முன்னோக்கு

டீம்ஸ்டெர்ஸ் தொழிற்சங்கம் 340,000 தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தடுக்க, UPS நிறுவனத்துடனான விற்றுத் தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அறிவிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்த விற்றுத் தள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டத்தில் இணையுங்கள்! கீழே உள்ள படிவத்தை நிரப்பி UPS ஆலையின் சாமானியத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவில் இணையுங்கள். மேலும், இந்த விற்றுத் தள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டத்தின் புதிய செய்திகளைப் பெற, (866) 847-1086 என்ற தொலைபேசி எண்ணுக்கு “UPS” என்று குறுஞ்சேதி அனுப்பவும்.

அட்லாண்டாவில், ஜூலை 21, 2023, வெள்ளிக்கிழமை, UPS தொழிலாளர்கள் பேரணி நடத்துகின்றனர். [AP Photo/Brynn Anderson]

டீம்ஸ்டெர்ஸ் தொழிற்சங்கம் மற்றும் UPS நிறுவனத்திற்கும் இடையிலான ஒரு தற்காலிக உடன்படிக்கை எட்டப்பட்டு இருப்பதாகச் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு, 340,000 UPS தொழிலாளர்களின் போராட்டத்தில் ஒரு புதிய களத்தைத் திறந்து விடுகிறது. பல மாதங்களாக, இந்த தொழிற்சங்கத் தலைவர் சீன் ஓ’பிரெய்னின் கீழ் டீம்ஸ்டெர்ஸ் சங்க அதிகாரத்துவம், ஆகஸ்ட் 1 க்குள் ஒரு புதிய உடன்படிக்கை எட்டப்படாவிட்டால் தேசிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க இருப்பதாக ஆயிரக் கணக்கான முறை உறுதியளித்தது. ஆனால், இந்தக் காலக்கெடுவுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், அதுவும் மூன்று வார காலம் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து விட்டு, மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி வெறும் ஒரு சில மணி நேரங்களில், ஒரு தற்காலிக உடன்படிக்கை அறிவிக்கப்பட்டிருப்பது, இதுவொரு தூண்டில் போடும் மிகப் பெரிய நடவடிக்கை என்பதை அம்பலப்படுத்துகிறது.

பொதுவாக, இந்தத் தொழிற்சங்க எந்திரம் ஒன்றை “வரலாற்று” ஒப்பந்தம் என்று எவ்வளவு உரத்த குரலில் அறிவிக்கிறதோ, அதேபோல பெருநிறுவன-சார்பு ஜனநாயகக் கட்சியினர் இத்தகைய உடன்படிக்கைக்காக எவ்வளவு உரக்க தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்களோ, அந்தளவுக்கு அதன் விற்றுத் தள்ளலுடன் அது நேரடியாக தொடர்புபடுகிறது. நேற்று இதைப் பாராட்டுவதில், நான்சி பெலொசியும், அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸூம் மற்றும் கடந்தாண்டு இரயில்வே வேலைநிறுத்தத்திற்குத் தடைவிதிக்க வாக்களித்த மற்ற உறுப்பினர்களும் இதில் உள்ளடங்கி இருந்தனர். அனைத்திற்கும் மேலாக, ஒப்பந்தத்தின் “சிறம்பம்சங்களில்” குறிப்பிடப்பட்ட விஷயங்களை விட, குறிப்பிடாமல் விடப்பட்ட விஷயங்கள் எப்போதுமே முக்கியமானவையாக இருக்கும். எல்லா விதத்திலும், இந்த உடன்படிக்கை ஓர் அப்பட்டமான விற்றுத்தள்ளல் என்பதில் மட்டுமே “வரலாற்று” உடன்படிக்கையாக உள்ளது என்பதை வெளியிடப்பட்டுள்ள விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன. இவற்றில் உள்ளடங்குபவை:

