இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
லியோன் ட்ரொட்ஸ்கி 8 அக்டோபர் 1923 அன்று ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவினதும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்தினதும் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதமானது, சோவியத் ஒன்றியத்தில் வளர்ந்து வரும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு இடது எதிர்ப்பு (Left Opposition) அணியை உருவாக்குவதற்கு அடித்தளமாக இருந்த மிக முக்கியமான அரசியல் ஆவணங்களில் ஒன்றாகும். இந்த மொழிபெயர்ப்பு முதன் முதலில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கால் (Workers League-தொழிலாளர் கழகம்) 18 அக்டோபர் 1993 அன்று வெளியிடப்பட்ட இன்டர்நஷனல் வேர்கரஸ் புல்லட்டினில் (International Workers Bulletin-சர்வதேச தொழிலாளர் பத்திரிகை) வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு இஸ்வெஸ்டியா ரிஎஸ்கே கேபிஎஸ்எஸ் (Izvestiia TsK KPSS) இதழின் 1990 மே பதிப்பில் -பக்கங்கள் 165-175- வெளியான இந்த கடிதத்தின் முதல் முழுமையான ரஷ்ய வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆவணத்தைப் புரிந்துகொள்வதற்கு வசதியாக மொழிபெயர்ப்பு மற்றும் குறிப்புகள் சிறிது திருத்தப்பட்டுள்ளன. இது எழுதப்பட்ட வரலாற்றுப் பின்னணியை விளக்கும் இந்த ஆவணத்தின் அறிமுகத்திற்கு, டேவிட் நோர்த் எழுதிய “இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து“ என்ற கட்டுரையை பார்க்கவும்.
8 அக்டோபர் 1923
முற்றிலும் இரகசியமானது
மத்திய குழு (CC) மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்தின் (CCC) உறுப்பினர்களுக்கு[1]
1. தோழர் ஸெர்சன்ஸ்கியின்[2] ஆணையத்தின் (வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற விஷயங்கள் பற்றிய) முன்மொழிவுகளில் ஒன்று, கட்சிக்குள் குழுக்களைப் பற்றி அறிந்த கட்சி உறுப்பினர்கள் உடனடியாக ஜிபியு, மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு தெரிவிக்க கட்டாயப்படுத்துவது அவசியம் என்று கூறுகிறது. கட்சி அமைப்பிற்கு அதன் அணிகளுக்குள் விரோதமான பிரிவுகள் செயல்படுகின்றன என்பதைத் தெரிவிப்பது, ஒவ்வொரு கட்சி உறுப்பினரின் அடிப்படைக் கடமையாதாலால், அக்டோபர் புரட்சிக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அது குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. அத்தகைய தீர்மானத்தின் தேவை எழுந்துள்ளமை, ஏனைய தெளிவான அறிகுறிகளுடன் சேர்ந்த, மிகவும் சிக்கலான அறிகுறியாகும். அத்தகைய தீர்மானத்தின் தேவை பின்வருவனவற்றைக் குறிக்கின்றது: அ) புரட்சிக்கு ஆபத்தானவையாக மாறக்கூடிய சட்டவிரோத எதிர்ப்புக் குழுக்கள் கட்சிக்குள்[3] உருவாகியுள்ளதுடன் ஆ) அத்தகைய குழுக்களைப் பற்றி அறிந்த தோழர்கள் அவர்களைப் பற்றி கட்சி அமைப்புக்குத் தெரிவிக்காமல் இருக்க அனுமதிக்கும் மனநிலைகள் கட்சியில் உள்ளன. மத்தியக் குழுவின் அறிக்கைகளில் கட்சியின் 90 சதவீதம் முழு ஒற்றுமை பிரகடனப்படுத்தப்பட்ட பன்னிரெண்டாவது மாநாட்டில் காலத்திலிருந்து கட்சிக்குள் நிலைமை தீவிரமாக மோசமடைந்து வருவதற்கு இந்த இரண்டு உண்மைகளும் சான்றளிக்கின்றன. இந்த மதிப்பீடு அந்த நேரத்தில் கூட நம்பிக்கையுடன் மிகைப்படுத்தப்பட்டது என்பது உண்மைதான். பன்னிரெண்டாவது மாநாடு[4] கூட்டப்பட்ட வழிமுறைகள் மற்றும் வளங்கள் குறித்து ஆழ்ந்த எச்சரிகையில் இருந்த, எந்த வகையிலும் மோசமானவர்கள் அல்லாத, பல உறுப்பினர்கள் கட்சியில் உள்ளனர். காங்கிரஸிற்கு வந்திருந்த பெரும்பான்மையான பிரதிநிதிகள் அத்தகைய எச்சரிக்கையால் நிரம்பியிருந்தனர். சர்வதேச நிலைமையும் குறிப்பாக லெனினின் நோய்வாய்ப்பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டு, கட்சியின் பெரும்பான்மையானவர்கள் புதிய மத்திய குழுவிற்கு ஆதரவளிக்க முழுமையாகத் தயாராக இருந்தனர் என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. முதலில் பொருளாதாரத் துறையில் கட்சியின் ஒருமித்த மற்றும் வெற்றிகரமான பணிக்கான சாத்தியத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற இந்த விருப்பம்தான், கட்சியில் உள்ள குழுக்களை சுமூகமாக்கியதுடன் பலர் தங்கள் அதிருப்தியை அடக்கவும், காங்கிரஸின் தீர்ப்பாயத்திடமிருந்து தங்கள் நியாயமான கவலையை வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவும் கட்டாயப்படுத்தியது. எவ்வாறாயினும், புதிய மத்திய குழுவின் ஆறு மாத பணி, பன்னிரெண்டாவது மாநாடு கூட்டப்பட்ட முறைகள் மற்றும் வளங்கள் பற்றிய பிரச்சினையை தீவிரப்படுத்தியது [ஏப்ரல் 1923]. இதனால் கட்சிக்குள் ஏற்பட்ட விளைவு, கட்சிக்குள் வெளிப்படையாக விரோதமான மற்றும் கசப்பான குழுக்கள் உருவானதும், இந்த ஆபத்தைப் பற்றி அறிந்துள்ள மற்றும் இன்னும் அதைப் பற்றி அமைதியாக இருக்கும் பல பிரிவுகள் இருப்பதும் ஆகும். கட்சிக்குள்ளான நிலைமையின் கூர்மையான சீரழிவு, கட்சிக்கும் மத்திய குழுவுக்கும் இடையில் இடைவெளி விரிவடைந்து வருவது ஆகிய இரண்டையும் இங்கே நாம் காண்கிறோம்.
2. கட்சிக்குள்ளான நிலைமை தீவிரமாக சீரழிவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: அ) அடிப்படையில் பிழையானதும் ஆரோக்கியமற்றதுமான உள் கட்சி ஆட்சி மற்றும் ஆ) புறநிலை சிக்கல்களின் விளைவாக மட்டுமல்லாமல், பொருளாதாரக் கொள்கையின் வெளிப்படையான அடிப்படை தவறுகளின் விளைவாகவும் உருவாகியுள்ள கடுமையான பொருளாதார நிலைமை குறித்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அதிருப்தி. பின்வருவனவற்றில் தெளிவாகத் தெரிய வரும் இந்த இரண்டு காரணங்களும், ஒன்றோடொன்று நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.
3. பன்னிரெண்டாவது மாநாடு ஸ்மிச்கா (smychka) [தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டணியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்] என்ற சுலோகத்தின் கீழ் கூடியது. தொழில்துறை பற்றிய ஆய்வறிக்கைகளை[5] எழுதியவர் என்ற முறையில், துல்லியமாக நமது நோக்கம் அரச உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான உறுதியான மற்றும் இன்றியமையாத கடமைகளை நோக்கி “கட்சியின் கவனத்தையும் விருப்பத்தையும் திருப்புவதற்கு” அழைப்பு விடுப்பதை உள்ளடக்கி இருக்கின்ற போது, பன்னிரெண்டாவது மாநாட்டில் நமது பொருளாதாரப் பணிகள் ஒரு அருவமான-கிளர்ச்சி வடிவத்தில் முன்வைக்கப்பட்டால் ஏற்படக் கூடிய பிரமாண்டமான ஆபத்தை நான் மாநாடு நடப்பதற்கு முன்பே மத்திய குழுவுக்கு சுட்டிக்காட்டினேன். இந்தக் கேள்வி குறித்து அக்காலத்தில் அரசியல் குழுவுக்குள்[6] பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதப் பரிமாற்றத்துடன் தங்களை பரீட்சையப்படுத்திக்கொள்ளுமாறு மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்த மட்டுமே என்னால் முடியும்.” எங்களுடைய விவாதத்தில், (திட்டமிடப்பட்ட பொருளாதாரம்; தொழில்துறையின் கூர்மையான செறிவு; தொழில்துறை மற்றும் வர்த்தக நடைமுறைப்படுத்தலிலான மட்டுமீறிய செலவுகளை கூர்மையாகக் குறைத்தல் போன்ற) அதன் உண்மையான பொருளாதார உள்ளடக்கத்தை புறக்கணிக்கும் அதே வேளை, வெறுமனே தெளிவுபடுத்துவதற்கான மற்றும் ஸ்மிச்கா என்ற சுலோகத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்துடன் தொழில்துறையின் நிறுவன பணிகள் குறித்த அறிக்கையை முன்வைப்பதானது அதன் நடைமுறை முக்கியத்துவத்தை அகற்றிவிடும் என்பதை நான் நிரூபித்தேன். எவ்வாறாயினும், அமர்வின் வற்புறுத்தலின் பேரில், நான் வழங்கிய அறிக்கையில், தோழர் லெனின் இல்லாமல் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கால மத்திய குழுவின் பணியை சிக்கலாக்குவதைத் தவிர்க்க என் சார்பில் நான் முயற்சித்தேன்.
