சீனப் புரட்சியின் எழுபது ஆண்டுகள்

மாவோயிசத்தின் திவால்தன்மையிலிருந்து பெற்றுக்கொள்ளும் அரசியல் படிப்பினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அதிகாரத்தைக் கைப்பற்றி, அதன் தலைவர் மாவோ சேதுங் தியனன்மன் சதுக்கத்தில் சீன மக்கள் குடியரசைப் பிரகடனப்படுத்தியதிலிருந்து 70 ஆண்டுகள் ஆனதை இன்றைய நாள் குறிக்கிறது.

ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையிலான தற்போதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி இன்று பெய்ஜிங்கில் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை நடத்தியும் மற்றும் மாலையில் ஊதாரித்தனமான கொண்டாட்டங்களை அரங்கேற்றியும் இந்த நிகழ்வைக் கொண்டாட இருக்கிறது, பாடல்களும், நடன நிகழ்ச்சிகளும் பட்டாசு வானவேடிக்கைகளுடன் அது நிறைவடையும். தியனன்மன் சதுக்கத்தில் ஜி உரை வழங்க உள்ளார். நிச்சயமாக அது சீன தேசியவாதத்தால் நிரம்பியிருக்கும் என்பதோடு, சீனாவை மீண்டும் மகத்தானதாக ஆக்கும் அவரின் தேசிய புத்துயிரூட்டல் "கனவை" கொண்டிருக்கும்.

சீனப் புரட்சி என்பது, ஏகாதிபத்தியத்திடம் சீனாவின் அடிபணிதலை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டை ஒன்றிணைத்து, மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தி, கலாச்சார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கியிருந்தவற்றில் பெரும்பகுதியை அகற்றிய ஒரு மகத்தான சமூக எழுச்சியாகும். எவ்வாறாயினும், 70 ஆண்டுகளுக்கு முன்னர் பல தியாகங்கள் செய்யப்பட்ட ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான உழைக்கும் மக்களின் கனவுகளும் அபிலாஷைகளும் எவ்வாறு, ஏன் முதலாளித்துவ முட்டுச்சந்தில் போய் முடிந்தது என்பதை மாவோ சேதுங்கின் அரசியல் வழிதோன்றல்களால் விளக்க முடியாது.

1949 இல் சீன மக்கள் குடியரசை மாவோ பிரகடனப்படுத்துகிறார்

கடந்த மூன்று தசாப்தங்களில் சீனாவின் மலைப்பூட்டும் பொருளாதார வளர்ச்சியின் அளவுகள், CCP பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு சிறிய பில்லியனிய செல்வந்த தட்டுக்களுக்கும் மற்றும் இலாபம், சந்தை மற்றும் "நிலத்தை பயன்படுத்துவது" மீது மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சமூக ஒழுங்கில் உயிர்வாழ்வதற்காக போராடி வரும் பெருந்திரளான சீனத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய மற்றும் விரிந்த சமூக இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில், குறிப்பாக சீனாவில் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், மாவோ மற்றும் CCP இன் காட்டிக்கொடுப்புகளில் இருந்து அரசியல் படிப்பினைகளைப் பெற்றாக வேண்டும். இன்று சோசலிசத்திற்கான எந்தவொரு போராட்டமும் இந்த கேள்விகளுக்குப் பதிலளித்தாக வேண்டும்: 20 ஆம் நூற்றாண்டின் புரட்சிகள், எல்லாவற்றிற்கும் மேலாக ரஷ்யாவிலும் சீனாவிலும் ஏன் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதில் முடிவடைந்தன?

இவ்விரண்டினது விடயத்திலும், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எழுச்சியில் தான் இதற்கான பதில் தங்கியுள்ளது. அது தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தை தட்டிப் பறித்தது. அது "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற பிற்போக்குத்தனமான தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் அதன் தனிச்சலுகைகளை நியாயப்படுத்தியதுடன், அது அக்டோபர் 1917 இல் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான ரஷ்ய புரட்சியை வழிநடத்திய சோசலிச சர்வதேசியவாதத்திற்கு முற்றிலும் நேரெதிராக இருந்தது.

