காஸா இனப்படுகொலையில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 45,000 ஐ தாண்டியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

2023 அக்டோபரில் இஸ்ரேல் தனது அழித்தொழிப்புப் போரைத் தொடங்கியதிலிருந்து காஸாவில் 45,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸாவின் சுகாதார அமைச்சகம் கடந்த திங்களன்று தெரிவித்துள்ளது.

டெய்ர் அல்-பலாவில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் காஸா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட தங்கள் உறவினர்களுக்கு பாலஸ்தீனியர்கள் துக்கம் அனுசரிக்கின்றனர். நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை [AP Photo/Abdel Kareem Hana]

பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் புதையுண்டு கிடக்கின்றனர் - எனவே உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையில் இன்னும் அவர்கள் சேர்க்கப்படவில்லை என்றும், மேலும் 106,962 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு முன்னதாக கொடுத்த அறிக்கை ஒன்றில், ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலிய குண்டுவீச்சுக்களில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவிகிதத்தினர் பெண்களும் குழந்தைகளும் என்று கண்டறிந்தது.

ஆனால், சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கொடூரமான புள்ளிவிவரங்கள் கூட இஸ்ரேலிய துருப்புக்களின் நேரடி வன்முறையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. பாரிய பட்டினியின் தாக்கம் மற்றும் காஸாவின் சுகாதாரத் துறையை இஸ்ரேல் அழித்ததால் ஏற்பட்ட தொற்று நோய் பரவல்கள் ஆகியவை, இதில் உள்ளடக்கப்படவில்லை.

கடந்த ஜூலையில், தி லான்செட் பத்திரிகையில் வெளிவந்த ஒரு அறிக்கையில், காஸா இனப்படுகொலையின் உண்மையான இறப்பு எண்ணிக்கை 186,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டது—இந்த எண்ணிக்கை அதற்குப் பின்னர் மேலும் அதிகரித்திருக்கும்.

இஸ்ரேலிய தோட்டாக்கள் மற்றும் குண்டு வீச்சுக்களால் ஒவ்வொரு நாளும் டசின் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு வருகின்ற நிலையிலும், சொல்லொணா எண்ணிக்கையிலானவர்கள் பட்டினி அல்லது தடுக்கக்கூடிய நோயால் இறந்து வருகின்றனர் என்ற நிலையிலும், அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் காஸா இனப்படுகொலையை பெருமளவில் இருட்டடிப்பு செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் தொடர்ச்சியான படுகொலைகளை இயல்பாக்கியுள்ளன.

கடந்த நாளில், காஸா முழுவதும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். காஸா நகரின் கிழக்கு ஷிஜாய்யா பகுதியில் ஒரே இரவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 10 பேரும் இதில் அடங்குவர். பலியானவர்களில் நான்கு பேர் கொண்ட ஒரு முழுக் குடும்பமும் அடங்கும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கான் யூனிஸில் நடந்த மற்றொரு வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக நாசர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ ஊழியர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை இஸ்ரேல் தொடர்ந்தும் நேரடியாக குறிவைத்து வருகிறது. ஞாயிறன்று, காஸாவின் சிவில் பாதுகாப்பு முகமை மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் அஹ்மத் பேக்கர் அல்-லூஹ் கொல்லப்பட்டார். இந்த வான்வழித் தாக்குதலில் சிவில் பாதுகாப்பு முகமையின் தலைவர் உட்பட மூன்று சிவில் பாதுகாப்புத் தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.

“2024 ஆம் ஆண்டில் உலகளவில் குறைந்தது 95 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர்” என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோடி கின்ஸ்பெர்க் கூறினார். “இந்த மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு இஸ்ரேல் பொறுப்பாகும், இருப்பினும் பத்திரிகையாளர்களின் கொலை மற்றும் ஊடகங்கள் மீதான அதன் தாக்குதல்கள் என்று வரும்போது முழுத் தண்டனையிலிருந்து விலக்கீட்டுடன் அது தொடர்ந்து செயல்படுகிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலிய படைகள் இப்போது காஸாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனையை தாக்கி வருவதாகவும், அந்த மருத்துவமனையின் மின்சாரத்தை துண்டித்த பின்னர் அதன் மீது குண்டுகளை வீசுவதாகவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