4. தொழில்துறை பற்றிய தீர்மானமானது[7] கொஸ்ப்ளன் [Gosplan-அரச திட்டமிடல் குழு] அமைப்பை பலப்படுத்தவும் வலுவூட்டவும் திட்டமிடலின் முன்னணி அங்கமாக அதை ஒருங்கிணைக்கவும் கோருகிறது. பன்னிரெண்டாவது மாநாட்டிற்குப் பிறகு, தோழர் லெனின் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தபோது எழுதப்பட்ட குறிப்பை மத்தியகுழு தன் வசம் பெற்றது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இங்கே அவர் கொஸ்பிளனுக்கு சட்டமியற்றும் (அல்லது, இன்னும் துல்லியமாக, நிர்வாக-மேலாண்மை) உரிமைகளைக் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த கருத்தை வெளிப்படுத்துகிறார்.[8] இருப்பினும், உண்மையான விடயம், மாநாட்டிற்குப் பிந்தைய காலகட்டத்தில், கொஸ்ப்ளன் இன்னும் பின்னணிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு பணிகளில் அதன் பணி பயனுள்ளதாகவும் அவசியமானதாகவும் இருந்த போதிலும், பன்னிரெண்டாவது மாநாட்டில் நிறுவப்பட்ட வடிவத்திலான திட்டமிட்ட பொருளாதார ஒழுங்குமுறையுடன் எந்தவகையிலும் பொதுவானதாக இருக்கவில்லை. திட்டத்தின் ஒத்திசைவின்மை மத்திய மற்றும் பொதுவாக மிகவும் அடிப்படையான அரச-பொருளாதார அமைப்புகளின் பணிகளில் மிகவும் வெளிப்படையான வடிவங்களை எடுக்கிறது. பன்னிரெண்டாவது மாநாட்டுக்கு முன்பு இருந்ததைவிட, தேவையான தயாரிப்பு இன்றியும் திட்டத்துடனான அவற்றின் தொடர்புக்கு புறம்பாகவும் மிக முக்கியமான பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் குழுவில் அவசர அவசரமாகத் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அரசுத் தொழில்துறைக்கு பொறுப்பாக இருக்கும் தோழர்கள் ரைகோவ் மற்றும் பியாடகோவ்[9] (தோழர் ரைகோவ் முழு பொருளாதாரத்துக்கும் பொறுப்பாக உள்ளார்) செப்டம்பர் 19 அன்று மத்திய குழுவுக்கு ஒரு அறிக்கையை அனுப்பினார்கள். அதில் அவர்கள், “வளர்ச்சியடைந்துள்ள நிலைமைகளின் கீழ், அரசியல் குழுவின் பல முடிவுகள், எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அரசுத் தொழில்துறையை திசைவழிப்படுத்துவதை மிகவும் கடினமாக்கி வருகிறது என்ற விடயத்தில் கவனத்தை திருப்ப எங்களை நிர்ப்பந்தித்துள்ளது,” என்று எச்சரிக்கையுடன் கூறுகிறார்கள். இந்த விடயம் குறித்து இந்த அமர்வில் விவாதத்தைத் தொடங்குவது விவேகமானாதக இருக்காது என்று கருதி, நான் பெயரிட்ட தோழர்கள் தங்கள் கடிதத்தை விநியோகிக்க மறுத்தது உண்மைதான். ஆனால் (அவர்களின் கடிதத்தை அனுப்ப மறுத்த) இந்த உத்தியோகபூர்வ சூழ்நிலை, பொருளாதார நடவடிக்கைகளின் இயக்குநர்கள் பொருளாதார பிரச்சினைகளில் அரசியல் குழுவின் கொள்கையை, பொருளாதாரத்தின் எந்தவொரு திட்டமிட்ட திசைவழிப்படுத்தலையும் “மிகவும் கடினமாக்குகின்ற” தற்செயலான, முறையற்ற முடிவுகளின் கொள்கையாக வகைப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை எந்த வகையிலும் மாற்றவில்லை. தனிப்பட்ட உரையாடல்களில், இந்த மதிப்பீடு ஒப்பிடமுடியாத தெளிவான தன்மையைப் பெறுகிறது. பொருளாதாரப் பிரச்சினைகளை அவற்றின் உள் தொடர்புகளிலும் தேவையான கண்ணோட்டத்துடனும் ஆராய்ந்து தீர்க்கும் எந்தவொரு தரப்போ அல்லது சோவியத் அமைப்போ இல்லை. முற்றிலும் துல்லியமாகச் சொல்வதானால், பொருளாதாரத்திற்கு திசை இல்லை, குழப்பம் மேலிருந்தே தொடங்குகிறது என்பதை நாம் சொல்லியாக வேண்டும்.
5. இக்கடிதத்தின் கட்டமைப்புக்குள், நிதி, தொழில்துறை, தானிய கொள்முதல், தானிய ஏற்றுமதி அல்லது வரிகள் ஆகிய துறைகளில் நமது கொள்கையைப் பற்றி ஒரு உறுதியான பகுப்பாய்வை செய்ய நான் முயற்சிக்க மாட்டேன். ஏனெனில் இதற்கு நிறைய விஷயங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மிகவும் சிக்கலான வாதத்தை அபிவிருத்திசெய்ய வேண்டியிருக்கும். இன்றைய வர்த்தக மற்றும் தொழில்துறை நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, உதாரணமாக ஒரு பொது பொருளாதாரத் திட்டத்திற்கு கீழ்ப்படுத்தப்படாத, நமது நிதிக் கொள்கையின் தன்னிறைவு பண்பே ஆகும், என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அரச பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு போதாமையால் தொழில்துறையில் தனி பெரும் வெற்றிகள் தடைபடுகின்றன அல்லது தடைபடும் அபாயத்தில் உள்ளன; மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கையின் தன்மையின் காரணமாக, அரசுத் தொழில்துறை மற்றும் அரசு வர்த்தக துறையில் ஏற்படும் ஒவ்வொரு தடங்கல்களும் அரசு மூலதனத்தின் இழப்பில் தனியார் மூலதனத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது. தற்போதைய தருணத்தை பிரதானமாக குணாம்சப்படுத்துவது எதுவெனில், விவசாய மற்றும் தொழில்துறை பொருட்களின் விலைகளுக்கு இடையே துரிதமாக அதிகரித்து வரும் வேறுபாடு, புதிய பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விவசாயியைப் பொறுத்தளவில், அந்தக் கொள்கை அகற்றப்பட்டுவிட்டது என்பதாகும். தன்னால் கொள்வனவு செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம், அரச ஆணையால் வர்த்தகம் தடை செய்யப்பட்டிருப்பதாலா, அல்லது இரண்டு தீப்பெட்டிகளுக்கு ஒரு பூட் [36 இறாத்தல்கள்/பவுண்டுகள்] தானியத்தின் விலையைப் போல் செலவிட வேண்டியிருப்பதாலா என்பதைப் பற்றி விவசாயி கவலைப்படவில்லை. தொழில்துறைக்கு வாழ்வா சாவா பிரச்சினையான ஒருமுகப்படுத்தலானது, ஒவ்வொரு அடியெடுப்பிலும் “அரசியல்” (அதாவது உள்ளூர்) தேவைகளுக்கு எதிராக மோதி, தொழில்துறை பொருட்களின் விலை அதிகரிப்பை விட மிக மெதுவாக நகர்கின்ற விதம் பற்றிய வரைபடத்தை நான் இப்போது வரையத் தொடங்க மாட்டேன். ஆனால், முழு பிரச்சினைக்கும் மிகத் தெளிவான விளக்கத்தை அளிக்கின்ற பிரச்சினையின் ஒரு சிறிய அம்சத்தைக் கையாள்வது அவசியம் என்று நான் உணர்கிறேன். சரியான திட்டம், வழிமுறை மற்றும் சரியான கட்சி நிலைப்பாடும் இல்லாத நிலையில், கட்சியால் மேற்கொள்ளப்படும் பொருளாதார இயக்கம் எந்தளவுக்கு சீரழிகின்றது என்பதைக் காட்டுகிறது. பன்னிரெண்டாவது மாநாட்டில், கட்சியின் பல அமைப்புகளினால் மேற்கொள்ளப்படும் தொழில்துறை மற்றும் வணிக விளம்பரங்கள் திகைப்பூட்டக்கூடிய துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்தியது.[10] இந்த துஷ்பிரயோகத்தின் உள்ளியல்பு எத்தகையது? பொருளாதார அமைப்புகளுக்கு உயர்ந்த அளவிலான விழிப்புணர்வையும், துல்லியத்தையும், சிக்கனத்தையும், பொறுப்பையும் கற்பிப்பதன் மூலம் வழிநடத்த வேண்டிய சில கட்சி அமைப்புகள், உண்மையில் அரசாங்கத்தை ஏமாற்றுவதற்கு மிக மோசமான மற்றும் மிகவும் வீணான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் அவற்றை சீரழிக்கின்றன: அதாவது சட்டவிரோதமானதாக இருந்தாலும் குறைந்தபட்சம் அர்த்தமுள்ளதாக இருக்கக் கூடியவாறு, கட்சி அமைப்புகளின் நலனுக்காக தொழில்துறை நிறுவனங்களுக்கு சாதாரணமாக வரி விதிப்பதற்குப் பதிலாக, காகிதம், அச்சு கோர்ப்பு வேலை போன்ற ஏனையவற்றிலும் வீண்விரயத்தை ஏற்படுத்துகின்ற அபத்தமான விளம்பரங்களை பலாத்காரமாக பெற்றுக்கொள்வதன் பக்கம் அவர்கள் திரும்பியுள்ளனர். இவை அனைத்திலும் மிகவும் கேவலமான விஷயம் என்னவென்றால், தொழிற்சாலை முகாமையாளர்கள் இந்த சூறையாடல் மற்றும் இழிவுபடுத்தும் செயலை எதிர்க்க முடிவு செய்யாமல், நகரக் குழுவின் செயலாளரின் நிச்சயமான உத்தரவுகளின்படி “கம்யூனிஸ்ட்வாதிகளின் நண்பர்” ஒருவரின் பத்திரிகையில் அரைப் பக்க அல்லது முழுப் பக்க விளம்பரத்திற்கு கீழ்ப்படிந்து பணம் செலுத்துகிறார்கள். அதை மறுக்கும் தைரியம் எந்த அதிகாரிக்கும் இருந்தால், அதாவது, கட்சியின் கடமையைப் பற்றி அவர் உண்மையான புரிதலைக் காட்டினால், அவர் உடனடியாக பின்விளைவுகளுடன் “கட்சியின் தலைமையை” அங்கீகரிக்காதவர்களில் ஒருவராக வகைப்படுத்தப்படுவார். பன்னிரெண்டாவது மாநாட்டுக்குப் பிறகு, ஒரு சில தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைத் தவிர, இந்தப் பகுதியில் நிலைமை மேம்படவில்லை. இந்த வகையான பொருளாதார “தலைமைத்துவத்தை” குருட்டு கண்களால் பார்ப்பதற்கு அல்லது அத்தகைய நிகழ்வுகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று கருதுவதற்கு, ஒரு நபர் சரியான பொருளாதாரக் கொள்கை மற்றும் பொறுப்புணர்வு என்றால் என்ன என்பதைப் பற்றி எதுவும் புரியாதவராய் இருக்க வேண்டும்.
