91. யுத்தத்தின் வெடிப்பானது முன்னெப்போதுமில்லாதவாறு ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையை ஆபத்தில் இருத்தியது. முதலாம் உலக யுத்தத்தின் புரட்சிகர விளைவுகளின் நினைவுகள், ஏகாதிபத்திய சக்திகளின் ஞாபகத்தில் மட்டுமன்றி சோவியத் அதிகாரத்துவத்தின் ஞாபகத்திலும் மங்காது தங்கியிருக்கின்றன. ட்ரொட்ஸ்கி வாழ்ந்த வரை, அவர் நாடுகடத்தப்பட்ட புரட்சிகர அரசாங்கத்தின் தலைவராக எஞ்சியிருந்தார். யுத்தக் கொந்தளிப்பு ட்ரொட்ஸ்கியை மீண்டும் அதிகாரத்தில் இருத்தும் ஒரு புரட்சிகர இயக்கத்தை தோற்றுவிக்கும் என ஸ்ராலின் கூட அச்சமடைந்திருக்க முடியாதா? ரஷ்யப் புரட்சியின் தலைமையை முழுமையாக துடைத்துக்கட்டவும் நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியை தடுக்கவும் ஸ்ராலினின் முகவர்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள் ஊடுருவி இருந்தனர். லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதே அவர்களின் பிரதான இலக்காக இருந்தது. பப்லோவாத அமைப்புக்களின் கசப்பான எதிர்ப்பின் முன்னால் 1970கள் மற்றும் 1980களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முனனெடுக்கப்பட்ட விசாரணைகள் ஜி.பி.யூ. வின் செயற்பாடுகளின் பரந்த நோக்கத்தை அம்பலப்படுத்தியது. மார்க் ஸ்பிரோவ்ஸ்கி (ட்ரொட்ஸ்கியின் மகனான லியோன் செடோவின் செயலாளர்), சில்வியா காலென் (ஜேம்ஸ் கனனின் செயலாளர்) மற்றும் ஜோசப் ஹான்சன் (1937ன் பின்னர் ட்ரொட்ஸ்கியின் செயலாளரும் பாதுகாவலரும் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியின் எதிர்கால தலைவரும்) ஆகியோர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஜி.பி.யூ. க்காக வேலை செய்தவர்களில் அடங்குவர். (1937 ஜூலையில்) எர்வின் வொல்ஃபையும் (1937 செப்டெம்பரில்) இக்னக் ரீஸ்ஸையும் (1938 பெப்பிரவரியில்) லியோன் செடோவையும் (1938 ஜூலையில்) ருடொல்ஃப் க்லெமென்டையும் படுகொலை செய்யும் தயாரிப்புகளுக்கு ஜி.பி.யூ. க்கு உதவியது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் "எடின்னே" என்றழைக்கப்பட்ட ஸ்பிரோவ்ஸ்கி ஆகும். 1940 மே 24ம் திகதி ட்ரொட்ஸ்கி கொலை முயற்சியொன்றில் இருந்து தப்பினார். இதற்கு ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பு விபரங்கள் தொடர்பாக செயற்பட்டுக்கொண்டிருந்த ஒரு ஜி.பி.யூ. முகவர் (ரொபேர்ட் ஷெல்டொன் ஹார்ட்) உதவி கிடைத்திருந்தது. 1940 ஆகஸ்ட் 20ம் திகதி, ஒரு ஜி.பி.யூ. முகவரான ரேமன் மெர்கடர், மெக்ஸிகோ கொயோகானில் உள்ள ட்ரொட்ஸ்கியின் இல்லத்தில் வைத்து அவரை தாக்கினான். மறுநாள் அவர் உயிரிழந்தார்.
