மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இன்று சனிக்கிழமை நடைபெறும் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத் தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சிந்திக்கக்கூடிய பிரிவினரிடம் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) கோருகிறது. அதாவது, பெருவணிகக் கட்சிகளுக்கு உங்கள் எதிர்ப்பை காட்டவும் மற்றும் போர், சிக்கன நடவடிக்கை மற்றும் கோவிட் தொற்றுநோய் ‘தடையின்றி பரவட்டும்’ போன்ற கொள்கைகளைப் பின்பற்றும் இரு கட்சி அமைப்புக்கு ஒரு உண்மையான சோசலிச மாற்றுக்கான உங்கள் ஆதரவை காட்ட சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்.
மாநில அளவிலான சட்டமன்றக் குழுவில் (மேல்சபை) எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க, குழு K இல் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களான ஒஸ்கார் கிரென்பெல் மற்றும் மைக் ஹைட் ஆகியோருக்கு 1 மற்றும் 2 இல் வாக்களிக்கவும், பின்னர் வாக்குச் சீட்டில் உள்ள கோட்டிற்குக் கீழே உள்ள மற்ற வேட்பாளர்களுக்கு 3 முதல் 15 வாக்குகளை பங்கிடவும். செல்லுபடியாகும் வாக்கை பதிவு செய்ய 15 பெட்டிகளில் இலக்கமிடப்பட வேண்டும்.
பாங்க்ஸ்டவுன் தொகுதியில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் மாக்ஸ் பாடிக்கு வாக்களிக்க, சட்டப் பேரவையில் (கீழ்சபை) அவரது பெயருக்கு பக்கத்தில் உள்ள எண் 1 இல் வாக்களிக்கவும். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத தேர்தல் சட்டங்கள் காரணமாக, சோசலிச சமத்துவக் கட்சியின் பெயர் வாக்குச் சீட்டில் இடம்பெறவில்லை.
ஒவ்வொரு சமீபத்திய தேர்தல் பிரச்சாரமும் பொய்கள், திசைதிருப்பல் மற்றும் தூற்றுதல்கள் மிக்கதாகக் காணப்படுகின்றன. ஆனால் NSW தேர்தல் பிரச்சாரமானது, இந்த தரநிலைகளின்படி கூட ஒரு கீழ்த்தரமான காட்சியாகவே உள்ளது. முன்நிகழ்ந்திராத வகையிலான பொதுக் கல்வி மற்றும் சுகாதார நெருக்கடி, ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கானோரை கொன்று குவிக்கும் தற்போது பரவி வரும் தொற்றுநோய் மற்றும் பல தசாப்த கால மிக மோசமான வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியில், உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய கொள்கைகளை நாடாளுமன்றக் கட்சிகள் எதுவும் கோடிட்டுக் காட்டவில்லை.
தொழிற்கட்சி, தாராளவாத-தேசிய கூட்டணி மற்றும் உத்தியோகபூர்வ ஊடகங்கள் ஆகியவை முடிந்தவரை எந்த விவாதத்தையும் அடக்கிவிட்டன. அதாவது, இந்த வாரம் ஓரிரு நாட்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்பதை அறிந்து பலர் ஆச்சரியத்தின் விளிம்பிற்குச் சென்றனர்.
ஏனென்றால், அனைத்து முக்கிய கேள்விகளைப் பொறுத்த வரையிலும், தொழிற்கட்சியும் கூட்டணியும் தொடர்ந்து ஒரேமாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருகின்றன. உதாரணமாக, நாடு முழுவதும் அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட கோவிட் தொற்றுநோய் ‘தடையின்றி பரவட்டும்’ கொள்கைகளின் விளைவாக 22,000 இற்கும் அதிகமானோர் பலியானதைக் குறிப்பிடலாம்.