ஸ்ராலின், சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை தேசியவாத கோமின்டாங்கிற்கு (KMT) பேரழிவுகரமான விளைவுகளுடன் அடிபணிய வைத்தார். 1925-27 புரட்சிகர எழுச்சியின் போது, சியாங் கேய்-ஷேக்கும் கோமின்டாங்கும், ஏப்ரல் 1927 இல் CCP ஐ நோக்கி திரும்பி, ஷங்காய் மீது கட்டுப்பாட்டை ஸ்தாபித்திருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்களைப் படுகொலை செய்தனர். ஒரு மாதத்திற்குப் பின்னர், ஸ்ராலின் எதை சீன முதலாளித்துவத்தின் முற்போக்கு அணியைப் பிரதிநிதித்துவம் செய்வதாக வலியுறுத்தினாரோ அந்த “இடது" கோமின்டாங் என்றழைக்கப்பட்டது அதன் சொந்த படுகொலை அலையைத் தொடங்கியது. புரட்சிகர பேரலை ஓய்வடைந்தபோது, மிகவும் பலவீனப்பட்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்ராலின் தொடர்ச்சியான பல சாகசங்களுக்குள் தள்ளினார். இவை அனைத்துமே தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் துன்பகரமான விளைவுகளை ஏற்படுத்திய தோல்வியில் முடிந்தன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கோமின்டாங்கிற்கு அடிபணிய வைப்பதில் இருந்த அபாயங்களைக் குறித்து எச்சரித்த லியோன் ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினின் கொள்கைகள் மீதான அவர் பகுப்பாய்வுக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த CCP உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களிடையே ஆதரவு பெற்றார். ரஷ்ய புரட்சியை வழிநடத்தி இருந்த அவரின் நிரந்தர புரட்சி தத்துவம், சீனா போன்ற காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில் முதலாளித்துவ வர்க்கம் பெருந்திரளான மக்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய இலாயக்கற்றது என்பதையும், அந்த பணிகள் தொழிலாள வர்க்கத்தின் மீது விழும், அது விவசாய வெகுஜனங்களின் ஆதரவுடன் அதன் சொந்த கரங்களில் அதிகாரத்தை ஏற்று சோசலிச திட்டங்களை நடைமுறைப்படுத்த நிர்பந்திக்கப்படும் என்பதையும் விளங்கப்படுத்தியது.

எவ்வாறாயினும் கிராமப்புறங்களை நோக்கிச்சென்ற CCP, தொழிலாள வர்க்கத்தின் மீதல்லாது, அதிகரித்தளவில் விவசாய கெரில்லா ஆயுதப்படைகள் மீது தனது அடித்தளத்தை அமைத்துக்கொண்டது. அதன் முன்னோக்கு — அதாவது, முதலில், முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கத்தில் ஒரு தேசிய ஜனநாயக புரட்சி, அதன் பின்னர், தொலைதூர எதிர்காலத்தில் ஒரு சோசலிச புரட்சி என்ற இந்த மதிப்பிழந்த "இரண்டு கட்ட தத்துவத்தை" அடித்தளமாக கொண்டிருந்தது. இந்த தேசியவாத முன்னோக்கு 22 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த போது, அப்புரட்சியை நாசமாக்கி உருக்குலைத்தது.

