மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மார்ச் 17 அன்று P&O ஆல் பணிநீக்கம் செய்யப்பட்ட 800 மாலுமிகளுக்கு ஒத்துழைத்து, நெதர்லாந்தில் சரக்கு ஏற்றும் கப்பல்துறை தொழிலாளர்கள் இங்கிலாந்தின் ஹல் நகருக்கு அனுப்பப்படவிருந்த Pride of Rotterdam கப்பலில் சரக்குகளை ஏற்ற மறுத்துவிட்டனர். இந்த கப்பல் இறுதியில் ரோட்டர்டாமில் உள்ள யூரோபூர்ட்டை விட்டு வெளியேற முடிந்தது.
கப்பலின் நுழைவாயிலைத் ஆரவாரத்துடன் தடுக்கும் கப்பல்துறை பணியாளர்களின் வரிசையைக் காட்டும் வீடியோ FNV கப்பல்துறை தொழிலாளர் பிரிவின் தேசிய செயலாளரான Niek Stam ஆல் ட்வீட் செய்யப்பட்டு பரவலாக பரப்பப்பட்டது. மார்ச் 25 அன்று மாலை 6.42 மணிக்கு பதிவிடப்பட்ட இந்த காணொளி 800,000 க்கும் மேற்பட்ட முறைகள் பார்க்கப்பட்டுள்ளது.
டச்சு கப்பல் சரக்கு தொழிலாளர்களின் நடவடிக்கையானது சனிக்கிழமை ஹல் நகரிலும் தொழிலாளர்களின் நடவடிக்கையைத் தூண்டியது, அதாவது டஜன் கணக்கான P&O தொழிலாளர்கள் ஆதரவாளர்கள் A64 இல் நடந்து ஹெடன் சாலையில் இருந்து கிங் ஜோர்ஜ் கப்பல்துறைக்குள் நுழையும் பாதையில் போக்குவரத்தை மெதுவாக்கினர். டச்சு கப்பல் சரக்கு தொழிலாளர்களின் நடவடிக்கையால் தாமதமாகி, Pride of Rotterdam கப்பல் சரக்குகளை ஏற்றுவதற்கு தயாராகும் வகையில் ஹல் நகருக்கு வந்துகொண்டிருந்தது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய, மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு வெளியே உள்ள உலகின் மிகப்பெரியதான ரோட்டர்டாம் துறைமுகத்தில் உள்ள கப்பல் சரக்குத் தொழிலாளர்கள் காட்டிய சர்வதேச ஒற்றுமை, சோசலிச சர்வதேசியத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டப்படக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் மகத்தான கூட்டு பலத்தை நிரூபிக்கிறது.
எனவே, டச்சு தொழிலாளர்களின் ஒற்றுமை பிரிட்டிஷ் தொழிற்சங்கங்களுக்கும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெறுப்பூட்டுவதாக இருந்தது, இவர்களின் தேசியவாத பிரச்சாரம், பிரிட்டனிலும் மற்றும் எல்லைகள் தாண்டி பெரும்பாலான உலகளாவிய தொழில்கள் சார்ந்த தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதை எதிர்க்கிறது, மேலும் அதற்கு மாறாக ‘பிரிட்டனின் கப்பல்களை காப்பாற்றவும்’ மற்றும் கடல்சார் தொழிலிலும் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம் தலையிடுமாறு கோருவதில் கவனம் செலுத்துகிறது. தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு பத்து நாட்களுக்குப் பின்னர், தங்கள் உறுப்பினர்கள் அந்த இடத்திலேயே பணிநீக்கம் செய்யப்பட்டு, முகமூடி அணிந்த மற்றும் கைவிலங்கு இடுவதற்கு பயிற்சி பெற்ற குண்டர்களால் கப்பல்களில் இருந்து அகற்றப்பட்டனர் என்ற நிலையில், இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் (RMT), மற்றும் Nautilus தொழிற்சங்கம் ஆகியவற்றால் அழைப்பு விடுக்கப்பட்ட வேலைநிறுத்த வாக்கெடுப்பு ஒருபுறமிருக்க, எந்த தொழில்துறை நடவடிக்கையும் அச்சுறுத்தப்படவில்லை.
கிட்டத்தட்ட 17 மணி நேரம் கழித்து சனிக்கிழமை காலை 9.30 மணி வரை டச்சு தொழிலாளர்களின் நடவடிக்கையின் காணொளியை மறு ட்வீட் செய்ய Trades Union Congress இன் ட்விட்டர் பக்கத்தால் முடியவில்லை. இறுதியாக அது ட்வீட் செய்தபோது, அதன் ட்வீட் 13,000 முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது, மேலும் 2,600 க்கும் மேற்பட்ட முறைகள் பகிரப்பட்டது. Hull Karl Turner க்கான தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர், ‘இன்றே தொழிற்சங்கத்தில் சேருங்கள்’ என்று கூறி காணொளியை இழிந்த முறையில் மறு ட்வீட் செய்தார்.
TUC க்கான பதில்கள் அவ்வளவு சாதகமாக இல்லை. ஒரு கருத்து, “@POferries க்கு எதிராக @RMTunion உடன் நின்றதற்காக ரோட்டர்டாம் கப்பல் தொழிலாளர்களுக்கே அனைத்துப் புகழும் போய்ச்சேரும். ஆனால் அவர்களால் சண்டையிட முடியுமானால், ஏன் உங்களால் முடியாது?” என்று கூறியது. மற்றொரு கருத்து, “TUC, ஒற்றுமையுடன் சூடான வார்த்தைகளை குழப்புகிறது” என்றது. மேலும் மற்றொரு பதிவு, “அவர்கள் TUC ஐ விட அதிகமாக செய்கிறார்கள்… நீங்கள் என்னைக் கேட்டால் எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது! முதலில் செயலில் இறங்குங்கள், பின்னர் அதிகம் செய்யுங்கள்!! பணிநீக்கம் செய்யப்பட்ட P&O தொழிலாளர்களுக்கு உங்கள் ஒற்றுமையைக் காட்டுங்கள், மேலும் ஐரோப்பாவில் உள்ள தோழர்களுக்கு உங்கள் சர்வதேச ஒற்றுமையைக் காட்டுங்கள்!” என்று கூறியது.
தொழிற்சங்கங்கள் விரலை உயர்த்தக் கூட மறுப்பது என்பது, டோரி அரசாங்கத்தின் ஆய்வாளர்கள் கடந்த வாரம் அயர்லாந்தின் லார்னில் உள்ள P&O இன் Eruopean Causeway கப்பலை ‘செலுத்தத் தகுதியற்றது’ என்று தடுத்து வைக்க வேண்டிய சூழலில் நடக்கிறது. ஒரு மணிநேரத்திற்கு 5.15 பவுண்டுகள் குறைந்த ஊதியத்தில் கருங்காலித் தொழிலாளர் குழுவைக் கொண்டு கப்பல் வேலைகள் நடத்தப்படுவதால், ஆய்வாளர்கள் “கப்பல் பணியாளர் குழுவை அறிமுகப்படுத்துதல், கப்பல் ஆவணப்படுத்துதல் மற்றும் பணியாளர் பயிற்சி ஆகியவற்றில் தோல்விகளை” கண்டறிந்தனர், மேலும் பணியாளர்கள் மற்றும் பயணிகள் மற்றும் பிற கப்பல்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அனைத்து சிக்கல்கள் உருவாவதையும் கண்டனர்.
சனிக்கிழமை, டோவர், ஹல் மற்றும் லிவர்பூல் துறைமுகங்களில், தொழிலாளர் பணிநீக்கங்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
டோவரில், எதிர்ப்பாளர்கள் RMT தலைமையகத்தில் இருந்து கப்பல்துறைக்கு பலத்த பொலிஸ் கெடுபிடிக்கு மத்தியில் அணிவகுத்துச் சென்றனர். தொழிற்சங்கங்களின் முன்னோக்கின் முட்டுச்சந்தை எடுத்துக்காட்டும் வகையில், இரண்டு P&O கப்பல்கள் கருங்காலிப் பணியாளர்கள் பணிபுரியும் கப்பல்துறைகளில் இருந்து புறப்பட தயாராக இருந்தன.
RMT பேச்சாளர் ரோட்டர்டாம் நடவடிக்கையை ஒப்புக்கொண்ட அதேவேளை, அந்த நடவடிக்கையால் “185 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனத்தின் நன்மதிப்பு ஒரே நாளில் அழிக்கப்படுவதை” P&O தலைமை நிறைவேற்று அதிகாரி Peter Hebblethwaite சமாளித்தார் என்றாலும், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. Hebblethwaite உம் அவரது குழுவும் நிற்க முடிந்ததா என்ற கேட்கப்பட்டதற்கு, தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர், “அப்போதுதான் முன்பு இருந்த அற்புதமான மற்றும் உறுதியான தர அடையாளத்தை நம்மால் கட்டமைக்க முடியும்” என்று கூறினார்.
சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், தேசியவாதத்தை நிராகரித்து சர்வதேச மூலோபாயத்தை கையிலெடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்து, “‘பிரிட்டனின் கப்பல்களைக் காப்பாற்றுங்கள்’ பிரச்சாரத்தின் முட்டுச்சந்து: சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!” என்ற தலைப்பிலான பிரசுரங்களை விநியோகித்தனர். செய்தியாளர்கள் எதிர்ப்பாளர்களிடம் பேசினர்.
க்ளோ என்பவர், “P&O இல் கரையோரத் தொழிலாளியாக பணியாற்றி வேலையிழந்து நிற்கும் எனது சகோதரிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன். நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டத்தைத் தொடர வேண்டும். நிறுவனத்தின் செயல் படு கேவலமானது. அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட வேண்டும்” என்று கூறினார்.
லெய்லா என்பவர், “எனது மாமனார் 35 வருடங்களாக P&O இல் பொறியாளராக இருந்தார், இந்த நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு இந்த அவலம் நடக்க அனுமதிக்கக் கூடாது. P&O முடிந்தால் இதிலிருந்து விலகட்டும், பிற நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும், அதனால்தான் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நாம் இதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
போல், P&O இல் பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற மாலுமி ஆவார், இவர், “நிறுவனம் செய்திருப்பது மிகவும் வெறுக்கத்தக்கதாகும், இதை நடக்க அனுமதிக்கக் கூடாது. வேலைவாய்ப்புச் சட்டத்தை மாற்றியதற்கு டோரிகள்தான் காரணமாகும். கடுமையான வார்த்தைகளால் எதையும் சாதிக்க முடியாது, மாறாக செயலில் இறங்குவதுதான் நமக்குத் தேவை” என்று கூறினார்.
“நான் 20 பேர் கொண்ட பணியாளர் குழுவை இயக்கி வந்தேன், அது பின்னர் 16 ஆக, ஒன்பதாக, மேலும் இறுதியில் ஆறாக குறைந்து போனது. வாரத்தின் ஆறு நாட்களில் இரவு பகலாக 24 மணி நேரமும் நாங்கள் கப்பலைச் செலுத்தினோம், எங்கள் பணிச்சுமை கடுமையாக அதிகரித்ததால் எனக்கு பாதுகாப்பற்றுப் போனது. இறுதியில், எனது உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த ஆண்டு நான் வேலையில் இருந்து விலகிவிட்டேன்.”
உயர் பயிற்சி பெற்ற பணியாளர்களின் அவசியத்தை போல் வலியுறுத்தினார். “தற்போது பணி மதிப்பீடுகள் எதுவும் இல்லை, அதிகாரிகளும் இல்லை. மோசமான விதிமுறைகளின் அடிப்படையில் அவர்கள் கருங்காலிகளை வேலைக்கு அமர்த்தியிருப்பது மிகவும் ஆபத்தானது. அதிக மக்களை கப்பலில் ஏற்றுவது, மற்றும் திடீரென தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது போன்ற பல சூழ்நிலைகளை நான் கையாண்டிருக்கிறேன். அதைச் சமாளிக்க உங்களுக்கு ஒரு பயிற்சி பெற்ற குழு தேவை. ஆனால், இவர்களுக்கோ பயிற்சி அளிக்கப்பட மாட்டாது. ஒருவரை கப்பலில் பணியில் சேர்க்க குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும், அது வெறும் அடிப்படை பயிற்சிக்கு மட்டுமே. நீங்கள் கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்த மாட்டீர்கள், அது ஒரு தொடர்ச்சியான செயல்முறை ஆகும்” என்று கூறினார்.
மார்ச் 6, 1987 அன்று பெல்ஜிய துறைமுகம் ஜீப்ரூக்கில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் Townsend Thoresen Herald of Free Enterprise கப்பல் மூழ்கியபோது, 193 பணியாளர்களையும் பயணிகளையும் இழந்தபோது போல் கப்பலில் பணியில் இருந்தார். “அது பயங்கரமானது மற்றும் உண்மையில் கற்றுக்கொள்ளப்படாத படிப்பினைகளாக இருந்தன” என்றார்.
