முன்னோக்கு

மக்ரோனின் சர்வாதிகார அச்சுறுத்தலும் பிரான்சின் புதிய மக்கள் முன்னணியின் துரோகமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த புதன்கிழமையன்று, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கும் அவசரகால அதிகாரங்களைப் பெறுவதற்கும் அரசியலமைப்பின் 16 வது பிரிவைப் பயன்படுத்த முடியும் என்று பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரேனில் போர் மற்றும் பிரிட்டன் மற்றும் பிரான்சில் இடம்பெறும் திடீர் தேர்தல்களால் தொழிலாளர்களுக்கு முன்வைக்கப்படும் முக்கியமான பிரச்சனைகளை இது அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது: பிரான்சில் சர்வாதிகார ஆட்சியின் அச்சுறுத்தல் தேசிய பேரணி (RN) போன்ற அதி தீவிர வலதுசாரி சக்திகளிடமிருந்து மட்டும் வரவில்லை. ரஷ்யாவுடனான போரையும் உள்நாட்டில் வர்க்கப் போரையும் தீவிரப்படுத்த ஆசைப்படும் முதலாளித்துவ ஸ்தாபனக் கட்சிகளும் சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு திருப்பத்தைப் பற்றி விவாதித்து வருகின்றன.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) தேசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபேபியன் ரூசல், பாரிஸில் உள்ள ஜனாதிபதியின் எலிசீ மாளிகையில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் கைகுலுக்குகிறார். திங்கட்கிழமை, June 21, 2022. [AP Photo/Ludovic Marin]

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் புதிய மக்கள் முன்னணி போன்ற, சமூக ஜனநாயக மற்றும் போலி-இடது சக்திகளுக்கு அடிபணிந்தால் தொழிலாளர்கள் சர்வாதிகார அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட முடியாது. பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான மக்ரோனின் அச்சுறுத்தல் என்பது, தேர்தலில் மக்ரோன் மற்றும் தேசிய பேரணிக் கட்சியுடன் போராடி, பாராளுமன்ற பெரும்பான்மையை வென்று புதிய முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்கான புதிய மக்கள் முன்னணியின் உறுதிமொழி என்பது வெற்று மற்றும் திவாலானது என்பதை வெளிப்படுத்துகிறது.

பிரெஞ்சு அரசியலமைப்பின் பிரிவு 16ஐ அமுல்படுத்த ஜனாதிபதி அழைப்பு விடுத்தால், பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கும் கட்டுப்பாட்டின்றி ஆட்சி செய்வதற்கும் வரையறுக்கப்படாத “அவசரகால அதிகாரங்களை” அவருக்கு வழங்குகிறது. இந்த சட்டப் பிரிவு பின்வருமாறு கூறுகிறது:

குடியரசின் நிறுவனங்கள், தேசத்தின் சுதந்திரம், அதன் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அதன் சர்வதேச கடமைகளுக்கான மரியாதை ஆகியவை கடுமையாக அச்சுறுத்தப்பட்டு, அரசியலமைப்பு அதிகாரிகளின் இயல்பான செயல்பாடு குறுக்கிடப்பட்டால், குடியரசுத் தலைவர் இந்த சூழ்நிலைகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை, பிரதமர், பாராளுமன்ற அவைகளின் தலைவர்கள் மற்றும் அரசியலமைப்பு நிர்ணயசபை ஆகியோருடன் அதிகாரப்பூர்வமாக கலந்தாலோசிப்பதன் மூலம் எடுக்கிறார். பின்பு இதனை அவர் ஒரு செய்தியில் தேசத்திற்கு தெரிவிக்கிறார்.

