கொரியப் போர் முடிவடைந்து 70 ஆண்டுகள்

பகுதி 1

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அமெரிக்காவின் பி-26 ரக விமானம் ஒன்று 1951-ம் ஆண்டு வடகொரிய நகரமான வொன்சான் மீது குண்டு வீசுகிறது.

மூன்று ஆண்டுகால கொரியப் போரில் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்து, கொரிய தீபகற்பத்தின் பனிப்போர் பிரிவினையில் வேரூன்றிய போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைக் குறிக்கும் இரண்டு பகுதி கட்டுரையின் முதல் பகுதி இதுவாகும்.

கொரிய தீபகற்பத்தில் போர் நிறுத்தம் முடிந்து எழுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் அதிக இராணுவமயமாக்கப்பட்ட எல்லையில் அமைந்துள்ள பன்முன்ஜியம் என்ற இடத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போர்நிறுத்தமானது, தீபகற்பம் முழுவதும் நீண்டுகொண்டிருக்கும் நான்கு கிலோமீட்டர் அகலமான இராணுவமயமாக்கப்பட்ட சூனிய மண்டலத்தால் (DMZ) கொரியாவைப் பிரித்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் 38வது அட்சரேகைக் கோட்டால் (38th parallel) அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரியாவை செயற்கையாகப் பிரித்ததைத் தொடர்ந்து, பனிப்போரின் தொடக்கத்தில் வெடித்த ஒரு மோதலின் தொடர்ச்சியான விளைவு இதுவாகும்.

குறிப்பாக 1949 சீனப் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட பெரும் அடிக்குப் பிறகு, ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த அமெரிக்கா இந்தப் போரைத் தூண்டியது. தீபகற்பத்தை உத்தியோகபூர்வ யுத்த நிலைக்கு தள்ளிய சமாதான உடன்படிக்கை எதுவும் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. இன்று வரை, அமெரிக்கா வட கொரியா மீது இராஜதந்திர மற்றும் பொருளாதார தடையையும், அத்துடன் அக்டோபர் 1, 1953 அன்று கையெழுத்திடப்பட்ட தென் கொரியாவுடனான ஒரு இராணுவ கூட்டணியையும் பராமரித்து வருகிறது. வாஷிங்டன் அதன் பூகோள மேலாதிக்கத்திற்கு பிரதான அச்சுறுத்தலாகக் கருதும் சீனாவுக்கு எதிரான அதன் போர் தயாரிப்புகளை முடுக்கிவிட்டதால்தான் கடந்த தசாப்தத்தில் இந்த கூட்டணி பலப்படுத்தப்பட்டது. தென் கொரியா தற்போது டஜன் கணக்கான அமெரிக்க தளங்களையும் சுமார் 28,500ம் அதன் துருப்புக்களையும் கொண்டிருக்கிறது.

கொரியாவில் ஆழமான வரலாற்று வடுக்கள் உள்ளன. இரு கொரியாக்களும் பாரிய உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சீரழிவுகளால் பேரழிவை சந்தித்தன. இந்த மோதலில் மட்டும் 2.5 மில்லியன் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு முறையே 520,000 மற்றும் 415,004 படையினர்களை இழந்துள்ளன. மேலும் 900,000 சீன துருப்புகளும், 36,940 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர். போரில் ஈடுபட்ட அமெரிக்க நட்பு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிப்பாய்களும் உயிரிழந்தனர். கொரிய தீபகற்பத்தின் செயற்கைப் பிரிவினையால், மில்லியன் கணக்கான குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பிரிக்கப்பட்டனர். பலரால் இன்னமும் தமது உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

மார்ச் 22, 1951 அன்று ஒரு மூதாட்டி தனது வாழ்விற்குரிய உடைமைகளை தலையில் சுமந்தபடி குண்டு வீசப்பட்ட சுஞ்சோனின் தெருக்களில் தனது வீட்டைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். [AP Photo/Jim Pringle]

கொரியாவுக்கு வெளியே, போரைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை மற்றும் அதன் தோற்றம் பற்றி மிகக் குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, வரலாற்றாசிரியர் புரூஸ் கமிங்ஸ் இதை “மறக்கப்பட்ட போர் மற்றும் ஒருபோதும் அறியப்படாத போர்” என்று விவரிக்கிறார். [1] இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதன் முதல் பெரிய நவ-காலனித்துவ தலையீட்டின் காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஊக்குவிக்கப்பட்ட பிரச்சாரமே மேலோங்கி நிற்கிறது. இதை நியாயப்படுத்துவதற்கான கதையாக, 1950-ம் ஆண்டு ஜூன் 25-ம் திகதி தென் கொரியா மீது வட கொரியா அத்துமீறி தூண்டுதலற்ற தாக்குதல் நடத்தியது. சர்வாதிகார வடக்கின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஜனநாயக தெற்கை பாதுகாக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு போருக்கு தலைமை தாங்கின என்பதாக பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது.

