முன்னோக்கு

கல்லூரி வளாகங்களில் போருக்கும் இனப்படுகொலைக்கும் எதிரான போராட்டங்கள் மீதான போலிஸ் -அரசு தாக்குதல்களை எதிர்ப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பைடென்-ஹாரிஸ் நிர்வாகம், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி மாநில அரசாங்கங்கள், மற்றும் உள்ளூர், மாநில மற்றும் தேசிய போலிஸ் ஆகியவற்றுடன் கைகோர்த்து செயல்பட்டு வரும் பல்கலைக்கழக நிர்வாகங்கள், மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதும், காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய படுகொலை மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் ஆகியவற்றை எதிர்க்க முனையும் அனைவரின் ஜனநாயக உரிமைகள் மீதும் முன்கண்டிராத ஒடுக்குமுறையை நடத்தி வருகின்றன.

UCLA வளாகத்தில் பாலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களும் போலிசாரும் நேருக்கு நேர் எதிர்கொள்கின்றனர். மே 23, 2024, in Los Angeles.  [AP Photo/Damian Dovarganes]

அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி வளாகங்களில், போராட்ட எதிர்ப்புகளை கட்டுப்படுத்தும் புதிய நடத்தை விதிகளின் வரிசையை மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பாரிய மாணவர் போராட்டங்களின் மையமாக போராட்ட முகாம்கள் இருந்தன. இவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த கால நடவடிக்கைகளுக்காக மாணவர்களின் இடைநீக்கம் மற்றும் நாடுகடத்துதல் ஆகியவற்றுடன் மாணவர்களை தண்டிக்கவும், வருங்காலத்தில் அவர்களை அச்சுறுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பல வளாகங்களில், குறிப்பாக கலிபோர்னியாவில், மாணவர்கள் இரட்டிப்பாகவும் மும்முறையாகவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளாகத்தில் தங்குமிடங்களில் வசிக்கும் குடியிருப்பு உதவியாளர்கள், வளாகத்தில் இருப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் வசிக்க இடம் மற்றும் வாடகை அல்லது உதவித்தொகை செலுத்தும் வேலை ஆகியவற்றை இழந்துள்ளனர். மற்றவர்கள் தங்கள் சொந்த கணினிகளை வைத்திருக்கவோ அல்லது பல்கலைக்கழக வலையமைப்பு அல்லது வகுப்பறைகளை அணுகவோ முடியவில்லை. இதனால் பணிகளை முடிக்கவோ அல்லது பிற பாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவோ இயலாது உள்ளனர்.

கடந்த வாரம், வடக்கு கலிபோர்னியாவின் ACLU அறக்கட்டளை, எதிர்ப்பு சட்டம் மற்றும் வழக்கு மையம், மற்றும் சிவில் உரிமைகள் (Center for Protest Law & Litigation, and civil rights) வழக்கறிஞர் தோமஸ் சீபாக் (Thomas Seabaugh) ஆகியோர் சாண்டா குரூஸில் (Santa Cruz) உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர். கடந்த செமஸ்டரில், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்ட பின்னர் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வளாகத்திலிருந்து தடை செய்வதற்கான பல்கலைக்கழகத்தின் முடிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வாதிட்டனர்.

“எங்கள் வாடிக்கையாளர்கள் யாருக்கும் அல்லது எதற்கும் குறிப்பிடத்தக்க காயத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடத்தையில் ஈடுபடவில்லை” என்று சீபாக் கூறினார். மேலும், “அவர்களை அந்த இடத்திலேயே தடை செய்தது கடுமையான நடவடிக்கை மட்டுமல்ல, அது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் கல்வி சுதந்திரங்களை மீறுவதாகும். வரவிருக்கும் கல்வியாண்டில், UCSC அதிகாரிகள் சட்டத்திற்கு இணங்குவதை உறுதிசெய்யவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வளாகத்தில் இருந்து தடை செய்வதற்கான அவர்களின் அதிகாரத்தின் அரசியலமைப்பு வரம்புகளை மதிப்பதையும் உறுதிப்படுத்த நாங்கள் வழக்குத் தொடுத்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்சியால் நடத்தப்படும் மாநில அரசாங்கங்கள், கலிபோர்னியா, மிச்சிகன் மற்றும் நியூ யோர்க்கில் உள்ளதைப் போலவே, காஸா இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர்களை இலக்கு வைப்பதில் குறிப்பாக வக்கிரமாக உள்ளன. மிச்சிகனில், அட்டார்னி ஜெனரல் டானா நெசெல் கடந்த வசந்த காலத்தில் அவர்களின் நடவடிக்கைகளுக்காக 11 மிச்சிகன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வந்துள்ளார். அத்துமீறி நுழைந்து ஒரு போலீஸ் அதிகாரிக்கு இடையூறு விளைவித்ததாக ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். இருவர் மீது அத்துமீறி நுழைந்ததாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இருவர் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற தவறான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை, செப்டம்பர் 9 ஆம் தேதி, மிக அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டது. ஆன் ஆர்பர், மிச்சிகன் போலிசார், சோசலிச சமத்துவக் கட்சி  (SEP)  மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் (IYSSE)  ஆதரவாளர்களை, வளாகத்தில் நடைபெறும் கூட்டம் பற்றி மாணவர்கள் மற்றும் வளாகத் தொழிலாளர்களுக்கு தெரிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். அடுத்த நாள் SEP ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் இக்கூட்டத்தில் உரையாற்றுவதற்கு இருந்தார்.

ஒரு சியோனிச பேராசிரியரின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அடுத்து, போலிசார் SEP ஆதரவாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளையும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதையும் தடை செய்தனர்.