  • தொழிலாளர் சக்தியில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு பகுதி நேர தொழிலாளர்களுக்கான ஆரம்ப கூலிகள், ஒரு மணி நேரத்திற்கு 15.50 டாலரில் இருந்து 21 டாலராக அதிகரிக்கப்படுவதுடன், ஒப்பந்தத்தின் ஐந்து ஆண்டுகளில் 23 டாலராக அதிகரிக்கப்படும். ஆனால் 15.50 டாலர் என்பது மிகவும் குறைவானது என்பதுடன், UPS போதுமான தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக நாடு முழுவதும் கூலிகளை அதிகரிக்க ஏற்கனவே நிர்பந்திக்கப்பட்டுள்ளது, மேலும் பலர் ஏற்கனவே ஒரு மணி நேரத்திற்கு 21 டாலருக்கும் அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு ஒரு நாள் வேலை 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில், இது பரந்த பெரும்பான்மை தொழிலாளர்களை வறுமையில் சிக்க வைக்கும். கென்டக்கியின் லூயிஸ்வில்லில் உள்ள இந்நிறுவனத்தின் பிரமாண்ட நவீன வேர்ல்ட்போர்ட் (Worldport) சரக்கு மையத்தின் பகுதி நேர பணியாளர்கள் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று பேர் ஒன்றாக வசிக்க வேண்டியுள்ளதுடன், அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைச் சமாளிக்க பட்டினியோடு வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
  • குறிப்பிடத்தக்க வகையில், சிறப்பம்சங்களில் ஓய்வூதியம் குறித்தோ அல்லது சுகாதாரம் குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. டீம்ஸ்டெர்ஸ் தொழிற்சங்கம் UPS தொழிலாளர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சல் விவரத் தொகுப்பில், 22 மாநிலத் தொழிலாளர்களை உள்ளடக்கிய, IBT-UPS ஓய்வூதியத் திட்டத்தில் “பெரிய அதிகரிப்புகள்” குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் நாடெங்கிலும் மற்ற 28 மாநிலங்களின் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் குறித்தும் அது எதுவும் குறிப்பிடவில்லை. குறைந்தபட்சம் வேறு ஒரு சில பிராந்தியங்களில், ஓய்வூதிய தொகையில் மொத்தத்தில் எந்த அதிகரிப்பும் இல்லை என்றும், சுகாதாரச் செலவுகளில் மிகக் குறைந்தபட்ச அதிகரிப்புகளே செய்யப்பட்டு இருப்பதாகவும் WSWS இக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் குறிப்பிட்டன.
  • இந்த ஒப்பந்தத்தின்படி 7,500 புதிய முழு நேர வேலைகள் உருவாக்கப்படும். இது கிட்டத்தட்ட 200,000 பகுதி நேர பணியாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தில் ஒன்றுமே இல்லை. இந்த பகுதி நேர தொழிலாளர்களில் சிலர் முழு நேர தொழிலாளர்களாக ஆவோம் என்று தசாப்தங்களாக காத்திருக்கின்றனர்.
  • தற்போதுள்ள முழு நேர மற்றும் பகுதி நேர தொழிலாளர்கள், இந்த ஐந்தாண்டு ஒப்பந்த காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 7.50 டாலர் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். ஏற்கனவே கூலிகளைப் பணவீக்கம் முழுங்கி வரும் நிலையில், ஓட்டுநர்களைப் பொறுத்த வரையில், இது 2028 இக்குள் பரிதாபகரமாக வெறும் 15 சதவீத அதிகரிப்பாக இருக்கும். இது நிஜமான கூலிகளில் கணிசமானளவுக்குக் கூடுதல் வெட்டுக்களைச் செய்வதற்கு நிகரானது.
  • UPS நிறுவனம் ஒவ்வொரு ட்ரகையும் 25 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலும் செயல்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை வைத்துப் பார்த்தால், அனைத்து புதிய வாகனங்களிலும் ஏர் கண்டிஷனிங் செய்வதற்கான ஓர் உடன்படிக்கை, 2040 வரையில் ஓட்டுனர்கள் ஏசி இல்லாமல் வாகனம் ஓட்ட விடப்படுவார்கள்.
  • அதிக தேவையுள்ள காலங்களில், உபெர் பாணியில் “தனிப்பட்ட வாகன ஓட்டுநர்களையும்” தொடர்ந்து இந்த ஒப்பந்தம் பயன்படுத்துகிறது. இந்தப் பகுதி நேர பணியாளர்களின் பொருளாதார அவலநிலையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை வழங்குவதன் மூலம், முழு நேர ஓட்டுநர்களுக்கான கூலிகளைக் குறைப்பதற்கும் அல்லது அவர்களை முற்றிலுமாக அகற்றுவதற்கும் இது ஓர் ஆரம்பமாக அமைக்கப்படுகிறது.

