இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த புதன்கிழமை கனடாவின் 120,000 மத்திய அரசு தொழிலாளர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போருக்கும் உள்நாட்டில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களைக் குறைத்து உரிமைகளைப் பறிப்பதற்குமான ஒட்டுமொத்த முதலாளித்துவ உயரடுக்கின் வர்க்கப் போர் திட்டநிரலுக்கு எதிரான, மற்றும் ட்ரூடோ தாராளவாத அரசாங்கத்திற்கு எதிரான ஒரு நேரடியாக சவாலாக உள்ளது.
இதனால் தான், இந்த வேலைநிறுத்தம் பெருநிறுவன ஊடகங்களில் கடுமையான கண்டனங்களைச் சந்தித்துள்ளது. சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கலை அறிவுறுத்தி கூலிக்கு மாரடிக்கும் அதே பெருநிறுவன கைக்கூலிகள், பொதுச் சேவைகள் 'தொந்தரவுக்கு' உள்ளாவதாகப் புலம்பி எழுதிய ஆர்ப்பரிப்பான செய்திகளும், வேலைக்குத் திரும்புவதற்கான ஓர் அவசரச் சட்டம் மூலமாக வேலைநிறுத்தத்தைக் குற்றகரமாக்கும் கோரிக்கைகளும் பெருநிறுவன ஊடகங்களில் உள்ளடங்குகின்றன.
கனடாவின் வருவாய்துறை மற்றும் வருமான வரித்துறை, புலம்பெயர்வு, குடியுரிமை மற்றும் சேவைத்துறையின் பணியாளர்களையும் உள்ளடக்கி உள்ள இந்த வேலைநிறுத்தக்காரர்கள், பணவீக்கத்திற்கு நிகரான சம்பள உயர்வுகளுக்காகவும் பலமான வேலைப் பாதுகாப்புகளுக்காகவும் போராடுகிறார்கள்.
மத்திய அரசு தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தம், நிஜமான சம்பளத்தில் வெட்டுக்கள், தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், பொதுச் சேவை வெட்டுக்கள் ஆகியவற்றுக்கு எதிராக ஓர் உலகளாவிய தொழிலாள வர்க்க மேலெழுச்சியின் பாகமாக உள்ளது. இந்த எழுச்சியானது, அனைத்து பெரும் சக்திகளின் ஆளும் உயரடுக்குகளையும் உலகப் போரை நோக்கி தள்ளும் அதே முதலாளித்துவ நெருக்கடியால் உந்தப்படுகிறது. பிரான்சில் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் பின்னிழுக்கும் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான மூன்று மாத கால வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து வரும் கனடாவின் இந்த வேலைநிறுத்தம், பிரிட்டனில் சுகாதாரத்துறை மற்றும் தபால்துறை தொழிலாளர்களின் மிகப் பெரிய வேலைநிறுத்தங்களுடனும் அமெரிக்காவில் கல்வித்துறை தொழிலாளர்களின் போராட்டங்களுடனும் ஒத்திசைந்து வருகிறது. இவற்றின் தேசிய தனித்தன்மைகள் எதுவாக இருந்தாலும், இந்தப் போராட்டங்கள் அனைத்தும், சமூகத்தின் வளங்களை ஏகாதிபத்தியப் போருக்கு அடிபணியச் செய்யவும் மீண்டும் மீண்டும் நிதிய தன்னலக்குழுவின் தொடர்ச்சியான பிணையெடுப்பு வழங்குவதற்குமான ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளைப் புறநிலையாக எதிர்க்கின்றன.
இந்தப் புரிதல் மத்திய அரசு தொழிலாளர்களின் போராட்டத்தை இயக்கமூட்ட வேண்டும் என்பதோடு, இந்த வேலைநிறுத்தத்தைச் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிராகவும் அவற்றை அமுல்படுத்தும் தொழிற்சங்கம், NDP ஆதரவு பெற்ற ட்ரூடோ அரசாங்கம் மற்றும் அதன் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராகவும் தொழிலாள வர்க்க எதிர்தாக்குதலின் ஒரு தாக்குமுகப்பாக ஆக்குவதற்கு, ஒரு நனவுப்பூர்வமான அரசியல் மூலோபாயமாக விரிவாக்கப்பட வேண்டும். இத்தகைய ஒரு எதிர்தாக்குதல் கனடா தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பையும் அதேபோல அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் ஒன்றிணைக்க முயன்றால் மட்டுந்தான் மேலாளுமையோடு இருக்கும்.