உண்மையில், இந்தக் கூற்றுக்கள் அப்பட்டமான சிதைவுகள் மற்றும் அப்பட்டமான பொய்களைத் தவிர வேறில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் 1945ல் ஒருதலைப்பட்சமாக கொரியாவை பிளவுபடுத்தி, பின்னர் தெற்கில் குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவு இல்லாத மற்றும் ஒடுக்குமுறை மூலம் மட்டுமே ஆட்சி செய்யக்கூடிய ஒரு ஆட்சியை நிறுவியபோது தொடங்கப்பட்ட ஒரு செயல்முறையின் இறுதி விளைவாக முழு அளவிலான பகைமையின் தொடக்கம் இருந்தது.

கொரியப் போரின் தோற்றம் என்ன?

மூலோபாய ரீதியாக வடகிழக்கு ஆசியாவில் ஜப்பான், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு இடையில் அமைந்துள்ள கொரியா, நீண்ட காலமாக ஏகாதிபத்திய சூழ்ச்சிகளின் மையமாக இருந்து வருகிறது. 1905 ரஷ்யா-ஜப்பானியப் போரில் ஜாரிச ரஷ்யா தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொரியாவானது ஜப்பானின் ஒரே செல்வாக்கின் கீழ் வந்தது. 1910 ஆம் ஆண்டில், ஜப்பான் கொரியாவை முறையாக இணைத்துக் கொண்டு, ஆகஸ்ட் 15, 1945 அன்று இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடையும் வரை 35 ஆண்டுகள் தீபகற்பத்தில் அதன் கொடூரமான காலனித்துவ ஆட்சியைத் தக்கவைத்திருந்தது.

கொரியாவின் பிரிவினையைத் தொடர்ந்து கொரியப் போர் வெடித்தது ஆகியவற்றை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உடனடி உலக முதலாளித்துவத்தை உலுக்கிய நெருக்கடி மற்றும் ஸ்திரமின்மையின் பரந்த பின்னணியில் மட்டுமே ஒருவர் புரிந்து கொள்ள முடியும். தூர கிழக்கில் 1937ல் சீனா மீதான ஜப்பானிய படையெடுப்புடன் தொடங்கிய சர்வதேச மோதல், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முன்னெப்போதும் இல்லாத மரணத்தையும் அழிவையும் விட்டுச்சென்றது. கடுமையான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியானது இரண்டு உலகப் போர்கள் மற்றும் பெரும் மந்தநிலையை கடந்து வந்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு அடித்தள எதிர்ப்பை எரியூட்டிக்கொண்டிருந்தது. பெரும் ஏகாதிபத்திய சக்திகள் ஆசியா முழுவதிலும் வளர்ந்து வந்த காலனித்துவ எதிர்ப்பு கிளர்ச்சிகளை எதிர்கொண்டன.

இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்து மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்கா வெளிப்பட்டது. அதன் உலக முதலாளித்துவத்தை மீள்நிர்மாணம் செய்வதற்கான திறன் இரண்டு காரணிகளைச் சார்ந்திருந்தது: முதலாவது, அதன் சொந்த அபரிமிதமான பொருளாதார பலம், இரண்டாவது போருக்குப் பிந்தைய புரட்சிகர இயக்கங்களை சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகள் ஆகும்.

1941ல் சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பைத் தொடர்ந்து, ஸ்ராலின் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஜனநாயக சக்திகள் என்று அழைக்கப்படும் ஒரு கூட்டணிக்கு அடிபணிய வைத்தார். போருக்குப் பிந்தைய ஏற்பாடுகள் குறித்து தெஹ்ரான், யால்டா மற்றும் போட்ஸ்டாமில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தலைவர்களுடனான போர்க்கால மாநாடுகளில், கிழக்கு ஐரோப்பாவில் ஒரு சோவியத் செல்வாக்கு மண்டலத்திற்கு ஈடாக, அனைத்து நாடுகள் மற்றும் அவற்றின் தொழிலாள வர்க்கங்களின் தலைவிதியை சிடுமூஞ்சித்தனமாக மாற்றினார்.

மேற்கு ஐரோப்பா முழுவதிலும், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கு அடிபணியுமாறு அறிவுறுத்தப்பட்டன—இது சோசலிசப் புரட்சி நிகழ்ச்சி நிரலுக்கு வெளியே இருந்தது. குறிப்பாக பிரான்சிலும் இத்தாலியிலும், ஸ்ராலினிஸ்டுகள் எதிர்ப்பாளர்களை (partisans) நிராயுதபாணிகளாக்குவதிலும் மதிப்பிழந்த முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை புதுப்பிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தனர். ஸ்ராலினிச தலைவர்கள் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ அரசாங்கங்களில் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதில் மையமாக இருந்த அமைச்சர்களாக நுழைந்தனர்.