இந்த சட்டப் பிரிவை மக்ரோன் ஏன் பயன்படுத்த முடியும் என்பதற்கான காரணம் எதுவும் பகிரங்கமாக வழங்கப்படவில்லை. ஐரோப்பா1 வானொலி, ஜூலை 7 தேர்தலுக்குப் பிறகு “அதிகப்படியாக” எதிர்ப்புகள் இருக்கும் என்று அவர் அஞ்சுவதாகக் கூறுகிறது. அதே நேரத்தில், தீவிர வலதுசாரி CNews சேனல், “தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சியும் [பாராளுமன்ற] பெரும்பான்மையைப் பெறாவிட்டால்” அந்த சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம் என்று கூறுகிறது. நியாயப்படுத்துவது எதுவாக இருந்தாலும், சட்டப் பிரிவு 16 வது பிரிவை செயல்படுத்துவது என்பது, வங்கிகளின் தெய்வீக உரிமையால் சர்வாதிகாரியாக மாறுவதற்கு மக்ரோனின் அரசியலமைப்புக்கு எதிரான முயற்சியாக இருக்கும்.

பிரதம மந்திரி ரிஷி சுனக் பிரிட்டனில் ஜூலை 4-ம் தேதி திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தது போல், மக்ரோனின் திடீர்த் தேர்தலில் தீர்க்கமான பிரச்சினை ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் ஆகும். இந்த தேர்தல்கள் வாஷிங்டனில் ஜூலை 9 நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன் தீவிர வலதுசாரிகளால் உத்தியோகபூர்வ கொள்கையை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது போரின் பாரிய விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கும்.

நேட்டோ சக்திகளின் ஆளும் வர்க்கங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தில் அவர்களின் சதித்திட்டங்களுக்கு பெரும் மக்கள் எதிர்ப்பு இருப்பதை அறிந்துள்ளனர். ஜூன் 9 யூரேசியா குழுவின் கருத்துக்கணிப்பு, 94 சதவீத அமெரிக்கர்களும், 88 சதவீத மேற்கு ஐரோப்பியர்களும் உக்ரேனில் ரஷ்யாவுடன் நேட்டோ சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால், நேட்டோ ரஷ்யாவின் “மூலோபாய தோல்விக்கு” கூறப்பட்ட போர் திட்டங்களை, உலக வெற்றியின் ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக தொடர உறுதியாக உள்ளது. நேட்டோவின் திட்டமிடுபவர்கள் மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்தை கட்டாயப்படுத்தவும், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் மூலோபாய கனிமங்களை சூறையாடவும், சிரியா மற்றும் நேட்டோவால் குறிவைக்கப்பட்ட பிற நாடுகளில் இருந்து இராணுவ ஆதரவை திரும்பப் பெற ரஷ்யாவை கட்டாயப்படுத்தவும், இறுதியில் ரஷ்யாவை சீனா மீதான நவ-காலனித்துவ போருக்கான தளமாக பயன்படுத்தவும் இலக்கு வைத்துள்ளனர். ஆகவே, மக்ரோனின் சர்வாதிகாரத்திற்கான சதி ஒரு எச்சரிக்கையாகும்: முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயகத்தையோ அல்லது தொழிலாளர்களையோ அதன் உலகளாவிய போர் நிகழ்ச்சி நிரலுக்கு இடையூறாக நிறுத்த விரும்பவில்லை.

பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஜோன் லுக் மெலன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சி, மற்றும் பசுமைக் கட்சியின் அதிகாரிகளால் அழைக்கப்படும் புதிய மக்கள் முன்னணி கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் தொழிலாளர்கள் போரை நிறுத்த முடியாது. புதிய மக்கள் முன்னணியானது, ஆளும் வர்க்கம் முன்கூட்டிய தேர்தல்கள் மூலம் செயல்படுத்த முயற்சிக்கும் அரசியல் ஸ்தாபனத்தின் வலதுசாரி மறுசீரமைப்பில் முழுமையாக பங்கேற்கிறது.

புதிய மக்கள் முன்னணி என்பது 1934-1938 ஆம் ஆண்டிலிருந்த மக்கள் முன்னணி அல்ல. மாறாக, அன்றைய மக்கள் முன்னணியானது, தொழிலாளர் அகிலத்தின் பிரெஞ்சு சமூக ஜனநாயகப் பிரிவு (SFIO) மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (PC) ஆகிய பாரிய தொழிலாளர் கட்சிகளை, முதலாளித்துவ தீவிர தாராளவாதக் கட்சியுடன் ஒன்றிணைத்தது.

