83. போலந்து மீது நாஜி ஜேர்மனி படையெடுத்ததுடன் 1939 செப்டெம்பரில் இரண்டாம் உலக யுத்தம் வெடித்தது. சற்றே ஒரு வாரத்துக்கு முன்னர் ஸ்ராலினிச ஆட்சியுடன் "ஆக்கிரமிக்காத உடன்படிக்கை" ஒன்றைக் கைச்சாத்திட்டதன் மூலம் ஹிட்லரின் இரத்தக்களரி தாக்குதலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. யுத்தத்தின் வெடிப்பைச் சூழ இருந்த காரணங்களின் படி, 1939 இலையுதிர் காலத்தில் பேரழிவை முன்னெடுப்பதற்கான அடிப்படை அரசியல் மற்றும் இராணுவ உந்துதல், மூன்றாவது ரைஹ்கின் (ஜேர்மன் நாஜி அரசு) மூலோபாய நோக்கங்களில் இருந்தே தோன்றியது. எவ்வாறெனினும், மிகவும் அடிப்படையான மட்டத்தில், யுத்தமானது முதலாவதாக முதலாம் உலக யுத்தத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார மற்றும் பூகோள-அரசியல் முரண்பாடுகளில் இருந்தும், அதற்கும் அப்பால், தேசிய-அரசு அமைப்பு வரலாற்று ரீதியில் பயனற்றதாய் போனதில் இருந்தும் மற்றும் உலக முதலாளித்துவத்தின் பொதுவான பொருளாதார வீழ்ச்சியில் இருந்துமே தோன்றியது. யுத்தத்தை ஜனநாயகத்துக்கும் பாசிசத்துக்கும் இடையிலான மோதலாக காட்டும் முயற்சிகளை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். "வேர்சாய் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்னரே அதில் (யுத்தத்தில்) பங்குபற்றுபவர்களால் தொடக்கிவைக்கப்பட்ட யுத்தம், ஏகாதிபத்திய முரண்பாடுகளில் இருந்தே வளர்ச்சி கண்டது. ஒரே தண்டவாளத்தில் எதிர் திசைகளில் இருந்து பயணிக்கும் இரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது தவிர்க்க முடியாததைப் போலவே யுத்தமும் தவிர்க்க முடியாததாகும்," என அவர் எழுதினார்.[54] மே 1940ல் எழுதப்பட்ட ஏகாதிபத்திய யுத்தம் தொடர்பான நான்காம் அகிலத்தின் விஞ்ஞாபனம் என்ற படைப்பில், பூகோள பேரழிவுக்கான பொறுப்பை அனைத்து பிரதான முதலாளித்துவ நாடுகளதும் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் மீது ட்ரொட்ஸ்கி சுமத்துகிறார். ஹிட்லரின் ஏகாதிபத்திய அரசாங்கம் பற்றிய பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் காலங்கடந்த கண்டனத்தில் மனித இனத்தை வெறுக்கும் துர்நாற்றம் வீசுகிறது. ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:
அன்றைய காலத்தில் போல்ஷிவிசத்துக்கு எதிராக சிலுவைப் போர் நடத்தவந்தவராக ஹிட்லரை போற்றிய ஜனநாயக அரசாங்கங்கள், இப்போது அவரை உடன்படிக்கைகளின் புனிதத்தையும், எல்லைகளையும், சட்டம் மற்றும் விதிமுறைகளையும் மீறும், பாதாளத்தின் அடியிலிருந்து எதிர்பார்க்காத விதமாக தோன்றிய ஒரு வகையான பூதமாக சித்தரிக்கின்றன. இது ஹிட்லர் இல்லையெனில் முதலாளித்துவ உலகம் ஒரு தோட்டம்போல் பூத்துக்குலுங்கும் என்பதாகும். எவ்வளவு ஏளனமான ஒரு பொய்! இந்த ஜேர்மனிய வலிப்பு நோயாளி, தனது மண்டையோட்டுக்குள் கணக்கிடும் இயந்திரத்துடன் மற்றும் கைகளில் வரையறுக்கப்படாத அதிகாரங்களுடன் வானத்தில் இருந்து விழவோ அல்லது பாதாளத்தில் இருந்து தோன்றவோ இல்லை: அவர் ஏகாதிபத்தியத்தின் சகல அழிவுகரமான சக்திகளதும் மனித அவதாரமே அன்றி வேறொன்றுமல்லர்....பழைய காலனித்து சக்திகளின் அத்திவாரங்களை உலுக்கிய ஹிட்லர் கொணர்ந்தது வேறெதுவுமல்ல, அதிகாரத்துக்கான ஏகாதிபத்தியத்தின் குறிக்கோளுக்கு ஒரு மிகவும் பரிபூரணமான வெளிப்பாட்டையே ஆகும். ஹிட்லர் ஊடாக தனது சொந்த இக்கட்டு நிலையின் குழப்பத்துக்குள் தள்ளப்பட்ட உலக முதலாளித்துவம், கூர்மையான உடைவாளை தனது சொந்த குடலுக்குள்ளேயே இறக்கிக்கொண்டிருக்கின்றது.
