முன்னோக்கு

லொஸ் ஏஞ்சல்ஸ் தீ: என்ன செய்ய வேண்டும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

லொஸ் ஏஞ்சல்ஸின் பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, வரிசையாக எரிந்து தரைமட்டமாகிய வீடுகள், ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை [AP Photo/Eric Thayer]

கடந்த வாரம் முதல் லொஸ் ஏஞ்சல்ஸை நாசமாக்கி வரும் தீ, மிகப்பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.

அல்டடேனா மற்றும் பசடேனாவை தாக்கியுள்ள ஈட்டன் தீ தற்போது 15 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாலிசேட்ஸ் தீ 11 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கூடுதலாக பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது பேரழிவை மேலும் மோசமாக்கும் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதை எழுதிக் கொண்டிருக்கையில், 10 பேர் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை துன்பியலான முறையில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், மனித எச்சங்களைத் தேட 10,000 கட்டமைப்புகள் வரை தேவைப்படலாம் என்று லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட தீயணைப்பு படைத் தலைவர் அந்தோணி மர்ரோன் எச்சரிக்கை விடுத்தார்.

அத்துடன், 9,000 க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 180,000 குடியிருப்பாளர்கள் கட்டாய வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் உள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மின்சார வசதியை இழந்துள்ளனர். இந்த தீயினால் எண்ணற்ற தொழிலாளர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் சூழ்ந்துள்ள நச்சுப் புகையினால் ஏற்பட்டுள்ள ஆபத்தான காற்றிலிருந்து பாதுகாக்க முடியாத பல்லாயிரக்கணக்கான வீடற்ற மக்கள் உட்பட, 17 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சுகாதார விஞ்ஞானி கார்லோஸ் கோல்ட் ராய்ட்டர்ஸிடம், “கடந்த சில நாட்களாக லொஸ் ஏஞ்சல்ஸில் நாம் பார்த்துவரும் காட்டுத்தீ புகையின் அளவுகள் தினசரி இறப்பு விகிதத்தில் 5-15 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பெரிய பேரழிவையும் போலவே, இந்த தீ பிளம்புகளும் சமூகத்தில் உள்ள வர்க்கப் பிளவுகளை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கத்ரீனா சூறாவளி, நடந்து வரும் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் எண்ணற்ற பிற நெருக்கடிகளுக்கு ஆளும் வர்க்கத்தின் பதிலை வரையறுத்த அதே இரக்கமற்ற அலட்சியம் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் மாநில மட்டங்களில், கலிபோர்னிய அரசியலைக் கட்டுப்படுத்தும் ஜனநாயகக் கட்சிதான் இந்தப் பேரழிவிற்கு நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் சமீபத்தில் தீயணைப்புத் துறைக்கு இன்னும் 49 மில்லியன் டாலர் வெட்டுக்களை முன்மொழிந்தார் என்று கசியவிடப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதில், முந்தைய பட்ஜெட்டில் குறைக்கப்பட்ட 17.6 மில்லியனை டாலர்களும் அடக்கமாகும். தீயணைப்பு பணியின் ஒரு கணிசமான பகுதி சிறைக் கைதிகளால் செய்யப்படுகிறது. நவீன கால அடிமைத்தனத்திற்கு ஒத்த நிலைமைகளின் கீழ், தங்கள் உயிரைப் பணயம் வைக்க அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு சில சில்லறைகளே வழங்கப்படுகின்றன.

மத்தியிலுள்ள கூட்டாட்சி மட்டத்தில், பைடென் நிர்வாகம் குறைந்தபட்ச உதவியையே இதற்கு வழங்கியுள்ளது. வெள்ளை மாளிகை தீயை எதிர்கொள்ளும் அவசரகால நடவடிக்கைக்கான செலவுகளை செலுத்துவதாக உறுதியளித்துள்ளது. ஆனால் இது இடிபாடுகளை அகற்றுதல், தற்காலிக தங்குமிடங்களை அமைத்தல் மற்றும் முதலுதவி செய்பவர்களுக்கு பணம் கொடுத்தல் போன்ற செலவுகளை மட்டுமே ஈடுகட்டும். தற்போது 150 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ள தீயினால் ஏற்பட்டுள்ள பாரிய சேதத்தை நிவர்த்தி செய்ய இது எதையும் செய்யப் போவதில்லை.

வோல் ஸ்ட்ரீட் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, வங்கிப் பிணையெடுப்புகளுக்காக ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் விரைவாக ஒதுக்கப்படுகின்றன. ஆனால், தொழிலாள வர்க்க மற்றும் மத்தியதர வர்க்க குடும்பங்கள் பேரழிவுகளால் பாதிக்கப்படும்போது, ​​அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள விடப்படுகிறார்கள், அல்லது காப்பீட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களால் சுரண்டப்படுகிறார்கள்.

