காஸாவில் இனப்படுகொலை செய்வதாக இஸ்ரேல் மீது புதிய அறிக்கை குற்றம் சாட்டியுள்ள நிலையில், பைடன் கூடுதல் இராணுவ உதவிக்கு 1 பில்லியன் டொலர் உறுதியளிக்கிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.

பைடென் நிர்வாகம், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை தொடர்வதற்கு இஸ்ரேலுக்கு 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான இராணுவ உபகரணங்களை அனுப்ப திட்டமிடுகிறது. இராணுவப் பொதியில் பீரங்கி குண்டுகளுக்கு 700 மில்லியன் டொலர், தந்திரோபாய வாகனங்களுக்கு 500 மில்லியன் டொலர் மற்றும் மோட்டார் குண்டுகளுக்கு 60 மில்லியன் டொலரும் அடங்கும். மே 6 அன்று இஸ்ரேலின் தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து 600,000 மக்கள் அல்லது காசாவின் மொத்த மக்கள் தொகையில் கால் பகுதியினர் ரஃபாவை விட்டு வெளியேறிவிட்டனர் என்பதைக் காட்டும் ஐ.நா. புள்ளிவிவரங்களின் மறுபக்கத்தில் இந்த நிதி ஒதுக்கீடு முன்வைக்கப்பட்டுள்ளது.

14 மே 2024 செவ்வாய்க் கிழமை, காஸா பகுதியில் உள்ள நுசிராட்டில், பாலஸ்தீனிய அகதிகளுக்கு உதவும் ஐ.நா. முகவரமைப்பான UNRWA ஆல் நடத்தப்படும் பாடசாலையின் மீது இஸ்ரேஸ் தாக்குதல் நடத்திய பின்னர், பாலஸ்தீனியர்கள் அழிவைப் பார்வையிடுகின்றனர். [AP Photo/Abdel Kareem Hana]

கடந்த 48 மணி நேரத்தில் 150,000 பேர் காஸாவின் தெற்கு நகரத்தை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. வடக்கு காஸாவில் வசிக்கும் சுமார் 100,000 மக்களை வெளியேற்றும் உத்தரவுகளையும் இஸ்ரேல் பிறப்பித்துள்ளது. புதன்கிழமை காஸா நகரில் பொது இணைய இணைப்பைப் பயன்படுத்த முயன்ற ஒரு குழு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். நகரின் சப்ரா சுற்றுப்புறத்தில், பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணப் பணி நிறுவனம் (UNRWA) நடத்தும் மருத்துவமனையானது வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானதில் குறைந்தது 10 இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்பட்டனர்.

ரஃபாவிலிருந்து தப்பியோடியவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஏழு மாதங்களில் இதற்கு முன் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை. அத்துடன், மனித வாழ்க்கைக்கு அவசியமான எந்தவொரு சிவில் உள்கட்டமைப்புகளும் இல்லை. கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகள் அனைத்தும் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ள காரணத்தால், 270,000 டொன் திடக்கழிவுகள் காஸா முழுவதும் தற்காலிக குப்பைகூழங்களில் குவிந்துள்ளன என்று ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் மதிப்பிடுகிறது.

ஐ.நா. தனது மே 15 உடனடி பின்னூட்டத்தில் எழுதியதாவது:

உயரும் வெப்பநிலையானது, பூச்சிகளை உருவாக்குதல் மற்றும் வன விலங்குகளை ஈர்ப்பது போன்று, திடக்கழிவுக் குவிப்பு மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் இருக்கும் பகுதிகளில் அது கடுமையாக உள்ளது. UNDP பின்வருமாறு எச்சரிக்கிறது: “மருத்துவக் கழிவுகள் உட்பட திடக்கழிவுப் பிரச்சினை போதுமான அளவில் கவனிக்கப்பட்டு தீர்க்கப்படாவிட்டால், அது காஸா பகுதியில் பாலஸ்தீனியர்களின் துன்பத்தை அதிகப்படுத்தும் ... குறிப்பாக சுகாதார சேவைகள் கிடைப்பது குறைவாக இருப்பதால், இந்த நிலைமை பொது சுகாதாரத்தை கடுமையாக பாதிக்கும்”.

OXFAM இன் கூற்றுப்படி, கூட்ட நெரிசல், கழிவுகள் மற்றும் கழிவுநீர் குவிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வெப்பம் ஆகியவற்றின் “மரணகரமான கலப்பினால்” காலரா போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கப்படுகிறது.