இப்போதிருந்து, UPS தொழிலாளர்களின் போராட்டம் டீம்ஸ்டெர்ஸ் தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிரான ஒரு வெளிப்படையான மோதல் வடிவை எடுக்கும். அதிகாரத்துவத்தால் கட்டுப்படுத்தப்படும், தொலைக்காட்சி கண்துடைப்புகளுக்காக உருவாக்கப்பட்ட “ஒப்பந்த நடவடிக்கையில்” தொழிலாளர்கள் வெறுமனே பக்கவாட்டில் இருக்க முடியாது. இந்த விற்றுத் தள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தோற்கடித்து, தொழிற்சங்க எந்திரத்தின் கரங்களில் இருந்து கட்டுப்பாட்டைத் தங்கள் கரங்களில் எடுக்க அவர்கள் தங்களை ஒழுங்கமைத்தாக வேண்டும். வேலைத் தளத்தில் எதிர்ப்பை ஒழுங்கமைக்கும் மையமாக, இம்மாத ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட, UPS தொழிலாளர்களின் சாமானியத் தொழிலாளர் குழுவைக் கட்டியெழுப்புவதே இதன் அர்த்தமாகும்.

UPS போராட்டமானது, தொழிலாளர்கள் கடந்து வந்துள்ள அனுபவத்தின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். டீம்ஸ்டெர்ஸ் அதிகாரத்துவம் மற்றும் பிற சங்கங்களின் அதிகாரத்துவங்கள் பல தசாப்தங்களாகப் பாரியளவில் விற்றுத் தள்ளல்களை அமலாக்கி உள்ள அதேவேளையில், அவை வேலைநிறுத்த நடவடிக்கையை ஏறக்குறைய ஒன்றுமில்லாமல் ஆக்கி உள்ளன. பெரிதும் வெளிப்படையாக இருப்பது என்னவென்றால், தொழிற்சங்கம் இல்லாத அமேசனில் ஒரு மணி நேரத்திற்கு 19 டாலர் என்ற ஆரம்பக் கூலி விகிதத்தை விட UPS தொழிலாளர்களின் சம்பிரதாயமான கூலிகளைச் சற்று அதிகமாக உயர்த்துவதில் அது “வெற்றி பெற்றுள்ளது” என்பதே இந்த ஒப்பந்தம் குறித்து டீம்ஸ்டெர்ஸின் மிக முக்கிய பெருமைப்பீற்றலாக உள்ளது.

