சிலியில் தீவிர வலதுசாரிகள் வாக்கெடுப்பில் வென்ற பிறகு, சால்வடார் அலெண்டேவின் தோல்விவாத அரசியலை ஜக்கோபின் பத்திரிகை ஊக்குவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜனாதிபதி சால்வடார் அலெண்டேவை தூக்கியெறிந்து, ஜெனரல் அகஸ்டோ பினோச்சேயின் பாசிச-இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவிய சிஐஏ-ஆதரவு சதியின் 50வது ஆண்டு நிறைவையொட்டி, ஜக்கோபின் பத்திரிகை, அலெண்டேவின் முன்மாதிரியைப் பின்பற்றும்படி  'இடதுகளுக்கு' அழைப்பு விடுக்கிறது. இந்த அறிவுரை சிலியில் மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை மேலும் மோசமான தலைவிதிக்குள் தள்ளுவதாக இருக்கும். 

சிலி ஜனாதிபதி சால்வடார் அலெண்டே, இராணுவ அதிகாரிகளால் சூழப்பட்டுள்ளார் [Photo by Biblioteca del Congreso Nacional de Chile / CC BY 3.0]

ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவான அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) ஊதுகுழலாக, ஜக்கோபின் பத்திரிகை  செயல்பட்டு வருகிறது, அது சிலியின் போலி-இடது அரசாங்கத்தின் ஆழமான அரசியல் நெருக்கடியின் மத்தியில், பினோச்சேயின் அரசியல் வாரிசுகள் வலுப்படுத்தப் படுவதற்கு விடையிறுக்கும் வகையில், அலெண்டேவை ஒரு அரசியல் முன்மாதிரியாக பின்பற்றும்படி அழைப்பு விடுக்கிறது. ஜனாதிபதி கேப்ரியல் போரிக்  ஜக்கோபின் பத்திரகையினால் வெளிப்படையாக ஆமோதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த மாதம் நடைபெற்ற தேசியத் தேர்தலில், ‘’மனித உரிமைகளை மீறிய’’ எவருக்கும் ஒரு வெறித்தனமான பாதுகாவலராக இருக்கின்ற ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் தலைமை வகிக்கும் பாசிச குடியரசுக் கட்சியும், பினோச்சேயின் கீழ் 17 ஆண்டுகால சர்வாதிகாரத்தின் நேரடி அரசியல் வாரிசாக இருக்கும் ஜனநாயக சுதந்திர ஒன்றியமும் (UDI) அமோக வெற்றி பெற்றன. அவை இரண்டும் 'அரசியலமைப்பு கவுன்சிலில்' மூன்றில் இரண்டு பங்கு இடங்களை ஒன்றாகக் கட்டுப்படுத்துவதோடு, பினோச்சேயின் கீழ் திணிக்கப்பட்ட 1980 அரசியலமைப்பை மறுபடி இயற்ற இருக்கின்றன. 

பினோச்சேயின் பொருளாதார மற்றும் அரசியல் மரபுக்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவும் வெகுஜன எதிர்ப்புக்கு மத்தியில் போரிக்கின் அரசாங்கத்திற்கு இந்தத் தேர்தல் தோல்வி ஏற்பட்டுள்ளது. 2019 அக்டோபரில், சமூக சமத்துவமின்மைக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் பல பொது வேலைநிறுத்தங்கள் வெடித்தன, இவை முந்தைய வெகுஜன வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் தனியார்மயமாக்கப்பட்ட ஓய்வூதியங்கள், உயர் வாழ்க்கைச் செலவுகள், இலவச உயர்கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, பூர்வீக மக்களின் நில உரிமைகள் மற்றும் பிற சமூக மற்றும் மற்றும் ஜனநாயக பிரச்சினைகள் குறித்த போராட்டங்களின் உச்சக்கட்டமாக இருந்தன. 

