146. மூன்றாவது மாநாட்டின் அரசியல் படிப்பினைகளின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அமெரிக்க கமிட்டி, ICFI உடன் அரசியல் கருத்தொற்றுமை கொண்டதான ஒரு புதிய ட்ரொட்ஸ்கிச கட்சியை ஸ்தாபிப்பதற்கான தனது தயாரிப்பை நிறைவு செய்தது. வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபன மாநாடு நவம்பர் 1966 இல் நடைபெற்றது. இந்த புள்ளியில், மாணவர்களிடையே வியட்நாம் போருக்கு அதிகரித்த எதிர்ப்பு, பெரும் நகரங்களில் ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய உக்கிரமான ஆர்ப்பாட்டங்களின் எழுச்சி, மற்றும் அதிகமான வகையில் போர்க்குணத்துடனும் நீடித்ததாகவும் இருந்த, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் மேற்கொண்ட வேலைநிறுத்தங்கள் இவையெல்லாம் அமெரிக்க முதலாளித்துவத்தின் அதிகரித்த நெருக்கடியின் தெளிவான சுட்டிக்காட்டல்களாக இருந்தன. தனது ட்ரொட்ஸ்கிச மரபை முன்னெப்போதையும் விட அதிகமாக வெளிப்படையாக மறுக்கின்ற சோசலிச தொழிலாளர் கட்சியானது, இந்த அபிவிருத்திகளுக்கு இந்த இயக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய குட்டி முதலாளித்துவ போக்குகளுக்கு அடிபணிவதன் மூலம் பதிலிறுப்பு செய்தது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பகுதியினரும் அரசியல் ஒற்றுமை காண்பதற்கான போராட்டத்திற்கு மாற்றாக கறுப்பரின தேசியவாதத்தை ஊக்குவித்ததில் இதன் அரசியல் சந்தர்ப்பவாதம் குறிப்பாக வஞ்சக வெளிப்பாட்டைக் கண்டது. ஒரு தனியான கறுப்பரின நாடுக்கான கோரிக்கை உள்ளிட்ட கறுப்பரின தேசியவாதத்தை SWP அரவணைத்துக் கொண்டதிற்கு பின்னால், அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக அது கருத மறுத்தமை இருந்தது. அமெரிக்க சமுதாயத்தில் தொழிலாள வர்க்கத்தை ஒரு "பாசிச மூல" உறுப்பாக சித்திரப்படுத்திய "பிராங்க்பேர்ட் பள்ளியின்" ஒரு முன்னணிப் பிரதிநிதியான ஹெர்பேர்ட் மார்கூஸெ வின் அடிப்படையிலேயே மார்க்சிச விரோத கருத்துருக்களில் இருந்து தனது தத்துவார்த்த ஊக்குவிப்பை பெற்றுக் கொண்ட புதிய இடதுகளின் செல்வாக்கை இந்த முன்னோக்கு பிரதிபலித்தது.
147. 1953ம் ஆண்டு முதல் நான்காம் அகிலத்திற்குள் நடத்தப்பட்ட போராட்டத்தில் வேர் கொண்ட, வேர்க்கஸ் லீக் ஸ்தாபித நிகழ்வானது அமெரிக்காவில் மார்க்சிசத்திற்கான போராட்டத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லை அடையாளப்படுத்தியது. மார்க்சிச அபிவிருத்தி என்பது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பண்பையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் அதன் தீர்க்கமான பாத்திரத்தையும் அங்கீகரிப்பதின் அடிப்படையில் தான் முன்செல்ல முடியும். இந்த முன்னோக்கானது, 1960 கள் மற்றும் 1970களின் ஆரம்பத்தில் செழுமையுற்று விளங்கியதான இன, இனப்பண்பு, பாலின, மற்றும் பால் "அடையாள" அரசியலின் வெவ்வேறு வடிவங்களை ஊக்குவித்த எண்ணிலடங்கா குட்டி முதலாளித்துவ தீவிர போக்குகளுக்கு எதிரானதொரு சமரசப்படுத்த முடியாத போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே உணரப்பட முடியும். வேர்க்கஸ் லீக் ஸ்தாபித மாநாட்டிற்கு தனது வாழ்த்துகளில், SLL தலைவரான ஜெரி ஹீலி தெரிவித்தார்:
அமெரிக்க தொழிலாள வர்க்கம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த படையாகும், இந்த வர்க்கத்திற்குள்ளாக தான் நீங்கள் உங்களது கட்சியைக் கட்ட வேண்டும். இது மார்க்சிசத்தின் ஒரு அடிப்படை கோட்பாடு மற்றும் அமெரிக்காவுக்குள் நிலவும் நிலைமைகளுக்கு குறிப்பான அவசரத்துடன் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்றுமாகும். கறுப்பின சக்தியோ அல்லது நாடெங்கும் விரிவாகப் பரவியிருக்கும் அமைதி மற்றும் மக்கள் உரிமை இயக்கங்களோ எமது காலத்தின் அடிப்படை கேள்விகளை தீர்த்துவிடப் போவதில்லை, ஒரு புரட்சிகர கட்சியால் தலைமையேற்கப்படும் தொழிலாள வர்க்கம் மட்டுமே இதனை செய்ய முடியும். இந்த புள்ளியில் தான் நாங்கள் எங்களை அழுத்தம் திருத்தமாக திருத்தல்வாதிகளிடம் இருந்து பிரித்துக் கொள்கிறோம். நீக்ரோக்கள் தாங்களாகவேயாகவோ அல்லது மத்திய-வர்க்க இயக்கங்களோ அமெரிக்க ஏகாதிபத்தியுடன் கணக்கு தீர்த்துக் கொள்ள முடியும் என்ற யோசனையை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இத்தகைய இயக்கங்களுக்கு நாங்கள் அளிக்கும் எவ்விதமான விமர்சனரீதியான ஆதரவும், எங்களது ஆதரவின் சாரமானது அவற்றின் பிழைகள் குறித்த எங்களது விமர்சனங்களை தெளிவுபடுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
148. வேர்க்கஸ் லீக்கை எதிர்கொண்டிருக்கும் மையப் பணியானது முதலாளித்துவ வர்க்கங்கள் மற்றும் அதன் அரசியல் கட்சிகளிடம் இருந்து, குறிப்பாக ஜனநாயகக் கட்சியிடமிருந்து, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் விடுதலையை ஸ்தாபிப்பதற்காக போரிடுவதாய் அமைய வேண்டும். அமெரிக்காவில் அப்போது நிலவிய சூழல்களில், AFL-CIO இன் வெகுஜன தொழிற்சங்க அமைப்புக்கள் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொழிற் கட்சியை உருவாக்குவதற்கான ஒரு கோரிக்கையின் வடிவத்தை எடுத்தது. 1930களின் அனுபவங்களில் இருந்து எழுந்ததும் மற்றும் ட்ரொட்ஸ்கியால் ஆரம்பத்தில் முன்மொழியப்பட்டதுமான இந்த கோரிக்கை SWP, அது நடுத்தர-வர்க்க ஆர்ப்பாட்ட இயக்கங்களுக்கு தனது நோக்குநிலையை மாற்றியமைத்துக் கொண்டதால் 1950களில் பெருமளவில் கைவிடப்பட்டது. இது வேர்க்கஸ் லீக்கால் மறுமலர்ச்சியுற்றது, அது தனது ஸ்தாபன மாநாட்டின் முதன்மை தீர்மானத்தில் அறிவித்தது:
தொழிலாள வர்க்கமானது, தனிமைப்பட்ட பொருளாதார போராட்டங்களை கடந்து ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கருவிகளுக்கு எதிராக ஒரு அடிப்படையான அரசியல் போராட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பது தொழிலாள வர்க்கத்திற்கு கட்டாயம் உணர்த்தப்பட வேண்டும். இதனால் தொழிற் கட்சி கோரிக்கையானது அமெரிக்காவில் எமது அனைத்து வேலைகளுக்கான ஒன்றுபட்ட கோரிக்கையாக ஆகிறது. தொழிலாள வர்க்க இளைஞர்களிடையே, தொழிற்சங்கங்களில், சிறுபான்மை மக்களிடையே, போர் கேள்வியை சுற்றி இது நமது பிரச்சாரம் மற்றும் போராட்டம் அனைத்திலும் ஊடுருவியாக வேண்டும்...
