முன்னோக்கு

லெபனான் மீதான பயங்கரவாத தாக்குதல் மத்திய கிழக்கில் அமெரிக்க-இஸ்ரேல் போரில் புதிய போர் முனையை திறக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த செவ்வாய் மற்றும் புதன் அன்று, இஸ்ரேலால் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஆயிரக்கணக்கான மொபைல் தகவல்தொடர்பு சாதனங்கள், லெபனான் முழுவதும் வெடித்து சிதறின. இதில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட டசின் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றனர்.

மக்கள் பாதுகாப்பு முதல்-உதவியாளர்கள், லெபனானின் தெற்கு துறைமுக நகரமான சிடோனில், கையடக்க பேஜர் வெடித்ததில் காயமடைந்த ஒருவரைச் சுமந்து செல்கிறார்கள். செப்டம்பர் 17, 2024 செவ்வாய்க்கிழமை [AP Photo]

லெபனான் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் ஒரு அப்பட்டமான போர்க்குற்றமாகும். அவர்கள் படுகொலை, துரோகம் மற்றும் கண்மூடித்தனமான குண்டுவெடிப்புத் தடை தொடர்பான போர்ச் சட்டங்களை மீறுகின்றனர்.

“சர்வதேச மனிதாபிமான சட்டம், (பொதுமக்கள் ஈர்க்கப்படக்கூடிய அல்லது சாதாரண பொதுமக்களின் தினசரி பயன்பாட்டுடன் தொடர்புடைய பொருள்கள்) பொதுமக்களை பெரும் ஆபத்தில் ஆழ்த்துவதைத் தவிர்க்கவும், லெபனான் முழுவதும் தொடர்ந்து வெளிவரும் பேரழிவுக் காட்சிகளை உருவாக்கவும் சூழ்ச்சிப் பொறிகளைப் (booby traps) பயன்படுத்துவதைத் தடைசெய்கிறது,” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா இயக்குநர் லாமா ஃபகிஹ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் மரணத்தை நியூயோர்க் டைம்ஸ் பின்வருமாறு விவரித்தது:

“செவ்வாய்க்கிழமை பாத்திமா சமையலறையில் இருந்தபோது மேஜையில் இருந்த பேஜர் பீப் ஒலிக்கத் தொடங்கியது,” என்று அவளது அத்தை கூறினார். “அதை தனது தந்தையிடம் கொண்டு வருவதற்காக அவள் அந்த சாதனத்தை எடுத்தாள், அது வெடித்தபோது அதைப் பிடித்துக் கொண்டிருந்த அந்த குழைந்தையின் முகம் சிதைந்து, இரத்த வெள்ளத்தில் அறையை விட்டு வெளியேறினாள்,” என்று அவர் கூறினார். “பாத்திமா ஆங்கிலத்தில் பாடங்களை படிக்க முயன்றாள்,” என்றும், “அவள் ஆங்கிலத்தை நேசித்தாள்” என்றும் திருமதி மௌசவி கூறினார்.

இந்தக் குற்றங்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் இழைக்கப்பட்டவை என்றாலும், அவை மத்திய கிழக்கை அடிபணிய வைப்பதற்கும் மேலாதிக்கம் செய்வதற்கும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் வரம்பற்ற நிதி, இராணுவ மற்றும் அரசியல் ஆதரவின் உதவியுடன் அவை திட்டமிடப்பட்டிருந்தன.

புதன்கிழமை வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பில், எந்தவொரு உணர்ச்சியும் இன்றி, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கான அமெரிக்காவின் பொறுப்பையோ அல்லது இதுபற்றி முன்கூட்டி அறிந்ததையோ, வெளிப்படையாக கேலி செய்வதை அவரால் தவிர்க்க முடியவில்லை. “நாங்கள் இதில் ஈடுபடவில்லை” என்று கூறிய கிர்பி, அவரது வாயை காது வரை இழுத்து சிரித்தார்.

இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியின் அதிகாரிகள் இந்த பாரிய படுகொலை நடவடிக்கை குறித்து பகிரங்கமாக பெருமிதம் கொண்டனர். இந்த தாக்குதலின் செய்தி அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த பிறகு, “ஹிஸ்புல்லா போன்ற எந்தவொரு அமைப்பினது இருத்தலின் அச்சுறுத்தலை குறிவைத்து, அதனை இல்லாதொழிக்கும் முயற்சிகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என்று ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க செனட்டர் ஜோன் ஃபெட்டர்மேன் ட்விட்டர் X இல் எழுதினார்.

