முன்னோக்கு

ஏகாதிபத்தியத்தால் ஆதரவளிக்கப்படும் அரச கொலை

எகிப்து ஒன்பது கைதிகளை தூக்கிலிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கெய்ரோவில் இராணுவ சர்வாதிகாரத்தின் காட்டுமிராண்டித்தனத்தை எடுத்துக்காட்டும் ஒரு நடவடிக்கையில் எகிப்திய அதிகாரிகள் ஒரு போலி விசாரணைக்குப் பின்னர் சித்திரவதை மூலம் கைதிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களைப் பயன்படுத்தி, பெப்ரவரி 20 ஆம் தேதி ஒன்பது இளைஞர்களை தூக்கிலிட்டனர்.

இந்த மாதம் புதன்கிழமை கொலைகளுடன் ஜனாதிபதி அப்தல் பத்தாஹ் எல் சிசி (Abdel Fattah el-Sisi) உத்தரவின் பேரில் படுகொலை நிறைவேற்றப்பட்ட அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 15 ஆகின்றது. ஒரு நீதிபதியின் மகனை கொலை செய்ததாக குற்றஞ் சாட்டப்பட்டு பெப்ரவரி 7 ஆம் தேதி மூன்று பேரும், 2013 இல் ஒரு போலீஸ்காரரை கொன்றதாக கூறப்பட்டு பெப்ரவரி 13 ஆம் தேதி இன்னும் மூன்று பேர், 2015 ஆம் ஆண்டில் தலைமை அரசாங்க வக்கீல் ஹிஷாம் பாராகத்தை (Hisham Barakat) படுகொலை செய்ததாக குற்றப்சாட்டப்பட்ட 28 பேர் கொண்ட குழுவின் ஒரு பகுதியினரான ஒன்பது பேர் புதன்கிழமையும் தூக்கிலிடப்பட்டனர்.

மிருகத்தனமான சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை தவிர, 15 கைதிகளில் எவருக்கும் கூறப்பட்ட குற்றங்களுக்கும் தொடர்பு உள்ளமைக்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை. எல்-சிசி ஆட்சி ஒரு "நீதி" முறையை செயல்படுத்துகிறது. இது வார்த்தையின் முழு அர்த்தத்தில் கேலிக்குரியதாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் எதுவுமற்ற மீதான மிகப்பெரும் விசாரணைகளில், சட்டம் அல்லது உண்மைகளை பொருட்படுத்தாமல், நீதிபதிகள் இச்சர்வாதிகாரிகளால் கோரப்படும் தண்டனைகளை வழங்குகின்றனர்.

"மத்திய கிழக்கு கண்" ("Middle East Eye,") எனும் ஒரு அறிக்கையின்படி, பெப்ரவரி 20-ல் மரணமடைந்தவர்களில் பலர் நீதிமன்ற விசாரணையில் தங்கள் ஒப்புதல் வாக்குமூலங்களை பகிரங்கமாக மறுத்துவிட்டனர். செய்தி சேவை ஒரு வீடியோ வெளியிட்டது. அது குற்றவாளிகள் தங்கள் ஒப்புதல் வாக்குமூலங்களை மறுத்தமையையும் அவர்கள் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டனர் என்பதை விளக்கியது.

புதனன்று தூக்கிலிடப்பட்ட 23 வயதான மஹ்முத் அல்-அஹ்மடி (Mahmoud el-Ahmadi), நீதிமன்றத்தில் பின்வருமாறு கூறினார்: "இங்கே, இந்த நீதிமன்றத்தில், சிறையில் எங்களை சித்திரவதை செய்த ஒரு பொலிஸ் அதிகாரி இருக்கிறார். நீங்கள் அவரை சுட்டிக்காட்ட சொன்னால், நான் அதை செய்வேன். எனக்கு ஒரு துப்பாக்கி கொடுங்கள், நான் இந்த நீதிமன்றத்தில் உள்ள யாரை வேண்டுமானாலும் செய்யாத குற்றத்தை ஒப்பு கொள்ள செய்ய முடியும். எங்கள் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு எகிப்துக்கு வழங்குவதற்கு போதுமான அளவு மின்சாரம் எங்கள் மீது செலுத்தப்படடது."

புதன்கிழமை தூக்கிலிடப்பட்ட மற்றொரு குற்றம்சாட்டப்பட்டவரான அல் அஸ்ஹர் பல்கலைக்கழக மாணவரான அபுல்கசீம் யூசேஃப் (Abulqasim Youssef), நீதிமன்றத்தில் தனது கண்மூடிக்கட்டப்பட்டு ஏழு மணிநேரங்களுக்கு தொடர்ச்சியான கதவில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு, "என் உடலின் முக்கிய பகுதிகளுக்கு" மின்சாரம் பாய்ச்சப்பட்டது என்று கூறினார்,

