பேரழிவுக்குள்ளான வடக்கு பகுதிக்கு திரும்புவதற்கு காஸா மக்களுக்கு அனுமதி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் ஜனவரி 27, 2025 அன்று அழிக்கப்பட்ட வடக்கு காஸா பகுதிக்குத் திரும்புகிறார்கள் [AP Photo/Mohammad Abu Samra]

இஸ்ரேலின் ஓராண்டுக்கும் மேலான இனப்படுகொலை முற்றுகை மற்றும் பேரழிவுகரமான தாக்குதலுக்குப் பிறகு, கிட்டத்தட்ட மொத்த அழிவில் இடிந்து கிடக்கும் வடக்கு காஸா பகுதியில் உள்ள நகரங்களுக்கு லட்சக்கணக்கான காஸா மக்கள் திரும்பி வருகின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பேரழிவுக் காட்சிகளுடன் மட்டுமே காஸாவிலுள்ள படங்களை ஒப்பிட முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 92 சதவீத குடியிருப்புகள் காஸாவில் அழிக்கப்பட்டுள்ளன (160,000) அல்லது கடுமையாக அல்லது பகுதியளவு சேதமடைந்துள்ளன (276,000). மொத்த கட்டிடங்களில் அறுபது சதவீதம் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன—இது வடக்கு காஸாவில் 70 சதவீதமாகவும், காஸா நகரில் 74 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது— மற்றும் சாலை வலையமைப்பில் ஏற்பட்ட அழிவானது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மிகவும் நெரிசலான தெற்கிலிருந்து விரக்தியுடன் திரும்பும் குடும்பங்கள் பெரும்பாலும் கால்நடையாக எடுத்துச் செல்லக்கூடியவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு பயணம் செய்கிறார்கள். மேலும், ஒரு காலத்தில் அவர்களின் வீடுகள் இருந்த இடத்தில், இடிபாடுகளையும் குண்டுகளின் துளைகளையும் மட்டுமே அவர்கள் காண்கிறார்கள்.

தனது கணவரிடம் திரும்பிய லுப்னர் நாசர் என்பவர் பிபிசியிடம், “நாம் மீண்டும் இணைவதற்கான அரவணைப்பு கசப்பான யதார்த்தத்தால் மறைக்கப்பட்டுள்ளது - எங்களுக்கு இனி வீடு இல்லை, எனவே நாங்கள் தெற்கில் இருந்த ஒரு கூடாரத்திலிருந்து வடக்கில் உள்ள ஒரு கூடாரத்திற்கு குடிபெயர்ந்துள்ளோம்” என்று கூறினார்.

10 குழந்தைகளின் தந்தையான முகமது பாதர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், “நாங்கள் திரும்பி வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன, குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை, குளிரிலிருந்து எங்கள் குழந்தைகளை சூடாக வைத்திருக்க எங்களுக்கு போர்வைகள் கிடைக்கவில்லை. இரவு முழுவதும் நெருப்பையே நம்பி இருக்கிறோம். நெருப்புக்கு கொஞ்சம் விறகு வேண்டும், பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம், இது நோய்களை ஏற்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.

அவரது மனைவி தெரிவிக்கையில், “எதுவும் மிச்சமில்லை, நீங்கள் தெருக்களில் நடக்க முடியாது. வீடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக இடிந்து விழுந்து கிடக்கின்றன. நீங்கள் தொலைந்து போகிறீர்கள், இது உங்கள் வீடா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. இறந்த உடல்களிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது, மற்றும் இறந்த தியாகிகள் தெருக்களில் உள்ளனர்” என்றார்.

குண்டு வீச்சில் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவையும் வேகத்தையும் சுருக்கமாகக் கூற முயற்சிக்கும் ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் தலைவரான அச்சிம் ஸ்டெய்னர், AFP இடம் “15 மாதங்களுக்கும் மேலாக இடம்பெற்ற இந்த மோதலில் சுமார் 60 ஆண்டுகால வளர்ச்சி இழக்கப்பட்டுள்ளதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்” என்று கூறினார்.