1949 சீனப் புரட்சியானது, இரண்டாம் உலக போர் முடிந்ததற்கு பின்னர் தொழிலாள வர்க்கம் மற்றும் காலனித்துவ வெகுஜனங்களின் உலகந்தழுவிய எழுச்சியின் பாகமாக இருந்தது. ஜப்பான் தோல்வியுற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், மாவோ, சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான ஸ்ராலினின் அறிவுறுத்தல்களின்படி, ஷங்காய் படுகொலையாளர் சியாங் கேய்-ஷேக் உடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்க முயன்றார். முதலாளித்துவ வர்க்கம் மற்றும் நிலச்சுவாந்தர்களை அன்னியப்படுத்தி விடாதவாறு, CCP, அதிகரித்து வந்த தொழிலாளர்களின் போராட்டங்களைத் திட்டமிட்டு முடக்கியதுடன், நிலச் சீர்திருத்ததின் அளவைக் குறைத்தது. சியாங் கேய்-ஷேக், இந்நேரத்தை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து கிடைத்த ஆயுதங்கள் மற்றும் உதவியுடன், நகரங்கள் மீதான அவர் பிடியைப் பலப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்தி, CCP க்கு எதிரான இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கினார்.

இறுதியில், அக்டோபர் 1947 இல் தான், ஊழல்பீடித்த மற்றும் வெறுக்கப்பட்ட KMT சர்வாதிகாரத்தை தூக்கியெறிவதற்கு CCP அழைப்பு விடுத்தது. சியாங்கும் அவர் ஆட்சியும் சிதறிய வேகமானது, கட்சியின் விவசாய ஆயுதப்படைகள் "சுதந்திரம்" பெற்றுத் தரும் வரையில் நகரங்களில் தொழிலாளர்கள் செயல்படாமல் காத்திருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தாமல், அவர்களை ஆரம்பத்தில் இருந்தே CCP அணிதிரட்டி இருந்தால் இன்னும் விரைவாக அவர்களை வெளியேற்றியிருக்கலாம் என்பதையே எடுத்துக்காட்டியது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டம் மீதான CCP இன் வெறுப்பு, கடந்த 70 ஆண்டுகால அதன் ஆட்சியினது பிரதான அடையாளமாக இருந்துள்ளது.

1949 இல் மாவோ பிரகடனப்படுத்திய சீன மக்கள் குடியரசு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக முதலில் முதலாளித்துவ ஜனநாயக கட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவரின் "புதிய ஜனநாயக" முன்னோக்கின் மீது அமைந்திருந்தது. சியாங்குடன் சேர்ந்து தாய்வானுக்கு தப்பிச் சென்ற "அதிகாரத்துவ முதலாளித்துவவாதிகளின்" நிறுவனங்களை மட்டுமே CCP தேசியமயப்படுத்திய அதேவேளையில் பெரும்பான்மை முதலாளித்துவவாதிகளின் இலாபங்கள் மற்றும் சொத்துடைமைகளை பாதுகாத்தது. அதன் அரசாங்கம் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு கூட்டணியை அடித்தளத்தில் அமைத்திருந்தது, அவற்றில் சில முக்கிய பதவிகளும் வகித்தன.

மாவோவின் சுய-தன்னிறைவு சீன முன்னோக்கு விரைவிலேயே முட்டுச்சந்துக்கு இட்டுச் சென்றது. சீனாவைச் சுரண்டுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டங்கள் 1949 இல் திடீரென நிறுத்தப்பட்டதுடன், 1950-1953 கொரிய போரைக் கொண்டு CCP ஆட்சியைப் பலவீனப்படுத்தி இறுதியாக அதை கீழிறக்குவதற்கான ஒரு வழியாக அதை பயன்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் நோக்கம் கொண்டிருந்தது. இதன் விளைவாக, மாவோ, அமெரிக்க பொருளாதார தடைகளாலும் மற்றும் போர் அச்சுறுத்தலாலும், போர்த்தயாரிப்புகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்த, வெளிநாட்டு மற்றும் தேசிய, நிறுவனங்களை தேசியமயமாக்கவும் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை ஒட்டிய அதிகாரத்துவ பொருளாதார திட்டமிடலை அமைப்புமுறைப்படுத்தவும் நிர்பந்திக்கப்பட்டார்.