இப்போது, சகிக்க முடியாத நிலைமைகளால் உந்தப்பட்டு, பல தசாப்தங்களில் இல்லாதளவில் தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய எழுச்சி நடந்து வருகிறது. இது, தொழிலாளர்களின் வெறுப்புக்கும் அவநம்பிக்கைக்கும் உள்ளாகி உள்ள அதிகாரத்துவம் பின்புல நடவடிக்கைகள் மூலமாக ஒப்பந்தங்களை முன்நகர்த்துவதற்காக அதன் நியமிக்கப்பட்ட பாத்திரத்தை முன் நகர்த்தும் திறமையைத் தீவிரமாக சவாலுக்கு உட்படுத்துகிறது. சான்றாக, இது 60 இக்கும் அதிகமான ஆண்டுகளில் முதல்முறையாக தொலைக்காட்சி மற்றும் திரைப்பட எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களால் ஒரேநேரத்தில் நடத்தப்படும் வேலைநிறுத்தங்களில் எடுத்துக்காட்டப்படுகிறது.

சாமானியத் தொழிலாளர்களின் கோபத்தைத் தணிக்க ஒரு வழிவகையாக, ஆரம்பத்தில் இருந்தே UPS இல் “வேலைநிறுத்தம் தயார்” என்ற போலி பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டிருந்தது, அதேவேளையில் அதிகாரத்துவவாதிகள் மற்றொரு காட்டிக்கொடுப்பை வடிவமைக்கத் திரைக்குப் பின்னால் செயல்பட்டனர். அவர்கள் இந்தப் பாத்திரத்தை வகிக்க, ஜனநாயக ஒன்றியத்திற்கான டீம்ஸ்டெர்ஸ் (Teamsters for a Democratic Union - TDU), Labor Notes, அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் பிற போலி-இடது குழுக்களிடம் இருந்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த அமைப்புகள் அனைத்துமே உயர்மட்டத்தில் சில அலங்கார மாற்றங்களைச் செய்வதன் மூலம், அதிகாரத்துவத்தின் சுய-சீர்திருத்த கட்டுக்கதையை ஊக்குவிப்பதில் பல தசாப்தங்களைச் செலவிட்டுள்ளன.

2013 இல் விற்றுத் தள்ளப்பட்ட ஒரு UPS ஒப்பந்தத்தில் முக்கிய பாத்திரம் வகித்தவரும், டீம்ஸ்டெர்ஸ் சங்கத்தின் கடந்த தலைவருமான ஜேம்ஸ் பி. ஹோஃப்புக்குப் பதிலாக அவப்பெயரெடுத்த ஒரு குண்டரும் மற்றும் நடவடிக்கைகளை அமலாக்குபவருமான ஓ’பிரெய்னை ஒரு “போர்குணமிக்க” தொழிற்சங்கத் தலைவராக மாற்றிக் காட்டுவதில், இந்தக் குழுக்கள் அனைத்தும் பல ஆண்டுகளைச் செலவிட்டுள்ளன. இது, தொழிற்சங்க நேரடி தேர்தல்களின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வாக்குப்பதிவைக் கண்ட 2021 தொழிற்சங்கத் தேர்தலில் ஓ’பிரெய்ன் பொது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வழி வகுத்தது. டீம்ஸ்டெர்ஸில் இந்த குறைந்தபட்ச வாக்குப்பதிவை, கடந்தாண்டு ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்களின் சங்கத் தேர்தலில் பதிவான 9 சதவீத வாக்குப்பதிவு தான் முறியடித்தது. டீம்ஸ்டெர்ஸ் தலைவராக ஓ’பிரெய்ன் தேர்ந்தெடுக்கப்பட உதவியதற்குக் கைமாறாக, TDU, DSA இல் இருப்பவர்களும் மற்றவர்களும், மக்கள்தொடர்பு அதிகாரிகளாக இலாபகரமான அந்தத் தொழிற்சங்க எந்திரத்தின் உயர்மட்ட பதவிகளைப் பெற்றுள்ளனர்.

