மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
காஸாவில் இனப்படுகொலை தொடங்கியதன் முதலாம் ஆண்டு நினைவு தினம், அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரின் சுருக்கமான, பாசாங்குத்தனமான மற்றும் முற்றிலும் பொய்யான அறிக்கைகளுடன் நினைவுகூரப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் தொடர்ச்சியான பாலஸ்தீனிய எதிர்ப்பு சொல்லாட்சியுடன் இருவரும் வெளியிட்ட அறிக்கையானது, அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்களில் உண்மையாக எதிரொலித்தது. ஹமாஸ் போராளிகளின் தாக்குதல் “யூத இனப்படுகொலைக்குப் பின்னர் யூத மக்களுக்கு மிகவும் கொடூரமான நாள்” என்று பைடென் அறிவித்தார். பாரிய பாலியல் பலாத்காரம் குறித்த முற்றிலும் நிரூபிக்கப்படாத கூற்றுக்களை ஹாரிஸ் குறிப்பிட்டு, “அன்றைய தினம் ஹமாஸ் என்ன செய்ததோ அது தூய தீமையாக இருந்தது—அது கொடூரமாகவும் வெறுப்பூட்டுவதாகவும் இருந்தது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
யூத இனப்படுகொலையுடன் ஒரு ஒப்பீடு செய்யப்பட வேண்டுமானால், அது கடந்த ஆண்டில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகளில் உள்ளது. இது, முதலில் காஸாவில், பின்னர் மேற்குக்கரை வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் யேமனில் ஹௌதிகள் போன்ற பாலஸ்தீனிய ஆதரவு சக்திகளை இது இலக்கில் வைத்துள்ளது.
குண்டுவீச்சுக்கள், முற்றுகைகள், பட்டினி மற்றும் நோய் ஆகியவற்றால் காஸாவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஜூலை மாதம் பிரிட்டிஷ் மருத்துவ வெளியீடான லான்செட்டால் 186,000 என மதிப்பிடப்பட்டது. மொத்தம் இப்போது 200,000 க்கும் அதிகமாக இருக்க வேண்டும். இதன் பொருள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) அக்டோபர் 7 அன்று இறந்த 1,200 இஸ்ரேலியர்களில் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 167 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது என்பதாகும். (கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களில், ஒரு பெரிய, ஆனால் அறியப்படாத எண்ணிக்கையானது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் செய்யப்பட்டதாகும். அதன் “ஹன்னிபால் கோட்பாட்டின்” கீழ், இது இஸ்ரேலியர்களை சிறைபிடிக்க அனுமதிக்காமல் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.)
இஸ்ரேல் அரசின் நவீன-கால குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக, யூத இனப்படுகொலை நினைவுகூரலை கடத்துவதற்கான இடைவிடாத முயற்சிகள் இருந்தபோதிலும், இஸ்ரேல்தான் நாஜிக்களின் காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளை பகிரங்கமாக நகலெடுத்து வருகிறது. 1942 இல் கெஸ்டாபோவின் தளபதி ரெய்ன்ஹார்ட் ஹெட்ரிச், செக் எதிர்ப்புப் போராளிகளால் கொல்லப்பட்ட பின்னர், ஹிட்லர் ஆட்சியின் பாரிய படுகொலையின் மிகவும் இழிவார்ந்த நடவடிக்கைகளில் ஒன்றாக, ஜேர்மன் படைகள் லிடிஸ் கிராமத்தை இலக்கு வைத்து, 173 செக் ஆண்களைப் பிடித்து உடனடியாக கொன்றன. உண்மையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை காஸாவில் கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்களை இலக்கு வைத்து மூன்று வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காஸாவில் இடம்பெற்றுவரும் பாரிய படுகொலையின் பிரம்மாண்டமான மற்றும் கொடூரமான அளவைக் குறைத்துக் காட்ட அர்ப்பணிக்கப்பட்ட அமெரிக்க உத்தியோகபூர்வ வட்டாரங்களிலோ அல்லது ஊடகங்களிலோ அத்தகைய ஒப்பீடுகள் எதுவும் தோன்றாது.
எப்போதும் போல, இந்த அனைத்து அறிக்கைகளும் மற்றும் பகுப்பாய்வுகளின் முன்மாதிரிகளும் குறிப்பிடுவது என்னவென்றால், உலகம் ஏதோ அக்டோபர் 7, 2023 அன்றுதான் தொடங்கியுள்ளது என்பதாகும். காஸா பாலஸ்தீனியர்களின் எழுச்சியானது, அதற்கு முந்தைய 70 ஆண்டுகால உடைமைகள் பறிப்பு, சியோனிச பயங்கரம், பாரிய வெளியேற்றம், மற்றும் 2.3 மில்லியன் கைதிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய சிறைச்சாலையை காஸாவில் உருவாக்கியது ஆகியவற்றைக் குறித்து இவற்றில் எந்த குறிப்பும் இல்லை. மாறாக, அமைதியான இஸ்ரேலிய அப்பாவி மக்கள் மீதான ஒரு “ஆத்திரமூட்டலற்ற” படுகொலை நாளாக இது சித்தரிக்கப்படுகிறது.