இனவாத அரசியலுக்கு வளைந்து கொடுப்பதை விடவும், கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்களை பொதுவான அடக்குமுறையாளருக்கு எதிரான பொதுவான போராட்டத்திற்கு இணைக்கும் ஒரு தொழிற் கட்சிக்கே நாம் போராட வேண்டும். ஒரு தொழிற் கட்சியின் எண்ணக்கரு போர் எதிர்ப்பு இயக்கத்தில் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் போர்க் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமானது ஏகாதிபத்தியவாதிகளின் மற்ற தொழிலாளர் விரோத கொள்கைகளில் இருந்து பிரித்துப் பார்க்கப்பட முடியாது. "போர் பிரச்சினை"யுடன் போராட "வர்க்கமற்ற" அடிப்படையிலான மத்திய வர்க்க அரசியல் கட்சிகளின் அமைவு பலனற்ற முயற்சிகளாக இருக்கும் என்பதோடு சம்பந்தப்பட்ட வர்க்க நலன்களை விளக்குவதற்குப் பதிலாக அவற்றை தெளிவற்றதாக்கும் வேலையைச் செய்து விடும்.[85]
149. தொழிற்சங்கங்களின் அடிப்படையிலான ஒரு தொழிற் கட்சி உருவாக்கத்திற்கான போராட்டமானது அடுத்த 25 ஆண்டுகளில், ஜனநாயகக் கட்சிக்கு AFL-CIO மூலம் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக கீழ்படிந்து செல்லும் நிலைக்கு எதிராக வேர்க்கஸ் லீக் நடத்தி வரும் போராட்டத்தில் முக்கிய பங்கினை ஆற்றும். இந்த கோரிக்கையானது புரட்சிகர கட்சிக்கு ஒரு சீர்திருத்தவாத மாற்றினை -அதாவது பிரிட்டிஷ் தொழிற் கட்சி அல்லது கனடா புதிய ஜனநாயகக் கட்சி இவற்றின் ஒரு அமெரிக்க பதிப்பினை- கட்டுவதற்கான முன்மொழிவாக சிந்திக்கப்பட்டதல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் இயக்கத்தை உருவாக்குவதற்கு மற்றும் வர்க்க சமரச கொள்கைகளின் பிடிமானத்தை உடைப்பதற்கு ஒரு வழியாகத் தான். தவிரவும், குறைவான வழியில் தான் என்றாலும் கூட, தொழிலாள வர்க்க போராட்டங்களுக்கான ஒரு கருவியாக AFL-CIO செயல்பட்ட வரையிலும், மற்றும் வர்க்க நனவுடனான தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க பகுதிகளின் ஆதரவைக் கொண்டிருந்த வரையிலும், சோசலிச கொள்கைகளுக்கு உறுதிப்பாடு கொண்ட ஒரு தொழிற் கட்சியைக் கட்டும் கோரிக்கையானது தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு தெளிவான அரசியல் தலைமையை வழங்கியது, தொழிற்சங்க வரம்புகளைக் கடந்த ஒரு பாதையைக் காட்டியது, அத்துடன் புரட்சிகர மற்றும் சோசலிச வர்க்க பிரக்ஞையின் அபிவிருத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தையும் ஆற்றியது. தொழிற்சங்கங்களின் இயல்பிலான புறநிலைப் பண்பும் தொழிலாள வர்க்கத்துடனான அதன் உறவும், அதாவது உலக முதலாளித்துவ கட்டுமானத்தின் அபிவிருத்தியாலும் மற்றும் தொழிலாள வர்க்க போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் பாரியளவில் காட்டிக்கொடுக்கப்படதாலான பாரிய தாக்கங்களும் பின்னர் வேர்க்கஸ் லீக்கினை தொழிற் கட்சிக்கான கோரிக்கையில் இருந்து வாபஸ்பெற நிர்ப்பந்தித்தது.
150. ட்ரொட்ஸ்கிசம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு இடையில் அதிகரிக்கும் மோதலானது அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையின் பின்புலத்தில் விரிந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் உலக முதலாளித்துவத்தின் மறுஸ்திரமாக்கல் மற்றும் மறுகட்டுமானத்திற்கு மிக முக்கியமானதாக இருந்த அமெரிக்காவின் பாரியளவிலான பொருளாதார மேலாதிக்கமானது, கால நகர்வில் 1950கள் மற்றும் 1960களில் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டு வந்தது. 1960கள் வாக்கில், அமெரிக்க மூலதனத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஒரு டாலர் நெருக்கடியை உற்பத்தி செய்தது, இது போருக்குப் பிந்தைய சமநிலையின் உடைவுக்கு சமிக்ஞையாக இருந்தது. நெருக்கடியைத் தணிக்க மேற்கொள்ளப்பட்ட தொடர்ந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை, 1971 ஆகஸ்டு 15 அன்று, அமெரிக்கா டாலர்-தங்கம் மாற்றினை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் அடித்தளத்தை சிதைத்தது. பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் உடைவு புதிய பொருளாதார மற்றும் அரசியல் கிளர்ச்சிகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை சோசலிச தொழிலாளர் கழகமானது அறிந்திருந்தது, ஆனால் அனைத்துலக குழுவிற்குள், மற்றும் SLL க்குள்ளேயே கூட, தீர்க்கப்படாதிருந்த பிரச்சினைகளானவை ஒரு பெரும் அரசியல் விலையைக் கோருவனதாக இருந்தன.
Quoted from M. McLaughlin, Vietnam and the World Revolution (Detroit: Labor Publications, 1985), p. 96.