Print Version|Feedback
French President Macron visits the hangman of Cairo
பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் கெய்ரோவின் கொலையாளரைச் சந்திக்கிறார்
Will Morrow and Alex Lantier
30 January 2019
எகிப்தின் இரத்தக்கறை படிந்த இராணுவ சர்வாதிகாரி தளபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி உடனான பேச்சுவார்த்தைகளுக்காக ஞாயிறன்று கெய்ரோவிற்கான ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பயணம், உலகெங்கிலுமான அரசாங்கங்களால் நயவஞ்சகமாக ஆமோதிக்கப்பட்டிருக்கும் இது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வெளிப்படையான ஓர் அச்சுறுத்தலாகும்.
பிரான்சில் நூறாயிரக் கணக்கான "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள், பதினொரு வாரங்களாக, வாழ்க்கை தரங்களை உயர்த்தவும், செல்வந்தர்கள் மீது வரிகளை அதிகரிக்கவும், ஒடுக்குமுறை மற்றும் இராணுவவாதத்தை நிறுத்தவும் கோரி ஒவ்வொரு வாரயிறுதியிலும் அணிவகுத்துக் கொண்டுள்ளனர். ஆனால் நிதியியல் பிரபுத்துவம் தொழிலாளர்களின் சமூக மற்றும் அரசியல் கோரிக்கைகளுக்கு எந்த விட்டுக்கொடுப்புகளும் செய்யப் போவதில்லை. மாறாக, உலகெங்கிலுமான முதலாளித்துவ வர்க்கம் உலகெங்கிலும் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி திரும்பி வருவதற்கு மத்தியில், சமூக போராட்டத்தின் ஒடுக்குமுறையைக் கடுமையாக தீவிரப்படுத்துவதற்கும் அது தயாரிப்பு செய்து வருகிறது.
சிசியைச் சந்திப்பதற்கான மக்ரோன் விஜயத்தின் அர்த்தம் தவறுக்கிடமின்றி உள்ளது. 2011 இல் எகிப்தில் வெடித்த தொழிலாள வர்க்கத்தின் இரத்தந்தோய்ந்த புரட்சிகர போராட்டங்களை இரத்தத்தில் மூழ்கடிக்க சிசி பாரிய படுகொலைகளைச் சார்ந்திருந்ததற்காக இழிபெயர் பெற்றவராவார். இஸ்லாமியவாத ஜனாதிபதி மொஹமத் முர்சிக்கு எதிரான 2013 ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் போது, சிசி இன் துருப்புகள் எகிப்திய நகரங்களின் வீதிகளில் பட்டப்பகலிலேயே ஆயிரக் கணக்கானவர்களைச் சுட்டுக் கொன்றது. அப்போதிருந்து, 60,000 க்கும் அதிகமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, சிசியின் இராணுவ ஆட்சி அதன் எதிர்ப்பாளர்கள் மீது பாரியளவில் ஜோடிப்பு வழக்குகளை நடத்தி வருகின்ற நிலையில், மனித உரிமைகள் குழுக்களால் ஆவணப்படுத்தவாறு ஆயிரக் கணக்கான அரசியல் கைதிகளைத் திட்டமிட்டு சித்திரவதைப் படுத்துவதில் தங்கியுள்ளது.
“மனித உரிமைகள்" குறித்து அவரால் "அதிக வெளிப்படையாக பேச" முடியும் என்பதற்காகவே கெய்ரோ கொலையாளரைச் சந்திக்கவிருப்பதாக மக்ரோன் ஞாயிறன்று இரவு கூறிய கூற்று அர்த்தமற்றதாகும். பெருந்திரளான இந்த மக்கள் போராட்டங்கள் பிரான்சிலிருந்து எகிப்துக்குப் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் சிசி கடந்தாண்டு எகிப்தில் மஞ்சள் சீருடைகள் விற்பனைக்கு தடை விதித்தார். சிசி உடனான மக்ரோனின் சந்திப்பு ஐயத்திற்கிடமின்றி ஒடுக்குமுறையைக் குறித்த ஓர் ஆர்வமான விவாதத்தில் ஒருமுனைப்பட்டிருக்கும்.
விட்டுக்கொடுப்புகளை செய்ய விரும்பாத மற்றும் செய்யவியலாத ஓர் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் செல்வந்த தட்டை முகங்கொடுத்துள்ள தொழிலாள வர்க்கம், புரட்சி அல்லது எதிர்புரட்சி என இரண்டில் ஒரு முடிவை மட்டுமே ஏற்படுத்தும் ஓர் அரசியல் போராட்டத்தை முகங்கொடுக்கிறது.