இன்று போரிக் நிர்வாகத்தை வழிநடத்தும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் போலி-இடது பரந்த முன்னணி உட்பட முழு அரசியல் ஸ்தாபனமும், வலதுசாரி கோடீஸ்வரரான அப்போதைய ஜனாதிபதி செபாஸ்டியன் பினேராவின் 'சமூக அமைதி மற்றும் ஒரு புதிய அரசியலமைப்பிற்கான உடன்படிக்கைக்கு' பின்னால் இந்த எதிர்ப்புகளை திருப்பின. (காஸ்ட் மற்றும் பினேரா இருவருக்கும் பினோசேயின் கீழ் அமைச்சர்களாக இருந்த சகோதரர்கள் ஆவர்.)

2020 இல் ஏறக்குறைய 80 சதவீதமான வாக்காளர்களால் வெறுக்கப்பட்ட பினோச்சேயினுடைய அரசியலமைப்பை மக்கள் வாக்கெடுப்பின் மூலம் மாற்றுவதை விரும்பினர். இருப்பினும், இதில் பாதி சிலி மக்கள் வாக்கெடுப்பை புறக்கணித்ததின் மூலம் முதலாளித்துவ அரசினுள் சாதாரண சீர்திருத்தம் செய்வது குறித்து வெகுஜன அவநம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர். ஆரம்ப அரசியலமைப்பு மாநாட்டில் தீவிர வலதுசாரிகளுக்கான இடங்களின் பங்கு 23 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் பெரும்பாலான இடங்கள் போலி-இடதுகளுடன் பிணைக்கப்பட்ட ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

போரிக் 2021 இன் பிற்பகுதியில் இரண்டு சுற்று தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டார், இதில் பாதி சிலியர்கள் மீண்டும் வாக்களிக்கவில்லை, இருப்பினும் தேர்தல் பங்கேற்பு வரலாற்று சராசரியை விட அதிகமாக இருந்தது. பெரும்பாலும் தொகுதி செயல்முறையின் எதிர்ப்பாளராகப் போட்டியிட்ட பாசிசவாதியான காஸ்ட் முதல் சுற்றில் வெற்றிபெற்றார். போரிக் பாசிஸ்டுகளுடன் உறவுப் 'பாலத்தை கட்ட' தனது ஏற்பு உரையில் இருந்து சபதம் செய்தார். இதுவே அவர் நம்பிக்கையுடன் கடைப்பிடித்த ஒரே பிரச்சார வாக்குறுதியாகும்.

அவரது முன்னோடியைப் போலவே போரிக்கும், COVID-19 பெரும் தொற்றுநோய்க்கு தடுப்பூசி-மட்டுமே தீர்வு என்ற அணுகுமுறையைப் பராமரித்து வந்ததன் மூலம் உயிர்களுக்கு மேலாக லாபம் என்பதை முன்னிறுத்தினார். அவர் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கான செலவை அதிகரித்ததுடன், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ விதித்த தடைகள் மற்றும் போரை ஆதரித்தார். அவர் தெற்கில் மபுசெஷ்க்கு எதிராகவும், வடக்கில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராகவும் துருப்புக்களை நிலைநிறுத்தினார். அதே நேரத்தில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி, ஆலை மூடல்கள் மற்றும் பணிநீக்கங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கலவர எதிர்ப்பு பொலிஸை நியமித்து தொழிலாளர்களை தாக்கி, அவர்களை கைது செய்தார்.