இந்த மனித அவலத்திற்கு மத்தியில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன் படி, பைடென் நிர்வாகத்தின் இராணுவப் பொதியானது, அதன் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்களை மீண்டும் நிரப்புவதை நோக்கமாகக் கொண்டதுடன் தாக்குதல்களை முடிக்க பல ஆண்டுகள் ஆகலாம். பைடென் நிர்வாகம் இஸ்ரேலுக்கு அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை வழங்கும் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வருவதுடன், அவை முழு சுற்றுப்புறங்களையும் மற்றும் பிற இராணுவ உபகரணங்களையும் தரைமட்டமாக்க பயன்படுத்தப்படுகின்றன. கடந்த மாத இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு துணை இராணுவ செலவினப் பொதியின் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் இராணுவத்திற்கு ஆதரவளிக்க வாஷிங்டன் சுமார் 26 பில்லியன் டொலர்களை ஒதுக்கியது. ரஃபா மீதான நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடங்கிய நிலையில், கடந்த வாரம் வெளியிடப்பட்ட கருத்துக்களில், தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, ஒவ்வொரு டொலரும் அதற்காக செலவிடப்படும் என்று வலியுறுத்தினார்.

அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் தடையின்றி வருவது, காஸா இனப்படுகொலைக்கான வாஷிங்டனின் பொறுப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அக்டோபர் 7ல் இருந்து உத்தியோகபூர்வ மரண எண்ணிக்கை 35,200 பாலஸ்தீனியர்களாக உயர்ந்துள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் கணக்கில் வராததால் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் பிள்ளைகள். இந்த நிலையில், வாஷிங்டனின் பிரதிபலிப்பு, தீவிர வலதுசாரி சியோனிச ஆட்சிக்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்குவதும் ஆயுத ஏற்றுமதியை அதிகப்படுத்துவதுமாகும். இத்தகைய மனிதாபிமானமற்ற முடிவுகளுக்குப் பொறுப்பான நபர்களுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே பொருத்தமானது: அது போர்க்குற்ற நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் அமரும் இடமாகும்.

காஸா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டி மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக வலையமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. யேல், கார்னெல், பொஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டோரியா பல்கலைக்கழகம் உட்பட அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முன்னணி சட்டக் கல்லூரிகள் இந்த வலையமைப்பில் உள்ளடங்கும்.

அந்த அறிக்கை அதன் நிர்வாக சாராம்சப்படுத்தலில் அறிவித்துள்ளதாவது:

7 அக்டோபர் 2023 அன்றில் இருந்து, காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறுவதாக நாங்கள் முடிவு செய்கிறோம்” என்று அந்த அறிக்கை தனது நிர்வாக சுருக்கத்தில் அறிவிக்கிறது. “குறிப்பாக, பாலஸ்தீன மக்களின் கணிசமான பகுதியான காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை உடல் ரீதியாக அழிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட கொலை, கடுமையான தீங்கு விளைவித்தல் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை அழித்தல் போன்ற இனப்படுகொலைச் செயல்களை இஸ்ரேல் செய்துள்ளது.

அக்டோபர் 7 மற்றும் மே 1 க்கு இடையில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை முறையே 34,568 மற்றும் 77,765 ஆகும். இது காஸாவின் மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகிறது. காஸாவில் இரண்டு சதவீத குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களாக உலகில் நடந்த அனைத்து மோதல்களிலும் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட இஸ்ரேல் தனது இரத்தக்களரி தாக்குதலின் முதல் நான்கு மாதங்களில் அதிக குழந்தைகளை கொன்றுள்ளது.

அது தொடர்ந்து கூறுவதாவது:


இந்த அறிக்கையில், இஸ்ரேலிய தலைவர்களின் கருத்துக்கள், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எதிரான மற்றும் அவர்கள் சம்பந்தமாக இஸ்ரேலிய இராணுவப் படைகளின் நடத்தை மற்றும் அரசின் குணாம்சம் மற்றும் அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான நேரடி தொடர்பு ஆகியவற்றால், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கைகள், வேண்டுமென்றே முன்னெடுக்கப்படும் இனப்படுகொலை நோக்கத்தால் தூண்டப்பட்டவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை விவரங்களின்படி, இஸ்ரேலிய அரசாங்கத்தின் பிரதமர் உட்பட, அனைத்து மட்டங்களிலும் உள்ள 13 அதிகாரிகள், காஸா மற்றும் பிற இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அப்பட்டமான மற்றும் தெளிவான மனிதாபிமானமற்ற தன்மையையும் கொடுமையையும் வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பாலஸ்தீனியர்களை அப்படியே இல்லாதொழிக்கும் மற்றும் கூண்டோடு அழிக்கும் நோக்கங்களையும் வெளிப்படையாகப் பிரதிபலிக்கின்றனர். காஸாவில் இஸ்ரேலிய இராணுவப் படைகளின் நடத்தை முறைகள், இஸ்ரேலின் இனப்படுகொலை நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன.