எகிப்திய தொழிலாளர்களுக்கு எதிராக பிரான்ஸ் சிசியை அடிமுதல் தலைவரை தொடர்ந்து ஆயுதமேந்த செய்யும் என்பதை கெய்ரோவில் மக்ரோன் தெளிவுபடுத்தினார். மனித உரிமைகள் குறித்த மக்ரோனின் வாய்கூசாத கருத்துக்களுக்கு இடையே, ரஃபால் போர் விமானங்கள் மற்றும் பிற இராணுவ தளவாடங்களை சிசிக்கு பிரான்ஸ் தொடர்ந்து விற்க இருக்கிறது. “நான் அவ்விரு விடயங்களையும் வித்தியாசப்படுத்துவேன்,” என்றுரைத்த அவர், “எங்களைப் பொறுத்த வரையில் அவற்றுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லை, அவை ஒருபோதும் அவ்வாறு இருந்ததில்லை,” என்றார்.
எகிப்தின் 2013 ஒடுக்குமுறையில் பிரெஞ்சு கவச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதைப் பற்றிய சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் அறிக்கை குறித்து கேட்கப்பட்ட போது, பிரான்ஸ் “அவை இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுமென அனுமானித்ததாக" மக்ரோன் தெரிவித்தார். பிரெஞ்சு ஆயுத விற்பனைகளில் அங்கே "எந்த குழப்பமும் இல்லை" என்று கூறிய அவர், அவை எகிப்திய மக்களுக்கு எதிரானவை அல்ல, “வெளி எதிரிகளுக்கு எதிராக எகிப்திய எல்லையைப் பாதுகாப்பதற்காக" உத்தேசிக்கப்பட்டவை என்றார்.
மக்ரோன் யாரை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்? பிரெஞ்சு கவச வாகனங்கள் எகிப்து தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு மட்டுமல்ல, மாறாக கவச வாகனங்களை "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராகவும் நிலைநிறுத்த இதுவரையில் முன்னொருபோதும் இல்லாத நடவடிக்கையை மக்ரோன் எடுத்திருப்பதால், அவை பிரான்ஸ் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கும் சேவையாற்றுகின்றன. மக்ரோன் பிரான்சில் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், மற்றும் ஆயுதங்களைக் கெய்ரோவுக்கு வாரியிறைத்து வருகையில், சிசி மக்ரோனின் வாய்கூசாத இந்த கருத்துக்களை எகிப்தில் கூடுதல் ஒடுக்குமுறைகளுக்கு பிரெஞ்சு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டிருப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடும்.
முதலாளித்துவ வர்க்கத்தின் எதேச்சதிகார ஆட்சிகள் மற்றும் பொலிஸ்-அரசு கொள்கைகள் தொழிலாள வர்க்கத்திடமிருந்து இப்போது ஒரு சவாலை முகங்கொடுத்து வருகின்றன. 1991 இல் ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து ஒரு கால் நூற்றாண்டாக மத்திய கிழக்கில் நடத்தப்பட்டுள்ள ஏகாதிபத்திய போர்களுக்குப் பின்னர், மற்றும் 2008 பொறிவுக்குப் பின்னர் ஒரு தசாப்தமாக ஐரோப்பிய ஒன்றிய சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், வர்க்க போராட்டத்தை நசுக்க பயன்படுத்தப்பட்ட இந்த இயங்குமுறைகள் தோல்வியடைந்து வருகின்றன. வர்க்க போராட்டத்தின் ஓர் உலகளாவிய மேலெழுச்சி நடந்து வருகிறது, இதற்கு 2011 எகிப்து கிளர்ச்சியே முன்னோடியாக இருந்தது.
வட அமெரிக்க கண்டத்தில் 20 ஆண்டுகளில் மிகப் பெரிய வேலைநிறுத்தமாக, மெக்சிகோவின் மத்தாமோரொஸில் 70,000 வாகனத்துறை தொழிலாளர்கள் திடீரென தொடர்ச்சியாக நடத்திய கிளர்ச்சியை 2019 தொடக்கம் கண்டுள்ளது, அத்துடன் ஐரோப்பா எங்கிலும் வேலைநிறுத்தங்களும் சமூக செலவினக் குறைப்புக்கு எதிரான போராட்டங்களும் நடக்கின்றன, பிரான்சில் தொடர்ந்து பெருந்திரளான "மஞ்சள் சீருடையாளர்" ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.
