காஸாவில் இஸ்ரேல் "இன சுத்திகரிப்பு" செய்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸாவின் கிட்டத்தட்ட முழு மக்களையும் வலுக்கட்டாயமாகவும் நிரந்தரமாகவும் இடம்பெயரச் செய்வதன் மூலம் “வேண்டுமென்றே” “இன சுத்திகரிப்பு” கொள்கையை இஸ்ரேல் செயல்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வியாழனன்று கூறியுள்ளது.

பாலஸ்தீனிய அகதிகளுக்கு உதவும் ஐ.நா நிறுவனமான UNRWA விநியோகித்த மாவு மூட்டைகளைப் பெற பாலஸ்தீனியர்கள் கூடியுள்ளார்கள், மத்திய காஸா பகுதியின் டெய்ர் அல் பாலா, சனிக்கிழமை, நவம்பர் 2, 2024 [AP Photo/Abdel Kareem Hana]

காஸாவில் போருக்கு முந்தைய 2.2 மில்லியன் மக்கள்தொகையில், 1.9 மில்லியன் மக்கள், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன், இஸ்ரேலின் நிர்மூலமாக்கும் போரால் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர். மக்களைத் திட்டமிட்டு வேண்டுமென்றே இடம்பெயர வைப்பதானது, காஸாவில் பொதுமக்களின் வீடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, அந்தப் பகுதியை வாழத் தகுதியற்றதாக மாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

“நம்பிக்கையிழப்பு, பட்டினி, மற்றும் முற்றுகை: காஸாவில் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் பலவந்தமாக இடம்பெயர வைக்கிறது” என்ற தலைப்பிலான அதன் 154 பக்க அறிக்கையை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆவணப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவது இராணுவத் தேவையின் அடிப்படையில் அல்ல, மாறாக இஸ்ரேலிய அதிகாரிகள் வேண்டுமென்றே மற்றும் பகிரங்கமாக அறிவித்து, விருப்பத்தின் அடிப்படையில் அரபு மக்களை காஸாவில் இருந்து வெளியேற்றி, அப்பகுதியை இணைத்து, அங்கு குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான தயாரிப்பு ஆகும்.

“பல கட்டாய இடப்பெயர்வு நடவடிக்கைகள் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இது போர்க்குற்றங்களுக்கு சமம்” என்று அந்த ஆவணம் கண்டறிந்தது. “கட்டாய இடப்பெயர்வு வேண்டுமென்றே இஸ்ரேலிய அரசு கொள்கையின் பாகமாக இருக்கிறது. ஆகவே அது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாக கருதப்படுகிறது என்பதை மூத்த கட்டளை அதிகாரிகளின் அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன” என்று அந்த ஆவணம் வெளிப்படுத்தியுள்ளது. “இஸ்ரேலின் நடவடிக்கைகள் இன சுத்திகரிப்பின் வரையறையையும் பூர்த்தி செய்வதாக தோன்றுகிறது” என்று அது மேலும் கூறியுள்ளது.

அறிக்கையின் கண்டுபிடிப்புகளை சுருக்கமாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் பின்வருமாறு எழுதியது:

மோதல்களின் ஆரம்ப நாட்களில் இருந்தே, இஸ்ரேலிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும், போர் அமைச்சரவையிலும் உள்ள மூத்த அதிகாரிகளும் காஸாவிலுள்ள பாலஸ்தீனிய மக்களை இடம்பெயர்க்கும் அவர்களின் நோக்கத்தை அறிவித்துள்ளனர். அரசாங்க அமைச்சர்கள் அதன் நிலப்பரப்பு குறையும் என்றும், காஸாவை தகர்த்து தரைமட்டமாக்குவது “அழகானது” என்றும், அந்த நிலம் குடியேற்றக்காரர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். நவம்பர் 2023 இல், இஸ்ரேலிய விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்டர், “நாங்கள் இப்போது காஸாவில் நக்பாவை உருவாக்கிறோம் என்று கூறியுள்ளார்.”

இந்த ஆவணம் காஸாவில் இடம்பெயர்ந்த 39 பாலஸ்தீனியர்களுடனான நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டதுடன், 184 தனித்தனி இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளின் ஆழமான ஆய்வையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

“பாலஸ்தீனியர்களை தப்பி செல்லும் வழிகளில் வைத்து கொலை செய்வது, பாதுகாப்பான பகுதிகள் என்று அழைக்கப்படும் பகுதிகளில் குண்டுகளை வீசுவது, உணவு, தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை துண்டிப்பது போன்றவற்றை மேற்கொண்டுவரும் இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீனியர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று கூற முடியாது” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமை ஆய்வாளர் நாடியா ஹார்ட்மேன் கூறினார்.

“பாலஸ்தீனியர்கள் தாயகம் திரும்புவதை உறுதி செய்வதற்கான அதன் கடமையை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளது. பெரிய நகரப் பகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் தரைமட்டமாக்கியுள்ளது,” என்று அவர் தொடர்ந்து கூறினார்.

