மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
காஸாவில் நடந்த சண்டையில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை (Yahya Sinwar) இஸ்ரேலிய படைகள் கொன்றதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை சூளுரைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, இஸ்ரேலிய தரைப்படைகள் சின்வாரை அடையாளம் தெரியாமல் துப்பாக்கிச் சண்டையின் போது கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
“இது காஸாவில் போரின் முடிவல்ல” என்று கூறிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலத்தை சட்டவிரோதமாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை எதிர்ப்பதை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தனது ஆட்சியை எதிர்ப்பவர்களிடம், “இஸ்ரேல் உங்களை வேட்டையாடும்” என்று அவர் கூறினார்.
இஸ்ரேலிய குண்டுகளால் கொல்லப்பட்ட ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்களின் பெயர்களை உச்சரித்த அவர், “ஈரானால் கட்டமைக்கப்பட்ட பயங்கரவாத அச்சு நொறுங்கி வருகிறது” என்று அறிவித்து, இஸ்ரேலால் தொடங்கப்பட்ட பயங்கர மற்றும் படுகொலை ஆட்சி குறித்து பெருமைபீற்றினார்.
சின்வர் மீதான படுகொலை ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்களால் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு தடையற்ற ஆதரவை அளித்தது.
“ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரைக் கொன்ற காஸாவில் இடம்பெற்ற பணிக்கு” அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் வியாழன் அன்று நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ஹமாஸால் இனி ஒருபோதும் காஸாவைக் கட்டுப்படுத்த முடியாது” என்று அந்த அறிக்கை மீண்டும் வலியுறுத்தியது.
பிந்தைய ஒரு அறிக்கையில், “எங்களது உளவுத்துறை உதவியுடன், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், ஹமாஸ்சின் தலைவர்களை இடைவிடாது பின்தொடர்ந்து, அவர்களை மறைவிடங்களில் இருந்து வெளியேற்றி, அவர்களை ஓடுவதற்கு கட்டாயப்படுத்தியது.... எவ்வாறாயினும், உலகெங்கிலும் உள்ள எந்தவொரு பயங்கரவாதியும், எவ்வளவு காலம் எடுத்தாலும் நீதியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளது” என்று பைடென் அறிவித்தார்.
“ஹமாஸின் தலைமையையும், அதன் இராணுவக் கட்டமைப்பையும் அகற்ற இஸ்ரேலுக்கு எல்லா உரிமையும் உண்டு” என்று அவர் தொடர்ந்து கூறினார்.
இன்னொரு அறிக்கையில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், “இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு, இஸ்ரேலுக்கு ஹமாஸ் முன்வைக்கும் அச்சுறுத்தல் அகற்றப்பட வேண்டும். இன்று, அந்த இலக்கை நோக்கி தெளிவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் அழிக்கப்படுகிறது, அதன் தலைமை அகற்றப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
கடந்த ஒரு மாதமாக, இஸ்ரேல், அமெரிக்காவின் ஆதரவுடன், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் அனைத்து முன்னணி உறுப்பினர்களையும், ஈரானின் முன்னணி தலைவர்களையும் கொலை செய்ய திட்டமிட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியம் முழுவதும் தங்கள் இராணுவ தாக்குதலை விரிவுபடுத்துகின்றன. கடந்த மாதம் லெபனானில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் 2,000ம் இறாத்தல் எடையுள்ள 80 குண்டுகளால் கொல்லப்பட்டார். ஹமாஸ்சின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை மாதம் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த வாரம், ஈரான் தொடர்பான கூட்டுத் திட்டங்கள் குறித்து கலந்துரையாட பைடென் நெதன்யாகுவுடன் ஒரு தொலைபேசி அழைப்பை நடத்தினார். இந்த அழைப்பின் போது, “ஈரானில் உள்ள இராணுவ உள்கட்டமைப்பை குறிவைக்க திட்டமிட்டுள்ளதாக நெதன்யாகு பைடெனிடம் தெரிவித்தார்” என்று ஒரு அமெரிக்க அதிகாரி வாஷிங்டன் போஸ்ட்டுக்கு இந்த அழைப்பைபற்றி விவரித்தார்.
இந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, பென்டகன் இஸ்ரேலில் 100 அமெரிக்க துருப்புகளை நிலைநிறுத்துவதாக அறிவித்தது, காஸா இனப்படுகொலை தொடங்கியதற்குப் பின்னர் இருந்து அமெரிக்க “தரையில் பூட்ஸ் கால்களை” வைப்பது இதுவே முதல் முறையாகும். அந்த துருப்புக்கள் ஒரு அமெரிக்க THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இயக்க வேண்டும், அது ஈரான் மீதான திட்டமிட்ட தாக்குதலை முன்னெடுத்துச் செல்லும் இஸ்ரேலை ஆதரிக்கும்.
சின்வர் கொல்லப்பட்ட அதேநாளில், ஈரானுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்துவதற்கு ஆதரவாக, யேமனில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த அமெரிக்க இராணுவம் B-2 இரகசிய குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தியது.