டிசம்பரில் நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், ஜனவரி 14 இல், துனிசியாவில் 700,000 பொதுத்துறை தொழிலாளர்களின் ஒரு பொது வேலைநிறுத்தம் அந்நாட்டையே முடக்கியது, “இந்த ஆட்சி பதவி விலக வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்,” என்று துனீசில் பத்தாயிரக் கணக்கானவர்கள் கோஷமிட்டனர். கடந்த வாரம், சிசி சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் ஐ சந்தித்தார், இவரின் அரசாங்கம், ரொட்டி மற்றும் இதர அத்தியாவசிய பண்டங்களின் விலையுயர்வுகள் மீது கடந்த மாதம் போராட்டங்கள் தொடங்கியதும் நூற்றுக் கணக்கானவர்களைக் கைது செய்துள்ளது மற்றும் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பெருந்திரளான தொழிலாளர்களும் இளைஞர்களும் சர்வதேச அளவில் போராட்டத்தினுள் நுழைகையில், கெய்ரோவிற்கான மக்ரோன் விஜயத்தினது படிப்பினைகளைப் பெறுவது முக்கியமானதாகும். பிரெஞ்சு பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனைக் கடந்தாண்டு மக்ரோன் புகழ்ந்துரைத்தமை, அல்லது ஜேர்மன் நகரங்களில் நவ-நாஜி கலகங்களை ஜேர்மன் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் ஆமோதித்தமை ஆகியவை தனித்த தற்செயலான சம்பவங்கள் கிடையாது. அடிமட்டத்திலிருந்து எழும் சவாலை முகங்கொடுத்து ஆளும் வர்க்கம் மிகவும் ஈவிரக்கமற்ற அணுகுமுறைகளைப் பயன்படுத்த முனையும்.
“மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பானது, பாரிய கைது நடவடிக்கைகளையும் மற்றும் நாஜி ஆக்கிரமிப்புக்குப் பின்னர் பிரான்சின் மகாநகரில் முன்பார்த்திராத அளவில் ஒடுக்குமுறையையும் தொடங்குவதாக இருந்துள்ளது. டிசம்பர் 8 அன்று ஒரே நாளில் 1,700 பேர் உள்ளடங்கலாக, 5,000 க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் வீசிய கையெறி குண்டுகள் வெடித்து குறைந்தபட்சம் நான்கு போராட்டக்காரர்களின் கைகள் சிதைக்கப்பட்டன, பொலிஸின் bean-bag தோட்டாக்களால் 20 பேர் கண்களை இழந்துள்ளனர் மற்றும் ஒருவர் நிரந்தரமாக செவிடாக்கப்பட்டு உள்ளார்.
பாரீசில் கலகம் ஒடுக்கும் பொலிஸ் நிஜமான தோட்டாக்கள் நிரப்பிய Heckler & Koch G36 ரக தாக்கும் துப்பாக்கிகள் ஏந்தியிருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன, மேலும் எகிப்தில் சிசி முன்னெடுத்த ஒடுக்குமுறை கொள்கைகளை "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிராக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தில் வெறித்தனமான விவாதம் நடந்து வருகின்றது.
முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் தன்னைத்தானே "தத்துவவாதியாகவும்" அறிவித்துக் கொண்ட லூக் ஃபெர்ரி, "மஞ்சள் சீருடையாளர்கள்" மீது இராணுவம் நிஜமான தோட்டாக்களைப் பிரயோகிக்க கோரி, அவர்களுக்கு எதிராக வானொலியில் சீறினார்: “நம்மிடம் உலகின் நான்காவது மிகப் பெரிய இராணுவம் உள்ளது, அது இத்தகைய c—ts களுக்கு முடிவு கட்ட முடியும்,” என்றார். “அதிதீவிர வலது, அதிதீவிர இடது மற்றும் கட்டிடத்தொகுதி வீடுகளில் இருந்து வரும் ... இந்த விதமான குண்டர்கள், பொலிஸைத் தாக்க வருகின்றனர்—பொறுத்தது போதும்!”
இந்த கருத்து வெறுமனே பிரான்சின் ஆளும் வர்க்கத்தில் இருந்து மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த உலகின் ஆளும் வர்க்கத்தினது மேலோங்கிய உணர்வுகளைத் தொகுத்தளிக்கின்றது, இவர்கள் முதலாளித்துவ அமைப்புமுறை மீது அதிகரித்து வரும் வெறுப்பை அடக்க சர்வாதிகாரம் மற்றும் ஒடுக்குமுறைக்குத் திரும்புவது மட்டுமே ஒரே வழிவகையாக காண்கின்றனர்.
மிகவும் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு உட்பட, தொழிலாள வர்க்கத்தின் மிகவும் அடிப்படை தேவைகளை இன்று முதலாளித்துவ வர்க்கத்தின் சொத்துக்கள் மற்றும் தனியுரிமைகள் மீது நேரடியாக தாக்குதல் நடத்தாமல் பெற முடியாது—இந்த போராட்டம் ஆளும் வர்க்கத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான மற்றும் சோசலிசத்தைக் கட்டமைப்பதற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டமாகும்.