மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை துருக்கிய ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றுக்கு சில நாட்கள் இருக்கும் நிலையில், மக்கள் கூட்டணி வேட்பாளர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் தேசக் கூட்டணி வேட்பாளர் கெமல் கிலிக்டரோக்லு ஆகிய இருவரும் மில்லியன் கணக்கான அகதிகளை நாடு கடத்த அழைப்பு விடுத்து, ''பயங்கரவாதத்திற்கு எதிராக போராட மற்றும் சட்டம் ஒழுங்கை'' மேம்படுத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
முதல் சுற்றில் 5.2 சதவீதம் (2.8 மில்லியன் வாக்குகள்) வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்த தீவிர வலதுசாரி அட்டா கூட்டணியின் வேட்பாளர் சினான் ஓகன், இரண்டாவது சுற்றில் எர்டோகனுக்கு தனது ஆதரவை அறிவித்தார். எவ்வாறாயினும், கூட்டணியின் முக்கிய சக்தியான வெற்றிக் கட்சி நேற்று கிலிக்டரோக்லுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. மே 14 பொதுத் தேர்தலில் வெற்றிக் கட்சி 2.2 சதவீத வாக்குகளை (1.2 மில்லியன்) பெற்றது.
பல ஆண்டுகளாக கிலிக்டரோக்லுவின் பிற்போக்குத்தனமான அகதிகளுக்கு எதிரான பிரச்சாரம், மே 14 முதல்சுற்று தேர்தலுக்கு பிறகு, தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளதுடன், 'பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்' என்ற வாக்குறுதியும் இதில் இணைந்துள்ளது. இது அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகும்.
இது, குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP), பசுமை இடது கட்சி (YSP) மற்றும் போலி-இடது கட்சிகள் என்பன, எர்டோகனுக்கு ஒரு 'மாற்றீடாக' கிலிக்டரோக்லுக்கு பின்னால் அணிவகுத்து நிற்கும் அரசியலின் திவால் தன்மையை அம்பலப்படுத்துகிறது. அத்தோடு, வெகுஜனங்களின் வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பை ஆளும் வர்க்கத்தின் இன்னொரு ஏகாதிபத்திய-சார்பு வலதுசாரி பிரிவுக்கு பின்னால் திசைதிருப்புவதன் மூலம், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எர்டோகனுக்கு எதிரான எந்தவொரு உண்மையான இடதுசாரி சவாலையும், ஆளும் வர்க்கம் தடுக்க இக்கட்சிகள் உதவுகின்றன.
துருக்கிய அரசியல் ஸ்தாபனத்தின் பொய்யான கூற்றுகளுக்கு மாறாக, ஆப்கானிஸ்தானில் இருந்து ஈராக் மற்றும் சிரியாவில் ஏகாதிபத்தியம் மேற்கொண்ட போர்களில் இருந்து உயிர்தப்பிவந்த, பாதுகாப்பற்று வாழும் அகதிகளிடமிருந்து, துருக்கியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாது.
இருப்பினும், எர்டோகன் அரசாங்கம் ஜனநாயக உரிமைகளைத் தாக்கி, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்' என்ற பெயரில் ஒரு போலீஸ் அரசைக் கட்டியெழுப்பியுள்ளது. கட்சித் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான குர்திஷ் தேசிய மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) உறுப்பினர்களை சிறையில் அடைத்ததுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்களை பதவி நீக்கம் செய்து மற்றும் அரச அடக்குமுறைகளை எர்டோகன் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டது. அத்துடன் சிரியா மற்றும் ஈராக்கில் துருக்கியின் சட்டவிரோத இராணுவ நடவடிக்கை ஆகியவற்றை நியாயப்படுத்த இதனை ஒரு சாக்குப்போக்காக எர்டோகன் பயன்படுத்தினார்.
ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், துருக்கியிலும் சர்வதேச அளவிலும் ஒரு ஆழமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் மத்தியில், தொழிலாள வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கான கட்டமைப்பை வலுவாக்கும் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கு எர்டோகன் மற்றும் கிலிக்டரோக்லு ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) துருக்கியப் பிரிவான சோசலிச சமத்துவக் குழு (SEG), இந்த இரண்டு ஏகாதிபத்திய சார்பு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிற்போக்குத்தனமான திட்டங்களை நிராகரிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. SEG, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மற்றும் சர்வதேச ஐக்கியத்துக்காக போராடுகிறது. அத்தோடு, ஏகாதிபத்திய போரை SEG, எதிர்ப்பதோடு, ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிற்போக்கு கன்னைகளுக்கு எதிராகவும் அகதிகளை பாதுகாக்காமல் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது என்பது சாத்தியமற்றது என்று கூறுகிறது.
