மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தி 170 பேரைக் கொன்றது அல்லது காயப்படுத்தியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பல வாரங்களாக விநியோகம் இல்லாமல் இருந்த காஸா நகரில் மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடந்த புதன் முதல் வியாழன் வரையிலான 24 மணி நேரத்தில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காஸாவிலுள்ள குவைத் சுற்றுவட்ட வீதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலிய டாங்கிகள் மக்கள் மீது குண்டுகளை வீசி, அவர்களை துப்பாக்கிகளால் சுட்டுத்தள்ளியது. பலரின் காயங்கள் மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் பிழைத்தவர்கள் அல்-ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அங்கு மருத்துவ உபகரணங்கள் இல்லை மற்றும் குறைந்த பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த நவம்பரில், இனப்படுகொலை இஸ்ரேலிய தாக்குதலுக்கு முன்னர், காஸாவில் மிகப்பெரிய மருத்துவமனையாக இருந்த மருத்துவமனையை இஸ்ரேலிய இராணுவத்தினர் குண்டுவீசி தாக்கினர்.

மேலும் தெற்கே, கான் யூனிஸ் பகுதியில், பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு எதிராக, இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. எங்கும் செல்ல முடியாத சுமார் அரை மில்லியன் மக்களுக்கு புதன்கிழமை இழிந்த வெளியேற்ற உத்தரவை வழங்கிய பின்னர், இஸ்ரேலிய இராணுவம் வியாழன் அன்று குடியிருப்பு பகுதிகளுக்கு மேல் ஷெல் தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டது. நகரத்தில் எஞ்சியிருந்த அல்-நாசர் மற்றும் அல்-அமல் ஆகிய இரண்டு மருத்துவமனைகளையும் இஸ்ரேலியப் படைகள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டன.

காஸா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் காயமடைந்த பாலஸ்தீனியர்கள் புதன்கிழமை தெற்கு காஸாவின் ரஃபாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், January 24, 2024 [AP Photo/ Fatima Shbair ]

அல்-நாசர் மருத்துவமனையில் உணவு, மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணிகள் தீர்ந்து போகின்றன. 400 டயாலிசிஸ் நோயாளிகள் உட்பட நாசர் மருத்துவமனையில் “யாரும் நுழையவோ வெளியேறவோ முடியாது” என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பான OCHA தெரிவித்துள்ளது. வியாழன் மாலை, காஸாவின் சுகாதார அமைச்சகம், சுற்று வட்டாரப் பகுதியில் டாங்கிகள் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தியதாகவும், ட்ரோன்கள் மருத்துவ மையத்தை நோக்கி ஏவுகணைகளை வீசுவதாகவும் தெரிவித்தது, இது அல்-ஷிஃபா-பாணியில் தாக்குதலுக்கு முன்பான தயாரிப்புகளைக் குறிக்கிறது.

“கான் யூனிஸின் நிலைமை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் தொடர்ச்சியான தோல்வியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: தாக்குதல்களை நடத்துவதில் வேறுபாடு, விகிதாசாரம் மற்றும் முன்னெச்சரிக்கைகள்” இல்லை என்று, பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைவர் தாமஸ் வைட் கூறினார். “இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அருவருப்பானது மற்றும் நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதனன்று நகரில் உள்ள ஐ.நா. தங்குமிடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடிமக்களைக் கொண்டிருக்கின்ற இந்த மையம், மேலும் இஸ்ரேலியப் படைகளின் ஷெல் மற்றும் சிறிய ஆயுதங்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலில் மேலும் 75 பேர் காயமடைந்தனர், அவர்களில் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

ஏகாதிபத்திய ஆதரவு இஸ்ரேலிய இனப்படுகொலையால் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவை எடுத்துக்காட்டி, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) வியாழன் அன்று காஸாவின் நிலப்பரப்பில் 20 சதவீதத்திற்கும் குறைவான, அல்லது 60 சதுர கிலோமீட்டர்கள் பகுதி, 1.5 மில்லியன் மக்களுக்கு அடைக்கலம் அளிக்கிறது என்று கூறியது. இது, காஸாவின் மக்கள் தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்காகும். சண்டையின் கொடூரமான அதிகரிப்பு அவர்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்துகிறது என்று அந்த அமைப்பு மேலும் வலியுறுத்தியது.

ஒரு தனி அறிக்கையில், காஸாவில் உள்ள ICRC அலுவலகத்தின் தலைவர் வில்லியம் ஷோம்பர்க், காஸாவின் மருத்துவ முறை முழுவதுமாக வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்தார். “காஸா பகுதியில் செயல்படும் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன மற்றும் மருத்துவ பொருட்கள், எரிபொருள், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளன,” என்று அவர் கூறினார். “பல ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. இப்போது மேலும் இரண்டு வசதிகள் சண்டையில் இழக்கப்படும் அபாயம் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனிதாபிமான பேரழிவு பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலையின் நோக்கமாக இருக்கிறது. பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தில் உள்ள பல அதிகாரிகள், அண்டை நாடான எகிப்தின் சினாய் பாலைவனத்திற்கு காஸாவில் வசிப்பவர்களை விரட்டுவதன் மூலம் காஸாவை இனரீதியாக சுத்திகரிக்கும் நோக்கத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இஸ்ரேல் அதன் தாக்குதல் தொடங்கியதில் இருந்து வேண்டுமென்றே காஸாவிற்கான உதவிகளை தடுத்து நிறுத்துவதால், அங்கு பரவலான பஞ்சம் மற்றும் தொற்றுநோய்களுக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த வியாழனன்று, பாலஸ்தீனிய சுற்றுச்சூழல் தர ஆணையத்தின் அறிக்கையானது, காஸா குடியிருப்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தண்ணீரினால் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியது.

இஸ்ரேலின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு முக்கிய அங்கம், காஸா-இஸ்ரேல் எல்லையில் பாலஸ்தீனப் பக்கத்தில் ஒரு கிலோமீட்டர் இடையக தடுப்பு மண்டலத்தை உருவாக்குவதாகும். ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, இந்த பகுதியில் உள்ள 2,824 கட்டிடங்களில் 40 சதவீதமான கட்டிடங்கள் அக்டோபர் 7 முதல் தகர்க்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை அதிகம் உள்ள கான் யூனிஸ் பகுதியில், இஸ்ரேல் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் இருந்த 67 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் ஒரு சிப்பாய், “பெரும்பாலும் விவசாயம்தான், இன்று, அது ஒரு இராணுவ மண்டலம், ஒரு முழுமையான மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நிலம்” என்று கூறினார்.

இடையக தடுப்பு மண்டலத்தை உருவாக்குவதை வாஷிங்டன் பாசாங்குத்தனமாக விமர்சித்துள்ளது, ஆனால் பைடென் நிர்வாகம் அதை உருவாக்க, இஸ்ரேல் பயன்படுத்தும் ஆயுதங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிக்கிறது.

வியாழனன்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் அறிக்கை, காஸா மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்து 250க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்களிலும், 20 கப்பல்களிலும் 10,000ம் டன் வெடிமருந்துகள் மற்றும் இராணுவ உபகரணங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. அமெரிக்காவிடமிருந்து 25 F-35 ஸ்டெல்த் போர் விமானங்கள், 25 F-15 போர் விமானங்கள் மற்றும் 12 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்குவதை இறுதி செய்ய, பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் இயல் ஜமீர் இந்த வாரம் வாஷிங்டனுக்குச் சென்றதாக அந்தக் கட்டுரை கூறுகிறது. நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலையின் போது இஸ்ரேலுக்கு வெடிமருந்துகளை சீராக வழங்குவதை உறுதி செய்வது குறித்தும் ஜமீர் விவாதித்தார்.

பைடென் நிர்வாகம் அனைத்து சர்வதேச விமர்சனங்களுக்கும் எதிராக இஸ்ரேலை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டிய தென்னாப்பிரிக்கா தாக்கல் செய்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தற்காலிக தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அழிவுகரமான குற்றப்பத்திரிக்கை உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்ப்பை வழங்கலாம். எவ்வாறாயினும், அதன் இனப்படுகொலைத் தாக்குதலைத் தொடர இஸ்ரேல் அத்தகைய கோரிக்கைக்கு இணங்கவில்லை என்றால் அதற்கு ஆதரவளிப்பதாக வாஷிங்டன் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது.

வியாழன் அன்று சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்துமா என்ற கேள்விக்கு, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், “இது ஒரு சட்டப்பூர்வ செயல்முறை, நான் எந்த முடிவையும் அனுமானிக்கவோ அல்லது ஊகிக்கவோ மாட்டேன்” என்று பதிலளித்தார். போர்நிறுத்தத்திற்கு ஆதரவான சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடப்பதாகக் கூறிய ஹமாஸின் வழியை இஸ்ரேலை பின்பற்றுமாறு அமெரிக்கா வலியுறுத்துமா என்று நேரடியாகக் கேட்டபோது, ​​படேல் ஹமாஸைக் கண்டித்து பதிலளித்தார்.

இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகளும் கொடுத்துவரும் கட்டுப்பாடற்ற ஆதரவு, மத்திய கிழக்கில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் பிராந்தியப் போரைத் தீவிரப்படுத்துவதோடு, அவர்களின் திட்டங்களில் இருந்து பிரிக்க முடியாததாக ஆகி உள்ளது.

யேமனில் உள்ள ஹூதி நிலைகள் மீது அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் தாக்குதலைத் தொடங்கிய இரண்டு வாரங்களில், இராணுவ பதட்டங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வரும் நிலையில், இரண்டாவது பிரெஞ்சு போர்க்கப்பல் இந்த வாரம் இப்பகுதிக்கு வந்துள்ளது. அமெரிக்க இராணுவ விமானம் திங்களன்று யேமனில் மற்றொரு தாக்குதலை நடத்தியது. நிலத்தடி சேமிப்பு தளங்கள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் என்று வாஷிங்டன் கூறும் இலக்குகளை அது தாக்கியது.

மனிதாபிமான உதவிகள் காஸாவை அடையும் வரை, செங்கடலில் இஸ்ரேலுக்குச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்று ஹூதிகள் உறுதியளித்துள்ளனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில் இராணுவ மோதலை அர்த்தமற்ற முறையில் அதிகரிப்பது, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அதன் பிராந்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாஷிங்டன் இந்தப் போரை வேகமாக உக்கிரமடைந்து வரும் மூன்றாம் உலகப் போரில் ஒரு முன்னரங்காக கருதுகிறது, இதில் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான முன்னரங்கும், இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவும் அடங்கும். ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள், ஈராக்கில் குர்திஷ் நிலைகளுக்கு எதிராக ஈரான் மற்றும் துருக்கியின் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா நிலைகள் மீது இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சு ஆகியவை, மத்திய கிழக்கை எரியூட்டுகின்றன.

Loading