இரண்டாவது ஏகாதிபத்திய யுத்தத்தின் கொலைகாரர்கள், தனது சொந்த பாவத்தை கழுவிக்கொள்ளும் பொருட்டு ஹிட்லரை பலிகடாவாக்குவதில் வெற்றியடையப் போவதில்லை.
ஒடுக்கப்படும் மக்களின் விசாரணை மன்றத்தில் தற்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும் பதிலளிக்க வேண்டிவரும். ஹிட்லரால் செய்யக்கூடியது, குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்கள் மத்தியில் முதலிடம் வகிப்பது மட்டுமே.[55]
84. அந்த விஞ்ஞாபனம் அமெரிக்காவின் பாத்திரத்தின் மீது கவனத்தை திருப்பியது. அப்போது (1940ல்) அது மோதல் களத்திற்கு வெளியில் இருந்தது. ஆனால், வெகுகாலம் செல்லாது என ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தார். உலக முதலாளித்துவ விவகாரங்களில் அமெரிக்கா ஒரு மேலாதிக்க நிலையை தக்கவைத்துக்கொள்ள யுத்தத்தால் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அமெரிக்க முதலாளித்துவம் சுரண்டிக்கொள்வது காலம் பற்றிய பிரச்சினை மட்டுமே. இது வெறுமனே குறிக்கோள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல, மாறாக பொருளாதார மற்றும் அரசியல் தேவையாகும்.
உலகின் முதன்மையான முதலாளித்துவ சக்தியான அமெரிக்காவின் தொழில்துறை, நிதி மற்றும் இராணுவப் பலம், எப்போதும் அமெரிக்க பொருளாதார வாழ்க்கையின் மலர்ச்சியை உறுதிப்படுத்தவில்லை. அதற்கு மாறாக, அது விசேடமான உயிராபத்தான மற்றும் நடுங்கவைக்கும் பண்புடன் அதன் சமூக நெருக்கடியை கட்டவிழ்த்துவிடும். பில்லியன் கணக்கான தங்கமோ அல்லது மில்லியன் கணக்கான வேலையின்மையோ பயன்பட மாட்டாது! ஆறு வருடங்களுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்ட யுத்தமும் நான்காம் அகிலமும் என்ற நான்காம் அகிலத்தின் ஆய்வில், அது முன்னறிவித்ததாவது:
"1914ல் ஜேர்மனியை யுத்தத்தின் பாதையில் தள்ளிய அதே பிரச்சினைகளை அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ளது. உலகம் பங்கிடப்பட்டுள்ளதா? அது மீண்டும் பங்கிடப்படல் வேண்டும். ஜேர்மனிக்கு அது 'ஐரோப்பாவை ஒழுங்கமைக்கும்' பிரச்சினையாகும். அமெரிக்கா உலகையே 'ஒழுங்கமைக்க' வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகம்ப வெடிப்புடன் வரலாறு மனித குலத்தை நேருக்கு நேர் இருத்துகிறது."[56]
85. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வழிநடத்தும் பிரதான உந்து சக்தியை விஞ்ஞாபனம் ஆராய்ந்தது:
அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை பேணும்பொருட்டு ஏதாவதொரு சாக்குப் போக்கு மற்றும் சுலோகத்தை பயன்படுத்திக்கொண்டு இந்த பயங்கரமான மோதலில் தலையீடு செய்யும். அமெரிக்க முதலாளித்துவத்துக்கும் அதன் எதிரிகளுக்கும் இடையிலான மோதல் வெடிக்கும் ஒழுங்கும் காலமும் சிலவேளைகளில் இன்னமும் வாஷிங்டனுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஜப்பானுடனான யுத்தம் பசுபிக் சமுத்திரத்தில் 'வாழ்வதற்கான வசதியை' பெறுவதற்கான போராட்டமாக இருக்கும். உடனடியாக ஜேர்மனிக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டாலும், அட்லான்டிக்கிலான யுத்தமானது பெரிய பிரித்தானியாவின் மரபுரிமைக்கான போராட்டமாக இருக்கும்.
