முன்னோக்கு

ரஃபா அகதிகள் முகாம் மீதான தாக்குதல்களில் இஸ்ரேல் டசின் கணக்கானவர்களை படுகொலை செய்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ரஃபாவில் உள்ள கூடார முகாமில் குறைந்தது 45 இடம்பெயர்ந்த மக்களை இஸ்ரேலிய ஆட்சி திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது. இது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் இனப்படுகொலையில் மற்றொரு காட்டுமிராண்டித்தனமான செயலைக் குறிக்கிறது. கடந்த ஏழு மாதங்களில் ஏற்கனவே பல முறை தப்பி ஓடிய டசின் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் (IDF) ஏவப்பட்ட அமெரிக்கா-வழங்கிய ஏவுகணைகளின் புயல் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர்.

மே 27, 2024 திங்கட்கிழமை, காஸா பகுதியின் ரஃபாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனியர்கள் எதிர்வினையாற்றுகின்றனர். [AP Photo/Jehad Alshrafi]

கடந்த ஞாயிறு இடம்பெற்ற இந்த குண்டுவீச்சு என்பது, பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் பாசிச அரசாங்கம், ரஃபாவில் இஸ்ரேலின் இராணுவத் தலையீட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தின் வெள்ளிக்கிழமை உத்தரவுக்கு நேரடியாக விடுத்த பதிலடியாகும். சியோனிச ஆட்சியானது, சர்வதேச சட்டத்தால் விதிக்கப்படும் எந்தவொரு கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படாது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்த விரும்பியுள்ளது. பாலஸ்தீனப் பிரச்சினைக்கான அதன் “இறுதித் தீர்வுக்கு” ஏகாதிபத்திய சக்திகளின், முக்கியமாக, அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவில் அதற்கு முழு நம்பிக்கை இருப்பதால், இவ்வளவு ஆத்திரமூட்டும் வகையில் அதனால் செயல்பட முடிகிறது.

இந்த தாக்குதல் “துல்லியமான வெடிமருந்துகள் மற்றும் துல்லியமான உளவுத்துறையின் அடிப்படையில்” நடத்தப்பட்டது என்று இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. “அப்பகுதியில் உள்ள பல பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்” என்பதை இராணுவம் அறிந்திருப்பதாக அதன் அறிக்கை வெறுமனே சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காஸாவில், இஸ்ரேலிய இராணுவத்தால் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் “துல்லியமான வெடிமருந்துகள்” என்பது, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட கூட்டு நேரடி தாக்குதல் வெடிமருந்துகள் (JDAM), வெடிகுண்டு கருவிகளுடன் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகும். அவை நிலையான ஆயுதங்களை GPS ஆல் வழிகாட்டப்பட்ட வெடிகுண்டுகளாக மாற்றுகின்றன. நெதன்யாகுவின் ஆட்சி, இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருப்பதால், அமெரிக்க விமான நிறுவனமான போயிங், 2023 அக்டோபரில் இஸ்ரேலுக்கு குறைந்தபட்சம் 1,800 கருவிகளை அனுப்புவதை துரிதப்படுத்தியது. அப்போதிருந்து, தற்போதைய உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையான 36,000ம் பாலஸ்தீனியர்களை படுகொலை செய்வதில் அந்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.

இத்தாக்குதலுக்கு உள்ளான முகாம் அமைந்திருந்த மேற்கு ரஃபாவின், தால் அஸ்-சுல்தான் சுற்றுப்பகுதி பாலஸ்தீனிய குடிமக்களுக்கு “பாதுகாப்பான பகுதி” என்று கூறப்பட்டது. பாலஸ்தீனிய செம்பிறை அமைப்பின் கூற்றுப்படி, இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர், தங்கள் கூடாரங்களில் “உயிருடன் எரிக்கப்பட்டனர்”. இந்த தாக்குதலில் 249 பேர் காயமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் குறைந்தபட்சம் எட்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் CNN இடம் தெரிவித்தனர். குவைத் மருத்துவமனையில் உயிர் பிழைத்த ஒருவர், “வான்வழித் தாக்குதல்களால் கூடாரங்கள் எரிந்தன, கூடாரங்கள் உருகுகின்றன, மக்களின் உடல்கள் உருகுகின்றன” என்று கூறினார்.

பல மாதங்களாக நடந்துவரும் இஸ்ரேலிய ஆட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பிறகு காஸாவின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியடைந்து வருவதால், காயமடைந்தவர்களில் பலர் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. காஸாவில் மனிதாபிமான பணியில் ஈடுபட்ட பின்பு பிரிட்டனுக்குத் திரும்பிய மருத்துவர் ஒருவர், அல் ஜசீராவிடம், காஸாவிலுள்ள மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு “மத்திய காலத்து மருத்துவத்தை” வழங்குவதாகக் கூறினார். “300, 400 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் என்ன நடந்தது என்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்படுவீர்கள் அல்லது படித்திருப்பீர்கள்” என்று லண்டன் பல்கலைக்கழக இரைப்பை குடல் அறுவை சிகிச்சை தலைவரான டாக்டர் கலீத் தவாஸ் கருத்து தெரிவித்தார். காயமடைந்த பாலஸ்தீனியர்கள் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கிறார்கள், ஏனெனில் இது “மரண தண்டனை” என்று அவர் கூறினார்.