ஆசியாவில், ஸ்ராலினிச கட்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் காலனித்துவ சக்திகள் திரும்புவதற்கும் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கும் உதவுவதில் முக்கிய பங்கு வகித்தன. ஜப்பானில், தொழிற்சங்கங்களின் பாரிய வளர்ச்சி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு மத்தியில், கம்யூனிஸ்ட் கட்சியானது அமெரிக்க ஆக்கிரமிப்பை ஜனநாயகப் புரட்சியின் வழிகாட்டியாக சித்தரித்து வேலைநிறுத்தங்களை ஒடுக்க உதவியது.

மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை மீண்டும் ஸ்தாபித்த அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் செல்வாக்கின் எந்தவொரு வளர்ச்சியையும் தடுக்கத் தீர்மானித்து, தாக்குதலைத் தொடர்ந்தது. மார்ச் 1947 இல், அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் “ஆயுதமேந்திய சிறுபான்மையினர்” மற்றும் “வெளிப்புற அழுத்தங்களை” எதிர்க்கும் “சுதந்திரமான மக்களை” அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறியபோது தனது “கட்டுப்படுத்தும்” கோட்பாட்டை அறிவித்தார். நீடித்த பனிப்போரின் தொடக்கத்தைக் குறிக்கும் ட்ரூமன் கோட்பாடு, அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக் கவிழ்ப்புகள், இராணுவத் தலையீடுகள் மற்றும் உலகெங்கிலுமுள்ள சர்வாதிகாரங்களுக்கான ஆதரவு ஆகியவற்றிற்கு சாக்குப்போக்காக மாறியது— இவைகள் அனைத்தும் “ஜனநாயகம்” என்ற பெயரில் நடந்தேறியது.

கொரியாவின் ஆக்கிரமிப்பிற்கு முன்னோட்டம்

மார்ச் 1943 இல், வாஷிங்டன் முதன்முதலில் கொரியா போன்ற நாடுகளுக்கு “பாதுகாவலர்” என்று அழைக்கப்படும் பிரச்சினையை எழுப்பியது - காலனித்துவ ஆட்சியைக் குறிக்கும் ஒரு இடக்கரடக்கல் சொல் இது. இது கொரியர்களுக்கு சுய-அரசாங்கத்தில் “கல்வி கற்பிப்பது” அவசியம் என்று கூறியது. கொரியாவிற்கு “சரியான நேரத்தில்” சுதந்திரம் அளிக்க ஒப்புக்கொண்ட போதிலும், ஒரு சுதந்திர கொரியா சோவியத் ஒன்றியத்தை நோக்கிச் செல்ல முடியும் என்பதை நன்கு அறிந்திருந்த வாஷிங்டன், கொரியாவில் ஒரு பாதுகாவலர் பதவிக்காக ஸ்டாலினிடமிருந்து மே 1945 இல் வாய்மொழி ஒப்பந்தத்தைக் கோரி பெற்றுக்கொண்டது.

இருப்பினும், ஜூலை 1945 இல் அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததன் மூலம், போருக்குப் பிந்தைய ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கான அதன் ஆரம்ப திட்டங்களை வாஷிங்டன் கடுமையாக மாற்றியது. புரூஸ் கமிங்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க மூலோபாயம் “இராஜதந்திரத்தைக் கைவிட்டு, பசிபிக் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது, மற்றும் போருக்குப் பிந்தைய கிழக்காசிய விவகாரங்களில் சோவியத்துகளை கணிசமான பங்கேற்பிலிருந்து விலக்கி வைப்பது” ஆனது. [2]

ஆரம்பத்தில், சோவியத் ஒன்றியம் 1941 இல் ஜப்பானுடன் செய்து கொண்ட ஆக்கிரமிப்பற்ற ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு பசிபிக்கில் போரில் நுழைந்ததற்கு ஈடாக மஞ்சூரியா மற்றும் கொரியாவில் மாஸ்கோவுக்கு சில செல்வாக்கை அனுமதிக்க அமெரிக்கா தயாராக இருந்தது, அதை அது ஆகஸ்ட் 8 அன்று செய்தது. கொரியா மற்றும் மஞ்சூரியாவை ஆக்கிரமிக்கும் உயரடுக்கு ஜப்பானிய குவான்துங் இராணுவம் செம்படைக்கு பெரும் விலையை கொடுக்கும் என்றும், அதை அமெரிக்க இராணுவம் செலுத்த வேண்டியதில்லை என்றும் வாஷிங்டன் நம்பியது,

ஹிரோஷிமா மீது ஆகஸ்ட் 6ம் திகதி குண்டு வீசப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், அடுத்த நாள், அமெரிக்கா நாகசாகி மீது ஒரு அணுகுண்டை வீசியது. அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்த கொடூரமான போர்க் குற்றங்களை, ஒரு படையெடுப்பில் அமெரிக்க சிப்பாய்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமானவை என்று நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தியது. டோக்கியோ ஏற்கனவே சரணடைவதற்கான அதன் விருப்பத்தை சுட்டிக்காட்டிய போதிலும் இது நிகழ்ந்தது. இதன் உண்மையான நோக்கம் சோவியத் ஒன்றியத்தை அச்சுறுத்துவதும், போருக்குப் பிந்தைய தீர்வுக்கான விதிமுறைகளை அமெரிக்கா கட்டளையிடும் என்பதை உலகிற்கு நிரூபிப்பதும் ஆகும்.

எவ்வாறெனினும், ஜப்பானின் குவான்டுங் இராணுவம் விரைவாக வீழ்ச்சியடையும் என்று வாஷிங்டன் கணக்கிடவில்லை, இது சோவியத் செம்படை கொரிய தீபகற்பம் முழுவதையும் கைப்பற்றும் என்ற அச்சத்தை எழுப்பியது. ஜப்பான் மீது போர் பிரகடனம் செய்யப்பட்ட மறுநாள் ஆகஸ்ட் 9 அன்று, சோவியத் இராணுவம் கொரியாவில் நடவடிக்கைகளைத் தொடங்கியது மற்றும் சில நாட்களுக்குள் பல கொரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

ஜூலை 1945 போட்ஸ்டாம் மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கிளமெண்ட் அட்லி, அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ் ட்ரூமன் மற்றும் ஜோசப் ஸ்டாலின்.

ஆசியா முழுவதிலும் ஜப்பான் விரைவில் சரணடைவதில் மூழ்கியிருந்த அமெரிக்கா, ஒரு பதிலுக்காக முண்டியடித்தது. வாஷிங்டனின் போர் திட்டமிடுபவர்கள் ஆகஸ்ட் 10 மற்றும் 11 முழுவதும் நடந்த கூட்டங்களின் போது கொரியாவை 38 வது அட்சரேகைக் கோடு தனி ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரிக்க ஒருதலைப்பட்ச முடிவை எடுத்தனர். ஐரோப்பாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரச இணக்கத்திற்காக, ஸ்டாலின் எந்தவிதமான எதிர்ப்பின் முணுமுணுப்பு இல்லாமல் பிரிவினையை ஏற்றுக்கொண்டார்.

கொரிய மக்கள் குடியரசை (KPR) புறந்தள்ளிய அமெரிக்கா

ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜெனரல் ஜோன் ஹாட்ஜ் தலைமையிலான அமெரிக்க இராணுவம் செப்டம்பர் 8, 1945 அன்று கொரியாவிற்கு வந்து தனது ஆக்கிரமிப்பை நிறுவியது, இது கொரியாவில் அமெரிக்க இராணுவப் படை அரசாங்கம் (USAMGIK) என்று முறையாக அழைக்கப்படுகிறது.

இருப்பினும், பதவி விலகிய ஜப்பானிய காலனித்துவ அரசாங்கம் ஏற்கனவே நிர்வாகப் பணிகளை இயோ உன்-ஹியோங்கிடம் ஒப்படைத்தது. இடது மற்றும் வலதுசாரி முதலாளித்துவ தேசியவாதிகளின் தொகுப்போடு, இயோ செப்டம்பர் 6 அன்று கொரிய சுதந்திரத்தைத் தயாரிப்பதற்கான குழுவையும் பின்னர் கொரிய மக்கள் குடியரசையும் (KPR) நிறுவினார். நாடெங்கிலும் உள்ளூர் அரசாங்கங்களின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டன.

கொரிய முதலாளித்துவத்தின் மிகவும் வலதுசாரி பிரிவுகள் மட்டுமே அமெரிக்க இராணுவத்தை நோக்கி தங்களை திருப்பியிருந்தன. இதில் 1945 செப்டம்பர் 16 அன்று நிறுவப்பட்ட கொரிய ஜனநாயகக் கட்சியும் (KDP) அடங்கும். KDP ஆனது செல்வந்த வணிகர்கள் மற்றும் பெரிய நிலப்பிரபுக்களால் நிரம்பியிருந்தது, அவர்கள் கொரியாவில் “பாதுகாவலர்” க்கான அமெரிக்க திட்டங்களை ஆதரித்தனர், அவர்கள் தங்கள் சொத்து நலன்களையும் அவர்களின் உயிர்களையும் பழிவாங்கல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையாக இதனை ஆதரித்தனர்.