இந்தத் தற்காலிக உடன்படிக்கை அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இறுதி வாரங்களில், பகுதி நேர தொழிலாளர்களுக்கு 25 டாலர் ஆரம்ப கூலிகளுக்கான அதன் “கோரிக்கையை” TDU ஓரங்கட்டியதுடன், அந்த முன்மொழிவு “கைவிடப்பட்டு விட்டதாக” அதன் ஆதரவாளர்களுக்குத் தனிப்பட்டரீதியில் தகவல் அளித்தது. ஓ’பிரெய்ன் அறிவித்த இந்த உடன்படிக்கை ஒரு மிகப் பெரிய வெற்றி என்றும், இது “இரண்டாண்டுகளுக்கு முன்னர் நம் தொழிற்சங்க தலைமையை [மாற்றியதில்]” சாமானியத் தொழிலாளர்களின் விளைவால் ஏற்பட்டது என்றும் அறிவிப்பதில் இருந்து, DSA இன் ஓர் உறுப்பினரும் TDU வழிகாட்டி குழு உறுப்பினருமான சீன் ஓர்ரை இது எதுவும் தடுத்துவிடவில்லை.

UPS இல் என்ன நடந்து வருகிறதோ அது வெறுமனே ஒரு ஒப்பந்தம் சம்பந்தமான போராட்டம் அல்ல. இது ஒரு மிகப் பெரிய அரசியல் போராட்டத்தின் பாகமாக உள்ளது. ஓ’பிரெய்ன் மற்றும் UPS இக்குப் பின்னால் பைடென் நிர்வாகமும், இரண்டு பெருவணிக கட்சிகளும் நிற்கின்றன.

இந்தத் தற்காலிக ஒப்பந்தத்தின் நிஜமான எழுத்தாளரை வாஷிங்டன் டி.சி. இன் பேரம்பேசும் அறையில் காண முடியாது, மாறாக அவர் சிறிது தொலைவில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ளார். வோல் ஸ்ட்ரீட்டுக்கு முட்டுக் கொடுக்கவும், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக மூன்றாம் உலகப் போருக்கான “உள்நாட்டு முகப்பை” தயார் செய்யவும், தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்திருப்பதன் மூலம், அதிகரித்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தைத் திணறடித்து, நிஜமான கூலிகளில் வெட்டுக்களைச் சுமத்த முடியும் என்று பைடென் நம்புகிறார்.

இந்த உத்தி மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் துறைமுகங்களும், கடந்தாண்டு இரயில்வே துறை மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு துறைகளும், இந்த வாரயிறுதியில் கடைசி நிமிடத்தில் ஒரு வேலைநிறுத்தத்தை டீம்ஸ்டெர்ஸ் தொழிற்சங்கம் இரத்து செய்த யெல்லொ ட்ரக் சேவை நிறுவனம் போன்ற சரக்கு வினியோக நிறுவனங்களும் இதில் உள்ளடங்கும். வேலைநிறுத்தத்தை உடைக்கும் தலைவர் பைடென் இந்த UPS விற்றுத் தள்ளலுக்கு முன்னர் பல முறை ஓ’பிரெய்னைச் சந்தித்துள்ளார், அத்துடன் இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்குத் தடை விதிக்க கடந்தாண்டு பைடென் தயாரிப்பு செய்து கொண்டிருந்த போதும், அவரைச் சந்தித்தார்.

மிகப் பெரிய மூன்று வாகனத்துறை உற்பத்தி நிறுவனங்களில் ஒரு வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் முயற்சியிலும், ஏறக்குறைய இதேபோன்ற அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன: அதாவது, நீண்டகால அதிகாரத்துவவாதியான ஷான் ஃபெயின் ஒரு “சீர்திருத்த” தலைவராக காட்டப்படுகிறார், போலி-இடது ஜனநாயகத்திற்காக அனைத்து தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் அமைப்பு நிர்வாகிகள் உயர்மட்ட பதவிகளுக்கு உயர்த்தப்பட்டனர், ஃபெயின் மற்றும் வெள்ளை மாளிகைக்கு இடையே நெருக்கமான தொடர்பு உள்ளது, தொழிலாளர்களைக் குழப்பும் நோக்கில் தொழிற்சங்கங்கள் “வீராவேச” பொது அறிக்கைகளைப் பின்புலத்தில் தயாரிக்கின்றன.

