இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அக்டோபர் 29 அன்று, ஓல்டன் தோட்ட நடவடிக்கைக் குழு, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆதரவுடன், 'ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான பொய் வழக்கை விலக்கிக்கொள்! வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலைக்கு அமர்த்து!' என்ற பதாதையின் கீழ், மஸ்கெலியா, சாமிமலையில் உள்ள தினேஷ் மண்டபத்தில் ஒரு வெற்றிகரமான கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) உட்பட தோட்டத் தொழிற்சங்கங்கள் பழிவாங்கப்பட்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்க மறுத்தன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக, ஓல்டன் தொழிலாளர் நடவடிக்கைக் குழு, சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவுடன், இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினுள் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், மீண்டும் அவர்களை வேலையில் அமர்த்துவதற்கும் தொடர்ச்சியாகப் போராடியுள்ளது.
ஓல்டன் தோட்டத்தை முகாமைத்துவம் செய்யும், ஹொரண பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் ஹேலிஸ் குழுமத்தை உள்ளடக்கிய தோட்ட நிர்வாகத்தினாலேயே தொழிலாளர்கள் வேட்டையாடப்பட்டனர். 2021 பெப்ரவரி தொடக்கத்தில் இருந்து 1,000 ரூபா நாளாந்த சம்பளம் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இணைந்து வேலை நிறுத்தம் செய்த ஓல்டன் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் தலையீட்டையும் மீறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
தொடர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, 17 பெப்ரவரி 2021 அன்று தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளர் பங்காளவின் முன் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நிர்வாகத்தின் உதவியோடு, முகாமையாளரை உடல்ரீதியாகத் தாக்கியதாகவும், அவரது பங்களாவை சேதப்படுத்தியதாகவும் போலிக் குற்றச்சாட்டைப் புனைந்த பொலிசார், 22 தொழிலாளர்களையும் இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர். அதே நேரத்தில், ஹேலீஸ் கம்பனி 38 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா., நிர்வாகத்தினதும் பொலிசினதும் பழிவாங்கலுக்கு ஆதரவளித்தது. தோட்டத்திலுள்ள ஏனைய தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கு மௌனமாக ஆதரவளித்தன.
32 மாதங்கள் கடந்தும், தொழிலாளர்கள் மீது பொலிசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமை, இந்த வழக்கின் மோசடித் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் பல கட்டுரைகளை வெளியிட்ட ஓல்டன் தோட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழு, 2021 இல் இணைய வழி கூட்டமொன்றையும் நடத்தியதுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாமிமலை பஸ் நிலையத்தில் மறியல் போராட்டமொன்றையும் நடத்தியது. இந்த வழக்கை நிபந்தனையின்றி விலக்கிக்கொள்ளக் கோரி சட்டாமா அதிபருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் எழுதிய மனுவில், இணைய வழியிலும் அச்சுப் பிரதியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
கூட்டத்திற்கு முன்னதாக, நடவடிக்கை குழுவினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் உறுப்பினர்கள் சாமிமலையில் உள்ள கிளனுகி மற்றும் பெயார்லோன் தோட்டங்களிலும் மஸ்கெலியாவில் உள்ள பிறவுண்ஸ்விக் தோட்டத்திலும் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். “காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும்” என்ற தலைப்பில் வெளியான, உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் அறிக்கையின் நூற்றுக்கணக்கான பிரதிகளை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பிரச்சாரக்காரர்கள் விநியோகித்தனர்.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலையும் விக்கிரமசிங்க அரசாங்கம் முடுக்கிவிட்டிருப்பது, உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களால் முன்னெடுக்கப்படும் வர்க்கப் போர்க் கொள்கையின் பாகமாகும். ஏகாதிபத்திய ஆதரவு இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகவும் மற்றும் அமெரிக்க-நேட்டோ படைகள் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் நடத்தி வரும் பயங்கரமான போரின் சர்வதேச விளைவுகள் பற்றியும் வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச வளர்ச்சிகள் பற்றியும் பிரச்சாரக்காரர்கள் தொழிலாளர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான கே. காண்டீபன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். “தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் மட்டுமே வேட்டையாடப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்கவும் அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரியும் போராடுகின்றன' என காண்டீபன் தெரிவித்தார்.
இ.தொ.கா. தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாளர்களைப் பாதுகாக்க மறுத்தது மட்டுமன்றி, நடவடிக்கை குழு உறுப்பினர்களை மிரட்டி, பொலிசாருக்கு தகவல் அளித்ததன் மூலம் கடந்த காலத்தில் நடவடிக்கை குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை சீர்குலைக்க முயன்றது, என சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா தனது உரையில் தெரிவித்தார். “ஆனால், தொழிலாளர்கள் இந்த வேட்டையாடலையும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கை குழுக்களையும் அமைக்கத் தயாராக உள்ளனர் என்பதை இந்தக் கூட்டம் எடுத்துக் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தை ஏனைய தொழிலாளர்கள் மத்தியில் விரிவுபடுத்தவும் ஏனைய தோட்டங்களில் நடவடிக்கை குழுக்களை அமைக்கவும் ஓல்டன் தோட்ட நடவடிக்கை குழுவுடன் ஒன்றிணையுமாறு தேவராஜா கேட்டுக்கொண்டார்.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடல் இலங்கையில் மட்டுமன்றி, உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பரந்த தாக்குதலின் ஒரு பகுதி என இறுதியாக உரை ஆற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் டபிள்யூ. ஏ. சுனில் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையின் கீழ் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை எவ்வாறு தீவிரப்படுத்துகிறது என்பதை அவர் விளக்கினார்.
“விக்கிரமசிங்க அரசாங்கம் தோட்டங்கள் உட்பட நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைக்கவும் தனியார்மயமாக்கவும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேலும் சீரழிக்கும் வகையில் வரிகளை அதிகரிக்கவும் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.' முதலாளித்துவ அரசியல் எதிர்க் கட்சிகள், போலி-இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வெட்டுக்களுக்கு எதிரானவை அல்ல' என்று சுனில் சுட்டிக் காட்டினார்.
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் ஏகாதிபத்திய ஆதரவு போர் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக காசாவில் இஸ்ரேலின் போரின் விளைவாக உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி மோசமாகி வருகிறது என்று அவர் விளக்கினார்.
“உலகெங்கிலும் உள்ள சக ஆளும் வர்க்கங்களைப் போலவே, விக்கிரமசிங்க அரசாங்கமும் இந்த நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துகிறது. இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக வர்க்கப் போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. தொழிற்சங்கங்கள் அந்த போராட்டங்களை பிளவுபடுத்துவதற்கு உத்வேகத்துடன் செயல்படுகின்றன.
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், இந்த பிரச்சினைகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சுனில் வலியுறுத்தினார்.
“இது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் பெரிய வங்கிகள், தொழிற்துறைகள் மற்றும் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்குவது உட்பட சோசலிச கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்-விவசாயி அரசாங்கத்திற்கான போராட்டமாகும். அதற்கு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற ஏழைகளதும் மாநாட்டுக்காக போராடுவது அவசியம்,' என்று அவர் உரையை நிறைவு செய்தார்.
இக்கலந்துரையாடலின் போது, ஒல்டன் தோட்டத்தை சேர்ந்த பெண் தொழிலாளியும், இ.தொ.கா. தொழிற்சங்க உறுப்பினருமான செவ்வந்தி, வேலைகளை மீளப் பெறுவதற்கும் வழக்குகளை வாபஸ் பெறுவதற்குமான போராட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழுப்பினார்.
“உங்கள் தொழிற்சங்கத்தின் தலைமை உட்பட தொழிற்சங்கங்களின் துரோகத்தாலேயே தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் வேட்டையாடப்பட்டுள்ளனர். அந்த தொழிற்சங்கத் தலைமைகள் உங்கள் ஆதரவிற்காக ஏனய தொழிலாளர்களைத் திரட்டியிருந்தால், நிர்வாகம் இத்தகைய தாக்குதல்களை நடத்தியிருக்க முடியாது”.
'ஆனால், தொழிற்சங்கத் தலைவர்கள் அத்தகைய போராட்டத்தை நிராகரித்தது மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகத்துடனும் பொலிசாருடனும் வெளிப்படையாக ஒத்துழைத்தனர். அதனால்தான், பழிவாங்கலை எதிர்த்துப் போராடுவதற்கும் வேலைகளை மீளப்பெறுவதற்கும் ஏனய தொழிலாளர்கள் பக்கம் திரும்புவதற்காக போராட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். ஓல்டன் தோட்ட நடவடிக்கைக் குழுவுடனும் சோசலிச சமத்துவக் கட்சியுடனும் இணைந்து அந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதில் எங்களுடன் இணையுமாறு உங்களை அழைக்கிறோம்,” என்று தேவராஜா கூடியிருந்த தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தை குழப்பும் முயற்சியை எதிர்த்திடுவோம்
இணையவழி மனு: இலங்கை ஓல்டன் தோட்டத்தில் 22 தொழிலாளர்கள் மீதான சோடிக்கப்பட்ட வழக்கை விலக்கிக்கொள்!
இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறு! வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்து!