இந்த பழமைவாதிகளில் பலர், முந்தைய காலத்தில் சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் கூட, தென் கொரிய அரசாங்கத்தின் அடித்தளத்தை உருவாக்கும் ஜப்பானிய ஒத்துழைப்பாளர்களாக இருந்தனர். டாங்-ஏ இல்போ செய்தித்தாளை நிறுவிய கிம் சியோங்-சு, கொரியப் போரின் போது 1951 முதல் 1952 வரை தென் கொரியாவின் துணை அதிபராக சிங்மன் ரீயின் கீழ் பணியாற்றினார்.

கொரிய தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் மத்தியில் அமெரிக்காவிற்கு எந்தவொரு செல்வாக்கோ ஆதரவோ இல்லை, மாறாக ஒன்றுமில்லாத ஒரு ஆட்சியை உருவாக்க முயற்சிக்கத் தொடங்கியது. USAMGIK ஆனது KDP ஐ அதன் நடவடிக்கைகளில் ஒருங்கிணைத்தது, KPR ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பைத் தூண்டிவிடும் என்று அஞ்சியது. USAMGIK ஆனது பின்னர் டிசம்பர் 8 அன்று தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை தடை செய்தது மற்றும் டிசம்பர் 12 அன்று மக்கள் குழுக்களுடன் KPR ஐ சட்டவிரோதமாக்கியது.

பொதுமக்களின் எதிர்ப்பை சமாளிக்க, தனது காலனித்துவ ஆட்சிக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் கொடூரமாக நசுக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஜப்பானிய காலனித்துவ போலீஸ் படையில் பணியாற்றிய கொரிய அதிகாரிகளில் பெரும்பகுதியை அமெரிக்கா தக்க வைத்துக் கொண்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரிப்பதிலும் அவர்கள் அதே பாத்திரத்தை வகித்தனர்.

அதே நேரத்தில், வாஷிங்டன் தனது சூழ்ச்சிகளை கொரியாவில் ரப்பர் முத்திரையிட சோவியத் ஒன்றியத்தை நம்பியிருந்தது. ஒடுக்குமுறை ஜப்பானிய ஆட்சியின் முடிவு கொரிய கம்யூனிஸ்ட் கட்சியில் (KCP) ஒரு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா குறிப்பாக கவலை கொண்டிருந்தது, மற்ற நாடுகளில் போரின் முடிவு சோசலிசத்திற்கான வெகுஜன ஆதரவு எழுச்சிக்கு வழிவகுத்தது.

ஸ்ராலினிசத்தின் பங்கு

ஜப்பானில் நடந்தது போலவே, சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவமும் கொரியாவிலுள்ள அதன் ஆதரவாளர்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பாராட்டுவதன் மூலம் கொரியாவின் பிரிவினைக்கு விடையிறுத்தனர். அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்தி வருவதாக அவர்கள் கூறினர், இது தொலைதூர எதிர்காலத்தில் ஒரு சோசலிசப் புரட்சிக்கு முன் அவசியமான முதல் படி என்று கூறப்பட்டது. முற்போக்கான முதலாளித்துவ சக்திகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கான ஆதரவை நியாயப்படுத்தும் இந்த இரண்டு கட்ட புரட்சிக் கோட்பாடு எப்போதும் தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவை கொண்டு வந்துள்ளது.

1917 ரஷ்யப் புரட்சியின் படிப்பினைகளை நிராகரிப்பதே இரண்டு கட்டக் கோட்பாடாக இருந்தது. ரஷ்யப் புரட்சியின் முக்கிய தலைவர்களான விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி இருவரும் ரஷ்யாவில் தாராளவாத முதலாளித்துவம் என்று அழைக்கப்படுபவர்கள் அத்தியாவசிய ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதில் இயல்பாகவே திறனற்றவர்கள் என்று வலியுறுத்தியிருந்தனர். கோட்பாட்டளவில் ரஷ்யப் புரட்சியை வழிநடத்திய இந்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில், கொரியா போன்ற தாமதமான முதலாளித்துவ வளர்ச்சி கொண்ட நாடுகளில், அந்த பணிகள் நகரங்களில் குவிந்துள்ள தொழிலாள வர்க்கத்திடம் விழுந்தன என்பதை ட்ரொட்ஸ்கி நிரூபித்தார். கொரியா, ரஷ்யாவைப் போலவே, பெரும்பாலும் விவசாய நாடாக இருந்தபோதிலும், அதன் இளம் பாட்டாளி வர்க்கம், காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதில், விவசாய வெகுஜனங்களை அணிதிரட்டி அதிகாரத்திற்கு வர முடிந்தது. அவ்வாறு செய்வதன் மூலம், அது முதலாளித்துவ தனியார் உடைமைக்குள் ஆழமாக ஊடுருவவும், உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தின் பாகமாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்பவும் கட்டாயப்படுத்தப்படும்.