யுனிசெப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 2023 லிருந்து காஸாவில் 14,500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறினார். “காஸாவில் உள்ள அனைத்து 1.1 மில்லியன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு மற்றும் மனநல ஆதரவு அவசரமாக தேவைப்படுகிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏறக்குறைய காஸாவின் ஒட்டுமொத்த மக்களும் “கடுமையான பட்டினியை” எதிர்கொள்கின்றனர் என்று உலக உணவுத் திட்டத்தின் இயக்குனர் சிண்டி மெக்கெய்ன் திங்களன்று எக்ஸ் டுவிட்டர் பதிவில் கூறினார். கடந்த மாதம், @WFP உணவை விநியோகிக்க தேவையான 1/3 டிரக்குகள் மட்டுமே காஸாவுக்குள் வந்தன. வடக்கு காஸா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - வெறும் 2 டிரக்குகள் மட்டுமே பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை சென்றடைந்தன. உயிர்களைக் காப்பாற்றவும், பஞ்சத்தைத் தவிர்க்கவும் பாதுகாப்பான, தடையற்ற அணுகல் தேவை.

ஒரு தனி அறிக்கையில், ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் அவசரகால தகவல்தொடர்புகளின் தலைவர் ஜொனாதன் டுமாண்ட், “பேரழிவு முற்றிலும் அதிர்ச்சியூட்டுகிறது” என்று கூறினார். அவர் தொடர்ந்தார், காஸாவில் இருந்து ஒரு ஆன்லைன் செய்தியில், “மின்சாரம் அல்லது குழாய் நீர் அல்லது கழிவுநீர் (சுத்திகரிப்பு) எதுவும் இல்லை. கிட்டத்தட்ட எல்லோரும் தங்கள் வீட்டை இழந்துள்ளனர். ஏராளமானோர் கூடாரங்களில் வசித்து வருகின்றனர். சூடான உணவு, விநியோகம் உண்டு. … மக்கள் வருகிறார்கள், அவர்கள் மிகவும் விரக்தியடைகிறார்கள். நீங்கள் அதை அவர்களின் முகங்களில் காணலாம், அவர்களின் கண்களில் நீங்கள் அதைப் பார்க்க முடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

காஸாவில் வேலை செய்துவரும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் ஒரு தன்னார்வலரான கரின் ஹஸ்டர், அங்கு அவர் கண்ட நிலைமைகள் குறித்த ஒரு விவரிப்பை திங்களன்று பகிர்ந்து கொண்டார்.

“இதைப் பற்றி அழாமல் இருப்பது எனக்கு கடினமாக இருக்கிறது, ஏனென்றால் நான் ஒரு இராணுவத்தைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் ... ஒரு சாதாரண மக்களை நோக்கி, இன்னும் குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்களை நோக்கி அதன் மூர்க்கத்தனத்தில் அது இடைவிடாது நடந்து கொள்கிறது” என்று கரின் தெரிவித்தார்.

“நாங்கள் பணிபுரியும் மருத்துவமனைகளின் அவசர அறைகளில் நாங்கள் காணும் குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை மனதைக் உருக்கும். கைகள் அல்லது கால்கள் துண்டிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை நான் பார்த்திருக்கிறேன், அல்லது கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மனதை உருக்கும் என்று” அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூன் மாதம் நுசைராட் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய இராணுவத்தால் நடத்தப்பட்ட படுகொலையில் 300 பேர் கொல்லப்பட்டதாகவும், “பணயக்கைதிகள் மீட்பு” என்பதை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தி அவற்றை மேற்கொண்டதாகவும் அவர் விவரித்தார்.

மேலும் அவர் இதுபற்றி குறிப்பிடுகையில்:

[/blockquote]

ஜூன் மாதம், நான் அல்-அக்ஸாவில் [டெய்ர் அல்-பலாவில் உள்ள மருத்துவமனை] பணிபுரிந்தேன். தளத்தில் மருத்துவ நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு. நான்கு பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலியப் படைகள் நுசிராத் முகாமுக்குள் நுழைந்தன. அப்படிச் செய்து, 300க்கும் மேற்பட்டவர்களை அவர்கள் கொன்றார்கள், (உங்களுக்கு தெரியும், நாங்கள் அதை இணை சேதம் என்று அழைக்கிறோம்) நான் அவசர சிகிச்சை அறையில் இருந்தேன். மருத்துவமனையின் இயக்குநர் எங்களை உள்ளே வரச் சொன்னார்.

