மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கிலிக்டரோக்லுவின் பிற்போக்குத்தனமான பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு பெருகி வருகின்ற போதிலும், குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) வியாழன்று துருக்கிய ஜனாதிபதி வேட்பாளர் கெமல் கிலிடாரோக்லுவை ஆதரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.
HDP மற்றும் எண்ணற்ற போலி-இடது குழுக்கள் தற்போதைய ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனைத் தூக்கி எறியக்கூடிய வேட்பாளராக கிலிக்டரோக்லுவை ஏற்றுக்கொண்டுள்ளன. முதலாம் சுற்று தேர்தலில், எர்டோகனை விட கிட்டத்தட்ட 2.5 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்று கிலிக்டரோக்லு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். புதனன்று அதிதீவிர வலதுசாரி வெற்றிக் கட்சியின் (Victory Party) வாக்குகளைக் கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டு, அதன் தலைவரான உமிட் ஓஸ்டாக் உடன் ஒரு நெறிமுறை ஒப்பந்தத்தில் கிலிக்டரோக்லு கையெழுத்திட்டதன் மூலம் போலி இடதுகளுக்கும் மற்றும் HDP க்கும் தகுந்த பதிலளித்தார்.
ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் நேட்டோவின் போர்களில் இருந்து உயிர்தப்பி வந்த 4 மில்லியன் அகதிகளை ஒரு வருடத்திற்குள் துருக்கியிலிருந்து நாடு கடத்துவதாக இந்த நெறிமுறை ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. இது, துருக்கி ஒரு அங்கமாக இருக்கும் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களை அப்பட்டமாக மீறும் வகையில், புகலிட உரிமையை முற்றாக ஒழிக்கிறது.
குர்திஷ் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சியின் (HDP) மேயர்களை பதவி நீக்கம் செய்து, சிரியா மற்றும் ஈராக்கிற்குள் சட்ட விரோதமாக எல்லை தாண்டிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆயிரக்கணக்கான HDP உறுப்பினர்களை கைது செய்ய எர்டோகன் பயன்படுத்திய சாக்குப்போக்கான ‘‘பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தைத்’’ தொடரவும் இந்த நெறிமுறை ஒப்பந்தம் உறுதியளிக்கிறது.
தியார்பாகிர் நகரத்தில், ஆத்திரமடைந்த குர்திஷ் HDP வாக்காளர்கள், துருக்கியின் BBC உடனான நேர்காணல்களில் கிலிக்டரோக்லுவை கண்டித்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தலில் HDP க்கு வாக்களித்த 5 மில்லியன் வாக்காளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்துள்ளது. HDPயின் ஆதரவின் காரணமாக, தியார்பாகிரில் 72 சதவீதமான வாக்குகள் கிலிக்டரோக்லுக்கு கிடைத்தது. அத்தகைய ஒரு வாக்காளரான நூர்டன், அதிவலதுசாரி ஓஸ்டாக் உடனான நெறிமுறை ஒப்பந்தம் 'குர்து மக்களை பயங்கரவாதத்துடன் சமன்' செய்வதால், இரண்டாவது சுற்றில் கிலிக்டரோக்லுவிற்கு வாக்களிக்க மாட்டேன் என்று BBCயிடம் கூறினார்.
கிலிக்டரோக்லுவுடன் இணைந்த வலதுசாரிக் கட்சிகள் கூட, அவரது பாசிசக் கொள்கைகளிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டன. எர்டோகனின் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் (AKP) முன்னாள் பிரதம மந்திரி அஹ்மத் தாவுடோக்லுவின் எதிர்காலக் கட்சியின் (Future Party) 11 தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் ராஜினாமாவை அறிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
நம் நாட்டில் தஞ்சம் புகுந்து, பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்வதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாத அகதிகளை அவமதிக்கும் மொழியை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். குடியேற்றக் கொள்கையை விமர்சிப்பதற்குப் பதிலாக, மேலும் கணிசமான மற்றும் சரியான கொள்கையை முன்மொழிவதற்குப் பதிலாக, அகதிகளை லாரிகளில் ஏற்றி நாஜிக்களைப் போல நாடு கடத்துவதாக உறுதியளிப்பவர்களுக்கு எதிராக நாங்கள் நிற்போம்.
DEVA கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் AKP எம்பியுமான முஸ்தபா யெனெரோக்லு, இப்போது கிலிடாரோக்லுவின் குடியரசுக் கட்சியின் (CHP) துணைத் தலைவராக இருக்கும் அவர், தனது சொந்த வேட்பாளரையே விமர்சித்தார். 'நான் ஓரங்கட்டப்பட்டவர்களின் அடையாளத்தைப் பார்ப்பதில்லை, தீமையின் விளக்கத்தையும் நான் கேட்பதில்லை. மனித மாண்பை மிதிக்கும் எந்தக் கொள்கையையும் நான் மிதிப்பேன்'' என்று முஸ்தபா யெனெரோக்லு கூறினார்.
எவ்வாறாயினும், நேற்று, குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் இரண்டாவது சுற்றுத் தேர்தலில், கிலிக்டரோக்லுக்கான தங்கள் ஆதரவில் எந்த மாற்றமுமில்லை என்று அறிவித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டனர்.