நேசசக்திகளை ஜேர்மனி வெற்றிபெறும் சாத்தியமானது வாஷிங்டனின் மீது தொங்கிக்கொண்டிருக்கும் தீய கனவு போன்றதாகும். ஐரோப்பிய கண்டம் மற்றும் அதன் தளமாக இருக்கும் அதன் காலனிகளின் வளங்களுடன், சகல ஐரோப்பிய போர்த் தளபாட தொழிற்சாலைகள் மற்றும் தன்னால் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய கப்பல் துறைமுகங்களோடு, விசேடமாக நோக்குநிலையில் ஜப்பானுடன் ஒருங்கிணைந்துள்ள ஜேர்மனி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஒரு உயிராபத்தான அபாயத்தை கொண்டிருக்கும். இந்த அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால், ஐரோப்பிய களத்தில் நடக்கும் தற்போதைய பிரமாண்டமான மோதல்கள், ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல்களுக்கான தயாரிப்பின் முன்னறிகுறியாகும்.[57]
86. நான்காம் அகிலத்தின் விஞ்ஞாபனம், யுத்தத்தை எதிர்க்குமாறு அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தாலும், குட்டிமுதலாளித்துவ தட்டுக்களின் அமைதிவாதத்தை தெளிவாக கண்டனம் செய்தது.
யுத்தத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கு எதிரான எங்களது போராட்டத்துக்கும், தலையிடாக் கொள்கை மற்றும் அமைதிவாதத்துக்கும் இடையில் பொதுவான எதுவும் கிடையாது. ஏகாதிபத்திய அரசாங்கம் இந்த நாட்டை யுத்தத்திற்குள் இழுத்துத் தள்ள எந்தவிதத்திலும் பின்வாங்கப் போவதில்லை என நாம் தொழிலாளர்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்கின்றோம். ஆளும் வர்க்கத்துக்குள்ளான கருத்து முரண்பாடு, எப்போது யுத்தத்திற்குள் குதிப்பது என்பதும் யாருக்கு எதிராக முதலாவது குண்டை வெடிக்க வைப்பது என்பதும் மட்டுமேயாகும். பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியிடுவதன் மூலமும் அமைதிவாத தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலமும் அமெரிக்காவை நடுநிலையில் வைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதானது வெள்ளத்தை துடைப்பத்தால் தடுக்க முயற்சிப்பதற்கு சமமாகும். யுத்தத்துக்கு எதிரான உண்மையான போராட்டத்தின் அர்த்தம், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டமும் குட்டி முதலாளித்துவ அமைதிவாதத்தை இரக்கமின்றி அம்பலப்படுத்துவதுமேயாகும். புரட்சியால் மட்டுமே அமெரிக்க முதலாளித்துவத்தை இரண்டாவது ஏகாதிபத்திய யுத்தத்தில் தலையிடுவதில் இருந்து அல்லது மூன்றாவது ஏகாதிபத்திய யுத்தத்தை தொடக்கி வைப்பதில் இருந்து தடுக்க முடியும். ஏனைய சகல வழிமுறைகளும் போலி பண்டிதத்தனமாகும் அல்லது முட்டாள்தனமாகும் அல்லது இரண்டினதும் கலவையாகும்.[58]
