27. 1914 க்கும் 1917க்கும் இடையே லெனினும் ட்ரொட்ஸ்கியும் ஏகாதிபத்தியப் போர் ஐரோப்பாவில் புரட்சிகர வெடிப்புக்களுக்கு அரங்கம் அமைக்கும் என்று வலியுறுத்தி வந்தனர். போர் மற்றும் அது தீவிரமாக அதிகப்படுத்திய ரஷ்ய சமூக நெருக்கடியில் இருந்து பெப்ருவரி புரட்சி வெடித்ததை அடுத்து இந்த முன்னோக்கு நிரூபணமானது. 1917ம் ஆண்டின் பெப்ருவரி புரட்சி, ஜார் ஆட்சியை அகற்றியபின், மென்ஷிவிக்குகள் பூர்ஷ்வாக்களுடன் இடைக்கால அரசாங்கத்தின் பக்கம் சேர்ந்து கொண்டு தொழிலாள வர்க்கத்தின் புரட்சியை எதிர்த்தனர். இடைக்கால அரசாங்கம் முதலாளித்துவ முறை சொத்து உறவுகளை காத்தது; போரைத் தொடர்ந்து நடத்தியது; விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்படுவதை எதிர்த்தது. ஏப்ரல் மாதம் லெனின் ரஷ்யாவிற்கு திரும்பினார்; நீண்டகாலமாக போல்ஷிவிக் வேலைத்திட்டத்தில் இருக்கும் ஜனநாயக சர்வாதிகார நடைமுறையை நிராகரித்து, தொழிலாள வர்க்கம் இடைக்கால அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்றும் சோவியத்துக்களின் மூலம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இந்த நிலைப்பாடானது அனைத்து அடிப்படைகளிலும், புரட்சிகர அபிவிருத்திகளின் உண்மைப் பாதையை ஒரு அசாதாரண அளவுக்கு கணித்திருந்ததும், 1917 ஏப்ரலில் போல்ஷிவிக் கட்சியை லெனின் தீர்மானமாக மறுநோக்கமைவு செய்வதற்கு தத்துவார்த்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அடித்தளங்களை இட்டதுமான ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை நிரூபணம் செய்ததோடு, ஒப்புதலளிக்கவும் செய்தது. ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கை லெனின் ஏற்றுக்கொண்டமை மிகக் கடுமையான முறையில் ஸ்ராலின் உள்ளிட்ட பல "பழைய போல்ஷிவிக்குகளால்" எதிர்க்கப்பட்டது. லெனின் ரஷ்யாவிற்கு ஏப்ரல் 1917ல் திரும்பிவருவதற்கு முன்பு போல்ஷிவிக் கட்சியின் செய்தித்தாளான பிராவ்தாவின் ஆசிரியர் என்ற முறையில் ஸ்ராலின் எடுத்த நிலைப்பாடு இடைக்கால அரசாங்கத்திற்கு விமர்சனரீதியான ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும். போர் முயற்சி தொடர்வதற்கான ஆதரவையும் அவர் முன்மொழிந்தார்.