ஆரம்பம் முதல் இறுதி வரை முழு விளக்கக்காட்சியும் ஒரு பொய். ஹாரிஸ், “யூத வரலாற்றின் நீண்ட, அசாதாரண வளைவுகளுடனான படுகொலைகள் மற்றும் தப்பெண்ணங்கள், பாரபட்சம் மற்றும் பிரிவினைகள் நிறைந்துள்ளது” என்று அறிவித்தார். உண்மை போதும். ஆனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறை, சியோனிச காலனித்துவம் மற்றும் பல தசாப்தங்களாக நாடற்ற அகதிகளாக வாழ்ந்துவரும் பாலஸ்தீனியர்களுக்கான “வரலாற்றின் நீண்ட வளைவு” பற்றி என்ன?
உத்தியோகபூர்வ அனுசரிப்புகளின் சுருக்கமான மற்றும் செயலற்ற தன்மையானது, (பைடெனும் அவரது மனைவியும் மெழுகுவர்த்திகளை ஏற்றி, மூன்று நிமிட ஹீப்ரு பிரார்த்தனையைக் கேட்டார்கள்; ஹாரிஸும் அவரது கணவரும் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஒரு மரத்தை நட்டு, பின்னர் உள்ளே தள்ளப்பட்டனர்) உலக மக்கள் உத்தியோகபூர்வ பொய்களின் மூலம் பார்த்திருக்கிறார்கள் மற்றும் அத்தகைய பாவனைகளால் திசைதிருப்ப முடியாது என்பதை திறம்பட ஒப்புக்கொள்கிறார்கள்.
சியோனிச-ஆதரவு கட்டுரையாளரும் வாஷிங்டன் போஸ்டின் துணை ஆசிரியருமான ரூத் மார்கஸ் திங்களன்று ஒப்புக் கொண்டதைப் போல, “இஸ்ரேல்... அப்பட்டமாகச் சொல்வதானால், சர்வதேச தீண்டத்தகாதவர்களைக் காட்டிலும் குறைந்த அனுதாபமுள்ள, பாதிக்கப்பட்டவராக ஆக அது மாறியுள்ளது —மற்றும் உதவியுள்ளது.”
உண்மையில், உலக மக்களின் கருத்து பெருமளவில் பாலஸ்தீனியர்கள் பக்கமே உள்ளது. யூதர்கள் மீதான இனப்படுகொலையையும், மிகப்பெரியளவிலான குற்றங்களையும், நியாயப்படுத்தி பயன்படுத்திவரும் இஸ்ரேலிய பாசிசவாதிகளுக்கு எதிரான, அதிகரித்த எண்ணிக்கையிலான யூத தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் இதில் உள்ளடங்குவர்.
இஸ்ரேல் மட்டுமல்ல. சியோனிச ஆட்சி மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தின் ஈட்டிமுனை ஆகும். உலக மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையினரால், ஏறத்தாழ ஆழங்காண முடியாத பரிமாணங்களில் நடந்து வரும் படுகொலைகளுக்கு பொறுப்பானதாக பார்க்கப்படும் அமெரிக்காவும் கூட, ஒரு சர்வதேச தீண்டத்தகாததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம், நேட்டோவில் உள்ள அதன் கூட்டாளிகளுடன் இணைந்துகொண்டும், பாரிய படுகொலையுடன் பகிரங்கமாக தன்னை இணைத்துக் கொண்டும் அதனை பாதுகாத்து வருகிறது.
இது இன்னும் மோசமானதாக மாறக்கூடிய ஒன்றின் ஆரம்பம் மட்டுமே. காஸா அழிவுக்கு நிகரான வேகத்தில் இஸ்ரேல் லெபனான் மீது குண்டு வீசி வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இராணுவப் படைகள் கடந்த வாரம் யேமனைத் தாக்கின. அங்கு ஹௌதி தலைமையிலான ஆட்சி காஸா மக்களுடன் அதன் ஒற்றுமையை பகிரங்கமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு எங்கிலும் முழுவீச்சிலான போருக்கு களம் அமைக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்ட பிரெளன் பல்கலைக்கழகத்தின் போர் செலவுகள் திட்டத்தின் ஆய்வு ஒன்றின்படி, அமெரிக்கா குறைந்தபட்சம் 22.8 பில்லியன் டாலர்களை இஸ்ரேலின் போர்கள் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு செலவிட்டுள்ளது. அண்மித்து 18 பில்லியன் டாலர் இராணுவ உதவி வடிவில் உள்ளது. இதில் நிலவறை-தகர்ப்பு குண்டுகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட ஆயுதங்கள், பீரங்கிக் குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் எரிபொருள் வாங்குவதற்கான முடிவற்ற பணம் ஆகியவையும் அடங்கும். இது 1959 முதல் பணவீக்கத்தால் சரிசெய்யப்பட்ட டாலர்களில் இஸ்ரேலுக்கான மொத்த அமெரிக்க இராணுவ உதவியை 251.2 பில்லியன் டாலராக கொண்டு வருகிறது என்று அறிக்கை கூறுகிறது.