முதலாளித்துவ தாராளவாதத்துடன் தொழிலாளர்களை கட்டிப்போட்ட இந்தக் கூட்டணியின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கி எச்சரிக்கை விடுத்தார். இந்தக் கூட்டணி, எட்வர்ட் ஹெரியட் மற்றும் எட்வார்ட் டாலடியர் போன்ற பிரமுகர்கள் தலைமையிலான தீவிரக் கட்சியின் ஊழல் கும்பல்களுக்கு SFIO மற்றும் PC யில் உள்ள திரளான தொழிலாளர்களை அடிபணியச் செய்தது. 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தை விற்றுத்தள்ளி, தொழிலாளர்கள் அரசு அதிகாரத்திற்கு செல்லும் சோசலிசத்திற்கான போராட்டத்தைத் தடுத்த பின்னர் வீழ்ச்சியடைந்த இந்தக் கூட்டணி, 1940ல் நாசிசத்துடன் ஆளும் உயரடுக்கின் ஒத்துழைப்புக்கு வழி வகுத்தது.

SFIO தலைமையின் மீது கசப்பான விரோதம் இருந்தபோதிலும், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் SFIO லிருந்த சாமானிய தொழிலாளர்களிடையே பணியாற்ற, சிறிது காலத்திற்கு SFIO இல் நுழைய முடிந்தது. உண்மையில், இன்றைய புதிய மக்கள் முன்னணியோடு ஒப்பிட்டு பார்க்க முடியாத மட்டத்துக்கு, அன்றைய மக்கள் முன்னணியில் இருந்த தொழிலாளர் கட்சிகள் தமது கொள்கைகளை நிறைவேற்றி இருந்தன. அவர்கள் முகமூடி அணிந்திருந்த பாசிச ஆயுத குண்டர்களால் தொழிலாளர் இயக்கத்தின் மீதான தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கு எப்போதும் தயார் நிலையிலிருந்த (TPPS) தொழிலாளர் போராளிக் குழுவை உருவாக்கியிருந்தனர். மற்றும் 8 மணி நேர வேலைநாள் மற்றும் ஊதியத்துடனான விடுமுறைகள் உட்பட முக்கிய சமூக சீர்திருத்தங்களையும் அவர்கள் முன்மொழிந்தனர்.

இன்றைய புதிய மக்கள் முன்னணியானது, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நீண்டகால முதலாளித்துவக் கட்சியும் 1971 இல் வசதியான நடுத்தர வர்க்கத்தின் கட்சிகளுடன் நிறுவப்பட்ட சோசலிசக் கட்சியை ஒன்றாகக் கொண்டு வருகிறது. 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தினால் கலைக்கப்பட்டதில் இருந்து பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்க அடித்தளத்தை இழந்த PCF அதிகாரத்துவம் மற்றும் “ஜனரஞ்சக” LFI கட்சி ஆகியவை இதில் அடங்கும். இது குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தங்கள் எதையும் முன்மொழியவில்லை, மாறாக, ரஷ்யாவுடனான நேட்டோவின் போருக்கான ஆதரவை ஆக்ரோஷமாக சமிக்ஞை செய்கிறது.

புதிய மக்கள் முன்னணியின் தேர்தல் வேலைத்திட்டமானது, [ரஷ்ய ஜனாதிபதி] விளாடிமிர் புட்டினின் ஆக்கிரமிப்புப் போரை தோற்கடிக்க உக்ரேனுக்கு “பொருத்தமான ஆயுதங்களை” வழங்குவதற்கும், “அமைதி காக்கும் படையினரை அனுப்புவதற்கும்” அழைப்பு விடுக்கிறது.