இந்த 800 பணிநீக்கங்கள் வேலை வெட்டுக்களின் வரிசையில் சமீபத்தியதாகும். “நீண்ட காலத்திற்கு முன்பு அல்ல [ஜூன் 2020 இல்] 1,200 பேர் தங்கள் வேலையை இழந்தனர், இப்போது மேலும் 800 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இப்படியிருந்தால், உங்களால் ஒரு பெரிய வணிக மேலாண்மையை இயக்க முடியாது. இன்னும் 1,400 பேர் அலுவலகத்தில் உள்ளனர். அவர்கள் பிரகாசமான யோசனைகளுடன் உள்வரும் வெவ்வேறு தலைமை நிறைவேற்று அதிகாரிகளுடன் சேர்ந்து, மில்லியன் கணக்கான தொகையை வீணடித்து வந்தனர். அவர்கள் கப்பலை மறுசீரமைக்காமல் வெளியே கொண்டுவந்தனர். ஏனென்றால் அதற்கு அவர்களுக்கு 25 மில்லியன் பவுண்டுகள் வரை செலவாகும், இப்போது அது டன்கிர்க்கில் துருப்பிடித்து கிடக்கிறது. அவர்கள் மில்லியன்களை சேமிப்பது பற்றி பேசுகிறார்கள். ஆனால் நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள்.
டோவரில் வேலை இழப்புகளின் தாக்கம் பேரழிவு தருவதாக போல் கூறினார். “அதாவது ஊரில் 600 பேர் செலவழிப்பதில்லை, அனைத்தின் விலைகளும் கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், உங்களுக்கு கண்ணியமான கூலி கிடைக்காது. இப்போது இந்த நிறுவனம் ஒரு மணி நேரத்திற்கு 5 பவுண்டுகளுக்கு குறைவாக மக்களுக்கு சம்பளம் கொடுக்க முயற்சி செய்து வருகிறது.
“சில ஆண்டுகளுக்கு முன்பு, P&O கடற்படையை சைப்ரஸூக்கு மாற்றியது, மேலும் அனைத்து பெயர்களையும் மாற்றியது. இது யாருடைய விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் பாதிக்காது என்று கூறினார்கள். இப்போது காட்டப்படுகிறது. அதாவது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கப்பல் பணியாளர்களை குறைப்பதற்கான ஒரு செயல்முறையாகும்.
ஜோன், தேசிய சுகாதார சேவை ஊழியரான இவர், “இது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலாகும், அதாவது, இலாபமீட்டுபவர்கள் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்களே தவிர, தங்களைச் சுற்றியுள்ள பணியாளர்களின் நலன் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை” என்று கூறினார்.
“நாம் ஜனநாயக ரீதியாக தொழிலாளர்களால் நடத்தப்பட வேண்டும், மாறாக மொத்த பணத்தையும் கையகப்படுத்தும் கொழுத்த பூனைகளால் நாம் நடத்தப்படக் கூடாது. மக்களை இந்த வழியில் நடத்த முடியாது என்பதை நிறுவனங்களுக்கு காட்ட வேண்டும்.
“இந்த வாழ்க்கைச் செலவின நெருக்கடியால் தொழிலாள வர்க்கம் இன்னும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. அனைத்தின் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது, ஆனால் மக்களின் ஊதியம் மட்டும் குறைந்து கொண்டே வருகிறது. அரசாங்கம் தொழிலாளர்களை ஆதரிப்பதற்கு எதையும் செய்யவில்லை, மாறாக பங்குதாரர்களையும், வணிகர்களையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது. இந்த நாட்டின் போக்கை நாம் மாற்ற வேண்டும். அதாவது, தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக நடத்தப்படும் சோசலிசம் தான் நமக்குத் தேவை.”
மேலும் படிக்க
- P&O தொழிலாளர்களுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு 1.82பவுண்டுகள் ஊதியத்துடன் கப்பல் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது
- PSOE-Podemos அடக்குமுறையிலிருந்து ஸ்பானிய ஓட்டுனர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை பாதுகாப்போம்!
- 800 P&O இன் கப்பல் ஊழியர்களின் பணிநீக்கத்திற்கு எதிராக நான்கு பிரித்தானியத் துறைமுகங்களில் போராட்டம்