33. மூன்றாம் அகிலம், அல்லது கம்யூனிச அகிலம், தனது முதல் மாநாட்டை மார்ச் 1919 இல் மாஸ்கோவில் நடத்தியது. சோவியத் குடியரசானது, இன்னமும் ஏகாதிபத்திய ஆதரவுடனான எதிர்ப்-புரட்சி படைகளுக்கு எதிராக, கைகளில் ஆயுதங்களுடன் தன்னை பாதுகாத்துக் கொண்டிருந்தது. முற்றுகையின் கீழான சூழல்களில் கம்யூனிச அகிலமானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டிருக்கும் ஒரு நடைமுறைப் பணியாக உலகப் புரட்சிக்கான வேலைத்திட்டம், மூலோபாயம் மற்றும் தந்திரோபாயத்தை விளக்கியது. 1914 இன் துயரம் வாய்ந்த படிப்பினைகளை மனதில் கொண்டு, இரண்டாம் அகிலத்தின் மறைவுக்கு இட்டுச் சென்றதான சந்தர்ப்பவாதம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிரானதொரு சமரசமற்ற போராட்டத்தையே கம்யூனிச அகிலத்தின் அடிப்படையாக கொள்ளப்பட்டது. ஜூலை 30, 1920 இல் ட்ரொட்ஸ்கி, கம்யூனிச அகிலத்தில் அனுமதிக்கப்படுவதற்கான நிபந்தனைகளின் மீதான கருத்தாய்வுகளை அறிமுகப்படுத்தினார், இவை சர்வதேச புரட்சிகர அமைப்புக்குள்ளாக அங்கத்துவத்தின் நிபந்தனைகளை வரையறை செய்யும் "21 அம்சங்கள்" என அழைக்கப்படுவனவற்றை பட்டியலிட்டது. கம்யூனிச அகிலத்தில் அங்கத்துவத்தை எதிர்நோக்கும் கட்சிகள் "தொழிலாளர் இயக்கத்தின் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்தும் சீர்திருத்தவாதிகளையும் மையவாதிகளையும் அவ்வப்போது ஒழுங்கமைந்த முறையில் அகற்றுவதற்கும்", "சீர்திருத்தவாதம் மற்றும் 'மையவாத' அரசியலில் இருந்து முழுமையான துண்டிப்பின் அவசியத்தை" அங்கீகரிப்பதற்கும் கடமைப்பட்டவையாய் இருக்கும்"[24]
34. புறநிலை சூழலின் தெளிவான புரிதல், சரியான தந்திரோபாயங்களை விவரித்தல், மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக தளர்ச்சியற்ற போராட்டம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகெங்கிலும் புதிய கம்யூனிஸ்ட் கட்சிகள் அபிவிருத்தி செய்யப்படுவதை மேற்பார்வையிடும் "புரட்சிகர மூலோபாய பள்ளியாக" கம்யூனிச அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதாக ட்ரொட்ஸ்கி விளக்கினார். அவர் எழுதியது: "ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் பணி முழுமையாக சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்படும் முதலாளித்துவத்தின் மூலோபாயத்தை, அதேபோல் முழுமையாக சிந்திக்கப்பட்டு முடிவு வரை நிற்கக்கூடிய தனது சொந்த மூலோபாயத்தின் மூலம் எதிர்கொள்ளுதல் என்பதாகும். இதற்கு, பூர்சுவா அதிகாரம் வெறுமனே வரலாற்றால் கண்டிக்கப்படுவதாய் இருக்கிறது என்கின்ற காரணத்தால் மட்டும் அது தானாக, எந்திரரீதியாக தூக்கியெறியப்படுவது என்பது சாத்தியமல்ல என்பதைப் புரிந்துகொள்வது எல்லாவற்றிற்கும் முதலாய் அவசியமானதாகும்.[25]