லெபனான் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதல், கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட அந்நாட்டுடனான அதன் போரை பாரியளவில் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த குண்டுத் தாக்குதல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரிசபை கூடி “போரின் நோக்கங்களை புதுப்பிக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தது. இதில் இஸ்ரேலிய மக்கள் வடக்கு இஸ்ரேலுக்கு திரும்புவதும் அடங்கும். இஸ்ரேல், லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான போரை விரிவாக்குவதற்கு ஆக்ரோஷமாக இருந்து வருகிறது.

புதனன்று இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட், கமாண்டோக்கள் மற்றும் துணை இராணுவத்தினரை உள்ளடக்கிய இராணுவத்தின் 98வது பிரிவு, காஸாவில் இருந்து வடக்கு இஸ்ரேலுக்கு மாற்றப்படுவதாக அறிவித்தார்.

“’ஈர்ப்பு மையம்’ வடக்கு நோக்கி நகர்கிறது, அதாவது வடக்கு போர் முன்னரங்கிற்கு படைகள், ஆயுத வளங்கள் மற்றும் ஆற்றலை நாங்கள் ஒதுக்குகிறோம்” என்று கேலண்ட் கூறினார்.

இஸ்ரேலியப் படைகளை வடக்கிற்கு மாற்றுவது என்பது காஸாவின் மக்கள்தொகையின் துன்பத்தைத் தணிப்பது என்று அர்த்தமல்ல, அவர்கள் முற்றிலும் முற்றுகையிடப்பட்டு, முறையாகப் பட்டினி போடப்பட்டு, தண்ணீர், மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் உள்ளனர். அக்டோபரில் இருந்து, உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையின்படி, 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலினால் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வானது, உண்மையான இறப்பு எண்ணிக்கை 186,000 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தது.

லெபனான் மீதான தாக்குதல் என்பது லெபனானுக்கு எதிராக மட்டும் இல்லாமல் ஈரானுக்கு எதிராகவும் போரைத் தூண்டும் நோக்கத்துடன் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் சமீபத்தியதாகும்.

கடந்த ஏப்ரலில், டமாஸ்கஸில் கூடியிருந்த ஈரானிய இராணுவ அதிகாரிகள் குழுவினர், இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்டனர். இதற்கு ஈரான் 300 ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை மேற்கொண்டபோதிலும், கிட்டத்தட்ட இவை அனைத்தும் இடைமறிக்கப்பட்டன. ஜூலையில், ஹிஸ்புல்லாவின் மூத்த உறுப்பினரான ஃபுவாட் ஷுக்கரை பெய்ரூட்டில் ஒரு தாக்குதலின் மூலம் இஸ்ரேல் படுகொலை செய்தது, அதைத் தொடர்ந்து ஈரானில் ஒரு இராணுவ விருந்தினர் மாளிகையில் இருந்த ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.

லெபனான் முழுவதும் இடம்பெற்ற இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையை குற்றமயமாக்குவதில் ஒரு புதிய கட்டத்தைக் குறிப்பதுடன், அரசியல் தலைவர்கள் மற்றும் பரந்த சாதாரண மக்கள் ஆகியோர் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நெறிப்படுத்தப்படுவதற்கு ஒரு முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளது.

லெபனானின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ஹிஸ்புல்லா 2022 வரை நாட்டின் நாடாளுமன்றத்தில் மேலாதிக்க நிலையை வகித்து வருகிறது. இந்த தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டவர்களில் பலர் சிப்பாய்கள் அல்ல, மாறாக அரசியல்வாதிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆவர். நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான குண்டுகள் வெடித்துச் சிதறிய நிலையில், ஹிஸ்புல்லாவுடன் எந்த தொடர்பும் இல்லாத இரண்டு குழந்தைகள் உட்பட, பலர் கொல்லப்பட்டனர்.

முன்னர் பயங்கரவாதம் என்று வரையறுக்கப்பட்ட போரின் வரையறையை விரிவுபடுத்துவதற்கு ஒரு முன்னுதாரணம் அமைக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட பொதுமக்களைக் படுகொலை செய்தல் மற்றும் கண்மூடித்தனமான கொலைகளை மேற்கொண்டு ஊனங்களை ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு நோக்கத்துடன் அன்றாடப் பொருட்களில் சூழ்ச்சிப் பொறிகளை வைப்பது போன்ற தடைசெய்யப்பட்ட முறைகளை சட்டப்பூர்வமாக்குவதே இதன் விளைவு ஆகும்.

