முன்னோக்கு

ஹெலன் ஹால்யார்ட் (1950-2023), உலக சோசலிசத்தின் வெற்றிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு அஞ்சலி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அரை நூற்றாண்டுக்கும் மேலாக சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னணித் தலைமை உறுப்பினரான ஹெலன் ஹால்யார்ட், நவம்பர் 28 அன்று திடீரென 73 வயதில் மறைந்ததையொட்டி டேவிட் நோர்த் வழங்கிய அஞ்சலியை நாங்கள் இங்கே வெளியிடுகிறோம். டிசம்பர் 3ந் திகதி ஞாயிறன்று நடைபெற்ற தோழர் ஹெலனின் நினைவேந்தல் கூட்டம் நோர்த்தின் கருத்துரையால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தோழர்களே, இன்று நாம் தோழர் ஹெலன் ஹால்யார்டுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நவம்பர் 28, 2023 அன்று தோழர் ஹால்யார்டின் இறப்பு, மாபெரும் தனிப்பட்ட, அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஹெலன் தனது வாழ்க்கையின் 73 ஆண்டுகளில் 52 ஆண்டுகளை உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்தார். 1938ல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதைக் கொண்டாடும் தனது உரையில், ட்ரொட்ஸ்கி, ஒவ்வொரு காரியாளரும் “மனிதகுலத்தின் தலைவிதியின் ஒரு துகளை” தனது தோள்களில் சுமக்கிறார் என்று கூறினார். ஹெலனைப் பொறுத்தவரை, அந்த அவதானிப்புக்கு ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்துவது பொருத்தமானது: அதாவது தனது தோள்களில் ஒரு துகளை விட அதிகமாக அவர் சுமந்தார்.

ஒரு புரட்சிகர சகாப்தத்தின் பின்னணியில் சோசலிச இயக்கத்தின் பணி மற்றும் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்குப் பழக்கப்பட்ட மார்க்சிஸ்டுகளாகிய நாம், ஆண்டுகளையும் தசாப்தங்களையும் வரலாற்றின் பரந்து விரிந்த பகுதியில் வெறும் சுருக்கமான “தருணங்கள்” போலப் பார்க்கவும் பேசவும் முனைகிறோம். சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை மதிப்பிடுவதில் இதை குறைத்து மதிப்பிட்டு நியாயப்படுத்தப்பட்டாலும், உண்மையில் ஒரு தனிநபர் கடந்து செல்லும் தனிப்பட்ட பயணம், ஒருவரின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்கள் மற்றும் மனித வயதாகும் செயல்முறை குறித்த தனிப்பட்ட அனுபவத்திற்கும் முரணாக உள்ளன. கடந்த காலங்கள் எல்லாம் எங்கே போனது என்று நாம் அடிக்கடி ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ஆயினும், புரட்சிகர நிகழ்முறையும், நிகழ்வுகளின் வேகமும் நமது தனிப்பட்ட வாழ்க்கையின் காலத்தின் நீளத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை, அளவிடப்படவும் முடியாது என்பதை வரலாற்று சடவாதிகள் என்ற முறையில் நாம் புரிந்துகொள்கிறோம்.

நாம் எந்த நோக்கத்திற்காக நம் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறோமோ, அந்த நோக்கமே நாம் இந்த உலகத்தில் நுழைவதற்கு முன்பே தொடங்கியது, நாம் அதை விட்டு வெளியேறிய பிறகும் அது தொடரும். நமது முன்னோடிகளால் உருவாக்கப்பட்ட அடித்தளங்களை நாம் கட்டியெழுப்புகிறோம், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டுகளில், சோசலிசத்தின் வெற்றியையும் மனிதகுலத்தின் முன்னோக்கிய பயணத்தையும் உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.

தீவிரமான புரட்சிகர முயற்சிகளில், ஒருவரின் வாழ்க்கையை ஒரு பரந்த வரலாற்று கட்டமைப்பிற்குள் தகவமைப்பதற்கான திறன் முக்கியமானதாகும். இந்த முன்னோக்கு பின்னடைவுகளை எதிர்கொள்ளும் போது சோர்வைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் வெற்றியை அடையும்போது தேவையற்ற பரவசத்தைத் தடுக்கிறது. இந்த அணுகுமுறை ஆபத்தானது அல்ல, ஆனால் அவற்றின் இயங்கியல் உறவில் பின்னடைவுகளையும் வெற்றிகளையும், நாம் பணியாற்றும் ஒரு சிக்கலான புறநிலை சூழ்நிலையின் ஒன்றுக்கொன்று தொடர்புடைய முரண்பாடான வெளிப்பாடுகளாகப் பார்ப்பதிலுள்ள ஞானத்தை அங்கீகரித்து, நாம் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம். மேலும், ஆரம்பத்தில் பின்னடைவாகத் தோன்றுவது பின்னர் எதிர்கால முன்னேற்றத்தின் முதல் கட்டமாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை இந்த அணுகுமுறை ஒப்புக்கொள்கிறது.

இன்று நமது கவனம் ஒரு பொதுவான அர்த்தத்தில் வரலாற்று நிகழ்முறையில் இல்லை, மாறாக, எங்கள் கட்சியின் ஒரு சிறந்த உறுப்பினரின் வாழ்க்கையின் மூலம் அதன் பிரதிபலிப்பை ஆய்வு செய்கிறோம். இந்தக் குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு ஹெலன் ஹால்யார்டின் வாழ்க்கையுடன் எவ்வளவு பிணைந்துள்ளது என்பதை நாம் அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. 1923 அக்டோபரில் இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டை நாம் கடந்த இரண்டு மாதங்களாகக் கொண்டாடி வருகிறோம், இது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. 1953 நவம்பரில் ஜேம்ஸ் பி. கனனின் பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்டதற்கு விடையிறுப்பாக ஸ்தாபிக்கப்பட்ட அனைத்துலகக் குழுவின் எழுபதாவது ஆண்டு நிறைவையும் நாம் கொண்டாடுகிறோம்.

முழு வரலாற்றிலும் பாதிக்கு மேல் உள்ளடக்கியிருந்தது. 1971 டிசம்பரில் வேர்க்கர்ஸ் லீக்கில் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) இணைவதற்கான அவரது முடிவானது வேர்க்கர்ஸ் லீக் 1966 நவம்பரில் ஸ்தாபிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகும் எடுக்கப்பட்டது.

ஹெலன் தனது நீண்ட அரசியல் வாழ்க்கையின் போது, உலகின் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, புவிசார் அரசியல் மற்றும் அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களைக் கண்டார். இந்த அனைத்து மாற்றங்களுக்கும் மத்தியில், தனது இளைமைக் கால இலட்சியங்களுக்கான தனது தளராத அர்ப்பணிப்பு, தற்போதுள்ள சமூக ஒழுங்கின் மீதான சமரசமற்ற விரோதம், மற்றும் ஒரு பிற்போக்குத்தனமான அரசியல் சூழல் மற்றும் கலாச்சார பின்னடைவு இருந்தபோதிலும், நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் வெற்றி ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த அதீத நம்பிக்கையை ஒருவர் எவ்வாறு விளக்குவது?

ஹெலனின் அரசியல் ஆளுமையானது வரலாற்று ரீதியாக உருவாக்கப்பட்ட சமூக மற்றும் கலாச்சாரச் சூழல், புறநிலை நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களின் செயலூக்கமான செல்வாக்கின் எப்போதும் சிக்கலான தொடர்புகளால் வடிவமைக்கப்பட்டது. ஹெலன் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தால் வகைப்படுத்தப்பட்ட ஒரு காலகட்டத்தில், நியூயோர்க்கின் புரூக்ளினில் பிறந்தார். அமெரிக்காவில் அந்த இயக்கத்தின் மிகவும் போராட்டக் காரணியானது, அதன் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைமையின் வரம்புகள் இருந்தபோதிலும், சிவில் உரிமைகளுக்காக ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளின் வெகுஜனப் போராட்டமாக இருந்தது. வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் நீடித்த தன்மையைக் குறித்து நாம் ஏற்கனவே கூறிய கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அமெரிக்கப் புரட்சிகள் பிரகடனப்படுத்திய இலட்சியங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற கூர்மையான விழிப்புணர்வால் அந்த இயக்கம் சிறிய அளவில் உந்தப்பட்டது அல்ல.

1980 களில் டெட்ராய்டில் நடந்த இளம் சோஷலிஸ்டுகளின் வசந்தகால கண்காட்சியின் போது புத்தக, பிரசுர வெளியீடுகளின் மேசையில் ஒரு இளம் யுவதியுடன் ஹெலன் பேசுகிறார்

ஹெலன் ஆரம்ப வயது முதலே சிவில் உரிமை இயக்கத்தின் போர்க்குணத்தையும் கலாச்சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டார். அவர் லாங்ஸ்டன் ஹியூக்ஸ், ரிச்சர்ட் ரைட், ரால்ஃப் எலிசன், ஜேம்ஸ் பால்ட்வின் ஆகியோரின் படைப்புகளைப் படித்தார், மேலும் லொரைன் ஹான்ஸ்பெர்ரியின் ஏ ரைசின் இன் தி சன்  (A Raisin in the Sun) என்ற நாவலால் ஆழமாக ஈர்க்கப்பட்டார், மேலும், ஹார்ப்பர் லீயின் ரு கில் எ மோக்கிங்பேர்டு (To Kill a Mockingbird) என்ற வெள்ளையின எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு நாவலையும் அதனுடன் சேர்க்க வேண்டும். ஹெலன் ஜார்ஜ் கெர்ஷ்வினின் பாடல்களையும் விரும்பி இரசித்தார், குறிப்பாக அனைத்து ஃபிட்ஸ்ஜெரால்ட் பாடிய பாடல்கள், மற்றும் சிறந்த இசையமைப்பாளரின் ஒபேராவான போர்கி மற்றும் பெஸ் (Porgy and Bess) ஆகியவைகளாலும் ஈர்க்கப்பட்டார்.

1950 களின் பிற்பகுதியிலும் 1960 களிலும், நியூயோர்க் நகரிலுள்ள பள்ளி குழந்தைகள் எப்போதாவது பெருநகர ஒபேரா ஹவுஸில் பிற்பகல் ஒத்திகைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாரம்பரிய இசையின் அறிமுகம் ஒரு இளைஞரின் கல்வியின் இன்றியமையாத பகுதியாகக் கருதப்பட்டது. கறுப்பினக் கலைஞர்களுக்கு மாபெரும் கலச்சார நிறுவனங்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இனவாதத் தடைகள் தூக்கி எறியப்பட்டன. 1950 களின் முற்பகுதியில் ஐரா கெர்ஷ்வினின் வற்புறுத்தலின் பேரில், போர்கி மற்றும் பெஸ் (Porgy and Bess) இல் பெஸ் பாத்திரத்தை மீண்டும் உருவாக்கிய மிசிசிப்பியின் லாரலிலுள்ள, கறுப்பின சோப்ரானோவான (பராம்பரிய இசை) லியோன்டைன் பிரைஸ் என்பவர், இறுதியாக 1961 ஆம் ஆண்டில் பெருநகரத்தில் அறிமுகமாகி உலகின் ஒபேரா அரங்குகளை வெற்றிகொண்டார்.

ஹெலன் இந்த முற்போக்கான கலாச்சார போக்குகளால் பாதிக்கப்பட்டு ஈர்க்கப்பட்டார். பிற்காலத்தில், அரசியல் பணிகளுக்காக பெர்லினுக்குச் சென்றபோது, ஜேர்மன் ஒபேரா ஹவுஸில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைக் கூட அவர் தவறவிடுவதில்லை.

இருப்பினும், ஹெலனின் சமூக நனவில் அரசியல் சூழ்நிலைமைதான் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது பதின்ம வயது சிவில் உரிமைகளுக்கான போராட்டத்தின் அதிகரித்த வன்முறைத் தன்மையுடன் ஒத்துப்போனது. போதகர் மார்ட்டின் லூதர் கிங்கின் சமாதானப் பிரசங்கங்கள், ஜனநாயகக் கட்சிக்கு விடுத்த வேண்டுகோளுடன் சேர்ந்து, அமெரிக்க சமூகத்தின் வெடிக்கும் முரண்பாடுகளையும் தொழிலாள வர்க்கத்தின் கோபத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

கறுப்பின தேசியவாத இயக்கங்களும் அவற்றின் பிரச்சாரகர்களுக்கும், குறிப்பாக மால்கம் எக்ஸ், வடக்கு நகரங்களில் இளைஞர்களிடையே வளர்ந்து வரும் செவிமடுக்கும் கூட்டங்களைக் கண்டனர். 1964 மற்றும் 1968 க்கு இடையில் ஹார்லெம், வாட்ஸ், நெவார்க், டெட்ராய்ட் மற்றும் பிற நகரங்களில் நடந்த நகர்ப்புற கிளர்ச்சிகள் நிச்சயமாக ஹெலனின் அரசியல் தீவிரமயமாக்கலுக்கு பங்களித்தன. ஆனால் ஹெலன் கறுப்பின தேசியவாதத்தின் இனவாத சொல்லாட்சி மற்றும் வேலைத்திட்டத்தில் ஈர்க்கப்படவில்லை. இவரது தந்தை ஒரு துப்புரவுத் தொழிலாளியாக இருந்தார். இவரது தாயார் ரூபி, சர்வதேச பெண்கள் ஆடைத்தயாரிப்பு தொழிலாளர் சங்கத்தின் (ILGWU) உறுப்பினராக இருந்தார். அவர் வளர்ந்துவந்த புரூக்ளினின் பெட்ஃபோர்ட்-ஸ்டுவெசண்ட் பகுதியானது யூதர்களின் கணிசமான மக்கள்தொகையைக் கொண்ட ஒரு பன்மொழி தொழிலாள வர்க்கப் பகுதியாக இருந்தது - அவர்களில் பலர் தங்கள் பாரம்பரிய சோசலிச அனுதாபங்களைத் தக்கவைத்துக் கொண்டனர். அவர்கள் புவேர்ட்டோ ரிக்காவைச் சேர்ந்தவர்கள் (Puerto Ricans), இத்தாலியர்கள் மற்றும் பிற இனச் சமூகங்களாக இருந்தனர். அவர் சமூகத்தை இனம் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டு பார்க்காமல் வர்க்கம் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டு பார்க்க முனைந்தார்.

1985 ஆண்டு டெட்ராய்ட் இளம் சோசலிஸ்டுகளின் (YS) விடுதலை செய் கேரி டைலரை அணிவகுப்பில் ஹெலன்


வியட்நாமில் நடந்த போரும் உலகெங்கிலும் பரவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களும் பரந்த உலகளாவிய சூழல் மற்றும் அமெரிக்காவில் உக்கிரமடைந்து கொண்டிருந்த சமூக மோதல்களின் தன்மை குறித்த அவரது விழிப்புணர்வுக்கு பங்களித்தன. ஹெலனுக்கு 20 வயதாகும்போது, முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து அதற்குப் பதிலாக சோசலிசத்தைக் கொண்டுவருவதைத் தவிர வேறெதுவும் அவசியமில்லை என்று அவரது தலைமுறையின் பலரைப் போலவே அவரும் உறுதியாக நம்பினார். ஆனால் இதை எப்படி நிறைவேற்றுவது? இந்த மாபெரும் பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான சக்திகள் எவ்வாறு ஒன்றுதிரட்டப்பட்டு ஒழுங்கமைக்கப்படும்? அப்படிப்பட்ட சக்திகள் இருந்ததா? அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய இராணுவ தொழிற்துறை வளாகங்களை விடப் பெரிய சக்தி ஏதாவது இருந்ததா? இக்கேள்விகளுக்கு ஹெலனுக்கோ அல்லது அவரது இலட்சியவாத மற்றும் கோபமான தலைமுறையைச் சேர்ந்த மற்றய உறுப்பினர்களுக்கோ தெளிவான மற்றும் ஆயத்தமான பதில்கள் எதுவும் இருக்கவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் சமூக மற்றும் அரசியல் எழுச்சிகள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் கட்டவிழ்ந்து கொண்டிருந்த வேளையில், ஹெலனும் அவரது தலைமுறையினரும் தங்கள் இளமையின் முக்கியமான அனுபவத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, அவர்களின் அரசியல் நனவின் எல்லைக்கு அப்பால், நான்காம் அகிலத்திற்குள் மற்றொரு போராட்டம் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. போல்ஷிவிக்குகளுக்கும் மென்ஷிவிக்குகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்ட ரஷ்ய சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் 1903 காங்கிரசிற்குப் பின்னர் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு குறித்த சச்சரவுகளை முதலாளித்துவ பத்திரிகைகள் புறக்கணித்ததைப் போலவே, சிறிய ட்ரொட்ஸ்கிச குழுக்களுக்கு இடையிலான “சச்சரவுகளை” அகங்காரத்துடன் புறக்கணித்த முதலாளித்துவ பத்திரிகைகளில் இந்த மோதல் பெரும்பாலும் அறிக்கையிடப்படவில்லை. ஆயினும்கூட, 1917 அக்டோபர் புரட்சியின் தலைவிதி, மார்க்சிச தத்துவத்தின் இயங்கியல் சடவாத அடித்தளங்கள், சோசலிச மூலோபாயம் மற்றும் புரட்சிகர நடைமுறை போன்ற அடிப்படை பிரச்சினைகளை மையமாகக் கொண்ட அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட மோதலானது முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு இடையிலான தினசரி கோழிச் சண்டைகளை விட எல்லையற்ற மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பப்லோவாதப் போக்கின் ட்ரொட்ஸ்கிச-விரோத திருத்தல்வாதத்திற்கு எதிராக அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜேம்ஸ் பி. கனன் தலைமையிலான போராட்டத்தால் வழிநடத்தப்பட்ட நான்காம் அகிலத்தில் 1953ம் ஆண்டு பிளவானது, நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச புரட்சிகர முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதற்காக பல தசாப்தங்களாக நீடித்த அனைத்துலகக் குழுவின் ஒரு நீண்ட போராட்டத்தின் ஆரம்ப சுற்று மட்டுமே என்பதை நிரூபித்தது. பப்லோவாத போக்கு, வளர்ந்து வரும் இடது-சாய்வு மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளின் ஆதரவைப் பெற்று, ட்ரொட்ஸ்கிசத்தின் ஒவ்வொரு அடிப்படை வேலைத்திட்டக் கோட்பாட்டையும் நிராகரித்தது. நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான இடைமருவு வேலைத்திட்டத்தின் ஆரம்ப வாக்கியத்தில், “ஒட்டுமொத்த உலக அரசியல் நிலைமையானது முக்கியமாக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் ஒரு வரலாற்று நெருக்கடியால் வகைப்படுத்தப்படுகிறது” என்று ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை அது நிராகரித்தது.

தொழிலாள வர்க்கத்தில் நனவான மார்க்சிச தலைமையின் இன்றியமையாத காரணியாக நான்காம் அகிலத்தின் அவசியத்தை முற்றிலுமாக மறுப்பதே பப்லோவாத திருத்தல்வாதத்தின் இறுதி விளைவாகும். அதாவது உலக அளவில் முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் மைய மற்றும் முன்னணிப் பாத்திரத்தை மறுப்பதாகும். அத்தோடு, தொழிலாள வர்க்கத்தால் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது – அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் - ஒரு சோசலிச சமூகத்திற்கு மாறுவதற்கான அவசியமான கட்டம் என்பதை மறுப்பதாகும்.

உலக சோசலிசப் புரட்சிக்கான உலக வரலாற்று முன்னோக்கை பப்லோவாதிகள் நிராகரிப்பதில் இருந்து ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் ஏனைய அனைத்து முக்கிய கூறுகளையும் அவர்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து வந்தது. ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதைப் போல, சோவியத் ஒன்றியத்திலுள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் உலகெங்கிலுமுள்ள அதன் துணைக் கோள் ஆட்சிகளும் கட்சிகளும் உலக ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புரட்சிகர முகமைகளாக நிராகரிக்கப்படவோ, எதிர்க்கவோ அல்லது தூக்கி எறியப்படவோ கூடாது. மாறாக, அரசு மற்றும் கட்சி அதிகாரத்துவங்களுக்கு ஒரு புரட்சிகர ஆற்றலைக் காரணம் காட்டி, பப்லோவாதிகள் நான்காம் அகிலத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக கலைக்க முயன்றனர். அதன் காரியாளர்கள் வெகுஜன ஸ்ராலினிச அமைப்புக்களுக்குள் கலைக்கப்படுவார்கள், அங்கு அது அவற்றின் அதிகாரத்துவ தலைமைகளுக்கு இடது ஆலோசகர்களாக செயல்படும், வெகுஜனங்களின் அழுத்தத்திற்கு பதிலளிக்குமாறு அவர்களை மென்மையாக வலியுறுத்தும்.

ஹெலன் 1992 ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்றுகிறார்.

ஸ்ராலினிசத்தின் எதிர்ப்-புரட்சிகர பாத்திரம் குறித்த ட்ரொட்ஸ்கிச வலியுறுத்தலை பப்லோவாதிகளின் திருத்தலானது அவர்களின் கலைப்புவாத வேலைத்திட்டத்தின் ஒரு கூறுபாடு மட்டுமே ஆகும். 1953 பிளவுக்குப் பின்னர், பப்லோவாத கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நான்காம் அகிலத்தின் பிரிவுகளானது ஸ்ராலினிச, சமூக ஜனநாயக, முதலாளித்துவ தேசியவாத அல்லது வலதுசாரி ஜனரஞ்சகவாதமாக இருந்தாலும், ஏதேனும் ஒரு நாட்டிலோ அல்லது மற்றய நாட்டிலோ வெகுஜன இயக்கங்கள் மீது கணிசமான செல்வாக்கை செலுத்திய ஏதாவதொரு அரசியல் போக்குக்கு முன் மண்டியிடுமாறு அறிவுறுத்தப்பட்டன.

பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் அனைத்துலகக் குழுவை அமைப்பதிலும் அது முக்கிய பாத்திரம் வகித்த போதிலும், சோசலிச தொழிலாளர் கட்சி 1950 களில் பனிப்போர் சூழலின் அழுத்தத்தின் கீழ், பகிரங்க கடிதத்தில் கனனால் தெளிவாகக் கூறப்பட்ட கொள்கைகளில் இருந்து பின்வாங்கியது. தொழிலாள வர்க்கத்தில் ட்ரொட்ஸ்கிச தலைமையை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இருந்து மத்தியதர வர்க்க போக்குகளுடன் கூட்டணிகளை ஸ்தாபிப்பதை நோக்கி அதன் பணியின் அரசியல் அச்சை அது சீராக மாற்றியது. அமெரிக்காவிற்குள், சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியல் பின்வாங்கல் மற்றும் பப்லோவாதிகளுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கான தயாரிப்பு ஆகியவைகள் சிவில் உரிமைகள் இயக்கத்தின் முதலாளித்துவ சீர்திருத்தவாத மற்றும் தேசியவாத தலைவர்களுக்கு அதன் வளர்ச்சியடைந்து வரும் தழுவல் போக்கில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டன.

சோசலிச தொழிலாளர் கட்சியின் வலது பக்கம் நோக்கிய இயக்கமானது அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பிரிவுகளால் எதிர்க்கப்பட்டது. 1961 மற்றும் 1963 க்கு இடையில் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. கியூபாவில் காஸ்ட்ரோ அதிகாரத்திற்கு வந்ததை, ஒரு சோசலிசப் புரட்சிக்கு நான்காம் அகிலத்தின் தலைமையோ அல்லது தொழிலாளர் அதிகாரத்தின் குறிப்பிட்ட உறுப்புகள் ஒருபுறம் இருக்க, அரசியல் ரீதியாக சுயாதீனமான தொழிலாளர் இயக்கத்தின் இருப்புக் கூட தேவையில்லை என்பதற்கான சான்றுதான் என்று பாராட்டிய சோசலிச தொழிலாளர் கட்சி, 1963 ஜூனில் அனைத்துலகக் குழுவுடன் பிளவுபட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய செயலகத்தில் பப்லோவாதிகளுடன் மீண்டும் இணைந்தது.

ரிம் வோல்ஃபோர்த் தலைமையிலான சோசலிச தொழிலாளர் கட்சியின் ஒன்பது உறுப்பினர்கள், பிரெட் மசெலிஸ் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டவர்கள், கொள்கையற்ற மறுஒருங்கிணைப்பை எதிர்த்தனர். ஒரு வருடம் கழித்து, 1964 செப்டம்பரில், பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் ஐக்கிய செயலகத்தின் இலங்கைப் பிரிவான லங்கா சமசமாஜக் கட்சி நுழைவது குறித்து விவாதிக்கக் கோரியதால், பின்னர் அவர்கள் சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சர்வதேச ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துலகக் குழுவின் வெளியேற்றப்பட்ட ஆதரவாளர்கள் நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவை (ACFI) உருவாக்கினார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவை (ACFI) அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஒற்றுமையில் ஒரு கட்சியாக வேர்க்கர்ஸ் லீக்கை உருவாக்கியது.

அனைத்துலகக் குழுவால் முன்னெடுக்கப்பட்ட இந்த விமர்சனப் போராட்டம் ஹெலனும் அவரது தலைமுறையைச் சேர்ந்த மற்றவர்களும் அரசியல்ரீதியாக சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு முன்னரே நிகழ்ந்தது. ஆனால் அது ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்ற வகையில் அவர்களின் எதிர்கால அபிவிருத்திக்கான அடித்தளங்களை ஸ்தாபித்து சாத்தியமாக்கியது. அனைத்துலகக் குழுவானது பப்லோவாத திருத்தல்வாதத்தை எதிர்த்துப் போர் தொடுக்காவிட்டால், அமெரிக்காவிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ ட்ரொட்ஸ்கிச இயக்கம் இருந்திருக்காது.

கறுப்பின தேசியவாத அரசியலின் அனைத்து வடிவங்களிலிருந்தும் நனவான உடைவு என்பது மார்க்சிசத்திற்கான போராட்டத்திற்கும் அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஒரு முக்கியமான கூறுபாடு என்பதைத் தவிர வேறு எந்த சந்தேகமும் இல்லை. அத்தகைய உடைவைத் தடுப்பதற்கு சோசலிச தொழிலாளர் கட்சி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது. அது கறுப்பின தேசியவாதத்தின் ஆதரவாளர்களை மகிமைப்படுத்தவும், அவர்களையும் குறிப்பாக மால்கம் எக்ஸையும் இளைஞர்களுக்கான அரசியல் முன்மாதிரியாக சித்தரிக்கவும் முயன்றது. எடுத்துக்காட்டாக, 1965 பெப்ரவரியில் மால்கம் எக்ஸ் படுகொலை செய்யப்பட்ட பின்னர், சோசலிச தொழிலாளர் கட்சியின் நீண்டகால தலைவரான ஜோர்ஜ் பிரீட்மன் பின்வருமாறு எழுதினார்:

லியோன் ட்ரொட்ஸ்கி என்ற மற்றொரு மாபெரும் புரட்சியாளர் படுகொலை செய்யப்பட்டபோது 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் இன்னும் இளைஞனாக இருந்தேன். அவரது தலைமைத்துவம், ஆலோசனைகள் மற்றும் அரசியல் ஞானம் இழக்கப்படும் என்பதை நான் முழுமையாக உணரவில்லை ... எப்படியிருந்தாலும், ட்ரொட்ஸ்கி கொல்லப்பட்டபோது நான் அழவில்லை, மால்கம் கொல்லப்பட்டபோது என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.

மால்கம் எக்ஸின் தைரியத்தை யாரும் மறுக்கவில்லை. ஆனால் மால்கம் எக்ஸின் கதி, ட்ரொட்ஸ்கியின் அதே தளத்தில் வைக்கப்பட்டமை, மற்றும் 1940 இல் ட்ரொட்ஸ்கி (ப்ரீட்மனுக்கு 25 வயதாக இருந்தபோது) மற்றும் 1965 இல் மால்கம் எக்ஸ் ஆகியோரின் படுகொலைகள் இதே போன்ற வரலாற்று மற்றும் அரசியல் அளவிலான நிகழ்வுகள் என்று கூறுவதற்கு பிரீட்மன் நகைச்சுவையான உணர்ச்சிவாதத்தை சிடுமூஞ்சித்தனமாகப் பயன்படுத்தியது, இது இளைஞர்களை திசைதிருப்புவதற்கும் அவர்களின் அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்கும் சோசலிச தொழிலாளர் கட்சியின் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

பிரீட்மனின் சந்தர்ப்பவாத அஞ்சலியை மால்கம் எக்ஸ் மரணத்துடன் ஒப்பிடுவதற்கு போதனையாக, பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) முன்னணி உறுப்பினராக இருந்த மைக்கேல் பண்டாவின் பதில் இருந்தது. பண்டா இந்தப் படுகொலையை “முற்றிலும் மோசமானது, காட்டுமிராண்டித்தனமானது மற்றும் கிரிமினல் மற்றும் நீக்ரோ தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு எதிரான வெள்ளையின ஆளும் வர்க்கம் மற்றும் அதன் கறுப்பின கூட்டாளிகளின் அடிப்படை வெறுப்பை பிரதிபலிக்கிறது” என்று கண்டனம் செய்தார். இருப்பினும், மால்கம் எக்ஸின் தேசியவாத அரசியலுக்கு பண்டா எந்த ஒரு அரசியல் விட்டுக்கொடுப்புகளையும் செய்யவில்லை, எலியா முகமதுவுடனான அவரது முறிவு இருந்தபோதிலும், கறுப்பின முஸ்லிம்கள் மீதான அவரது முரண்பாடான அணுகுமுறையாகும். “அவற்றில் முற்போக்கான எதுவும் இல்லை” என்று பண்டா எழுதினார். “அவர்கள் முற்றிலும் பிற்போக்குத்தனமானவர்கள், உண்மையில் எதிர்-புரட்சிகரவாதிகள்” என்றார்.

மால்கம் எக்ஸின் வாழ்க்கை மற்றும் அவரது படுகொலையின் அரசியல் முக்கியத்துவம் குறித்த தனது மதிப்பீட்டை நிறைவு செய்த பண்டா பின்வருமாறு எழுதினார்:

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலிலிருந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றால் அது இதுதான்:

அதாவது முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புரட்சிகர மார்க்சிசக் கட்சியின் உள்ளேயும் அதன் மூலமாகவும் வெள்ளையின மற்றும் கறுப்பினத் தொழிலாளர்களின் ஐக்கியம் மட்டுமே நீக்ரோ மக்களின் முழுமையான விடுதலையைக் கொண்டுவர முடியும்.

இந்த வழியில், கறுப்பின தேசியவாதம் ஒரு பெரிய தடையாகவும், ஆபத்தான திசைதிருப்பலாகவும் உள்ளது.

சோசலிச தொழிலாளர் கட்சி தலைவர்களைப் போலவே, கறுப்பின தேசியவாதம் முற்போக்கானது என்று பிரகடனம் செய்பவர்கள் ... நீக்ரோ தொழிலாளர்களின் வீரமிக்க போராட்டங்களை நனவுடன் ஏமாற்றி காட்டிக் கொடுக்கிறார்கள். ஒரு மாபெரும் மோசடியை நிலைநிறுத்த அவர்கள் உதவுகிறார்கள்.

கறுப்பின தேசியவாதத்தின் மீதான இந்த கண்டனத்தை வரலாற்று அனுபவம் முழுமையாக மெய்ப்பித்துள்ளது, உண்மையில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிகவும் பிற்போக்குத்தனமான ஒரு அரசியல் சித்தாந்தமாகவும் வேலைத்திட்டமாகவும் இன்றளவும் நீடிக்கும் அனைத்து தேசியவாதங்களும் இருக்கின்றன.

அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச முன்னோக்கிற்கான பப்லோவாதிகளுக்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் பரந்த அரசியல் உட்குறிப்புக்கள் குறித்து சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசிய செயலாளரும் அனைத்துலகக் குழுவின் பிரதான தலைவருமான ஜெர்ரி ஹீலி, 1966 நவம்பரில் வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபக மாநாட்டிற்கு தனது சகோதரத்துவ வாழ்த்துக்களில் தெளிவாக பின்வருமாறு கூறினார்:

அமெரிக்காவிலுள்ள தொழிலாள வர்க்கம் உலகின் மிக சக்திவாய்ந்த சக்தியாகும், இந்த வர்க்கத்திற்குள்தான் நீங்கள் உங்கள் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.

இது மார்க்சிசத்தின் ஒரு அடிப்படை கொள்கையாகும், இது அமெரிக்காவிற்குள் நிலவும் நிலைமைகளுக்கு குறிப்பிட்ட அவசரத்துடன் பொருந்தும் ஒன்றாகும். நமது காலத்தின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது கறுப்பு சக்தியோ அல்லது நாடு முழுவதும் பரவியுள்ள டசின் கணக்கான அமைதி மற்றும் சிவில் உரிமை இயக்கங்களோ அல்ல, மாறாக ஒரு புரட்சிகரக் கட்சியின் தலைமையிலான தொழிலாள வர்க்கமாகும்.

இந்தக் கட்டத்தில்தான் திருத்தல்வாதிகளிடமிருந்து நம்மை முற்றிலுமாகப் பிரித்துக் கொள்கிறோம். நீக்ரோக்களும், மத்தியதர வர்க்க இயக்கங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான கணக்குகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ள முடியும் என்ற அவர்களின் கருத்தை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அவ்வாறான இயக்கங்களுக்கு அவ்வப்போது எத்தகைய விமர்சன ரீதியான ஆதரவு கோரப்பட்டாலும், அவற்றின் குறைபாடுகள் குறித்த எமது விமர்சனங்களை தெளிவுபடுத்துவதன் அடிப்படையிலேயே எமது ஆதரவின் சாராம்சம் இருக்க வேண்டும்.

பின்னர் ஹீலியும் பண்டாவும் பப்லோவாத அரசியலுக்கு சரணடைந்தது, 1950கள் மற்றும் 1960களில் ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதற்காக அவர்கள் நடத்திய போராட்டத்திலிருந்தும், 1960களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு வென்ற வேர்க்கர்ஸ் லீக்கை நிறுவுவதற்கும் அதன் காரியாளர்களின் கல்விக்கும் அவர்கள் அளித்த முக்கியமான பங்களிப்பிலிருந்தும் சிறிதும் விலகவில்லை.

உண்மையில், ட்ரொட்ஸ்கிசத்தை தொழிலாளர் புரட்சிக் கட்சி காட்டிக்கொடுத்ததற்கு எதிரான போராட்டத்தில் 1980 களில் நாங்கள் பயன்படுத்திய ஆயுதங்களை அவர்கள் எங்களுக்கு வழங்கினர்.

அதற்கு முன்னர் இரண்டு தசாப்தங்களாக அனைத்துலகக் குழுவால் நடத்தப்பட்ட போராட்டத்தின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கிசத்திற்கு வெற்றி கொள்ளப்பட்டவர்களில் ஹெலனும் ஒருவர். அதற்கடுத்த தசாப்தங்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் வேர்க்கர்ஸ் லீக்/சோசலிச சமத்துவக் கட்சியின் அடுத்தடுத்த அனைத்து பணிகளும் இந்த அடித்தளத்தின் மீதுதான் வளர்ந்தன.

இலங்கையின் தலைநகரான கொழும்பிற்கு வடக்கே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்களுடன் ஹெலன் பேசுகிறார்

ஹெலனைப் குறித்த எனது முதல் நினைவானது 1971 டிசம்பர் 18 அன்று வேர்க்கர்ஸ் லீக்கின் இளைஞர் இயக்கமான இளம் சோசலிஸ்டுகளின் ஸ்தாபக மாநாட்டில் (மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்களின் முன்னோடி) தொடங்குகிறது. நாங்கள் இருவரும் ஜனவரி 1972 இல் வேர்க்கர்ஸ் லீக்கில் இணைந்தோம், ஒரு வருடத்திற்குப் பிறகு அரசியல் குழுவின் உறுப்பினர்கள் ஆனோம். 1974 ஆகஸ்டில் வோல்ஃபோர்த் தேசியச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தோழர் பிரெட் மசெலிஸ் நியமிக்கப்பட்ட பின்னர்தான் வேர்க்கர்ஸ் லீகின் தலைமைத்துவத்தில் எங்கள் முறையான தினசரி ஒத்துழைப்பு சாத்தியமானது, அவர் கொள்கை ரீதியான மற்றும் தோழமையான உறவுகளையும் வேலை முறைகளையும் உறுதியாக நிறுவினார்.

வேர்க்கர்ஸ் லீக், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதில் ஹெலனின் பங்களிப்பை போதுமான அளவு தொகுப்பது இந்த நினைவேந்தல் கூட்டத்தின் கட்டமைப்பிற்குள் சாத்தியமில்லை. இன்று பேசுபவர்களுக்கு அவரது பணியின் ஏதாவது ஒரு அம்சம், அவரது ஆளுமையின் வெவ்வேறு கூறுகள் நினைவுக்கு வரும். அவரது பங்களிப்பின் விரிவான தொகுப்பிற்கு கடந்த ஐந்து தசாப்தங்களாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் பணிகளை மீளாய்வு செய்ய வேண்டும். இந்த இயக்கத்தின் வரலாற்றின் அனைத்து அம்சங்களிலும் அவரது வாழ்க்கை ஆழமாக பதிந்துள்ளது. வர்க்கப் போராட்டத்தில் எண்ணற்ற தலையீடுகளின் போக்கில், ஹெலன் எண்ணற்ற தொழிலாளர்களின் கல்வி கற்பித்தலுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கினார், அவர்கள் அநீதியான மற்றும் மிருகத்தனமான சுரண்டல் முறைக்கு எதிரான போராட்டத்தில் அவரது அச்சமற்ற அர்ப்பணிப்பை மதித்து பாராட்டினர்.

ஆனால் அவரது அரசியல் நடவடிக்கைகள் பற்றிய ஒரு விரிவான பதிவு கூட ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும் அதன் காரியாளர்களுக்கும் அவரது பங்களிப்பின் அளவை போதுமான அளவு வெளிப்படுத்தாது. புரட்சிகரக் கட்சி என்பது வாழ்க்கையின் இன்ப துன்பங்களுக்கும் துரதிர்ஷ்டங்களுக்கும் மத்தியில், “வாழ்க்கையின் பகுதியாக பலவகையான எண்ணற்ற சவால்களுக்கு மத்தியில், (உடலின் மரபுரிமையாக இருக்கும் ஆயிரம் இயற்கை அதிர்ச்சிகள் – ஹாம்லெட்டில் இருந்து)” ஆர்வங்கள் மற்றும் பிரச்சினைகளுடன், தங்கள் பணியை மேற்கொள்ளும் அதனுடைய காரியாளர் உண்மையான மனிதர்களைக் கொண்டுள்ளது. நம்பகமான, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கக் கூடிய தோழர்களின் நட்பு இல்லாமல் பல தசாப்தங்களாக புரட்சிகரப் பணியின் தொடர்ச்சி என்பது சாத்தியமில்லை, ஒரு பெரிய நோக்கத்திற்கான பகிரப்பட்ட போராட்டத்தில் உருவான நட்புகள் மிகவும் வலுவானவைகள் மற்றும் மிகவும் நீடித்தவைகளாகும்.

தோழிகளில் மிகவும் உண்மையானவர் ஹெலன். அவர் தனது மதிப்பீடுகளில் கடினமாக இருக்கலாம். ஒரு அரசியல் அல்லது தனிப்பட்ட பிரச்சினைக்கு சர்க்கரை பூசப்பட்ட பதிலை ஒருவர் விரும்பினால், ஹெலனைத் தவிர்ப்பது நல்லது. அவர் வெளிப்படையானவர், நோக்கத்திற்கு எப்போதும் நேர்மையானவர். ஆனால் அந்த நேர்மையானது உண்மையான அனுதாபத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியது.

ஹெலன் தனது 65 வது பிறந்தநாளில் நண்பர்களுடன் பேசுகிறார், நவம்பர் 24, 2015.

அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்ட ஹெலனுக்கு கடந்த பல ஆண்டுகள் கடினமாக இருந்தன. ஆனால் அவர் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியையும் கட்சியின் வளர்ந்து வரும் செல்வாக்கையும் அங்கீகரித்து பெரும் திருப்தியைப் பெற்றார். எங்கள் இயக்கத்தின் முன்னேற்றத்தை அளவிட அவர் நன்கு தயாராக இருந்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பொருளாதார அமைப்புமுறையின் அடித்தளமாக செயற்பட்ட பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு ஆகஸ்ட் 15, 1971 அன்று சரிந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு ஹெலன் வேர்க்கர்ஸ் லீக்கில் சேர்ந்தார். இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பை விட 2,000 டாலருக்கும் மிகவும் குறைவாக ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டாலர் என்ற விகிதத்தில் டாலரை தங்கமாக மாற்றுவதே அதன் அடித்தளமாகும்.

1971-ம் ஆண்டு அரசியல் உலகமானது இன்றைய அரசியலை விட மிகவும் வித்தியாசமானது. ஸ்ராலினிச ஆட்சி அல்லது “உண்மையான தற்போதைய சோசலிசம்” என்று குறிப்பிடப்பட்டது சோவியத் ஒன்றியத்தில் இன்னும் இருந்தது, ஸ்ராலினிசத்தை அல்லது அதன் தேசிய வகைகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் கிழக்கு ஜேர்மனியில் ஓடர் நதி முதல் வடக்கு பசிபிக் மற்றும் தென் சீனக் கடல் வரை அதிகாரத்தைக் கொண்டிருந்தன. அனைத்துலகக் குழுவுக்கு வெளியே, வெறும் இருபது ஆண்டுகளுக்குள் இந்த ஆட்சிகள் அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்படும் என்றும் மேற்கு ஐரோப்பாவில் வெகுஜன ஸ்ராலினிசக் கட்சிகள் கணிசமான அரசியல் சக்திகளாக இல்லாமல் போய்விடும் என்றும் கற்பனை கூட செய்யும் ஒரு கட்சி கூட இருக்கவில்லை.

சமூக ஜனநாயகக் கட்சிகளும் அவைகள் கூட்டணி வைத்திருந்த தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கப் போராளிகளின் செயலூக்கமான ஆதரவைப் பெற்றிருந்தன. காஸ்ட்ரோயிசமும் பெரோனிசமும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு உண்மையான புரட்சிகர மாற்றீடுகள் என்று பப்லோவாதிகளால் பாராட்டப்பட்டன. சிலியில் சால்வடார் அலெண்டே ஆட்சிப் பொறுப்பை வகித்தார். ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும், முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் போலி-புரட்சிகர உடையில் தங்களை உடையணிந்து, நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை மறுக்கும் சோசலிசத்திற்கான ஒரு புதிய தேசிய பாதையின் நனவில்லாத முன்னோடிகளாக பப்லோவாதிகளால் கொண்டாடப்பட்டன. மாவோவின் கீழ் சீனா இன்னும் கலாச்சாரப் புரட்சியின் பிடியில் இருந்தது.

அனைத்துலகக் குழு மட்டுமே முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடி, தேசிய-அரசு அமைப்புமுறை வரலாற்று ரீதியாக காலாவதியாகிப் போதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி, மற்றும் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சக்தி குறித்த ஒரு புரிதலை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

அனைத்து ஸ்ராலினிச, திருத்தல்வாத மற்றும் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் தலைவிதி ட்ரொட்ஸ்கியின் கூற்றை மெய்ப்பித்துள்ளது: அதாவது “நான்காம் அகிலத்தின் காரியளர்களுக்கு வெளியே, பெயருக்கு தகுதியான ஒரு புரட்சிகர கட்சி இல்லை.” ஹெலன் அந்தக் கூற்று நிரூபணமாவதைக் காணும் அளவுக்கு நீண்ட காலம் வாழ்ந்தார்.

ஒரு வாழ்க்கையின் முக்கியத்துவத்தின் உண்மையான அளவுகோல் அது விட்டுச்சென்றது, அது உலகில் அதன் நீடித்த விளைவைக் குறிக்கிறது. இந்த துல்லியமான அளவுகோலின்படி, ஹெலன் ஹால்யார்டின் வாழ்க்கை ஒரு நீடித்த பண்புகளால் குறிக்கப்படுகிறது. அவர் நம் சிந்தனைகளில் நிலைத்து நிற்பார். அவர் விட்டுச்சென்ற மரபுவழி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் பொதிந்துள்ளது. ஹெலன் தனது உடலையும் ஆன்மாவையும் அர்ப்பணித்துக் கொண்ட தொழிலாள வர்க்கம் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான போராட்டத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடரும்.

வாழ்க தோழர் ஹெலன் ஹால்யார்டின் நினைவுகள்!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வாழ்க!

உலக சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறு!

Loading