மத்திய அரசு தொழிலாளர்களுக்காக பேரம்பேசும் தொழிற்சங்க முகவரான கனடாவின் பொதுச் சேவைத்துறை கூட்டணி (PSAC), மத்திய அரசு தொழிலாளர்களிடையே மிகப் பெரிய தொழிற்சங்கமாக இருப்பதுடன், கனேடிய தொழிலாளர் காங்கிரஸின் (CLC) மிகப்பெரிய துணை அமைப்புகளில் ஒன்றாகவும் உள்ளது. 2015 இல் இந்த தாராளவாத அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே PSAC மற்றும் CLC இரண்டுமே அதனுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வந்துள்ளன. தொழிலாளர்களின் ஒப்பந்தங்கள் 2021 இல் காலாவதியாகி ஆனதில் இருந்து ஏறக்குறைய இரண்டாண்டுகளாக பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்து வந்தது உட்பட, இந்த வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க PSAC ஏன் அதனால் ஆன மட்டும் அனைத்தையும் செய்தது என்பதை இது விளங்கப்படுத்துகிறது. அதிகரித்து வரும் பணவீக்கப் பிரச்சனை அனைத்து தொழிலாளர்களையும் பாதித்து வருகின்ற போதும் கூட, இந்தப் போராட்டத்தில் இணையுமாறு PSAC எல்லா பிரிவு தொழிலாளர்களுக்கும் முறையீடு செய்யவில்லை. பிற்போக்குத்தனமான 'அத்தியாவசிய சேவைகள்' சட்டமசோதா இப்போது இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஐந்து பேரம்பேசும் குழுக்களின் 155,000 தொழிலாளர்களில் 35,000 தொழிலாளர்களை வேலை நடவடிக்கையில் ஈடுபடாதவாறு தடுக்கின்ற போதும் கூட PSAC அந்த சட்டமசோதாவை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தின் பாதிப்பைக் குறைக்க அது செயல்பட்டு வருவதாக பகிரங்கமாகப் பெருமையடித்துக் கொள்கிறது.
ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முழுவதும் ட்ரூடோ அரசாங்கம் ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டுள்ள நிலைமைகளின் கீழ் இது நடக்கிறது. நான்காண்டுகளில் சம்பளத்தை வெறும் 8.5 சதவீத 'உயர்த்துவதற்கான' ஆத்திரமூட்டும் முன்மொழிவுடன் அரசாங்கம் இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. பின்னர் இந்த முன்மொழிவு மூன்றாண்டுகளில் மிகச் சிறியளவில் 9 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது. புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் நிதித்துறை தலைவர் மோனா ஃபோர்டியர் கூறுகையில், இந்த 9 சதவீதத்திற்கு மேல் அரசாங்கம் உயர்த்தாது என்று அழுத்தந்திருத்தமாக தெரிவித்தார். பணவீக்கம் கடந்தாண்டு 8 சதவீதத்தை எட்டியது. உணவு மற்றும் எரிபொருள்களின் விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. 2023 இன் முதல் நான்கு மாதங்களில் பணவீக்கம் தொடர்ந்து 5 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்துள்ளது.
இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆளும் வர்க்கம் வெளிப்படையாகவே ஆத்திரத்துடன் விடையிறுத்துள்ளது. பே ஸ்ட்ரீட் நிதிய உயரடுக்கின் முக்கிய அங்கமான குளோப் அண்ட் மெயில் பத்திரிகை, PSAC கோரிய மிகக் குறைந்த 4.5 சதவீத வருடாந்திர அதிகரிப்பை 'கேலிக்குரியதாக' ஆணவத்துடன் நிராகரித்தது. மாகாண அளவிலான பொதுத்துறை தொழிலாளர்கள் மற்றும் தனியார்துறை தொழிலாளர்களின் வரவிருக்கும் எல்லா ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கும், பணவீக்கத்திற்கு குறைவான சம்பள உடன்படிக்கைகளை வரையறுத்து ட்ரூடோ ஓர் அளவுகோலை நிர்ணயிக்க வேண்டும், அதாவது நிஜமான சம்பளத்தில் வெட்டுக்கள் வேண்டுமென Globe தலையங்கம் கோரியது. ஆளும் உயரடுக்கின் மிக வலதுசாரிப் பிரிவுகள், வேலைக்குத் திரும்பும் சட்டத்தை உடனடியாக அமுலாக்க வேண்டும் என்று கூச்சலிட்டு வருகின்றன.
