மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பிப்ரவரி 2022 அன்று உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பற்றிய, அமெரிக்க ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு குறிப்பும், “தூண்டுதலற்ற” என்ற ஒரு கட்டாய வார்த்தையுடன் முன்வைக்கப்பட்டு வந்தது.
எந்தவொரு வரலாற்றுப் பின்னணி அல்லது பொருளாதார நோக்கங்கள் இல்லாமல் வரலாற்றில் நடந்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் என்ற ஒரு மனிதனின் உளவியலை அடிப்படையாகக் கொண்ட முதல் போர் இது என்று பொதுமக்கள் ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் கடந்த வார இறுதியில், போரின் இரண்டாம் ஆண்டு நிறைவு தினமான பிப்ரவரி 24, 2022 அன்று, உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அமெரிக்க இராணுவ உளவுத்துறையின் முறையான மற்றும் பரவலான ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தால் தூண்டப்பட்டது என்று நியூயோர்க் டைம்ஸ் ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளது.
உக்ரேனில் மத்திய புலனாய்வு ஏஜென்சியின் (CIA) செயல்பாடுகளை அந்தக் கட்டுரை விவரிக்கிறது. அதில், உக்ரேனில் நீண்டகாலமாக செயல்பட்டுவரும் CIA ஆனது, உக்ரேனிய இராணுவ புலனாய்வு நிறுவனமான HUR க்கு நிதியுதவி செய்து, அதனைக் கட்டியெழுப்பி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ரஷ்யாவிற்கு எதிராக உளவு பார்த்தல், படுகொலைகள் மற்றும் பிற ஆத்திரமூட்டல்களின் ஆயுதமாக பயன்படுத்தியது என்று குறிப்பிடப்படுகிறது.
டைம்ஸ் எழுதுகிறது:
2021 ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு மூத்த ஐரோப்பிய அதிகாரியின் கூற்றுப்படி, திரு. புட்டின் ரஷ்யாவின் முக்கிய உளவு சேவைகளில் ஒன்றின் தலைவரைச் சந்தித்தபோது, தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கலாமா என்று பரிசீலித்துக்கொண்டிருந்தார். பிரிட்டனின் MI6 உடன் இணைந்து C.I.A உக்ரேனைக் கட்டுப்படுத்துவதாகவும், மாஸ்கோவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தரையிறக்கப் பகுதியாக அதனை மாற்றுவதாகவும் புட்டின் அவரிடம் கூறினார்.
ரஷ்ய உளவுத்துறையின் இந்த மதிப்பீடு முற்றிலும் உண்மை என்பதை டைம்ஸ்சின் கட்டுரை நிரூபிக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக, கிழக்கு உக்ரேனில் ரஷ்ய-சார்புப் படைகளுக்கு எதிராகவும், கிரிமியாவில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகவும், எல்லையைத் தாண்டி ரஷ்யாவிற்குள்ளும் படுகொலைகள் மற்றும் பிற ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டு வந்த உக்ரேனிய உளவுத்துறை மற்றும் துணை ராணுவப் படைகளை CIA கட்டமைத்து, பயிற்சி அளித்து ஆயுதம் கொடுத்து வந்தது.
ஒரு முக்கியமான பத்தியில், டைம்ஸ் எழுதுகிறது:
2016 க்குப் பிறகு கூட்டாண்மை ஆழமடைந்ததால், உக்ரேனியர்கள் வாஷிங்டனின் அதிகப்படியான எச்சரிக்கையுடன் பொறுமையிழந்து, படுகொலைகள் மற்றும் பிற கொடிய நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர். இது, உக்ரேனியர்கள் ஒப்புக்கொண்டதாக வெள்ளைமாளிகை நினைத்த விதிமுறைகளை மீறியது. கோபமடைந்த வாஷிங்டன் அதிகாரிகள் தங்கள் ஆதரவை நிறுத்துவதாக அச்சுறுத்தினர். ஆனால், அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை.
இதனை வேறுவார்த்தைகளில் கூறினால், அமெரிக்கா மற்றும் நேட்டோவால் ஆயுதம் ஏந்திய, நிதியுதவி வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வந்த உக்ரேனிய துணை ராணுவப் படைகள், ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை ஆதரிக்கும் சக்திகளை திட்டமிட்ட முறையில் படுகொலை செய்து கொண்டிருந்தன என்பதாகும்.