1955 இல், அப்போது அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச கட்சியாக விளங்கிய அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), கிழக்கு ஐரோப்பிய இடைத்தாங்கி அரசுகள் மீதான நான்காம் அகிலத்தினது விவாதத்தின் அடிப்படையில், சீனா ஓர் ஊனமுற்ற தொழிலாளர் அரசாகியுள்ளதாக முடிவிற்கு வந்தது. தேசியமயமாக்கப்பட்ட சொத்துடைமை மற்றும் பொருளாதார திட்டமிடல் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன என்றாலும், அந்த புதிய அரசு பிறப்பிலேயே ஊனமுற்று இருந்ததுடன், தொழிலாள வர்க்கத்திற்கு எந்த அரசியல் குரலோ அல்லது ஜனநாயக உரிமைகளோ இருக்கவில்லை. ஒன்று சீனா உண்மையான சோசலிசத்தை நோக்கி முன்நகரலாம், இதற்கு —ட்ரொட்ஸ்கிச இயக்கம் அறிவுறுத்தியவாறு— ஓர் அரசியல் புரட்சியினால் தொழிலாள வர்க்கத்தின் கரங்களினால் மாவோயிச அதிகாரத்துவம் தூக்கியெறிவது அவசியமாகிறது அல்லது அது மீண்டும் முதலாளித்துவத்தை நோக்கி செல்வது தவிர்க்கமுடியாதது என்று அது விளங்கப்படுத்தியது.

தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற மார்க்சிச-விரோத முன்னோக்கின் அடிப்படையில், அதன் தேசியவாத வேலைத்திட்டத்தின் விளைவாக, —1950 களில் பேரழிவுகரமான முன்னோக்கிய பெரும் பாய்ச்சலில் (Great Leap Forward) இருந்து சீன-சோவியத் முறிவு வரையில் மற்றும் 1960 களில் நாசகரமான கலாச்சார புரட்சி வரையில்— மாவோயிச ஆட்சி ஒரு நெருக்கடி மாற்றி இன்னொரு நெருக்கடியில் சிக்கித் திணறியது. மந்தமான பொருளாதாரம் மற்றும் சோவியத் ஒன்றியத்துடன் அதிகரித்து வந்த போர் அபாயத்தை முகங்கொடுத்து, மாவோ, 1949 புரட்சிக்குப் பின்னர் வெறும் 22 ஆண்டுகளிலேயே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நோக்கி திரும்பினார். சீனாவில் சந்தை-சார்பு கொள்கையினதும், முதலாளித்துவ மீட்சியினதும் மூலகர்த்தாவாக எப்போதும் கூறப்படும் டெங் ஷியாவோபிங் (Deng Xiaoping), வெறுமனே மாவோவின் நல்லிணக்க தர்க்கத்தைத்தான் 1972 இல் அமெரிக்க அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சினுடன் மேற்கொண்டார்.

அமெரிக்கா மற்றும் ஏனைய முதலாளித்துவ சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் வேகமான வளர்ச்சியுடன் 1978 இல் இருந்து டெங்கின் “சீர்திருத்தம் மற்றும் திறந்துவிடல்” இணைந்துகொண்டது. அனைத்திற்கும் மேலாக கிளர்ச்சிகரமான தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்த 1989 இல் தியனன்மன் சதுக்க படுகொலையை அடுத்து, புரட்சிக்குப் பின்னர் கட்டமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை தொழில்துறை மற்றும் மலிவான ஆனால் படித்த ஒழுங்கமைந்த உழைப்பிலிருந்து ஆதாயம் பெறுவதற்காக அந்நாட்டுக்குள் வெளிநாட்டு முதலீடு வெள்ளமென பாய்ந்தது.

