அஜர்பைஜானின் புதிய தாக்குதலுக்குப் பிறகு ஆர்மேனிய குடிமக்கள் நாகோர்னோ-கராபக்கிலிருந்து வெளியேறினர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

செப்டெம்பர் 20 ஆம் திகதி அஸெரிப் படைகளானது, ஆர்மேனியப் படைகள் மற்றும் ரஷ்ய அமைதி காக்கும் படையினரைத் தாக்கி ஆர்மேனிய துருப்புக்களை சரணடைய வற்புறுத்தியதில் இருந்து, சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பகுதியில் இருந்து குறைந்தது 28,000ம் ஆர்மேனியர்கள் வெளியேறியுள்ளனர். நாகோர்னோ-கராபக்கின் 120,000ம் மக்களில் கணிசமான பகுதியினர் தற்போது அகதிகளாக மாறியுள்ளனர்.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போருக்கு மத்தியில் நிகழும், இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளான ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானுக்கு இடையிலான சகோதர யுத்தம், 1991ல் ஸ்ராலினிச தேசியவாத அதிகாரத்துவத்தால் சோவியத் யூனியனை கலைத்ததன் மற்றொரு பேரழிவுகரமான விளைவு ஆகும். நாகோர்னோ-கராபாக் மீதான முதல் அஸெரி-ஆர்மேனியப் போர் 1988 இல் தொடங்கி 1994 வரை நீடித்தது, இதன் விளைவாக அப்பகுதியை ஆர்மேனியா கைப்பற்றியது. இந்த நிலைமையில், அருகிலுள்ள உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போருக்கு மத்தியில், இந்த போர் மீண்டும் வெடித்துள்ளது.

ஏற்கனவே 2020 இல், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ஆதரவுடன் ட்ரோன்களுடன் ஆயுதம் ஏந்திய அஸெரிப் படைகள் நாகோர்னோ-கராபக்கைக் கட்டுப்படுத்திய ஆர்மீனியப் படைகளிடம் தோல்வியைச் சந்தித்தன. கடந்த ஜூன் மாதம் முதல், அஸேரியின் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ், நாகோர்னோ-கராபக்கைத் தடுத்து, அதன் தரைவழிப் போக்குவரத்து வழிகளை மூடி, உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கான அணுகலைத் துண்டித்துள்ளார். கடந்த வாரம், அஸெரிப் படைகள் ஆர்மீனியப் படைகளை வேகமாகத் தாக்கி, ஒரு நாள் சண்டைக்குப் பிறகு, விரைவான சரணடைதலை கட்டாயப்படுத்தியது.

அஸெரி துருப்புக்கள் கிராமங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்துவதாகவும், தலைநகர் ஸ்டெபனகெர்ட்டின் ஒரு பகுதியை (அஸெரியில் உள்ள கான்கெண்டி) கட்டுப்படுத்துவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில், பல்லாயிரக்கணக்கான ஆர்மேனிய பொதுமக்கள் நாகோர்னோ-கராபக்கிலிருந்து வெளியேறி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை, மேலும் ஒரு சோகமான நிகழ்ச்சியாக, ஆர்மீனியாவிற்கு தப்பிச் செல்வதற்கு எரிபொருளைப் பெறுவதற்காக சிவிலியன் கார்களால் சூழப்பட்டிருந்த ஸ்டெபனகெர்ட்டில் உள்ள எரிபொருள் கிடங்கு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 290 பேர் காயமடைந்தனர், அவர்களில் பலர் கடுமையான தீக்காயங்களுடன் முற்றுகையில் தடுக்கப்பட்ட பகுதியில், சிகிச்சைகளை பெற முடியாத நிலைமையில் உள்ளனர்.