“காஸா பகுதியில் வசிக்கும் இரண்டு மில்லியன் மக்கள் தங்கள் தங்குமிடத்தை மட்டும் இழந்திருக்கவில்லை: அவர்கள், பொது உள்கட்டமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள், நன்னீர் விநியோக அமைப்புகள், பொது கழிவு மேலாண்மை ஆகியவற்றையும் இழந்துள்ளனர். இந்த அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவை கூறுகள் அனைத்தும் காஸாவில் கிடையாது...

“கிட்டத்தட்ட ஒவ்வொரு பாடசாலையும் ஒவ்வொரு மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. இது ஒரு அசாதாரணமான சரீர அழிவாகும்” என்று ஸ்டெய்னர் தெரிவித்தார்.

ஸ்டெய்னர் சுட்டிக்காட்டியது போல, “மனித விரக்தி என்பது வெறுமனே புள்ளிவிவரங்களைப் பற்றியது மட்டுமல்ல.” ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

காஸாவின் பாதிக்கும் குறைவான மருத்துவமனைகளே பகுதியளவு செயல்படுகின்றன. ஆரம்ப சுகாதார மையங்களில் 40 சதவீதத்திற்கும் குறைவானவை (138 இல் ஆறு முழுமையாக செயல்படுகின்றன, 46 பகுதியளவு செயல்படுகின்றன) மற்றும் ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்தின் (UNRWA) சுகாதார மையங்களில் கால் பங்கிற்கும் குறைவானவைகளே செயல்படுகின்றன.

காஸாவில் நீர் வழங்கல் அக்டோபர் 2023 க்கு முன்னர் இருந்ததை விட கால் பங்கிற்கும் குறைவாகவே உள்ளது. மேலும் சேதமடைந்த நீர் விநியோக வலையமைப்புகள் காரணமாக நீர் இழப்பு விகிதம் 70 சதவீதமாக இருக்கிறது. காஸாவின் விவசாயக் கிணறுகள் மற்றும் பசுமை இல்லங்களில் கிட்டத்தட்ட பாதி சேதமடைந்துள்ளன. இது, அதன் விளைநிலங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவையாகும். பாதிக்கும் மேற்பட்ட ஆடுகளும், அதன் கால்நடைகளில் 95 சதவீதமும் அழிந்துள்ளன.

88 சதவீத பள்ளி கட்டிடங்கள் முழுமையாகவோ அல்லது பெரிய அளவில் மறுசீரமைப்பு தேவைப்படுவதைப் பற்றியோ அல்லது அதன் 51 அழிக்கப்பட்ட மற்றும் 57 சேதமடைந்த பல்கலைக்கழக கட்டிடங்களைப் பற்றியோ பெரும்பாலான மக்கள் கவலைப்படத் தொடங்குவதற்கு சிறிது காலம் ஆகும்.

இவற்றில் எஞ்சியிருப்பவை ஒரு சமூகத்தை நிலைநிறுத்துவதற்கு திறனற்று உள்ளன. நோய் மற்றும் ஆரம்பகால மரண விகிதங்கள் விரைவில் நிரூபிக்கப்படும். ஏற்கனவே, மருத்துவ காரணங்களுக்காக காஸாவில் இருந்து 12,000 நோயாளிகள் வெளியே மாற்றப்பட வேண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 15 மாதங்களில் இஸ்ரேலிய முற்றுகையின் சுவர்கள் வழியாக 500 க்கும் குறைவானவர்களே அனுமதிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை தேவைப்படுகிறது.

மீண்டும் ஐ.நா.வின் கூற்றுப்படி, ஒரு மில்லியன் மக்கள் (காஸாவின் மக்கள் தொகையில் 76 சதவீதம்) எலிகள் போன்ற கொறித்துண்ணிகள், பூச்சிகள், திடக்கழிவுகள் (54 சதவீதம்) மற்றும் மனித கழிவுகள் (34 சதவீதம்) போன்ற சுகாதார அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படுகின்றனர்.