பெருவணிகத்தின் நலன்களுக்காக எந்தவொரு பொது சுகாதாரத் தடைகளையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டதான இந்த உயிர்களை விட இலாபத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சி நிரலில் NSW மிகவும் முன்னணியில் உள்ளது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நீக்குவதில், பெரோடெட் (Perrottet) முதலில் பிரதமர் ஸ்காட் மோரிசனுடனும் பின்னர் அவரது தொழிற்கட்சி வாரிசான அந்தோனி அல்பானிஸூடனும் முடிந்தவரை நெருக்கமாக ஒத்துழைத்துள்ளார். மேலும் NSW தொழிற்கட்சித் தலைவர் கிறிஸ் மின்ஸின் உறுதியான ஆதரவைப் பெற்றுள்ளார்.
மின்ஸ், பெரோட்டெட், பசுமைக்கட்சியினர் மற்றும் பிற அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளும் பிரச்சாரத்தின் போது தொற்றுநோயைப் பற்றி எதுவும் கூறவில்லை, ஏனென்றால் வைரஸைத் தடையின்றி பரவ அனுமதிப்பதே அவர்களின் திட்டமாகும். அவர்களால் என்ன சொல்ல முடியும்? “எனது தலைமையிலான அடுத்த அரசாங்கம், வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் சொத்து வியாபாரிகளுக்கு அதிகபட்ச வருவாயை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான குடிமக்களை, அதிலும் குறிப்பாக வயோதிபர்கள், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைக் கொல்லும் கொள்கைகளையே தொடரப் போகிறது” என்று தான் சொல்வார்கள்.
கோவிட் விடயத்தைப் போல், மற்ற அனைத்து கேள்விகளுக்கும் இது பொருந்தும். பொது சுகாதார அமைப்பு குறைந்தது 80 ஆண்டுகளாக கடும் நெருக்கடியில் உள்ளது. ஆனால் தொழிற்கட்சியானது, அடிப்படையில் கூட்டணியின் கொள்கைபோலவே, செவிலியர்-நோயாளி விகிதங்களை, அல்லது முறிவுக்கு வழிவகுத்த பணியாளர் நெருக்கடியைத் தணிக்கும் எந்தவொரு உறுதியான நடவடிக்கைகளையும் நிராகரிக்கிறது. பள்ளிகள் இதேபோல் நிரம்பி வழியும் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமாக தொழிலை விட்டு வெளியேறும் நிலையில், தொழிற்கட்சி வெறும் அற்பமான நடவடிக்கைகளை மட்டுமே முன்மொழிகிறது. அவை நடைமுறைக்கு வந்தாலும், அது பொதுக் கல்வியின் அழிவை குறைக்காது.
தொழிலாளர்கள் அன்றாடச் செலவுகளை செய்ய முடியாமல் அல்லது உணவைப் பெற முடியாமல் போராடும் நிலையில், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பொதுத்துறை ஊழியர்களுக்கு பணவீக்கத்திற்கேற்ப ஊதிய உயர்வு வழங்கப்படுவதை தான் எதிர்ப்பதாக மின்ஸ் பெருமையுடன் அறிவித்துள்ளார். அவர்களின் பெயரளவிலான ஊதிய உயர்வுகள் கூட, உண்மையில், உண்மையான ஊதிய வெட்டுக்களை உள்ளடக்கிய ஊதிய உயர்வுகளாக, ‘உற்பத்தித்திறன்’ அதிகரிப்பதன் அடிப்படையில் வழங்கப்படும். அதாவது, அதிகளவு வேலைச் சுரண்டலும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களும் நிகழ்த்தப்படும்.
தொழிலாள வர்க்கப் பகுதிகளில், வீட்டு பற்றாக்குறை வானளாவிய விகிதத்தை எட்டுகிறது. சிட்னியின் மேற்கு மற்றும் தென் மேற்கின் சில புறநகர்ப் பகுதிகளில், அதிகபட்சமாக 50 சதவிகித குடியிருப்பாளர்கள் வீட்டுப் பற்றாக்குறை அழுத்தத்தில் உள்ளனர். ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்துவதால் இது இன்னும் மோசமடையும். ஆனால், தொழிற்கட்சி மற்றும் கூட்டணியின் வீட்டுத் திட்டங்களானது, சொத்து உருவாக்குபவர்கள் மற்றும் முக்கிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து செல்வச் செழிப்புடன் இருப்பதை உறுதிசெய்வதற்காக, பைத்தியக்காரத்தனமாக வீட்டு விலைகளை உயர்த்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது.