மேலும், வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படும் என்ற அச்சுறுத்தலின் கீழ், நான்கு சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களும் அடுத்த ஆண்டு வளாகத்தில் காலடி எடுத்து வைப்பதைத் தடுக்கும் வகையில் போலிசார் எழுத்துப்பூர்வமாக வழங்கிய உத்தரவு இன்னும் மூர்க்கத்தனமாக இருந்தது.

திங்களன்று, சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் இந்த மேற்கோள்களுக்கு ஒரு உத்தியோகபூர்வ ஆட்சேபனையை வெளியிட்டனர். அது பின்வருமாறு குறிப்பிட்டது:

இன்னும் ஏழு வாரங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. நாங்கள் எங்கள் வேட்பாளருக்காக வளாகத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய விரும்புகிறோம். ஒவ்வொரு நாளும் இந்த தடைகள் நடைமுறையில் இருக்கும், நமது அரசியலமைப்பு உரிமைகளை மீறும் எடை அதிகமாகிறது. தற்போதைய நிலையை எதிர்க்கும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களை போலிசார் துன்புறுத்த அனுமதிக்கப்படும் மலிவான சர்வாதிகாரத்தில் நாங்கள் இல்லை, மேலும் எங்கள் உரிமைகளை முழுமையாக உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

ஜனநாயக உரிமைகள் மீது பெருகிவரும் தாக்குதலை எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை அணிதிரட்டுவது அவசியமாகும். காஸா இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர்களுக்கு இன்று செய்யப்படுவது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான மிகப் பரந்த தாக்குதல்களுக்கு முதலாளித்துவ அரசின் தயாரிப்பு என்பதை தொழிலாளர்கள் அங்கீகரிக்க வேண்டும்.

1960 களின் பாரிய போர்-எதிர்ப்பு மாணவர் இயக்கம் FBI இன் COINTELPRO போன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் இலக்காக ஆனது என்பது நன்கு அறியப்பட்டதே. அது வியட்நாம் போருக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்த மாணவர்களை உளவு பார்த்து அவர்களை பழிவாங்க முனைந்தது. ஆனால் பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் மற்றும் காங்கிரஸில் உள்ள பாசிசவாத குடியரசுக் கட்சியினரின் அனுசரணையின் கீழ், ஏற்கனவே என்ன நடந்துள்ளது என்பது, அந்த நேரத்தில் பயன்படுத்தப்பட்ட ஜனநாயக-விரோத முறைகளுக்கும் அப்பால் செல்கிறது என்பதைக் கூறியாக வேண்டும்.

கடந்த கல்வியாண்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் ஊடக சூனிய வேட்டையால் குறிக்கப்பட்டது. இனப்படுகொலை எதிர்ப்பு போராட்டங்கள் “யூத-எதிர்ப்புவாதம்” என்று முத்திரை குத்தப்பட்டது. அதே நேரத்தில் மாணவர்கள் கண்ணீர் புகை, மிளகுத்தூள், ரப்பர் தோட்டாக்களால் சுடப்பட்டனர், குண்டாந் தடிகளால் தாக்கப்பட்டனர், மற்றும் பல்வேறு வகையான குற்றவியல், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

பல பல்கலைக்கழக வேந்தர்கள் “யூத-எதிர்ப்பு” போராட்டங்கள் மீது போதுமானளவுக்கு கடுமையாக ஒடுக்கவில்லை என்ற அடிப்படையில் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். மேலும் இந்த இலையுதிர்காலத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் மேலும் எழுச்சி பெறாமல் இருப்பதை உறுதிசெய்ய, பணக்கார நன்கொடையாளர்கள் மற்றும் அரசாங்கத்திடம் இருந்து பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அடக்குமுறையின் முன்னெச்சரிக்கை தன்மை குறிப்பாக கவனிக்கத்தக்கது. இஸ்ரேலிய ஆட்சி இன்னும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக பாரிய போர்க்குற்றங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், பெருநிறுவன உயரடுக்கு மற்றும் அதன் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தில் உள்ளவர்களின் கவலையானது, கடந்த ஆண்டு இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் நிகழும் என்பதாகும்.

காஸா நிகழ்வுகளால் தூண்டப்பட்ட போர்-எதிர்ப்பு உணர்வுகள், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும், ஹிஸ்புல்லா, ஹூதிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் இராணுவ ஆத்திரமூட்டல்களுக்கு எதிராகவும், ஒரு பரந்த எதிர்ப்பு இயக்கத்திற்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளதாக ஆளும் உயரடுக்கு அஞ்சுகிறது. மேலும், மத்திய கிழக்கில் ஈரான், மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுடன் முழு அளவிலான போரும் தீவிரமடைந்து வருகிறது. அடுத்த ஆண்டு விரைவில் போர் வெடிக்கும் என்று சில உயர்மட்ட அமெரிக்க இராணுவ பிரமுகர்கள் கணித்துள்ளனர்.

இந்த பெருகும் நெருக்கடியில், நிதியத் தன்னலக்குழுவின் மிகப் பெரிய அச்சம் என்பது, ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான அரசியல் எதிர்ப்பு மற்றும் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, கௌரவமான வீடுகள் போன்ற சமூக உரிமைகளை பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டங்கள் ஒன்றிணைவது பற்றியதாகும். குறிப்பாக, சோசலிசத்திற்கான மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்த நனவுபூர்வமாக போராடும் ட்ரொட்ஸ்கிச இயக்கமான சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் குறித்து அவர்கள் அஞ்சுகின்றனர்.

Loading