அவசர சிகிச்சை பிரிவு ஒரு 747 [விமானம்] இருப்பதைப் போல இருந்தது. அங்கு இறந்தவர்கள், இறக்காதவர்கள், கால்கள் துண்டிக்கப்பட்டவர்கள் என்று, எல்லா வயதினரிலும் நூற்றுக்கணக்கானவர்கள் இருந்தனர். —மக்கள் தரையில் குழாய் பொருத்தப்பட்ட நிலையில் இருந்தனர். மார்புக் குழாய்கள் எந்த தொற்று தடுப்புக் கட்டுப்பாடும் இல்லாமல் [உள்ளே] வைக்கப்பட்டிருந்தன. இது முழுமையான குழப்பமாக நிலைமையாகும்.

[/blockquote]

“இந்த அழிவு எதுவும் தற்செயலாக ஏற்பட்டதல்ல, காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்கின்றனர். நீங்கள் காஸாவில் இறப்பதற்கு ஒரு நேரமே ஆகும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆட்சிக்கு வரவிருக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு வெறும் சில வாரங்களே உள்ள நிலையில், காஸா இனப்படுகொலையும் மத்திய கிழக்கு எங்கிலும் இஸ்ரேலின் பரந்த வெறியாட்டமும் தீவிரமடைய மட்டுமே உள்ளன. திங்களன்று ஒரு நேர்காணலில், ட்ரம்ப் இஸ்ரேலின் கோரிக்கைகளை ஏற்க பாலஸ்தீனர்களை நிர்பந்திக்கப் போவதாகவும், “அது இனிமையானதாக இருக்கப் போவதில்லை” என்றும் அச்சுறுத்தினார்.

நடந்து வரும் காஸா இனப்படுகொலையானது, மத்திய கிழக்கு எங்கிலும் அமெரிக்க-இஸ்ரேலிய அட்டூழியத்தின் ஒரு விரிவாக்கத்துடன் கைகோர்த்துள்ளது. திங்களன்று, அமெரிக்க மத்திய கட்டளையகம், அமெரிக்க இராணுவம் “யேமனின் தலைநகர் சனாவில் உள்ள ஈரான் ஆதரவு ஹௌதிக்களின் கட்டுப்பாட்டு பிராந்தியத்திற்குள், அவர்களால் இயக்கப்படும் ஒரு முக்கிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு தளம் மீது ஒரு துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தியது” என்று கூறியது.

இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில் அசாத் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், இஸ்ரேல் சிரியாவில் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது, சனிக்கிழமை இரவு தொடங்கி 75 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை அது நடத்தி வருகிறது.

அதேநேரத்தில், வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் மீதான ஒரு சாத்தியமான தாக்குதலுக்கான திட்டங்களை செயலூக்கத்துடன் தயாரித்து வருகிறது. கடந்த வாரம், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், “ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஒரு அணுவாயுதத்தை உருவாக்க முடியாமல் தடுப்பதற்கான தெரிவுகளை பரிசீலித்து வருகிறார், இதில் வான்வழித் தாக்குதல்களுக்கான சாத்தியக்கூறுகளும் உள்ளடங்கும். இந்த நகர்வு தெஹ்ரானை இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் தடையாணைகளைக் கொண்டு கட்டுப்படுத்தும் நீண்டகால கொள்கையை முறித்துக் கொள்ளும்,” என்று குறிப்பிட்டது.

ட்ரம்ப் தேர்வானதால் தைரியமடைந்துள்ள இஸ்ரேலிய அதிகாரிகள், அடுத்த ஆண்டு மேற்குக் கரையை இணைப்பதற்கான திட்டங்களை பகிரங்கமாக விவாதித்து வருகின்றனர். “2025 யூதேயா மற்றும் சமாரியாவில் இறையாண்மையின் ஆண்டாக இருக்கும்” என்று இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்த மாத தொடக்கத்தில் கூறினார்.

Loading