அதன் கண்டுபிடிப்புகள், இஸ்ரேலை இனப்படுகொலை குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்திலும், பைடன் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்க மத்திய நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை வலுப்படுத்தும் என்று அறிக்கை விளக்குகிறது. ஆசிரியர்கள் எழுதியதாவது:

இனப்படுகொலைக்கான சர்வதேச சட்டத் தடையை இஸ்ரேல் மீறுவது, சர்வதேச சட்டத்தின் வெளிப்படையான விதிமுறைகளை கடுமையாக மீறுவதாகும், அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த மீறல்கள் மற்ற அனைத்து நாடுகளின் கடப்பாடுகளையும் முன்கொணர்கின்றன: இஸ்ரேலின் மீறல்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதில் இருந்து அல்லது இந்த மீறல்களுக்கு உடந்தையாக இருக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதைத் தவிர்ப்பது; மேலும் காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலை நடவடிக்கைகளை ஒடுக்கவும், தடுக்கவும், தண்டிக்கவும் சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த வேண்டுகோள்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியமும் கனடா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதன் நட்பு நாடுகளும் காஸாவின் பாலஸ்தீனியர்களின் இரத்தத்தில் கழுத்து வரை மூழ்கியுள்ளன. இனப்படுகொலை எதிர்ப்பாளர்கள் அடக்குமுறை அரசு எந்திரத்தின் முழு பலத்தையும் எதிர்கொள்கின்றனர். இந்த அரசாங்கங்கள் இனப்படுகொலை எதிர்ப்பாளர்களை நசுக்கி, தடுத்திருப்பதோடு அவர்களை தண்டிக்கின்றன. போராட்டக்காரர்களின் முகாம்களை பொலிஸைக் கொண்டு கிழித்தெறிவதுடன், அவர்களை “யூத எதிர்ப்பாளர்கள்” என்ற திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தையும் முன்னெடுக்கின்றன.

சமீபத்திய வாரங்களில் 3,000 இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதே நேரம், ஜேர்மனியில் இஸ்ரேலிய ஆட்சியின் குற்றங்களை எதிர்ப்பவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கும் பொது நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காஸாவில் நடந்த பேரழிவை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களைக் கேட்கவிருந்த பேர்லினில் பாலஸ்தீன காங்கிரஸ் கூட்டத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும், திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஹம்போல்ட் பல்கலைக்கழகங்களுக்கு வெளியிலும் முகாமிட்டவர்களும் அரசு ஏற்பாடு செய்த பொலிஸ் சோதனைகளால் வன்முறையில் கலைக்கப்பட்டனர்.

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக வலையமைப்பின் அறிக்கை மே 15 அன்று வெளியிடப்பட்டது. இந்த தினத்தை பாலஸ்தீனியர்கள் ஒவ்வொரு ஆண்டும் நக்பா தினமாகக் கொண்டாடுகிறார்கள். 14 மே 1948 அன்று ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் இஸ்ரேலை ஸ்தாபிக்க திட்டமிட்டு, வேண்டுமென்றே இன அழிப்பு பிரச்சாரத்தில் 700,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட, 20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் குற்றங்களில் நக்பா தினமும் ஒன்றாகும்.

இஸ்ரேலிய வரலாற்றாசிரியரும், பாலஸ்தீன இனச் சுத்திகரிப்பு நூலின் ஆசிரியருமான இலன் பாப்பே, அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில், காஸா இனப்படுகொலைக்கு மேற்கத்திய சக்திகள் வசதியளிப்பதானது, 1948 இல் அவர்கள் வகித்த பாத்திரத்தை “விட மோசமானது” என்று கூறியமை, இஸ்ரேலின் மிலேச்சத்தனம் மற்றும் காஸாவில் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு அளவுகோலாகும்.

பாப்பே கூறியதாவது:

1948 இல் தொலைக் காட்சிகள் இருக்கவில்லை. மக்களிடம் ஸ்மார்ட்போன்கள் இருக்கவில்லை, மற்றும் நக்பா, இனச் சுத்திகரிப்பு ஆகியவற்றை மறைப்பது இலகுவாக இருந்ததுடன், ஒப்பீட்டளவில் அப்படி ஒன்று நடக்கவில்லை என்று கூறுவது எளிதானது. எங்கள் திரையில் அவை தோன்றும் போது என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிய முடியாது என்று இப்போது கூற முடியாது. எனவே இன்று அது மறுக்கப்படுகின்ற அளவானது, மிகவும் மோசமானதும் மிகவும் ஆத்திரமூட்டுவதுமாகும் என்று நான் நினைக்கிறேன்...

1948 இல் சியோனிஸ்டுகள் இஸ்ரேலிய தேசத்திற்காக உரிமை கோரிய பகுதிகளிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்காகப் படுகொலைகள் பயன்படுத்தப்பட்டன என்று குறிப்பிட்ட அவர், “இப்போது நாம் பார்ப்பது இனப்படுகொலை தூண்டுதலின் ஒரு பகுதியாகும், அதாவது காஸாவில் வாழும் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக மக்களைக் கொல்லும் படுகொலைகள் ஆகும்,” என்றார்

Loading