Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

ஏகாதிபத்தியப் போரும் இரண்டாம் அகிலத்தின் சரிவும்

20. உலக முதலாளித்துவத்தின் திரட்சியுற்ற பதட்டங்கள் முதலாம் உலகப் போரில் வெடித்தன; இவை தமது அத்தனை கொடூரங்களுடன் சேர்த்து, "முதலாளித்துவத்தின் மரண ஓலம்" மற்றும் உலக சோசலிச புரட்சி இவற்றுக்கான சகாப்தத்தின் ஆரம்பத்தையும் அறிவித்தன. 1880 களிலேயே ஏங்கெல்ஸ் முதலாளித்துவ இராணுவவாதத்தின் தாக்கங்கள் பற்றியும் போர் பற்றியும் எச்சரித்திருந்தார். 1914க்கு முன்பு தொடர்ச்சியான மாநாடுகளில் இரண்டாம் அகிலமானது போர் வெடிப்பை எதிர்ப்பதற்கு தொழிலாளர்கள் திரள வேண்டும் என்ற சிறப்பு அறிக்கைகளை வெளியிட்டன; மேலும் போர் ஏற்பட்டால் அந்த நெருக்கடியை பயன்படுத்தி "முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்த மக்களை தட்டியெழுப்ப வேண்டும்" என்றும் கோரின. ஆனால் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்குள் நீண்ட காலமாக இருந்த பூசல்களை போராக வெடிக்கச் செய்த நிகழ்வான ஆஸ்திரிய ஆர்ச்டியூக் பிரான்ஸ் பெர்டினான்ட் ஜூன் 28, 1914ல் படுகொலை செய்யப்பட்டமை ஒரே இரவில் சோசலிச இயக்கத்திற்குள் சந்தர்ப்பவாதம் வளர்ந்திருந்ததின் தாக்கங்களை வெளிப்படுத்தியது. ஆகஸ்ட் 4, 1914ல் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் போருக்கு நிதி ஆதரவு கொடுப்பதற்கு வாக்களித்தனர்; ஏறக்குறைய அகிலத்தின் அனைத்து முக்கிய கட்சிகளும் தங்களது முதலாளித்துவ அரசாங்கங்களின் போர் கொள்கைகளின் பின்னால் அணிவகுத்தன.

21. இரண்டாம் அகிலம் சரணடைந்ததற்கு சந்தேகமற்ற எதிர்ப்புடன், லெனினின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சி போருக்கு எதிராக வெளிவந்தது. போர் வெடித்த சில வாரங்களுள், லெனின் ஒரு தீர்மானத்தை இயற்றினார்; அது போரை "முதலாளித்துவ, ஏகாதிபத்திய, அரசகுலப் போர்" என்று விளக்கியது.

அத்தீர்மானம் "இரண்டாம் அகிலத்திலேயே (1889-1914) மிகச் சக்தி வாய்ந்த, செல்வாக்கு மிகுந்த ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்களுடைய செயல், போர்க் கடன்களுக்கு வாக்களித்து, பிரஷ்ய ஜங்கர்கள் மற்றும் முதலாளித்துவத்தினரின் பூர்ஷ்வா-ஆதிக்க தேசியவெறி சொற்றொடர்களை கூறியமை சோசலிசத்தை அப்பட்டமாக காட்டிக் கொடுத்ததாகும். கட்சி முழுமையாக பலமற்று இருந்தது, எனவே தற்காலிகமாக நாட்டின் முதலாளித்துவ பெரும்பான்மையின் விருப்பத்திற்கு தலையசைக்க நேர்ந்தது என்று நாம் அனுமானம் செய்து கொள்கின்ற போதிலும் கூட, எந்த சூழ்நிலையிலும் ஜேர்மன் சமுக ஜனநாயகக் கட்சியின் தலைவர்களின் செயல் மன்னிக்க முடியாதது ஆகும். உண்மையில் இந்த கட்சி ஒரு தேசியவாத-தாராளமய கொள்கையை கைக்கொண்டிருக்கிறது" என அறிவித்தது.[12]