ட்ரூடோ அரசாங்கம் முன்னர் கனடா தபால்துறை மற்றும் மாண்ட்ரீல் துறைமுக தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைக் குற்றகரமாக்கியதுடன், இரயில்வே துறை தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு எதிராகவும் அதேபோன்ற நடவடிக்கை எடுக்க அச்சுறுத்தியது. ஆனால் தற்போது, வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்தவும், தொழிலாளர்களின் கோபத்தைக் குறைத்து, ஒரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றவும், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் சமூக ஜனநாயக புதிய ஜனநாயகக் கட்சியில் (NDP) உள்ள அதன் 'பங்காளிகளை' சார்ந்திருப்பதே அதன் விருப்பத்திற்குரிய போக்காக உள்ளது. PSAC இன் பேச்சுவார்த்தையாளர்களுடன் அதற்கு தற்காலிக உடன்படிக்கைகள் ஏற்பட்டவுடன், அந்த உடன்படிக்கைகள் மீது வாக்கெடுப்புகள் நடத்துவது ஒருபுறம் இருக்கட்டும், தொழிலாளர்கள் அதைப் பார்க்கவும் கூட எந்த வாய்ப்பும் வழங்காமல், உடனடியாக இந்த வேலைநிறுத்தை முடிவுக்குக் கொண்டு வர அது திட்டமிட்டிருப்பதைக் குறித்து சமிக்ஞை செய்துள்ளது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு 'பணமில்லை' என்று கூறும் இந்த தாராளவாத அரசாங்கம் அதேவேளையில், ரஷ்யாவை ஓர் அரை-காலனித்துவ நிலைக்குக் குறைத்து அதன் இயற்கை வளங்கள் மீது கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போருக்குப் பில்லியன் கணக்கான டொலர்களை வாரியிறைக்கிறது. ரஷ்யா மற்றும் சீனாவுடனான 'மூலோபாய மோதலுக்காக' ட்ரூடோ அரசாங்கம் புதிய போர்க்கப்பல்கள் மற்றும் F-35 ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வது மற்றும் கனடா-அமெரிக்க வட அமெரிக்க வான்வழி பாதுகாப்புக் கூட்டு கட்டளையகத்தை (NORAD) 'நவீனமயமாக்குவது' உட்பட, பாரியளவில் ஒரு மீள்இராணுவமயப்படுத்தும் முனைவில் பத்து பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வருகிறது. 2020 இன் தொடக்கத்தில் கோவிட்-19 முதன்முதலில் தோன்றிய போது பெருவணிகங்களுக்கும் வங்கிகளுக்கும் கொடுக்கப்பட்ட 650 பில்லியன் டாலர் பிணையெடுப்புத் தொகைக்காக, நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் 'பெருந்தொற்றுக்குப் பிந்தைய' சிக்கன நடவடிக்கை திட்டத்தை மேற்பார்வையிட்டு வருகிறார்.
தொழிற்சங்கங்களும் NDP உம் ட்ரூடோ அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முக்கிய கருவியாக உள்ளன. கோவிட் பெருந்தொற்றின் போது, அப்போதைய CLC தலைவரும் இப்போது செனட்டருமான ஹசன் யூசுஃப் போன்ற உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள், கனடிய வணிகத்தை உலகளவில் இன்னும் 'போட்டித்தன்மை' மிக்கதாக ஆக்கவும், உயிரை விட இலாபத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் விதமான ஆளும் வர்க்கத்தின் அழிவுகரமான பெருந்தொற்று கொள்கையை நடைமுறைப்படுத்தவும், பெருவணிகங்களுடன் ஒரு 'கூட்டு முன்னணிக்கு' அழைப்பு விடுத்தனர். உயிரை விட இலாபத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் விதமான அந்தக் கொள்கையால் அடுத்தடுத்து மிகப் பெரியளவில் நோய்தொற்றும் மரணமும் ஏற்பட்டது.
அமெரிக்கா, கனடா மற்றும் அவற்றின் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகள் உக்ரேன் மீது படையெடுக்க ரஷ்யாவைத் தூண்டிவிடுவதில் வெற்றி பெற்று ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களுக்குப் பின்னர், தொழிற்சங்கத்தின் முழுமூச்சு ஆதரவுடன் NDP ட்ரூடோவுடன் அரசாங்கம் அமைக்க ஒரு கூட்டணியை அமைத்தது. அது வெறுமனே கூட்டணியோடு நின்றுவிடவில்லை. தாராளவாத கட்சி மற்றும் NDP இன் 'நம்பிக்கை வழங்கும்' உடன்படிக்கையின் கீழ், 2025 வரை ட்ரூடோவின் தாராளவாத அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்க NDP உறுதியளித்தது. 2019 இல் இருந்து அந்த சிறுபான்மை தாராளவாத அரசாங்கத்திற்கு NDP வழங்கி வந்த ஆதரவை முறைப்படுத்திய அந்த உடன்படிக்கை 'அரசியல் ஸ்திரப்பாட்டை' கொண்டு வரும் என்று கூறி NDP தலைவர் ஜக்மீட் சிங் அந்த உடன்படிக்கையை நியாயப்படுத்தினார். இவ்வாறு கூறியதன் மூலம் ஆளும் உயரடுக்கு அதன் வர்க்கப் போர் திட்டநிரலை நடைமுறைப்படுத்த அதற்கு 'ஸ்திரப்பாடு' இருப்பதை அவர் அர்த்தப்படுத்தினார்.
இந்த முன்வரலாற்றின் வெளிச்சத்தில் பார்த்தால், வேலைக்குத் திரும்ப செய்யும் சட்டமசோதாவுக்கு NDP ஆதரவாக ஒருபோதும் வாக்களிக்காது என்ற உறுதிமொழியுடன் சிங் தன்னை வேலைநிறுத்தக்காரர்களின் நண்பராகக் காட்டிக்கொள்வதற்கான திங்கட்கிழமை மேற்கொண்ட முயற்சி நகைப்புக்குரியதாக உள்ளது. சிங்கால் அத்தகைய ஒரு அறிக்கையை வழங்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் தாராளவாத அரசாங்கம் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தால், அது உத்தியோகப்பூர்வ எதிர்கட்சியான பழமைவாத கட்சியின் பெரும் ஆர்வத்திற்குரிய ஆதரவைப் பெறக்கூடும் என்பதோடு அவ்விதத்தில் வேலைநிறுத்தத் தடைச் சட்டத்தை வேகமாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த முடியும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவருடைய 'தொழிலாளர் சார்பு' புகழாரங்களை எடுத்துக்காட்டுவதற்காக அவர் மறியல் களத்திற்கு செல்கிறார், அது பெரியளவில் விளம்பரப்படுத்தப்படும் அதேவேளையில், PSAC மற்றும் CLC தலைமைகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே நகரும் ஒருவராக செயல்பட சந்தேகத்திற்கிடமின்றி அவர் சேவைகளை வழங்கி வருகிறார்.
சமீபத்திய தசாப்தங்களில் கனடாவின் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு முக்கிய பொறிமுறையாக தொழிற்சங்கம் / NDP / தாராளவாத கூட்டணி செயல்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் ஒன்ராறியோவின் 55,000 கல்வித்துறை உதவிப் பணியாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் இதற்கான சமீபத்திய உதாரணங்களில் ஒன்றாகும். அந்தக் கடுமையான வலதுசாரி மாகாண அரசாங்கம் வேலைநிறுத்தத்தைத் தடை செய்யும் கொடூரமான சட்டத்தைக் கொண்டு வந்த பின்னர், தொழிலாளர்கள் தைரியமாக அதை மீறி, மிகப் பெருமளவில் தொழிலாள வர்க்க ஆதரவைத் திரட்டினர். ட்ரூடோ தலையிடுமாறு சிங் அவருக்கு வேண்டுகோள் விடுத்தார். இது அந்த வேலை நடவடிக்கையின் முதல் நாளில் பிரதம மந்திரி தொழிற்சங்கத் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தத் தூண்டியது.
ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் அதிகரித்து வருவதுடன் அம்மாகாணம் எங்கிலும் பேரணிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், CLC இன் தலைவர்களும் அதனுடன் கொள்கைரீதியில் இணைந்துள்ள பெரும்பாலான அமைப்புகளும் வேலைநிறுத்தத்தைத் தடுப்பதற்குக் கைமாறாக ஒன்ராறியோவின் முதல்வர் டொக் ஃபோர்டை வேலைநிறுத்த தடையைக் கைவிட செய்ய பின்னறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. தொழிற்சங்கங்கள் அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக கலைத்துவிட்ட பின்னர், ஃபோர்டு அரசாங்கம் குறைவூதிய தொழிலாளர்களுக்குப் பணவீக்கத்தை விடக் குறைந்த சம்பளத் தீர்வை முன்நகர்த்துவதில் தொழிற்சங்க ஆதரவுடன் வெற்றி அடைந்தது.
மத்திய அரசு தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால், அவர்கள் தொழிற்சங்கம் / NDP / தாராளவாத கூட்டணியின் கவசப் பிடியிலிருந்து உடைத்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான பாரிய அரசியல் இயக்கத்தின் அபிவிருத்திக்காக, சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஆதரவைத் திரட்டுவதன் மூலம் தங்கள் போராட்டத்தை விரிவாக்க வேண்டும். சமூகத்தின் பரந்த ஆதார வளங்களைத் தனியார் இலாபத்திற்காக அல்ல மாறாக சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மறுவினியோகம் செய்ய, சோசலிச கொள்கைகளுக்குப் பொறுப்பேற்ற ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை நிறுவுவதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும்.
மத்திய அரசு தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தை, அரசாங்கத்துடன் அணி சேர்ந்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கரங்களில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதன் மூலமாக மட்டுமே இத்தகைய ஒரு போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும். ஒவ்வொரு வேலையிடத்திலும் தொழிற்சங்கம் மற்றும் PSAC அதிகாரத்துவத்திடம் இருந்து அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் சுயாதீனமான ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தப்படும் சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்புவதே இதன் அர்த்தமாகும். இத்தகைய குழுக்கள், மாகாண பொதுத்துறை தொழிலாளர்களிடமும் தனியார்துறையின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களிடமும், ஆதரவு வேலைநிறுத்தம் உட்பட, நேரடியான உதவிகளைக் கோரி, வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்தும் தொழிற்சங்க எந்திரத்தின் முயற்சிகளை எதிர்க்க வேண்டும். இந்த சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யாமல் வேலைநிறுத்தத்தைக் கலைப்பதற்கான PSAC இன் எந்தவொரு முயற்சியையும் இந்த குழுக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்பதோடு, ட்ரூடோ கொண்டு வரும் வேலைக்குத் திரும்புவதற்கான எந்தவொரு சட்ட மசோதாவையும் எதிர்க்க தயாராக வேண்டும். ஏகாதிபத்தியப் போருக்கும் நிதிய தன்னலக்குழுவின் பிணையெடுப்புகளுக்கும் அமெரிக்க தொழிலாளர்களைப் பணம் செலுத்த செய்ய இதேபோன்று தீர்மானகரமாக உள்ள ஓர் ஆளும் வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள அமெரிக்க தொழிலாளர்களுக்கு எல்லை கடந்து ஒரு சிறப்பு முறையீடு செய்யப்பட வேண்டும்.
இந்த முன்னோக்குடன் உடன்படும் வேலைநிறுத்தம் செய்யும் அனைத்து தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் சர்வதேச இணையவழி மே தின பேரணியில் கலந்து கொள்ள திட்டமிடுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். உலக சோசலிச வலைத் தளமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் மற்றும் சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் ஏப்ரல் 30 இல் கிழக்கத்திய வட அமெரிக்க நேரப்படி மாலை 3 மணிக்கு இந்த இணையவழி பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.