உதவி, நிவாரணம் மற்றும் உதவிக்கான சர்வதேச வலையமைப்பின் நிறுவனர் அர்வா டாமன், அல் ஜசீராவிடம் கள நிலைமைகளைப் பற்றி விவரித்தார்.

“சில நூறு கூடாரங்கள் மட்டுமே வடக்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளன, அங்கு இந்தக் குடும்பங்கள் அனைவரும் வருகிறார்கள்... எனவே, அவர்கள் தங்குமிடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் கிடைப்பது மிகக் குறைவு என்ற நிலையிலும் வடக்கு நோக்கி வருகிறார்கள்.

“பாரியளவில் எரிபொருள் பற்றாக்குறை உள்ளது. மேலும், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் உணவு விநியோக நிலையங்களுக்குச் செல்வதில் சிக்கல் உள்ளது.

“குடும்பங்களிடம் இருந்து நாங்கள் நிறைய கேள்விப்படுவது என்னவென்றால், உணவு மற்றும் சுத்தமான தண்ணீரை அணுகுவதற்கு அவர்கள் மணிக்கணக்கில் நடக்க வேண்டியிருக்கும். இது மிகவும் கடினம் - மருத்துவம் மற்றும் பிற வசதிகளைக் குறிப்பிட வேண்டியதே இல்லை” என்று அர்வா டாமன் தெரிவித்தார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

காஸா ஒரு பேரழிவு இடம்பெற்ற பகுதி மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய குற்றங்கள் இழைக்கப்பட்ட களமாகும். ஆரம்பத்தில் இருந்தே, இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீனியர்களை இனரீதியாக சுத்திகரிக்கும் அதன் இலக்கில் தெளிவாக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், இந்த இலக்கை அடைய சுமார் 75,000 டன் TNT வெடிமருந்துகளை கொண்ட குண்டுகளை 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட காஸா மீது இஸ்ரேல் வீசியது.

இது ஹிரோஷிமாவில் பயன்படுத்தப்பட்ட ஐந்து வகையான அணு குண்டுகளை ஜப்பானிய நகரத்தின் பாதிக்கும் குறைவான பரப்பளவில் வீசுவதற்குச் சமமாகும்.

அமெரிக்காவின் பாசிச ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக அறிவித்து, இஸ்ரேலிய அதிதீவிர வலதுசாரிகளால் உற்சாகப்படுத்தப்பட்ட திட்டத்தின் இரண்டாம் கட்டம் இப்போது தெளிவான பார்வைக்கு வந்து கொண்டிருக்கிறது.

சனிக்கிழமை, காஸா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் “அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்” என்று கூறியதுடன், பாலஸ்தீனியர்களை ஜோர்டான் மற்றும் எகிப்துக்கு நகர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அவ்விரு நாடுகளின் அரசாங்கங்களும் இந்த ஆலோசனையை விரைவாக எதிர்த்தன. ஏனெனில், அத்தகைய கொள்கை ஒரு சமூக வெடிப்பைத் தூண்டும் என்பதையும், அது அவர்களின் உயிர்வாழ்வையே அச்சுறுத்தும் என்பதையும் நன்கு அறிந்திருந்தன.

அமெரிக்க ஜனாதிபதி இந்த வாரம் மீண்டும் கூறுகையில், “நான் கொஞ்சம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் அவர்களுக்கு [எகிப்திய ஜனாதிபதி, அப்தெல்-ஃபத்தா எல்-சிசி] நிறைய உதவியுள்ளோம், அவர் எங்களுக்கு உதவுவார் என்று நான் நம்புகிறேன். அவர் என்னுடைய நண்பர். அவர் ... ஒரு கடினமான பகுதியில் இருக்கிறார். ஆனால் அவர் அதைச் செய்வார் என்று நான் நினைக்கிறேன், ஜோர்டான் மன்னரும் அதையே செய்வார் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், “அமெரிக்க ஜனாதிபதி இறுதியாக யதார்த்தத்தை ஒப்புக்கொள்கிறார். நீண்டகால அடிப்படையில், குடியேற்றத்தை ஊக்குவிப்பதே ஒரே தீர்வு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை... ஒரு செயல்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்து, ஜனாதிபதி ட்ரம்பின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக நான் பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்” என்று உற்சாகமாக கூறினார்.

