இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.
கடந்த ஞாயிறு, இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தின் மஸ்கெலியா சாமிமலையில் உள்ள ஓல்டன் தோட்டத்தின் நிர்வாகம், தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவால் (PWAC) தோட்டத்தின் வேட்டையாடப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட மனுப் பிரச்சாரத்தை குழப்பும் முயற்சியில் தோல்வியடைந்தது.
ஹேலிஸ் குழுமத்தின் ஹொரண பெருந்தோட்டக் கம்பனியால் நிர்வகிக்கப்படும் இந்த தோட்டத்தில் 22 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை உடனடியாக விலக்கிக்கொள்ளுமாறு, சட்டமா அதிபருக்கு முகவரியிடப்பட்ட மனுவில் கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) ஆதரவுடன், தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு இந்தத் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தோற்கடிக்க இலங்கையிலும் ஏனைய இடங்களிலும் உள்ள தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இணையவழி மனு பிரச்சாரம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதுடன் மக்களின் கையெழுத்துகளை சேகரிக்க தொழிலாளர்கள் மத்தியில் மனுவின் பிரதிகளும் விநியோகிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சாரம் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களிடம் இருந்து உற்சாகமான ஆதரவைப் பெற்று வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள், ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டிருந்த போது, தோட்ட மருந்தகத்தில் பணிபுரிகின்ற நிர்வாகத்துடன் நெருங்கிய உறவைக் கொண்ட சந்தனம் சண்முகம் அங்கு வந்தார். தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட ஓல்டன் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடல் பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் சமீபத்தில் வெளியான கட்டுரையின் பிரதியை அவர் கையில் வைத்திருந்தார்,.
பிரச்சாரத்தை அனுமதித்ததற்காக தோட்ட நிர்வாகமும் பொலிசாரும் தன்னை 'குற்றம் சாட்டுவதாக' சண்முகம் கூறினார். “மனுப் பிரச்சாரம் சர்வதேச தேயிலை சந்தையில் கம்பனியின் தேயிலை விற்பனையை பாதிக்கிறது என்றும் இது தொழிலாளர்களையும் கடுமையாக பாதிக்கும் என்றும் நிர்வாகம் கூறியது. அதனால், சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனவே, தோட்டத்தில் உங்கள் பிரச்சாரத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
கட்டுரையில் பொய்கள் இருப்பதாக சண்முகம் கூறினார். ஆனால் நடவடிக்கை குழுவின் / சோலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்கள் சவால் செய்த போது, அவர் எதையும் சுட்டிக்காட்டவில்லை. பிரச்சாரகர்கள் அவரது அச்சுறுத்தல் 'கோரிக்கையை' ஏற்க மறுத்து, தங்கள் வேலையை தொடர்ந்தனர்.
கம்பனியின் தேயிலை விற்பனையையும் தொழிலாளர்களையும் பாதிக்கிறது என்ற சண்முகத்தின் கருத்துக்கள், தொழிலாளர்களை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டவையாகும். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது. நடவடிக்கை குழுவின் / சோலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக, 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மனுவில் கையெழுத்திட்டனர்.
தோட்ட நிர்வாகத்தினதும் பொலிசாரினதும் ஏஜன்டான சண்முகம், தோட்டத்தில் தொழிலாளர்கள், தொழிலாளர் நடவடிக்கை குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அவர்களுக்கு வழங்குகிறார்.
பிரச்சாரகர்கள் ஓல்டன் தோட்டத்திலிருந்து திரும்பிய பின்னர், நடவடிக்கை குழுவின் உறுப்பினரும் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த அரசாங்கத்தால் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில், மஸ்கெலியா பிரதேச சபைக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளருமான ஏ. பரிமளாதேவியின் மாமியார் வசிக்கும் வீட்டிற்கு வேறு நான்கு நபர்களுடன் சென்ற சண்முகம், சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டங்களிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டாம் என்று அவர்களை எச்சரித்தார்.
சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் கே. காண்டீபன் அவரின் வருகை பற்றி கேட்டபோது, சண்முகம் அதனை மறுத்த போதிலும், தான் ஓல்டன் தோட்டத்திலுள்ள பொலிஸ் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் என்பதையும் பொலிஸ் அதிகாரிகள் அவரைச் சந்திக்க அடிக்கடி வருவதாகவும் ஒப்புக்கொண்டார்.