தங்கள் பங்கிற்கு, பசுமைக் கட்சியினரும் எந்த மாற்றையும் வழங்கவில்லை. அவர்களது முழு நோக்குநிலையும், முன்பு அவர்கள் மத்திய அரசு மட்டத்திலும் மாநிலங்களிலும் கொண்டிருந்ததைப் போல, தொழிற்கட்சியுடன் ஒருவித கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதாகும். ஒரு வலதுசாரி, முதலாளித்துவ சார்பு கட்சியான பசுமைக்கட்சி, பொதுத்துறை ஊதியங்கள் மற்றும் சமூக சேவைகளை தாக்கும் ஒரு வலதுசாரி அரசாங்கத்திற்கு ஒரு ‘இடது’ மூடுதிரையை வழங்குகவதற்காக, அத்தகைய அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்குள் நுழைவார்கள்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரச்சாரம் கூட, சோசலிச சமத்துவக் கட்சியால் குறிப்பிடப்பட்ட ஒரு முக்கிய கருத்தை நிரூபித்துள்ளது. சனிக்கிழமை நடைபெறும் தேர்தலானது தொழிலாளர்களின் பிரச்சினை எதையும் தீர்க்காது. எந்த கட்சி அரசாங்கத்தை அமைத்தாலும், அவர்கள் உடனடியாக ஒரு வரவு செலவுத் திட்டத்தை அறிவிப்பார்கள். மேலும், பிரச்சாரத்தின் போது தாம் அறிவித்த அடையாளக் கொள்கைகளைக் கூட அப்போது கைவிட்டுவிடுவார்கள். மேலும், தொற்றுநோய் மற்றும் முதலாளித்துவ அமைப்பின் தீவிரமடைந்து வரும் நெருக்கடியின் முதல் இரண்டு ஆண்டுகளில் பெருவணிகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பில்லியன்களை தொழிலாள வர்க்கத்தை கொண்டு செலுத்த வைப்பதை நோக்கமாகக் கொண்ட சிக்கன நடவடிக்கைத் தாக்குதலை அவர்கள் மேற்கொள்வார்கள்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியமான பிரச்சினை வாக்குச்சீட்டு அல்ல என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஒரு புதிய அரசியல் பாதையை எடுத்து வைக்கிறது: அதாவது, ஆளும் உயரடுக்கின் இலாப நலன்களுக்கு சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அடிபணியச் செய்வதை நிராகரிக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிற்கட்சி, பசுமைக்கட்சி மற்றும் ஒட்டுமொத்த பாராளுமன்ற அமைப்புக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதாகும்.
இத்தகைய போராட்டத்தின் அவசியத்தை கடந்த ஆறு வாரங்களாக உரத்த குரலில் எழுப்பப்பட்ட போர் முழக்கங்கள் கூட அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. முதலாளித்துவமானது, வெகுஜன நோய், மரணம் மற்றும் வறுமை ஆகிய துயரங்களடங்கிய எதிர்காலத்திற்கு மட்டுமல்லாது, அணுசக்தி உலகப் போராக உருவெடுக்கக்கூடிய பேரழிவிற்கும் வழிவகுக்கும்.
பிரச்சாரத்தின் தொடக்கத்திலிருந்தே, சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே அதிகரித்துவரும் போர் அச்சுறுத்தல் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரேனில் நடக்கும் போர் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட ஐரோப்பிய நிகழ்வு அல்ல என்று நாங்கள் எச்சரித்துள்ளோம். இது உலகளாவிய பேரழிவிற்கு அச்சுறுத்தும் ஒரு புதிய உலகளாவிய மோதலின் ஆரம்ப அடியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி, பிற்போக்குத்தனமான ரஷ்ய படையெடுப்பை எதிர்த்தது. ஆனால், போரின் முக்கிய தூண்டுதலாக இருக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோவால் இது வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்டது என்பதை நாங்கள் விளக்கினோம். அப்போதிருந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தாங்கள் வைத்த தீயை எரியூட்டி வளர்த்ததுடன், நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட ஆயுதங்களை உக்ரேனுக்கு வாரி வழங்கினர். பைடென் நிர்வாகமும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்யாவை பெரும் இராணுவத் தோல்வி அடைய செய்யும் உறுதியுடன் ஒரு பினாமிப் போரில் ஈடுபட்டுள்ளன என்பதை இப்போது மறுக்க முடியாது.
பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டங்களில், NSW தேர்தலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் கேட்டனர். சோசலிச சமத்துவக் கட்சியானது ஐரோப்பாவில் ஏகாதிபத்தியப் போர் வெடித்துள்ளதன் உள்ளார்ந்த முக்கியத்துவத்தை, அதன் பரந்த வரலாற்று பதிவுகள் அனைத்தையும் வைத்து சுட்டிக் காட்டியது. ஆனால், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போர் என்பது, ஏகாதிபத்தியத்திற்கு முக்கிய பொருளாதார அச்சுறுத்தலாகக் கருதப்படும் சீனாவுடனான ஒரு ஆக்கிரோஷ மோதலையும் உள்ளடக்கிய ஒரு உலகளாவிய மூலோபாயத்தின் ஒரு திட்டமாகும் என்றும் நாங்கள் எச்சரித்துள்ளோம்.
மேலும், இந்த பிரச்சினையானது, NSW தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் வெளிப்பட்டது. அல்பானீஸ், பைடென் மற்றும் பிரிட்டிஷ் பிரதம் ரிஷி சுனாக் ஆகியோரால் இந்த மாத தொடக்கத்தில் சான் டியாகோவில் அறிவிக்கப்பட்ட AUKUS ஒப்பந்தமானது, சீனாவிற்கு எதிரான போர் உந்துதலில் ஆஸ்திரேலியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றுவதை நடத்தி முடிக்கிறது.
ஆஸ்திரேலியா வாங்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ‘தேசிய பாதுகாப்பு’ அல்லது தடுப்பு ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் கிடையாது. அவை ‘கடலின் உச்ச வேட்டையாளர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்குள் சீனாவுக்கு எதிராகப் போரில் ஈடுபடப்போவதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில், சீனக் கடற்கரைக்கு அப்பால் உட்பட, இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதே அவற்றின் பணியாகும்.
இது தொழிலாள வர்க்கத்திற்கு எதனை அர்த்தப்படுத்துகின்றது? Sydney Morning Herald பத்திரிகையில் இந்த மாதம் வெளியிடப்பட்ட ‘Red Alert’ தொடரின் போர்வெறி பிரச்சாரத்தால் ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டது. அதாவது, சீனாவுக்கு எதிரான உடனடிப் போருக்கு ஆஸ்திரேலியா தயாராக வேண்டும் என்று அந்த வெளியீடு அழைப்பு விடுத்துள்ளது. அதன் பொருள், வடக்கு பிராந்தியத்தில் அமெரிக்க அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதும் இராணுவத்தில் பெருமளவில் கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதும் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆளும் உயரடுக்கு மொத்த போருக்கு தயாராகும் நிலையில், ஒட்டுமொத்த நாடும் ஒரு இராணுவ மையமாக மாற்றப்படவுள்ளது.
AUKUS அறிவிப்பானது பாரிய மக்கள் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. கருத்துக் கணிப்புகள் முக்கால்வாசி மக்கள் அதை எதிர்ப்பதாகக் காட்டுகின்றன. இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே நிலவும் மிகப்பரந்த போர்-எதிர்ப்பு உணர்விற்கு சாட்சியமளிக்கிறது.