22. பிரெஞ்சு, பெல்ஜிய சோசலிசக் கட்சிகளின் நடவடிக்கைகளையும் "அவையும் இதே அளவிற்கு கண்டிக்கத்தக்கவை"[13]என்பதாக தீர்மானம் கண்டித்தது. ஆகஸ்ட் 14 இன் துன்பியல் நிகழ்வுகளை உரிய அரசியல், வரலாற்றுப் பின்னணியில் வைக்க முற்பட்டது:

இரண்டாம் அகிலத்தின் அநேக தலைவர்கள் (1889-1914) சோசலிசத்தை காட்டிக் கொடுத்ததானது அகிலத்தின் கருத்தியல் மற்றும் அரசியல் திவால்நிலையை குறிப்பதாக உள்ளது. இந்த உடைவுக்கு முக்கிய காரணமாக இருந்தது உண்மையில் இதில் நீக்கமுற நிறைந்திருந்த குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதமாகும், இதன் முதலாளித்துவ இயல்பு மற்றும் அபாயம் குறித்து அனைத்து நாடுகளின் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகள் நீண்ட காலமாக சுட்டிக் காட்டி வந்திருக்கின்றனர். சோசலிசப் புரட்சியை மறுத்து அதற்குப் பதிலாக பூர்சுவா சீர்திருத்தவாதத்தை பதிலீடு செய்ததன் மூலமாக; வர்க்கப் போராட்டத்தினை, சில தருணங்களில் உள்நாட்டுப் போராக மாறும் அதன் தவிர்க்கவியலா மாற்ற பண்புடன் நிராகரித்து வர்க்க ஒத்துழைப்பை உபதேசித்ததன் மூலமாக; தேசப்பற்று என்ற பெயரில் பூர்சுவா ஆதிக்க பண்பை உபதேசித்தது மற்றும் தொழிலாளர்களுக்கு நாடு கிடையாது என்று நெடுங்காலத்திற்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் நிர்ணயம் செய்யப்பட்ட சோசலிசத்தின் அடிப்படையான உண்மையை புறக்கணித்து அல்லது நிராகரித்து, தந்தை நாட்டை பாதுகாத்ததன் மூலமாக; இராணுவ வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து நாடுகளின் பூர்சுவாக்களுக்கும் எதிராக அனைத்து நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தாலும் தொடுக்கப்படும் ஒரு புரட்சிகர போருக்கான தேவையை அங்கீகரிப்பதற்கு பதிலாக, ஒரு உணர்ச்சிவசப்பட்ட பிலிஸ்தீனிய நிலைப்பாட்டிலிருந்து பாராளுமன்றவாதம் மற்றும் பூர்சுவா சட்டபூர்வத்தன்மையின் அவசியமான பயன்பாட்டில் விருப்பத்தை அமைத்து, நெருக்கடியான சமயங்களில் அமைப்பின் சட்டவிரோத வடிவங்கள் மற்றும் போராட்டம் கட்டாயமானவை என்பதை மறப்பதன் மூலமாக சந்தர்ப்பவாதிகள் நீண்ட காலமாகவே இரண்டாம் அகிலத்தை உடைப்பதற்கு தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தனர். [14]