டைம்ஸ் பத்திரிகையின் கணக்கு பிப்ரவரி 2014 மைதான் சதியுடன் தொடங்குகிறது. அப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் வலதுசாரி மற்றும் நவ-நாஜி சக்திகள் ரஷ்ய-சார்பு ஜனாதிபதியை தூக்கி எறிந்து, பில்லியனர் பெட்ரோ பொரோஷென்கோ தலைமையிலான ஏகாதிபத்திய சார்பு ஆட்சியை நிறுவினர்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை மீறி, கிட்டத்தட்ட கிழக்கு ஐரோப்பா முழுவதையும் உள்ளடக்கியதாக நேட்டோவின் விரிவாக்கத்துடன், இரண்டு தசாப்தங்களாக, முன்னாள் சோவியத் முகாமுக்குள் ஏகாதிபத்திய ஊடுருவலின் உச்சக்கட்டமே இந்த சதி ஆகும். டைம்ஸ் இந்த முந்தைய வரலாறு மற்றும் மைதான் சதுக்க நிகழ்வுகளில் C.I.A இன் பங்கு குறித்து மௌனமாக உள்ளது.
டைம்ஸ் அறிக்கையின் விவரங்களின்படி, மைதான் சதுக்கம் CIA தலையீட்டின் பாரிய விரிவாக்கத்திற்கு களம் அமைத்துக் கொடுத்தது. உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே மோதலைத் தூண்டுவதில் இந்த புலனாய்வு நிறுவனம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் கிழக்கு உக்ரேனில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கு எதிரான குறைந்த அளவிலான போராக, பின்னர் பிப்ரவரி 2022 இல் ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு ஒரு முழு அளவிலான போராக இருந்தது. மூன்று அமெரிக்க நிர்வாகங்கள் இதில் ஈடுபட்டன: முதலில் ஒபாமா, பின்னர் டிரம்ப் மற்றும் இப்போது பைடென்.
டைம்ஸ் கணக்கின்படி, CIAயின் நடவடிக்கைகளில் பரவலாக உளவு பார்ப்பது மட்டுமல்லாமல், கிழக்கு உக்ரேனில் ரஷ்ய சார்பு அரசியல்வாதிகள் மீதான படுகொலை மற்றும் கிரிமியாவில் ரஷ்யப் படைகளுக்கு எதிரான துணை ராணுவத் தாக்குதல்கள் போன்ற நேரடி ஆத்திரமூட்டல்களுக்கு உதவுவதும் அடங்கும்.
2016 ஆம் ஆண்டு உட்பட ஒரு உக்ரேனியப் பிரிவு, ஐந்தாவது இயக்குநரகம், படுகொலைகளை நடத்துவதற்கு பணிக்கப்பட்டதாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தி டைம்ஸ் எழுதியது:
கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு நகரமான டொனெட்ஸ்கில் ஒரு மர்மமான குண்டு வெடிப்பில், மோட்டோரோலா என்ற பெயரால் அறியப்பட்ட ஆர்சன் பாவ்லோவ் என்ற உயர் ரஷ்ய பிரிவினைவாத தளபதியை ஏற்றிச் சென்ற லிஃப்ட் அழிக்கப்பட்டது.
இந்த கொலையாளிகள் சி.ஐ.ஏயின் பயிற்சி பெற்ற உளவுக் குழுவான ஐந்தாவது இயக்குநரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சி.ஐ.ஏ விரைவில் அறிந்து கொண்டது. உக்ரேனின் உள்நாட்டு புலனாய்வு நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவு விருதுகளைக் கூட வழங்கியது. ஒவ்வொன்றும் “லிஃப்ட்” என்ற வார்த்தையுடன் தைக்கப்பட்டது. இது லிஃப்ட் என்பதற்கான பிரிட்டிஷ் சொல்லாகும்.
அத்தகைய மற்றொரு செயல்பாட்டையும் கட்டுரை விவரிக்கிறது:
உக்ரேனிய முகவர்கள் குழு, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு கட்டிடத்தில் தோளில் வைத்து ஏவப்படும் ஆளில்லா ராக்கெட் லாஞ்சரை நிறுவியது. இது கிவி என்று அழைக்கப்படும் மிகைல் டோல்ஸ்டிக் என்ற கிளர்ச்சித் தளபதியின் அலுவலகத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருந்தது. கிவி தனது அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன், ரிமோட் தூண்டுதலைப் பயன்படுத்தி, அவர்கள் லாஞ்சரை ஏவி, அவரைக் கொன்றதாக அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முழு அளவிலான போர் வெடித்ததில் இருந்து, உக்ரேனிய HUR இந்த படுகொலை நடவடிக்கைகளை ரஷ்யாவின் முழுப் பகுதிக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இதில் டாரியா டுகினாவின் கொலையும் அடங்கும். அவர் ரஷ்ய ஊடகங்கள் மற்றும் ரஷ்ய அரசாங்கம் மற்றும் இராணுவ அதிகாரிகளில் புட்டின் சார்பு விவாதவாதியாக இருந்தார்.
ரஷ்ய இராணுவம் மற்றும் உளவுத்துறையின் நடவடிக்கைகள் குறித்த பெரிய அளவிலான தரவுகளை சேகரிப்பதில் CIA தனது உக்ரேனிய கூட்டாளிகளை மிகவும் பயனுள்ளதாகக் கண்டறிந்தது. அதனால் HUR அதைச் செயலாக்க முடியவில்லை மற்றும் மூலத் தரவுகளை வர்ஜீனியாவின் லாங்லியில் உள்ள CIA இன் தலைமையகத்திற்கு பகுப்பாய்வுக்காக அனுப்ப வேண்டியிருந்தது.
முன்னதாக, வாஷிங்டன் போஸ்ட்டில் வெளிவந்த இந்த உளவுத்துறை ஒத்துழைப்பு பற்றிய விரிவான அறிக்கை, ஒவ்வொரு நாளும் “250,000ம் முதல் 300,000ம்” வரை ரஷ்ய இராணுவ/உளவுத்துறை செய்திகள் சேகரிக்கப்பட்டதாக உக்ரேனிய உளவுத்துறை அதிகாரியின் மதிப்பீட்டை மேற்கோள் காட்டியுள்ளது. இந்தத் தரவுகள் உக்ரேனைப் பற்றியது மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ரஷ்ய உளவுத்துறை சேவைகளின் செயல்பாடுகளையும் பற்றியுள்ளது.
ரஷ்ய படையெடுப்பிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மாஸ்கோ மீதான தாக்குதலை விரிவுபடுத்த CIA முயன்றது என்று டைம்ஸ் தெரிவிக்கிறது:
இந்த உறவு [உக்ரேனிய HUR உடன்] மிகவும் வெற்றிகரமாக இருந்தது, ரஷ்யாவை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும் மற்ற ஐரோப்பிய உளவுத்துறை சேவைகளுடன் C.I.A அதை பிரதிபலிக்க விரும்பியது.
ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் C.I.A இன் ரஷிய ஹவுஸின் தலைவர், ஹேக்கில் ஒரு இரகசிய கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அங்கு, C.I.A., பிரிட்டனின் MI6, HUR, Dutch Service (ஒரு முக்கியமான உளவுத்துறை கூட்டாளி) மற்றும் பிற ஏஜென்சிகளின் பிரதிநிதிகள் ரஷ்யா மீதான தங்களின் உளவுத்துறையை ஒன்றிணைக்கத் தொடங்குவதை ஒப்புக்கொண்டனர்.
இதன் விளைவாக ரஷ்யாவிற்கு எதிரான ஒரு இரகசிய கூட்டணியில் - உக்ரேனியர்கள் அதில் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பிப்ரவரி 2022 இன் ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பே நிகழ்ந்தன. முழு அளவிலான போர் வெடித்தபோது, உக்ரேனில் இன்னும் நேரடியான CIA ஈடுபாட்டிற்கு வழிவகுத்தது. உக்ரேனில் இருந்து அமெரிக்க அரசாங்கப் பணியாளர்களை முதலில் வெளியேற்றியதன் மூலம் மேற்கு உக்ரேனுக்கு மட்டும் அகற்றப்பட்ட அமெரிக்கர்களில் CIA முகவர்கள் மட்டுமே இருந்தனர். நடவடிக்கைகளின் துல்லியமான விவரங்கள் உட்பட, அவர்கள் தொடர்ந்து உக்ரேனியர்களுக்கு ரஷ்ய இராணுவத் திட்டங்களைப் பற்றி விளக்கினர்.
டைம்ஸ் பத்திரகையின்படி:
சில வாரங்களுக்குள், கியேவுக்குத் திரும்பிய C.I.A, மேலும் உக்ரேனியர்களுக்கு உதவ பல புதிய அதிகாரிகளை அனுப்பியது. C.I.A.வின் கணிசமான இருப்பைப் பற்றி ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறுகையில், “அவர்கள் விசை தூண்டுதல்களை இழுக்கிறார்களா?” இல்லை. அவர்கள் இலக்கு வைக்க உதவுகிறார்களா? ஆம் முற்றிலும் உண்மை என்று கூறினார்.
உக்ரேனிய தளங்களுக்கு அனுப்பப்பட்ட சி.ஐ.ஏ.யின் அதிகாரிகள், உக்ரேனியர்கள் தாக்கத் தயாராகும் சாத்தியமான ரஷ்ய இலக்குகளின் பட்டியலை மதிப்பாய்வு செய்தனர். உக்ரேனியர்கள் அமெரிக்க உளவுத்துறையுடன் ஒப்பிட்டு, அது துல்லியமானது என்பதை உறுதிப்படுத்தினர்.
இதனை வேறுவார்த்தைகளில் கூறினால், சிஐஏ போரை வழிநடத்த உதவியது, அமெரிக்க அரசாங்கத்தை அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவுடனான போரில் ஒரு இணை-போர்வெறியராக, அமெரிக்க அரசாங்கத்தை ஒரு முழு பங்கேற்பாளராக ஆக்கியது. அமெரிக்கா உக்ரேனுக்கு தூரத்தில் இருந்து மட்டுமே உதவவில்லை என்று பைடென் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில், இவை அனைத்தைப் பற்றியும் அமெரிக்க மக்களுக்கு சிறிதும் சொல்லப்படவில்லை.
டைம்ஸ்சின் கணக்கு அமெரிக்க ஊடகத்தின் மீது தற்செயலான குற்றச்சாட்டையும் வழங்குகிறது, அது எழுதுகையில், “இந்த உளவுத்துறை கூட்டாண்மை பற்றிய விவரங்கள், அவற்றில் பல முதன்முறையாக நியூயோர்க் டைம்ஸால் வெளியிடப்படுகின்றன. அவை ஒரு தசாப்த காலமாக மிகவும் பாதுகாக்கப்பட்ட இரகசியமாக உள்ளன”. இதனை ஒப்புக்கொள்வதன் அர்த்தம், இந்த ரகசியங்கள் டைம்ஸாலேயே “நெருக்கமாகப் பாதுகாக்கப்பட்டன”. முன்னாள் ஆசிரியர் பில் கெல்லர் ஒருமுறை கவனித்தது போல், “பத்திரிகை சுதந்திரம் என்பது வெளியிடாத சுதந்திரம், அதுவே நாம் சில முறைப்படி செயல்படும் சுதந்திரமாகும். குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள் என்று வரும்போது நாம் சேர்க்கலாம்” என்று குறிப்பிடுகிறது.
டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையானது, உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் வெளிப்பாடாக இல்லை. கட்டுரையின் இரண்டு ஆசிரியர்களான ஆடம் என்டஸ் மற்றும் மைக்கேல் ஸ்க்விர்ட்ஸ் ஆகியோர் “உக்ரேனில் உள்ள தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளுடன், ஐரோப்பாவில் மற்றும் அமெரிக்காவில் 200 க்கும் மேற்பட்ட நேர்காணல்களை” நடத்தியதாக அமெரிக்காவின் “சாதனைபடைத்த பத்திரிகையின்” கட்டுரை தெரிவிக்கிறது. ஆனால், CIA மற்றும் செலன்ஸ்கியின் ஆட்சி மற்றும் உக்ரேனிய உளவுத்துறையின் அறிவு, அனுமதி, ஊக்கம் கூட இல்லாமல் இந்த நடவடிக்கை நடந்திருக்க முடியாது.
இதற்கிடையில், ஒரு உண்மையான பத்திரிகையாளரான ஜூலியன் அசான்ஞ், அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான தனது இறுதி மேல்முறையீட்டின் முடிவுக்காகக் காத்திருக்கிறார். அங்கு, அவர் 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனையை எதிர்கொள்கிறார். அசான்ஞ் மற்றும் விக்கிலீக்ஸ் மேற்கொண்ட குற்றம் என்னவென்றால், அவர்கள் முதலாளித்துவ இதழியல் விதிகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்பதாகும். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட போர்க்குற்றங்கள், அரசாங்கங்களைத் தகர்த்து கையாள்வதற்கான அமெரிக்க வெளியுறவுத் துறையின் முயற்சிகள் மற்றும் சிஐஏ மற்றும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் உளவு நடவடிக்கைகள் பற்றிய வெளிப்பாடுகளை வெளியிடுவதற்கு முன்பு அவர் இராணுவ-உளவுத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை.
உக்ரேனில் ஒரு தசாப்த கால சி.ஐ.ஏ.யின் நடவடிக்கைகளின் வெளிப்பாடு (தெளிவாக ஏஜென்சியின் வேண்டுகோளின் பேரில்) இந்தப் போரில் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் நடந்து வரும் மோதலுடன் தொடர்புடையதாகத் தோன்றுகிறது. கடந்த ஆண்டு தாக்குதலின் போது செலென்ஸ்கி ஆட்சியால் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து, அது சிறிதளவு வெற்றிக்காக பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. உக்ரேனுக்கான மேலதிக இராணுவ மற்றும் நிதி உதவியைத் தடுத்துள்ள அமெரிக்க காங்கிரஸிலுள்ள குடியரசுக் கட்சியினர், அமெரிக்கா அதன் இழப்புகளைக் குறைத்து முக்கிய எதிரியான சீனாவில் கவனம் செலுத்த வேண்டும் என்று திறம்பட அறிவித்துள்ளனர்.
அமெரிக்க இராணுவ உளவுத்துறை எந்திரத்தால் உக்ரேனிய ஆட்சியின் உண்மையான நிலவரத்தைப் பற்றி அறிக்கை செய்வதன் மூலம், டைம்ஸ் போருக்கு நிதியளிக்க குடியரசுக் கட்சியினருக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறது. அத்தோடு, இந்தப் பணம் ஆயிரக்கணக்கான மைல்கள் அமெரிக்க எல்லைகளிலிருந்து, ஒரு வெளிநாட்டுப் போரில் ஈடுபடும் ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திற்குச் செல்லவில்லை. மாறாக, அமெரிக்கப் பணியாளர்கள் ஆழமாகவும் நேரடியாகவும் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் போரை நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணை ஒப்பந்தக்காரரிடம் செல்கிறது என்று விவாதிக்கப்படுகிறது.
அவ்வாறு செய்வதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரேனில் நடந்துவரும் போரைப் பற்றிய அதன் சொந்த செய்திகள், ரஷ்யாவை அடிபணியச் செய்து, தகர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போரை ஆதரிப்பதற்காக அமெரிக்க மக்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு மோசடிக் கதையைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட போர் பிரச்சாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று டைம்ஸ் வெளிப்படுத்திக் காட்டுகிறது.
மேலும் படிக்க
- உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் இரண்டு ஆண்டுகள்
- நேட்டோ அங்கத்துவ நாடுகளுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்த பின்னர், ஐரோப்பிய அரசாங்கங்கள் பிரமாண்டமான ஆயுதக் கட்டமைப்பைக் கோருகின்றன
- பைடென் நிர்வாகம் உக்ரேனியர்களைக் கொன்றுகுவிப்பதற்கு நிதியளிக்க மேலும் 60 பில்லியன் டாலர்களைக் கோருகிறது