வாழ்வதற்கான உரிமை மீதான அரசின் முழுமையான அலட்சியத்தை வெளிக்காட்டியது என்று சமீபத்திய மரண தண்டனையை சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் செய்தது. "அண்மைய வாரங்களில் நியாயமற்ற மோசமான விசாரணைகளைத் தொடர்ந்து மக்களை இறப்பிற்கு இட்டுச் செல்லும் இந்த இரத்தம் தோய்ந்த மரணதண்டனையை எகிப்திய அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த மரணதண்டனை எழுச்சி பற்றி சர்வதேச சமூகம் அமைதியாக இருக்கக்கூடாது. எகிப்தின் நட்பு நாடுகளின் இறுதி கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான மரணதண்டனையை பயன்படுத்துவதை பகிரங்கமாக கண்டனம் செய்வதன் மூலம் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என்று இந்த சபை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

எவ்வாறாயினும், யாரைநோக்கி இந்த வேண்டுகோள் விடப்பட்டதோ அந்த ஏகாதிபத்திய வல்லரசுகளின் அரசாங்கங்களை உள்ளடக்கிய இந்த "சர்வதேச சமூகம்", எகிப்திய மோசமான மற்றும் இரத்தக்களரிக் குற்றங்கள் உட்பட இராணுவ ஆட்சிக்கு ஏகமனதாக அதன் ஆதரவை வழங்குகின்றது.

அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை தூக்கியெறிந்த 2011 எகிப்திய புரட்சிகர இயக்கத்திற்கு எகிப்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பையே எல்-சிசி இன் இரத்தக்களரி அடக்குமுறை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உண்மையான சோசலிச தலைமை இல்லாத நிலையில், எகிப்திய ஆளும் உயரடுக்கு, புரட்சியின் முக்கிய நபர்கள் மற்றும் மேலும் இன்னும் பரந்த அளவில் எதிர்க்கட்சிகள் மீது இரத்தம் தோய்ந்த செயற்பாடுகளை நடாத்துகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைவரான மொஹமட் முர்சியின் அதிகாரத்தை, ஜூலை 2013 ல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் கைப்பற்றியதன் பின்னர், இராணுவம் கெய்ரோ மற்றும் பிற நகரங்களின் தெருக்களில் ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்தும், பல்லாயிரக்கணக்கானோரை சிறையிலிட்டும் சித்திரவதை செய்தது. அது இப்போது நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு கங்காரு நீதிமன்றங்கள் மூலம், மரணதண்டனை கொடுக்கும் இயந்திரத்தை துரிதப்படுத்துவதற்கு தொடங்குகிறது. சுமார் 737 பேர் இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். அதில் 51 பேருக்கு மேல்முறையீடு செய்யும் சாத்தியம் முடிவடைந்துவிட்டது.

இந்த குற்றங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் எல் -சிசியை தழுவிக்கொள்வதை நிறுத்தவில்லை. மாறாக, அவரது ஆட்சி எவ்வளவிற்கு இரத்தத்தில் மூழ்கின்றதோ அவ்வளவிற்கு, மேலும் அவர் வாஷிங்டன், பேர்லின், இலண்டன் மற்றும் பாரிஸ் ஆகியவற்றால் அதிகளவில் தழுவி வரவேற்கப்படுகிறார்.

2015 ஜூன் மாதம், கெய்ரோவின் படுகொலைகாரர், பேர்லினில் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கல் மற்றும் அனைத்து முக்கிய முதலாளித்துவக் கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகள், இடது கட்சி, மேர்க்கெலின் வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் / கிறிஸ்தவ சமூக ஒன்றியம் தலைவர்களாலும் பாராட்டப்பட்டார்.

ஏப்ரல் 2017 இல், எல்-சிசி வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்பினால் கௌரவிக்கப்பட்டார். அங்கு அவர் ஒரு வருடத்திற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக பாரிய அமெரிக்க இராணுவ உதவி தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தினார். கடந்த மாதம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ ஈரானிய விரோத உரையை வழங்குவதற்காக கெய்ரோவிற்கு பயணித்தார், அவ் உரையில் எகிப்திய சர்வாதிகாரத்தை "அனைத்து தலைவர்களுக்கும் மத்திய கிழக்கின் அனைத்து மக்களுக்கும் ஒரு முன்மாதிரி" என்று பாராட்டினார்.

25 நாட்களுக்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்களுக்கு நடுவில், ஒரு மக்கள் இயக்கத்தை எப்படி இரத்தத்தில் மூழ்கடிப்பது எனக் காட்டிய ஒரு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு கெய்ரோவிற்குச் சென்றார்ரஃபால் போர் ஜெட் விமானங்கள் மற்றும் கவச வாகனங்கள் உட்பட ஆட்சிக்கு அதிகமான ஆயுதங்களை விற்க அவர் உறுதியளித்தார்.

அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம், எல்-சிசியுடன் மக்ரோன் இன் சந்திப்பு, பிரெஞ்சு தொழிலாளர்களாலும் இளைஞர்களாலும் அவரது அரசாங்கத்திற்கு பெருகிவரும் எதிர்ப்பிற்கான ஒரு மெல்லிய மறைமுகமான அச்சுறுத்தலாகும் என விளக்கியது. பிரெஞ்சு ஆளும் வர்க்கம் "உலகெங்கிலும் முதலாளித்துவ வர்க்கம் கடுமையான அடக்குமுறை வடிவங்களை நோக்கிய திருப்பத்தின் மத்தியில் சமூக எதிர்ப்பை ஒடுக்குவதற்கான உக்கிரப்பட்டு வரும் அறிவிப்பாகும்” என்று விளங்கப்படுத்தியிருந்தது.