மேலும், “இந்த திட்டத்திற்கு எகிப்து மற்றும் ஜோர்டானின் பலவீனமான எதிர்ப்பு பற்றி உற்சாகமடைய ஒன்றுமில்லை. கொலம்பியாவின் எதிர்ப்பையும் மீறி புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ட்ரம்ப் எவ்வாறு தனது விருப்பத்தை கொலம்பியா மீது திணித்தார் என்பதை நேற்று நாம் பார்த்தோம். அவர் விரும்பும்போது, அது நடக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, சுமார் 100,000 காஸா மக்கள் (போரின் ஆரம்ப கட்டங்களில் சாத்தியமானபோது) எகிப்துடனான எல்லையைக் கடப்பதற்கு பணம் செலுத்துவதற்காக அடிக்கடி தங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று வெளியேறியுள்ளனர். ஹலா ஆலோசனை மற்றும் சுற்றுலா சேவைகள் நிறுவனம், (எகிப்திய ஜனாதிபதி எல்-சிசியின் கூட்டாளியான இப்ராஹிம் அலர்ஜானிக்கு சொந்தமானது) எல்லைக் கடவையில் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளதோடு, கடந்த மே மாதம் இஸ்ரேல் ரஃபாவை ஆக்கிரமிக்கும் வரை ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் டாலர்களை சம்பாதித்தது.

எகிப்தில் உள்ள 100,000 அகதிகள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் வேலையில்லாமல் இருப்பதுடன், கல்வி, வங்கி மற்றும் மருத்துவ உதவி அமைப்புகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். பாலஸ்தீனிய அகதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தை விட UNRWA ஆல் உதவி செய்யப்படுகிறது. ஆனால், UNRWA க்கு எகிப்தில் உத்தியோகபூர்வ ஆணை இல்லை, இதனால் காஸா மக்களுக்கு எந்த உதவி ஆதரவும் இல்லை.

மீண்டும் இராணுவத் தாக்குதல் தொடங்கப்படும் என்ற அச்சுறுத்தலின் கீழ், காஸாவில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் மக்களை மொத்தமாக வெளியேற்றுவதன் மூலம் இந்த செயல்முறையை நிறைவு செய்வதற்கான திட்டங்கள் வடிவம் பெறுகின்றன.

இஸ்ரேலிய பத்திரிகையான +972 இன் ஆசிரியர் பென் ரீஃப் செவ்வாயன்று கார்டியனில் பின்வருமாறு எச்சரித்தார்:

ஜனவரி 18 அன்று, இஸ்ரேலிய அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதற்கு முன்பே, அதை முழுமையாக அடைவதற்கான நெதன்யாகுவின் உறுதிப்பாட்டின் மீது சந்தேகத்தை எழுப்பும் தகவல்கள் வெளிவந்தன. போர் நிறுத்தத்தின் மூன்று கட்டங்களில் முதல் கட்டம் காலாவதியான பிறகு, மீண்டும் சண்டையைத் தொடங்குமாறு இஸ்ரேலின் அதிதீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் விடுத்த கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. நெதன்யாகு இதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதைத் தவிர்த்து வந்தாலும், பேச்சுவார்த்தையில் இருந்த வட்டாரங்களும், நெதன்யாகுவுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களும், இந்த ஒப்பந்தம் அதன் இரண்டாம் கட்டத்தை எட்டும் வாய்ப்புகள் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருப்பதாக வலியுறுத்தினர்.

இஸ்ரேலிய துருப்புக்கள் ஏற்கனவே லெபனானில் போர் நிறுத்த விதிகளை மீறியுள்ளன. கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலிய துருப்புக்கள் டாங்கிகள் மற்றும் ஸ்னைப்பர் தாக்குதல்களை மேற்கொண்டதில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. பாலஸ்தீனிய செம்பிறைச் சங்கம், அதன் ஆம்புலன்ஸ்களில் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது.