மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாயன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் எதிரான போரை விரிவாக்கக் கோரியும், சீனாவை அச்சுறுத்தும் வகையிலும் ஒரு போர்வெறி ஆவேச உரையை நிகழ்த்தினார்.
லெபனானுக்கு எதிரான மிருகத்தனமான குண்டுத் தாக்குதலில் கிட்டத்தட்ட 500 பேர் மீதான படுகொலையை மேற்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேலிய குண்டுகள் லெபனானின் நகரங்கள், கிராமங்களில் கட்டிடங்களை தொடர்ந்து தரைமட்டமாக்கி வருகின்றன. இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் நடக்கும் பரந்த போருக்கு, ஐயத்திற்கு இடமில்லாத வகையில், பைடென் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு குழுவைப் பற்றி பைடென் குறிப்பிடுகையில், “ஹிஸ்புல்லா, எந்தவித ஆத்திரமூட்டலும் இல்லாமல், அக்டோபர் 7 தாக்குதலில் சேர்ந்து, இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை ஏவியது. இதுபோன்ற தாக்குதல் மீண்டும் நடக்காது என்பதை உறுதிப்படுத்தும் உரிமையும் பொறுப்பும் எந்தவொரு நாட்டிற்கும் இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
“ஈரானால் முன்வைக்கப்படும் தற்போதைய அச்சுறுத்தலை சமாளிக்க வலுவான நிலைப்பாட்டைக்” கோரிய அமெரிக்க ஜனாதிபதி, அதன் பயங்கரவாத பினாமிகளுக்கு நாம் ஆக்ஸிஜனை மறுக்க வேண்டும்” என்று கூறிப்பிட்டார்.
அதே நேரத்தில், அமெரிக்கத் துருப்புக்களும், விமானம் தாங்கி போர்க்கப்பலான USS ஆபிரகாம் லிங்கனும் லெபனானுக்கு எதிராகவும், இறுதியில் ஈரானுக்கு எதிராகவும் இஸ்ரேலிய தாக்குதலை ஆதரிப்பதற்காக மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட உள்ளன.
பைடென், முடிந்தவரை, ரஷ்யாவுடனான போரை அதிகரிக்கக் கோருவதில் இன்னும் தீவிரமானவராக இருந்தார். “ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்தபோது, நாங்கள் வெறுமனே நின்று எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.” மாறாக, அமெரிக்கா தலையிட்டு பாரிய பாதுகாப்பு உதவிகளை உக்ரேனுக்கு வழங்கியது. இதன் விளைவாக, நேட்டோ முன்னெப்போதையும் விட பெரியது, வலிமையானது, மேலும் ஐக்கியப்பட்டதாக இருக்கிறது” என்று பைடென் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் விடக்கூடாது... உக்ரேனுக்கான எங்கள் ஆதரவை நாங்கள் கைவிட மாட்டோம்” என்று குறிப்பிட்டார்.
பைடெனின் வாதத்தை வலுப்படுத்தும் வகையில், ஏகாதிபத்திய சக்திகளின் சார்பாக நூறாயிரக்கணக்கான இளம் உக்ரேனியர்களின் மரணங்களுக்கு இட்டுச் சென்றுள்ள உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, “இந்த போரை பேச்சுவார்த்தைகளால் சமாதானப்படுத்த முடியாது. அதற்கு செயல்கள் தேவை” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
“ரஷ்யாவை சமாதானத்திற்கு மட்டுமே நிர்பந்திக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
ஐ.நா. பொதுச் சபையானது உலகளாவிய போரின் பெரும் விரிவாக்கத்திற்கான இடமாகும். வரவிருக்கும் நாட்களில், ரஷ்யாவிற்குள் ஆழமான இலக்குகளைத் தாக்குவதற்கு நேட்டோவின் ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் உதவும் என்று எதிர்பார்க்கப்படும் அறிவிப்பு குறித்து, அமெரிக்க அதிகாரிகளுடன் ஜெலென்ஸ்கி உயர்மட்ட சந்திப்புகளை நடத்துவார்.
அணுஆயுத போருக்கு இட்டுச் செல்லக்கூடிய அத்தகைய முடிவின் பின்விளைவுகள், அரசுக்குள் பிளவுகளை உருவாக்கி வருவதாக செய்திகள் கூறும் அளவுக்கு மிகப்பெரியளவில் உள்ளன. வாஷிங்டன் போஸ்டில் செவ்வாய்க்கிழமை வெளியான ஒரு கட்டுரையின் படி:
நிர்வாகத்திற்குள் பிளவுகள் உள்ளன: ATACMS ஏவுகணையின் தாக்குதல்களைச் சுற்றியுள்ள விதிகளைத் தளர்த்துவதற்கு பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் தனது உறுதியான எதிர்ப்பை தெளிவுபடுத்திய பின்னரும் கூட, இந்த மாதம் கியேவுக்கு விஜயம் செய்த வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், உக்ரேனிய வாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும், இறுதியில் வாஷிங்டனில் ஒரு பரந்த விவாதத்திற்காக அவற்றை மீண்டும் பைடெனிடம் கொண்டு வருவேன் என்றும் சுட்டிக்காட்டினார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளவர்கள் பாதுகாப்புத் துறைக்கும் வெளியுறவுத் துறைக்கும் இடையிலான வேறுபாடுகளை நிர்வகிக்க முயற்சிக்கும் நிலையில், அந்த கலந்துரையாடல்கள் நடந்து கொண்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரேன் மீதான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்துக்களில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், 2003 ஈராக் படையெடுப்புக்கு முன்னர் “தீமையின் அச்சு” குறித்த ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் அறிக்கைகளை எதிரொலித்து, ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் சீனாவுக்கு இடையே ஒரு தொடர்பை வரைய முயன்றார்.
“தெஹ்ரான் புட்டினுக்கு ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதால், அணு ஆயுத பிரச்சினைகள் மற்றும் விண்வெளி தகவல்கள் குறித்த தொழில்நுட்பத்தை ஈரானுடன் ரஷ்யா பகிர்ந்து கொள்கிறது” என்று பிளிங்கன் கூறினார். “பிராந்தியம் முழுவதிலும் மற்றும் அதற்கு அப்பாலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த மத்திய கிழக்கில் உள்ள பினாமிகளுக்கு ஈரான் தொடர்ந்து ஆயுதம் வழங்குவதும், பயிற்சியளிப்பதும், நிதியளிப்பதும் தொடர்கின்ற நிலையில் இது நடக்கிறது” என்று பிளிங்கன் குறிப்பிட்டார்.
காஸா மீதான இனப்படுகொலை மற்றும் கடந்த வாரம் பேஜர் குண்டுவெடிப்பு தாக்குதல் உட்பட லெபனானில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு “ஆயுதம், பயிற்சி மற்றும் நிதியுதவி” வழங்கிவரும் ஒரு அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியால் இது கூறப்படுகிறது.
“இந்த கவுன்சிலின் மற்றொரு நிரந்தர உறுப்பினரான சீனா, இயந்திர கருவிகள், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரஷ்யா தனது போர் இயந்திரத்தை மீண்டும் கட்டியெழுப்ப, மறுசீரமைக்க, வேகப்படுத்தப் பயன்படுத்தும் பிற பொருட்களை வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது” என்று பிளிங்கன் மேலும் தெரிவித்தார்.
இது, 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் நிறுவப்பட்ட கியேவில் உள்ள அதிவலதுசாரிகளின் ஆட்சிக்கு பில்லியன் கணக்கான ஆயுதங்களை வழங்கியதன் மூலமாகவும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மோதலை திட்டமிட்டு தீவிரப்படுத்தியும், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்பட்ட ஒரு அரசாங்கத்தின் ஒரு முன்னணி அதிகாரியிடம் இருந்து இந்த வார்த்தைகள் வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருந்துவரும் நிலையில், இந்தப் போர்கள் பற்றிய தீவிர கலந்துரையாடல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையை சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரித்து வருகின்றனர். உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து ட்ரம்ப் கேள்வி எழுப்புகிறார் என்றால், சீனாவுடனான மோதலுக்கு அனைத்து அமெரிக்க வளங்களும் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று அவர் நம்புவதால் மட்டுமே ஆகும்.
இந்த போர்வெறிக்கு இடையே, ஐ.நா.வில் தன் கருத்துக்களை முன்னோக்கி கொண்டு செல்லும் பாதை குறித்த வெற்றுத்தனமான, கவர்ச்சியான அறிக்கைகளுடன் பைடென், “1972 இல் அமெரிக்க செனட்டுக்கு நான் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து நான் முன்னெப்போதையும் விட எதிர்காலம் குறித்து அதிக நம்பிக்கையுடன் இருந்து வருகிறேன்” என்று கூறினார்.
உண்மையில், ஏகாதிபத்திய சக்திகளின், அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவின் அதீத பொறுப்பற்ற தன்மைக்கு அடித்தளத்தில் தீவிரமடைந்து வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடி உள்ளது.
முதலாளித்துவ தன்னலக்குழுவினது கவலைகளில் அமெரிக்க டாலரின் தலைவிதியும் உள்ளது. அமெரிக்க சார்பு Chatham House சிந்தனைக் குழுவில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், சிட்டிகுரூப்பில் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரத்தின் முன்னாள் தலைவரான டேவிட் லூபின், “அமெரிக்க டாலரின் மேலாதிக்கம் அமெரிக்க அதிகாரத்தின் ஒரு காரணம் மற்றும் விளைவு இரண்டுமே ஆகும்” என்று அறிவித்தார்.
“டாலரின் மேலாதிக்கம் பல நாடுகளுக்கு அசௌகரியமாக இருந்தாலும், அமெரிக்க இராணுவ சக்தி... எதிர்காலத்தில் சிறந்த நாணயமாக அதன் அந்தஸ்தைப் பாதுகாக்கும்” என்று லூபின் மேலும் தெரிவித்தார்.
இந்த வார்த்தைகளுடன், அதிகாரத்தின் மர்மங்களை (Arcanium Imperi) அல்லது சாம்ராஜ்யத்தின் இரகசியத்தை சிட்டி குழுமத்தின் முன்னாள் வங்கியாளர் அம்பலப்படுத்துகிறார்: கொரியாவில் இருந்து வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, இப்போது ரஷ்யா, காஸா, என உலகெங்கிலும் அமெரிக்கா நடத்திய போர்களில் இறந்த மில்லியன் கணக்கான மக்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க பலியாக்கப்பட்டுள்ளனர்.
இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பூகோள மேலாதிக்கம் என்பது இராணுவ வன்முறை மூலமாக அமெரிக்க நிதிய தன்னலக்குழுவின் செல்வத்தையும் சலுகைகளையும் பாதுகாப்பதற்கான கடைசி, சிறந்த நம்பிக்கையாகும். இந்த இராணுவத் தாக்குதல், தொழிலாள வர்க்கத்தின் மீதான தீவிரமான போரையும் உள்ளடக்கியிருக்கும். இதற்கு பைடெனின் கீழ் வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்டுவரும் பேரழிவு தரும் வீழ்ச்சியானது, ஒரு முன்னோட்டமாக மட்டுமே இருக்கும்.
ஐ.நா. பொதுச் சபையில் தனது தொடக்க உரையில், அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “நமது உலகம் ஒரு சூறாவளியில் உள்ளது... புவிசார் அரசியல் பிளவுகள் தொடர்ந்து ஆழமடைந்து வருகின்றன. போர்கள், அவை எவ்வாறு முடிவடையும் என்பதற்கான எந்த துப்பும் இல்லாமல் சீற்றமடைகின்றன, மேலும் அணு ஆயுத தோரணைகள் மற்றும் புதிய ஆயுதங்கள் ஒரு இருண்ட நிழலை ஏற்படுத்துகின்றன. கற்பனை செய்ய முடியாத, உலகை மூழ்கடிக்கும் அபாயத்தைக் கொண்ட ஒரு வெடிமருந்துக் கிடங்கை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
இந்த எச்சரிக்கைகள் எவ்வளவு துல்லியமாக இருந்தாலும், இந்த பேரழிவுக்கான காரணங்கள் இயற்கை பேரழிவு அல்லது கடவுளின் செயல்களே ஒழிய, அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவருக்குப் பிறகு தொடர்ந்து உரையாற்றிய இதர ஏகாதிபத்திய தலைவர்களின் நடவடிக்கைகளோ மற்றும் அறிக்கைகளோ அல்ல என்பதுபோல் குட்டரெஸ் பேசினார்,
இந்த ஆழமான நெருக்கடிக்கு அதன் சொந்த தீர்வை முன்னெடுக்கும் பொறுப்பு தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது. உலகெங்கிலும், சமூக ஆதார வளங்களின் பெரும் பங்கு போருக்கு திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் அவர்களின் வாழ்க்கைத் தரங்களின் தேக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கின்றனர். தீவிரமடைந்து வரும் இரத்தக்களரியை நிறுத்துவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார கோரிக்கைகளை, சர்வதேச சோசலிச முன்னோக்கால் உயிரூட்டப்பட்ட ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதுடன் இணைப்பது அவசியமாகும்.