முன்னோக்கு

பைடெனின் இராணுவச் செலவில் 105 பில்லியன் டொலர்கள் கோரிக்கை: தொழிலாள வர்க்கத்தின் மீது போர்ப் பிரகடனம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜனாதிபதி ஜோ பைடென், கடந்த வியாழக்கிழமை ஆற்றிய உரையில், அமெரிக்க இராணுவத்திற்கு நிதியளிக்கவும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை அதிகரிக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அதன் இனப்படுகொலை தாக்குதலுக்காக இஸ்ரேலிய இராணுவத்தை தோட்டாக்கள், குண்டுகள் மற்றும் எறிகணைகள் மூலம் ஆயுதபாணியாக்குவதற்கும், காங்கிரஸிடம் மேலும் 105 பில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பிரமாண்டமான பணத் தொகையானது, பூமியிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும். மேலும், வரும் மாதங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மரணம் மற்றும் அழிவை ஏற்படுத்தும்.

1948 முதல் அமெரிக்கா இராணுவ உதவியாக இஸ்ரேலுக்கு வழங்கிய 260 பில்லியன் டொலர்களுடன், 14 பில்லியன் டொலர்கள் சமீபத்திய கோரிக்கை மேலதிகமாக அடங்கும். மேலும், உக்ரேனுக்கு 61 பில்லியன் டொலர்கள், அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவிற்கு எதிரான போருக்காக இதுவரை செலவழிக்கப்பட்ட 75 பில்லியன் டொலர்களை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குகிறது. அத்துடன், இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு 3 பில்லியன் டொலர்கள், சீனாவை இராணுவ ரீதியாக சுற்றி வளைப்பதற்கு 2 பில்லியன் டொலர்கள் மற்றும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை மேலும் இராணுவமயமாக்குவதற்கும் குடியேற்றத்தை குற்றமாக்குவதற்கும் 14 பில்லியன் டொலர்களையும் பைடென் கோருகிறார்.

“குழப்பம், மரணம் மற்றும் அழிவை ஏற்படுத்துபவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புக்கான விலையை செலுத்துவதை உறுதிப்படுத்த 105 பில்லியன் டொலர்கள் தேவை” என்று பைடென் கூறினார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் 20 வருடங்கள் நீடித்த, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்று, 8 டிரில்லியன் டொலர்களுக்கு மேல் செலவாகிய ஏகாதிபத்தியப் போர்களை நியாயப்படுத்த இதே மொழியைப் பயன்படுத்தினார். பிரவுன் பல்கலைக்கழகத்தின் போர்ச் செலவுத் திட்டத்தின் படி, 2001 முதல் 2021 வரை ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களுக்கு ஒவ்வொரு வரி செலுத்துபவரும் 8,278 டொலர்களை செலுத்தியதாக பென்டகனால் வெளியிடப்பட்ட 2022 அறிக்கை ஒப்புக்கொண்டது. இருப்பினும், உண்மையான எண்ணிக்கையின் அளவு இதனைவிட அதிகமாக இருக்கலாம்.

உலக அளவில் போர் விரிவாக்கத்துக்கு நிதியளிப்பதற்காக தியாகங்களை பகிர்ந்துகொள்ள பைடென் அழைப்பு விடுத்தார். “இதுபோன்ற தருணங்களில், நாம் யார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் அமெரிக்கர்கள், ஐக்கிய அமெரிக்கா, நாம் ஒன்றாகச் செயற்பட்டால் நம் திறனைத் தாண்டுவதற்கு எதுவும் இல்லை” என்று கூறி தனது உரையை பைடென் நிறைவுசெய்தார்.

தவறு செய்யாதீர்கள் ! அமெரிக்க மக்கள் இந்தப் போர்களுக்கு “ஒன்றாக” பணம் செலுத்த மாட்டார்கள். போருக்கான செலவு முழுவதுமாக தொழிலாளி வர்க்கத்தின் முதுகில் சுமத்தப்படும், அதே சமயம் அடிக்கப்படும் கொள்ளை செல்வந்தர்களுக்குச் செல்லும். பைடெனின் கோரிக்கையானது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போர்ப் பிரகடனமாகும். மேலும், “ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தியாகத்தை பகிர்ந்து கொள்வது” பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் பொய்களைத் தவிர வேறில்லை.

உண்மையில், இந்தப் பணம் ஒதுக்கப்பட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான போர்கள், ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கான போர்களாகும். அவை, ஆளும் உயரடுக்கை வளப்படுத்தவும், உலக வளங்கள் மற்றும் சந்தைகளை வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு தாரைவார்க்கவும் நடத்தப்படுகின்றன. உயிர்ச் செலவு அல்லது டொலர்கள் எதுவாக இருந்தாலும் அதுபற்றி அவர்களுக்கு பிரச்சனை இல்லை.