கொரியாவில், இரண்டு கட்டக் கோட்பாடு குறிப்பாக ஒரு கோரமான வடிவத்தை எடுத்தது. அமெரிக்காவுடனான உறவுகளைப் பேணுவதற்கு, சோவியத் ஒன்றியம் கொரிய முதலாளித்துவ வர்க்கத்தில் இல்லாத ஒரு முற்போக்கான பிரிவை ஊக்குவிப்பதை நம்பவில்லை, மாறாக ஏகாதிபத்தியமே ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்தி வருவதாகக் கூறியது.

எடுத்துக்காட்டாக, மாஸ்கோவின் செல்வாக்கின் கீழ், கொரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு பியோங்கன் மாகாணக் குழு, அக்டோபர் 6, 1945 அன்று கூறியது: “சர்வதேச பிரச்சினைகள் குறித்த தெளிவான பொதுவான புரிதல் இல்லாததால், கட்சியானது ஒரு குறுங்குழுவாத போக்கிலிருந்து எழும் பிழைகளைச் செய்துள்ளது, மேலும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கூட்டாளிகளின் வரலாற்று ரீதியாக முற்போக்கான பண்புகளை தெளிவற்ற முறையில் கையாண்டுள்ளது.” [3]

“சோவியத் ஒன்றியத்தின் உந்து சக்தியாலும், பெரிய பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் பங்களிப்புகளாலும் நமது கொரியா அதன் இரத்தமற்ற புரட்சியில் வெற்றி பெற்றது, புரட்சி இப்போது இறுதி முடிவடையும் நிலையில் உள்ளது” [4] என்று அது கூறியது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரியாவில் முதலாளித்துவப் புரட்சியை நிறைவு செய்கிறது என்ற கூற்று ஒரு முழுமையான மோசடியாகும். ஆனால் சோவியத் ஆட்சி கொரியாவில் வர்க்கப் போராட்டத்தின் கழுத்தை நெரிப்பதற்கு இந்தப் பொய்யை பயன்படுத்தியது மற்றும் ஐக்கிய கொரியாவிற்குள் குரல் கொடுக்க அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் நம்பியது. எல்லாவற்றிற்கும் மேலாக, மற்ற நாடுகளில் ஏற்படும் தொழிலாள வர்க்க எழுச்சிகள் சோவியத் ஒன்றியத்தில் உள்நாட்டில் அரசியல் எதிர்ப்பைத் தூண்டிவிடும் என்று சோவியத் ஆட்சி அஞ்சியது.

அமெரிக்காவுடனான அதன் இணக்கத்தில், ஜப்பானிய காலனித்துவத்திற்கு எதிரான பல ஆண்டுகால போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட பரந்த செல்வாக்கைக் கொண்டிருந்த கொரிய கம்யூனிஸ்ட் கட்சியை (KCP) அடக்க மாஸ்கோ முயன்றது. வரலாற்றாசிரியர் சுஹ் டே-சூக் குறிப்பிடுகையில், “கொரியப் புரட்சியின் கட்டுப்பாட்டை தேசியவாதிகளிடமிருந்து கைப்பற்றுவதில் கொரிய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது; அவை கொரிய மக்களிடையே, குறிப்பாக மாணவர்கள், இளைஞர் குழுக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கம்யூனிச செல்வாக்கின் ஆழமான மையத்தை விதைத்தன. அவர்களின் மன உறுதியும், சில நேரங்களில் வெற்றி பெறுவதற்கான பிடிவாத உறுதியும் கொரிய அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.” [5]

வட கொரியாவிலும் தென் கொரியாவிலும் தனித்தனி ஆட்சிகளை நிறுவுதல்

அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் சோவியத் வெளியுறவு அமைச்சர்கள் 1945 டிசம்பர் 16-27 வரை மாஸ்கோவில் சந்தித்து கொரியா உட்பட போருக்குப் பிந்தைய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். ஒரு பாதுகாவலர் அமைப்புமுறையை ஸ்தாபிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு சோவியத் வெளியுறவு அமைச்சர் உடன்பட்டதால், கொரியாவுக்கான எந்தவொரு சுதந்திரமும் ஒதுக்கி வைக்கப்பட்டது.

மாஸ்கோ மாநாடு முறையே வட மற்றும் தென் கொரியாவில் சோவியத் மற்றும் அமெரிக்க இராணுவங்களின் கூட்டுக் கட்டுப்பாட்டிற்கும், ஒரு கூட்டு ஆணையத்தின் மூலம் ஒன்றுபட்ட கொரியாவின் ஒரு தற்காலிக அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் அழைப்பு விடுத்தது. பின்னர், அத்தகைய அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் ஒன்றியம் மற்றும் தேசியவாத சீனாவை உள்ளடக்கிய நான்கு சக்தி கொண்ட “பாதுகாவலர்” அமைப்புமுறை நிறுவப்பட்டது.