இதற்கிடையில், போலி-இடது கட்டுப்பாட்டில் உள்ள அரசியலமைப்பு மாநாடு, 2019 இல் சமூக எழுச்சியை தூண்டிய அனைத்து முக்கிய கவலைகளுக்கும் கண்மூடித்தனமாக ஒரு முன்மொழிவை உருவாக்கியது. அது அரசின் அடக்குமுறை சக்திகளையும் அவற்றின் எதேச்சதிகார அதிகாரங்களையும் பராமரித்து வந்த அதேசமயத்தில், பயனற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புகளைப் பயன்படுத்தியது. அரசு மற்றும் பாலின சமத்துவத்துடன் இணைக்கப்பட்ட உள்நாட்டு அதிகாரத்துவம் அவற்றை அதன் பிற்போக்கு தன்மையை மூடிமறைக்கும் அத்தி இலைகளாக முன்மொழிந்தது. செப்டம்பர் 2022 இல் 85 சதவீத பங்கேற்பைக் கண்ட பொது வாக்கெடுப்பில் 63 சதவீத வாக்காளர்களால் இந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில், போரிக் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வோரின் ஒப்புதல் மதிப்பீடு 30 சதவீதத்திற்கும் கீழே சரிந்தது, கடந்த மாதம் நடந்த தேர்தல்களில் பாசிஸ்டுகளின் கைகளில் போலி-இடது பெரும் தோல்வியை சந்தித்தது.

சிலியின் 'அரசியலமைப்பு கவுன்சில்' தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் வெற்றி, கிரேக்கத்தில் சிரிசா மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் ஆகியவற்றின் சமீபத்திய தேர்தல் தோல்விகளைப் போலவே, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் போலி-இடது பற்றி பிடித்து தொங்குவோர் ஹேங்கர்கள் உட்பட பெயரளவிலான 'இடது'  சமூக சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு அதன் அர்ப்பணிப்பை வழங்கியதனால்  ஆழமாக மதிப்பிழந்துள்ளது.

சிலி வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாக்களிக்கவில்லை அல்லது வெற்று அல்லது செல்லாத வாக்குகளை அளித்தனர், அதே நேரத்தில் பாசிச குடியரசுக் கட்சியினருக்கு கிடைத்த வாக்குகள் பெரும்பாலும் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கு மாற்று இல்லாததையே பிரதிபலிக்கின்றன. அது தீவிர ஆதரவின் அடையாளம் அல்ல. இந்த முடிவுகள் வரவிருக்கும் காலகட்டத்தில் ஒரு புரட்சிகர மற்றும் சர்வதேச அளவில் வரவிருக்கும் சமூக கொந்தளிப்புகளை வெளிப்படுத்துகின்றன.

ஜக்கோபின் சர்வதேச அளவில், தீவிர வலதிற்கு இடம் கொடுக்க பரிந்துரைக்கிறது.

ஜக்கோபின் தேர்தல் தோல்வியில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டது. போரிக்கை எந்தப் பொறுப்பிலிருந்தும் விடுவித்துள்ள அதே நேரத்தில், தீவிர வலதுசாரிகளுக்கு மேலும் இடம் கொடுக்க பரிந்துரைக்கிறது., இதில் பாசிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய அரசியலமைப்பின் நன்மைகள் குறித்து மாயைகளை ஊக்குவிப்பதும் அடங்கும்.

அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் ஊதுகுழலான ஜக்கோபின், போரிக்கின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்ததோடு, அவரது தேர்தலை 'அக்டோபர் 2019 இன் சமூகக் கிளர்ச்சியின் நோக்கங்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி' என்று கொண்டாடியது. அந்த நேரத்தில், இப்பத்திரிகை அனைத்து 'ஒற்றை-பிரச்சினை குழுக்களுக்கு அனைத்து சமூக இயக்கங்கள் மற்றும் விருப்பமுள்ள அரசியல் நீரோட்டங்களுடன் ஒரு நவதாராளவாத எதிர்ப்பு அரசியலமைப்பிற்கான மக்கள் முன்னணியை அமைக்க' வேண்டுகோள் விடுத்தது.

போரிக் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் கீழ், ஆளும் கூட்டணிக்கு சமூக எதிர்ப்பை அடிபணியச் செய்வதைக் குறிக்கும் இந்த நடவடிக்கை, அலெண்டேயின் மக்கள் ஒற்றுமைக் கூட்டணியால் பின்பற்றப்பட்டது. இக்கூட்டணி, அனைத்துக்கும் மேலாக ஒரு உண்மையான புரட்சிகரமான மற்றும் சோசலிச மாற்றீட்டின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறது. 