மிலோன்சோன், “நம்முடைய வேறுபாடுகளை ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டு” சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான சோசலிசக் கட்சியுடன் சமரசம் செய்ய விரும்புவதாக அறிவித்தாலும், புதிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இராணுவ செலவினங்களில் பாரிய அதிகரிப்புக்கு அழைப்பு விடுக்கின்றனர். இதற்கு ஊதியங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் மீதான ஆழமான தாக்குதல்களால் மட்டுமே நிதியளிக்கப்படும். புதிய மக்கள் முன்னணி அமைப்பதற்கான முதல் அழைப்பைத் தொடங்கிய LFI அதிகாரி பிரான்சுவா ரஃபின், ரஷ்யா தொடர்பான அவரது கொள்கையைப் பற்றி கேட்டதற்கு, பின்வருமாறு அறிவித்தார்:

எங்கள் போர்த் தொழிலைக் கட்டியெழுப்புவதன் மூலம் அதை மிக எளிமையாகத் தொடங்குவோம். ஆயுதங்கள், பீரங்கிகள், போர் விமானங்கள், ஆயுத தளபாடங்கள், மற்றும் தொழில்நுட்பத்தின் முழு வரம்பிலும் ஐரோப்பா தனது இறையாண்மையை மீண்டும் பெற வேண்டும். அது இனி அமெரிக்கர்களைச் சார்ந்திருக்கக்கூடாது. மேலும், அதற்கான வழிமுறைகளை அது தனக்குத்தானே கொடுக்க வேண்டும். … போர் முயற்சிக்கு, தேசத்தின் ஒற்றுமையை நாம் கவனமாக, கவனம் செலுத்த வேண்டும்.

வளங்களை போர் இயந்திரத்திற்கு திசை திருப்ப தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்ற ரஃபினின் அழைப்பு முற்றிலும் பிற்போக்குத்தனமானது. கடந்த ஆண்டு மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக வெடித்த போராட்ட எதிர்ப்புக்களையும், பாரிய வேலைநிறுத்தங்களையும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் விற்றுத்தள்ளியதை LFI ஆதரித்தது என்பதையும் இது வெளிப்படுத்துகிறது. இந்த வெட்டுக்கள், மக்ரோனின் இராணுவ வரவுசெலவுத் திட்ட அதிகரிப்புக்கு நிதியளிக்க பல பில்லியன் யூரோக்களை எடுத்துக் கொண்டன.

புதிய மக்கள் முன்னணியை ஆதரிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உத்தியோகபூர்வ அரசியலில் வலது பக்கம் மாறுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஜூலை 7 ஆம் தேதி RN ஆட்சியைப் பிடித்தால், பொது வேலைநிறுத்தம் வெடிக்குமா என்று கவலைப்பட்ட BFM-TV பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ​​பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) செயலாளர் சோஃபி பினெட் அவர்களுக்கு உறுதியளித்தார்: CGT, அதன் 130 ஆண்டுகால வரலாற்றில், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததில்லை. ஜூலை 8 அன்று நாங்கள் என்ன செய்வோம் என்று என்னால் சொல்ல முடியாது, நாங்கள் ஒன்று கூடி மிகவும் கூட்டு முடிவை எடுப்போம் என்று கூறினார்.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் விரிவாக்கம் வெடிக்கும் எதிர்ப்பைத் தூண்டும். ஆனால், இந்த நிகழ்வுகள் ஒரு அவசர எச்சரிக்கையாகும்: போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு இயக்கம் கீழிருந்து சாமானிய தொழிலாளர்களை சுயாதீனமாகவும் அதிகாரத்துவத்திற்கு எதிராகவும் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே கட்டியெழுப்ப முடியும்.

உலக முதலாளித்துவத்தின் ஒரு மரண நெருக்கடிக்கு மத்தியில், எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய மக்கள் முன்னணிக்கு ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியை (PES) கட்டியெழுப்ப வேண்டும். ஜனநாயகம் இல்லாமல் சோசலிசம் இருக்க முடியாது என்பது போல, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்காக தொழிலாளர்கள் போராடாமல் ஜனநாயகம் இருக்காது.

Loading