87. நான்காம் அகிலம், யுத்தத்துக்கு எதிராக செயலாற்றலற்ற தனிப்பட்ட விரோதத்தை காட்டும் குட்டி முதலாளித்துவ அமைதிவாதிகளுக்கு எதிராக, தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் மற்றும் தொழிலாள வர்க்க அலுவலர்களுடன் தொழிலாளர்கள் இராணுவக் கலையை பயில வேண்டும் என அழைப்புவிடுத்திருந்தது. ஆளும் வர்க்கம், அமெரிக்காவுக்குள்ளும் மற்றும் அதன் பங்காளிகளுக்கு மத்தியிலும், நாஜி அரசாங்கத்தின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டினர் அனுபவித்த துன்பங்களை சுரண்டிக்கொண்டு, யுத்தத்தை "ஜனநாயகத்துக்கான யுத்தமாக" காட்டி அதை விற்றுப் பிழைக்க முயற்சித்தது. 1941ல் சோவியத் ஒன்றியத்தின் மீது ஜேர்மன் படையெடுத்த பின்னர், தனது ஏகாதிபத்திய நேச சக்திகளுடன் சேர்ந்து தனது யுத்தகால கூட்டின் ஒரு பாகமாக இந்த சுலோகத்தை ஸ்ராலினிஸ்டுகள் அபகரித்துக்கொண்டனர். இதை நான்காம் அகிலம் ஆரம்பத்திலேயே நிராகரித்தது.
பாசிசத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போர் என்ற சுலோகம் பொய்யைவிட குறைந்ததல்ல. ஹிட்லரும் அவரது கொலைகாரக் கும்பலும் ஆட்சிக்கு வருவதற்கு பிரித்தானிய அரசாங்கம் உதவியதை தொழிலாளர்கள் மறந்துவிட்டனர் என நினைப்பது போன்றதாகும். யதார்த்தத்தில் ஏகாதிபத்திய ஜனநாயகங்கள் வரலாற்றில் முன்னணி பிரபுகுல ஆட்சிகளாகும். இங்கிலாந்து, பிரான்ஸ், ஒல்லாந்து மற்றும் பெல்ஜியமும் காலனித்துவ மக்களை அடிமையாக்குவதில் தங்கியிருந்தன. அமெரிக்காவின் ஜனநாயகம் ஒரு முழு கண்டத்தினதும் பிரமாண்டமான செல்வத்தை கைப்பற்றுவதில் தங்கியிருந்தது. இத்தகைய "ஜனநாயகங்களின்" சகல முயற்சிகளும் தமது சொத்துடைமை நிலைமையை பாதுகாப்பதை நோக்கி இலக்குவைக்கப்பட்டிருந்தது. போர் சுமையின் கனிசமான பகுதி, ஏகாதிபத்திய ஜனநாயகங்களால் அவர்களின் காலனிகள் மீது இறக்கிவைக்கப்பட்டது. தங்களது எஜமானர்கள் தொடர்ந்து அடிமை உடைமையாளர்களாக இருக்கும் சாத்தியத்தை உறுதிப்படுத்தும்பொருட்டு, அடிமைகள் இரத்தத்தையும் தங்கத்தையும் வழங்க கடமைப்பட்டுள்ளார்கள்.[59]
88. ஸ்ராலின் அரசாங்கத்தின் ஜேர்மனியுடனான யுத்தகால ஆரம்ப கூட்டும், அதன்கீழ் இருந்த பின்லாந்து மற்றும் போலந்தில் அதன் கொடூரமான கொள்கைகளும், உருக்குலைந்த தொழிலாளர் அரசு என்ற சோவியத் ஒன்றியத்தின் சமூகப் பண்பை மாற்றவில்லை என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். ஸ்ராலினிசத்தின் குற்றங்கள் மற்றும் துரோகத்தின் மத்தியிலும், நான்காம் அகிலம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சோசலிச சோவியத் குடியரசின் ஒன்றியத்தை பாதுகாக்க இன்னமும் அழைப்புவிடுத்தது.