50 ஆண்டுகளுக்கு முன்பு, கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகள் சிலி தொழிலாள வர்க்கத்தினுள் அலெண்டே அரசாங்கம் குறித்து  மாயைகளை வளர்க்க முடிந்தது, இந்தக் கட்சிகளும் போரிக்கின் போலி-இடது ஆதரவாளர்களும் இன்று அதே செல்வாக்கை அனுபவிக்கவில்லை.

கடந்த மாதம், 'சிலி அதன் தெர்மிடோரியன் காலத்தில் நுழைந்துள்ளது' என்ற தலைப்பில் ஜக்கோபின் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதன் ஆசிரியர், மார்செலோ காசல்ஸ், செயலற்ற தன்மை மற்றும் பின்வாங்கல் கொள்கைக்காக வாதிடுகிறார்.

பொரிக் கையொப்பமிட்ட சட்டங்கள், பொலிஸுக்கும் இராணுவத்துக்கும் சுடுவதற்கும், பின்னர் கேள்விகள் கேட்பதற்கும், புலம்பெயர்ந்தோர் மீதான அவரது தாக்குதல்களுக்கும் உரிமை அளித்துள்ளது. ‘’அரசியல் தழுவலில் போரிக்கின் முயற்சி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இடதுசாரிகளால் மட்டுமே பார்க்க முடியும்’’ என்று காசல்ஸ் எழுதுகிறார். பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வு ஆகியவை இப்போது முன்னுரிமைப் பிரச்சினைகளாகிவிட்டன, மேலும் போரிக்கிற்கு தீவிர வலதுசாரிகளுடன் ஒத்துப்போவதைத் தவிர வேறு வழியில்லை. 

ஜூன் 1 அன்று, ஜக்கோபின் அதன் எழுத்தாளர்களில் ஒருவரான ஆல்டோ மரடியாகாவின் ஒரு நேர்காணலை வெளியிட்டது. 'நாம் ஒரு முதலாளித்துவ அமைப்பில் வாழ்கிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அனைத்தையும் மாற்றகூடியவாறாக ஒரு ஒற்றை செயல்முறையை வரையறுக்கும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுப்போக்கை  காண மிக அதிகமான விருப்பம் உள்ளது” என்று அவர் இவ்வாறு முடிக்கிறார்

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் மீது சர்வாதிகாரம் செய்யும் முதலாளித்துவம் எந்த ஒரு அரசியலமைப்பின் மூலமும் உத்தரவாதம் செய்யப்படும், அது சவால் செய்யப்படக்கூடாது என்பதாகும்.

அவரது பங்கிற்கு, முதல் அரசியலமைப்பு மாநாடு அடையாள அரசியலால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது என்ற உண்மையின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் 'சமீபத்திய தசாப்தங்களில் சிலி இடதுகள் அடைந்துள்ள மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது' என்று காசல்ஸ் கண்டிக்கிறார்.

WSWS இந்த அரசியல் போக்குகளை 'போலி-இடது' என்று குறிப்பிட்டுள்ளது, அவர்கள் அடையாள அரசியலையும், ஜனரஞ்சக மற்றும் தேசியவாத வாய்வீச்சையும் பயன்படுத்தி தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தி அவர்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தி, காட்டிக்கொடுக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தின் அடுக்குகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஆளும் உயரடுக்கிற்கு அவர்கள் செய்த சேவைகளுக்கு ஈடாக, அவர்கள் தங்களுக்குச் செல்வம் மற்றும் அரசியல் பதவிகளை மிகவும் சாதகமான முறையில் விநியோகிக்கும்படி கோருகின்றனர்.