எவ்வாறெனினும், வாஷிங்டன் இந்த திட்டங்களை நனவுடன் சீர்குலைத்து, முன்மொழியப்பட்ட தற்காலிக அரசாங்கத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு எந்த பங்கையும் அனுமதிக்க மறுத்துவிட்டது. மார்ச் 20, 1946 அன்று திறக்கப்பட்ட கூட்டு ஆணையத்தில் அமெரிக்கத் தரப்பு, கொரியாவில் அமெரிக்க கோரிக்கைகளை மாஸ்கோ ஏற்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியது. இல்லையெனில், அமெரிக்கா தனது நிகழ்ச்சி நிரலை தெற்கில் மட்டுமே செயல்படுத்தும் என்றது. இந்த ஆணையம் மே மாத நடுப்பகுதி வரை எந்த உடன்பாடும் இல்லாமல் நீடித்தது.

மாஸ்கோ இப்போது அமெரிக்க கோரிக்கைகளுக்கு இணங்க ஒரு பாதுகாவலர் அமைப்புமுறைக்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில், வாஷிங்டன் பிரத்தியேகமாக சோவியத் ஒன்றியத்தை எதிர்க்கும் தீவிர வலதுசாரி கொரியர்களின் குழுவை ஆதரித்தது. இவற்றில் KDP மற்றும் சிங்மன் ரீயைச் சுற்றியுள்ள கொரிய சுதந்திரத்தின் விரைவான உணர்தலுக்கான தேசிய சங்கம் (Rapid Realization of Korean Independence) என்று அழைக்கப்படுவது ஆகியவை அடங்கும்.

1910 ஆம் ஆண்டில் கொரியாவை விட்டு வெளியேறிய ரீ, பல தசாப்தங்களாக அமெரிக்காவில் கழித்தார், மேலும் அக்டோபர் 16, 1945 அன்று அமெரிக்க இராணுவம் அவரை திருப்பி அனுப்பும் வரை அவர் கொரியாவுக்கு திரும்பவில்லை. கொரியாவில் அவருக்கு செல்வாக்கு குறைவாக இருந்தது மற்றும் பெரும்பாலும் அறியப்படாத நபராக இருந்தார். மாறாக, அவர் அமெரிக்க அரசாங்கத்திற்குள், குறிப்பாக CIA இன் முன்னோடியான மூலோபாய சேவைகள் அலுவலகத்திற்குள் (Office of Strategic Services) நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்தார், அதே நேரத்தில் ஒரு வெறித்தனமான மற்றும் தீவிர கம்யூனிச-எதிர்ப்பாளராகவும் இருந்தார்.

அமெரிக்க ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் மற்றும் சிங்மன் ரீ, 15 ஆகஸ்ட், 1948.

சோவியத்துகள் அத்தகைய வலதுசாரி குழுக்களை சேர்ப்பதை எதிர்த்தன மற்றும் மாஸ்கோ உடன்படிக்கைக்கு எதிரானவர்களை கூட்டு ஆணையத்தில் கலந்தாலோசிக்கக்கூடாது என்று கூறினர். இடது சார்பு கொண்ட தென் கொரியர்களை எந்தவொரு பங்கேற்பிலிருந்தும் அமெரிக்கா விலக்கிய அதே வேளையில், ஒரு புதிய தற்காலிக அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிராக சோவியத் ஒன்றியம் செயல்படுவதாக பாசாங்குத்தனமாக குற்றம் சாட்டியது.

அதே நேரத்தில், கொரிய கம்யூனிச கட்சியை ஒரு குட்டி முதலாளித்துவ அமைப்பாக, உத்தியோகபூர்வமாக கலைக்க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார், அது வாஷிங்டனுக்கு மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று அவர் நம்பினார். ஜூலை 1946 இல், கொரியாவின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள கட்சியை, சுதந்திர இயக்கத்தில் பங்கேற்ற ஆனால் வெளிப்படையாக சோசலிசத்தை நிராகரித்த நடுத்தர வர்க்க மற்றும் இடதுசாரி தேசியவாதிகளுடன் இணையுமாறு அவர் உத்தரவிட்டார்.

இதன் விளைவாக கொரியாவை இரண்டு தனித்தனி அமைப்புகளுடன் பிரிப்பதை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது: வட மற்றும் தென் கொரியாவின் தொழிலாளர் கட்சிகள், இறுதியில் 1949 இல் ஒன்றிணைந்து தற்போதைய வட கொரிய ஆளும் கட்சியான கொரிய தொழிலாளர் கட்சியை உருவாக்கியது.

பனிப்போர் தொடங்கியவுடன், சோவியத் ஒன்றியத்திற்கு எந்த சலுகைகளையும் வழங்கவோ அல்லது எதிர்கால கொரிய அரசாங்கத்தில் எந்தவொரு சோவியத் சார்பு கட்சியையும் அனுமதிக்கவோ அமெரிக்கா விரும்பவில்லை. 1947 மே மாதம் இரண்டாவது சுற்று கூட்டுக்குழு பேச்சுவார்த்தைகள் தொடங்கின, ஆனால் அதே உடன்பாடு இருக்கவில்லை.