போருக்காக 105 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுவது, தொழிலாள வர்க்கத்தின் நேரடி செலவில் வருகிறது. அவர்களில் பெரும்பாலோர் சம்பளத்திற்கு சம்பளம் காசோலையை பெற்று வாழ்கின்றனர், மற்றும் கிட்டத்தட்ட பாதிப் பேர்களுக்கு, கையில் ரொக்கமாக வைத்திருக்கும் 400 டொலர்களில், வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடியவில்லை. போர்களுக்காக செலவழிக்கப்படுகின்ற ஒவ்வொரு டொலரும், சமூக திட்டங்கள், மருத்துவம் மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற திட்டங்களின் இழப்பிலிருந்து பெறப்படும்.

தேசிய முன்னுரிமைகள் திட்டத்தின் 2023 ஆய்வின்படி, கல்வி ($84 பில்லியன்), போக்குவரத்து ($67 பில்லியன்) அல்லது ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ($94 பில்லியன்) மத்திய அரசு ஆண்டு முழுவதும் செலவிடும் 100 பில்லியன் டொலர்கள் அதிகமாகும். இது முழு சுகாதார பட்ஜெட்டுக்கு ($100 பில்லியன்) சமம். ஆனால், மொத்த இராணுவச் செலவு இந்த ஆண்டு 1.1 டிரில்லியன் டொலர்களையும் தாண்டும்.

உலக மக்கள் தொகையின் மிக அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பணம் இல்லை என்று தொழிலாளர்களிடம் கூறப்பட்ட நிலையில், பைடென் நிர்வாகத்தின் போருக்கான நிதிக் கோரிக்கை வந்துள்ளது. 100 பில்லியன் டொலர்களுக்கு, பைடென் அமெரிக்காவில் உள்ள வீடற்ற ஒவ்வொருவருக்கும், (Globalgiving.org $20 பில்லியன்), உலகெங்கிலும் பட்டினி அல்லது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கலாம் (ஆக்ஸ்பாமுக்கு $23 பில்லியன்), இரண்டு மில்லியன் மக்களுக்கு, தலா 30,000ம் டொலர்கள் மாணவர் கடனை இரத்து செய்ய முடியும். ($60 பில்லியன்), இதற்கு பின்னும், கிட்டத்தட்ட10 பில்லியன் டொலர்கள் மீதமாக உள்ளது.

போர் கூச்சலிட்டு, அதில் லாபம் ஈட்டும் அதே நிறுவனங்களை, தியாகத்தில் பகிர்ந்து கொள்ள கேட்கப்பட மாட்டாது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகத்தின் (CBO) அறிக்கை, பணக்காரர்களுக்கான பல தசாப்தகால வரிக் குறைப்புகளால் 2022 இல் மட்டும் வரி வருவாய் 9 சதவீதம் குறைந்துள்ளது என்று விளக்கியது. CBO இன் படி, கார்ப்பரேட் வரி வருவாய் 2022 மற்றும் 2023 க்கு இடையில் 5 பில்லியன் டொலர்கள் குறைந்துள்ளது. அரசாங்க பொறுப்புக்கூறல் அலுவலகத்தின் 2023 ஆய்வின்படி, 34 சதவீதம் பெரிய நிறுவனங்கள் இப்போது கூட்டாட்சி வரிகளை செலுத்தவில்லை.

பெருநிறுவன வரிகள், முடிவில்லாத வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்புகள் மற்றும் இராணுவச் செலவினங்களை முறையாகக் குறைத்ததன் விளைவாக, அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை 2023ல் இரட்டிப்பாகி, 1 டிரில்லியன் டொலரிலிருந்து 2 டிரில்லியன் டொலராக உயர்ந்தது என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

பைடெனின் நிதிக் கோரிக்கை அரசியல் அமைப்பின் முற்றிலும் ஜனநாயகமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. இதில் பரந்த மக்களுடைய பாலஸ்தீனிய சார்பு மற்றும் போர் எதிர்ப்பு உணர்வுகளின் எந்த பிரதிபலிப்பையும் அதனிடம் காணவில்லை. வெள்ளிக்கிழமை அன்று, 57 சதவீத அமெரிக்கர்கள் பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதை ஆதரிப்பதாகவும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை 48 சதவீதத்தினர் மட்டுமே ஆதரிப்பதாகவும் CBS ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டது. வியாழன் அன்று, இஸ்ரேலை ஆதரித்து செனட் சபை 97-0 என்ற வித்தியாசத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸட் கட்சி உறுப்பினர் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற போலி-இடது நபர்கள், பைடென் நிர்வாகத்தின் ஆர்வமுள்ள ஆதரவாளர்களாக இருப்பதோடு, நிர்வாகம் பயங்கரமான போர்க்குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட, இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை வெளிப்படையாக ஆதரித்துள்ளனர்.