‘’பிரபலமான மற்றும் தொழிலாள வர்க்க அபிலாஷைகளை’’ புறக்கணிக்கும் 'இடது' குழு குறித்து விவரிப்பதன் மூலம் காசல்ஸ் இந்த வரையறையை உறுதிப்படுத்துகிறார். மேலும், ‘’குடியரசு சமத்துவம் பற்றிய எளிமையான மற்றும் சில சமயங்களில் ஆதாரமற்ற விமர்சனங்கள்’’ ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கின்றன என்கிறார்.

அலெண்டேவைப் பின்பற்றும்படி அதே அடுக்குகளுக்கு  இப்படியான அழைப்பு விடுவதுடன் காசல்ஸ் முடித்துக்கொள்கிறார். அலெண்டேவின் 'பொறுமை மற்றும் நீண்ட காலப் பார்வை' ஆகியவற்றை  மற்றும் 'பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள்,' குறித்து சுட்டிக்காட்டி 'மெதுவாக சக்திகளை திரட்டல் மற்றும் ”நீட்டித்த மேலாதிக்கத்தை கட்டியெழுப்பதல்' ஆகியவற்றை நினைவு கூருங்கள் என்று மன்றாடுகிறார். 

வியக்கத்தக்க வகையில், சிலி நாட்டு வரலாற்றாசிரியரான காசல்ஸ், இப்போது போரிக் அரசாங்கத்திற்குச் சொந்தமான சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் வழிநடத்தப்பட்ட அலெண்டே மற்றும் அவரது மக்கள் ஒற்றுமை கூட்டணியின் உண்மையான தலைவிதியைப் பற்றி எந்த ஆய்வும் செய்யத் தவறிவிட்டார்.

அலெண்டேவின் மக்கள் ஒற்றுமை அரசாங்கம் 1973 ஆட்சிக்கவிழ்ப்புக்கு வழி வகுத்தது

ஜக்கோபின் பத்திரிகையானது, அலெண்டே குறித்து கட்டுக்கதை பேசுவது  போரிக் மற்றும் பைடென் நிர்வாகங்களுக்கு வழங்கும் அதன் சொந்த ஆதரவை நியாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அது 1973 இல் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழி வகுப்பதில் மக்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் பாத்திரத்தை வேண்டுமென்றே மூடி மறைக்கிறது.

'சோசலிசத்திற்கான  சிலியின் அமைதிப் பாதை' என்ற முழக்கத்தின் கீழ், வறிய சிலி தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாய வெகுஜனங்களை அரசியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிராயுதபாணியாக்க அலெண்டே  பாடுபட்டார். ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி முன்னணிப் பாத்திரத்தை வகிக்கும் நிலையில், மக்கள் ஒற்றுமை ஒரு புரட்சிக்கு முந்தைய இயக்கத்தைக் கட்டுப்படுத்த உழைத்தது, இது தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் நிலங்களை பரவலாக  சுவீகாரம் செய்வதை உள்ளடக்கியது, இது ஆரம்பத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

முதலாளித்துவ அரசின் 'மேலதிகாரத்தை' பாதுகாப்பதற்காக, பாசிச கும்பல்களால் மிருகத்தனமான பழிவாங்கலை எதிர்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உருவாக்கிய ஆயுதமேந்திய குழுக்களை கலைக்குமாறு அலெண்டே மற்றும் மக்கள் ஒற்றுமை  தலைவர்கள் வலியுறுத்தினர். ஆட்சிக் கவிழ்ப்பு வரை, மக்கள் ஒற்றுமையின் தலைவர்கள், ஜனநாயகத்தையும் மக்களின் விருப்பத்தையும் இராணுவமும் காவல்துறையும்  பாதுகாக்கும் என்று இடைவிடாது பிரகடனம் செய்தனர். இதற்கிடையில், அலெண்டே, தீவிர வலதுசாரிகளை திருப்திப் படுத்துவதற்காகவும், தனது 'சிலி வழியை' பாதுகாப்பதற்காகவும், ஊதியம் இல்லாத நேரங்கள் உட்பட 'தியாகங்களை' செய்யுமாறு தொழிலாளர்களிடம் கூறினார்.