காஸாவில் பரந்து வாழும் பெரும்பான்மை மக்களை இஸ்ரேல் இடம்பெயரச் செய்துள்ளது என்பது மட்டுமல்லாமல், நாகரிக வாழ்க்கைக்கு ஆதரவளிக்கும் தகைமை கொண்ட ஒட்டுமொத்த உள்கட்டுமானத்தையும் கிட்டத்தட்ட அழித்துவிட்டது மற்றும் உயிருடன் விடப்பட்ட பாலஸ்தீனியர்களை பட்டினி போட முயன்று வருகிறது என்பதை அந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது:

... மருத்துவமனைகள், பள்ளிகள், குடிநீர், எரிசக்தி உள்கட்டுமானம், ரொட்டிக் கடைகள், விவசாய நிலங்கள் உட்பட மனித தேவைகளை அடைவதற்கு இன்றியமையாத வளங்களை இஸ்ரேல் சேதப்படுத்தியும், அழித்தும் உள்ளது மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட மனிதாபிமான அணுகலை மட்டுமே அனுமதித்துள்ளது. இது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முற்றிலும் போதுமானதாக இல்லை. இதன் விளைவாக, காஸா ஒரு மனிதாபிமான நெருக்கடியை அனுபவித்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக குழந்தைகள் இறந்துள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக குழந்தைகள் இறந்துள்ளனர். அக்டோபர் 2024 நிலவரப்படி, காஸாவின் 2.2 மில்லியன் மக்களில் சுமார் 1.95 மில்லியன் பேர் “பேரழிவு,” “அவசரநிலை” அல்லது “நெருக்கடி” அளவிலான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. “நவம்பர் 2024 மற்றும் ஏப்ரல் 2025 க்கு இடையில் பஞ்சத்தின் ஆபத்தானது, மோதல் தொடரும் வரை, மனிதாபிமான அணுகல் தடைசெய்யப்படும் வரை நீடிக்கும்” என்று அறிக்கை மேலும் கூறுகிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை, காஸா மக்கள் பலமுறையும் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காகவும், ஒரு இராணுவத் தேவைக்காகவும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற நெதன்யாகு அரசாங்கத்தின் கூற்றுக்களை முறையாக மறுக்கிறது. “இஸ்ரேலிய அதிகாரிகள் அதற்குப் பதிலாக பலாத்காரமான இடமாற்றம், ஜெனீவா உடன்படிக்கைகளை கடுமையான மீறுவது மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ரோம் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்கிறார்கள்” என்பதை அந்த அறிக்கை நிரூபித்துள்ளது.

“வெளிப்படையாக, காஸாவில் உள்ள பாலஸ்தீனிய பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இஸ்ரேல் அவர்களை வெளியேற்றவில்லை. ஏனென்றால் மக்களின் வெளியேற்றத்தின் போதோ அல்லது அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலங்களுக்கு அவர்கள் வந்திறங்கும் போதோ அவர்கள் பாதுகாப்பாக இல்லை.” உண்மையில், “இஸ்ரேலிய இராணுவம் நிரந்தர இடைத்தடை மண்டலங்களாகத் தோன்றுபவற்றையும் ஸ்தாபித்து வருகிறது—இஸ்ரேலிய மற்றும் காஸா எல்லைக்கு இடையே பாலஸ்தீனியர்கள் அநேகமாக நுழைய அனுமதிக்கப்படாத பாதுகாப்பான மற்றும் வெற்று நிலப் பகுதிகள் அவை” என்று அந்த அறிக்கை நிறைவு செய்கிறது.

மனித உரிமை காண்காணிகப்பகத்தின் அறிக்கையின் குற்றச்சாட்டுக்கள் பயங்கரமானவை என்றாலும், அவை உண்மையில் காலாவதியானவை. கடந்த மாத தொடக்கத்தில், இஸ்ரேல் வடக்கு காஸாவிற்கு எதிராக ஒரு புதிய தாக்குதலை தொடங்கியது. அதன் நோக்கம் முழுப் பகுதியிலிருந்தும் மொத்தமாக மக்களைக் குறைப்பதாகும். “ஜெனரல்களின் திட்டம்” என்றழைக்கப்படுவதன் கீழ், இஸ்ரேலிய அதிகாரிகள் வடக்கு காஸா முழுவதிலும் உணவு கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கும், இப்போது சுமார் 75,000 பேர் என மதிப்பிடப்பட்டுள்ள எஞ்சியிருக்கும் அனைவரையும் எதிரிப் போராளிகளாக நடத்துவதற்கும் அவர்களின் நோக்கத்தை அறிவித்துள்ளனர்.

பலவந்தமாக பாரிய இடப்பெயர்வு என்ற இந்தக் கொள்கை, வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்துடன் தீவிரமடைய மட்டுமே உள்ளது. அது பைடெனை விட நெதன்யாகு அரசாங்கத்தை ஆதரிப்பதில் இன்னும் ஆக்ரோஷமாக இருக்க வாக்குறுதியளித்துள்ளது. பாலஸ்தீன பிராந்தியத்தை இணைப்பதற்கு பகிரங்கமாக அறிவுறுத்தி வரும் ஒரு சுவிசேஷ கிறிஸ்தவ சியோனிசவாதியான ஆர்கன்சாஸின் முன்னாள் ஆளுநர் மைக் ஹக்கபீயை இஸ்ரேலுக்கான தூதராக நியமிக்க உத்தேசித்திருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

“மேற்குக் கரை இல்லை, அது யூதேயா மற்றும் சமாரியா” என்று ஹக்கபீ கூறி, இப் பிராந்தியத்திற்கு விவிலிய பெயர்களைப் பயன்படுத்தி வருகிறார். “குடியேற்றங்கள் இல்லை: அவை சமூகங்கள், சுற்றுப்புறங்கள், நகரங்கள். ஆக்கிரமிப்பு என்று எதுவும் இல்லை” என்று ஹக்கபீ குறிப்பிட்டார்.

நவம்பர் 14 அன்று வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கையில், ஐ.நா.வின் குழு ஒன்று, “இஸ்ரேலின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்...  இனப்படுகொலைக்கான பண்புகளுடன் ஒத்துப்போகின்றன” என்று முடிவு செய்துள்ளது.

Loading