மிகச்சிறந்த சிறந்த வழக்கறிஞர்களை அணுகக்கூடிய பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் முழு இழப்பீட்டைப் பெற மாட்டார்கள். அதே நேரத்தில் உழைக்கும் மக்கள், அவர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு இருந்தாலும், உதவி பெறுவதற்கு முடிவில்லா சிக்கலான, நியாயமற்ற வழிவகைகளை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கனவே, பலர் நிதி திரட்டுவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் சமூக ஊடகங்களை நோக்கி திரும்பியுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி, எல்லா சூழ்நிலைகளிலும் பெரும் பணக்காரர்களின் செல்வம் மற்றும் இலாபங்களை விட ஒரேயொரு கோட்பாடு (மனிதத் தேவை) முன்னுரிமை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அதற்கு பின்வரும் நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்:

அவசரகால தங்குமிடங்களை உருவாக்கு! பயன்படுத்தப்படாத சொத்துக்களை கையகப்படுத்த சிறந்த இடங்களை பயன்படுத்து!

கட்டாய வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் 180,000 குடியிருப்பாளர்களையும் மற்றும் வீடற்ற அனைத்து மக்களையும் தங்க வைக்க அவசரகால தங்குமிடங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். பெருநிறுவன திட்டங்களுக்காக உழைக்கும் வர்க்க குடும்பங்களை இடம்பெயர்க்க அடிக்கடி பயன்படுத்தப்படும் தனியார் சொத்தை பொதுப் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் அதிகாரம், சமூகத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க திருப்பி விடப்பட வேண்டும்.

ACCE நிறுவனத்தின் 2020 அறிக்கையின்படி, லொஸ் ஏஞ்சல்ஸில் 93,000 க்கும் மேற்பட்ட காலியாக உள்ள வீட்டுவசதி அலகுகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி வேண்டுமென்றே சந்தையில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் காலியாக உள்ளன. அவை உரிமையாளரின் இரண்டாவது வீடுகளாக அல்லது ஊக முதலீடுகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், பெருநிறுவன நிறுவனங்கள் 22 சதுர மைல்களுக்கும் மேலான காலியான இடங்களை இலாப நோக்கத்துக்காக வைத்திருக்கின்றன.

பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு வருமான பாதுகாப்பை வழங்கி, அத்தியாவசியமற்ற பணியிடங்கள் மற்றும் பாடசாலைகளை மூடு!

லொஸ் ஏஞ்சல்ஸ் தீப் பிளம்புகளால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தொழிலாளர்களும் இழந்த ஊதியங்களுக்கு முழு வருமானப் பாதுகாப்பைப் பெற வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசியமற்ற பணியிடங்கள் மற்றும் நேரில் கல்வி கற்கும் இடங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் வரை உடனடியாக மூடப்பட வேண்டும். இதில் UCLA, போன்ற நிறுவனங்களும் அடங்கும். நச்சுத்தன்மை வாய்ந்த காற்றின் தரம் மற்றும் வெளியேற்ற உத்தரவுகள் இருந்தபோதிலும் UCLA நிறுவனம் அதன் வளாகத்தை ஆத்திரமூட்டும் வகையில் திறந்து வைத்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பரவலான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்களின் வேலைவாய்ப்பு அல்லது குடியேற்ற நிலையைப் பொருட்படுத்தாமல், பணிநிறுத்தங்களின் போது இழந்த ஊதியங்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

தீ பரவுவதைத் தடுக்க தேசிய அவசரகால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இந்த காட்டுத்தீ, அத்தியாவசிய சேவைகளின், குறிப்பாக தீயணைப்பு சேவைகளுக்கான நீண்டகால நிதிப் பற்றாக்குறையை அம்பலப்படுத்துகிறது. அதிகரித்து வரும் காட்டுத்தீ அச்சுறுத்தல் குறித்து பல தசாப்தங்களாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், இந்த அளவிலான பேரழிவுகளை எதிர்த்துப் போராடுவதற்கு, உள்ளூர் நிறுவனங்கள் தயார் நிலையில் வைக்கப்படவில்லை. தீயை அணைக்கப் போராட, மாநிலம் முழுவதிலும் மற்றும் நாடு முழுவதிலும் பாரியளவில் ஆதாரவளங்கள் திரட்டப்பட வேண்டும்.

தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களின் அனைத்து இழப்புகளையும் முழுமையாக ஈடுசெய்ய வேண்டும்

மீட்பு நடவடிக்கைக்கான பாரிய செலவுகள் சாதாரண மக்களின் முதுகில் சுமத்தப்படக்கூடாது. இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க தடையாக காப்பீட்டுத் துறையின் கொள்ளையடிக்கும் பங்கும் உள்ளது. 2018 இன் வடக்கு கலிபோர்னியா தீ விபத்துகளைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனங்கள் வியத்தகு முறையில் கட்டணத் தொகைகளை அதிகரித்தன. இதனால் பல குடும்பங்கள் பல தசாப்தங்களாக தாங்கள் வாழ்ந்த சுற்றுப்புறங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பீடு இல்லாமல் முற்றிலுமாக கை விடப்பட்டுள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் தீவிபத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் சிறு வணிகங்களும் அவர்களின் இழப்புக்களுக்கு முழு இழப்பீட்டையும் பெற வேண்டும். இது, உடனடி சேதங்கள் மற்றும் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை மறுகட்டமைக்கும் நீண்டகால செலவுகளையும் உள்ளடக்கும். யாரும் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செலவுகளைச் செய்யக்கூடாது.