பொருட்கள் மற்றும் கடன் தடை, இராணுவத்தில் களையெடுத்தல், முதலாளிகள் கதவடைப்பு மற்றும் பிற நாசவேலைகள் மற்றும் பாசிச ஆத்திரமூட்டல்கள் உட்பட அலெண்டே அரசாங்கத்தை நிலைகுலைய செய்வதற்காக  நிக்சன் நிர்வாகத்தால் திட்டமிடப்பட்ட ஒரு பெருகிய தாக்குதலுக்கு மத்தியில், தொழிலாளர்கள் தங்கள் சொந்த அமைப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பதன் மூலம் மற்றும் பொருளாதாரத்தின் மீது கட்டுப்பாட்டை நிறுவியதன் மூலம் மீண்டும் மீண்டும் பதிலளித்தனர்.

சுரங்கம், வங்கி மற்றும் பிற துறைகளில் தேசியமயமாக்கலை அலெண்டே அமல்படுத்திய போதிலும், அதே போல் ஊதிய உயர்வுகள் பணவீக்க விகிதத்துடன் ஒத்துப்போகின்றவாறு அல்லது அதைவிட அதிகமாக ஆக்கப்பட்டாலும் ஏகாதிபத்தியம், முதலாளிகள், இராணுவம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றின் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில், தீவிர வலதுசாரிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக சலுகைகளை அலெண்டே வழங்கினார். 

ஜூன் 29, 1973 இல், பல முக்கிய ஊடுருவல் முயற்சிகளில் ஒன்றில், ஒரு கவச வாகன படைப்பிரிவின் சதி முயற்சி முக்கியமாக கார்டோன்ஸ் இண்டஸ்ட்ரியல்ஸ் எனப்படும் சாமானிய தொழிலாளர் அமைப்புகளின் வலைப்பின்னல்களால் முறியடிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து உடனடியாக ஆயிரக்கணக்கான ஆலைகள் மற்றும் பணியிடங்களைக் அவை கைப்பற்றத் தொடங்கின. 'தொழிலாளர் அதிகாரம்' கோரி நூறாயிரக்கணக்கானோர் La Moneda ஜனாதிபதி மாளிகைக்கு அணிவகுத்துச் சென்றனர்.

இராணுவம் மற்றும் காராபினெரோஸ் பொலிஸில் தங்கள் நம்பிக்கையை வைத்திருக்குமாறு தொழிலாளர்களிடம் கெஞ்சுவதன் மூலம் அலெண்டே அந்த அதிர்ஷ்டமான நாளுக்கு பதிலளித்தார். “தொழிலாளர் தோழர்களே, அணி திரள்வோம் மக்கள் சக்தியை உருவாக்குவோம், நாம் உருவாக்குவோம், ஆனால் அரசாங்கத்தின் சுதந்திரத்திற்கு எதிராக அல்ல,” என்று அவர் சதி முயற்சியைத் தொடர்ந்து அவர் உரையாற்றினார்.

நிக்சன் நிர்வாகம், இராணுவம் மற்றும் வலதுசாரிக் கட்சிகளுடன் பின் அறை பேச்சுக்களை அரசாங்கம் தொடரும் போது, அலெண்டேவும் அவரது பங்காளிகளும் தொழிலாள வர்க்கத்தின் இத்தகைய புரட்சிகர எதிர்த்தாக்குதல்களை வேண்டுமென்றே கலைத்தனர். 

