முன்னோக்கு

பாரிஸ் போர் உச்சிமாநாடு நேட்டோ துருப்புக்களை உக்ரேனுக்கு நேரடியாக அனுப்புவதற்கு தயாராகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான், வலதுபுறம், பாரிஸில் உள்ள எலிசே அரண்மனையில், திங்கள், 26 பெப்ரவரி 2024 அன்று உரை நிகழ்த்துகிறார்   [AP Photo/Gonzalo Fuentes/Pool via AP]

உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோ போர் குறித்த உச்சிமாநாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றிய (EU) நாட்டுத் தலைவர்கள் பாரிஸில் கடந்த திங்கள்கிழமை கூடினர். பாரிய இழப்புகளுக்கு மத்தியில் நேட்டோவின் உக்ரேனிய பினாமி படைகளின் உடனடி சரிவை எதிர்கொள்ளும் நிலையில், உக்ரேனில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் துருப்புக்களையும் அறிமுகப்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக இந்த மாநாடு கூட்டப்பட்டது.

ஸ்லோவாக்கிய பிரதமர் ரொபர்ட் ஃபிகோ, உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, “நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இருதரப்பு அடிப்படையில் உக்ரேனுக்கு தங்கள் படைகளை அனுப்புவது பற்றி பரிசீலித்து வருகின்றன” என எச்சரித்தார். “எந்த நோக்கத்திற்காக என என்னால் கூற முடியாது,” என அவர் மேலும் கூறினார்.

இந்த எச்சரிக்கைகளை உறுதிப்படுத்திய பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “உக்ரேனில் ரஷ்ய வெற்றியைத் தடுப்பது “எல்லாம் சாத்தியமாகும்” என்று அறிவித்ததோடு தனிப்பட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவதில் இருந்து “ஒதுக்கப்படவுமில்லை” என்றும் நேற்றிரவு அறிவித்தார்.

ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்த உக்ரேனுக்கு “நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை” கொடுப்பதாக அவர் உறுதியளித்தார். அதாவது, மக்ரோன், ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் இதர உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் ரஷ்யாவிற்கு எதிரான முழு அளவிலான ஐரோப்பிய-நேட்டோ போருக்கான கட்டமைப்பிற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

வீடியோ இணைப்பு மூலம் பாரிஸ் மாநாட்டில் பேசிய உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியின் கருத்துக்கள், இந்த ஐரோப்பிய ஒன்றிய-நேட்டோ விரிவாக்கத்தின் பேரழிவு தாக்கங்களை மூடிமறைக்கும் நோக்கில் கூறும் உத்தியோகபூர்வ பொய்யை உருவகப்படுத்துகின்றன. “இந்தப் போரில் 31,000ம் உக்ரேனிய படையினர்கள் இறந்துள்ளனர்” என்று செலென்ஸ்கி கூறினார். “300,000 அல்லது 150,000 அல்ல, அல்லது புட்டினும் அவரது பொய் வட்டமும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால், இந்த இழப்புகள் ஒவ்வொன்றும் எங்களுக்குப் பெரும் இழப்பாகும்” எனவும் அவர் தெரிவித்தார்.

செலென்ஸ்கியின் அறிக்கை உக்ரேனிய மக்கள் மீதான அவரது அலட்சியத்தை அம்பலப்படுத்துகிறது. அவர் பொய் சொல்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். நேட்டோ சக்திகள் இப்போது தங்கள் சொந்த படைகளை போர்க்களத்திற்கு அனுப்புவதற்கு வக்காலத்து வாங்குகின்றன என்றால், பெருந்தொகை உக்ரேனிய படையினர் கொல்லப்பட்டதால் உக்ரேனிய இராணுவத்தில் ஆள் பலம் இல்லாமல் போயுள்ளது என்பதே உண்மை.

2022 நவம்பரில், அமெரிக்க கூட்டுப்படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி 100,000ம் உக்ரேனிய துருப்புக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று கூறினார். இருப்பினும் “இந்த எண்ணிக்கை கட்டத்தட்ட 120,000 ஆக இருப்பதாக அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக” நியூயோர்க் டைம்ஸ் கூறியது. கடந்த ஆகஸ்டில், உக்ரேன் 70,000ம் படையினரை இழந்துள்ளதாகவும் 120,000 பேர் காயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

உக்ரேன் போரை விமர்சிக்கின்ற மற்றும் இரகசிய உளவுத்துறை அறிக்கைகளைப் பெறக்கூடிய அமெரிக்க அதிகாரிகள், போருக்கு எதிரான எதிர்ப்பைக் குறைக்கும் நோக்கில், இந்த 2023 ஆகஸ்ட் புள்ளிவிவரங்கள் உண்மையில் உக்ரேனிய இழப்புகளைக் குறைத்து காட்டுவதாகத் தெரிவித்தனர்.