நேற்றுவரையும் பாசிசத்துக்கு எதிராக "ஜனநாயக சக்திகளை" அணிதிரட்டும் ஒரு அச்சாணியாக சோவியத் ஒன்றியத்தை கருதுவதற்கு இன்னமும் தயாராக இருந்த பல குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள், இப்போது தமது சொந்த தாய்நாடு ஹிட்லரால் அச்சுறுத்தப்படுகின்ற நிலையிலும் கூட, மாஸ்கோ தமக்கு உதவ வராமல் ஏகாதிபத்திய கொள்கையை பின்பற்றுவதையும், மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கும் பாசிச நாடுகளுக்கும் இடையில் வித்தியசம் இல்லை என்பதையும் கண்டனர்.
வர்க்க நனவுள்ள ஒவ்வொரு தொழிலாளியும் இது "பொய்!" என்பதை கூறியாக வேண்டும். இதில் ஒரு வேறுபாடு உண்டு. தீவிரவாத வெற்றுப் பேச்சாளர்களை விட முதலாளித்துவவாதிகள் இந்த சமூக வேறுபாடுகள் பற்றி சிறந்த மற்றும் மிகவும் ஆழமாக மதிப்பிடுகின்றார்கள். நிச்சயமாக, பிற்படுத்தப்பட்ட தனிஒரு நாட்டுக்குள், உற்பத்தி வழிமுறைகளை தேசியமயமாக்குவதனாது இன்னமும் சோசலிசத்தை கட்டியெழுப்புவதை உத்தரவாதம் செய்யவில்லை. ஆனால், சோசலிசத்துக்கான அடிப்படை முன்நிபந்தனைகளான, உற்பத்தி சக்திகளின் திட்டமிடப்பட்ட அபிவிருத்தியை முன்தள்ளும் இயலுமை அந்த நாட்டுக்கு உண்டு. உற்பத்தி வழிமுறைகளை தேசியமயமாக்குவது மட்டும் வெகுஜனங்களுக்கு நல்வாழ்வை உருவாக்கி விடாது என்ற அடிப்படையில், ஒருவர் அதற்கு புறமுதுகு காட்டுவாரேயானால், அது சுவர்களும் கூரையும் இன்றி வாழ்வது சாத்தியமில்லை என கருங்கல் அத்திவாரத்தை தகர்ப்பதற்கு சமமாகும்.
89. எவ்வாறெனினும், ஏகாதிபத்தியத்திடமிருந்து சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பது, குறைந்தபட்சமேனும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கு எந்தவொரு அரசியல் சலுகையையும் வழங்குவதை குறிக்கவில்லை.