23. இரண்டாம் அகிலத்தின் அடிபணிவு என்பது புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு கருவியாக அந்த அமைப்பின் அரசியல் மரணத்தையே குறிப்பதாக லெனின் வலியுறுத்தினார். எனவே, ஒரு புதிய மூன்றாம் அகிலத்தை கட்டுவதை தொடர்வது என்பது அவசியமாக இருந்தது. இந்த புதிய அகிலமானது, 1914 ஆகஸ்டில் சர்வதேச தொழிலாளர்கள் இயக்கத்துக்குள்ளே ஏகாதிபத்தியத்தின் ஒரு முகவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான சமரசமற்றதொரு போராட்டத்தை அடிப்படையாக கொள்ளப்பட இருந்தது. தனிநபர் தவறுகள் மற்றும் பலவீனங்களால் விளைந்தது என்பதாக இரண்டாம் அகிலத்தின் உடைவை சாதாரண நிகழ்வுபோல் கருதி அளிக்கப்படும் எந்த விளக்கத்தையும் லெனின் நிராகரித்தார். "எல்லா நிகழ்வுகளிலும் போக்குகளுக்கும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் புதியதொரு காலத்திற்கும் இடையிலான போராட்டம் குறித்த கேள்வியை தனிநபரின் பாத்திரம் குறித்த கேள்வியால் பதிலீடு செய்வது அபத்தமானது ஆகும்"[15] என்று லெனின் எழுதினார். லெனின் எதிர்பார்த்ததைப் போல, மார்க்சிசத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இடையிலுள்ள பிளவானது, ஒவ்வொரு நாட்டிலும் தேசிய சோவினிச மற்றும் சர்வதேசிய போக்குகளுக்கு இடையில் பிரதிபலித்த, தொழிலாளர் இயக்கத்தின் ஒரு அடிப்படை மறுஅணி சேர்தலாக வடிவு கொண்டது. இந்த பிளவில் இருந்து தான் புதிய கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்னர் எழும்.

24. முதலாம் உலகப்போர் முதலாளித்துவ வளர்ச்சியில் ஆழ்ந்த வேர்களை கொண்டிருந்ததுடன், குறிப்பாக அதிகரித்துவரும் உலகப் பொருளாதாரத்திற்கும், முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புக்கும் இடையிலான முரண்பாட்டில் கொண்டிருந்தது. 1915ல் ட்ரொட்ஸ்கி எழுதினார்: தற்போதைய போரானது அடிப்படையில் தேசம் மற்றும் அரசு ஆகியவற்றின் அரசியல் வடிவத்திற்கு எதிராக உற்பத்தி சக்திகளின் கிளர்ச்சியாகும். இதன் பொருள் ஒரு சுதந்திர பொருளாதார அலகாக இருந்த தேசிய அரசின் உடைவாகும்.... 1914 போரானது வரலாற்றில் ஒரு பொருளாதார அமைப்பு தனது சொந்த உள்ளார்ந்த முரண்பாடுகளால் சிதைக்கப்பட்ட ஒரு மாபெரும் சீர்குலைவாகும்.[16] இதன் பொருள், தேசியப் பொருளாதாரங்கள் ஒரு மகத்தான வளர்ச்சியை கண்டதொரு காலத்தில் அபிவிருத்தியுற்றிருந்த பழைய சமூக ஜனநாயகக் கட்சிகள், பல தசாப்தங்களாக தங்களது அரசியல் வாழ்க்கையை நிர்ணயம் செய்த பழக்கமான சூழல்கள் திடீரென நொருங்குவதைக் கண்டு ஆழமாக அதிர்ச்சியுற்றன. புரட்சிகர முன்னோக்கின் முந்தைய தத்துவார்த்த மற்றும் வார்த்தைஜால பாதுகாப்பானது, சீர்திருத்தவாத தன்மை ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு நடைமுறையை கொண்டு கவனமாக சமநிலைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் சூழல்களின் மாற்றங்கள் அரசியல் மற்றும் தத்துவார்த்த இரட்டை கணக்கு வைப்பு முறையை சாத்தியமற்றதாக்கி விட்டது. "இந்த வரலாற்றுச் சரிவில், தேசிய அரசுகள் தங்களுடன் சேர்த்து தேசிய சோசலிசக் கட்சிகளையும் கீழே இழுத்துக் கொண்டு விட்டன... தேசிய அரசுகள் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கு ஒரு தடையாக ஆகிவிட்டதை போலவே, பழைய சோசலிசக் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்துக்கு முக்கிய தடையாக ஆகியிருக்கின்றன".[17]