இந்த நிர்வாகத்தினதும் பொலிசினதும் இந்த ஏஜன்ட் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் எச்சரிக்கின்றன. நிர்வாகத்தினதும் அரசாங்கத்தினதும் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், இந்த கண்காணிப்புக் குழுக்களுக்கு எதிராகத் தங்கள் பாதுகாப்பை ஒழுங்கமைப்பதற்கும் தொழிலாளர்கள் தமது சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
அதே நேரத்தில், நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் இந்த ஏஜன்டுகளுக்கு பயப்படவில்லை என்பதை வலியுறுத்துகிறோம். வேட்டையாடப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தையும் தோட்டத் தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம்.
இந்த சம்பவங்களுக்கு அடுத்த நாள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் அதிகாரி இந்த கட்டுரை ஆசிரியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நான் ஓல்டன் தோட்டத்திற்குச் சென்றிருந்தேனா, சோசலிச சமத்துவக் கட்சி அங்கு ஒரு கூட்டத்தை நடத்தப் போகிறதா என்று கேட்டார். ஓல்டன் தோட்டத்திற்குச் சென்றது பற்றி அவர் எதற்காக விசாரிக்கிறார், அவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்டபோது, அந்தத் தோட்டத்திற்கு ரோந்து வந்த பொலிஸாரிடமிருந்து தெருந்துகொண்டதாக அந்த அதிகாரி கூறினார்.
2021 பெப்ரவரி-மார்ச் மாதங்களில் 1,000 ரூபாய் நாள் சம்பளம் கோரி ஓல்டன் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்திற்குப் பிறகு, தொழிலாளர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரிக்க தோட்டத்தில் பொலிஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான பழிவாங்கலானது ஹொரண பெருந்தோட்டக் கம்பனி, பொலிஸ் மற்றும் பிரதான தோட்டத் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசினதும் கூட்டுச் சதியாகும்.
சுமார் 500 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் 2021 பெப்ரவரி 2 அன்று 1,000 ரூபா தினசரி சம்பளம் கோரி வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர். இதே கோரிக்கையை முன்வைத்து பெப்ரவரி 5 அன்று இ.தொ.கா. அழைப்பு விடுத்திருந்த தேசிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களுடன் அவர்கள் இணைந்து கொண்டனர்.
நிர்வாகத்தின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மார்ச் 26 வரை வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர். பெப்ரவரி 17 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் மீது சரீரத் தாக்குதல் நடத்தியதாகவும், முகாமையாளரின் வீட்டை சேதப்படுத்தியதாகவும் போலிக் குற்றச்சாட்டின் பேரில் 22 தொழிலாளர்களும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
எந்த விசாரணையும் இல்லாமல், கைது செய்யப்பட்ட 22 பேர் உட்பட 34 தொழிலாளர்கள் எந்த விசாரணையும் இல்லாமல் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பழிவாங்கலில் ஒத்துழைத்த இ.தொ.கா., பெப்ரவரி 17 சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தொழிலாளர்களின் பெயர்களை வழங்கியது. கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் பின்னர் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீதான நீதிமன்ற வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்க சட்டமா அதிபர் திணைக்களமும் பொலிஸாரும் தவறியுள்ளனர். அடுத்த விசாரணை ஜூன் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் மட்டுமே, அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வரும் துன்பங்களுக்கு உரிய இழப்பீட்டுடன் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்தப்பட வேண்டும் என்று கோரி இந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றன.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடல், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
2021 ஜூனில், ஹட்டனில் உள்ள வெலிஓயா தோட்டத்தில் பதின்மூன்று தொழிலாளர்கள் கோவிட்-19 பூட்டுதலின் போது அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட உணவு நிவாரணம் கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
29 செப்டெம்பர் 2021 அன்று, பொ. பொன்னிறச்செல்வி என்ற தொழிலாளி தோட்ட நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் வேலை நிறுத்தம் செய்த 11 தொழிலாளர்களை பொலிசார் கைது செய்தனர். இ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த தொழிலாளர்களை பாதுகாக்க மறுத்துள்ளன.
இந்த ஆண்டு மார்ச் 29 அன்று, விக்கிரமசிங்க அரசாங்கம் தனியார்மயமாக்கலுக்கு எதிராக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய இராணுவத்தையும் பொலிஸாரையும் அனுப்பியதுடன், தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்த பழிவாங்கலும் தொடர்கிறது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பல அரச நிறுவனங்களில் போராட்ட நடவடிக்கையை தடை செய்யும் அத்தியாவசிய சேவைகள் சட்ட விதிமுறைகளின் கீழ் தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பெட்ரோலியத் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் மற்றும் பெருந்தோட்டங்களில் செயல்படும் தொழிற்சங்கங்கள் உட்பட எந்த ஒரு தொழிற்சங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிகரித்து வரும் அரசாங்க அடக்குமுறைகளுக்கு மத்தியில், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்கள் மீதான தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. தேயிலை கொழுந்துகளை பறிப்பதற்கான தினசரி இலக்குகள் தாங்க முடியாத அளவிற்கு 18 முதல் 20 கிலோகிராம் வரை அல்லது 16 முதல் 18 கிலோகிராம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் இலக்கை அடைய முடியாவிட்டால், அவர்கள் தினசரி சம்பளத்தில் பாதியை இழக்கிறார்கள்.
அதேநேரம், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் உற்பத்தித்திறன் அடிப்படையிலான வருமானப் பங்கீடு முறைமையை அறிமுகப்படுத்துவதை முடுக்கிவிட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு சுமார் 1,500 தேயிலைச் செடிகள் கொண்ட நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. உரம் மற்றும் விவசாய இரசாயனங்களை கம்பனி வழங்குகின்றது. தேயிலைக் கன்றுகளை பராமரிப்பதும் அறுவடை செய்வதும் தொழிலாளர்களின் பொறுப்பாகும். அந்த உள்ளீடுகளின் பெறுமதி மற்றும் கம்பனிக்கான ஒரு பங்கைக் கழித்த பின்னர், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரு தொழிலாளியின் மொத்த குடும்பமும் கம்பனிகளின் இலாபத்திற்காக, இந்த அமைப்பில் கீழ் வியர்வையையும் இரத்தத்தையும் சிந்த வேண்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கனத் திட்டத்தின் கீழ், விக்கிரமசிங்க அரசாங்கம் 21 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் உட்பட 430 அரச நிறுவனங்களை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளது. இது சுமார் 150,000 தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உட்பட 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும். தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் குறைந்த ஊதியம் பெறும் பிரிவுகளில் ஒன்றாகும். அவர்கள் தோட்ட மறுசீரமைப்பின் கீழ் வேலை இழப்புகள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் மிகவும் கொடூரமான வேலை நிலைமைகள் உட்பட அதிக தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள்.
இந்தத் தாக்குதல்களை எதிர்த்துப் போராட, தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த அமைப்புக்கள் தேவை. அதாவது, நாட்டிலும் சர்வதேச அளவிலும் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுவதற்கு, தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக, அவர்களின் சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவது அவசியமாகும்.
அதே நேரம், இணையவழி மனுவில் கையொப்பமிட்டும், இலங்கையில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உங்களின் எதிர்ப்பு அறிக்கைகளை அனுப்புவதன் மூலமும் பழிவாங்கப்படும் ஓல்டன் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு இலங்கை மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்களுக்கு, தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் வேண்டுகோள் விடுக்கின்றன:
சட்டமா அதிபர்
திரு. சஞ்ஜை இராஜரத்தினம்
இல. 159, புதுக்கடை, கொழும்பு 12
மின்னஞ்சல்: administration@attorneygeneral.gov.lk
செயலாளர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
திரு. பி.வி. குணதிலக
மின்னஞ்சல்: civilsecurity@defence.lk
பொலிஸ்மா அதிபர்.
திரு. சி.டி. விக்கிரமரத்ன
மின்னஞ்சல்: telligp@police.lk
தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவுக்கும் பிரதிகளை அனுப்பி வையுங்கள்:
மின்னஞ்சல்: plantationacsl@gmail.com
இலங்கை தோட்ட நிறுவனம் 38 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்கிறது