35. முதலாம் உலகப் போர் முடிவுற்ற பின்னர், புரட்சியின் விரிவு ஒரு தவிர்க்க முடியாத சாத்தியத்தை கொண்டிருந்தது. நவம்பர் 1918ம் ஆண்டு, ஜேர்மனியில் புரட்சி வெடித்ததானது கெய்சர் முடிதுறப்பதற்கும், குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டதற்கும் துரிதமாக இட்டுச் சென்றது. இப்போது அரசியல் அதிகாரம் சமூக ஜனநாயக கட்சியின் கரங்களில் இருந்தது, அது புரட்சியை - அரசியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் நெரிப்பதற்கு தன்னாலியன்ற அனைத்தையும் செய்தது. 18 மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவில் நிலவிய சூழலுக்கு அப்பட்டமாக மாறானதொரு தனித்துவத்துடன், ஜேர்மனியில் திருத்தல்வாதம் மற்றும் மையவாதத்திற்கு எதிராக பல வருட தளர்ச்சியற்ற போராட்டத்தினால் புடம்போடப்பட்ட வளர்ச்சியடைந்த அரசியல் கட்சி எதுவும் இல்லாமல் இருந்தது. சமூக ஜனநாயக கட்சியின் இடது கன்னை எதிர்ப்பாளர்கள் சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு தீர்மானமான அமைப்புரீதியான உடைவை முன்னெடுத்து செல்ல அளவுக்கு மீறிய கால அவகாசம் எடுத்து தயக்கம் காட்டினர். அந்த எதிர்ப்பு அணியின் ஒரு கணிசமான பிரிவு தங்களை சமூக ஜனநாயக கட்சிக்கும் போல்ஷிவிசத்திற்கும் இடையில் இருத்திக் கொண்டிருந்தது. டிசம்பர் 1918 இன் பிற்பகுதியில் தான், ஜேர்மனியின் அதி புரட்சிகர பிரிவான ஸ்பார்டசிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவத் தொடங்கினர். அதன்பின் ஜனவரி 1919 இல், குறைவான தயாரிப்புடனும் எந்தவித தந்திரோபாயரீதியான திட்டமும் இல்லாமலும், பேர்லினில் ஒரு கிளர்ச்சி வெடித்தது. சமூக ஜனநாயக கட்சி ஆட்சியானது வலதுசாரி அதிரடிப்படைகளை திரட்டி எழுச்சியை அடக்கி ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்னெட்டை படுகொலை செய்வதற்கும் இசைவு கொடுத்தது.
36. ஐரோப்பாவில் எழுச்சி பெற்ற தொழிலாள வர்க்கத்தின் மேலதிக அரசியல் தோல்விகள் பின்தொடர்ந்தன. மார்ச் 1921 இல், ஒரு முதிர்ச்சியற்ற தயாரிப்பு இல்லாத கிளர்ச்சியானது ஜேர்மனிய அரசாங்கத்தால் ஒப்பீட்டளவில் எளிதாக நசுக்கப்பட்டது. 1921ல் நடந்த கம்யூனிச அகிலத்தின் மூன்றாவது மாநாட்டில், லெனினும் ட்ரொட்ஸ்கியும் "தீவிர-இடதுவாதத்திற்கு" எதிராக தீர்மானமாக குறுக்கிட்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலில் வெகுஜன ஆதரவை வெல்லாமல் அதிகாரத்தை வெல்ல முடியாது என்று அவர்கள் வலியுறுத்தினர். "இடது-சாரி" கம்யூனிசம் - ஒரு இளம்பருவ கோளாறு'' என்ற தலைப்பில் லெனின் எழுதிய ஒரு துண்டுப் பிரசுரம் பேரவை மாநாட்டின் பிரதிநிதிகளிடையே விநியோகிக்கப்பட்டது. போல்ஷிவிக் கட்சி மென்ஷிவிசத்திற்கு எதிராக மட்டுமல்ல, மாறாக "அராஜகவாதத்தின் சாயலை ஒத்த, அல்லது அதில் இருந்து சிலவற்றை கடன் வாங்கிய, மற்றும் அனைத்து அத்தியாவசிய விஷயங்களிலும் ஒரு தொடர்ச்சியான பாட்டாளி வர்க்க போராட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு ஈடுகொடுக்காத குட்டி முதலாளித்துவ புரட்சிகரவாதத்திற்கு எதிராகவும் தான்" என்று அது சுட்டிக் காட்டியது.[26]
37. புரட்சிகர கட்சியானது முதலில் அரசியல் போராட்டத்தின் பல வடிவங்களிலும் ஈடுபட்டு தேர்ச்சி பெறாதிருந்தால் அக்டோபர் 1917 இல் போல்ஷிவிக் வெற்றியானது சாத்தியப்பட்டு இருக்காது என்று லெனின் விளக்கினார். அனைத்து சூழ்நிலைகளிலும் அரசியல் சமரசங்களை நிராகரித்த, தேர்தல் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை அங்கீகரிக்க மறுத்த, மற்றும் பிற்போக்கு தொழிற்சங்கங்களுக்குள் பணிபுரிவது அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்த