இன்று அவர் உரையில், ஜி ஐயத்திற்கிடமின்றி சீனாவின் சாதனைகளைப் பெருமைபீற்றுவார், மாவோயிச புரட்சியாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவார் மற்றும் ஆற்றல்மிக்க சீன முதலாளித்துவ வர்க்கத்தின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கனவான சீனாவை தலைசிறந்ததாக மீட்டமைப்பதற்கான அவரது கனவை நினைவூட்டுவார். ஆனால் சீனாவின் பொருளாதார உயர்வு, அமெரிக்காவினால் மேலாதிக்கம் செலுத்தப்படும் ஏகாதிபத்திய உலக ஒழுங்குடன் நேருக்கு நேர் கொண்டு வந்துள்ளதுடன், அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சவால்விடுப்பதில் இருந்து சீனாவைத் தடுப்பதற்கு, இராணுவம் உட்பட, அதன் கைவசமிருக்கும் ஒவ்வொரு வழிவகைகளையும் பயன்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் உத்தேசித்துள்ளது.

ஆயுதப் போட்டியானது மோதல் அபாயத்தை அதிகரித்து கொண்டே செல்கிறது என்றாலும் ஆயுதப் போட்டியில் ஈடுபட்டவாறு நல்லிணக்கத்திற்காக முயற்சி செய்வதைத் தவிர, ஜி மற்றும் CCP அதிகாரத்துவத்திடம் அமெரிக்க போர் முனைவுக்கு வேறு எந்த பதில்களும் இல்லை. இதைப் போன்றே, அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க அமைதியின்மைக்கு மாவோயிச எந்திரத்தின் ஒரே விடையிறுப்பு —குறிப்பாக ஹாங்காங் போராட்டங்களில் எடுத்துக்காட்டப்பட்டவாறு-— தொழிலாளர்களைப் பிளவுபடுத்த தேசியவாதத்தை தூண்டிவிடுவதாகும். இது அதிகரித்த பொலிஸ் அரசு ஒடுக்குமுறையுடன் சேர்ந்து கொள்கிறது.

வர்த்தகப் போர் மற்றும் ஆசியாவில் இராணுவக் கட்டமைப்பு வடிவில் பெய்ஜிங் அதிகாரத்துவம் அமெரிக்க ஆக்ரோஷத்தை முகங்கொடுத்து வருகிறது, அதேவேளையில் அது இன்னும் அதிகமாகவே தொழிலாள வர்க்கத்தைக் குறித்து அஞ்சுகிறது. அது இராணுவத்திற்குச் செலவிடுவதையும் விட அதிகமாக உள்நாட்டு பாதுகாப்புக்குச் செலவிடுகிறது.

இதிலிருந்து அவசியமான அரசியல் முடிவுகளை எடுத்துக்கொள்ளுமாறு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அழைப்பு விடுக்கிறது. மாவோயிசத்தின் காட்டிக்கொடுப்புகள், சீனாவில் மட்டுமல்ல, மாறாக, அது செல்வாக்கு செலுத்தி வரும் பகுதி எங்கிலும், ஆசியா மற்றும் சர்வதேச அளவிலும், ஒரு பேரழிவு மாற்றி இன்னொரு பேரழிவை உருவாக்கி உள்ளன. உலகளவில் ஆழமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு மத்தியில், போர் அபாயம், பாசிசவாத ஆட்சி வடிவங்கள் மற்றும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் வாழ்க்கைத் தரங்கள் என இவற்றுக்கான ஒரே பதில், 1917 அக்டோபர் புரட்சியில் உயிரூட்டப்பட்ட சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டமாகும், இதற்காக ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே தொடர்ந்து நீடித்து போராடி வந்துள்ளது.

ஒரு சோசலிச எதிர்காலத்திற்காக போராட சீனாவிலும் உலகெங்கிலுமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த, வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்காக ICFI ஐ புரட்சிகர தலைமையாக கட்டமைக்க வேண்டியது அவசியமாகும். இதன் அர்த்தம், மாவோயிசம் உட்பட ஸ்ராலினிசத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக அனைத்து தத்துவார்த்த மற்றும் அரசியல் படிப்பினைகளின் அடிப்படையில் ICFI இன் ஒரு பகுதியைக் சீனாவில் கட்டமைப்பதாகும்.

Loading