ஆனால் அதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தான் முக்கிய கேள்வியாகும். எதிர்ப்பைத் தடம் புரள வைக்க, ஆளும் உயரடுக்கின் அடுக்குகளானது, முன்னாள் தொழிற்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பசுமைக் கட்சியினருடன் சேர்ந்து, AUKUS ஒப்பந்தத்தை மென்மையாக விமர்சித்த அதேவேளை, மிகவும் ‘சுதந்திரமான’ ஆஸ்திரேலிய வெளியுறவுக் கொள்கையை அவர்கள் ஆதரிக்கின்றனர். இந்தப் பிரிவுகளிடம் போர் குறித்த கொள்கைரீதியான எதிர்ப்பு எதுவுமில்லை. மாறாக, ஆஸ்திரேலிய பெருநிறுவன உயரடுக்கு மற்றும் சீனாவுடனான அதன் வர்த்தக உறவுகளின் மீது போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அவர்களின் அச்சத்தையே வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் பிற்போக்குத்தன தேசியவாதத்தை ஊக்குவிக்கின்றனர். இது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை மேம்படுத்தவும் மட்டுமே உதவுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியதைப் போல, போருக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கம் தேவைப்படுகிறது. இது மோதலின் மூலாதாரமான முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக இயக்கப்பட்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. உலக முதலாளித்துவத்தின் பாரிய நெருக்கடிக்கு ஆளும் உயரடுக்கின் பதில் போரும் சர்வாதிகாரமும் ஆகும். அதே நேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் பிரதிபலிப்பானது, உலக அளவில் சமூகத்தை சோசலிச மறுசீரமைப்பு செய்வதற்கு போராடுவதாக இருக்க வேண்டும்.
அத்தகைய இயக்கத்திற்கான அடிப்படையானது, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்களில் வேரூன்றியுள்ளது. பெருகிய முறையில், வாழ்க்கைச் செலவுப் பேரழிவு மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டமானது போருக்கு எதிரான போராட்டத்துடன் குறுக்கறுத்துச் செல்லும். அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான 368 பில்லியன் டாலர்களும், மற்றும் ஏனைய இராணுவச் செலவினங்களுக்கான நூற்றுக்கணக்கான பில்லியன்களும், சுகாதாரம், கல்வி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான முடுக்கிவிடப்பட்ட தாக்குதல்களால் செலுத்தப்பட நேரிடும்.
சர்வதேச ரீதியல், இலங்கையில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வரை பரந்து விரிந்திருக்கும் தொழிலாளர்களின் வெடிப்புமிக்க போராட்டங்களுடன், வர்க்க மோதல் மீண்டும் எழுகிறது.
இந்த இயக்கங்களை ஊக்குவிக்கும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் அதிகரித்த அளவிலான சாத்தியமற்ற வாழ்க்கை நிலைமைகள் போன்ற அதே பிரச்சினைகள் சர்வதேச அளவிற்குக் குறையாமல் இந்த நாட்டிலும் உள்ளது. இவை தொடர்பாக, ஆஸ்திரேலியா, மற்றும் NSW இல் செவிலியர்கள், ஆசிரியர்கள், இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் பிற பிரிவுகளால் ஏற்கனவே குறிப்பிடத்தக்க போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால் இந்த அனைத்து இயக்கங்களும் ஒரு முட்டுச்சந்தை அடைந்துள்ளன. அவைகளால், பெரோட்டெட் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியினாலும் ஊதிய வெட்டு மற்றும் சிக்கன நடவடிக்கை நிகழ்ச்சி நிரலுக்கு திறம்பட சவால் செய்ய முடியவில்லை. இந்தப் பிரச்சினை கோபம் அல்லது போராடும் மன உறுதி இல்லாததால் உருவாகவில்லை. அவை போதுமானளவு உள்ளன.
இந்தப் போராட்டங்கள் அனைத்தும் பிற்போக்குத்தன தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக நடத்தப்பட்டுள்ளன. அந்த அதிகாரத்துவமானது, தொழில்துறை நடவடிக்கையை நசுக்குவதற்கும், வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கும் கட்டாயத்தில் அது இருக்கும்போது தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்கும், தனிமைப் படுத்துவதற்கும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. தொழிற்சங்கங்கள் ஏற்கனவே ஆசிரியர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் மீது ஊதியக் குறைப்பு காட்டிக்கொடுப்புகளை சுமத்தியுள்ளன. அதையே செவிலியர்களுக்கும் செய்ய தயாராகி வருகிறது. இது தவறுகள் அல்லது மோசமான தலைமையின் விளைவு அல்ல. இது தொழிற்சங்கங்களை அரசாங்கங்கள் மற்றும் நிறுவன நிர்வாகத்தின் பெருநிறுவனமயமாக்கப்பட்ட காவல் படையாக மாற்றியதிலிருந்து தொடங்குகிறது. இது ஆறு இலக்க சம்பள அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறதே தவிர, தொழிலாளர்களை அல்ல.