கிலிக்டரோக்லு பற்றிய அடையாள விமர்சனத்துடன் வாக்காளர்களை திருப்திப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அறிக்கையானது, பின்வருமாறு கூறுகிறது: ‘’சமூகத்தில் ஜனநாயக மாற்றத்திற்கான எதிர்ப்பை உடைக்க, சுரண்ட, தணிக்க அல்லது திசைதிருப்பும் எந்தவொரு அரசியல் அணுகுமுறையையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இத்தகைய அணுகுமுறைகளுக்கு எதிரான நமது ஜனநாயகப் போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம். இந்த சூழலில் வெற்றிக் கட்சிக்கும், கிலிக்டரோக்லுவின் CHP கட்சிக்கும் இடையே நேற்று கையெழுத்தான நெறிமுறையை ஒப்பந்தத்தின் மதிப்பிட்டை, எங்கள் விமர்சனங்களை பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்வோம்.’’
உண்மையில், புதனன்று குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சியின் சுருக்கமான அறிக்கை, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்ததைப் பற்றி புகார் அளித்திருந்தாலும், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான அகதிகளை நாடு கடத்தும் திட்டங்களில் அமைதியாக இருந்தது. எனவே, நேற்று அதன் அறிக்கை, இந்த பிரச்சினையில் சில வரிகளை சேர்த்துக் கொண்டது.
‘’புலம்பெயர்ந்தவர்களையோ அல்லது அகதிகளையோ அரசியல் நலன்களின் கருவியாக ஆக்குவது தவறானது மற்றும் மனிதாபிமானமற்றது’’ என்று குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி சிடுமூஞ்சித்தனமாக கூறியது. ‘‘இந்த நிலைமைக்கான பொறுப்பு பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்வர்களோ அல்லது அகதிகளோ அல்ல, மாறாக நேரடியாக போர்க் கொள்கைகளை வலியுறுத்தும் மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக அகதிகளை கருவியாக்கும் அரசாங்கத்திடம் உள்ளது. போர்க் கொள்கைகளுக்கு எதிராக வலுவான அமைதிப் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்’’ என்று அது தெரிவித்தது.
அதாவது, அரசியல் நோக்கங்களுக்காக பாதிக்கப்பட்ட அப்பாவி அகதிகளை பலிகடா ஆக்கி, தவறான மற்றும் மனிதாபிமானமற்ற கொள்கை கொண்ட ஒரு வேட்பாளரை ஆதரிப்பதாக குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) ஒப்புக்கொள்கிறது. இது HDP யின் மொத்த திவால்நிலைக்கான ஒப்புகையாகும்.
1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதில் இருந்து ஏகாதிபத்திய போர்களும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளும் ஏறக்குறைய தடையின்றி தொடர்கின்றன. இதனால், வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில், அடிப்படை உரிமைகள் இல்லாமல் துயரத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவை அனைத்திற்கும் மேலாக, முன்னணி நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் குற்றங்களில் துருக்கிய மற்றும் குர்திஷ் முதலாளித்துவ வர்க்கம் உடந்தையாக இருக்கின்றன.
'போர்க் கொள்கைகளுக்கு எதிராக அமைதிக்கான வலுவான போராட்டத்தை' நடத்தும் HDP யின் சொல்லாட்சியும் ஒரு மோசடியாகும். எர்டோகன் பாராளுமன்றத்தில் முன்வைத்த பின்லாந்தின் நேட்டோ உறுப்புரிமையை அது எதிர்க்காமல், நாட்டின் 'பாதுகாப்பு கவலைகள் நியாயமானவை' என்று கூறி, ரஷ்யா மீது போர் தொடுக்கும் பின்லாந்தை நேட்டோவிற்குள் கொண்டுவர HDP உதவியது.
மிகவும் செல்வாக்கற்ற கொள்கைகளை கோடிட்டுக் காட்டிய கிலிக்டரோக்லு, எர்டோகனை விட சிறந்த நேட்டோ கூட்டாளியாக இருக்க உறுதியளித்ததோடு, துருக்கியின் TÜSİAD முன்னணி வர்த்தக கூட்டமைப்பின் பொருளாதாரத் திட்டத்தையும் ஆதரித்தார். அகதிகளுக்கு எதிரான மற்றும் 'பயங்கரவாத எதிர்ப்பு' நடவடிக்கைகள் என்ற சாக்குப்போக்கில், பொலிஸ் அரசை பாரியளவில் அணிதிரட்டுவதன் மூலம், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்க அவர் தெளிவாக திட்டமிட்டுள்ளார்.
ஆயினும்கூட, கிலிக்டரோக்லு, துருக்கியின் முக்கிய போலி-இடது கட்சிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவர், HDP போலவே, சிக்கன நடவடிக்கை மற்றும் பொலிஸ் அரச ஆட்சியின் திவாலான, ஏகாதிபத்தியத்தின் பிற்போக்கு கருவி என அம்பலப்பட்டுள்ளார்.
குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சியின் கூட்டாளியான துருக்கியின் போலி-இடது தொழிலாளர் கட்சி (TİP), கிலிக்டரோக்லுவின் மோசமான பிரச்சாரம் குறித்து வாய்மூடி மௌனமாக உள்ளது, இது தொழிலாளர்களை தேசிய அடிப்படையில் பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடர்ந்தும் உற்சாகமாக கிலிக்டரோக்லுவை ஆதரிக்கிறது.
''இந்த அகதிகள் பிரச்சினையை சமூகத்தின் உணர்வுகளை ஈர்க்கும் தினசரி அரசியல் கருவியாக மாற்றக்கூடாது'' என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் ஏர்கன் பாஸ் Sözcü TV க்கு தெரிவித்தார். இருப்பினும், அவர் கிலிக்டரோக்லுவின் பெயரைக் குறிப்பிடவுமில்லை அவரைக் கண்டிக்கவும் இல்லை.
ஏர்டோகனின் கட்சியான AKP இன் வெளியுறவுக் கொள்கையை மத்திய கிழக்கில் 'அமைதியான' கொள்கையுடன் மாற்றுவதற்கு ஏர்கன் பாஸ் அழைப்பு விடுத்தார். பின்னர் அவர் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நட்பு நாடுகளையும் - பிராந்தியத்தில் உள்ள முக்கிய போர்வெறியர்கள் - போரின் நெருக்கடியைத் தீர்க்குமாறு பொருத்தமற்ற முறையில் அழைப்பு விடுத்தார். 'இஸ்ரேல், அமெரிக்கா, வளைகுடா நாடுகள், சிரியாவை உள்நாட்டுப் போருக்கு இழுக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும், இந்த செயல்முறையின் இழப்பீட்டுக்கான பொறுப்பை ஏற்கும்படி கட்டாயப்படுத்த சர்வதேச சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்'' என்று ஏர்கன் பாஸ் கூறினார்.
கிரேக்கத்திலுள்ள சிரிசாவின் சகோதரக் கட்சியான இடது கட்சி பின்வருமாறு அறிவித்தது: “மக்களின் எந்த ஒரு கோரிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத, அகதிகளுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி தேசியவாத, வலதுசாரி அச்சில் மாட்டிக் கொள்ளும் எதிர்க்கட்சியின் [அதாவது, Kılıçdaroğlu இன்] அணுகுமுறையால் நாட்டின் பொருளாதார, சமூக நெருக்கடிகளை சமாளிக்க முடியாது என்பது தெளிவாகிறது. இன மற்றும் குறுங்குழுவாத பிளவுகளை அடிப்படையாகக் கொண்ட பிற்போக்குத்தனமான பாசிச கொள்கைகளுக்கு எதிராக இடது கட்சி தனது போராட்டத்தை தொடரும்.'
ஆயினும்கூட, இடது கட்சி 'இஸ்லாமிய பாசிச அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கெமால் கிலிக்டரோக்லுவை தொடர்ந்து ஆதரிக்கும்' என்று அறிவித்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இடது கட்சியின் நிலைப்பாடு என்னவென்றால், பாசிசத்தை எதிர்த்துப் போராட, அது பாசிசமாக விவரிக்கும் கொள்கைகளை முன்வைக்கும் ஒரு வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பதாகும்.
நேற்று, தொழிற்கட்சி (EMEP) தலைவர் செல்மா குர்கனும் எர்டோகனுக்கு எதிராக கிலிக்டரோக்லுவை ஆதரித்தார். ‘’மக்களை ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கும் இனவாத, பேரினவாத மற்றும் தேசியவாத கொள்கைகளுக்கு அடிபணியாமல் இருக்க... புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொள்கைகளைத் தடுப்பதற்கான பதிலைக் கண்டுபிடிக்காமல் பேச்சுவார்த்தை மேசையில் ஏகாதிபத்தியவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது' என்று அவர் குறிப்பிட்டார்.
குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் போலி-இடதுகள் கிலிக்டரோக்லுவிடம் நிபந்தனையற்ற சரணடைதல் என்பது, ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு குரோதம் ஆகியவற்றின் மறுக்க முடியாத பிரகடனமாகும். அவர்கள், தங்கள் சொந்த ஒப்புதலின்படி, பாசிச சக்திகளுடன் கூட்டணி வைத்துள்ளனர். அவர்கள் போரை எதிர்க்கவோ, ஜனநாயகத்திற்காக போராடவோ அல்லது தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்கவோ இல்லை. இவை ஏகாதிபத்திய-சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் வசதி படைத்த பிரிவுகளின் சார்பாகப் பேசும் பிற்போக்குக் கட்சிகள் ஆகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கியப் பிரிவான சோசலிச சமத்துவக் குழு, எர்டோகன் மற்றும் கிலிக்டரோக்லு ஆகிய இரு வேட்பாளர்களையும் நிராகரிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் அரசியல் ரீதியாக சுயாதீமான இயக்கம் கட்டப்பட வேண்டும். சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவதுதான் முன்னோக்கி செல்லும் பாதையாகும்.