அஸேரி அதிகாரிகள் தாங்கள் சிவிலியன் பகுதிகளைத் தாக்கவில்லை என்று மறுத்துள்ளனர், ஆனால் ஆர்மீனியாவிற்கு தப்பிச் செல்லும் பொதுமக்கள் தாங்கள் பயங்கரமான நிலைமைகளை எதிர்கொண்டதாக சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். ஆர்மீனியாவிற்கு தப்பி ஓடிய 69 வயது ஓட்டுநரான பெட்டியா கிரிகோரியன், ராய்ட்டர்ஸிடம் அஸெரி படைகள் தனது கிராமமான கோச்சோகோட் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் தெருவில் “பெரும் தொகையானவர்கள்” இறந்து கிடந்ததாகவும், “அவர்களை புதைக்க எங்கும் இடம் இல்லை” என்று கிரிகோரியன் கூறினார். “நாங்கள் முடிந்ததை எடுத்துக் கொண்டு கிளம்பினோம், நாங்கள் எங்கு செல்கிறோம் என்று தெரியவில்லை, நாம் எங்கு போவதென்று தெரியவில்லை” என்று மேலும் அவர் கூறினார்.

ஷோஷ் கிராமத்தை அஸெரி துருப்புக்கள் ஷெல் தாக்கியதால், நைரி என்ற கட்டிடத் தொழிலாளி தனது குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறினார். “இத்தாக்குதலில் பல குழந்தைகள் காயமடைந்தனர். அமைதி காக்கும் படையினர் வந்து மக்களை வெளியே அழைத்துச் செல்லும் வரை நாங்கள் வீட்டின் அடித்தளத்தில் அமர்ந்திருந்தோம்” என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார். அவரும் அவரது குடும்பத்தினரும் ஸ்டெபனகெர்ட் விமான நிலையத்திற்கு தப்பி ஓடினர். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். அங்கு “சிறுவர்கள் தங்கள் ரேஷன்களை குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டதுக்காக நாங்கள் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்”, என்று குறிப்பிட்ட அவர், “ரஷ்ய அமைதி காக்கும் படையினர் தங்கள் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக பட்டினி கிடந்தனர்” என்று தெரிவித்தார்.

நரின் ஷகார்யன் என்பவரும் அவரது குடும்பத்தினரும், அவரது மருமகனின் காரில் 24 மணிநேரத்தில் 77 கிலோமீட்டர்கள் (48 மைல்கள்) தூரத்திலுள்ள ஆர்மீனியாவுக்கு உணவு இல்லாமல் தப்பிச் சென்றனர். “பயணம் முழுவதும், அழுது கொண்டிருந்த குழந்தைகள் பசியுடன் இருந்தனர், நாங்கள் உயிருடன் இருப்பதற்காகவே அங்கிருந்து புறப்பட்டோம்” என்று நரின் கூறினார்.

2020 போருக்குப் பிறகு அமைதி காக்கும் படையினராக நாகோர்னோ-கரபாக்கில் நிலைகொண்டிருந்த ரஷ்யப் படைகள் மீதும் அஸெரி துருப்புக்கள் வேட்டுக்களை தீர்த்தன. இதில், ரஷ்ய இராணுவ ஆதாரங்களின்படி, ரஷ்ய வடக்கு கடற்படையின் கேப்டன் முதல் தரவரிசையிலுள்ள இவான் கோவ்கன் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அஸெரி அதிகாரிகள் இது தவறு என்றும், ரஷ்ய வழக்குரைஞர்களுடன் இணைந்து இந்த கொலைகள் குறித்து கூட்டு விசாரணை நடத்துவதாகவும் உறுதியளித்தனர்.

நாகோர்னோ-கராபாக் பகுதியில் விரிவடைந்துவரும் பேரழிவு, ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான தற்போதைய போரைப் போன்ற ஒரு சகோதர யுத்தத்திற்குள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பரந்த வீழ்ச்சியிலிருந்து பிரிக்க முடியாதது. இது சோவியத் அதிகாரத்துவத்தின் தேசியவாதம் மற்றும் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கான அதன் தவறான ஸ்ராலினிச கோட்பாடு மற்றும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய சக்திகளால் நடத்தப்பட்ட போர்களின் நச்சு விளைவு ஆகும்.

