நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நானு ஓயா, உட ரதல்ல தோட்டத்தில் மறுசீரமைப்புக்கும் மூன்று தொழிலாளர்கள் வேலை இடைநீக்கம் செய்யப்பட்டதற்கும் எதிராக தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. ஹேலீஸ் குழுமத்திற்கு சொந்தமான களனி வெளி பெருந்தோட்டக் கம்பனியின் நிர்வாகத்தின் கீழேயே இந்த தோட்டம் உள்ளது.
கம்பனியின் ஒரு ஆத்திரமூட்டும் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தொழிலாளர்களை வேலை இடைநீக்கம் செய்ததற்கு எதிராக, உட ரதல்ல தோட்டத்தின் இரு பிரிவுகளைச் சேர்ந்த இருநூறு தொழிலாளர்கள் மே 6 அன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தொழிற்சங்கத்தின் தோட்டத் தலைவர் பி. சேகர் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) தோட்டத் தலைவர் ஏ. தமிழ்செல்வன் மற்றும் அதன் உப தலைவர் ஏ. புவனேந்திரன் ஆகிய மூன்று தொழிலாளர்களே இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
தோட்டத்தின் ஒரு பகுதியில் வேறு வணிக பயிர்களை பயிரிடும் திட்டத்தை கம்பனி தொடங்கியுள்ளது என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். அதன்படி தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள 17 ஹெக்டரில் கோப்பி பயிரிடுவதற்கு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மே 6 அன்று, கோப்பி பயிடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள தேயிலை செடிகளை நிர்வாகம் பக்ஹோ இயந்திரம் கொண்டு அகற்ற முயன்றபோது, உடனடியாக தொழிலாளர்கள் திரண்டு வந்து அதனை நிறுத்தினர். தொழிலாளர்களின் இந்த தலையீட்டின் காரணமாகவே 3 பேரும் வேலையிலிருந்து இடை நிறுத்தப்பட்டனர்.
ஒரு தொழிலாளி விளக்கியதாவது: 'இந்த திட்டத்தின் மூலம் நாங்கள் எங்கள் தொழிலை இழப்போம். இரண்டு ஹெக்டர் தேயிலை நிலம் ஏற்கனவே அழிக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு கோப்பி பயிரிடப்பட்டது. இது நடந்தால் ஏராளமானோர் வேலைகளை இழக்க நேரிடும். பருவ காலத்திலேயே கோப்பி அறுவடை செய்யப்படுவதால், அதற்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவதில்லை.”
இந்த திட்டம் நிறைவேறினால் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும், “அதனால்தான் இதை எதிர்த்தோம்” என மேலும் கூறிய தொழிலாளர்கள், இது குற்றமா?” என கேட்டனர். “நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போதிலும், கம்பனி மூன்று தொழிலாளர்களை வேலை இடைநீக்கம் செய்தது. எனவே, அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கும் வரை வேலைக்கு திரும்ப மாட்டோம்’’ என அவர்கள் கூறினர்.
தொழிற்சங்கங்கள், மூன்று தொழிலாளர்களின் வேலை இடைநிறுத்தம் தொடர்பில் நுவரெலியா தொழில் ஆணையாளருடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் தீர்வு கிடைக்கவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
“இரண்டாவது பேச்சு வார்த்தை மே 15 ம் திகதி நடத்தப்பட்டது. தொழில் ஆணையாளர் அந்தத் தொழிலாளர்களை இடைநிறுத்துவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்துவதற்கான உத்தரவை அவர் வழங்கவில்லை” என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்
மே 16 அன்று, வேலை இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரி தொழிலாளர்கள் நானுஓயா நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழிவாங்கப்பட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர் தமிழ்செல்வன், தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில், தொழிலாளர்கள் மூன்று வாரங்களாக அமைதியான போராட்டங்களை நடத்தியும் அவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. தோட்ட நிர்வாகத்திற்கும் கம்பனிக்கும் தொழில் திணைக்களம் ஆதரவளிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார். 'ஏனய தோட்டங்களின் சக தொழிலாளர்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,' என அவர் கூறினார்.
எவ்வாறாயினும் இ.தொ.கா, மற்றும் தொ.தே.ச. தலைமைகள் அந்தத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்துவதற்கும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கவில்லை. தோட்ட முகாமையாளர், மறுநாள் பெண் தொழிலாளர்களை அழைத்து, வேலை இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படமாட்டாது என்று கூறி, தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார். ஆனால் இடைநிறுத்தப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தும் வரை வேலைக்குத் திரும்புவதை அவர்கள் நிராகரித்துள்ளனர்.