புரட்சிகர வர்க்கப் போராட்ட முறையின் மூலம் மட்டுமே சோவியத் ஒன்றியத்தை நான்காம் அகிலம் பாதுகாக்க முடியும். ஏகாதிபத்திய காலனித்துவ நாடுகளின் தொழிலாளர்களுக்கு, அரசின் வர்க்கப் பண்பையும் அவற்றுகிடையிலான பரஸ்பர உறவுகளையும், அதேபோல் அவை ஒவ்வொன்றுக்கும் இடையிலான உள் முரண்பாடுகளையும் சரியாகப் புரிந்துகொள்ள தொழிலாளர்களுக்கு கற்பிப்பது, கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நிலைமையிலும் சரியான நடைமுறைச் சாத்தியமான முடிவுகளை எடுக்கும் இயலுமையை அவர்களுக்கு வழங்கும். மொஸ்கோ சிறுகுழு ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை களைப்பின்றி முன்னெடுக்கும் அதேவேளை, நான்காம் அகிலமானது சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஏகாதிபத்தியத்திற்கு ஆதவளிக்கக்கூடிய எந்தவொரு கொள்கையையும் தீர்க்கமாக நிராகரிக்கின்றது.[60]
சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதானது உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கான தயாரிப்புடன் கொள்கை ரீதியில் ஒருங்கு சேர்கின்றது. மடமைநிறைந்த மற்றும் பிற்போக்கான போக்கான ஸ்ராலினிசத்தின் படைப்பான தனிநாட்டில் சோசலிசம் என்ற தத்துவத்தை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். சோசலிசத்துக்காக சோவியத் ஒன்றியத்தை உலகப் புரட்சியால் மட்டுமே பாதுகாக்க முடியும். ஆனால் உலகப் புரட்சியானது கிரெம்ளின் சிறுகுழு ஆட்சியை துடைத்துக் கட்டும் தவிர்க்க முடியாத பணியையும் முன்கொணரும்.
90. உலக சோசலிசப் புரட்சிக்கான நான்காம் அகிலத்தின் மூலோபாயத்தை உறுதியாக மீள வலியுறுத்தி அந்த விஞ்ஞாபனம் முடிவுற்றுள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது அகிலங்களோடு ஒப்பிடுகையில், நான்காம் அகிலம் தனது கொள்கையை கட்டியெழுப்புவது, முதலாளித்துவ அரசுகளின் இராணுவ வெற்றிகளில் அன்றி, ஏகாதிபத்திய யுத்தத்தை முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிலாளர்களின் யுத்தமாக மாற்றுவதையும் மற்றும் உலக சோசலிச புரட்சியின் ஊடாக சகல நாடுகளிலும் உள்ள ஆளும் வர்க்கத்தை தூக்கிவீசுவதையும் அடிப்படையாகக் கொண்டேயாகும். இந்த நிலைப்பாட்டின் படி, தேசிய மூலதனத்தின் அழிவு, பிராந்தியங்களை கைப்பற்றுதல், தனி தனி அரசுகளின் வீழ்ச்சி போன்ற போர்க்களத்திலான மாற்றங்கள், நவீன சமுதாயத்தை மீள்நிர்மாணம் செய்வதற்கான பாதையின் துன்பகரமான நிகழ்வுகளையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.
யுத்தப் பாதையில் இருந்து சுயாதீனமாக நாம் எமது அடிப்படை கடமைகளை இட்டு நிரப்புவோம்: தொழிலாளர்களது நலன்களுக்கும் இரத்தத் தாகம் கொண்ட முதலாளித்துவத்தின் நலன்களுக்கும் இடையிலான ஒவ்வாமையை நாம் தொழிலாளர்களுக்கு விளக்குவோம்; நாம் உழைப்பாளிகளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அணிதிரட்டுவோம்; நாம் யுத்தத்தில் ஈடுபடும் நாடுகளிலும் நடுநிலை வகிக்கும் நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியத்தை ஊக்குவிப்போம்; நாம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் படையினருக்கும் இடையிலும் மற்றும் சமர்க்களத்தில் எதிர் எதிர் தரப்புக்களில் உள்ள சிப்பாய்களுக்கிடையிலும் சகோதரத்துவத்துக்கு அழைப்பு விடுப்போம்; நாம் யுத்தத்துக்கு எதிராக பெண்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவோம்; நாம் தொழிற்சாலைகளிலும், ஆலைகளிலும், கிராமங்களிலும், போர்வீரர்கள் தங்குமிடங்களிலும், போர்க்களத்திலும் மற்றும் கடற்படையினர் மத்தியிலும் உறுதியாக, விடாமுயற்சியுடன், சளைக்காமல் புரட்சிக்காக தயார்செய்வோம்.[61]