28. பூர்ஷ்வா இடைக்கால அரசாங்கம் தூக்கி எறியப்படுவதற்கு சில மாதங்கள் முன்பு லெனின் அரசு பற்றிய மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் படைப்புக்களை பற்றி மிகப் பரந்த அளவில் ஆராய்ந்தார். அரசு என்பது வர்க்கங்களுக்கு மேலான ஒரு அமைப்பு என்றும், அது வர்க்கங்களுக்கு இடையிலான பேதங்களை சமரசம் செய்யவும் தீர்த்து வைக்கவுமே இருக்கின்றதாகவும் சித்தரிப்பதற்கு சந்தர்ப்பவாதிகள் முயற்சித்துக் கொண்டிருந்த சூழல்களின் கீழ், இந்த பணி அதிமுக்கியமானதாக இருந்தது. முதலாளித்துவம் தனது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்கும், தொழிலாள வர்க்கத்தை அடக்கியாள மற்றும் சுரண்டுவதற்கும் நிறுவியுள்ள ஒரு நிர்ப்பந்த கருவியே அரசு என்னும் ஏங்கெல்சின் வரையறை மீது லெனின் தீவிர அழுத்தமளித்தார். இந்த வரையறை இருபதாம் நூற்றாண்டிலும் அதன் பொருத்தத்தை இழக்கவில்லை என்று லெனின் வாதிட்டார்:
மாறாக; ஏகாதிபத்தியம் வங்கி மூலதனத்தின் சகாப்தம், மாபெரும் முதலாளித்துவ ஏகபோக உரிமைகளின் சகாப்தம், ஏகபோக முதலாளித்துவம் அரச ஏகபோக முதலாளித்துவமாக அபிவிருத்தியுற்றது. இதில் "அரச எந்திரம்" அசாதாரணமான வலிமையூட்டப் பெற்றுள்ளதையும், அதன் அதிகாரத்துவ மற்றும் இராணுவ அமைப்புக்கள் முடியாட்சி மற்றும் சுதந்திர குடியரசுகள் இரண்டிலுமுள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்ற தொடர்பில் முன்கண்டிராத வளர்ச்சியுற்றதையும் தெளிவாகக் காட்டியிருக்கிறது.[20]
29. அக்டோபர் 1917ல் பெட்ரோகிராட் சோவியத்தில் பெரும்பான்மையை வென்றதை அடுத்து, போல்ஷ்விக்குகள் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் ஒரு கிளர்ச்சியை ஒருங்கிணைத்து இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து அதிகாரத்தை சோவியத்துகளுக்கு மாற்றினர். அக்டோபர் புரட்சி ஒரு சதித்தன்மை நிறைந்த "ஆட்சி மாற்றம்", மக்களுடைய ஆதரவு இல்லாமல் போல்ஷிவிக்குகளால் நடத்தப்பட்டது என்னும் கூற்றுக்களை தீவிர வரலாற்று ஆராய்ச்சி மறுத்து நிராகரித்துள்ளது. உண்மையில் பூர்சுவா ஆட்சியை தூக்கியெறிவதற்கு ரஷ்யாவின் தலைநகரமாக இருந்த பெட்ரோகிராட்டில் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான ஆதரவு இருந்தது. இருப்பினும், போல்ஷிவிக் தலைமைக்குள்ளாகவே குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இருந்தது. லெனினின் நெருக்கமான உடன்செயலாற்றுபவர்களில் இருந்த லெவ் காமனெவ் மற்றும் கிரிகோரி சினோவியேவ் ஆகியோர் கிளர்ச்சியானது பெரும் சீரழிவை எதிர்கொள்ளும் என்று உறுதியாய் நம்பியிருந்தனர். புரட்சியின் வெற்றிக்கு கடக்க முடியாத தடைக்கற்கள் ஒவ்வொரு இடத்திலும் இருந்ததை அவர்கள் கண்டனர். இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான கெரென்ஸ்கியின் கட்டளைக்குட்பட்ட இன்னும் குறிப்பிடத்தக்கதான அளவுடையதாக இருந்த இராணுவ படைகள் குறித்தும் தலைநகரைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிப் படைகள் குறித்தும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் நிரூபணமானதைப் போல, போல்ஷிவிக் கிளர்ச்சி எழுச்சி எதிர்ப்பாளர்களின் கணக்குகள் கொஞ்சம் கூட பலிக்கவில்லை. இடைக்கால அரசாங்கத்தை அகற்றுவது என்பது மிக எளிதான முறையில் சாதிக்கப்பட்டது; அதிக இரத்தமும் சிந்தப்படவில்லை. கிளர்ச்சி எழுச்சிக்கு முன்பாக போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக நடந்த போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பின்னர் கருத்து தெரிவித்த ட்ரொட்ஸ்கி இவ்வாறு குறிப்பிட்டார்....:
ஒரு மாபெரும் முன்னேற்றப் படியை தாண்டியாக வேண்டிய நேரத்தில் கட்சியை பின்னோக்கி இழுக்க இரு வகைத் தலைவர்கள் தலைப்படுகிறார்கள். இவர்களில் சிலர் பொதுவாக புரட்சியின் பாதையில் இருக்கும் சிக்கல்களையும் தடைகளையும் மட்டும் காணவும், ஒவ்வொரு சூழலையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுக்கும் முன்தீர்மானத்துடனான எண்ணத்துடன் அணுகவும் --இது எப்போதும் முழு தன்னுணர்வுடன் செய்யப்படுவதில்லை என்றாலும்-- தலைப்படுகிறார்கள். மார்க்சிசம் அவர்களது கரங்களைப் பொறுத்த வரையில் புரட்சிகர நடவடிக்கையின் அசாத்தியத்தை ஸ்தாபிப்பதற்கான வழிமுறையாக மாறுகிறது. இந்த வகையின் சிறந்த உதாரணம்தான் ரஷ்ய மென்ஷிவிக்குகள். ஆனால் இது மென்ஷிவிசத்திற்கு மட்டும் உரித்தானதொன்றல்ல; அதிமுக்கிய தருணங்களில் மிக அதிக புரட்சிகரக் கட்சியில் கூட பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களிடம் இருந்து இது திடீரென வெளிப்படும். இரண்டாவது வகையின் பிரதிநிதிகள் மூடநம்பிக்கை மற்றும் ஆர்ப்பாட்டம் செய்யும் அணுகுமுறையின் மூலம் தனித்துவம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தலையில் வந்து மோதும் வரையிலும் எந்த தடைக்கற்களையும் சிக்கல்களையும் காண்பதில்லை. உண்மையான தடைகளையும் நெருப்புக்கக்கும் சொற்றொடர்களால் கடக்கும் திறனும், அனைத்து கேள்விகளுக்கும் உயர்ந்த நம்பிக்கைதன்மையை வெளிப்படுத்தும் போக்கும் ("கடல் என்பதும் முழங்கால் ஆழம் தான்") தீர்மானமான நடவடிக்கைக்கான நேரம் வந்து விடுகின்ற சமயத்தில் தவிர்க்கவியலாமல் அதன் எதிர் துருவத்துக்கு போய்விடும். மடுவை மலையெனப் பார்க்கும் முதல் வகை புரட்சிகரவாதிக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதில் எங்கு சிக்கலுள்ளது என்றால், அவர் தனது வழியில் பார்க்க பழகி விட்ட அனைத்து சிக்கல்களையும் அவர் குவித்து அதனை பெருக்கிக் காண்பதில் இருக்கிறது.
இரண்டாவது வகை மூடத்தனமான நம்பிக்கைவாதிக்கு, புரட்சிகர நடவடிக்கைக்கான சிக்கல்கள் எப்போதும் ஆச்சரியமளிப்பவையாக இருக்கின்றன. தயாரிப்பு காலத்தில் இரண்டு வகையினரின் நடத்தையும் மாறுபட்டதாக இருக்கின்றன: முந்தையவர் ஐயுறவுவாதி, புரட்சிகர அர்த்தத்தில் அவரை ஒருவர் அதிகமாக நம்பிக் கொண்டிருக்க முடியாது; இதற்கு மாறாக பிந்தையவர் ஒரு வெறி பிடித்த புரட்சிகரவாதியாக தோன்றலாம். ஆனால் தீர்மானிக்கும் தருணத்தில், இருவரும் கை கோர்த்து தான் செயல்படுகின்றனர்; இருவருமே கிளர்ச்சி எழுச்சியை எதிர்க்கின்றனர். [21]
30. உலகம் முழுவதும் கொந்தளிப்பிற்கான ஊக்கத்தை ரஷ்ய புரட்சி கொடுத்தது. புரட்சிகர அரசாங்கம் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக அழைப்பு விடுத்தது, மூர்க்கமான நாடுகளின் ஏகாதிபத்திய திட்டங்களை அம்பலப்படுத்தும் இரகசிய உடன்படிக்கைகளை வெளியிட்டது, அத்துடன் தங்களது அரசாங்கத்துக்கு எதிராக திரண்டு எழுவதற்கு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. போல்ஷிவிக் தலைமையிலான புரட்சி தெள்ளத்தெளிவாக மக்கள் ஆதரவைப் பெற்றிருந்ததை கண்டபின்னும், இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கு தங்களது எதிர்ப்பினை மென்ஷிவிக்குகள் பிடிவாதமாக தொடர்ந்தனர். ஆட்சி அகற்றப்பட்ட பின்னரும் கூட, அவர்களை ஒரு சோசலிச கூட்டணி அரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு கமனேவ் போன்ற மிதவாத போல்ஷிவிக்குகள் செய்த முயற்சிகளையும் மென்ஷிவிக்குகள் கண்டித்தனர். போல்ஷிவிக்குகளுடன் அவர்கள் எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு கொடுக்க வேண்டிய விலை, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியை அதிகாரத்தின் எந்த பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதோடு அவர்களை போலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாகும் என்று மென்ஷிவிக்குகள் வலியுறுத்தினர்!