பிரதான முதலாளித்துவ அரசாங்கங்கள், இந்த படுகொலைகளைத் தடுக்கவோ அல்லது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதைத் தடுக்கவோ கவனம் செலுத்தவில்லை. மாறாக, போரில் தங்கள் மூலோபாய நிலையை மேம்படுத்த இந்த நெருக்கடியைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இது முதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தொடங்குகிறது, இது நேட்டோ-சார்பு ஜனாதிபதி நிகோல் பஷினியன் தலைமையிலான ஆர்மீனியாவை ரஷ்யா மற்றும் ஈரானுடனான பாரம்பரியமாக நெருங்கிய உறவுகளில் இருந்து பிரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரஷ்யாவைக் கண்டனம் செய்வதன் மூலம் ஆர்மேனிய இராணுவத் தோல்விக்கு பாஷினியன் பதிலளித்தார். “உக்ரேனில் நடந்துவரும் சம்பவங்களின் விளைவாக, ரஷ்யாவின் திறன்கள் மாறிவிட்டன, இவை அனைத்தும்… ரஷ்ய அமைதி காக்கும் படையினரின் பொறுப்பில் இருக்க வேண்டும், மேலும் இந்த பிரச்சினைகள் இருக்கும் வரை ரஷ்ய அமைதி காக்கும் படையினர் தங்கள் பணியில் தோல்வியடைந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

கடந்த செவ்வாய் அன்று, ஆர்மேனிய தலைநகர் யெரெவனில், பஷின்யானை சந்தித்த சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) தலைவர் சமந்தா பவர், அங்கிருந்து அஸேரி ஜனாதிபதி இல்ஹாம் அலியேவின் மனசாட்சிக்கு ஒரு முறையீடு செய்தார். “போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்கவும், நாகோர்னோ-கராபாக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும்” என்று அவர் அலியேவுக்கு அழைப்பு விடுத்தார். இப் பிராந்தியத்திற்கு ஒரு “சர்வதேச கண்காணிப்பு பணியையும்” அவர் முன்மொழிந்தார்.

சமந்தா பவரின் சிடுமூஞ்சித்தனமான வாய்வீச்சு பொதுமக்களுக்கு உதவுவதையோ அல்லது அலியேவை வளைப்பதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அலியேவ் ஆட்சி நாகோர்னோ-கராபக்கைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் அதைக் கட்டுப்படுத்த அவர் இரும்புக்கரத்தை உருவாக்குகிறார் என்று பெருமையாகக் கூறுகிறார். மாறாக, உக்ரேனில் உள்ள முக்கிய போர் அரங்குகளுக்கு அருகில், ரஷ்யாவின் எல்லைகளில் பரந்த நேட்டோ செல்வாக்கை நிறுவுவதை சமந்தா பவர் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

உண்மையில், காகசஸ் பிராந்தியம் மதிப்புமிக்க இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது மட்டுமின்றி, கிரிமியா மற்றும் உக்ரேன் எல்லையில் ரஷ்யாவின் பகுதிகளுக்கு அருகில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளது. காகசஸில் ஒரு நேட்டோ மூலோபாய மற்றும் இராணுவ இருப்பு ரஷ்யாவுடன் நேரடியாக போரைத் தொடங்குவதற்கான தயாரிப்பில் நேட்டோவை பலப்படுத்தும்.

கடந்த திங்கட்கிழமை, துருக்கி, ஆர்மீனியா மற்றும் ஈரான் எல்லையில் உள்ள அஜர்பைஜானின் நிலத்தால் சூழப்பட்ட தன்னாட்சி நிலப்பகுதியான நக்கிச்செவனில் அலியேவை சந்திக்க துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் பயணம் செய்தார். நாகோர்னோ-கரபாக்கில் அஸெரி துருப்புக்களின் வெற்றியை “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை” என்று அலியேவ் அழைத்ததை எர்டோகன் பாராட்டினார். “குடிமக்களின் உரிமைகளுக்கு மிகுந்த மரியாதை அளித்து, குறுகிய காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது பெருமைக்குரியது” என்று எர்டோகன் சிடுமூஞ்சித்தனமாக அறிவித்தார்.

