ஈரானிய ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியான் மற்றும் பிற அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஞாயிறன்று தெஹ்ரான் தலைநகருக்கு வடமேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது.

மே 19, 2024 ஞாயிற்றுக்கிழமை, ஈரான் மற்றும் அஜர்பைஜான் எல்லையில் உள்ள அஸேரியில் உள்ள கிஸ் கலாசியின் அணை திறப்பு விழாவின் போது ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தனது அஸேரி பிரதிநிதி இல்ஹாம் அலியேவுடன் ஒரு சந்திப்பில் கலந்து கொள்கிறார். (AP வழியாக ஈரானிய ஜனாதிபதி அலுவலகம்)  [AP Photo/ Det iranske presidentskapskontoret]

ரைசி மற்றும் அமீர்-அப்துல்லாஹியான் இருவரும் இறந்துவிட்டதாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்திலிருந்து அண்டை நாடான அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவுடன் அராஸ் ஆற்றின் எல்லையில் அணை ஒன்றைத் திறந்து வைத்துவிட்டு, ரைசியும் அவரது குழுவினரும் திரும்பிக் கொண்டிருந்தனர். ரைசியின் ஹெலிகாப்டர் போக்குவரத்தில் இருந்த மூன்று ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும் - மற்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக திரும்பின.

அரசு தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிடி, “மதிப்புமிக்க ஜனாதிபதியும் அவரது குழுவினரும் சில ஹெலிகாப்டர்களில் திரும்பிக் கொண்டிருந்தனர், மோசமான வானிலை மற்றும் மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர்களில் ஒன்று கடுமையாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று கூறினார். மேலும், மோசமான வானிலை காரணமாக மீட்புக் குழுக்கள் அந்தப் பகுதிகளை அடைவதில் தடைபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஈரானின் அரசு தொலைக்காட்சியின் கூற்றுப்படி, அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகரத்திற்கு அருகே இந்த “விபத்து” நடந்துள்ளது.

தேடுதல் நாய்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி 60 க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் வர்ஜகான் நகரத்திற்கு அருகிலுள்ள மலைப்பாங்கான காட்டுப் பகுதிக்கு அனுப்பப்பட்டதாக IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையைச் (ஐ.ஆர்.ஜி.சி) சேர்ந்த படையினர்கள், போலீசார் மற்றும் பணியாளர்களும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ரைசியின் மரணம் ஒரு அரசியல் நெருக்கடியை தூண்டிவிடக் கூடும் என்பதோடு நாட்டின் இஸ்லாமிய முதலாளித்துவ மதகுருமார் ஆட்சியில் கூர்மையான உட்பூசல்களுக்கு வழிவகுக்கும். கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில வேட்பாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு ஜனநாயக-விரோத தேர்தலில், இரண்டு பதவிக்காலங்களை அனுபவித்த பின்னர் பதவி விலக நேர்ந்த மிதவாத ஹசன் ருஹானி என்றழைக்கப்பட்டவருக்குப் பதிலாக ரைசி ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டார்.

பழமைவாதியான ரைசி, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். அவர் 1989 முதல் 1994 வரை தெஹ்ரானின் தலைமை வழக்கறிஞராகவும், 2004 முதல் ஒரு தசாப்தத்திற்கு நீதித்துறை ஆணையத்தின் துணைத் தலைவராகவும், பின்னர் 2014 இல் தேசிய அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார்.

ருஹானி ஆதரித்த விரிவான கூட்டு நடவடிக்கைத் திட்டம் (JCPOA) என்று கருதப்படும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடனான ஈரானின் அணுசக்தி உடன்படிக்கை முறிவுக்கு மத்தியில் ரைசி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்கா தலைமையிலான முடக்கும் பொருளாதாரத் தடைகள், ஈரானில் கடுமையான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை உருவாக்கியதுடன், கோவிட்-19 தொற்றுநோயால் அதிகரித்து வந்த அரசியல் அமைதியின்மையையும் தூண்டியது.

ஈரானின் காலவதியான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் மிகவும் அவசியமான உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்ததே தடையாணைகளின் ஒரு குறிப்பிடத்தக்க கூறுபாடாக இருந்தது. ரைசியும் மற்ற அதிகாரிகளும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சிவிலியன் பெல் 212 ஹெலிகாப்டரில் பயணங்களை மேற் கொண்டிருந்தனர்.

2021 தேர்தலானது, இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் (IRGC) நெருக்கமாக இணைந்திருக்கும் கடும்போக்கு அல்லது முதன்மையான பிரிவை, அரசு எந்திரத்தின் அனைத்து கிளைகளிலும் உறுதியான கட்டுப்பாட்டில் வைத்தது. ரைசியின் கீழ் ஆட்சியானது, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் வெடித்ததற்கு மரணதண்டனை உட்பட காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையுடன் பதிலளித்தது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட அட்லாண்டிக் பத்திரிகையில் “இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் யார் பயனடைவார்கள்?” என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு கருத்துரை, இந்த விபத்து உறுதிசெய்யப்பட்டால், அது தற்செயலானதாக இருக்காது என்று மறைமுகமாக பரிந்துரைத்தது. ஈரானின் ஹெலிகாப்டர் கலத்தின் நிலை, நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால், ஒரு விபத்து நிச்சயமாக சாத்தியம் என்று குறிப்பிட்ட பின்னர், “சந்தேகங்கள் தவிர்க்க முடியாமல் விபத்து மற்றும் யார் பயனடைவார்கள் என்ற கேள்வியை சூழ்ந்திருக்கும்” என்று கட்டுரையாளர் அறிவித்தார்.

இக்கட்டுரையே ஈரானுக்குள் இருக்கும் போட்டியிடும் அரசியல் பிரிவுகள் பற்றிய ஆய்வுடன் நின்றுவிடுகிறது. சந்தை சீர்திருத்தம் மற்றும் மேற்குடன் நெருக்கமான உறவுகளை ஆதரித்துவரும் மிதவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து மட்டுமல்லாமல், ரைசியின் கடுமையான நடவடிக்கைகள் போதாது என்று விமர்சிக்கும் மிகவும் கடுமையான பிரிவுகளிடமிருந்தும் ரைசி எதிர்ப்பை எதிர்கொண்டார்.

எவ்வாறிருப்பினும், காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய இனப்படுகொலையால் எரியூட்டப்பட்டு, மத்திய கிழக்கு எங்கிலும் அபிவிருத்தி அடைந்து வேகமாக தீவிரமடைந்து வரும் புவிசார்-அரசியல் பதட்டங்களின் உள்ளடக்கத்திற்குள்ளாக “யார் ஆதாயமடைகிறார்கள்” என்ற கேள்வியும் வைக்கப்பட வேண்டும். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் லெபனான், சிரியா மற்றும் யேமனில் நடைமுறையில் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளன. அவற்றின் முக்கிய இலக்கு ஈரான் மற்றும் தெஹ்ரானுடன் பிணைந்துள்ள எந்தவொரு போராளிகள், கட்சிகள் அல்லது அரசாங்கங்கள் ஆகும்.

காஸாவில் அதன் காட்டுமிராண்டித்தனப் போரை நடத்தி வருகையில், இஸ்ரேல் லெபனானிலும் சிரியாவிலும் கணக்கிலடங்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது ஹமாஸ், ஹிஸ்புல்லா போராளிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக மட்டும் இல்லாமல், உயர்மட்ட ஈரானிய அதிகாரிகளுக்கு எதிராகவும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி, டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் மூன்று மூத்த இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

சர்வதேச சட்டத்தின்படி, ஈரானிய தூதரகப் பிரதேசம் ஈரானியப் பிரதேசமாக அமைகிறது என்ற இராஜதந்திர அடித்தளங்களுக்குள் ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டது என்பது, ஈரானுடனான பதட்டங்களைத் தூண்டி மோதலைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு போர் நடவடிக்கையாகும். ஈரான் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 13ம் தேதி, இஸ்ரேலிய விமானத் தளங்கள் மீது டிரோன்கள், க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சரமாரியாக ஏவியது. ஆனால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மிக அதிகமாக இவற்றை சுட்டு வீழ்த்த முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில், அதன் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பே தந்தி அனுப்பியது. ஆதலால், இத்தாக்குதலில் சிறிய சேதமே ஏற்பட்டது.

காஸாவின் தெற்கே உள்ள ரஃபா நகரத்தில், மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தி, பாலஸ்தீனிய அகதிகளின் புதிய அலைக்கு வழிவகுத்து வருகின்ற போதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இறுதிவரை ஆதரிக்கப்படும் பாசிச சியோனிச ஆட்சி, புதிய ஆத்திரமூட்டல்களைச் செய்ய வல்லது. இந்த ஆட்சியானது, ஈரானுக்குள் நாசவேலைகள் மற்றும் படுகொலைகள் உட்பட, அதன் சட்ட விரோத செயற்பாட்டிற்காக மத்திய கிழக்கு முழுவதும் இழிபுகழ் பெற்றது.

ஈரானுக்குள் இருக்கும் அரசியல் கொந்தளிப்பில் இருந்து எவர் ஆதாயமடைகிறார்கள் என்ற பட்டியலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் இருக்க வேண்டும்.

Loading