மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கவும், எஞ்சியிருக்கும் மக்களை உள்நாட்டில் இடம்பெயரச் செய்யவும், “உயிர்வாழ்வதற்கு அவசியமான குறைந்தபட்ச கலோரி அளவை” மட்டுமே வழங்கவும் தயார் செய்து வருவதாக மூன்று சர்வதேச வெளியீடுகள் தெரிவிக்கின்றன.
கடந்த திங்களன்று, “காஸாவை ஆக்கிரமிக்கவும், இராணுவ ஆட்சியை மீண்டும் நிலைநாட்டவும், பாலஸ்தீன மக்களை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் இஸ்ரேல் தயாராகி வருவதாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ் வெளியிட்ட அறிக்கையை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட தேசிய பொது வானொலி மற்றும் இங்கிலாந்தின் பைனான்சியல் டைம்ஸ் ஆகிய இரண்டும் உறுதிப்படுத்தின.
கடந்த செவ்வாயன்று, ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 400 பேர் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கிய காஸா மீதான இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தற்போதைய தாக்குதல், காஸா பகுதியை முழுமையாக இராணுவம் ஆக்கிரமிப்பதை இலக்காகக் கொண்டது என்று இந்த வெளியீடுகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய இராணுவம் நாளுக்கு நாள் அது ஆக்கிரமித்துள்ள பகுதிகளை விரிவுபடுத்தி, பாலஸ்தீன மக்களில் மிகப் பெரிய பகுதியை உள்நாட்டில் இடம்பெயரச் செய்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கைகளில், காஸாவை இனரீதியாக சுத்திகரித்து அதன் பிரதேசத்தை இணைப்பதற்கான திட்டத்தை, கடந்த பிப்ரவரியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் வகுக்கப்பட்டு இஸ்ரேலிய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்பாக, இந்த செய்தி வெளியீடுகள் எதுவும் குறிப்பிடவில்லை.
கடந்த ஞாயிறன்று, இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் அறிவிக்கையில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை காஸா மீதான இனச்சுத்திகரிப்பை மேற்பார்வையிட ஒரு அலுவலகத்தை ஸ்தாபிக்க உத்தியோகபூர்வமாக வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். இந்த அலுவலகம் “மூன்றாம் நாடுகளுக்கு இடம்பெயர ஆர்வமுள்ள காஸா குடியிருப்பாளர்களுக்கான தன்னார்வ குடியேற்ற பணியகமாக” இருக்கும் என்று காட்ஸ் கூறினார்.
பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வு “தன்னார்வமாக” இருக்கும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினாலும், இந்தப் பாரிய இடமாற்ற நடவடிக்கைக்கு நேரடி இராணுவ நிர்ப்பந்தம் தேவைப்படும் என்பதே உண்மை. எனவே, காஸாவில் முழுமையான இராணுவ ஆக்கிரமிப்பிற்கான திட்டம் இனச்சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒரு அடிப்படை முன்நிபந்தனையாக இருக்கும்.
கடந்த வெள்ளிக்கிழமை ஹாரெட்சில் வெளியான அறிக்கை, “காஸாவை ஆக்கிரமித்து முழு இஸ்ரேலிய கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க ஒரு பெரியளவிலான நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக” குற்றம் சாட்டியது.
இந்த அறிக்கையை உறுதிப்படுத்தும் NPR தேசிய பொது வானொலி திங்களன்று வெளியிட்ட செய்தி:
இஸ்ரேலிய இராணுவம் ஒரு சில மாதங்களுக்குள் காஸா பிராந்தியத்தை முழுமையாக ஆக்கிரமித்து அங்கு இராணுவ ஆட்சியை நிறுவ ஒரு பெரிய தரைவழி படையெடுப்பிற்கான திட்டங்களை வரைந்துள்ளது.
காஸாவின் 2.2 மில்லியன் பாலஸ்தீனியர்களை, தற்போது அப்பாவி பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதை விட சிறிய “மனிதாபிமான மண்டலத்திற்குள்” செல்ல இஸ்ரேல் கட்டளையிடும். அங்கு மக்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச கலோரி அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உணவு விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை இராணுவம் ஆராய்ந்து வருகிறது.
ஒரு தனிக் கட்டுரையில், பைனான்சியல் டைம்ஸ் பின்வருமாறு தெரிவித்தது:
... இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸை மீண்டும் தோற்கடித்து அடிபணியச் செய்ய பல போர் பிரிவுகளைத் திரட்டி, அந்தப் பகுதியின் பெரிய பகுதிகளைக் கட்டுப்படுத்தும். மேலும், அந்தப் பிரதேசத்தின் 2.2 மில்லியன் மக்களை மத்தியதரைக் கடலோரப் பகுதியில் உள்ள ஒரு சிறிய மனிதாபிமான மண்டலம் என்றழைக்கப்படும் ஒரு சிறிய பகுதிக்குள் செல்வதற்கு கட்டாயப்படுத்தும்.