செப்டம்பர் 11, 1973 அன்று, அனைத்து இராணுவக் கிளைகளின் தலைவர்களும் அலெண்டேயின் தலைமைத் தளபதி ஜெனரல் பினோச்சேயின் வழிகாட்டுதலின் கீழ், சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவ உளவுத்துறையால் உன்னிப்பாகத் தயாரிக்கப்பட்ட ஒரு சதித்திட்டத்தை  தொடங்கின. பினோச்சே ஜனநாயக சுதந்திரத்தை ஒழித்தார், அனைத்து கட்சிகள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளை தடை செய்தார், மேலும் அவர்களின் தலைவர்களையும் பல்லாயிரக்கணக்கான சாமானிய தொழிலாளர் போராளிகளையும்  சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார், 3,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றார். நூறாயிரக்கணக்கான சிலி மக்கள் நாட்டை விட்டு தப்பி ஓட  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சிலி தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையான புரட்சிகர தலைமை இல்லாமைக்கான முக்கிய பொறுப்பு ஐக்கிய செயலகத்தின் பப்லோவாத தலைமையிடம் தான் உள்ளது.

1938 இல் நான்காம் அகிலத்தின் சிலி பிரிவாக நிறுவப்பட்ட பின்னர் பல தசாப்தங்களாக, தொழிலாளர் புரட்சிக் கட்சி (POR) நாட்டில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் முக்கிய துறைகளில் ஒரு முக்கிய இருப்பை நிறுவியது. எவ்வாறாயினும், 1963 இல், POR சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியில் (SWP) இணைந்தது, அவர்கள் ட்ரொட்ஸ்கிசத்தையும், ஸ்ராலினிசம், காஸ்ட்ரோவாதம் மற்றும் பிற குட்டி முதலாளித்துவ தேசியவாத தலைமைகளுக்கு ஆதரவாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர அணிதிரட்டலுக்கான தமது  முன்னோக்கை கைவிட்ட பப்லோவாதிகளுடன் மீண்டும் ஒன்றிணைந்தனர். சோசலிசத்திற்கு ஒரு புதிய பாதையை வழங்கியதாக கூறப்படும் முதலாளித்துவ தேசியவாத தலைமைகள். விரைவில், POR தன்னை இடது புரட்சி இயக்கத்தில் (MIR) கலைத்துக்கொண்டது, இது கொரில்லா போரை மகிமைப்படுத்தும் மாவோயிஸ்ட் மற்றும் காஸ்ட்ரோ-குவேரா போக்குகளின் கலவையாகும். MIR பின்னர் 'முக்கிய ஆதரவு' என்று மாறுவேடமிட்டு மக்கள் ஒற்றுமைக்கு ஒரு முக்கியமான இடது ஆதரவை வழங்கியது.

அலெண்டே மற்றும் ஜனநாயகக் கட்சி

அலெண்டேவை மகிமைப்படுத்துவதன் மூலம், ஜக்கோபின் பத்திரிகை மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள், போரிக்கின் வலதுசாரிக் கொள்கைகளுக்கும், அமெரிக்காவில் உள்ள பைடென் நிர்வாகத்திற்கும்  தங்கள் சொந்தக் கீழ்ப்படிதலுக்கு  ஒரு மறைப்பை வழங்க முற்படுகின்றனர், அதே நேரத்தில் மக்கள் ஒற்றுமை போன்ற குற்றவியல் துரோகங்களைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான பொறுப்பற்ற போர் உந்துதலின் ஒரு பகுதியாக சமூக நல திட்டங்களை ஒழித்தல், வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கல், புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துதல் மற்றும் சாதனை படைக்கும் இராணுவ வரவு செலவுத் திட்டங்களை அங்கீகரித்தல் போன்றவற்றில் குடியரசுக் கட்சியுடன் பைடெனின் உடன்படிக்கைகளுக்கு ஜக்கோபினும் DSAவும் தொடர்ந்து மன்னிப்புக் கோரியுள்ளனர்.

அமெரிக்க குடியரசுக் கட்சி, சிலியிலுள்ள அதன் சகாக்களைப் போலவே பாசிஸ்டுகளால் வழிநடத்தப்படுகிறது. ஜனவரி 6, 2021 அன்று, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் தலைமை மற்றும் இராணுவ மற்றும் உளவுத்துறையின் பிரிவுகள், பைடெனின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யவும், அரசியலமைப்பை தூக்கி எறிந்து சர்வாதிகாரத்தை நிறுவவும், ஒரு பாசிச கும்பல் காங்கிரஸின் படையெடுப்பைப் பயன்படுத்த முயன்றது. 

ஜக்கோபின் தலைமை ஆசிரியர் பாஸ்கர் சுங்கரா, இதை ஒரு சதி என்று விவரித்தவர்களிடம் 'நிலைமையை சரியாக பற்றிக் கொள்ளுங்கள்' என்று கூறி 'அமெரிக்க குடியரசு நிறுவனங்களின் உறுதியான  தன்மை' குறித்து வலியுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் பிரேசிலிய பாசிச ஆதரவாளர்கள் ஜனவரி 8, 2023 அன்று இதேபோன்ற பாசிச சதி முயற்சியை மேற்கொண்ட பின்னர், இராணுவத் தலைமையின் சில பிரிவுகளின் உதவியுடன், ஜக்கோபின் ஒப்புதல் அளித்த ஜனாதிபதி லூலா, இராணுவத்திற்கு நிதியை மழையாக கொட்டினார் மற்றும் அதைப் விசாரணைகளில் இருந்து பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்தார். ஜக்கோபின் இந்த ஆபத்தை குறைத்துக் காட்டி பல கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இந்த சதி முயற்சி 'பிரேசிலின் ஜனநாயகத்தை வலுப்படுத்த லூலாவை ஒரு வலுவான நிலையில் வைத்துள்ளது' என்று அபத்தமாக கூறியது.

இதற்கிடையில், பாசிஸ்டுகள் தங்கள் சதிகளை தொடர்கின்றனர், அலெண்டேவின் கீழ், செப்டம்பர் 11, 1973 க்கு முன்னர் பல சதிக்கிளர்ச்சி  முயற்சிகள் நடந்தன என்பதை நினைவுகூர வேண்டும். லத்தீன் அமெரிக்காவின் பிற இடங்களில், பொலிவியாவில் 2019 மற்றும் பெருவில் 2022 வரை, அமெரிக்க ஆதரவுடைய பாசிஸ்டுகள் மற்றும் இராணுவங்கள் வெற்றிகரமாக ஜனாதிபதிகள் ஈவோ மொராலஸ் மற்றும் பெட்ரோ காஸ்டிலோவை அகற்றினர். முறையே. ஒவ்வொரு ஆட்சிக்கவிழ்ப்பும் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்ட வெகுஜன எதிர்ப்புகளைத் தொடர்ந்து வந்தன.

அலெண்டேவின் 'பொறுமை' மற்றும் 'பார்வையை' தூண்டுவதன் மூலம், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் அதன் சேவைகளை ஆளும் வர்க்கத்திற்கு வழங்குகிறது. பாசிசமும் முதலாளித்துவ அரசும் தங்கள் தாக்குதல்களைத் தயாரிக்க அனுமதிக்கும் வகையில், அதன் அரசியல் தொழிலாள வர்க்கத்தை அமைதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. 

அலெண்டே தூக்கியெறியப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சிலியில் ஏற்பட்ட இரத்தக்களரி தோல்வியின் படிப்பினைகள் லத்தீன் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எப்போதும் இன்றியமையாதவை ஆகும். சிலியில் போரிக், பிரேசிலில் லூலா அல்லது கொலம்பியாவில் பெட்ரோ போன்றவர்களின் தலைமையிலான 'இடது' முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது தொழிலாளர்கள் சிறிதும் நம்பிக்கை வைக்க கூடாது. மாறாக தங்களது சொந்த சுயாதீனமான புரட்சிகர போராட்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைக்க முடியும்.

ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் சிலியில் இருந்த தீர்க்கமான பணி இன்றும் உள்ளது: அது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமை நெருக்கடியைத் தீர்ப்பது. அதன் அர்த்தம் லத்தீன் அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவது ஆகும்.