பைடெனின் 105 பில்லியன் டொலர்களுக்கான கோரிக்கை ஆழ்ந்த செல்வாக்கற்றதாக இருப்பதோடு, அவரது பொருத்தமற்ற சொல்லாட்சி யாரையும் நம்ப வைக்காது. இஸ்ரேலிய போர்க்குற்றங்களை கண்டிக்கும் வகையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கிய அமெரிக்க நகரங்களிலும் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் காசா நகரில் அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய பயங்கர குண்டுத் தாக்குதலில் கிட்டத்தட்ட 500 பேர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எதிர்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. பெருநிறுவன ஊடகங்களில் போர்-ஆதரவு பிரச்சாரத்தின் சரமாரியான வெள்ளம் காரணமாக, இத்தகைய எதிர்ப்பு ஊடகங்கள்-இராணுவம்-தொழில்துறை வளாகத்தின் குறிப்பிடத்தக்க முறிவைக் குறிக்கிறது.

கீழிருந்து வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொண்டுவரும் பைடென், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு பொருளாதாரம் முழுவதுமாக அடிபணிய வேண்டும் என்று கோருகிறார். அவர், தனது உரையில், “இரண்டாம் உலகப் போரில் இருந்ததைப் போலவே, இன்று தேசபக்தியுள்ள அமெரிக்கத் தொழிலாளர்கள் ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்கி சுதந்திரத்திற்காக சேவை செய்கிறார்கள்” என்று கூறி, போர்க்கால உற்பத்திக்கு மாறுவதற்கு அவர் அழைப்பு விடுத்தார். முடிவில்லாத ஆயுதப் பாய்ச்சலுடன் “நமது பங்குகளை நிரப்புவதற்கான” அவரது கோரிக்கைக்கு வர்க்கப் போராட்டத்தை அடக்குதல், அபாயகரமான வேகப்படுத்துதல் மற்றும் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்குதல் ஆகியவை தேவைப்படும்.

இந்த முயற்சியில், பைடென் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் விருப்பமுள்ள பங்காளியாக இருக்கிறார். இந்த அதிகாரத்துவங்கள், ஜனநாயகக் கட்சி மற்றும் ஏகாதிபத்திய அரசில் இருந்து பிரிக்க முடியாதவையாகிவிட்டன. வேலைநிறுத்தங்களைத் தடுக்கவும், உற்பத்தியைப் பராமரிக்கவும், பெருநிறுவனங்கள் சாதனை லாபத்தை அடையவும், பல தசாப்தங்களாக அவை உழைத்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில், UAW தொழிற்சங்க தலைவர் ஷான் ஃபைன் மிச்சிகனில் உள்ள வில்லோ ரன் ஆலையில் பைடெனுடன் தோன்றினார். இந்த தொழிற்சாலை முன்பு குண்டுவீச்சு விமானங்களை தயாரித்ததுடன், “ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியத்தின்” ஒரு பகுதியாக, தொழிற்சங்கத்தில் சேர்வதைப் பற்றி பேசியதை சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவடையும் போர்க் களங்கள் அனைத்திற்கும் கொடிய ஆயுதங்களின் ஓட்டத்தைத் தக்கவைக்க, பைடென் நிர்வாகத்துடன் அதிகாரத்துவம் ஒத்துழைக்கிறது என்பதற்கான நேரடி சமிக்ஞை இதுவாகும். வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போட்டியாளர்கள் மற்றும் இலக்குகளுக்கு எதிரான போர் என்பது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரைக் குறிக்கிறது

அமெரிக்காவில் வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தை கட்டுப்படுத்த அதிகாரத்துவங்கள் ஏற்கனவே போராடி வருகின்றன. இது, சமீபத்திய நாட்களில் மூன்று பெரிய வாகனத் தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் மேக் டிரக்ஸ் தொழிலாளர்கள் முதல் டெட்ராய்டில் உள்ள கேசினோ தொழிலாளர்கள் வரை போராட்டம் பரவியுள்ளது. எல்லா சந்தர்ப்பங்களிலும், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்படியாகாது என்று பெருநிறுவனங்கள் கூறுகின்றன. உண்மையில், மூன்று பெரிய வாகனத் தொழிற்சாலையின் 150,000 தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100,000ம் டொலர்களை செலுத்த 15 பில்லியன் டொலர்கள் மட்டுமே செலவாகும், மேலும் இது போருக்கு அவசரமாகத் தேவை என்று பைடென் கூறும் பணத்தில் வெறும் 15 சதவீதம் மட்டுமே ஆகும்.

உலக வர்க்கப் போராட்டத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வுடன் பிரமாண்டமான முறையில் ஒத்துப்போகின்றன. ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் அவர்களின் போலி-இடது ஆரவாரவாதிகள் கடந்த காலத்தில் செய்தது போல், எதிர்ப்பை திசைதிருப்பி அடக்குவதைத் தடுப்பதற்கும், ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் போராடுவதற்கும், அரசியல் தலைமைக்கான தீர்க்கமான தேவையை இது எழுப்புகிறது. அதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு ஆகும்.