“இஸ்ரேலிய இராணுவம் பின்னர் காஸாவை நிர்வகிக்கும்”, மேலும் “இதுபோன்ற ஒரு திட்டம் மில்லியன் கணக்கான பாலஸ்தீனிய பொதுமக்களை வேரோடு பிடுங்கி, அவர்களை இன்னும் சிறிய அளவிலான தரிசு நிலத்திற்குள் அடைத்துவிடும்” என்பதையும் டைம்ஸ் சேர்த்துக் கொண்டது.
பைனான்சியல் டைம்ஸ் மேலும் தெரிவிக்கையில்:
இந்த விவாதங்களை நன்கு அறிந்தவர்களில் ஒருவர், அனைத்து மனிதாபிமான உதவிகளையும் விநியோகிக்கும் பொறுப்பை இஸ்ரேல் கையகப்படுத்த முடியும் என்றும், ஒவ்வொரு பாலஸ்தீனியருக்கும் எத்தனை கலோரிகள் தேவைப்படும் என்பதை சமீபத்தில் மதிப்பிட்டதாகவும் கூறினார்.
இஸ்ரேலிய இராணுவம் “போர், வெற்றி மற்றும் நிர்வாகம்” சம்பந்தப்பட்ட பல மாத நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்து வருகிறது என்று அந்த அதிகாரி பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரில், ஜேர்மனியால் ஐரோப்பாவின் யூதர்கள் திட்டமிட்டு நிர்மூலமாக்கப்பட்ட யூத இனப்படுகொலையின் போது, நாஜி அதிகாரிகள் ஐரோப்பாவின் யூதர்களை அவர்களின் சுற்றுப்புறங்களிலிருந்து அகற்றி, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வதை முகாம்களுக்கு கொண்டு செல்வதற்கான தயாரிப்பாக, அவர்களை கெட்டோ சேரிகளில் குவித்தனர்.
நாஜி ஆக்கிரமித்த போலந்தில் உள்ள வார்சோ கெட்டோ சேரிகளில் உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்தியதன் விளைவாக, அதன் உச்சத்தில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். போர் உக்கிரம் அடைந்தபோது, இடமாற்றம் மற்றும் “மெதுவான மரணம்” என்பதிலிருந்து மரண முகாம்களில் தீவிரமாக அழித்தொழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
”மனிதாபிமான மண்டலங்கள்” என்றழைக்கப்படுவனவற்றில் காஸா மக்கள் குவிந்திருப்பதும், அவர்களின் உணவு நுகர்வைக் கடுமையாக கட்டுப்படுத்துவதும், கடந்த பெப்ரவரியில் ட்ரம்ப் முன்மொழிந்ததைப் போல, காஸாவில் இருந்து அவர்களை இடம்பெயர செய்வதற்கும், காஸா பகுதியை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கும், இணைப்பதற்கும் இன்றியமையாத தயாரிப்பாக இருக்கும்.
இந்த திட்டம் தொடருகையில், காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ தாக்குதலும் மேற்குக் கரையில் அதன் பயங்கர ஆட்சியும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் 65 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதையொட்டி கடந்த வாரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 730 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த திங்களன்று, இஸ்ரேலிய இராணுவம் ஒரு தரைவழித் தாக்குதலுக்கான தயாரிப்பில் வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இருந்த மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர வைத்தது. “ஜபாலியா பகுதியில் உள்ள அனைவருக்கும், இது ஒரு தாக்குதலுக்கு முன் ஒரு ஆரம்ப எச்சரிக்கையாகும்..., உடனடியாக தெரிந்த தங்குமிடங்களை நோக்கி தெற்கு நோக்கி செல்லுங்கள்” என்று இராணுவம் கூறியது.
அதே நாளன்று, இரண்டு பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அல் ஜசீரா முபாஷரின் நிருபர் ஹோசாம் ஷபாத், மத்திய காஸாவில் டெய்ர் எல்-பலாவில் இலக்கு வைக்கப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனம் டுடே பத்திரிகையாளர் முகம்மது மன்சூரை, கான் யூனிஸில் ஒரு தனித் தாக்குதலில் கொன்றது. இந்தக் கொலைகளுடன், அக்டோபர் 2023 முதல் காஸாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை 208 ஆகக் கொண்டு வந்துள்ளன.
பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷபாத் மற்றும் மன்சூர் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒரு பத்திரிகையாளரை, பொதுமக்களை வேண்டுமென்றே இலக்கு வைத்து கொலை செய்வது என்பது ஒரு போர்க்குற்றம்” என்று அந்த அமைப்பின் தலைமை நிர்வாகி ஜோடி கின்ஸ்பெர்க் கூறினார். “பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருபோதும் இலக்கு வைக்கப்படக்கூடாது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் ஷபாத்தின் சகாக்கள் அவரது கடைசி வார்த்தைகளைப் பின்வருமாறு பகிர்ந்து கொண்டனர்:
நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், நான் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்டேன் -பெரும்பாலும் இலக்கு வைக்கப்பட்டேன்- என்று அர்த்தமாகும்.
ஷபாத் மேலும் கூறியதாவது:
வடக்கு காஸாவில் நடந்த கொடூரங்களை நிமிடத்திற்கு நிமிடம் ஆவணப்படுத்தினேன். அவர்கள் புதைக்க முயன்ற உண்மையை உலகுக்குக் காட்ட தீர்மானித்தேன். நான் நடைபாதைகளில், பள்ளிகளில், கூடாரங்களில் - என்னால் முடிந்த எல்லா இடங்களிலும் தூங்கினேன். இது, ஒவ்வொரு நாளும் உயிர்வாழ்வதற்கான போராட்டமாக இருந்தது. நான் பல மாதங்களாக பசியைத் தாங்கினேன். ஆனாலும், நான் என் மக்களின் பக்கத்தை விட்டு விலகவில்லை.
ஐக்கிய நாடுகள் சபை, தனது ஊழியர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், காஸாவில் உள்ள தனது சர்வதேச ஊழியர்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்கு குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை திங்களன்று கூறியது. அக்டோபர் 7, 2023 முதல் குறைந்தது 250 ஐ.நா ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மனிதாபிமான தேவைகள் அதிகரித்து வரும் நிலையிலும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த நமது கவலை தீவிரமடைந்துள்ள நிலையிலும், காஸாவில் எமது அமைப்பின் தடத்தை குறைப்பதற்கான கடினமான முடிவை செயலாளர் நாயகம் எடுத்துள்ளார்.
கடந்த வாரம் ஒரு இஸ்ரேலிய டாங்கி காஸாவில் ஐ.நா. வளாகத்தை தாக்கியதில் 51 வயதான மரின் வலேவ் மரினோவ் என்ற ஊழியர் கொல்லப்பட்டார்; இவர் ஐ.நா. திட்டப் பணிகளுக்கான அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) கடந்த வாரத்தில் காஸாவில் 124,000 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அறிவித்தது. அது பின்வருமாறு எழுதியது:
தங்குமிடம், பாதுகாப்பு, எங்கும் செல்ல இடமில்லாமல் குடும்பங்கள் தங்களிடம் உள்ள அற்ப சொற்ப பொருட்களையே சுமந்து செல்கின்றனர். இஸ்ரேலிய அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் நிறுத்திவிட்டனர். உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இது ஒரு மனிதாபிமான பேரழிவு. முற்றுகை முடிவுக்கு வர வேண்டும்.
இதற்கிடையில், மேற்குக் கரையில் இஸ்ரேலின் பயங்கரவாத ஆட்சி தொடர்கிறது. திங்களன்று, ஆஸ்கார் விருது வென்ற No Other Land என்ற ஆவணப்படத்தின் பாலஸ்தீனிய இணை இயக்குனரான ஹம்டன் பல்லால் இஸ்ரேலிய குடியேறிகளால் தாக்கப்பட்டு, இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டார். மேற்குக் கரை கிராமமான சூசியாவில் உள்ள பலாலின் வீட்டை குடியேறிகள் குழு ஒன்று தாக்கியதாக இந்தப் ஆவணப்படத்தின் இணை இயக்குனர் பாசெல் அட்ரா கூறினார். இஸ்ரேலிய இராணுவக் கண்காணிப்பின் கீழ் இரண்டு டசின் குடியேறிகள், சிலர் ஆயுதம் ஏந்தியபடி, இந்த தாக்குதலை நடத்தினர், பின்னர் பல்லாலைக் கைது செய்யத் தொடங்கினர் என்று அட்ரா கூறினார்.
இதுகுறித்து இஸ்ரேலிய பத்திரிகையாளர் யுவால் ஆபிரகாம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
குடியேறிகளின் ஒரு குழு ஒன்று, எங்கள் படத்தின் இணை இயக்குனர் ஹம்டானை அடித்துக்கொல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. அவர்கள் அவரை அடித்தனர், அவரது தலை மற்றும் வயிற்றில் காயங்கள் ஏற்பட்டு, இரத்தப்போக்கு ஏற்பட்டது.
அவர் மேலும் கூறியதாவது:
ஹம்டானை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய படையினர் முற்றுகையிட்டு அவரை பிடித்துச் சென்றனர். அதன்பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.