எர்டோகன் மற்றும் அலியேவ் ஆகியோர் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானின் சர்ச்சைக்குரிய பகுதிகள் வழியாக துருக்கிக்கு அஸெரி எரிவாயுவைக் கொண்டு வருவதற்கான கூட்டு எரிவாயு குழாய்க்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அஜர்பைஜானின் சமீபத்திய தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, துருக்கிய மற்றும் அஸெரி அரசாங்கங்கள் ஜான்செகூர் வழித்தடத்தை திறப்பது பற்றி விவாதித்தன. இது ஆர்மீனியாவால் எதிர்க்கப்பட்ட திட்டமாகும், இது ஆர்மேனிய பிரதேசத்தின் வழியாக செல்லும் சாலையின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு அஜர்பைஜானை நக்சிவன் மற்றும் துருக்கியுடன் இணைக்கிறது.

“இந்த வழித்தடத்தை விரைவில் திறக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு மிகவும் முக்கியமான இந்த வழித்தடத்தின் கட்டுமானம் ஒரு மூலோபாய பிரச்சினை மற்றும் முடிக்கப்பட வேண்டும்” என்று எர்டோகன் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், பாஷினியனின் கருத்துக்களை எதிரொலித்தார், ஆர்மீனியாவைக் பாதுகாக்க ரஷ்யா மிகவும் பலவீனமாக இருப்பதை இந்தப் போர் காட்டுகிறது என்று குறிப்பிட்டார். “ரஷ்யா ஒரு நம்பகமான பாதுகாப்பு பங்காளி அல்ல என்று நான் நினைக்கிறேன்”  என்று குறிப்பிட்ட மில்லர், காகசஸுக்கு ஒரு “சர்வதேச பணிக்கு”  அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவிற்கான ரஷ்யாவின் தூதர் அனடோலி அன்டோனோவ், “ரஷ்யாவிற்கு மூலோபாய சேதத்தை ஏற்படுத்தவும், பிராந்தியத்தில் இருந்து எங்களை வெளியேற்றவும்” மில்லர் முயல்வதாக குற்றம் சாட்டினார்.

வாஷிங்டன், டி.சி-யை தளமாகக் கொண்ட செல்வாக்கு மிக்க மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான சிந்தனைக் குழு, ஆர்மேனிய-அஸெரி மோதல் நேட்டோவை காகசஸில் வலுவான இராணுவ சக்தியாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்று அறிவித்து, பின்வருமாறு எழுதுகிறது :

“2022 இல் உக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு, பல தசாப்தங்களாக நீடித்த மோதலில் திறம்பட கட்டுப்படுத்தும் மற்றும் தலையிடும் அதன் திறனை பலவீனப்படுத்தியுள்ளது. இது மற்ற வெளி நடிகர்களுக்கு (துருக்கி, இஸ்ரேல் மற்றும் ஈரான்) தங்கள் சொந்த நலன்களையும் நிகழ்ச்சி நிரல்களையும் பிராந்தியத்தில் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கராபக் ஆர்மீனியர்களுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட அஜர்பைஜான் தாக்குதல் இந்த மாறிவரும் சக்தி இயக்கவியலை பிரதிபலிக்கிறது, மேற்கத்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு காகசஸில் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான சாத்தியமான உத்தரவாதம் அளிக்கும் வாய்ப்பை வழங்குகிறது, இது ரஷ்யாவால் பிரபலமாக கூறப்படும் தலைப்பாக இ்ருக்கிறது”.

இந்த போர் சுழலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் சோவியத் யூனியனிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை, ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிராக ஒரு சோசலிசப் புரட்சிக்கான ட்ரொட்ஸ்கிச போராட்டத்தில் ஐக்கியப்படுத்த வேண்டும். ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ தலைமையிலான போரின் தீவிரமானது, சோவியத் யூனியனின் கலைப்பிலிருந்து உருவாகிய இரத்தக்களரி இன மோதல்களுக்கு அமைதியான தீர்வைத் தடுக்கிறது. சோவியத் யூனியனில் ஸ்ராலினிச முதலாளித்துவ மறுசீரமைப்பில் இருந்து வெளிப்பட்ட ஏகாதிபத்திய போர் மற்றும் ஊழல் நிறைந்த முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாக தேவைப்படுகிறது.

Loading