இந்த படுகொலை நடந்த ஒரு நாள் கழித்து, காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சை பெற்றுவந்த ரஃபாவில் உள்ள குவைத் மருத்துவமனையின் இயக்குனர், இஸ்ரேலிய தாக்குதல்களால் அந்த மருத்துவ வசதியை மூடுவதாக அறிவித்தார். முந்தைய நாள், இந்த மருத்துவமனையின் வாயில்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அகதிகள் முகாம் மீதான படுகொலைகள் நடந்த அதே நாளில், இஸ்ரேலிய இராணுவத்தின் முற்றுகையால் தூண்டப்பட்ட எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, டெய்ர் எல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனை அனைத்து சேவைகளையும் நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

இந்த சமீபத்திய அட்டூழியத்தில், பைடென் நிர்வாகத்தின் கைரேகைகள் முழுவதும் உள்ளன. ரஃபாவிற்கு எதிரான இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல் கடந்த மூன்று வாரங்களாக வெள்ளை மாளிகை பச்சைக்கொடி காட்டிய பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் ரஃபாவை தாக்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, பைடென் இரு கட்சி (ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட மேலதிக இராணுவ உதவி மசோதாவில் கையெழுத்திட்டார். அதில் இஸ்ரேலுக்கான $26 பில்லியன் டாலர் நிதியும் அடங்கும்.

“பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இஸ்ரேல் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறது” என்று பைடென் வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய இராணுவம் “அடர்த்தியான நகர்ப்புறங்களின் மையத்தில் பெரிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை” என்று வலியுறுத்தினார். 800,000 க்கும் அதிகமான மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினாலும் இந்த வார்த்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நிர்வாக அதிகாரிகள் ரஃபாவில் பொதுமக்களைக் கொல்வது ஒரு “சிவப்புக் கோடு” என்று தொடர்ந்தும் கூறி வருகின்றனர். இருப்பினும் இஸ்ரேலிய இராணுவம் இதனைத் தண்டனையின்றி தினமும் செய்து வருகிறது.

ரஃபாவில் “பெரிய” நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், பொதுமக்கள் கொல்லப்படுவதை அது எதிர்ப்பதாகவும் பைடென் நிர்வாகம் கூறிவரும் பொய்யான கூற்றுக்கள், திங்களன்று தனது கருத்துக்களில் அகதிகள் முகாம் மீதான குண்டுவீச்சுக்களை ஒரு “துன்பகரமான தவறு” என்று சித்தரிக்கும் நெதன்யாகுவின் முயற்சியை விட நம்பகமானதாக இல்லை. உண்மை என்னவெனில், ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டதைப் போலவே, இது இஸ்ரேலிய இராணுவத்தால் பாதுகாப்பற்ற குடிமக்களை திட்டமிட்ட முறையில் குறிவைக்கும் வடிவத்தின் ஒரு பகுதியாகும்.

அல் அஹ்லி மருத்துவமனை மீது குண்டுவீசித் தாக்கியதில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டது முதல், அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான புயல் தாக்குதல் மற்றும் கான் யூனிஸின் அழிவு வரை, உலகம் பூராகவும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நெத்தன்யாகுவின் ஆட்சியின் மிருகத்தனத்தையும், ஏகாதிபத்திய ஆதரவுடன் அதனால் என்ன செய்ய முடியும் என்பதையும் நன்கு அறிவார்கள்.

இஸ்ரேலின் இரண்டு மிக முக்கியமான ஆயுத விநியோகஸ்தர்களான அமெரிக்கா மற்றும் ஜேர்மனியில் உள்ள ஏகாதிபத்திய அரசாங்கங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற படுகொலைக்குப் பிறகு சியோனிச ஆட்சிக்கு தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்தின. இஸ்ரேலிய அரசாங்கத்தின் பிரச்சார மொத்த விற்பனையை ஏற்றுக்கொண்ட வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, “ஹமாஸைப் பின்தொடர்ந்து தாக்குவதுக்கு இஸ்ரேலுக்கு உரிமை உண்டு. மேலும், இந்த தாக்குதலில் இரண்டு மூத்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை நாங்கள் அனைவரும் புரிந்துகொள்கிறோம், அவர்கள் இஸ்ரேலிய பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள்” என்று குறிப்பிட்டார்.