மற்றொரு 4.86 பில்லியன் டாலர் அப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. மத்தியதரைக் கடல், செங்கடல் மற்றும் அரேபிய கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள கடற்படைகளின் அளவைப் பொறுத்து, கடந்த ஆண்டில் 34,000 முதல் 51,000 வரை அமெரிக்க துருப்பு இப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு எதிரானவர்கள் மீதான ஒடுக்குமுறை பல அமெரிக்க கல்லூரி வளாகங்களில் கிட்டத்தட்ட ஒரு பொலிஸ்-அரசு சூழல் நிலவும் புள்ளிக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், உள்நாட்டிலும் சியோனிசம் ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் ஈட்டிமுனையாக மாறியுள்ளது. அக்டோபர் 7 அன்று, அன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக வளாகத்தின் மத்திய சதுக்கமான டியாக் மீது பொலிசார் மிளகு தூவி இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர்.
ஜனாதிபதி பைடெனின் அறிக்கையானது, யூத-விரோதத்தை அடக்குவதற்கான அவரது நிர்வாகத்தின் உறுதியை உறுதிப்படுத்தியது. அதாவது, குடியரசுக் கட்சியில் மேலாதிக்கம் செலுத்தும் பாசிச வலதுசாரிகளின் யூத-எதிர்ப்பு உணர்வுகளை அடக்குவது அல்ல, மாறாக ஏகாதிபத்திய போருக்கும் அதன் சியோனிச பினாமிகளின் குற்றங்களுக்கும் எதிரான இடதுசாரிகளின் எதிர்ப்புக்களை அடக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் கரங்களில், “யூத-எதிர்ப்புவாதம்” என்ற வார்த்தை எந்தவொரு நிஜமான உள்ளடக்கத்தையும் இழந்துள்ளது. பாரிய படுகொலைகளை எதிர்த்துவரும் யூதர்கள் உட்பட எவரொருவருக்கும் எதிரான ஒரு குண்டாந்தடியாக இது பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்க அரசியலின் உத்தியோகபூர்வ அரசியலில், போர் மற்றும் இனப்படுகொலையை எதிர்ப்பவர்களுக்கு வேறு வழியில்லை. இவர்கள் ஒருபுறம், பைடென், ஹாரிஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் திட்டமிடப்பட்ட, இரக்கமற்ற போர்வெறி, மேலும் உக்ரேனில் நடந்துவரும் ரஷ்யாவுக்கு எதிரான போர் மற்றும் ஈரானுக்கு எதிரான போரைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறார்கள். மறுபுறம், ட்ரம்ப், வான்ஸ் மற்றும் குடியரசுக் கட்சியினரின் பாசிச போர்வெறி, பைடெனின் போர்க் கொள்கைகளை, இரத்தந்தோய்ந்த இராணுவவாதத்தின் நிலைப்பாட்டில் இருந்து, சீனாவில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதேவேளையில், ஏகாதிபத்திய போரை எதிர்த்துவரும் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமை மீது இன்னும் மூர்க்கமான தாக்குதல்களுக்கு இவர்கள் சூளுரைத்து வருகின்றனர்.
உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியில் இருந்தும், ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டின் ஆளும் வர்க்கங்கள் சர்வாதிகார ஆட்சி முறைகளை நோக்கி திரும்புவதிலிருந்தும் எழுகின்ற மூன்றாம் உலகப் போரை நோக்கிய உந்துதலை நிறுத்துவதற்கு ஒரேயொரு நடைமுறை வழிமுறை மட்டுமே உள்ளது. அதாவது, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ஒழுங்கமைப்பும், போர்வெறியர்கள் மற்றும் அவர்களின் அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாளர்களின் பரந்த சமூக சக்தியை முழுமையாக அணிதிரட்டுவதும் ஆகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, மக்கள் அழுத்தம் பைடென், ட்ரம்ப் மற்றும் பிற ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் கைகளில் இருக்க முடியும் என்று கூறுபவர்கள், உழைக்கும் மக்களை ஒரு குருட்டுச் சந்துக்குள் இட்டுச் செல்கிறார்கள் என்று எச்சரித்து வலியுறுத்தி வருகிறது.
உலக முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து ஒரு சோசலிச அமைப்பை முறையை ஸ்தாபிக்க உறுதிபூண்டுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர இயக்கத்தை கட்டியெழுப்புவது மட்டுமே முன்னோக்கி செல்லும் பாதையை வழங்குகிறது.