இன்னும் விளக்கமளிக்கப்படாத ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதியின் மரணம் எரியும் மத்திய கிழக்கை மேலும் ஸ்திரமற்றதாக்குகின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ஈரானின் வடமேற்கில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் கொல்லப்பட்ட 8 பேரில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோரும் அடங்குவர்.

அவர்களின் மரணங்கள், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவு இனப்படுகொலை மற்றும் எரிசக்தி நிறைந்த பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக வாஷிங்டனின் கட்டுப்பாடற்ற மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா தூண்டிவிடும் போர்களாலும் ஏற்கனவே எரிந்துகொண்டிருக்கும் மத்திய கிழக்கில் மேலும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது.

2021 முதல் ஈரானின் ஜனாதிபதியான ரைசி, அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் அஜர்பைஜானுக்கு ஒரு சுருக்கமான விஜயத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களின் ஹெலிகாப்டர் அவர்களின் இலக்கான தப்ரிஸிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைகள் நிறைந்த, அதிக காடுகள் நிறைந்த பகுதியில் விழுந்தது.

இந்த சகமற்ற நிலப்பரப்பு, சீரற்ற வானிலை மற்றும் ஹெலிகாப்டரில் அவசர சமிக்ஞை இல்லாததால், மீட்புப் பணியாளர்கள் திங்கள்கிழமை விடியற்காலையில் தான் விபத்து நடந்த இடத்தை அடைந்தனர்.

இன்னும் தீர்மானிக்கப்படாத 'தொழில்நுட்பக் கோளாறே' விபத்துக்கு காரணம் என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

அஜர்பைஜானில் இருந்து ஈரானிய ஜனாதிபதியை ஏற்றிக்கொண்டு திரும்பிய ஹெலிகொப்டருடன் சேர்ந்து வந்த மற்ற இரண்டு ஹெலிகாப்டர்களும் அசம்பாவிதம் இல்லாமல் திரும்பி வந்துள்ளன.

ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது ஹொசைன் பகேரி, விபத்து குறித்து சம்பவ-இடத்தில் நடத்தும் விசாரணையை மேற்கொள்ள இராணுவம் மற்றும் வானூர்தி நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளார்.

ரைசியின் ஹெலிகாப்டர் காணாமல் போனதில் இருந்து, ஈரானிய அதிகாரிகள் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியான உணர்வை வெளிப்படுத்த முயன்றனர். அவர்கள் விபத்தை ஒரு 'சம்பவம்' என்று குறிப்பிட்டுள்ள போதிலும், இது ஒரு பயங்கரமான விபத்து என்பதைத் தவிர வேறு எதையும் பரிந்துரைக்கவில்லை.

வானிலை முன்னறிவிக்கப்பட்டபடி, மூன்று ஹெலிகாப்டர் தொடரணி பயணிக்கவிருந்த மலைப் பிரதேசம் அடர்ந்த மூடுபனியில் மூடப்பட்டிருந்தது.

வீழ்ந்த ஹெலிகாப்டர், ஷா ரெசா பஹ்லவியின் சர்வாதிகார ஆட்சியை தூக்கியெறிந்த 1979 புரட்சிக்கு முன்பு இருந்த அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட, இரண்டு இதழ் விசிரி கொண்ட பெல் 212 ஹெலிகொப்டர் ஆகும்.

20 மே 2024, திங்கட்கிழமை, ஈரானின் டெஹ்ரானில் உள்ள வாலி-இ-அஸ்ர் சதுக்கத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் துக்க நிகழ்வின் போது மக்கள் அவரது சுவரொட்டிகளை ஏந்தியுள்ளனர். [AP Photo/Vahid Salemi]

பல தசாப்தங்களாக, அமெரிக்காவின் தண்டனை தடைகள், ஈரானுக்கு வர்த்தக அல்லது இராணுவத் தேவைக்கு மேற்கத்திய விமானங்கள் மற்றும் உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வதைத் தடுத்துள்ளது. முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீஃப், ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ஒபாமா, ட்ரம்ப் மற்றும் இப்போது பைடென் ஆகியோரின் கீழ், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உட்பட அனைத்து பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கிடைப்பதை திறம்பட தடுக்கும் அளவுக்கு விரிவடைந்துள்ள அதன் பொருளாதாரத் தடைகளுமே விபத்துக்குப் பொறுப்பு எனத் தெரிவித்தார். 'ஈரானுக்கு அத்தியாவசிய விமான பாகங்களை வாங்குவதைத் தடுக்கும் அதன் பொருளாதாரத் தடைகளின் காரணமாக, நேற்றைய சோகத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளில் அமெரிக்காவும் ஒன்று,' என ஜரீஃப் வலியுறுத்தினார்.

தற்போது அறியப்பட்டவற்றிலிருந்து, ரைசி மற்றும் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோரைக் கொன்ற விபத்து இஸ்லாமியக் குடியரசின் ஆளும் உயரடுக்கின் அதிருப்தி பிரிவினரால் திட்டமிடப்பட்ட நாசவேலை, அல்லது அநேகமாக இஸ்ரேலிய உளவுத்துறை அல்லது சி.ஐ.ஏ. திட்டமிட்டு நடத்திய ஒரு நாசவேலையாக இருக்கலாம் என்பதை விலக்கி வைக்க முடியாது.

முதல் அரை நாள், விபத்து நடந்த இடம் மற்றும் உயிர் பிழைத்தவர்களை அவநம்பிக்கையுடன் தேடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், ஈரானிய விசாரணை, இந்த கட்டத்தில், சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே நடந்துள்ளது. இறுதியில், கீழே விழுந்த ஹெலிகாப்டர் துருக்கிய கண்காணிப்பு ஆளில்லா விமானங்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்து ஒரு விபத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்று கூறுவதற்கு தெஹ்ரானிடம் ஆதாரங்கள் இருந்தாலும் கூட, பூதாகரமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, பகிரங்க அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக, அவர்கள் நிச்சயமாக விவரங்களையும் அது சம்பந்தமான அவர்களின் பிரதிபலிப்புக்கு ஏற்படக் கூடிய எதிர்த் தாக்கத்தையும் கூர்ந்து ஆராய்ந்திருக்க வேண்டும். உண்மையில், அவர்களின் முதல் உத்வேகமானது நாசவேலையின் மூலம் நடத்தப்பட்ட ஒரு படுகொலையை மூடிமறைப்பதாகவும், அதன் மூலம் ஆட்சியைக் கீழறுக்கக் கூடிய மற்றும் சக்திவாய்ந்த முறையில் பதிலளிக்க நிர்ப்பந்திக்கின்ற ஒரு பேரழிவுகரமான பாதுகாப்பு தோல்வி அம்பலத்துக்கு வராமல் பார்த்துக்கொள்வதாகவும் இருக்கக் கூடும், என்பதை ஒரங்கட்டிவிட முடியாது.

இஸ்ரேல், அமெரிக்கா இரண்டும் அண்மைய ஆண்டுகளில் ஈரானிய அதிகாரிகளை வெட்கக்கேடான மற்றும் சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்துள்ளன. மொசாட் ஏற்பாடு செய்த ஈரானுக்குள் ஈரானிய விஞ்ஞானிகளை படுகொலைகள் மற்றும் பாக்தாத் விமான நிலையத்தை விட்டு வெளியேறியபோது இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தளபதி காசிம் சுலைமானி மீது 2020 ஜனவரியில் நடத்தப்பட்ட அமெரிக்க பிரிடேட்டர் ஆளில்லா விமானத் தாக்குதலும் இதில் அடங்கும்.

ஏப்ரல் 1 அன்று, டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று சிரேஷ்ட ஐ.ஆர்.ஜி.சி. தளபதிகளை கொன்றபோது, இஸ்ரேல் ஈரானுடனான அதன் நிழல் போரில் வியத்தகு முறையில் பகைமையை அதிகரித்தது. ஈரான் 12 நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் மீது அதன் முதல் நேரடித் தாக்குதலுடன் பதிலடி கொடுத்தது. எவ்வாறாயினும், அதன் ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு முன்கூட்டியே தந்தி அனுப்பப்பட்டது. அமெரிக்காவால் பாதுகாக்கப்படும் இஸ்ரேல் அதை தடுக்கும் மற்றும் மேலும் மோதல் விரிவடைவதை தவிர்க்கலாம் என்ற கணக்கீட்டின் அடிப்படையிலேயே அது பற்றி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஜனாதிபதியின் படுகொலை, ஒரு போர்ப் பிரகடனத்திற்குச் சமமாக இருக்கும், ஆனால், தீவிர வலதுசாரி நெதன்யாகுவின் சியோனிச அரசின் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அதற்கு முக்கியத்துவம் இல்லை என நிராகரிக்க முடியாது.

ரைசி, ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோரின் மரணம் குறித்து ஜெருசலேமிலும் வாஷிங்டனிலும் கணிசமான மகிழ்ச்சி நிலவியதுடன் இரு சக்திகளும் தங்கள் கொள்ளையடிக்கும் நோக்கங்களை முன்னேற்றுவதற்காக அவர்களின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன என்பதும் உறுதியானது.

ஈரானின் ஜனாதிபதியின் மரணத்திற்கு அமெரிக்கா 'அதிகாரப்பூர்வ இரங்கலை' தெரிவித்த போதிலும், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாட் மில்லரும் பற்களை கடித்துக்கொண்டவாறுதான் இரங்கல் தெரிவிப்பதை தெளிவுபடுத்தினர். காசாவின் பாலஸ்தீனியர்களை பட்டினியில் வாட்டி, படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு ஆயுதமும் அரசியல் மூடுதிரையும் வழங்குகின்ற, எகிப்தில் ஜெனரல் அல்-சிசி மற்றும் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உட்பட மத்திய கிழக்கு முழுவதும் கொடுங்கோல் ஆட்சிகளை ஆதரிக்கின்ற ஒரு அரசாங்கத்திற்காக பேசும் மில்லர், 'ஆயிரக்கணக்கானவர்களை' கொன்றதற்காக ரைசியை கண்டித்தார்.

'எந்தவொரு உயிரிழப்புக்கும் நாங்கள் வருந்துகிறோம்,' ஆனால் 'அது அவரது பதிவை மாற்றாது.... அவர் கைகளில் இரத்தம் இருக்கிறது,” என்று மில்லர் கூறினார்.

'ஈரானின் அடுத்த தலைவர்களை எதிர்கொள்ளும் தேர்வு' என்ற தலைப்பில், நீண்ட காலமாக சி.ஐ.ஏ.க்கு வக்காலத்து வாங்கும் டேவிட் சாங்கர், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில், வாஷிங்டன் இந்த நேரத்தில் ஓமானில் ஈரானிய ஆட்சியுடன் நடத்தி வரும் ஒரு ரகசிய உரையாடலைத் தொடர ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இதில் இறந்த வெளியுறவு அமைச்சரின் துணை அமைச்சரான, அலி பகேரி கனி, ஈரான் தரப்பில் முதன்மை பேச்சாளராக செயல்பட்டார்.

கடந்த ஏழு மாதங்களில் அமெரிக்க ஆதரவுடன் காசா மீதான இஸ்ரேலியப் போர் மூண்டுள்ள நிலையில், பல சந்திப்புகளை உள்ளடக்கியதாகக் கூறப்படும் இந்த பேச்சுவார்த்தையில் வாஷிங்டன் காட்டும் ஆர்வத்துக்கும், அமைதியைப் பாதுகாப்பது அல்லது பதட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

காசா போரின் ஆரம்பத்திலேயே, ஈரானுக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்காக வாஷிங்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல் குழுக்களை அப்பகுதிக்கு அனுப்பியது. அமெரிக்காவானது சிரியா, ஈராக் மற்றும் யேமனில் ஈரானிய கூட்டாளிகள் மீது அதன் சொந்த தாக்குதல்களை நடத்தும் அதே வேளை, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் சிரியாவில் ஈரானிய ஆதரவு படைகள் மற்றும் ஐ.ஆ.ஜி.சி. பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்துள்ளது.

மேலும், பைடனும் வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்கனும், அமெரிக்க ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான பல்முனை உந்துதலில் வாஷிங்டன் ஈடுபட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர், பென்டகன் ஜெனரல்களைப் பற்றி எதுவும் கூற வேண்டியதில்லை. இதில் ரஷ்யாவில் போரும், சீனாவிற்கு எதிரான எல்லா பக்கத்திலுமான பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதல், மற்றும் தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் செயல்படுத்துவதும் அடங்கும்.

பொருளாதாரத் தடைகள் மற்றும் அதன் நட்பு நாடுகளின், குறிப்பாக பிரிட்டன் மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ அழுத்தங்கள் மூலம், வாஷிங்டன் ஈரானின் இராணுவத் திறன்களை சீரழிக்கவும், ஆட்டங்காணச் செய்யவும் ஆட்சிக்குள் பிளவுகளை சுரண்டிக்கொள்ளவும் முயல்கிறது. இவை அனைத்தும், தான் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் நேரத்தில், ஈரான் மீது போர் தொடுப்பதற்கான சிறந்த நிலையில் தன்னை இருத்திக்கொள்ளும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகளாகும்.

இதற்கிடையில், ஈரானின் முதலாளித்துவ மதகுரு ஆட்சி, சூழ்ச்சிகளைக் கையாளுவதற்கு அதற்கு உள்ள வசதிகள் சுருங்கி வருவதை காண்கின்றது. இது அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளால் நசுக்கப்படுகின்ற அதே வேளை, வெகுஜன வேலையின்மை, விண்ணை முட்டும் விலைவாசி, அரசியல் அடக்குமுறை, கடுமையான சமூக சமத்துவமின்மை மற்றும் 1979 புரட்சிக்குப் பின்னர் உடனடியாக உழைக்கும் மக்களுக்கு அளிக்கப்பட்ட சமூக சலுகைகளின் மிச்ச சொச்சங்களை வெட்டுவது போன்றவற்றால் கோபமடைந்துள்ள ஒரு அமைதியற்ற தொழிலாள வர்க்கத்துடன் போராட வேண்டியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விபத்துக்கு முன்பே, இஸ்லாமிய குடியரசு வரவிருக்கும் தலைமை நெருக்கடியை எதிர்கொண்டது. முப்பதாண்டுகளுக்கும் மேலாக, பிரிதான முடிவுகளின் மீது உச்சகட்ட அதிகாரம் செலுத்தி, மதகுரு முதலாளித்துவ ஸ்தாபனத்திற்குள் நிலவும் கோஷ்டி பூசல்களை ஒழுங்குபடுத்தும் அதிமேதகு தலைவராக பணியாற்றிய அயதுல்லா அலி கமேனி, இப்போது 85 வயதில் நீண்டகாலமாக உடல் நலமின்றி இருக்கின்றார்.

ஞாயிற்றுக்கிழமை முதல் அவரது அனைத்து அறிக்கைகளிலும், ஆட்சி மற்றும் அதன் அமைப்புகளின் ஸ்திரத்தன்மையை கமேனி வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, துணை ஜனாதிபதி முகமது மொக்பர், பதில் ஜனாதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 14 ஆண்டுகளாக அதிமேதகு தலைவரின் அறக்கட்டளையான செட்டாட்க்கு தலைமை தாங்கி வரும் மொக்பர், பிரமாண்ட ஆதரவாளர் வலையமைப்பின் அடிக்கட்டுமானத்தை பலப்படுத்த தனது பரந்த சொத்துக்களை பயன்படுத்தி வருகின்றார். கமேனிக்கு நெருக்கமானவராக கூறப்படும், பெருமளவில் பழமைவாதத்தில் தங்கியிருக்கும் மொக்பர், அத்தகைய பழமைவாத கன்னையின் பகுதியாக இருந்துள்ளார். அந்தக் கன்னையில் ரைசியும் ஒரு முன்னணி உறுப்பினராக இருந்துள்ளார். இப்போது அமெரிக்காவால் கைவிடப்பட்டுள்ள 2016 அணுசக்தி ஒப்பந்தம் அல்லது JCPOA மூலம் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுடன் நல்லுறவைக் கோருவதில் மிகவும் மௌனம் காத்து வந்துள்ள அந்தக் கன்னை, அன்றாட வாழ்க்கையில் அதிக மதக் கட்டுப்பாடுகளை ஆதரிக்கிறது.

அமீர்-அப்துல்லாஹியனுக்குப் பிறகு அவரது துணை அமைச்சர் கானி வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இது தெஹ்ரான் வாஷிங்டனுடன் ஒரு உரையாடலுக்கு ஒரு வழியைப் பராமரிக்க விரும்புகிறது என்பதற்கான சமிக்ஞையாக அர்த்தப்படுத்தப்படுகிறது.

மொக்பர் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய உடனேயே, அவருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடமிருந்து அழைப்பு வந்தது. அவர்களது உரையாடலின் குறிப்புகளில், மொஸ்கோவும் தெஹ்ரானும் இருதரப்பு உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்த அழைப்பு விடுத்தன. அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளுக்கு திகைப்பூட்டும் வகையில், ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளுடனும் ஈரான் அதன் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை விரிவுபடுத்துவதன் மூலம் JCPOAவின் சிதைவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரைன் போரை எதிர்த்துப் போராட ரஷ்யாவிற்கு மலிவான ஆளில்லா விமானங்களை வழங்குவதும் இதில் அடங்கும்.

ஈரானின் அரசியலமைப்பின் கீழ், ஜனாதிபதி இறந்தாலோ அல்லது செயலிழந்தாலோ, 50 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும். திங்கட்கிழமை பிற்பகுதியில், ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் இரண்டு சுற்று ஈரானிய ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று ஜூன் 28 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரைசி வெற்றி பெற்றபோது, காப்பாளர் சபையானது முன்னாள் இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த மஹ்மூத் அஹ்மதிநெஜாத் உட்பட பெரும்பாலான வருங்கால வேட்பாளர்களை போட்டியிட விடாமல் எதேச்சதிகாரமாக தடுத்தது. வாக்குப்பதிவு முதன்முறையாக 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததுடன், 13 சதவீத வாக்குகள் செல்லுபடி அற்றவையாக கருதப்பட்டன.

Loading