ஜேர்மன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் ஹெபஸ்ட்ரீட், இந்த தாக்குதல் “தவறுதலாக” இடம்பெற்றது என்று நெதன்யாகுவின் கூற்றை எதிரொலித்தார். என்ன நடந்தது என்பதைத் தீர்மானிக்க இஸ்ரேலிய இராணுவம் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றும் ஹெபஸ்ட்ரீட் குறிப்பிட்டார். மேலும் Der Spiegel  பத்திரிகையின் கருத்துப்படி, “முதலில் என்ன நடந்தது என்று விசாரித்த பிறகு தீர்ப்பளிக்கவும். மேலும் படங்களின் அடிப்படையில் உடனடி தீர்ப்புக்கு வர வேண்டாம்” என்று குறிப்பிட்டது. இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கொலையாளிகள் குற்றம் நடந்த இடத்தை விசாரிக்கட்டும் மற்றும் நாங்கள் அதைப் பற்றி எதுவும் கூறுவதற்கு முன்பு அவர்களைக் குறிக்கும் எந்த ஆதாரத்தையும் மறைக்கட்டும் என்பதாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற படுகொலைக்கான உந்துதல் என்ன என்பதைத் தீர்மானிக்க எந்த “விசாரணையும்” தேவையில்லை. இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து காஸாவில், இஸ்ரேலிய அரசாங்கமும் இராணுவ அதிகாரிகளும் பலமுறை பாலஸ்தீனியர்களை இனரீதியாக சுத்திகரிப்பது, அவர்களைக் கொன்று, பட்டினியால் இறக்க விடுவது, அல்லது அந்த பகுதியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவது என்று பலமுறை வலியுறுத்தியுள்ளனர். காஸாவில் வசிப்பவர்கள் சியோனிச ஆட்சியால் “மனித விலங்குகளாக” பார்க்கப்படுகிறார்கள் என்று பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் கடந்த அக்டோபரில் கூறினார். பாசிச தேசிய பாதுகாப்பு மந்திரி இடாமர் பென்-க்விர் சமீபத்தில், தான் காஸாவில் குடியேறி வாழ விரும்புவதாக அறிவித்தார். மேலும் அவர், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற படுகொலையை கொண்டாடி, சமூக ஊடகங்களில் “முழுப் பலத்துடன் ரஃபா” என்று தாக்குதல்களை தீவிரப்படுத்த வலியுறுத்தி ஒரு இடுகையை வெளியிட்டார்.

ஏகாதிபத்திய சக்திகள் இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஆதரிக்கின்றன. ஏனெனில், வேகமாக அதிகரித்து வரும் மூன்றாம் உலகப் போரில் உலகை மறுபங்கீடு செய்வதற்கான அவர்களின் திட்டங்களின் இன்றியமையாத பகுதியாக, காஸா இனப்படுகொலையை கருதுகின்றனர். காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தினால் காட்டுமிராண்டித்தனமாக மனிதர்கள் படுகொலை செய்யப்படுகின்ற அதே அலட்சியம், அமெரிக்கத் தயாரிப்பு வெடிகுண்டுகளை வழங்குவதில் உக்ரேனிலும் தெளிவாகத் தெரிகிறது. அங்கு, அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ஏகாதிபத்திய சூறையாடலுக்கான போரில் சுமார் 500,000 உக்ரேனியர்களை பலி கொடுத்துள்ளன.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சியை சேர்ந்த சபாநாயகர் மைக் ஜோன்சன், கடந்த வாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர், நெதன்யாகு மற்றும் கேலண்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்த கைது வாரண்ட் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது சும்மா அல்ல. “இஸ்ரேலிய தலைவர்களை அச்சுறுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அனுமதித்தால், நம்முடையது அடுத்ததாக இருக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.

ரஃபா அகதிகள் முகாம் படுகொலையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் என்னவென்றால், ஏகாதிபத்திய அரசாங்கங்களிடமோ, ஐக்கிய நாடுகள் சபையிடமோ அல்லது சர்வதேச நீதிமன்றங்களிடமோ, “இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு” அதிகாரங்களிடம் முறையிடுவது என்பது செவிடன் காதில் ஊதும் சங்காகவே இருக்கும். உலகெங்கிலும் சமீப மாதங்களாக இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் முகாம்களில் இணைந்துள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்துவதற்கான உண்மையான போராட்டத்தை வழிநடத்தும் ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும்.

சமூகத்தின் அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்யும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய அரசியல் அணிதிரட்டல்தான், இஸ்ரேலிய போர்க்குற்றவாளிகளையும் அவர்களின் ஏகாதிபத்திய கூட்டாளிகளையும் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழியாகும்.

இராணுவவாதம், போர் மற்றும் இனப்படுகொலைக்கு பணம் செலுத்துவதற்காக, வாழ்க்கை நிலைமைகள் மற்றும் பொது சேவைகள் மீதான தீவிரமான தாக்குதல்களை ஏற்குமாறு எல்லா இடங்களிலும் தொழிலாளர்களுக்கு கூறப்படுவதால், இஸ்ரேலுக்கும் அதன் நட்பு ஏகாதிபத்திய போர் இயந்திரங்களுக்கும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அனைத்து இராணுவ உபகரணங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிறுத்துவதற்கான போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்ட ஒரு சக்திவாய்ந்த அடிப்படை உள்ளது. முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை தோற்கடிக்க ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கும், காஸாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவோருக்கும், அத்தகைய இயக்கத்தை உருவாக்குவதற்கான போராட்டமானது மிக அவசரமான பணியாகும்.

Loading