25. இரண்டாம் அகிலத்துக்குள் சந்தர்ப்பவாதத்தின் மூலம் குறித்து கூடுதலாய் ஆராய்கையில், லெனின் ஏகாதிபத்திய எழுச்சியுடன் தொடர்புபட்ட உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்பிலான அத்தியாவசிய பொருளாதார மற்றும் சமூக-அரசியல் மாற்றங்களையும் பகுப்பாய்வு செய்தார். ஆகஸ்ட் ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியின் நீண்ட கால தத்துவார்த்த தலைவரும் ஆகஸ்ட் 1914 இல் சந்தர்ப்பவாதிகள் வசம் சரணாகதி அடைந்தவருமான கார்ல் காவுட்ஸ்கியின் சூத்திரங்களை விமர்சித்த லெனின், ஏகாதிபத்தியம் வெறுமனே "ஒரு விரும்பித் தேர்ந்த கோட்பாடு" தான் எனும் அவரது கொள்கையையும் நிராகரித்தார். மாறாக, லெனின் விளக்கினார்:

...ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் ஒரு குறிப்பிட்ட வரலாற்று கட்டமாகும். இதன் குறிப்பான குணநலன்கள் முத்தன்மை கொண்டது: ஏகாதிபத்தியம் என்பது, (1) ஏகபோக முதலாளித்துவம்; (2) ஒட்டுண்ணித்தன, அல்லது சீரழியும் முதலாளித்துவம்; (3) மரணப்படுக்கையிலுள்ள முதலாளித்துவம். தடையற்ற போட்டியை ஏகபோகத்தின் மூலம் திணிப்பது என்பது அடிப்படை பொருளாதார அம்சமாகும், இது ஏகாதிபத்தியத்தின் சாராம்சமாகவும் இருக்கிறது.[18]

26. காவுட்ஸ்கியின் "அதீத-ஏகாதிபத்திய" தத்துவத்தையும் லெனின் நிராகரித்தார்; இது வன்முறையற்ற, அமைதியான முறையில், அத்தியாவசியமாக ஏகாதிபத்தியமற்ற வழிமுறையில் உலகப் பொருளாதாரம் மற்றும் முக்கிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் சாத்தியக்கூற்றினை கற்பனை செய்தது:

இந்த விடயத்தின் சாரமானது [லெனின் எழுதினார்] காவுட்ஸ்கி ஏகாதிபத்தியத்தின் அரசியலை அதன் பொருளாதாரக் கூறுகளில் இருந்து பிரிக்கிறார், நாடு பிடிப்பதை நிதி மூலதனம் "விரும்பித் தேரும்" ஒரு கொள்கையாக பேசுகிறார், அதே நிதி மூலதன அடிப்படையிலேயே சாத்தியமானதாக இருப்பதாக அவர் கூறும் மற்றுமொரு பூர்சுவா கொள்கை மூலமாக அதனை எதிர்க்கிறார். அப்படியானால் இது, பொருளாதாரத்தின் ஏகபோகங்கள் அரசியலின் ஏகபோகமற்ற, வன்முறையற்ற, நாடு பிடிப்பற்ற வழிமுறைகளுடன் இணக்கமானதாக இருப்பதாக பொருள் தருகிறது. அப்படியானால் இது, இதே நிதி மூலதன சகாப்தத்தில் பூர்த்தியடைந்துள்ள, மிகப்பெரும் முதலாளித்துவ அரசுகளுக்கிடையிலான போட்டியினால் தற்போதைய விந்தையான வடிவத்தை கொண்டிருக்கும் உலகின் நிலப்பகுதி பிரிப்பானது ஏகாதிபத்தியமற்ற கொள்கையுடன் இணக்கமானது என்று பொருள் தருகிறது. இதன் விளைவு, முதலாளித்துவத்தின் மிகவும் ஆழமான முரண்பாடுகளை, அவற்றின் ஆழத்தை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும் மழுங்கடிப்பதும் தான்; விளைவு, மார்க்சிசத்திற்கு பதிலாக பூர்சுவா சீர்திருத்தவாதம்.[19]


[12]

V.I. Lenin Collected Work, Volume 21 (Moscow: Progress Publishers, 1974), p.16.

[13]

Ibid, p. 16.

[14]

Ibid, pp. 16-17.

[15]

Ibid, p. 250.

[16]

War and the International (Young Socialist Publications, 1971), p. vii-viii.

[17]

Ibid, p. xii-xiii.

[18]

V.I. Lenin Collected Works, Vol. 23, p. 105.

[19]

Ibid, Volume 22, p. 270.