6. பன்னிரெண்டாவது மாநாடு, ஒட்டுமொத்தக் கட்சியுடன் சேர்ந்து, பொருளாதார அமைப்புகளின் மீது, கட்சியின் வழிநடத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் செல்வாக்கை வலுப்படுத்த முயன்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக முகாமையாளர்களின் பொருளாதாரப் பணிகளின் வழிமுறைகள் மற்றும் பெறுபேறுகளுக்குமான உண்மையான பொறுப்பை அவர்களிடமே ஒப்படைக்கும் நோக்கத்தில் செயற்பட்டிருந்தன. ஆனால், துல்லியமாக இந்த திசையில்தான் (முன்முயற்சி, பொருளாதாரமயமாக்கல், பொறுப்பு போன்றவற்றில்) சாதனைகள் மிகக் குறைவாகவே உள்ளன. அடிப்படையில் பல பொருளாதார உறுப்புகளின் வீண்விரயம் மற்றும் பொறுப்பற்ற தன்மையாலேயே வெகுஜனங்களின் அதிருப்தி ஏற்படுகிறது. அவற்றின் தலைவர்கள் (அர்த்தமற்ற விளம்பரங்கள் மற்றும் பிற மிரட்டல்களின் வடிவத்தில்) கட்சியின் “தலைமைத்துவம்” என்று அழைக்கப்படுபவதற்கு மிகவும் விருப்பத்துடன் அடிபணிந்துள்ளதால், அவர்களின் அடிப்படை நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவொரு உண்மையான கட்டளை அல்லது கட்டுப்பாட்டிற்கும் அப்பால் முன்பு போலவே உள்ளன.
7. மத்திய குழுவின் இன் கடைசி அமர்வானது செலவுகளைக் குறைப்பதற்கும் விலைகளைக் குறைப்பதற்கும் ஒரு அசாதாரண ஆணையத்தை உருவாக்கியது.[11] இந்த உண்மை, நமது பொருளாதாரப் பணியின் தவறான தன்மைக்கு ஒரு கொடூரமான சாட்சியாகும். விலை நிர்ணயத்தின் அனைத்து கூறுகளும் சரியான நேரத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டன, உற்பத்தி செலவுகள் மற்றும் வர்த்தக செலவுகளைக் குறைப்பது குறித்த பன்னிரெண்டாவது மாநாட்டின் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.[12] இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டிய அமைப்புகள் நன்கு அறியப்பட்டவை ஆகும்: மக்கள் பொருளாதாரத்தின் அதிஉயர் சோவியத்தான கொஸ்ப்ளன் (அரச திட்டமிடல் குழு), தொழிலாளர் மற்றும் பாதுகாப்பு சோவியத் மற்றும் அரசியல் குழுவும், முன்னணி அரசியல் அமைப்பாகும். இந்த சூழ்நிலையில் ஒரு அசாதாரண ஆணையத்தை உருவாக்குவதன் அர்த்தம் என்ன? ஆகவும் குறைந்த செலவில் உற்பத்தி செய்வதே நேரடிப் பணியாக இருந்த நிலையான அமைப்புகள், தேவையான முடிவுகளை வழங்கத் தவறிவிட்டன என்பதே உண்மை. ஒரு அசாதாரண ஆணையத்தால் என்ன சாதிக்க முடியும்? பக்கத்திலிருந்து செயல்படுவதன் மூலம், விஷயங்களை அங்கும் இங்கும் நகர்த்தலாம், சரியான திசையில் ஒரு உந்துதலைக் கொடுக்கலாம், சில நடவடிக்கைகளை வலியுறுத்தலாம், இறுதியாக, நிர்வாக ரீதியாக பல்வேறு விலைகளைக் குறைக்க உத்தரவிடலாம். ஆனால், அரசியல் அழுத்தத்தின் செல்வாக்கின் கீழ், அரசாங்க முகமைகள் விலைகளை இயந்திரத்தனமாகக் குறைப்பது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இடைத்தரகர்களை மட்டுமே வளப்படுத்துவதோடு விவசாய சந்தையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பது முற்றிலும் தெளிவாகிறது. கத்தரிக்கோலை மூடுவதானது[13] அதாவது, உண்மையான மற்றும் நேர்மையான பொருளாதார ஸ்மிச்காவை (தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டணியை) கையாள்வதை, உள்ளார்ந்த முறையில் மட்டுமே செய்ய முடியும்: அதாவது கண்டிப்பான முறையில் திட்டமிடப்பட்ட ஒருமுகப்படுத்தல், உள்ளார்ந்த முறையில் அவசரப்படாமல் உற்பத்தி செலவுகளைக் குறைத்தல் மற்றும் அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளின் வழிமுறைகள் மற்றும் பெறுபேறுகளுக்காக முகாமையாளர்களின் திறமையான பொறுப்பை உத்தரவாதம் செய்வதன் மூலமே செய்ய முடியும். விலைகளைக் குறைப்பதற்கான ஒரு ஆணையத்தை உருவாக்குவதே தெளிவானது, அதே நேரத்தில், திட்டமிடப்பட்ட, நெகிழ்வான ஒழுங்குமுறையின் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்கும் கொள்கை, அதன் சொந்த தவிர்க்க முடியாத விளைவுகளின் செல்வாக்கின் கீழ், மீண்டும் போர்க்கால கம்யூனிசத்தின் கீழ் போல விலைகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்பதற்கான பேரழிவுகரமான சான்றாகும். ஒன்று மற்றொன்றுக்கு வழிவகுக்கிறது, பொருளாதாரத்தை குணப்படுத்துவதற்கு பதிலாக பலவீனப்படுத்துகிறது.
8. உண்மையான பொருளாதார உறவுகளுடன் பொருந்தாததால், சுமையாக இருக்கும் ஒற்றை வரி சுமையுடன் சேர்க்கப்பட்ட மாபெரும் விலை ஏற்றத்தாழ்வு, மீண்டும் விவசாயிகளிடையே தீவிர அதிருப்தியைத் தூண்டியுள்ளது. பிந்தையது நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிலாளர்களின் மனநிலைகளில் பிரதிபலிக்கிறது. இறுதியாக, தொழிலாளர்களின் மாறிய மனநிலை கட்சியின் கீழ் மட்டங்களுக்கும் பரவியுள்ளது. எதிர்ப்புக் குழுக்கள் உயிர் பெற்று பலம் பெற்றுள்ளன. அவர்களின் அதிருப்தி கூர்மையடைந்துள்ளது. இவ்வாறு, ஸ்மிச்காவானது விவசாயி முதல்-தொழிலாளி வழியாக-கட்சி வரை-அதன் பின்புறத்தை நமக்குக் காட்டியுள்ளது. இதை யார் முன்பே முன்கூட்டியே கணிக்கவில்லையோ, அல்லது யார் சமீப நாட்கள் வரை கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் ஒரு வரைபட பாடத்தைப் பெற்றுள்ளனர். அரச உற்பத்தியை நியாயமாக நிர்வகித்து கத்தரிக்கோல்களை மூடுதல் என்ற மையப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இல்லாவிட்டால், ஸ்மிச்காவின் பொதுவான கிளர்ச்சி சூத்திரங்கள், நேரடியாக எதிர் முடிவுகளைத் தருகின்றன. பன்னிரெண்டாவது மாநாட்டுக்கு முன்னதாக அரசியல் குழுவிற்குள் ஏற்பட்ட கூர்மையான மோதலின் சாராம்சம் இதுதான். இந்த வாதத்திற்கு வாழ்க்கை மறுக்க முடியாத பதிலை அளித்துள்ளது. பொருளாதாரக் காரணிகளுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு திட்டமிடப்பட்ட அணுகுமுறை பற்றிய சரியான கணக்கீட்டை அணுகும் ஏதேனும் இருந்திருந்தால், நான்கில் மூன்று பங்கு இல்லையென்றால் குறைந்தது பாதியையாவது தவிர்த்திருக்க முடியும் என்பதே நாம் தீர்க்கத் தொடங்காத இந்த கொடூரமான பாடம் ஆகும்.
9. புதிய மத்தியக் குழுவின் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாக, பன்னிரெண்டாவது மாநாடானது முகாமையாளர்களை மேலிருந்து கீழ் வரை கவனமாக தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுப்பதை சுட்டிக்காட்டியது.[14] எவ்வாறாயினும், பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஓர்க்பியூரோவின் [Orgburo-நிறுவன பணியகம்] கவனம் முற்றிலும் மாறுபட்ட வழிகளில் செலுத்தப்பட்டது. கட்சியின் உறுப்பினர்களை நியமிப்பது, அகற்றுவது அல்லது இடமாற்றம் செய்வது என எல்லாவற்றிலும் மிக மதிப்பிடப்பட்டது என்னவென்றால், நிறுவன பணியகம் மற்றும் மத்திய குழுவின் செயலகம் மூலம் நடத்தப்படும் உள்-கட்சி ஆட்சியை பராமரிக்க, இரகசியமாகவும் அதிகாரப்பூர்வமின்றியும், ஆனால் மிகவும் ஆக்ரோஷமாகவும், அவர்கள் எந்த அளவிற்கு உதவக்கூடும் அல்லது எதிர்க்கக் கூடும் என்பது தான். பன்னிரெண்டாவது கட்சி மாநாட்டில், மத்திய குழுவானது “சுயாதீனமான” 15 நபர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த வார்த்தைக்கு இப்போது மேலதிக வர்ணனை தேவையில்லை. இதற்குப் பிறகு, குப்கொம் [gubkom-மாகாணக் குழு] செயலாளர்களின் பொதுச் செயலகம்[16] மற்றும் அதற்கு அப்பால், மேலிருந்து கீழ் வரை, மிகச் சிறிய கட்சி பிரிவு வரை செயலாளர்களை நியமிக்கும் போது “சுதந்திரம்” என்ற அளவுகோலை முன்வைப்பது தொடங்கியது. மேற்கூறிய வார்த்தையின் அர்த்தத்தில் சுயாதீனமாக இருக்க செயலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தோழர்களிடமிருந்து கட்சி உயர்மட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கான இந்த செயல்முறை, கேள்விப்படாத முயற்சியுடன் தொடர்கிறது. நூற்றுக்கணக்கான முக்கிய நிகழ்வுகள் பற்றி முழு கட்சிக்கும் தெரிந்தும் பேசிக்கொண்டும் இருக்கும்போது, இங்கு தனித்தனி உதாரணங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நான் உக்ரேனை மட்டுமே சுட்டிக்காட்டுவேன், அங்கு வரவிருக்கும் மாதங்களில் இந்த உண்மையான சீர்குலைக்கும் வேலையின் கடுமையான விளைவுகளை நாம் அனுபவிக்காமல் இருக்க முடியாது.[17]
10. போர் கம்யூனிசத்தின் மிகவும் கடுமையான தருணங்களில், கட்சியில் மேல் இருந்தான நியமனம், இப்போது இருப்பதைப் போல பத்தில் ஒரு பங்கு பரவலாக இல்லை. மாகாணக் குழு செயலாளர்களை நியமிப்பது இப்போது விதியாக மாறியுள்ளது. இது, அடிப்படையில் செயலாளர்கள் உள்ளூர் அமைப்பிலிருந்து சுயாதீனமாக இருக்கும் நிலைமையை உருவாக்குகிறது. அவர் எதிர்ப்பு, விமர்சனம் அல்லது அதிருப்தியை எதிர்கொண்டால், செயலாளர் மையத்தை நம்புவதன் மூலம் இடமாற்றத்தை நாட முடியும். அரசியல் குழுவின் அமர்வுகளில் ஒன்றில், மாகாணங்கள் ஒன்றிணைக்கப்படும்போது, ஐக்கிய மாகாணக் குழுக்களின் செயலாளராக யார் இருப்பார் என்பது மட்டுமே அமைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதில் ஆர்வமுள்ள ஒரே கேள்வி என்று திருப்தியுடன் குறிப்பிடப்பட்டது. மையத்தால் நியமிக்கப்பட்ட, அதனால் உள்ளூர் அமைப்பிலிருந்து கிட்டத்தட்ட சுயாதீனமான செயலாளர், மாறுபக்கம் மாகாணத்தின் எல்லைகளுக்குள் மேலும் நியமனங்கள் மற்றும் பணிநீக்கங்களுக்கான அடிமூலமாக உள்ளார். மேலிருந்து கீழாக உருவாக்கப்பட்ட, தன்னிறைவு பெற்று வரும் இந்த செயலகக் கருவிகள், அனைத்து நூல்களையும் தனது கைகளில் சேகரித்து வருகிறது. கட்சி அமைப்பின் உண்மையான உருவாக்கத்தில் கட்சி வெகுஜனங்களின் பங்கேற்பு இன்னும் தற்காலிகமாகி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், ஒரு குறிப்பிட்ட செயலக உளவியல் உருவாக்கப்பட்டுள்ளது; கையில் உள்ள விவகாரத்தின் சாரத்தை நன்கு அறியாமல் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்மானிக்கும் திறன் செயலாளருக்கு உள்ளது என்று நம்புவது அதன் பிரதான பண்பு ஆகும். சோவியத் அமைப்புகளுக்கு தலைமை தாங்கும் போது எந்த நிறுவன, நிர்வாக அல்லது பிற குணங்களையும் வெளிப்படுத்தாத தோழர்கள், தாம் செயலாளர் பதவியை ஏற்றவுடன் பொருளாதார, இராணுவ மற்றும் பிற பிரச்சினைகளை எவ்வாறு அதிகாரத் தொணியுடன் தீர்மானிக்கத் தொடங்குகிறார்கள் என்பதை நாம் அடிக்கடி காண்கிறோம். அத்தகைய நடைமுறை எந்தவொரு பொறுப்புணர்வையும் பலவீனப்படுத்துவதால் அல்லது அழிப்பதால் அது மிகவும் தீங்கு விளைவிப்பதாகும்.
11. பத்தாவது கட்சி மாநாடு [1921 மார்ச்சில்] தொழிலாளர் ஜனநாயகம் என்ற பதாகையின் கீழ் நடத்தப்பட்டது.[18] முழுமையாக அபிவிருத்திசெய்யப்பட்ட தொழிலாளர் ஜனநாயகத்திற்கும் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கும் இடையிலான இணக்கமின்மையைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அந்த நேரத்தில் நிகழ்த்தப்பட்ட பல உரைகள் மிகைப்படுத்தப்பட்டவையாகவும், ஓரளவிற்கு வாய்ச்சவடால்ளாகவும் எனக்குத் தோன்றின. ஆனால், போர் கம்யூனிச காலத்தில் இடம்பெற்ற எரிந்துவிழுதல் நடவடிக்கைகளுக்கு மாறாக, ஒரு பரந்த மற்றும் உயிரோட்டமான கட்சிக் கூட்டு பங்களிப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டியதாக இருந்தது என்பது முற்றிலும் தெளிவாக இருந்தது. எவ்வாறெனினும், பன்னிரண்டாவது மாநாட்டிற்கு முன்னரே அடிப்படையாக அபிவிருத்திசெய்யப்பட்ட, மற்றும் மாநாட்டின் பின்னர் மிகவும் வலுப்பெற்று முழுமையாக வடிவமைக்கப்பட்ட ஆட்சி, போர் கம்யூனிசத்தின் மிகக் கடுமையான காலகட்டங்களில் இருந்த ஆட்சியை விட தொழிலாளர்களின் ஜனநாயகத்திலிருந்து மேலும் தூர விலகியிருக்கிறது. தலைமைச் செயலகத்தைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், கட்சி இயந்திரத்தின் அதிகாரத்துவமயமாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. உள்நாட்டுப் போரின் மிகக் கொடூரமான தருணங்களில், கட்சி அமைப்புகளுக்குள்ளும், பத்திரிகைகளிலும் கூட நிபுணர்களின் பயன்பாடு, வழக்கமான இராணுவத்திற்கு எதிராக ஒரு சார்பு இராணுவம், ஒழுக்கம் போன்றவற்றைப் பற்றி விவாதித்தோம் என்றால், இப்போது உண்மையில் கட்சியை குழப்புகின்ற பிரச்சினைகள் குறித்து அத்தகைய வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தின் அறிகுறி கூட இல்லை. அரசு அல்லது கட்சி இயந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற மற்றும் சாதாரணமாக கட்சி கருத்துக்களை கொண்டிருக்க மறுக்கும் அல்லது குறைந்தபட்சம் வெளிப்படையாக வெளிப்படுத்தக்கூடிய கருத்துக்களை கூட கொண்டிருக்க மறுக்கும் கட்சிக் காரியாளர்களின் ஒரு பரந்த அடுக்கு உருவாக்கப்பட்டுள்ளது; தலைமைச் செயலகத்தின் உயர்மட்டம் என்பது கட்சியின் கருத்தை உருவாக்குகின்ற மற்றும் கட்சியின் முடிவுகளை எடுக்கின்ற கருவியாக அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. தங்கள் சொந்தக் கருத்துக்களை அடக்கிவைத்துக்கொண்டிருக்கும் இந்த அடுக்கின் கீழ், கட்சியின் பரந்த வெகுஜன அடுக்கு உள்ளது. அவர்கள் முன் கொண்டுவரப்பட்டுள்ள ஒவ்வொரு தீர்மானமும் ஏற்கனவே ஒரு வேண்டுகோள் அல்லது உத்தரவில வடிவிலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் இந்த அணிகளுக்குள் ஏராளமான அதிருப்தி உள்ளது, அவற்றில் சில முற்றிலும் நியாயமானவை, அவற்றில் சில தற்செயலான காரணிகளால் ஏற்படுகின்றன. இந்த அதிருப்தி, கட்சி மாநாடுகளில் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தாலோ அல்லது கட்சி அமைப்புகள் மீது (கட்சிக் குழுக்கள், செயலாளர்கள் தேர்வு போன்றவற்றில்) வெகுஜனங்களின் அழுத்தத்தாலோ கரைவதில்லை, ஆனால் அது இரகசியமாக குவிந்து உட்கட்சி பூசலுக்கு வழிவகுக்கிறது. கட்சியின் உத்தியோகபூர்வமான, அதாவது செயலாளர்கள் இயந்திரமானது, கிட்டத்தட்ட முழுமையான ஒருமைப்பாட்டை அடைந்த ஒரு அமைப்பினுள் பெரும் பிம்பத்தை வெளிப்படுத்தி வரும் நேரத்தில், மிகவும் கடுமையான மற்றும் வேதனையான பிரச்சினைகள் சம்பந்தமான பிரதிபலிப்புகளும் தீர்ப்புகளும் அதிகாரப்பூர்வ கட்சி இயந்திரத்தைத் தவிர்த்து, கட்சிக்குள் சட்டவிரோத குழுக்கள் அமைவதற்கான நிலைமைகளை உருவாக்குகின்றன.
12. பன்னிரெண்டாவது மாநாடு பழைய போல்ஷிவிக்குகளின் பாதையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.[19] தலைமறைவு நிலையில் உள்ள முன்னாள் போல்ஷிவிக் காரியாளர்களே கட்சியின் புரட்சிகர உத்வேகமும் அதன் அமைப்பு ரீதியான முதுகெலும்புமாகும் என்பது முற்றிலும் வெளிப்படையானது. சாதாரண கருத்தியல் மற்றும் கட்சி நடவடிக்கைகளுடன், கட்சிக்குள் முன்னணி பதவிகளை வகிக்க தேவையான தகுதிகளைக் கொண்ட பழைய போல்ஷிவிக்குகளைத் தேர்ந்தெடுப்பதில் நாம் உதவ வேண்டும். ஆனால், தற்போது தேர்வு செய்யப்படும் விதம், அதாவது மேலிருந்து நேரடி நியமன முறை, இன்னும் பெரிய ஆபத்தைக் கொண்டுள்ளது: இந்த முறையுடன், பழைய போல்ஷிவிக்குகள் உயர் மட்டத்தில் “சுதந்திரம்” என்ற அளவுகோலால் வழிநடத்தப்படுகின்ற இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தற்போதைய உள் ஆட்சியின் அனைத்து திரிபுபடுத்தல்களுக்கும், பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் அதன் பாரதூரமான தவறுகளுக்கும் ஒட்டுமொத்த கட்சியினதும் பார்வையில் அத்தகைய பழைய போல்ஷிவிசம் பொறுப்பாக்கப்பட்டுள்ளது. நமது கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தலைமறைவிற்குச் செல்லாத இளம் புரட்சியாளர்கள் அல்லது ஏனைய கட்சிகளில் இருந்து வந்த உறுப்பினர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பழைய போல்ஷிவிசத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தன்னிறைவு (தற்சார்பு) பெற்ற செயலக எந்திரத்தின் மீது வளர்ந்து வரும் அதிருப்தி, சம்பவங்கள் அதே திசையில் அடுத்தடுத்து நடந்தால், தற்போது அரை மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட நமது கட்சிக்குள் தலைமறைவு போல்ஷிவிக்குகளின் கருத்தியல் மேலாதிக்கத்தையும் அமைப்பு ரீதியான தலைமையையும் பராமரிப்பதில் மிகவும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
13. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் வெற்றிகளிலிருந்து சுயாதீனமான முறையில் தொழிலாளர் அரசுக்கு வருமானத்தை உருவாக்குவதற்காக, வொட்கா விற்பனையை அடிப்படையாகக் கொண்ட வரவுசெலவுத் திட்டத்தைக் கட்டமைக்க அரசியல் குழு மேற்கொண்ட முயற்சி[20] ஒரு அபாயகரமான அறிகுறியாகும். மத்தியக் குழுவிற்குள்ளும் அதன் வரம்புகளுக்கு அப்பாலும் தீர்க்கமாக எதிர்ப்பு காட்டியதால் மட்டுமே, பொருளாதார வேலைகளுக்கு மட்டுமன்றி, கட்சிக்கே மிகக் கொடூரமான அடியாக இருந்திருக்கக் கூடிய இந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும், வொட்காவை எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாக்கும் யோசனை, மத்திய குழுவால் இன்னும் நிராகரிக்கப்படவில்லை. கட்சியில் இருந்து அதிக அளவில் சுயாதீனமாக இருக்கும் செயலாளர் அமைப்பின் தன்னிறைவு தன்மைக்கும், கட்சியின் கூட்டுக் கட்டமைப்பின் வெற்றி தோல்விகளிலிருந்து முடிந்தவரை சுயாதீனமாக வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்கும் போக்குக்கும் இடையே ஒரு உள் தொடர்பு உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வொட்காவை சட்டப்பூர்வமாக்குவது குறித்த எதிர்மறையான அணுகுமுறையை கட்சிக்கு எதிரான ஏறத்தாழ ஒரு குற்றவியல் நடவடிக்கையாக மாற்றும் முயற்சியும், இந்த ஆபத்தான திட்டத்தை கலந்துரையாட சுதந்திரம் கோரியதற்காக மத்திய செய்தித்தாளின் ஆசிரியர் குழுவிலிருந்து ஒரு தோழரை வெளியேற்றும் முயற்சியும், கட்சியின் வரலாற்றில் மிகவும் மானக்கேடான தருணங்களில் ஒன்றாக என்றென்றும் இருக்கும்.
14. பொருளாதாரத்தின் முறையற்ற வழிநடத்தலால், மேலே குணாம்சப்படுத்தப்பட்டுள்ள உட்கட்சி ஆட்சியாலும் இராணுவம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இராணுவம் தொடர்பாக அரசியல் குழு எடுக்கும் முடிவுகள், எப்போதுமே தற்காலிகமான அல்லது அவ்வப்போதைக்கான நடவடிக்கைகளின் குணாம்சத்தைக் கொண்டிருந்தன. பல்வேறு பிரச்சினைகளால் அதிக சுமையில் இருக்கும் அரசியல் குழு, ஒரு பிரச்சினையைக் கூட விரிவாகவும் திட்டமிட்ட வகையிலும் முறையான விதத்திலும் ஆராய்வதற்கான வாய்ப்பை ஒருபோதும் கொண்டிருக்காததால். இராணுவத்தை கட்டியெழுப்புதல் மற்றும் இராணுவ நிலைநிறுத்தலுக்கான அதன் தயாரிப்பு தொடர்பான அடிப்படை பிரச்சினைகள், அரசியல் குழுவில் ஒருபோதும் ஆராயப்படவில்லை. பொருளாதார மற்றும் சர்வதேச நிகழ்வுகள் காரணமாக, மிகவும் குறுகிய கால எல்லைக்குள் கூட, இராணுவம் சம்பந்தமாக ஒன்றுக்கொன்று எதிர்மறையான முடிவுகள் எடுக்கும் நிலைமை அரசியல் குழுவில் தலைதூக்கியது. விவகாரத்தை ஆழமாக ஆராயாமல் இருப்பதற்காக, கர்சனின் (பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்) இறுதி எச்சரிக்கையின்[21] போது, இராணுவத்தின் அளவை ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் வீரர்களால் அதிகரிப்பது குறித்த பிரச்சினை அரசியல் குழுவில் இரண்டு முறை எழுப்பப்பட்டது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்; இந்த முன்மொழிவை நிராகரிக்க நிறைய முயற்சிகள் தேவைப்பட்டன. ஜூலை மாதம், நான் விடுமுறையில் இருந்தபோது, மத்தியக் குழுவின் அமர்வானது இராணுவப் புரட்சிப் பேரவைக்கு [Revvoensoviet] இராணுவத்தை ஐம்பது ஆயிரம் அல்லது ஒரு லட்சம் வீரர்களால் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்குமாறு அறிவுறுத்தியது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த பணியில் பொது ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றினர். ஆகஸ்ட் இறுதியில், ஜேர்மனியில் நடந்த நிகழ்வுகள்[22] காரணமாக இது இரத்து செய்யப்பட்டதுடன் அதற்கு பதிலாக இராணுவத்தை வலுப்படுத்த ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிக்கலான மற்றும் கடினமான திட்டமிடல் தேவைப்படும் இந்த வகையான ஒவ்வொரு உத்தரவும், மத்தியிலிருந்து புற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தொடர்ச்சியான முன்மொழிவுகள், உத்தரவுகள் மற்றும் தொடர்புடைய கேள்விகளைத் தூண்டுகிறது. பிந்தையவற்றில், ரெவ்வோன்சோவியத் [இராணுவ புரட்சிப் பேரவை] அதன் வேலையில் வழிகாட்டும் யோசனைகளைக் கொண்டிருக்கவில்லை என்ற கருத்து மாவட்டங்களில் தலைதூக்கியது. இந்த முடிவுகளுக்கான உத்வேகம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று கருதிய மத்தியக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், ரெவ்வோன்சோவியட்டின் கட்டளைகளில் காணப்படும் முரண்பாடான தன்மை குறித்த மேற்கூறிய முடிவை, உக்ரேனிய இராணுவ மாவட்டத்தின் ஒரு இராணுவ இதழில், குறைவில்லாமல் எழுத்துமூலம் சூத்திரப்படுத்தி முன்வைத்தார்.
கட்சியின் உத்தியோகபூர்வ நிறுவனங்களின் அனுசரணையின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்சித் தேர்வைப் பொறுத்தவரை, அது இராணுவத்தின் தார்மீக ஒருங்கிணைப்புக்கு ஒரு கடுமையான அடியாகும். பழைய உக்ரேனிய சோவ்னர்கோமுக்கு (Ukrainian Sovnarkom) எதிராக மேலிருந்து மேற்கொள்ளப்பட்ட அதே வகையான திட்டமிட்ட வேலைகள், குடியரசின் ரெவ்வோன்சோவியத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரண்டாவது தடவையில், மேற்கொள்ளப்பட்ட வேலையின் வேகம் சற்று மெதுவாகவும் அதன் வடிவங்கள் சற்று எச்சரிக்கையாகவும் மூடிமறைக்கப்பட்டதாகவும் உள்ளன. ஆனால் அப்போது போலவே இப்போதும் உள்ளியல்பில், முக்கியமாக இராணுவத்தின் முன்னணி அமைப்புகளை தனிமைப்படுத்த உதவத் தயாராக இருக்கும் பணியாளர்களை நியமிப்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது. இராணுவ இயந்திரத்தின் உள்ளக உறவுகளில் மேலிருந்து கபடத்தனம் புகுத்தப்படுகிறது. கட்சியின் மாநாடுகளில் தீர்மானிக்கப்படும் கட்சியின் கட்டளைகள் மட்டுமன்றி, அரசியல் குழுவின் தீர்மானங்களும், பொதுவாக மறைமுகமாகவும், சில நேரங்களில் வெளிப்படையாகவும் ரெவ்வோன்சோவியத்துக்கு எதிராகவே உள்ளது. அவற்றின் எழுத்துக்களில் மட்டுமன்றி உள்ளர்த்தத்திலும் கூட, இவ்வளவு கண்டிப்புடன் செயல்படுத்தும் ஒரு சோவியத் அமைப்பு வேறு இல்லை; மேலே சுட்டிக் காட்டியது போல், இந்த தீர்மானங்களின் சூழலுக்கேற்ற தகுதி அல்லது ஒருங்கிணைப்பால் மிகையாக வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், ரெவ்வோன்சோவியத்துக்கு அதன் சுவர்களுக்குள் இந்த முடிவுகளைக் கண்டிக்கவோ அல்லது கலந்துரையாடவோ அனுமதி இல்லை. ரெவ்வோன்சோவியத்தை மாற்றீடு செய்வதே எளிய நடவடிக்கையாக இருக்கும். எவ்வாறெனினும், தற்போதைக்கு அத்தகைய ஒரு நடவடிக்கையை எடுப்பது குறித்து முடிவு செய்யாத அதேவேளை, ஓர்க்புரோ, [நிறுவன பணியகம்] இராணுவப் பகுதியில் அதன் நிறுவனக் கொள்கையை அபிவிருத்தி செய்து வருகின்றமை, இந்த வேலை எங்கே முடிவடையும், அது எதற்கு இட்டுச் செல்கிறது? என்று கவலையுடன் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள இராணுவத்தில் உள்ள அனைத்து அக்கறையுள்ள சிப்பாய்களையும் நிர்ப்பந்திக்கின்றது.
15. இப்போது இராணுவத்தின் போர்த் திறனுக்கு உத்தரவாதம் அளிப்பது பத்தில் ஒன்பது பங்கு போர்த் துறையைச் சார்ந்தது அல்ல, மாறாக தொழில்துறையைச் சார்ந்துள்ளது. பொருளாதாரத்தின் பொதுவாக முறைப்படுத்தப்படாத தன்மையின் விளைவு முற்று முழுதாக இராணுவத்திற்கு வழங்களை மேற்கொள்ளும் தொழில்துறையின் மீது பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை சொல்லத் தேவையில்லை. “சுதந்திரம்” என்ற அளவுகோலின்படி இங்கும் மேற்கொள்ளப்பட்ட முன்னணி நபர்களை மாற்றும் நடவடிக்கை எவ்வளவு வேகமாக முடிக்கப்பட்டது என்றால், இன்றைய மிகவும் பொறுப்பான காலகட்டத்தில், பத்து மடங்கு ஆற்றலுடன் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டிய இராணுவ உற்பத்தி, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக உண்மையான தலைமைத்துவம் இல்லாமல் உள்ளது.
ஒட்டு மொத்தத் தொழில்துறையிலும், குறிப்பாக இராணுவத் தொழில்துறையிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கடைசி அமர்வில், தோழர் ஸ்டாலின் தலைமையிலான மத்தியக் குழுவின் உறுப்பினர்களை ரெவ்வோன்சோவியத்தில் சேர்ப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.[23] எந்த விளக்கமும் தேவைப்படாத இந்த நடவடிக்கையின் உள்-கட்சி அர்த்தத்துக்கும் அப்பால், ஒரு புதிய ரெவ்வோன்சோவியத்தின் அறிவிப்பை, நமது அண்டை நாடுகளால், ஒரு புதிய, அதாவது ஆக்ரோஷமான கொள்கைக்கு மாறுவதாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மிகவும் தீர்க்கமான முறையில் வெளிப்படுத்தப்பட்ட எனது எதிர்ப்பு மட்டுமே, கொடுக்கப்பட்ட நடவடிக்கையை உடனடியாக செயல்படுத்துவதில் இருந்து முழுக் குழுவைத் தடுத்தது. “அணிதிரட்டும் வரை” ஒரு புதிய ரெவ்வோன்சோவியத்தை உருவாக்குவதை முழு அமர்வும் ஒதுக்கி வைத்தது. எப்போது, எந்த சூழ்நிலையில் ஒரு அணிதிரட்டல் தேவைப்படும், அது தேவைப்படுமெனில், மற்றும் குறிப்பாக கட்சி அந்த நேரத்தில் இராணுவப் பணிகளுக்கு யாரை நியமிக்க முடியும் என்பது முற்றிலும் தெரியாதபோது, டசின் கணக்கான பிரதிகளை விநியோகித்து அத்தகைய முன்மொழிவை நாம் ஏன் முன்கூட்டியே செயல்படுத்த வேண்டும் என்பது முதல் பார்வையில், விளக்க முடியாத ஒன்றாகத் தோன்றும். ஆனால் உண்மையான விடயத்தில், முதல் பார்வையில் மிகவும் தெளிவற்றதாகத் தோன்றாத இந்த உத்தரவு, முன்னர் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான மறைமுக ஆயத்த நடவடிக்கைகளில் ஒன்றாகும். அரசியல் குழு மற்றும் ஓர்க்பீரோவில் உள்ள பெரும்பான்மையினரின் நடைமுறைக்கு அவை பொதுவானவை. எல்லாவற்றுக்கும் மேலாக, எந்த வகையிலும் ரெவ்வோன்சோவியத்திற்கு கீழ்ப்படியாத, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக ஒரு தலைவர் இல்லாமல் இருந்து வருகின்ற “இராணுவத் தொழில்துறையை மேற்பார்வையிடுவதற்கான ஒரு சிறப்புத் திறன்கொண்ட” மத்தியக் குழுவின் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களை உடனடியாக ரெவ்வோன்சோவியத்தில் சேர்க்க முழு அமர்வும் முடிவு செய்தது. இதனடிப்படையில் அரசியல் குழுவானது தோழர்கள் லசெவிச் மற்றும் வோரோஷிலோவ்[24] ஆகியோரை ரெவ்வோன்சோவியத்தில் சேர்த்தது; அத்தோடு, ‘இராணுவத் தொழில்துறையைக் கண்காணிப்பதற்கான ஒரு சிறப்புத் திறனில்’ நியமிக்கப்பட்ட தோழர் வோரோஷிலோவ், ரோஸ்டோவில் இருந்தார். சாராம்சத்தில், இந்த நடவடிக்கையும் மேலே குறிப்பிட்டுள்ளபடி ஆயத்த நடவடிக்கையாகும். ரெவ்வோன்சோவியத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கான உண்மையான நோக்கங்களுக்கும் அதிகாரப்பூர்வமாக முன்வைக்கப்பட்ட காரணங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்ற எனது நிந்தனைக்கு பதிலளிக்கும் வகையில், தோழர் குய்பிஷேவ்[25] முரண்பாட்டை மறுக்காதது மட்டுமன்றி - அவர் அதை எவ்வாறு மறுத்திருக்க முடியும்?- “உங்களுக்கு எதிராகப் போரிடுவது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம், ஆனால் நாங்கள் உங்களை எதிரியாக அறிவிக்க முடியாது; அதனால்தான் இதுபோன்ற வழிமுறைகளை நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று என்னிடம் வெளிப்படையாகச் சொன்னார்.
16. கட்சியில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் நெருக்கடியை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவை எவ்வளவு சரியானவை அல்லது தவறானவை என்பதைப் பொருட்படுத்தாமல், அடக்குமுறை நடவடிக்கைகளால் சமாளிக்க முடியாது. அபிவிருத்தியின் குறிக்கோள் சிக்கல்கள் மிகவும் பெரியவை. எவ்வாறாயினும், அவை குறைக்கப்படவில்லை, ஆனால், ஆக்கபூர்வமான பணிகளிலிருந்து உள்-கட்சி குழுக்களுக்கு கவனத்தை திசை திருப்புவதன் மூலம்; அடிக்கடி தங்கள் கட்சியையும் சோவியத் நிலைப்பாட்டையும் புறக்கணித்து நபர்களை செயற்கை முறையில் தேர்ந்தெடுப்பதன் மூலம்; அனைவரின் செயலற்ற கீழ்ப்படிதலை மட்டுமே கணக்கிட்டு அதிகாரபூர்வமான மற்றும் திறமையான தலைமைத்துவத்தை உத்தியோகபூர்வ கட்டளைகளுடன் மாற்றுவதன் மூலம், அடிப்படையில் தவறான கட்சி ஆட்சியால் சிக்கல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பிடும் இந்த உள்-கட்சி ஆட்சியே, சிலரின் அதிருப்திக்கும், மற்றவர்களின் அக்கறையின்மைக்கும் செயலற்ற தன்மைக்கும், இன்னும் சிலர் கடமைகளில் இருந்து அகற்றப்படுவதற்கும் உடனடி காரணமாக இருந்தது. பொருளாதார வெற்றிகளுக்கு உத்தரவாதம் அளித்தால், ஒருவேளை இந்தக் கட்சி தற்போதைய ஒடுக்குமுறையான உள்-கட்சி ஆட்சியுடன் தற்காலிகமாக வாழக்கூடும். ஆனால் நிலைமை அதுவல்ல. அதனால்தான் இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்க முடியாது. அதை மாற்ற வேண்டும்.
17. பன்னிரெண்டாவது மாநாட்டுக்கு முன்பே பொருளாதாரக் கொள்கையின் முறையற்ற தன்மையும், கட்சி அரசியலிலான செயலக மட்டத்திலான அதிகாரத்துவமயமாக்கலும் இந்தளவு எச்சரிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றதன் மறுபக்கம், அநேகமாக இந்தக் கொள்கை இவ்வளவு விரைவாக அதன் திவால்நிலையை வெளிப்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நமது முன்னணி அமைப்புகள் செய்த தவறுகளின் பெரும் சுமையைச் சுமந்து, கட்சியானது அதன் வரலாற்றில் மிக தீர்க்கமான காலகட்டத்திற்குள் நுழைகிறது. கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. நமது பொருளாதாரப் பணியின் வெளிப்படையான முரண்பாடுகளையும், அதன் விளைவுகளையும் கட்சி மிகுந்த அக்கறையுடன் கவனிக்கிறது. கட்சியின் மற்றும் சோவியத்தின் பிரதான உறுப்புகளை கையாலாகாத நிலைக்குத் தள்ளி மேலிருந்து செயற்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட பிளவுபடுத்தல்களை கட்சி இன்னும் அதிக அக்கறையுடன் அவதானிக்கிறது. நியமனங்கள், பணிநீக்கங்கள், மாற்றீடுகள் மற்றும் இடமாற்றங்களுக்கான உத்தியோகபூர்வ காரணங்கள் எப்போதும் உண்மையான காரணங்களுடன் அல்லது நோக்கத்தின் நலன்களுடன் ஒத்துப்போவதில்லை என்பதை கட்சி அறியும். இதன் விளைவாக, கட்சி பிளவுபட்டுள்ளது. அக்டோபர் புரட்சியின் ஆறாவது ஆண்டு நிறைவிலும் ஜேர்மனியில் புரட்சிக்கு முன்னதாகவும், கட்சிக்குள் சட்டவிரோத குழுக்கள் குறித்து கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் கட்சி அமைப்புகளுக்கும் ஜி.பி.யு.வுக்கும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கும் வரைவு முன்மொழிவை கலந்துரையாட அரசியல் குழுவானது நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
அத்தகைய ஆட்சியும் கட்சிக்குள் இத்தகைய ஒரு பொதுவான நிலைமையும், கட்சி எதிர்கொள்ளக்கூடிய மற்றும் அனைத்து ஆதாரங்களின்படியும் ஜேர்மன் புரட்சியின் காரணமாக கட்சி எதிர்கொள்ளக்கூடிய பணிகளுடன் பொருந்தாது என்பது முற்றிலும் தெளிவாகிறது. செயலக அதிகாரத்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறைந்தபட்சம் கட்சியின் முடக்கத்திற்கு மற்றும் சீரழிவுக்கு அச்சுறுத்தப்படுவதில் இருந்து தடுக்கத் தேவையான வரம்புகளுக்குள்ளேனும், கட்சி ஜனநாயகத்துக்கு அனைத்து உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும். கட்சியின் காரியாளர்களும், கட்சியின் கொள்கைகளின் வரம்புகளுக்கு உட்பட்டு, தாம் எவற்றுடன் திருப்திப்படவில்லை என்பதை விளக்க வேண்டும்; கட்சியின் விதிகளுக்கு இணங்கவும், அடிப்படையில், ஒட்டுமொத்தமாக நமது கட்சி என்ற உளத்தூண்டலில் இருந்து, அதன் சொந்த அமைப்பு எந்திரத்தை உருவாக்குவதற்கான உண்மையான சாத்தியத்தை அவர்கள் பெற வேண்டும். நமது பணியின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப, அடிப்படையில் தொழில்துறையில் மற்றும் குறிப்பாக இராணுவ உற்பத்தியில், கட்சியின் சக்திகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். தொழிற்துறை தொடர்பான பன்னிரெண்டாவது மாநாட்டின் முடிவுகளை உண்மையிலேயே செயல்படுத்தாமல், தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் அவர்களின் முறையான அதிகரிப்பு ஆகியவற்றின் நிலையான மட்டத்தை நெருங்குவது சம்பந்தமாக எதையும் உத்தரவாதம் செய்ய முடியாது. இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்கான குறை வேதனையான மற்றும் குறுகிய வழி, தற்போதைய ஆளும் குழு தான் செயற்கையாக ஆதரிக்கும் ஆட்சியின் அனைத்து விளைவுகளையும் ஏற்றுக்கொள்வதும், கட்சியின் வாழ்க்கையை ஆரோக்கியமான திசையில் திருப்ப உதவுவதற்கு அது உண்மையாக தயாராக உள்ளது என்பதை நிரூபிப்பதுமே ஆகும். இந்த நிகழ்வின் போக்கை மாற்றுவதற்கான முறைகள் மற்றும் அமைப்பு ரீதியான வடிவங்களை எந்த சிரமமும் இல்லாமல் காண முடியம். கட்சி இன்னும் சுதந்திரமாக சுவாசிக்கும். துல்லியமாக இந்தப் பாதையையே நான் மத்தியக் குழுவிடம் முன்மொழிகிறேன்.
18. பிழையான கொள்கைகளுக்கு, குறிப்பாக பொருளாதாரம் மற்றும் உட்கட்சி ஆட்சி சம்பந்தமாக அக்கறைகொண்டு, அவற்றுக்கு எதிராக மத்தியக் குழுவிற்குள் நான் தீர்க்கமாகவும் துல்லியமான முறையிலும் போராடி வருகின்றேன் என்பதை மத்தியக் குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் அறிவார்கள். இவ்வாறு செய்யும் போது, ஒரு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான தோழர்களால் கூட, குறிப்பாக கிட்டத்தட்ட சரியான உள்-கட்சி நிலைமைகளின் கீழ், மத்திய குழு அல்லது மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்தில் குறிப்பிடத்தக்க பதவிகளைப் பெறக்கூடிய தோழர்களால் கூட, மதிப்பீடு செய்வதற்காக போராட்டத்தை முன்வைப்பதை நான் தீர்க்மாக தவிர்த்து இருந்தேன் என்பதை மேற்குறிப்பிட்ட சபைகளில் உள்ள உறுப்பினர்கள் அறிவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக[26] இந்த திசையில் எனது முயற்சிகள் எந்த பலனையும் அளிக்கவில்லை என்பதை நான் குறிப்பிட வேண்டும். அதீத கூர்மை கொண்ட நெருக்கடியால் கட்சி சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது, அப்படியானால், ஆபத்தைக் காணும், ஆனால் அதை வெளிப்படையாக பெயர் கூறி அழைக்காத அனைவரையும் உள்ளடக்கத்தை விட வடிவத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்காக குற்றம் சாட்டும் உரிமையை கட்சி கொண்டிருக்கும்.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, போதுமான அளவு தயாராகவும், முதிர்ச்சியுடனும், சுய உறுதியுடனும், மற்றும் கோஷ்டி அதிர்வுகள் மற்றும் கொந்தளிப்புகள் இல்லாமல் முட்டுக்கட்டையில் இருந்து தலைதூக்குவதற்கு கட்சிக்கு உதவக்கூடியவர்கள் என்று நான் கருதுகின்ற கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருக்கின்ற நிலைமை என்ன என்பதை தெரிவிப்பது எனது உரிமை மட்டுமல்ல, எனது கடமையுமாகும் என்று நான் கருதுகிறேன்.
எல். ட்ரொட்ஸ்கி
8 அக்டோபர் 1923.
[Rossiiskii gosudarstvennyi arkhiv sotsial’no-politicheskoi istorii (RGASPI), fond 17, opis’ 2, delo 685, listy 53-68; typewritten copy]
அடிக் குறிப்புகள்
[1] எல்.டி. ட்ரொட்ஸ்கியின் கடிதம் 1) நமது நாட்டில், தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான [ஸ்மிச்கா] கூட்டணியை உடைக்க அச்சுறுத்திய, கூர்மையடைந்து வரும் பொருளாதார நெருக்கடி; 2) கட்சி இயந்திரத்தின் வளர்ந்து வரும் அதிகாரத்துவம்; மற்றும் 3) எல்.டி. ட்ரொட்ஸ்கியை மதிப்பிழக்கச் செய்வதையும் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஆளும் “முக்கூட்டு” (ஜி.இ. ஜினோவியேவ், எல்.பி. காமனேவ் மற்றும் ஐ.வி. ஸ்ராலின்) என்று அழைக்கப்படுபவர்களின் கவணிக்கத் தக்க செயற்பாடுகளின் நிலைமைகளின் கீழ் எழுதப்பட்டது. இந்தக் கடிதத்தை எழுதுவதற்கான காரணம், குடியரசின் புரட்சிகர இராணுவக் குழுவின் (ரெவ்வோன்சோவெட்) உள் அமைப்பை மாற்றுவதற்கும், கட்சியின் மத்தியக் குழுவின் ஆறு உறுப்பினர்களை அதில் அறிமுகப்படுத்துவதற்கும் மத்திய குழுவின் செப்டம்பர் (1923) அமர்வு முடிவு செய்ததே ஆகும். 1990 மே மாதம் இஸ்வெஸ்டியா TsK KPSS இல் வெளியிடப்படுவதற்கு முன்பு இந்தக் கடிதம் ஒருபோதும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அதிலிருந்து பல்வேறு பகுதிகள் முதன்முதலில் சோட்சிலிஸ்டிக்ஹெஸ்கி வெஸ்னிக் [சோசலிச தூதர்] (பெர்லின்) #11(81) இதழில் 24 மே 1924, பக்.9-10, மற்றும் சோவியத் பத்திரிகைகளில், மோலோடோய் கொம்முனிஸ்ட் [இளம் கம்யூனிஸ்ட்], 1989, #8, பக்.49 இலும் வெளிவந்தன.
[2] இது 1923 செப்டம்பர் 18 அன்று மத்திய குழுவின் அரசியல் தீர்மானத்தின்படி, பொருளாதார மற்றும் உட்கட்சி நிலைமையை பகுப்பாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட எஃப்.இ. ஜெர்ஜின்ஸ்கி, ஜி.இ. ஸினோவியேவ், வி.எம். மொலோடோவ், ஏ.ஐ. ரைகோவ், ஐ.வி. ஸ்டாலின் மற்றும் எம்.பி. டாம்ஸ்கி ஆகியோரைக் கொண்ட ஆணையத்தைக் குறிக்கிறது. ட்ரொட்ஸ்கி நவம்பர் தொடக்கத்தில் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட போதிலும், மோசமான உடல்நலம் மற்றும் பிற ஆணையங்களில் அதிக பணிச்சுமை காரணமாக அதன் எந்த அமர்வுகளிலும் கலந்து கொள்ள முடியாததால், நவம்பர் 14 ஆம் திகதிக்குள் அதிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆணையத்தில் இருந்து விலகியதை விளக்கி அவர் எழுதிய கடிதத்தில், அது அடிக்கடி திடீர் அறிவித்தலில் கூடியதாகவும், இதனால் அவர் பங்கேற்பது “உடல் ரீதியாக சாத்தியமற்றதாக” ஆக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். அமர்வுகளில் செயலூக்கமான தேவைப்பாடுகள் முன்னர் அதன் உறுப்பினர்களுக்கு அரசியல் குழுவால் ஒரு கடமையாக ஆக்கப்பட்டிருந்தது. Rossiiskii Gosudarstvennyi Arkhiv Sotsial’no-politicheskoi istorii (RGASPI), f. 17, op. 171, delo 33, list 142.
[3] இது “தொழிலாளர் உண்மை” (“Workers Truth”) மற்றும் “ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் குழு” (“Workers Group of the RCP”) ஆகியவற்றைக் குறிக்கிறது. “தொழிலாளர் உண்மை” (மைய கன்னை “தொழிலாளர் உண்மை”) (Central Group “Workers Truth”) என்பது 1921 வசந்த காலத்தில் உருவாக்கப்பட்ட ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி(b) [RCP(b)] இல் இருந்த ஒரு சட்டவிரோத குழுவாகும். அதன் பங்கேற்பாளர்கள் புதிய பொருளாதார கொள்கைக்கு மாறியதன் மூலம் RCP(b) “பாட்டாளி வர்க்கத்துடனான அதன் உறவுகளையும் தொடர்பையும் இன்னும் மீளமுடியாத அளவிற்கு இழந்து வருகிறது” என்று நினைத்தனர். “தொழிலாளர் உண்மை” “தொழிலாள வர்க்கத்தின் அணிகளில் வர்க்க தெளிவை அறிமுகப்படுத்தும்” இலக்கை ஏற்றுக்கொண்டது. அதன் சில சட்டவிரோத வெளியீடுகளில் அது ஒரு புதிய தொழிலாளர் கட்சியை உருவாக்கும் பணியை அமைத்தது. “தொழிலாளர் குழு RCP” 1923 வசந்த காலத்திலும் கோடையிலும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் “தொழிலாளர் எதிர்ப்பு” உறுப்பினர்களான ஜி. மியாஸ்னிகோவ் மற்றும் என். குஸ்னெட்சோவ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. உட்கட்சிக் குழுக்களை அனுமதிக்க முடியாதது தொடர்பாக RCP(b) இன் பத்தாவது மற்றும் பதினோராம் மாநாடுகளின் முடிவுகளுக்கு அடிபணியாத பல பழைய போல்ஷிவிக்குகளும் இதில் இணைந்தனர். “தொழிலாளர் குழு RCP” அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளிலும் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளை (கவுன்சில்கள்) உருவாக்குதல்; சோவியத் மாநாடுகளில் அறக்கட்டளைகள் மற்றும் நிர்வாக அமைப்புகளின் இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்தல்; மற்றும் தொழில்துறையை வழிநடத்துவதில் “பாட்டாளி வர்க்க ஜனநாயகம்” என்ற கோட்பாட்டைப் பின்பற்றுதல்; தொழிற்சங்கங்களை கட்டுப்பாட்டு உறுப்புகளாக மாற்றுதல்; மக்கள் ஆணையர்களின் சோவியத்தை அகற்றுதல்; மற்றும் “தொழிலாள வர்க்கத்தில் இருந்து தீர்க்கமாக பிரிந்திருந்த” “கட்சியில் உள்ள ஆளும் குழுவை அகற்றுதலும்” அவசியம் என்று கருதியது. செப்டம்பர் (1923) மத்திய குழு RCP (b) இன் அமர்வானது “தொழிலாளர் உண்மை”, “தொழிலாளர் குழு RCP” ஆகியவை “கம்யூனிச எதிர்ப்பு மற்றும் சோவியத் விரோத வேலைகளை” நடத்தி வருவதாகக் கூறியதுடன், அவற்றில் பங்கேற்பது RCP(b) அங்கத்துவத்துடன் பொருந்தாது என்று அறிவித்தது. 1923 டிசம்பரில் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்தின் தீர்மானத்தின்படி, இந்த குழுக்களில் தீவிரமாக பங்கேற்றவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
[4] RCP(b) இன் பன்னிரெண்டாவது மாநடு 1923 ஏப்ரல் 17-25 திகதிகளில் மொஸ்கோவில் கூடியது. மாநாடு கூட்டப்பட்ட “முறைகள் மற்றும் வளங்கள்” பற்றிக் குறிப்பிடும் போது, எல்.டி. ட்ரொட்ஸ்கி, கட்சியின் பல மாகாண மாநாடுளில் அதற்கு முன்னதாக மாகாணக் குழுக்களின் செயலாளர்களின் பரிந்துரையின் பேரில், மாற்று வேட்பாளர்கள் இல்லாமல் மாநாட்டுக்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அதற்கு மாறாக, 1922 கோடையில் இருந்து மத்திய குழுவின் பரிந்துரையின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அதாவது அவர்கள் உண்மையில் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான செயலகத்தால் நியமிக்கப்பட்டனர்.
[5] எல்.டி. ட்ரொட்ஸ்கியின் ஆய்வறிக்கைகளின் ஒரு பகுதி Stenograficheskii otchet 12-ogo s’ezda RKP/b v Moskve, [RCP(b) இன் 12வது கட்சி மாநாட்டின் தட்டச்சுப் பதிவு] மொஸ்கோ 1968, pp. 810-815. பதிப்பில் அச்சிடப்பட்டது.
[6] இந்த கடிதத்தின் ஒரு பகுதியை பார்க்க, அதே நூல் பக். 816-820.
[7] மேற்கோள் அதே நூல் பக். 675-688.
[8] இங்கே ட்ரொட்ஸ்கி “கொஸ்பிளானுக்கு சட்டமியற்றும் பணிகளைக் கொடுப்பது பற்றி” வி.ஐ. லெனினின் படைப்பை குறிப்பிடுகின்றார் (மேறகோள். லெனின், V.I. முழுமையான நூல்திரட்டுப் படைப்புகள், தொகுதி 45, பக். 349-353), 1956 இல் சோவியத் ஒன்றியத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்டது.
[9] அலெக்ஸேய் ஐ. ரைகோவ் (1881-1938), 1898 முதல் கட்சியின் உறுப்பினராகவும், 1923 இல் மத்திய குழுவின் அரசியல் குழு உறுப்பினராகவும், மக்கள் பொருளாதாரத்தின் அதி உயர் சோவியத்தின் தலைவராகவும், மக்கள் ஆணையர்களின் சோவியத்தின் துணைத் தலைவராகவும் மற்றும் சோவியத்தின் தொழிலாளர் மற்றும் பாதுகாப்பு துணைத் தலைவராகவும் இருந்தார். 1917 ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் போல்ஷிவிக் தலைமையின் வலதுசாரிகளின் மிக முக்கியமான பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார். யூரி (கிரிகோரி) எல். பியாடகோவ், (1890-1937), 1910 முதல் கட்சியின் உறுப்பினராகவும், 1923 இல் கொஸ்பிளான் மற்றும் மக்கள் பொருளாதாரத்தின் அதி உயர் சோவியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இடது எதிர்ப்பு அணியின் தலைவர்களில் ஒருவரானார்.
[10] Stenograficheskii otchet (தட்டச்சுப் பதிவு) 12-ogo s’ezda RKP/b v Moskve, pp. 327-328.
[11] ட்ரொட்ஸ்கி RCP(b) இன் மத்திய குழுவின் செப்டம்பர் (1923) அமர்வவைக் குறிப்பிடுகிறார்.
[12] Stenograficheskii otchet (தட்டச்சுப் பதிவு) 12-ogo s’ezda RKP/b v Moskve, pp. 680-681.
[13] “விலைக் கத்தரிக்கோல்” என்பது தொழில்துறை மற்றும் விவசாயப் பொருட்களின் விலைகளுக்கு இடையிலான விரிவடைந்து வரும் இடைவெளியைக் குறிக்கிறது. அக்டோபர் 1923 தொடக்கத்தில், 1913 இல் விலைகள் தொடர்பான சில்லறை விலைக் குறியீட்டுடன் ஒப்பிடுகையில் அது முறையே 187 மற்றும் 58 ஆக இருந்தது (அங்கு 1913=100) (“எகோனோமிசெஸ்கையா ஜிஸ்ன்”, 11 ஒக்டோபர் 2023)
[14] Stenograficheskii otchet (தட்டச்சுப் பதிவு) 12-ogo s’ezda RKP/b v Moskve, p. 673.
[15] மேற்கோள் அதே நூல் பக். 68, 200-201; see also note 4.
[16] ட்ரொட்ஸ்கி, ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான மத்திய குழுவின் செயலகத்தை குறிப்பிடுகிறார்.
[17] ட்ரொட்ஸ்கி உக்ரேனிலுள்ள சோவ்னார்கோம் [Sovnarkom-மக்கள் ஆணையர்கள் கவுன்சில்] தலைவர் –அவரது நெருங்கிய சக சிந்தனையாளர்களில் ஒருவரும் இடது எதிர்ப்பு அணியின் எதிர்காலத் தலைவருமான- சி.ஜி. ரகோவ்ஸ்கி நீக்கப்பட்டதையும், உக்ரேனிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் ஜூன் (1923) அமர்விற்குப் பிறகு பல சோவியத் பணியாளர்களை மாற்றியதையும் குறிப்பிடுகிறார்.
RCP(b) இன் பத்தாவது மாநாடு 1921 மார்ச் 8-16 திகதிகளில் மாஸ்கோவில் நடந்தது. அதில், ஏனைய விடயங்களுக்கு மத்தியில் “கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான கேள்விகள்” என்ற, உட்கட்சி வாழ்க்கையை ஜனநாயகமயமாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசிய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (cf. Stenograficheski otchet desiatogo s’ezda RKP (b) [RCP(b)இன் பத்தாவது மாநாட்டின் தட்டச்சுப் பதிவு] மொஸ்கோ 1963, பக்.559-571).
[19] Stenograficheskii otchet (தட்டச்சுப் பதிவு) 12-ogo s’ezda RKP/b v Moskve, pp. 705-706.
[20] ஜூன் 26-27, 1923 இல் நடைபெற்ற RCP (b) இன் மத்திய குழுவின் அமர்வில், ஓட்கா விற்பனையில் ஒரு அரச ஏகபோகத்தை அறிமுகப்படுத்துவது பற்றிய விவாதம் இருந்தது. அந்த நேரத்தில் அவர் எழுதிய கடிதங்களில், குறிப்பாக ஜூன் 29 அன்று RCP(b) இன் மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், ட்ரொட்ஸ்கி இந்த நடவடிக்கைக்கு எதிராக திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்தார்.
[21] மே 8, 1923 அன்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜி. கர்சன் அளித்த குறிப்பாணை, சோவியத் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சியாக நிரூபிக்கப்பட்டது. சோவியத்-பிரிட்டிஷ் உறவுகளில் குறுகிய கால சீரழிவைத் தூண்டிய இந்த சம்பவம், சில வாரங்களுக்குள் சோர்வடைந்ததுடன் சோவியத் ஒன்றியத்தின் சர்வதேச நிலையை வலுப்படுத்த உதவியது.
[22] இது 1923 கோடையில் ஜேர்மனியில் உருவாகத் தொடங்கிய புரட்சிகர நிகழ்வுகளைக் குறிக்கிறது. மேலும் பார்க்க: பீட்டர் சுவார்ட்ஸ், ஜெர்மன் அக்டோபர்: 1923 இன் தவறவிடப்பட்ட புரட்சி. https://www.wsws.org/en/articles/2008/10/1923-o30.html
[23] இது குடியரசின் ரெவ்வோன்சோவியத்தில் பல உறுப்பினர்களை அறிமுகப்படுத்தவும், RVS இன் தலைவரின் கீழ் ஒரு நிர்வாகக் குழுவை உருவாக்கவும் மத்தியக் குழுவின் செப்டம்பர் அமர்வின் தீர்மானத்தைக் குறிக்கிறது. அதன் உறுப்பினர்கள் எஸ்.எஸ். கமனேவ், ஜி.எல். பியாடகோவ், ஈ.எம். ஸ்க்லியான்ஸ்கி, எம்.எம். லஷ்விச், ஐ.வி. ஸ்டாலின் மற்றும் பலர் (cf. RGASPI, f. 17, op. 2, delo 103, listy 2-3; f.17, op. 3, delo 384, list 3).
[24] மிக்கைல் எம். லசேவிச் (1884-1928) - 1901 முதல் கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1922-25 இல் சைபீரியப் புரட்சிக் குழுவின் தலைவராகவும், 1925 நவம்பர் முதல் சோவியத் ஒன்றியத்தின் ரெவ்வோன்சோவியத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 1918-19 மற்றும் 1923-25 ஆம் ஆண்டுகளில் - கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். கிளிமென்ட் ஈ. வோரோஷிலோவ் (1881-1969), 1903 முதல் கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1921-24 இல் - RCP(b) இன் மத்தியக் குழுவின் தென்கிழக்கு அலுவலகத்தின் உறுப்பினர், வடக்கு காகசஸ் இராணுவ மாவட்டத்தின் துருப்புக்களுக்கு தலைமை தாங்கினார். 1924 முதல் - மொஸ்கோ இராணுவ மாவட்டத்தின் துருப்புக்களின் தளபதி, சோவியத் ஒன்றியத்தின் ரெவ்வோன்சோவியட்டின் உறுப்பினர். 1921 முதல் மத்தியக் குழு உறுப்பினர். வோரோஷிலோவ் சிவில் யுத்தத்துக்குப் பிறகு ஸ்டாலினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக இருந்தார்.
[25] வலேரியன் வி. குய்பிஷேவ் (1888-1935), 1904 முதல் கட்சியின் உறுப்பினர். 1922-23 இல் RCP(b) இன் மத்தியக் குழுவின் செயலாளர். 1923 முதல் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆய்வகத்தின் மக்கள் ஆணையராகவும் இருந்தார்.
[26] ஸ்ராலின் RCP(b) இன் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற 1922 வசந்த காலத்தின் ஆரம்ப காலகட்டத்தை ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகிறார்.