கடந்த செவ்வாய்கிழமை, கிலிக்டரோக்லு உடனான ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், வெற்றிக் கட்சியின் தலைவர் உமிட் ஓஸ்டாக், சர்வதேச அளவில் அதிதீவிர வலதுசாரி மற்றும் பாசிச போக்குகளின் வாதங்களை எதிரொலித்தார். 'துருக்கி 'புலம்பெயர்ந்தோர் நாடாக' மாறுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் மகள் தெருவில் இறங்கினால் நீங்கள் கவலைப்பட விரும்பவில்லை என்றால் ... 13 மில்லியன் அகதிகளை, அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பும் கொள்கையை ஆதரித்து. மே 28 அன்று கெமால் கிலிடாரோக்லுவுக்கு வாக்களியுங்கள்,” என்று அவர் கூறினார்.
துருக்கியில் உத்தியோகபூர்வமாக இருக்கும் சுமார் 4 மில்லியன் எண்ணிக்கையிலான அகதிகளை, சாத்தியமான வன்புணர்வாளர்கள் என்று ஓஸ்டாக்கின் அருவருப்பான தாக்குதல் என்பது தனித்துவமானது அல்ல. சினான் ஓகன் மற்றும் வெற்றிக் கட்சியின் வாய்சவடால்களை ஏற்றுக்கொண்ட கிலிக்டரோக்லு, “நாட்டுக்குள்ளே தப்பியோடி வருபவர்கள் எமது பெண் பிள்ளைகளின் வாழ்வை முற்றாக இருட்டுக்குள் வைத்திருப்பதுக்கு முன்பு, தாயகத்தை நேசிப்பவர்கள் தேர்தலில் களமிறங்க வேண்டும்’’ என்று சமீபத்தில் கூறினார். இந்த செய்தியாளர் மாநாட்டிற்கு முன், 'சிரியர்கள் வீட்டிற்குச் செல்வார்கள்' என்று சுவர்களில் எழுதியதற்காக, கிலிக்டரோக்லுவின் குடியரசு மக்கள் கட்சியின் (CHP) இளைஞர்களுக்கு ஓஸ்டாக் நன்றி தெரிவித்தார்.
ஒரு கொடிய இனவெறிபிடித்த ஓஸ்டாக், பாசிச தேசியவாத இயக்கக் கட்சியில் (MHP) இருந்து இப்போது மக்கள் கூட்டணியில் எர்டோகனின் முக்கிய கூட்டாளியாக இருக்கிறார். அவரது தந்தையான, கேப்டன் ஸ்டாப் முசாபர் ஓஸ்டாக், 1960ம் ஆண்டு, இராணுவ சதியை தொடங்கிய இராணுவ ஆட்சிக்குழுவின் ஒரு உறுப்பினராக இருந்தார்.
2016 இல் எர்டோகனுக்கு எதிரான, நேட்டோ ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சிக்கு பின்னர், பாசிச MHP யிலிருந்து பிரிந்த மெரல் அக்செனர் தலைமையிலான நல்ல கட்சியின் தலைவராக ஓஸ்டாக் உருவெடுத்தார். தற்போது, கிலிக்டரோக்லுவின் குடியரசு மக்கள் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஓஸ்டாக்கின் நல்ல கட்சி, தேசக் கூட்டணியை வழிநடத்துகிறது.
ஓஸ்டாக், கிலிக்டரோக்லுவை ஆதரித்த பிறகு, வெற்றிக் கட்சி மற்றும் தேசியக் கூட்டணி ஒப்புக்கொண்ட ஏழு-புள்ளி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அந்த நெறிமுறையில் உள்ள பிரிவுகளின் 'நோக்கம்' அகதிகள் மீது எர்டோகனின் கொள்கைகளால் ஏற்படும் சமூக அழிவை குற்றம் சாட்டுவதாக இருக்கிறது. அத்தோடு, தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூகக் கோரிக்கைகளை, வன்முறை அரச அடக்குமுறையுடன் அடக்கப்படும் என்பதையும் அது தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த நெறிமுறையின் நோக்கம், 'தேசிய ஒற்றுமை மற்றும் ஒற்றுமையை உறுதி செய்வதற்கான கூட்டுப் பணி மற்றும் ஒத்துழைப்பின் விவரங்களைத் தீர்மானிப்பது, வறுமை, ஊழல், தடைகள் மற்றும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, மற்றும் துருக்கிக்கு கடுமையான பாதுகாப்பு மற்றும் மக்கள்தொகை பிரச்சினையை ஏற்படுத்தும் அகதிகள் மற்றும் தப்பி மறைந்து வாழ்பவர்களை நாடு கடத்த வேண்டும்'' என்று அந்த நெறிமுறை கூறுகிறது.
'அனைத்து அகதிகள் மற்றும் தப்பி மறைந்து வாழ்பவர்கள், குறிப்பாக சிரியர்கள், ஒரு வருடத்திற்குள் நாடு கடத்தப்படுவார்கள்,' என்று அவர் கூறினார். துருக்கி ஒரு அங்கமாக இருக்கும் சர்வதேச மரபுகள் மற்றும் துருக்கிய உள்நாட்டுச் சட்டத்தின்படி, இந்த நாடு கடத்தல் திட்டம் சட்டவிரோதமானது ஆகும். எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் 'ஐரோப்பிய கோட்டை' கொள்கையும், அதற்கு எர்டோகனின் ஒத்துழைப்பும், நடைமுறையில் தஞ்சம் என்ற அடிப்படை ஜனநாயக உரிமையை பெருமளவில் ரத்து செய்துள்ளது.
'அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் திறம்பட மற்றும் தீர்க்கமான போராட்டம் நடத்தப்படும்' என்று அந்த ஆவணம் உறுதியளிக்கிறது. 'சட்ட ஆதாரங்களால் நிறுவப்பட்ட பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள மேயர்களுக்குப் பதிலாக, அரசு அதிகாரிகளை நியமிப்பது, நீதிமன்றத் தீர்ப்புகளின் கட்டமைப்பிற்குள் தொடரும்...' என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
துருக்கியிலுள்ள குர்திஷ் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி மேயர்களை, நீதிமன்ற தீர்ப்பு இல்லாமல் பதவி நீக்கம் செய்து, அவர்களுக்குப் பதிலாக அரச அதிகாரிகளை நியமிக்கும் எர்டோகனின் கொள்கை தொடரும் என்பதே இதன் பொருளாகும்.
குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) மற்றும் பசுமை இடது கட்சி ஆகியன அமெரிக்க மற்றும் நேட்டோ ஏகாதிபத்தியத்தை நோக்கிய அவர்களின் கூட்டு நோக்குநிலையின் அடிப்படையில் கிலிக்டரோக்லு உடன் கூட்டணி வைத்துள்ளன. குர்திஷ் மக்கள் மீதான எர்டோகனின் அரச அடக்குமுறைக்கு, கிலிக்டரோக்லுவின் குடியரசுக் கட்சி ஆதரவு அளித்த போதிலும், HDP யின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்களை குறிவைத்து 'நிர்வாகிகள் நியமனம்' தொடர்பான சமரசத்தை விமர்சித்து, செவ்வாய் கிழமை தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு அது ஒரு பாசாங்குத்தனமான அறிக்கையை வெளியிட்டது. எவ்வாறாயினும், அகதிகளை ஓராண்டுக்குள் நாடு கடத்தும் திட்டங்கள் மற்றும் பிற ஜனநாயக விரோத விதிகளுக்கு HDP எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகளை இன்று அறிவிப்பதாக இந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
கிலிக்டரோக்லுவின் இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், திங்களன்று எர்டோகனுக்கு, ஓகன் தனது ஆதரவை அறிவித்ததைத் தொடர்ந்து வெற்றிக் கட்சிக்கும் தேசியக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தானும் எர்டோகனும் ஏறக்குறைய ஒரே மாதிரியான விதிமுறைகளை ஒப்புக்கொண்டதாக ஓகன் கூறினார். “எல்லா வகையான பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான இடைவிடாத மற்றும் நிலையான போராட்டம் தொடரும் என்றும், அகதிகள் மற்றும் தப்பி மறைந்து வாழ்பவர்களை நாடு கடத்துவதற்கான கால அட்டவணை இப்போது உள்ளது” என்றும் அவர் கூறினார்.
'குடியரசுக் கட்சியின் தலைவர் (கிலிக்டரோக்லு) தனது அரசியல் பயணத்தை 'காந்தி கெமால்' என்று தொடங்கி, 'நாஜி கெமால்' என்று முடிப்பார்' என்று செவ்வாயன்று ஒரு பேரணியில் எர்டோகன் கூறினார். ஆனால், எர்டோகனின் பிற்போக்குத்தனமான இந்தப் பதிவும், ஓகானுடனான அவரது கூட்டணியும் அகதிகள் மீதான கிலிக்டரோக்லு மீதான அவரது விமர்சனம் வெற்று வாய்ச்சவடால் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஒரு நேர்காணலில், எர்டோகன் தனது அரசாங்கம் 'அகதிகளைத் திருப்பி அனுப்பும்' கொள்கையைத் தொடரும் என்றார். மேலும் அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் இருந்தே அகதிகள் பாதுகாப்பாகவும், தன்னார்வமாகவும் திரும்புவதற்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். இதுவரை, கிட்டத்தட்ட 560,000 அகதிகள் [சிரியாவில்] பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திரும்பியுள்ளனர். சிரியாவில் இருந்து பயங்கரவாத அமைப்புகள் ஒழிக்கப்படும்போது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டார்.
2016 ஆம் ஆண்டு முதல், வடக்கு சிரியாவில் துருக்கிக்கு அருகில் குர்திஷ் அரசு உருவாவதைத் தடுக்க, அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் தேசியவாத மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளைத் (YPG) தாக்கியதுடன், அங்காரா வடக்கு சிரியாவில் பல படையெடுப்புகளைத் தொடங்கியுள்ளது. இன்று, துருக்கிய இராணுவம், அதன் இஸ்லாமிய பினாமிப் படைகளுடன் சேர்ந்து, இந்தப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.
இந்த பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளில் சிரிய அரேபியர்களை குடியமர்த்துவதன் மூலம் குர்திஷ் அரசின் சாத்தியத்தை முற்றிலுமாக அகற்ற எர்டோகனின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த அசிங்கமான திட்டமானது, ரஷ்ய ஆதரவுடைய சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துடன் உறவுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளுடன் சேர்ந்துள்ளது.
கிலிக்டரோக்லுக்கு பின்னால் அணிவகுத்து நிற்கும் போலி-இடது கட்சிகள் மற்றும் அவரது அகதிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் வாய்மூடி மௌனமாக இருந்து, கிலிடாரோக்லுவை ஓகன் ஆதரிப்பார் என்று சிடுமூஞ்சித்தனமாக நம்பினர். ஆனால், ஓகன் எர்டோகனுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 1 மில்லியன் வாக்குகளைப் பெற்ற துருக்கியின் முக்கிய போலி-இடது தொழிலாளர் கட்சி (TİP) எர்டோகன் மற்றும் ஓகனின் முகங்கள் ஒன்றாக இருக்கும் போட்டோஷாப் செய்யப்பட்ட படத்தில் 'நீங்கள் எர்டோகனை இழப்பீர்கள்!' என்று எழுதி வெளியிட்டது. ஆனால் முதல் சுற்றுத் தேர்தலில், ஓகனுக்குப் பின்னால் இருந்த முக்கிய சக்தியான வெற்றிக் கட்சியுடனான கிலிக்டரோக்லுவின் கூட்டணியை போலி-இடது தொழிலாளர் கட்சி எதிர்க்கவில்லை. இந்தக் கட்சி இப்போது கிலிக்டரோக்லுவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறது.
தொழிலாளர் கட்சியில் இருந்து உருவாகிய துருக்கியின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (TKP), செவ்வாயன்று ஒரு அறிக்கையில் கிலிக்டரோக்லுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்து, அதன் சொந்த அரசியல் திவால்நிலையை வெளிப்படுத்தியது. ‘’இந்த வாக்கெடுப்பு என்பது அமெரிக்கவாதம், மதவெறி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு உணர்வுகள் ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையேயான தேர்வை அர்த்தப்படுத்தவில்லை அல்லது தேர்தல் செயல்முறை முடிவதற்கு முன்பே புதிய கூட்டணிகளை உருவாக்கிய மக்கள் கூட்டணி அல்லது தேசக் கூட்டணியை ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்தவில்லை’’ என்று இந்தக் கட்சி அபத்தமாக அறிவித்தது.
சோசலிச சமத்துவக் குழுவானது, கிலிக்டரோக்லுவை ஆதரிப்பதில் மாற்றீடு இல்லை என்ற போலி-இடதுகளின் கூற்றை நிராகரிக்கிறது. உண்மையில், இந்த தேர்தலில் கிலிக்டரோக்லு, எர்டோகனுக்கு ஒரு மாற்றீடு இல்லை என்பதைக் காட்டுகிறது. ஏகாதிபத்திய சார்பு ஆளும் வர்க்க வேட்பாளர்களான இந்த இருவரையும் நிராகரித்து, ஒரு சர்வதேச சோசலிச போர்-எதிர்ப்பு வேலைத்திட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான போராட்டமே முன்னோக்கி செல்லும் வழியாகும். இதன் பொருள், சோசலிச சமத்துவக் கட்சியை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கியப் பிரிவாகக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.