கூடுதலாக, காட்டுத்தீ புகையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் பணியிடங்களுக்கு HEPA காற்று வடிகட்டிகள், உயர்தர N95 முகப் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் உடனடியாக விநியோகிக்கப்பட வேண்டும்.

இலவச காற்று வடிகட்டுதல் அமைப்புகளை வழங்குவது காட்டுத்தீ புகையின் உடனடி சுகாதார விளைவுகளைத் தணிப்பது மட்டுமல்லாமல், கோவிட்-19 மற்றும் பிற காற்றுவழி நோய்க்கிருமிகளின் பரவலைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க நன்மைகளையும் வழங்கும்.

***

தீயினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பணியிடத்திலும், சுற்றுப்புறத்திலும், சமூகத்திலும், அதற்கு அப்பாலும் இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டம் நடத்தப்பட வேண்டும். முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவன தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனமாக, பணியிடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் சாமானிய தொழிலாளர் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் தேவைகளைப் பாதுகாக்க ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

இத்தகைய அவசியமான மற்றும் அவசர நடவடிக்கைகளை எடுக்க பணம் இல்லை என்ற கூற்றை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். பில்லியனர்களின் கரங்களில் குவிந்திருக்கும் பரந்த ஆதாரவளங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தீயினால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திருப்பி விடப்பட வேண்டும்.

லொஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பகுதியில் 53 பில்லியனர்கள் உள்ளனர். இவர்களின் மொத்த செல்வவளம் 222 பில்லியன் டாலர் ஆகும். லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பணக்காரர்களில் ஹார்பர் ஃபிரைட் டூல்ஸின் நிறுவனர் எரிக் ஸ்மிட் (15.6 பில்லியன் டாலர்கள்), PayPal இன் இணை நிறுவனரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் பின்னால் இருக்கும் ஒரு முக்கிய சக்தியுமான பீட்டர் தியேல் (9.2 பில்லியன் டாலர்கள்), மற்றும் கலிபோர்னியா முழுவதும் தண்ணீர் வழங்கும் உரிமைகளில் பெரும்பகுதியை வைத்திருக்கும் ஸ்டீவர்ட் ரெஸ்னிக் ($6.3 பில்லியன் டாலர்கள்) ஆகியோர் அடங்குவர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் பில்லியனர்கள் வைத்திருக்கும் 222 பில்லியன் டாலர்கள், தீயினால் ஏற்பட்ட சேதங்களில் மதிப்பிடப்பட்ட 150 பில்லியன் டாலரை ஈடுகட்டவும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் முடியும். அனைத்திற்கும் மேலாக, தீயினால் ஏற்பட்ட மதிப்பிடப்பட்ட சேதமானது, 1 டிரில்லியன் டாலர் அமெரிக்க இராணுவ பட்ஜெட்டில் ஒரு பகுதி மட்டுமே ஆகும்.

லொஸ் ஏஞ்சல்ஸ் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான நிறுவனங்களின் தாயகமாகவும் உள்ளது. அவை பொழுதுபோக்கு, சுகாதாரம், பயன்பாடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியுள்ளன. பர்பாங்கை தலைமையிடமாகக் கொண்ட வால்ட் டிஸ்னி நிறுவனம், 201.30 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. இது உலகளாவிய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் அதன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது. பெவர்லி ஹில்ஸை தளமாகக் கொண்ட லைவ் நேஷன் பொழுதுபோக்கு நிறுவனம், 29.80 பில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு பெரிய எரிசக்தி வழங்குநரான ரோஸ்மீடில் உள்ள எடிசன் இன்டர்நேஷனல் 27.95 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது.

இவற்றையும் பிற நிறுவனங்களையும் பொதுப் பயன்பாடுகளாக மாற்றப்பட்டு, ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்பட்டு, சமூகத் தேவையின் அடிப்படையில் இயக்கப்பட வேண்டும். அத்தகைய மாற்றம் தீயினால் நாசமாக்கப்பட்ட சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் மற்றும் மக்களின் பரந்த சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வளங்களை அணிதிரட்ட உதவும்.

லொஸ் ஏஞ்சல்ஸ் தீயானது வெறுமனே ஒரு இயற்கை பேரழிவு அல்ல; இவை மனிதகுலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முதலாளித்துவத்தின் இயலாமை மீதான பேரழிவுகரமான குற்றச்சாட்டாகும். சோசலிசத்திற்காக போராட, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் இரண்டில் இருந்தும் சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவசர அவசியத்தை இவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்து வருகிறது. சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்வது பற்றிய தகவல்களுக்கு கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.