இது மத்திய கிழக்கிற்கு அப்பாலும் தாக்கங்களைக் கொண்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகள் முழுவதிலும், இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகள் அமெரிக்க உலகளாவிய கொள்கைக்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மிக முக்கியமான உதாரணம் “இலக்கு வைக்கப்பட்ட கொலை” என்ற கோட்பாடு ஆகும். அதாவது, அரசால் அங்கீகரிக்கப்பட்ட படுகொலை ஆகும்.

நவம்பர் 2000 இல், இஸ்ரேல் “இலக்கு வைக்கப்பட்ட படுகொலை கொள்கையை அது செயல்படுத்தியதை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட உலகின் முதல் நாடாக ஆனது” என்று 2009 இல் சித்திரவதை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளராக சேவையாற்றிய நில்ஸ் மெல்ஸர் குறிப்பிட்டார். மேலும், விரைவிலேயே, அமெரிக்கா “இலக்கு வைக்கப்பட்ட கொலை முறையை வெளிப்படையாக ஏற்க” நகர்ந்து வருகிறது என்று எழுதினார்.

2002 ஆம் ஆண்டில் யேமனில் போர் மண்டலத்திற்கு வெளியே அமெரிக்கா அதன் முதல் அறியப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. அமெரிக்காவில் பிறந்த, அமெரிக்க குடிமக்களான மதகுரு அன்வர் அல்-அவ்லாகி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் 2011 இல், யேமனில் தனித்தனி ட்ரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். 2020 ஆம் ஆண்டில், ஈராக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது, ​​ஈராக்கில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானிய இராணுவ உயர் அதிகாரி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

“இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள்” ஏற்றுக் கொள்ளப்பட்டதைப் போலவே, இஸ்ரேலால் இப்போது இழைக்கப்பட்டு வருகின்ற போர்க் குற்றங்கள், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளது இன்னும் பெரிய குற்றங்களுக்கான புதிய அடித்தளமாக மாறும்.

இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல், முற்றிலும் பாசாங்குத்தனமாக, காஸா இனப்படுகொலையின் போலி-இடது ஆதரவாளர்களால் கண்டிக்கப்பட்டது. “இந்த தாக்குதல் தெளிவாகவும் ஐயத்திற்கிடமின்றியும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதுடன், ஒரு பரந்த மோதலைத் தடுப்பதற்கான அமெரிக்க முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது” என்று ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் எழுதினார்.

ஒகாசியோ-கோர்டெஸ் கூறுவது போல், மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையுடன் முரண்படுவதற்கு முற்றிலும் மாறாக, லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் முழு ஆதரவுடன் தொடர்கிறது.

ஜூலை மாதம் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகு அமெரிக்க காங்கிரசின் இரு அவைகளிலும் ஒரு உரையை நிகழ்த்தினார். அதில் அவர் காஸாவில் நடக்கும் இனப்படுகொலையை லெபனான் மற்றும் ஈரானுக்கு எதிரான போராக விரிவாக்குவதற்கு உறுதி பூண்டார். காங்கிரஸில் நெதன்யாகு உரையாற்றியதைத் தொடர்ந்து, அவர் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸைச் சந்தித்தார், “ஈரான் மற்றும் ஹமாஸ் மற்றும் ஹஸ்புல்லா போன்ற ஈரான்-ஆதரவிலான போராளிக் குழுக்களிடமிருந்து இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நான் எப்போதும் உறுதிப்படுத்துவேன்,” என்று சூளுரைத்தார்.

ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கில் வைக்கும் ஒரு உலகளாவிய இராணுவ தாக்குதலின் பாகமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கு எங்கிலும் அதன் போரை விரிவுபடுத்தி வருகிறது. லெபனான் முழுவதும் ஆயிரக்கணக்கான வெடிமருந்துகள் வெடித்துக் கொண்டிருந்த அதே கணத்தில், அமெரிக்கா தனது திட்டங்களை இறுதி செய்து கொண்டிருந்தது. இவை இம்மாதக் கடைசியில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உக்ரேன் நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது கிட்டத்தட்ட வரம்பற்ற தாக்குதல்களை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இது உலகளவில் அணுவாயுதப் போராக தீவிரமடைய அச்சுறுத்துகிறது.

லெபனானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதல் ஒரு எச்சரிக்கையாகும். அமெரிக்கா அதன் பூகோள மேலாதிக்கத்தை பாதுகாப்பதற்காக உலகம் முழுவதும் போர்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அது அதன் நோக்கங்களை அடைவதற்கு பாரிய படுகொலை மற்றும் அதற்கான பயங்கரவாத வழிமுறைகளை பயன்படுத்த விரும்புகிறது.

Loading