அமெரிக்க கேர்னல் டக்ளஸ் மக்ரிகோர், “உக்ரேனியர்கள் இப்போது போரில் கொல்லப்பட்ட 400,000ம் பேரை இழந்துள்ளனர் என நாங்கள் நினைக்கின்றோம்,” என்றார். “நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு 300,000-350,000 மரணங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். போர்க்களத்தைத் துடைப்பதாகக் கூறக்கொண்டு நடத்திய எதிர்த்தாக்குதலின் கடைசி மாதத்திற்குள், குறைந்தது 40,000ம் பேர் கொல்லப்பட்டனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

உக்ரேனிய உயிரிழப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்ததை விட இன்று மிக அதிகமாக உள்ளது. உண்மையில், கண்ணிவெடிகள், கனரக பீரங்கிகள் மற்றும் ட்ரோன்களின் ஆதரவுடன் நன்கு தயாரிக்கப்பட்ட ரஷ்ய கோட்டைகளுக்கு எதிராக துருப்புக்களை வீசுவதை உள்ளடக்கியிருந்த உக்ரேனின் தோல்வியுற்ற “எதிர் தாக்குதல்” நவம்பர் வரை நிறுத்தப்படவில்லை. உக்ரேனியப் படைகள் முன்னரங்கு முழுவதும் பேரழிவுகரமான தோல்விகளைச் சந்தித்தன. நாளொன்றுக்கு 1,500 பேர் உயிரிழப்பதாக அம்பலமான அறிக்கைகளுக்கு மத்தியில், அவர்கள் மிக சமீபத்தில் அவ்தீவ்காவைக் கைவிட்டனர்.

சமீபத்திய வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை, உக்ரேனிய போர்முனையில் 200 சிப்பாய்களில் 40 பேர் மட்டுமே எஞ்சியிருந்ததாகத் தெரிவித்தது. பல தரைப்படை பிரிவு தளபதி, “முன்னரங்கு எங்காவது சரிந்துவிடும்,” என்று போஸ்ட்டை எச்சரித்தார்.

உக்ரேனின் பேரழிவு உயிரிழப்புகள் ஒரு எச்சரிக்கை ஆகும்: ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது போர் தொடுத்தால் பயங்கரமான இழப்புகளைச் சந்திக்கும். 2023 செப்டம்பரில் அமெரிக்க இராணுவப் போர்க் கல்லூரியின் காலாண்டு ஆய்வில், ரஷ்யாவுடனான போரில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்கும் வகையில், ஆட்சேர்ப்பை மேற்கொள்ளுமாறு அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தமை நினைவுகூரத் தக்கது. இந்த விறுவிறுப்பான போரில் அமெரிக்க இராணுவம் நாளொன்றுக்கு 3,600 அல்லது வருடத்திற்கு 1.3 மில்லியன் உயிரிழப்புகளை சந்திக்கும் என்று அது கணித்துள்ளது.

மேலும், உயிரிழப்புகளும், இழப்புகளும் போர்க்களத்தில் மட்டும் நின்றுவிடாது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் நேட்டோ படைகளை நேரடியாக அறிமுகப்படுத்துவது கிட்டத்தட்ட அணுவாயுத மோதலாக அதிகரிக்கும். அப்போது மரணங்களும் மற்றும் இழப்புக்களும் கோடிக்கணக்கானதாக இருக்கும்.

போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பற்றி செலென்ஸ்கி மிகவும் துணிச்சலாகப் பொய் சொல்கிறார் என்றால், அவரும் அவரது நேட்டோ கூட்டாளிகளும் வேறு எதையெல்லாம் பற்றி பொய் சொல்கிறார்கள்? பதில்: எல்லாவற்றையும் பற்றி.

உக்ரேன் போரைச் சுற்றி நேட்டோ சக்திகள் இட்டுக் கட்டியுள்ள முழு விவரிப்பும், மக்களின் முதுகுக்குப் பின்னால் இராணுவ விரிவாக்கத்திற்கான திட்டங்களை நியாயப்படுத்த கூறப்படும், நிராகரிக்கப்பட வேண்டிய பொய்களின் துணுக்கு ஆகும். அதற்கு மாறாக, தொழிலாளர்களும் இளைஞர்களும் போரை நிறுத்த அரசியல் ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டும்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்கள், இது ஒரு ஆத்திரமூட்டப்படாத ரஷ்ய ஆக்கிரமிப்பு என்று உக்ரேன் போரின் தோற்றம் பற்றி இடைவிடாமல் பொய் கூறுகின்றன. ஆனால், இந்த வார இறுதியில், நியூயோர்க் டைம்ஸ், உக்ரேனுக்கு 60 பில்லியன் டொலர் மேலதிக இராணுவ உதவி வழங்கும் சட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்ற அதன் வேண்டுகோளை நியாயப்படுத்த, ரஷ்யாவிற்கு எதிரான சி.ஐ.ஏ. உளவு மற்றும் படுகொலை திட்டங்களுக்கு உக்ரேன் எவ்வாறு மதிப்புமிக்க சொத்தாக செயல்படுகிறது என்பதை விவரிக்கும் கட்டுரையை வெளியிட்டது. முதன்முறையாக நியூயோர்க் டைம்ஸால் வெளியிடப்பட்ட “இந்த உளவுத்துறை கூட்டாண்மை பற்றிய விவரங்கள், ஒரு தசாப்த காலமாக நெருக்கமாக பாதுகாக்கப்பட்டு இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன” என்று அது எழுதியது.