இரண்டாவது சுற்று கூட்டு ஆணைய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, அமெரிக்கா ஏற்கனவே இந்த பிரச்சினையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்ல உத்தேசித்திருந்தது. கொரியாவை ஐக்கியப்படுத்தும் முகமூடிக்குப் பின்னால், வாஷிங்டன் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒரு அரணாக தெற்கில் ஒரு தனி அரசை ஸ்தாபிக்க வெளிப்படையாக வேலை செய்து கொண்டிருந்தது, ஒரு ஐக்கியப்பட்ட, சுதந்திர கொரியாவில் அமெரிக்கா ஓரங்கட்டப்படும் என்பதை அது அறிந்திருந்தது.

கொரியா மீதான ஐக்கிய நாடுகளின் தற்காலிக ஆணையம் பின்னர் மே 10, 1948 அன்று தெற்கில் ஒரு அரசியல் நிர்ணய சபையின் தேர்தலை மேற்பார்வையிட்டது, இது அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் மற்றும் அவற்றின் வலதுசாரி கொரிய கூட்டாளிகளால் தில்லுமுல்லு செய்யப்பட்டது. அரசியல் நிர்ணய சபை ஜூலை 20, 1948 அன்று அமெரிக்க கைப்பாவை சிங்மன் ரீயை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது மற்றும் கொரிய குடியரசு ஆகஸ்ட் 15, 1948 அன்று முறையாக நிறுவப்பட்டது.

வட கொரியா தனது சொந்த நாடாளுமன்றத் தேர்தல்களை ஆகஸ்ட் 25, 1948 அன்று நடத்தி செப்டம்பர் 9, 1948 அன்று கொரிய ஜனநாயக மக்கள் குடியரசை உருவாக்க வழிவகுத்தது. பெயரளவில், வட கொரிய தலைவர் கிம் டு-போங், உச்ச மக்கள் சபையின் தலைவர் ஆனார். இருப்பினும், உண்மையான அரசியல் அதிகாரம் கிம் இல்-சுங்கிடம் இருந்தது, அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார் மற்றும் அடுத்த ஆண்டு தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.

கிம் இல்-சுங் 1930 களின் முற்பகுதியில் ஜப்பானியர்களுக்கு எதிராக மஞ்சூரியாவில் சீன கொரில்லாக்களுடன் இணைந்து போராடினார், ஆனால் அவரும் அவரது ஆதரவாளர்களும் ஒருபோதும் கொரிய கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்ததில்லை, அல்லது அவர்கள் கொரிய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பங்கேற்கவில்லை. அவரது அரசியல் கண்ணோட்டத்தில், அவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே அடிப்படையில் ஒரு தேசியவாதியாக இருந்தார்.

இருப்பினும், கிம் செம்படையில் ஒரு அதிகாரியாகவும் பணியாற்றினார், மேலும் சோவியத் ஒன்றியம் வடக்கை ஆக்கிரமித்த பின்னர் அதன் ஆதரவைப் பெற்றார். மாஸ்கோவின் ஆசீர்வாதத்துடன், பழைய கம்யூனிசக் கட்சிக்குள் இருந்து அரசியல் எதிரிகளை அகற்றிய அதே வேளையில் அவர் தலைமைப் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டார். கொரியப் போரை அடுத்து, அவர் அதிகாரத்தின் மீதான தனது சவாலற்ற பிடியை வலுப்படுத்தி, ஜூசே (juche) அல்லது ஸ்டாலினின் பிற்போக்குத்தனமான “தனி நாட்டில் சோசலிசத்தின்” கொரிய பதிப்பை பிரகடனம் செய்தார்.

1994 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை அதிகாரத்தில் இருந்து, பரம்பரை வம்சத்திற்கு சமமான ஒன்றை வட கொரியாவில் நிறுவினார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் கிம் ஜாங்-இல் அதிகாரத்தில் இருந்தார். தற்போது அவரது பேரன் கிம் ஜாங்-உன் இப்போது வட கொரியாவை வழிநடத்துகின்றார்.

தொடரும்...

[1]Bruce Cumings, The Korean War: A History, Modern Library 2010, p. 63.

[2]Cumings, The Origins of the Korean War, Volume 1: Liberation and the Emergence of Separate Regimes 1945-1947, Yuksabipyungsa 2002, p. 120.

[3]Documents of Korean Communism 1918-1948, edited by Dae-sook Suh, Princeton University Press 1970, p. 489.

[4]Ibid.

[5]Dae-sook Suh, The Korean Communist Movement 1918-1948, Princeton University Press 1967, p. 132.

Loading