தொழிலாளர்கள் என்ன முடிவெடுக்க வேண்டும்?

முதலாவதாக: தொழிற்சங்கத்திற்கு அதை யார் தலைமை கொடுக்கிறார்கள் அல்லது அது பகிரங்கமாக என்ன பேசுகிறது என்பதற்கு அப்பாற்பட்டு, விஷயங்கள் தொழிற்சங்க எந்திரத்தின் கரங்களில் இருக்கும் வரை, ஒரு விற்றுத்தள்ளல் மட்டுமே ஒரே சாத்தியமான விளைவாக இருக்கும். ஆனால் தொழிலாளர்கள் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டு, அவர்களே கட்டுப்படுத்தும் மாற்றீடு வடிவங்களை அபிவிருத்தி செய்து, அதிகாரத்தை எந்திரத்திடம் இருந்து சாமானியத் தொழிலாளர்கள் வசம் மாற்றப் போராடினால், பின்னர் அவர்களுக்கு எதிராக தொழிற்சங்கம்-நிறுவனம்-அரசாங்கத்தின் சூழ்ச்சியை எதிர்த்துப் போராடக்கூடிய கருவியை அவர்களால் உருவாக்க முடியும்.

இந்த விற்றுத் தள்ளப்பட்ட உடன்படிக்கையை நிராகரிக்கவும் மற்றும் அதிகாரத்தைத் தொழிற்சங்க எந்திரத்திடம் இருந்து சாமானியத் தொழிலாளர்களுக்கு மாற்றுவதற்காக போராடவும், சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) பாகமாக, UPS தொழிலாளர்களின் சாமானியத் தொழிலாளர் குழுவை அமைப்புரீதியான தாக்குமுகப்பாக அபிவிருத்தி செய்ய வேண்டும்.

UPS தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை இந்தப் புவியில் மிகவும் சக்தி வாய்ந்த கூட்டாளிகளாகக் கொண்டுள்ளனர். எங்கெங்கிலும் இருந்து தொழிலாளர்கள் UPS இன் நிலைமையை நெருக்கமாக பின்தொடர்ந்து வருகிறார்கள் மற்றும் UPS தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட விரும்புகிறார்கள், ஏனென்றால் இதுவொரு முக்கியமான போர் என்பதும், இதன் விளைவு ஒட்டுமொத்தமாக வர்க்கப் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இதேபோன்ற காட்டிக்கொடுப்புகளை முகங்கொடுத்து வரும், மற்ற நிறுவனங்கள் மற்றும் மற்ற தொழில்துறைத் தொழிலாளர்களுடன் இணைவதன் மூலம், இந்த தற்காலிக உடன்படிக்கையைத் தோற்கடிப்பதற்குத் தேவைப்படும் பலம் UPS தொழிலாளர்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் அனைத்திற்கும் மேல், UPS போராட்டம் வர்க்க ஆட்சியைக் குறித்த அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. தொழிலாளர்கள் வெறுமனே ஒரு பேராசை கொண்ட நிறுவனத்திற்கு எதிராக போராடவில்லை, மாறாக தீவிரப்படுத்தப்பட்ட சுரண்டல் மற்றும் உலகப் போர் மூலமாக மட்டுமே தொடர்ந்து உயிர் வாழ முடியும் ஓர் ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறையான இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகப் போராடுகிறார்கள். இதற்கு விடையிறுப்பாக, தொழிலாளர்கள் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், அதாவது, இலாபத்திற்காக இல்லாமல், மனிதகுலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அடிப்படையில் உலகை வழிநடத்தவும், இந்த இலாப முனைவை ஒழித்துக் கட்டவும் இந்த சமூகத்தை மறுஒழுங்கு செய்வதாகும்.