பெருந்தோட்ட மறுசீரமைப்பு என்பது, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிக்கன திட்டத்தின் கீழ், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாகும். கோப்பி, பாம் எண்ணெய் மற்றும் பழங்கள் போன்ற அதிக இலாபம் தரும் பல்வகை பயிர்களை, தேயிலைத் தோட்டங்களில் பயிரிட முன்மொழியப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தேயிலை தோட்டங்களை அகற்றி சுற்றுலா தளங்களை அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
தேயிலை தோட்டத்துக்கான பெரும் மறுசீரமைப்பு திட்டம், உற்பத்தித்திறன் அடிப்படையிலான வருமானப் பங்கீட்டு முறை (RSM) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
தோட்டக் கம்பனிகள், அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்களும் இணைந்து, இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்கவும் வேலை செய்கின்றன.
இந்தச் சூழலிலேயே உட ரதல்ல தோட்டத்தின் மூன்று தொழிலாளர்கள் பலிகடா ஆக்கப்பட்ட்டுள்ளதுடன் இது தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
2021 மார்ச் 22 அன்று மஸ்கெலியா, சாமிமலையில் உள்ள ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 38 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் 1,000 ரூபாய் நாளாந்த சம்பள உயர்வு கோரி, பெப்ரவரி 2 அன்று இ.தொ.கா. அழைப்புவிடுத்த வேலைநிறுத்தத்திலும் மற்றும் பெப்ரவரி 5 அன்று நடந்த தேசிய வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடினர்.
முகாமையாளரையும் உதவி முகாமையாளரையும் அடித்தனர் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில், 22 தொழிலாளர்களும் 2 இளைஞர்களும் நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளனர் (https://www.wsws.org/en/articles/2024/05/14/mmou-m14.html)
தோட்ட நிர்வாகத்தால் பி. பொன்னிறச்செல்வி பழிவாங்கப்பட்டதற்கு எதிரான வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதற்காக 29 செப்டம்பர் 2021 அன்று, தலவாக்கலையில் உள்ள கட்டுக்கலை தோட்டத்தில் 11 தொழிலாளர்களை பொலிசார் கைது செய்தனர்
ஆகையால், உட ரதல்ல தோட்டத் தொழிலாளர்கள் இ.தொ.கா. மற்றும் தொ.தே.ச. அல்லது வேறு ஏதேனும் தோட்டத் தொழிற்சங்கமாவது பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும் மீண்டும் வேலையில அமர்த்துவதற்கும் எந்தவொரு போராட்டத்தையும் ஏற்பாடு செய்யும் என்று நம்பக்கூடாது.
நாங்கள் பின்வருமாறு கோருகிறோம்:
உட ரதல்ல தோட்டத்தின் தோட்டத் தலைவர்கள் வேலை இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு அனைத்து தோட்ட தொழிலாளர்களும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்! வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், இடை நிறுத்தப்பட்ட தொழிலாளர்களை நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்று கோரியும் போராட்டங்களை நடத்துங்கள்!
ஓல்டன் தோட்டத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்து! அவர்கள் மீதான வழக்குகளை விலக்கிக்கொள்!
தொழில்களைக் குறைக்கவும் வேலைச்சுமையை அதிகரிக்கவும் தோட்டங்களை மறுசீரமைக்கவும் வேண்டாம்!
ஓய்வூதிய உரிமையுடன் கூடிய கண்ணியமான மாதச் சம்பளம் வேண்டும்!
இந்த பழிவாங்கலுக்கும் மறுசீரமைப்புக்கும் எதிராகப் போராடுவதற்கான ஒரே வழி, தோட்டத் தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டி, தொழிலாள வர்க்கத்தின் ஏனய பிரிவுகளின் ஐக்கியத்துடன் ஒரு பொது போராட்டத்தைத் தொடங்குவதே ஆகும்.
இதில், உட ரதல்ல தோட்டம் உட்பட தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்தும் சகல முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக, ஒவ்வொரு தோட்டத்திலும் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபித்து இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும்.
இது, விக்கிரமசிங்க அரசாங்கத்தை தூக்கி எறிவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பிரதான தொழில் துறைகள், வங்கிகள் மற்றும் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்குகின்ற தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குமான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட ஒரு அரசியல் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும்.