அடுத்த வார இறுதியில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அரபு லீக்கின் முதல்முதலான கூட்டு உச்சிமாநாடு ஷார்ம் எல்-ஷேக்கில் (Sharm el-Sheikh), ஜனாதிபதி எல்-சிசி, பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டுஷ்க் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோன்-குளோட் ஜுங்கர் உட்பட 20 க்கும் மேற்பட்ட நாட்டின் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும்.

இந்த உச்சிமாநாட்டிற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் எகிப்திய ஆட்சி ஒன்பது மரண தண்டனைகளை நிறைவேற்றுவதற்கான காரணம், ஷார்ம் எல்-ஷேக்குக்கு வருகை தரும் அனைத்து அவருடைய சக அரேபியர்கள் மற்றும் "ஜனநாயக" ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்களின் முழு ஆதரவும் எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தனது காட்டுமிராண்டித்தன ஒடுக்குமுறைக்கு இருக்கின்றது என்பதில் எல்-சிசி நம்பிக்கை கொண்டிருப்பதை நிரூபிக்கிறது.

ஜெனரல் எல்-சிசி 2018 ஆம் ஆண்டில் தனது சொந்த மறுதேர்தலை திட்டமிட்டு நடத்தினார். அதில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பான்மையான எதிர்ப்பாளர்களாக இருக்ககூடியவர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது போட்டியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவரை எதிர்த்து போட்டியிட துணிந்த ஒரு இராணுவ அதிகாரியான சமி அன்னான் (Sami Anan) பத்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், ஒப்பிட்டு பார்க்கையில் ஒரு ஜனநாயக நடைமுறைக்கு ஒரு மாதிரியாக காணப்படும் வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவின் 2018 மறுதேர்தலைகளை பற்றி பாரிய கூக்குரல் எழுப்பப்படுகையில் சிசியின் அரசாங்கத்தின் தேர்வின் "சட்டபூர்வமான தன்மை" பற்றி எந்த எதிர்ப்பும் இல்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, எல்-சிசி இன் அரசியல் ஆதரவுகும்பல்கள் கொண்ட எகிப்திய பாராளுமன்றம், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நான்கு ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கு மற்றும் எல்-சிசிக்கு இரண்டு ஆட்சி கால வரம்பைக் அதிகரிக்கும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை பரிசீலிக்கத் தொடங்கியது. உண்மையில், இராணுவ சர்வாதிகாரி தனது தற்போதைய (இது 2022 இல் முடிவடைவதும், பெரும்பாலும் இறுதியானதும்) கால முடிவில் மற்றொரு 12 ஆண்டுகள் பதவியில் இருக்க அனுமதிக்கப்படுவார். அவர் 80 வயதை அடையும் போது, 2034 ஆம் ஆண்டு வரை எல்-சிசி ஜனாதிபதியாக இருப்பதற்கு இது உதவும். இராணுவ ஆட்சியாளராக இருந்து 2011 இல் வெளியேற்றப்பட்ட ஹொஸ்னி முபாரக்கின் வயது அதேநேரத்தில் இரண்டு ஆண்டுகள் இதைவிட குறைந்தது.

எவ்வாறான திருத்தங்கள் இருந்தாலும், முபாரக்கின் நீண்ட ஆட்சியை பின்பற்றுவதற்கான தனது இலக்கை எல்-சிசி வெற்றிகரமாக நிறைவேற்றுவாரா என்பதில் சந்தேகம் உள்ளது. எகிப்திய மக்கள் தொகையில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வறுமையில் வாழ்கின்றனர். ஒரு நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான வாழ்வாதாரத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மிகக் குறைவு. மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் கோரப்படும் சிக்கன நடவடிக்கைகள், மேலும் கடன்களின் விலைகள் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தும்.

ஆட்சிக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பானது பெருகியுள்ளது. நைல் நதிப்படுகையில் புடவை ஆலை-நகரங்கள் போன்ற தொழிலாள வர்க்கப் பகுதிகளில் கடுமையான அடக்குமுறை கூட வேலைநிறுத்தங்களின் உருவாக்கத்தை நிறுத்த தவறிவிட்டது. சமீபத்தில் துனிசியாவில் ஒரு பொது வேலைநிறுத்தம், மற்றும் மொரோக்கோவில் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் என வட ஆபிரிக்கா முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிலைமைகளின் கீழ், 2011 இன் எகிப்திய புரட்சியின் காட்டிக் கொடுப்புக்களின் படிப்பினைகளை கவனமாக ஆய்வு செய்ததன் அடிப்படையிலும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் வரலாற்றை உள்ளீர்த்துக்கொள்வதன் அடிப்படையிலும் எகிப்திய, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமான பிரச்சினை ஆகும். இப்போராட்டமானது இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.