31. போல்ஷிவிக் கட்சி அதிகாரத்திற்கு வரத் தவறியிருந்தால் அது பெரும் குருதி சிந்திய எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கு வழிவகுத்து, ஜார் மன்னர் ஆட்சி மீட்கப்பட்டிருக்கும் அல்லது ஒரு இராணுவ சர்வாதிகாரம் ஏற்பட்டிருக்கும். முதலாளித்துவமும் அதன் ஏகாதிபத்திய புரவலர்களும் தங்கள் ஆரம்ப அதிர்ச்சியில் இருந்து மீண்டவுடன் அவர்கள் புரட்சிகர ஆட்சியை அழிக்கும் நோக்கத்துடன் ஒரு உள்நாட்டுப் போரை தூண்டிவிட்டனர். எதிர்ப்புரட்சியில் இருந்து சோவியத் ஆட்சியை காக்க ட்ரொட்ஸ்கி தலைமையில் செம்படை உருவாக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கி இராணுவ மூலோபாயங்கள் மற்றும் அமைப்பாக்கத்தில் மேதை என நிரூபித்தார். ஆனால் செம்படையின் தலைவராக அவரது வெற்றியின் உண்மையான அடிப்படையானது, தொழிலாள வர்க்கத்தினை எதிர்கொண்டிருக்கும் புறநிலை பணிகள் குறித்த அவரது ஒப்பிலா புரிதலும் அந்த புரிதலை அவர் மக்களுக்கு எடுத்துரைக்க கொண்டிருந்த திறனும் தான். ஏப்ரல் 1918ல் ஆற்றிய உரை ஒன்றில் அவர் விளக்கினார்:
வரலாறு தொழிலாள வர்க்கத்தை காக்கும் பிரியமுள்ள, மென்மையான தாயாராக ஒன்றும் விளங்கவில்லை; குருதி தோய்ந்த அனுபவம் மூலம் தொழிலாளர்களுக்கு அவர்களின் இலட்சியங்களை எப்படி அடைய வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் ஒரு குரூர மாற்றாந்தாயாகத் தான் அது இருக்கிறது. தொழிலாளர்கள் எளிதில் மன்னித்து, மறக்கும் குணம் உடையவர்கள்; போராட்ட நிலைமைகள் சற்று எளிமையாகப் போனால் அவர்களுக்குப் போதும்; சிறிது நலன்கள் கிடைத்தாலும் போதும்; அது அவர்களுக்கு முக்கிய பணி முடிந்துவிட்டது என்ற நினைப்பை கொடுக்கும்; அவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வர், செயலற்று, போராட்டத்தை நிறுத்திவிடுவர். இதில்தான் தொழிலாள வர்க்கத்தின் துரதிருஷ்டம் உள்ளது. ஆனால் சொத்துடமை வர்க்கங்கள் போராட்டத்தை ஒருபோதும் கைவிடுவதில்லை. தொழிலாள வர்க்கத்தின் அழுத்தத்திற்கு இடைவிடாத எதிர்ப்பை கொடுக்க அவர்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது; எனவே நமது தரப்பில் சிறிது செயலின்மை, முடிவெடுக்க இயலாமை, அல்லது தடுமாற்றம் இருந்தாலும் அவை எமது பலவீனத்தை சொத்துடமை வர்க்கங்களுக்கு காட்டிக் கொடுத்து விடும்; அதையொட்டி நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ சொத்துடமை வர்க்கத்தினர் தவிர்க்க முடியாமல் புதிய தாக்குதலை நம் மீது தொடுப்பர். தொழிலாள வர்க்கத்துக்கு தேவை டால்ஸ்டாய் உபதேசித்த பிரபஞ்ச மன்னிப்பு அல்ல, மாறாக கடுமையான புடமிடலும், விட்டுக்கொடுக்காத்தன்மையும் ஆகும், தனது வாழ்க்கை மேம்பாட்டுக்கு இட்டுச் செல்லும் பாதையில் ஒவ்வொரு அடிக்கும், ஒவ்வொரு அங்குலத்துக்குமான போராட்டம் இல்லாமல், தொடர்ச்சியான சமரசமற்ற கடுமையான போராட்டம் இல்லாமல், மற்றும் இந்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தி அமைப்பது இல்லாமல், எந்த தீர்வோ விடுதலையோ இருக்க முடியாது என்னும் ஆழமான உறுதிப்பாடும் தான். [22]
