலாளித்துவ முறைமையின் நெருக்கடியின் மத்தியில், சர்வதேச நாணய நிதியம் திணித்துள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்புகளை நசுக்குவதற்காக, அரசாங்கம் மேலும் மேலும் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் தங்கியிருக்கின்றது. வடக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்த ஒடுக்குமுறை, ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ்-இராணுவ அரச திட்டத்தின் உள்ளார்ந்த பகுதியாகும்.
தொழிலை நிரந்தரமாக்க கோரியும் தனியார்மயமாக்கல்களை நிறுத்தக் கோரியும் கடந்த காலத்தில் ஹம்பந்தொட்ட துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தங்கள் மீது இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்திய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், கல்வியை தனியார்மயமாக்குவதற்கு விரோதமாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது பொலிஸ் மற்றும் கலகம் அடக்கும் பொலிசாரைக் கொண்டு கொடூரமாக தாக்கி வருகின்றது. தென் பகுதியிலும் பொலிஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் பொலிஸ் தாக்குதல்களால் இடம்பெறும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் அண்மைய வரலாற்றில் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் சிங்கள, தமிழ் தொழிலாள ஒடுக்கப்பட்டவர்களையும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் படுகொலை செய்வதற்கு அரச இராணுவம், பொலிஸ் மற்றும் குண்டர் படைகளை ஏவிவிடுவதில் பேர் போனவையாகும்.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தில் முழுமையாக தங்கியிருந்த மற்றும் தங்கியிருக்கும் பிரிவினைவாத விடுதலைப் புலிகள் உட்பட, இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளின் இனவாத அரசியலின் மோசமான படிப்பினை, அரசியல் ஸ்தாபனத்தின் எந்தக் கட்சிகளிடமும், அவற்றுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் போலி இடது கட்சிகளிடமும் இருந்து சிங்கள, தமிழ் தொழிலாள வர்க்கத்துக்கு வழி தேட முடியாது என்பதே ஆகும்.
சிங்கள-தமிழ் தொழிலாள வர்க்கம், தமது ஜனநயாக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் சகல கன்னைகளிலும் இருந்து சுயாதீனமாக, சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாள-விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு போராட வேண்டும்.
வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்று!
இந்தியத் துணைக்கண்ட சோசலிச குடியரசு ஒன்றியத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடு!