மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ், மீண்டும் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவது தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். கடந்த இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு, அவரது சட்டக் குழு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியது. நீதிபதிகள் திரு ஜஸ்டிஸ் ஜோன்சன் மற்றும் திருமதி விக்டோரியா ஷார்ப் ஆகியோர் தங்கள் முடிவை ஒத்திவைத்தனர். வழக்கறிஞர்கள் கூடுதல் ஆவணங்களை சமர்பிப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 4ஆம் தேதிக்குப் பிறகுதான் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் அனுமதி வழங்கினால், மேல்முறையீடு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அசான்ஜ் மீண்டும் பெல்மார்ஷ் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் காத்திருக்க வேண்டும்.
அவர்கள் மறுத்தால், இரண்டு வழிகள் சாத்தியமாகும். ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள நீதிமன்றம் தனது சொந்த முடிவை அடையும் வரை அவரை நாடு கடத்துவதைத் தடுக்கும் விதி 39 ஆணை உட்பட மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் அசான்ஜ் உடனடியாக மேல்முறையீடு செய்வார். இது வழங்கப்பட்டதாகக் கருதினால், இந்த உத்தரவுக்கு இணங்க வேண்டுமா அல்லது அசான்ஜ்சை எப்படியும் அமெரிக்காவிற்கு மாற்றலாமா என்பதை இங்கிலாந்து அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும்.
அனைத்து நிகழ்வுகளும் இயந்திர ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சாத்தியமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிறைக்காவலராக ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம், அசான்ஞ்சை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக, முதலில் பொலிசாரின் தொடர்ச்சியான முற்றுகையின் கீழ், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திலும், பின்னர் பெல்மார்ஷ் சிறையிலும் அடைத்து வைத்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்யும்போது அவர்கள் அதைத் தொடரலாம், அது இறுதியில் மறுக்கப்படலாம் அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படலாம்.
மாற்றாக, அசான்ஞ்சை அமெரிக்காவிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது என்று பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசுகள் முடிவு செய்திருக்கலாம். அத்தகைய திட்டம், இந்த வாரம் ஏற்றப்பட்ட வலுவான வழக்கால் சிக்கலானதாக இருந்திருக்கும். ஆனால், அது நிச்சயமாக நிராகரிக்கப்படவில்லை.
நாடுகடத்தல் அசான்ஞ்சேக்கு மிகப்பெரிய தனிப்பட்ட மற்றும் சட்டரீதியான சவால்களை ஏற்படுத்தும். அவர் பிரிட்டிஷ் சிறையில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மிகப்பெரிய தனிப்பட்ட தீங்குகளை அனுபவிக்கின்றார். மேலும், வீடியோ இணைப்பு மூலம் உயர் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ளவோ அல்லது பார்க்கவோ முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிப்புடன் இருக்கின்றார். அசான்ஞ் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது, தற்கொலைக்குரிய அபாயம் என்று கருகின்ற அவரது மனைவியான ஸ்டெல்லா, அவரால் உயிர் பிழைக்க முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
2021 இலையுதிர்காலத்தில் அசாஞ்சின் முதல் ஒப்படைப்பு விசாரணையில், நிபுணத்துவம் வாய்ந்த சாட்சிகள் அமெரிக்காவில் அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கான கடுமையான நிலைமைகள் குறித்து சாட்சியமளித்தனர்.
அவர்களின் சாட்சியத்தின்படி, அலெக்ஸாண்ட்ரியா தடுப்பு காவல் மையத்தின் நிர்வாகப் பிரிப்புப் பிரிவில் வைக்கப்படும் அவர், சிறப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்றும், இது கிட்டத்தட்ட அவரை முழு தனிமைப்படுத்தலுக்கு வழிவகுப்பதோடு, அவரது சொந்த சட்டப் பாதுகாப்பில் பங்கேற்கும் திறனை கடுமையாக ஊனமாக்கும்.
சமீபத்தில் CIA உளவு மென்பொருளின் ஆதாரங்களை கசியவிட்டதற்காக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜோசுவா ஷுல்ட்டினை கையாளுதலின் மூலம், அசான்ஞ்சுக்கு காத்திருக்கும் காட்டுமிராண்டித்தனமான சிகிச்சை நிரூபிக்கப்பட்டுள்ளது. “அமெரிக்க பெடரல் அரசு என்னை 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும் கடும் இரைச்சல் மற்றும் தனிமைச் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறது. ஜன்னல் மறைக்கப்பட்டுள்ளது. சட்ட நூலகத்திற்கு அனுமதி வழங்கப்படும் போது, நான் தரையில் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வேண்டும். நான் 9 மணி நேரம் அங்கேயே வைக்கப்பட்டிருந்தேன்” என்று ஷுல்ட் தனது தண்டனை விசாரணையின்போது கூறினார்.
“நான் சித்திரவதைக் கூண்டில் கொறித்துண்ணி மலத்துடன் அடைக்கப்பட்டிருக்கிறேன். ஜன்னலுக்கு அருகில் பனி குவிகிறது. நான் என் கழிப்பறையில் என் துணிகளை துவைக்கிறேன். மிருகத்தைப் போல வெறும் கைகளால் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நீங்கள் மனிதர்கள் இல்லை என்பது போல் அவர்கள் உங்களை இழிவாகப் பார்க்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
அசாஞ்சேயின் வழக்கறிஞர்களும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள். தங்கள் வாடிக்கையாளருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைக் கொண்டிருப்பதுடன், அவரது பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க அரசாங்க ஆவணங்களை அணுகுவதிலும், அசாஞ்சேவுடன் தங்கள் தகவல்களைப் பகிர்வதிலும் அவர்கள் தடைகளை எதிர்கொள்வார்கள்.
இதற்கிடையில், துன்புறுத்தலுக்கு பயந்து அனைத்து விக்கிலீக்ஸ் ஊழியர்களும் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், உளவுச் சட்டத்தில் பொது நலன் பாதுகாப்பு இல்லை என்ற உண்மை, விக்கிலீக்ஸ் வெளியீடுகளின் உண்மையான உள்ளடக்கம், பொதுமக்களின் அறியும் உரிமைகள் அல்லது அவர் செய்தது போல் செயல்பட அசான்ஞ்சின் உந்துதல் பற்றிய ஆதாரங்களை முன்வைக்கும் எந்தவொரு முயற்சியும் வழக்குத் தொடுப்பதைத் தடுக்க முடியாது. வகைப்படுத்தப்பட்ட தகவல் நடைமுறைகள் சட்டம், அரசாங்கமும் உளவுத்துறை அமைப்புகளும் அவருடைய வழக்கறிஞர்கள் எந்த ஆதாரங்களை முன்வைக்க முறைப்படி அதிகாரம் பெற்றிருக்கிறார்கள் என்பதில் தலையிட ஒவ்வொரு வாய்ப்பையும் அனுமதிக்கும்.
அசான்ஞ்சை நாடு கடத்தும் விசாரணையில், தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் தற்கொலைக்கான உண்மையான ஆபத்து மற்றும் அமெரிக்க சிறைகளால் வழங்கப்படும் மனநல சுகாதாரத்தின் பயங்கரமான நிலை குறித்து மருத்துவ சாட்சிகள் சாட்சியமளித்தனர். இந்த ஆதாரம் நீதிபதியால் ஒப்படைப்புக்கு எதிரான ஆரம்ப முடிவுக்கான அடிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மிகவும் நிபந்தனைக்குட்பட்ட, அமெரிக்க அரசாங்கத்தின் “உறுதிமொழிகளின்” அடிப்படையில் மட்டுமே ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் எழுதிய காகிதத்திற்கு மதிப்பு இல்லை.
மேலும், மரணதண்டனை அச்சுறுத்தலின் கீழ் அசான்ஞ் இந்த நிலைமைகளை சகிக்க வேண்டிய உண்மையான அச்சுறுத்தல் உள்ளது. இந்த வார விசாரணையின் போது அவரது வழக்கறிஞர்கள் விளக்கியது போல், அவர் மீது ஏற்கனவே 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றங்கள் மரண தண்டனைக்கு உள்ளாகலாம். மரண தண்டனை விதிக்கப்படாது என்ற வழக்கமான உறுதிமொழிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு மாத சிறைவாசத்திற்குப் பிறகு, அமெரிக்க சமூகத்தின் மிக உயர்ந்த மட்டங்களிலுள்ள குற்றங்களை அவர் எதிர்பார்த்த அம்பலப்படுத்தலுக்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்டார்.
அசாஞ்சின் சட்ட வழக்கு, அமெரிக்க-இங்கிலாந்து சதியால் அசாஞ்சேவின் சட்ட உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யப்படுவதை, இந்த போலி நீதிமன்ற நடவடிக்கைகளை மிகவும் கவனமாகவும் திறமையாகவும் அம்பலப்படுத்தியுள்ளது. அதே போல், உளவுச் சட்டத்தின் கீழ் ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளரைக் கைது செய்து காணாமல் ஆக்க முயல்வதன் மூலம், அமெரிக்க அரசாங்கம் உறைய வைக்கும் முன்னுதாரணத்தையும் அமைக்க முயற்சிக்கிறது.
ஆனால், இங்கிலாந்தில் உயர் நீதிமன்றத்திற்கு முன்பாகவோ, ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன்பாகவோ அல்லது அமெரிக்காவில் அவரது வழக்கு விசாரணை தொடர்ந்தாலும், அசான்ஞ்சை விடுவிப்பதற்கான போராட்டம் ஒரு வெகுஜன அரசியல் பிரச்சாரத்தின் ஒரு அம்சமாக மட்டுமே வெற்றிபெற முடியும்.
அத்தகைய இயக்கம் கட்டமைக்கப்பட்டு உருவாக்கப்பட வேண்டும். அசான்ஜ்சிற்கு எதிராக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசுகளால் நிறுத்தப்பட்டுள்ள படைகள் சக்திவாய்ந்தவை. ஆனால், அதனைவிட வலிமையான சக்தி உள்ளது, அது இன்னும் பதிலளிக்கவில்லை: அது பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அசான்ஜின் முக்கிய விசாரணைக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு முன்னோக்கு பத்தியில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு விளக்கியது:
அசான்ஞ்சின் வழக்கின் மூலம், தொழிலாளர்களுக்கு ஏகாதிபத்தியத்தியம் ஒரு புறநிலையான பாடத்தைக் கொடுத்துள்ளது. அது, ஆளும் நிதிய தன்னலக்குழுவின் பெயரால் உலக மக்களுக்கு எதிராக மிகவும் சக்திவாய்ந்த அரசுகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளால் நடத்தப்படும் வன்முறை மற்றும் அடக்குமுறையாகும்.
அன்றிலிருந்து, உக்ரேனில் நடந்துவரும் நேட்டோ-ரஷ்யா போரும் காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையும் ஏகாதிபத்திய வன்முறை பற்றிய புதிய படிப்பினைகளை வழங்கியுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்டுவரும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிர்ப்பு, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை தெருக்களுக்கு கொண்டு வந்துள்ளது. அதே நேரத்தில், இது உக்ரேனில் போர் வேகமாக விரிவடைகிறது. இராணுவச் செலவு, ஏற்கனவே கடுமையான சமூக பதட்டங்களைத் தூண்டுகிறது. ஆளும் வர்க்கம் பெருகிய முறையில் சர்வாதிகார சட்டங்கள் மற்றும் பொலிஸ் அடக்குமுறைகளுடன் பதிலடி கொடுக்கிறது.
2021 ஆம் ஆண்டிலேயே இந்த திசையில் ஏற்பட்ட நகர்வுகளைக் குறிப்பிடுகையில், WSWS முன்னோக்கு பின்வருமாறு முன்னறிவிக்கிறது:
அமெரிக்க மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்குள் பாரிய எதிர்ப்பு இயக்கத்தை தூண்டாமல் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியாது. அந்த இயக்கம், புரட்சிகரக் கட்சியால் அதன் கல்வியின் மூலம் நனவாகும் போது, அது சிதைந்து வரும் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துடன் வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபடும். அசான்ஞ்சை விடுவிப்பதற்கான பிரச்சாரத்தை அந்தப் போராட்டத்தின் இன்றியமையாத பகுதியாக அங்கீகரிக்கும்.
இந்த கருத்தாக்கம்தான் அசாஞ்சை விடுவிப்பதற்கு தேவையான வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்ப தேவையான அவசர பணிகளுக்கு வழிகாட்டும். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக எடுக்கப்பட்ட ஜனநாயகமற்ற மற்றும் அநீதியான முடிவுகளைத் தவிர, நீதிமன்றங்களில் அவரது வழக்கு பதிலளிக்க முடியாதவையாகும். இந்த சக்திகளை தோற்கடிக்க சட்ட வாதங்களை விட அதிகமானவற்றை எடுப்பது தேவைப்படுகிறது. இதற்கு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிராக அணிதிரள்வதுடன், போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக (இதற்காகவே குற்றவாளிகள் அவரை என்றென்றும் மௌனமாக்க முயல்கின்றனர்) நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களால் ஒரு வீரராகக் கருதப்படும் ஒருவரைப் பாதுகாப்பது அவசியமாகும்.