எனவே, உக்ரேன் மீதான 2022 ரஷ்ய படையெடுப்பை நேட்டோவே தூண்டிவிட்டது என்பதே அதற்கு உடந்தையான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் “நெருக்கமாக பாதுகாக்கப்பட்ட ரகசியம்” ஆகும். உக்ரேனின் தற்போதைய ஆட்சியை நிறுவிய கியேவில், 2014 இல் அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டதில் இருந்து, நேட்டோ சக்திகள் உக்ரேனை ஒரு இராணுவத் தளமாக கட்டியெழுப்ப பத்து அல்ல நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளன. ரஷ்யாவில் திவாலாகிவிட்ட சோவியத்துக்கு பிந்தைய முதலாளித்துவ ஆட்சியானது, உக்ரேனின் “மேற்கத்திய பங்காளிகள்”, அதாவது நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள், ரஷ்யாவிற்கு எதிரான தங்களின் மிக ஆக்கிரோஷமான கொள்கைகளை கைவிட அழுத்தம் கொடுக்கும் முயற்சியிலேயே உக்ரேனை ஒரு தற்காப்பு சூழ்ச்சியாக ஆக்கிரமித்தது,

ஸ்ராலினிச அதிகாரத்துவம் 1991ல் சோவியத் ஒன்றியத்தை கலைத்ததில் இருந்து, நேட்டோ சக்திகள் மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா முழுவதும் போர்களை நடத்தி மில்லியன் கணக்கானவர்களை கொன்று குவித்துள்ளன. இந்த இரத்தக்களரி வெறித்தனமானது நேட்டோ சக்திகளுக்கு உலகை சூறையாட உதவிய அதே நேரம், சமூக சிக்கன நடவடிக்கைகளை சுமத்தி உள்நாட்டில் தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவ-பொலிஸ் அரசை பலப்படுத்தவும் உதவியது.

உக்ரேனிய முன்னரங்கின் சிதைவு, இந்தப் போர்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொய்கள் ஆழமாக மதிப்பிழந்த நிலைமைகளின் கீழ் ஏற்படுகிறது. 2003ல் எண்ணெய் வளம் மிக்க ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கான சாக்குப்போக்காக வாஷிங்டன் பயன்படுத்திய ஈராக்கிய “பேரழிவு ஆயுதங்கள்” எனப்படுவது இருக்கவில்லை. 2011 இல் லிபியா மற்றும் சிரியாவில் தொடங்கப்பட்ட நேட்டோ போர்கள், ரஷ்யாவுடன் பிணைக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக எனக் கூறப்பட்டது, அதைத் தொடர்ந்து காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு நேட்டோ சக்திகளின் ஆதரவு கிடைத்துள்ளது. பெருகிவரும் சமூக கோபம் மற்றும் பணவீக்கம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் காஸா இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள் தலைதூக்கி வருகின்றன.

ஐரோப்பிய ஆளும் வர்க்கம் இந்த நெருக்கடிக்கு வெகுவாக வலதிற்கு மாறுவதன் மூலம் எதிர்வினையாற்றுகிறது. உக்ரேனிய தோல்வி, வெளிநாட்டில் அதன் ஏகாதிபத்தியப் போர்களையும் உள்நாட்டில் வர்க்கப் போரையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொய்களின் முழு கட்டிடத்தையும் தகர்த்துவிடும் என்று அஞ்சி, அது ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் வெடிக்கக் கூடிய மூன்றாம் உலகப் போருக்கான பாதையைத் திறந்து விட்டுள்ளது.

ஆளும் வர்க்கம் பூகோளப் போரை நோக்கி நகரும் போது,தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கி செல்லும் வழி, ஒரு சர்வதேச, புரட்சிகர முன்னோக்கிற்கான பக்கம் திரும்புவதாகும். பணவீக்கம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் காஸா இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன சர்வதேச எதிர்ப்பின் மத்தியில், தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு சோசலிசத்திற்காக போராடும் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதே அவசர பணி ஆகும்.

Loading