இதற்கான மாற்று என்னவென்றால், சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் மையமாக இருந்து வந்துள்ள தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதற்கான போராட்டமாகும். இத்தகைய குழுக்கள்தான் தொழிற்சங்கங்களின் தனிமைப்படுத்தல் மற்றும் காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளை தோற்கடிப்பதற்கான ஒரே வழிமுறையாகும். ஒட்டுமொத்த தொழில்துறைகளிலும் மற்றும் தொழிலாள வர்க்கம் முழுவதிலும் பரந்து விரிந்துள்ள ஒரு கூட்டு தொழில்துறை மற்றும் அரசியல் எதிர்த்தாக்குதலில் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் வழிமுறையாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அத்தகைய குழுக்களின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வலையமைப்பானது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்க முடியும் மற்றும் இருக்கவும் வேண்டும்.
ஆனால், அரசியல் முன்னோக்கும் வேலைத்திட்டமும் தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது. தொழிற்கட்சி, கூட்டணி மற்றும் ஒட்டுமொத்த பாராளுமன்ற அமைப்புக்கும் எதிராக பாரிய விரோதம் உள்ளது. ஆனால் அதுமட்டும் போதாது.
தொழிலாளர்களுக்கு என்று சொந்த அரசியல் கட்சி தேவை! அதாவது, சோசலிச கூட்டணி போன்ற போலி-இடது குழுக்களால் பரப்பப்படும் தொழிற்கட்சி மற்றும் பசுமைக் கட்சிகளின் தேர்ந்தெடுப்பதானது “குறைந்ததீமையை“ பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதான மோசடியான கூற்றுக்கள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும். கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலிலும் முன்வைக்கப்பட்ட இத்தகைய வலியுறுத்தல்களானது, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாளியான மிகுந்த அரசியல் சக்திகளுடன் தொழிலாளர்களை கட்டிப்போட உதவுகின்றன.
உண்மையான மாற்று என்பது ஒரு புரட்சிகர மற்றும் சோசலிச முன்னோக்கு ஆகும். இது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், முதலாளித்துவ அமைப்பை இல்லாதொழிப்பதும், மற்றும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை ஜனநாயக தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் பொது உடைமையின் கீழ் வைப்பது உட்பட, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதும் தான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும்.
தொழிலாளர்களின் ஒரு அரசாங்கமானது பல பில்லியன்களை சுகாதாரம், கல்வி மற்றும் ஊதியங்களுக்கு ஒதுக்குமே தவிர, போர் மற்றும் பெருநிறுவன இலாபங்களுக்கு அல்ல. தொற்றுநோயை இறுதியாக முடிவுக்குக் கொண்டுவர தேவையான விஞ்ஞான அடிப்படையிலான பொது சுகாதார நடவடிக்கைகளை இது செயல்படுத்தும். மேலும், சர்வதேச அளவில், சோசலிசம் என்பது போர் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்க சமூகத்தின் வளங்களை பகுத்தறிவுடன் ஒருங்கிணைப்பதற்குமான ஒரே வழியாகும்.
இந்த முன்னோக்கிற்கு உங்கள் ஆதரவை பதிவு செய்ய சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்! ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கண்ணியமான எதிர்காலத்திற்கான இந்தப் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்க சோசலிச சமத்துவக் கட்சியில் சேர விண்ணப்பியுங்கள்.
Contact the SEP:
சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்புகொள்ள:
Phone:(02) 8218 3222
Email:sep@sep.org.au
Facebook:SocialistEqualityPartyAustralia
Twitter:@SEP_Australia
Instagram:socialistequalityparty_au
TikTok:@sep_australia
Authorised by Cheryl Crisp for the Socialist Equality Party, Suite 906, 185 Elizabeth Street, Sydney, NSW, 2000.