தீவிரப்போக்கின் சங்கேத சொற்களை அவர் மறுத்தார். கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் கால அவகாசம் எடுத்து தயாரிப்பு செய்ய வேண்டும் என்றும், அந்த காலத்தில் அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கையை வென்றாக வேண்டும் என்றும் மூன்றாவது பேரவை மாநாடு அறிவுறுத்தியது. வெகுஜன தொழிலாளர் அமைப்புகளின் "ஐக்கிய முன்னணி" கோரிக்கையை பயன்படுத்துவது என்பது லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் ஊக்குவிக்கப்பட்ட தந்திரோபாயரீதியான முன்முயற்சிகளில் ஒன்றாக இருந்தது. "ஐக்கிய முன்னணி" கோரிக்கையின் நோக்கமானது தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்பை ஒழுங்கமைப்பதற்கும், அல்லது வெகுஜன மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் புரட்சிகர முன்முயற்சி மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் அசமந்த போக்கு மற்றும் நம்பிக்கை மோசடி செயல்கள் இரண்டையும் விளங்கப்படுத்தும் வகையிலமைந்த முக்கியமான கோரிக்கைகளுக்கான போராட்டத்தினை கைக்கொள்வதற்குமாய் இருந்தது. ஐக்கிய முன்னணியின் நோக்கம் ஒரு அரசியல் பொதுமன்னிப்பை அறிவித்து, அரசியல் எதிர்களை விமர்சிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொள்வது அல்ல. மாறாக தொழிலாள வர்க்கம் போராட்டத்தில் ஐக்கியத்திற்கான புறநிலைத் தேவையை அறிந்து வைத்திருப்பதையும், அதே சமயத்தில் தனது சந்தர்ப்பவாத தலைமைகளை அம்பலப்படுத்துவதன் மூலம் தனது அரசியல் நனவை அதிகப்படுத்துவதையும் இந்த தந்திரோபாயம் எதிர்நோக்கியதாய் இருந்தது.
38. மூன்றாம் காங்கிரசில் செயல்படுத்தப்பட்ட அரசியல் பாதை மாற்றம் கணிசமான ஆதாயங்களைக் கொடுத்தது. குறிப்பாக ஜேர்மனியில், கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் கணிசமாகப் பெருகியது. ஆனால் 1923 தொடக்கத்தில் அரசியல் நிலைமை வியக்கத்தக்க அளவு மாறியது. வசந்த காலத்தின் ஆரம்பத்தில், ஜேர்மன் பொருளாதாரத்தில் நிகழ்ந்த பேரழிவான சரிவும், அதனைத் தொடர்ந்த முன்காணாத பணவீக்கமும், பூர்சுவா அரசாங்கத்தை புரட்சிகரமாக தூக்கியெறிவதற்கு தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்வதாக தோன்றிய ஒரு நிகழ்வுப்போக்கினை தூண்டிவிட்டது. மதிப்பிழந்த சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை கரைந்து போயிற்று, அதே சமயத்தில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) துரிதமாக வளர்ந்தது. அக்டோபர் 1923 வாக்கில் ஒரு வெற்றிகரமான புரட்சிக்கான புறநிலை சூழல்கள் அசாதாரண அளவில் சாதகமாய் இருப்பதாக தோன்றியது. சோவியத் புரட்சியின் ஆறாவது ஆண்டு நிறைவு நாள் -அக்டோபர் 25- கிளர்ச்சிக்கான தேதியாக குறிக்கப்பட்டது. பின், கடைசி நிமிடத்தில், அப்போது ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த ஹென்ரிச் பிராண்ட்லர், திட்டமிட்ட கிளர்ச்சியை இரத்து செய்தார். கிளர்ச்சியை கைவிடும் முடிவை அறிந்திராத உள்ளூர் தலைவர்களால் தனிமைப்பட்டு நகரங்களில் நடத்தப்பட்ட கிளர்ச்சி நடவடிக்கையை அரசாங்க படைகள் துரிதமாக அடக்கி விட்டன. ஜேர்மனிய அக்டோபரானது ஒரு சோசலிச புரட்சிக்கு பதிலாக ஒரு அரசியல் படுதோல்வியில் முடிவுற்றது.