92. ட்ரொட்ஸ்கியின் படுகொலை அனைத்துலக சோசலிச இயக்கத்துக்கு விழுந்த அழிவுகரமான அடியாகும். ட்ரொட்ஸ்கி அக்டோபர் புரட்சியின் இணைத் தலைவராக மட்டுமன்றி, ஸ்ராலினிசத்தின் விட்டுக்கொடுக்காத எதிரியாகவும் மற்றும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகராகவும் விளங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களிலும் தோன்றிய பெரும் புரட்சிகர தொழிலாளர் இயக்கங்களை ஊக்குவித்த உன்னத மார்க்சிசத்தின் அரசியல், புத்திஜீவி, கலாச்சார மற்றும் பண்பாட்டு மரபுகளின் அதி உயர் பிரதிநிதியாக ட்ரொட்ஸ்கி விளங்கினார். அவர் மெய்யில் ரீதியாக சடவாதத்தில் வேரூன்றிய, புறநிலை யதார்த்தத்தை அறிகையை நோக்கி வெளிப்புறமாய் செலுத்தப்பட்ட, தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாய் அணிதிரட்டலையும் கல்வியூட்டலையும் நோக்கி திசைவழிப்படுத்தப்பட்ட மற்றும் மூலோபாயரீதியாக முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்துடன் முன்கூட்டியே ஈடுபடுத்திக்கொண்ட புரட்சிகர தத்துவம் பற்றிய ஒரு கருத்துருவினை சுருங்கக் காட்டினார், அபிவிருத்தி செய்தார் மற்றும் அதற்குப் போராடினார். புதிய புரட்சிகர காலகட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருந்த அவர், தனிநபர் சுதந்திரம் என்ற பதாதையின் கீழ் தமது அரசியல் பொறுப்புக்களை தட்டிக்கழிக்க முயற்சித்தவர்களை வெறுப்புடன் நோக்கினார். "வெற்று வெட்டவளியில் தமது சொந்த தனித்துவத்தை தேடுவதற்கு இந்த பண்பற்றவர்களை அனுமதியுங்கள்," என அவர் பிரகடனம் செய்தார். தொழிலாள வர்க்கம் சந்தித்த தோல்விகள் மூலம் மார்க்சிசத்தின் "தோல்வியை" அதுவே வெளிப்படுத்தியது எனக் கூறியவர்களுக்கு அவர் ஒரு அங்குலம் கூட இடம் கொடுக்கவில்லை. ட்ரொட்ஸ்கியின் படி, இந்த வாதங்கள் அரசியல் சீரழிவை அடிப்படையாகக் கொண்டவையே அன்றி, தத்துவார்த்த அறிவை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. "மார்க்சிசத்தின் நெருக்கடியை" பற்றி சட்டமாக கத்துபவர்கள், துல்லியமாக அரசியல் எதிர்ப்போக்கை பரப்புவதற்கு அறிவுக்கூர்மையுடன் அடிபணிந்தவர்களாவர். அவர்கள் தமது தனிப்பட்ட பீதியை, "அற்பமான மற்றும் உலகளாவிய விமர்சன மொழிக்கு மாற்றிக்கொண்டிருக்கின்றனர்" என ட்ரொட்ஸ்கி எழுதினார். எவ்வாறெனினும், மார்க்சிசத்தின் எண்ணிலடங்கா இடது விமர்சகர்களிடம், சோர்விழந்து இராஜினாமா செய்வதைத்தவிர தொழிலாள வர்க்கத்திற்கு கொடுப்பதற்கு அவர்களிடம் வேறு மாற்றீடு எதுவும் கிடையாது. மார்க்சிசத்தின் எதிரிகள், "எதிர்ப்போக்கின் முன்னால் தாமே நிராயுதபாணிகளாகிக்கொண்டு, விஞ்ஞான பூர்வமான சமூக சிந்தனையை கைவிட்டு, பொருள் நிலைமைகளை மட்டுமன்றி பண்பாட்டு நிலமையையும் சரணடையச் செய்வதோடு எதிர்காலத்தில் எந்தவொரு புரட்சிகர உரிமையையும் இழந்துவிடுகின்றனர்," என ட்ரொட்ஸ்கி கண்டார்.[62]
Writings of Leon Trotsky 1938-39 (New York: Pathfinder, 2002) pp. 238-39.