32. ரஷ்ய புரட்சியின் தலைவிதி சோவியத் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அப்பால் புரட்சி விரிவாக்கப்படுவதில்தான் உள்ளது என்பதில் போல்ஷிவிக்குகளுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. சர்வதேச சோசலிசத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகள் இந்த நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தனர். போல்ஷிவிக்குகளுக்கு ஆதரவு தெரிவித்து, ரோசா லுக்சம்பேர்க் எழுதினார்; "லெனினும், ட்ரொட்ஸ்கியும் அவர்களுடைய நண்பர்களும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு உதாரணம் காட்டுபவர்களாக முன்னணியில் சென்றவர்கள்; அவர்கள் மட்டும்தான் இதுவரை ஹட்டனுடன் சேர்ந்து கொண்டு, "நான் தைரியத்தைக் கொண்டிருக்கிறேன்!" என்று கூறமுடியும். ரஷ்ய புரட்சி சோசலிசம் என்ற பிரச்சினையை முற்றிலும் தத்துவார்த்த பிரச்சனை என்ற நிலையில் இருந்து ஒரு நடைமுறை வினாவாக ஆக்கிவிட்டது. ஆனால், ரஷ்ய புரட்சியின் தலைவிதி ரஷ்ய எல்லைக்கும் அப்பால் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் விளைவைத்தான் நம்பியிருக்கிறது என்று லுக்சம்பேர்க் வலியுறுத்தினார். "ரஷ்யாவில் இப்பிரச்சினை முன்வைக்கப்படத்தான் முடியும்", "அது ரஷ்யாவில் தீர்க்கப்பட முடியாதது'' என்று அவர் எழுதினார். இந்தப் பொருளில் எல்லா இடங்களிலும் வருங்காலம் "போல்ஷிவிசத்திற்குத்தான்".[23] வெளிப்பட்டு வரும் புரட்சி இயக்கங்களில் முதலாளித்துவம் அதன் மிக ஆபத்தான எதிரிகளைக் கண்டது. உலக ஏகாதிபத்தியத்தின் இணைந்த சக்திகள் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவில் தலையீடு செய்ய ஏற்பாடு செய்தன. ஜேர்மனியின் பிற்போக்கு சக்திகள், நவம்பர் 1918ல் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியால் அதிகாரத்திற்கு உயர்ந்த சமூக ஜனநாயகவாதிகளுடன் அணி சேர்ந்து, ஜனவரி 1919ல் ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்னெட் ஆகியோரின் படுகொலைக்கு ஏற்பாடு செய்தனர். இந்த இரு புரட்சித் தலைவர்களையும் படுகொலை செய்தது ஜேர்மன் (மற்றும் உலக) முதலாளித்துவம் ரஷ்ய புரட்சிக்கு கொடுத்த அரசியல் பதிலிறுப்பு ஆகும். தொழிலாள வர்க்கத்துள் மார்க்சிச தலைமையின் அபிவிருத்தியானது எப்பாடுபட்டேனும் தடுக்கப்பட வேண்டும் என்று 1917 நிகழ்வுகளில் இருந்து ஆளும் வர்க்கங்கள் ஒரு முடிவிற்கு வந்திருந்தன. ஆளும் வர்க்கங்களும் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிசவாதிகளுக்குள் இருந்த அவர்களது முகவர்களும் இந்த பாடத்தின் மூலம் தங்களின் நடைமுறையில் எந்த அளவிற்கு வழிநடத்தப்பட்டார்கள் என்பதை 20ம் நூற்றாண்டின் குருதி தோய்ந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டும்.
Ibid, Volume 25, p. 415.
“Lessons of October,” by Leon Trotsky, in The Challenge of the Left Opposition 1923-25 [New York: Pathfinder Press, 2002], pp. 286-87.
How the Revolution Armed: The Military Writings and Speeches of Leon Trotsky, Volume 1: 1918, Translated by Brian Pearce (London: New Park Publications, 1979), p. 58.
The Russian Revolution (Ann Arbor: University of Michigan Press, 1961), p. 80.