39. ட்ரொட்ஸ்கியை பொறுத்தவரையில் 1923ல் ஜேர்மனியப் புரட்சியின் தோல்வி தலையாய அரசியல் உண்மையின் எதிர்மறையின் நிரூபணம் ஆகும்: புரட்சிக்கான அவசியமான புறநிலை சூழ்நிலைகள் இருக்கின்ற நிலையை எடுத்துகொண்டால், அதிகாரத்திற்கான போராட்டத்தில் தலைமையின் அகநிலை காரணியானது தீர்மானமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இதுதவிர, அதிகாரத்துக்கான போராட்டத்துக்கு மாறுவது தவிர்க்கவியலாமல் புரட்சிகர கட்சிக்குள்ளாக ஒரு தீவிர அரசியல் நெருக்கடியை தூண்டுகின்றது என்பதை வரலாற்று அனுபவம் விளங்கப்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இந்த நெருக்கடிகள் மகத்தான முக்கியத்துவம் கொண்டவை; இவை எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பது, புரட்சியின் தலைவிதியை தசாப்தங்களுக்கு இல்லாவிடினும் பல ஆண்டுகளுக்கு நிர்ணயிக்க கூடியதாக இருக்கிறது. ட்ரொட்ஸ்கி எழுதினார்:
ஒரு புரட்சிகரக் கட்சி பிற அரசியல் சக்திகளின் அழுத்தங்களுக்கு ஆளாகிறது. தனது அபிவிருத்தியின் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கட்டத்திலும் கட்சியானது இந்த அழுத்தங்களை எதிர்கொள்வதற்கும் தடுப்பதற்கும் தனது சொந்த வழிமுறைகளை விவரிக்கிறது. ஒரு தந்திரோபாயரீதியான திருப்பம் மற்றும் அதனால் உள்முக குழுவாக்கங்கள் மற்றும் உரசல்களின் போது, கட்சியின் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. இதிலிருந்து, தந்திரோபாயத்தில் ஒரு திருப்பத்திற்கான தேவைகளில் இருந்து உதிக்கும் கட்சியின் உள்முக குழுவாக்கங்கள் புறப்பாட்டு புள்ளியின் மூலமுதலான சர்ச்சைக்குரிய புள்ளிகளை தாண்டி அபிவிருத்தியுறுவதற்கும் பல்வேறு வர்க்க போக்குகளுக்கு ஒரு ஆதரவாக செயலாற்றுவதற்குமான சாத்தியம் எப்போதும் எழுகிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்: தனது சொந்த வர்க்கத்தின் வரலாற்று கடமைகளுக்கேற்றபடி நடந்து கொள்ளாத எந்த கட்சியும் பிற வர்க்கங்களுக்கான ஒரு மறைமுகமான கருவியாக மாறிவிடுகிறது, அல்லது மாறிவிடும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.[27]
Theses, Resolutions and Manifestos of the First Four Congresses of the Third International [London: Inks Links, 1980] pp. 93-94.
The First Five Years of the Communist International, Volume Two (London: New Park, 1974), p. 7.
Collected Works, Volume 31 (Moscow: Progress Publishers, 1966), p. 22.
Challenge of the Left Opposition, pp. 228-29.