“பூமிக்கடியில் எவ்வளவு ஆழமாக புதைக்கப்பட்டிருந்தாலும், கடினப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது பலப்படுத்தப்பட்டிருந்தாலும், நமது எதிரிகள் எட்ட முடியாத இடங்களை இலக்கு வைப்பதற்கான அமெரிக்காவின் திறனுக்கு இது ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டு” என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், டெஹ்ரானை நோக்கமாகக் கொண்ட செய்தியில் அச்சுறுத்தும் வகையில் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஊடகங்கள் சின்வர் படுகொலை குறித்து மகிழ்ச்சியடைந்தன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், இது, இஸ்ரேலின் நிர்மூலமாக்கும் போரை நிரூபணம் செய்வதாக கூறியது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை நிபுணர்களின் கண்டனங்கள் இருந்தபோதிலும், ரஃபா மீது படையெடுப்பதற்கான அவரது முடிவுக்கு “திரு. நெதன்யாகுவுக்கு நியாயப்படுத்த உரிமை உண்டு” என்று ஜேர்னல் எழுதியது. மேலும், “ஒரு எதிரியைத் தடுப்பதற்கான சிறந்த வழி அதன் மக்களைப் படுகொலை செய்ததற்காக மூர்க்கமான பழிவாங்கலை எடுத்துக்காட்டுவதே என்பதை இஸ்ரேல் அக்டோபர் 7 க்குப் பின்னர் இருந்து அதன் வலிமையின் மூலமாக எடுத்துக்காட்டியுள்ளது. அந்த தடுப்புமுறையை அது தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டிருப்பதால் அது ஆதரவுக்கு தகுதியானது” என்று ஜேர்னல் குறிப்பிட்டது,
1948 இனச்சுத்திகரிப்பின் போது இஸ்ரேலை விட்டு வெளியேறிய அகதிகளின் மகனான சின்வார், காஸாவில் உள்ள கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் வளர்ந்தார். அவர் இரண்டு தசாப்தங்களை இஸ்ரேலிய சிறைகளில் கழித்தார்.
லெபனான் மற்றும் ஈரானுடன் போரிட தனது இராணுவ வளங்களை மாற்றியத்துவரும் இஸ்ரேல், காஸாவின் மக்களை பட்டினிக்கு உள்ளாக்கும் ஒரு திட்டமிட்ட திட்டத்தை செயல்படுத்தும் பின்னணியில் சின்வாரின் மரணம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வாரம், அசோசியேட்டட் பிரஸ், நெதன்யாகு வடக்கு காஸாவிலிருந்து குடிமக்களை வெளியேற்றும் திட்டத்தை பரிசீலித்து வருவதாகவும், உள்ளே விடப்பட்டவர்களுக்கு உதவிகளை நிறுத்துவதாகவும் தெரிவித்தது.
“ஹமாஸ் போராளிகளைப் பட்டினி போடும் முயற்சியில் வடக்கு காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை நிறுத்துவதற்கான ஒரு திட்டத்தை நெதன்யாகு ஆராய்ந்து வருகிறார். இந்த திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டால், நூறாயிரக் கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற விரும்பாத அல்லது வெளியேற முடியாத நிலையில் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் சிக்கிக் கொள்ளக்கூடும்,” என்று அது மேலும் தெரிவித்தது.
ஆனால், இத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது என்பது தெளிவு. சின்வார் கொல்லப்பட்ட அன்றே, வியாழனன்று, காஸாவிற்குள் அனைத்து வணிக உணவு இறக்குமதிகளையும் இஸ்ரேல் நிறுத்திவிட்டதாகவும், முன்னதாக காஸா மக்களுக்கு பாதி உணவு வந்து சேர்வதற்கான வழிவகைகளை இஸ்ரேல் நிறுத்திவிட்டதாகவும் ராய்ட்டர்ஸ் தகவல் கொடுத்தது.
மே மற்றும் செப்டம்பருக்கு இடையில் 175 டிரக்குகளில் உணவு கிடைத்த நிலையில், காஸாவிற்கு இந்த மாதம் ஒரு நாளைக்கு மொத்தம் 29 டிரக்குகளில் மட்டுமே உணவு கிடைத்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழனன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய எச்சரிக்கையில், உலக உணவு திட்ட அமைப்பு, மக்கள்தொகையில் 91 சதவீதத்தினர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை முகங்கொடுப்பார்கள் என்றும், 345,000 பேர் “பேரழிவுகரமான” என்றழைக்கப்படும் மிக மோசமான பட்டினிக்கு முகங்கொடுப்பார்கள் என்றும் கண்டறிந்தது.
“அக்டோபர் முதல் இரண்டு வாரங்களில் மனிதாபிமான உணவு விநியோகம் எதுவும் வடக்கு காஸாவிற்குள் நுழையவில்லை. ஒரு சில டிரக்குகள் மட்டுமே தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை அடைந்தன, அதாவது, செப்டம்பரில் தரவு சேகரிக்கப்பட்டபோது மதிப்பீடு எடுத்ததை விட நிலைமை மிகவும் மோசமாக இருக்கலாம்” என்று உலக உணவுத் திட்டத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ஆரிஃப் ஹுசைன் கூறினார்.
மே மாதத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள், இஸ்ரேல் “அப்பாவி மக்களை பட்டினி போடுவதை ஒரு போர் முறையாக” பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டி நெதன்யாகுவை கைது செய்வதற்கான ஆணையை கோரி வருவதாக அறிவித்தனர்.
பட்டினியைத் தவிர, இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் ஒட்டுமொத்தமாக பாலஸ்தீனியர்களை தொடர்ந்து கொன்று வருகிறது. வடக்கு ஜபாலியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஐ.நா. பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதோடு, 160 பேர் காயமடைந்துள்ளனர்.